உரையாடும் திறமைகளை வளர்ப்பது எப்படி
உங்களால் மற்றவர்களோடு சகஜமாக உரையாட முடிகிறதா? மற்றவர்களோடு, அதுவும் முன்பின் தெரியாதவர்களோடு உரையாட வேண்டும் என்ற எண்ணம்தானே அநேகருக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருக்கலாம். ‘என்ன பேசுவது? என்ன சொல்லி ஆரம்பிப்பது? தொடர்ந்து என்ன பேசுவது?’ என்றெல்லாம் யோசிப்பார்கள். சகஜமாக பழகும், தன்னம்பிக்கையுள்ள நபர்களோ மற்றவர்களை பேச விடாமல் தாங்களே சதா பேசிக்கொண்டிருக்கலாம். மற்றவர்களை பேச விடுவதும் சொல்லப்படுவதை காதுகொடுத்துக் கேட்க கற்றுக்கொள்வதும் இவர்களுக்கு சவால்களாக இருக்கலாம். ஆகவே கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருந்தாலும்சரி சகஜமாக பழகுபவர்களாக இருந்தாலும்சரி உரையாடும் கலையை நாம் அனைவரும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டில் துவங்குங்கள்
உரையாடும் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் முயற்சியை ஏன் வீட்டில் துவங்கக்கூடாது? உற்சாகப்படுத்தும் உரையாடல் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் கைகொடுக்கும்.
அப்படிப்பட்ட உரையாடலுக்கு முதன்மையான திறவுகோல், ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்டுவதே. (உபா. 6:6, 7; நீதி. 4:1-4) ஒருவர்மீது அக்கறை இருக்கும்போது நாம் அவரிடம் பேசுகிறோம், அவர் ஏதேனும் சொல்ல விரும்பினால் செவிகொடுத்துக் கேட்கிறோம். மற்றொரு முக்கியமான விஷயம், பேசுவதற்கு பிரயோஜனமானவற்றை தெரிந்து வைத்திருப்பதாகும். நாம் பைபிளை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் தவறாமல் நேரம் செலவழித்தால், மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஏராளமான விஷயம் கிடைக்கும். தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிறுபுத்தகத்தை ஞானமாக பயன்படுத்தி உரையாடலை ஆரம்பிக்கலாம். ஒருவேளை அன்று வெளி ஊழியத்தில் நமக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கலாம். அறிவூட்டுகிற அல்லது நகைச்சுவையான விஷயத்தை நாம் வாசித்திருக்கலாம். குடும்பமாக ஒன்றுசேர்ந்து பேசி மகிழும் சந்தர்ப்பங்களில் இவற்றை பகிர்ந்துகொள்வதை பழக்கமாக்க வேண்டும். குடும்பத்தாரல்லாத மற்றவர்களிடம் உரையாடவும் இது உதவியாக இருக்கும்.
முன்பின் தெரியாதவர்களோடு உரையாடுதல்
முன்பின் அறிமுகமில்லாதவரோடு பேச ஆரம்பிப்பதற்கு அநேகர் தயங்குவர். ஆனால் யெகோவாவின் சாட்சிகளோ கடவுள்மீதும் சக மனிதர்கள்மீதும் வைத்திருக்கும் அன்பினால், பைபிள் சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காக, எப்படி உரையாடுவது என கற்றுக்கொள்ள ஊக்கமான முயற்சி எடுக்கின்றனர். இந்த விஷயத்தில் முன்னேற உங்களுக்கு எது உதவும்?
பிலிப்பியர் 2:4-ல் (தமிழ் கத்தோலிக்க பைபிள்) கொடுக்கப்பட்டிருக்கும் நியமம் மதிப்புமிக்கது. “ஒவ்வொருவரும் தன் நலத்தையே நாடாது, பிறர் நலத்தையும் நாட வேண்டும்” என அது உற்சாகப்படுத்துகிறது. இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் ஒருவரை முதன்முதலில் சந்திக்கும்போது அவர் உங்களை யாரோ எவரோ என்று நினைப்பார். அவரது கலக்கத்தை எப்படிப் போக்குவது? அன்பான புன்முறுவலும் சிநேகப்பான்மையான வணக்கமும் உதவும். ஆனால் இன்னும் அதிகமும் தேவை.
அவரது யோசனைகளில் நீங்கள் குறுக்கிட்டிருக்கலாம். அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், உங்கள் மனதில் இருப்பதைக் குறித்து கலந்துபேச அவரை அழைத்தால் அவர் உடன்படுவாரா? சமாரியாவிலிருந்த கிணற்றின் அருகே ஒரு பெண்ணை சந்தித்தபோது இயேசு என்ன செய்தார்? தண்ணீர் மொண்டு செல்வதே அவள் மனதில் இருந்தது. அதே விஷயத்தின்பேரில் இயேசு அவளிடம் பேச்சுக் கொடுத்தார், பிறகு அதன் அடிப்படையிலேயே சுவாரஸ்யமான ஆன்மீக விஷயங்களை கலந்துரையாட துவங்கினார்.—யோவா. 4:8-26.
நீங்கள் கூர்ந்து கவனிப்பவராக இருந்தால், மற்றவர்கள் மனதிலுள்ளதை உங்களாலும் அறிந்துகொள்ள முடியும். அந்நபர் சந்தோஷமாக தெரிகிறாரா, வருத்தமாக தெரிகிறாரா? அவர் முதியவரா, ஒருவேளை தளர்ந்துபோயிருப்பவரா? வீட்டில் பிள்ளைகள் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வசதிபடைத்தவராக தெரிகிறாரா அல்லது வயிற்றுப் பாட்டிற்கே அல்லல்படுபவராக தெரிகிறாரா? வீட்டிலுள்ள பொருட்களோ அவரது அணிகலன்களோ மத நம்பிக்கையை வெளிக்காட்டுகின்றனவா? நீங்கள் இவற்றை கருத்தில்கொண்டு வணக்கம் சொல்லும்போது, அவருக்கு ஆர்வமூட்டும் விஷயங்களில் உங்களுக்கும் ஆர்வம் இருப்பதாக அவர் நினைப்பார்.
வீட்டுக்காரர் உங்களை நேருக்கு நேர் சந்திக்காமல் வீட்டுக்குள் இருந்தே குரல் கொடுக்கும்போது என்ன முடிவுக்கு வருவீர்கள்? அவர் பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கலாம். கதவை திறக்காவிட்டாலும், இந்த விஷயத்தை வைத்தே உரையாடலை ஆரம்பிக்கலாம் அல்லவா?
சில இடங்களில், கேட்பவர்களை பேச வைக்க உங்களைப் பற்றி சில விஷயங்களை முதலில் சொல்ல வேண்டியிருக்கலாம். உங்கள் பின்னணி, ஏன் அவரை சந்திக்க வந்திருக்கிறீர்கள், ஏன் கடவுளை நம்புகிறீர்கள், ஏன் பைபிளை படிக்க ஆரம்பித்தீர்கள், பைபிள் எப்படி உங்களுக்கு உதவியிருக்கிறது போன்ற விஷயங்களை நீங்கள் சொல்லலாம். (அப். 26:4-23) ஆனால் இவற்றை சாதுரியமாகவும், குறிக்கோளை தெளிவாக மனதில் வைத்தும் சொல்ல வேண்டும். அப்படி செய்தால், கேட்பவரும் தன்னைப் பற்றியும் தன் எண்ணங்களைப் பற்றியும் சொல்ல ஆரம்பிக்கலாம்.
சில கலாச்சாரங்களில், அறிமுகம் இல்லாதவர்களை உபசரிப்பது வழக்கம். உங்களைப் பார்த்த உடனேயே உள்ளே வந்து உட்காரும்படி அழைப்பார்கள். உள்ளே சென்று உட்கார்ந்தவுடன், குடும்ப நலனை கரிசனையோடு விசாரித்து, அவர்கள் சொல்வதை அக்கறையோடு கேட்டீர்கள் என்றால், வீட்டுக்காரரும் நீங்கள் சொல்வதை கவனமாக கேட்க வாய்ப்புண்டு. மற்றவர்கள், வீட்டுக்கு வருபவர்களிடம் இன்னும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், ஆகவே ஆரம்ப உரையாடலில் இன்னுமதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். பேச்சுவாக்கில், உங்களுக்கும் தங்களுக்கும் ஒத்துப்போகும் விஷயங்கள் இருப்பதை அவர்கள் உணருவார்கள். இது, பயனளிக்கும் ஆன்மீக கலந்துரையாடலுக்கு வழிவகுக்கலாம்.
உங்களுக்குத் தெரியாத மொழிகளை பேசும் அநேகர் உங்கள் பிராந்தியத்தில் வசித்தால் என்ன செய்வது? இவர்களுக்கு எப்படி சத்தியத்தை சொல்வது? அந்த மொழிகள் சிலவற்றில் எளிய வணக்கங்களை கற்றுக்கொண்டால்கூட, உங்களுக்கு அவர்கள்மீது அக்கறை இருப்பதை கேட்போர் உணர்ந்துகொள்வர். இது, கூடுதலாக பேசுவதற்கு வழியைத் திறக்கலாம்.
உரையாடலை தொடர்வது எப்படி
தொடர்ந்து உரையாடுவதற்கு, அந்நபரின் கருத்துக்களில் ஆர்வம் காண்பியுங்கள். மனதிலிருப்பதை சொல்ல அவர் விருப்பப்பட்டால் சொல்லும்படி உற்சாகப்படுத்துங்கள். நன்கு தெரிந்தெடுத்த கேள்விகள் உதவலாம். நோக்குநிலை கேள்விகளை கேட்பது சிறந்தது, ஏனெனில் அதற்கு பொதுவாக ஆம் அல்லது இல்லை என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட முடியாது. உதாரணத்திற்கு, உள்ளூர் பிரச்சினை ஒன்றை குறிப்பிட்ட பிறகு, “இந்த நிலைமைக்கு என்ன காரணமென நீங்கள் நினைக்கிறீர்கள்?” அல்லது “இதற்கு பரிகாரம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என கேட்கலாம்.
நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கையில், அவர்கள் சொல்லும் பதிலை கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருப்பதை, தலையாட்டுவதன் மூலம் அல்லது வேறுவிதமான சைகையின் மூலம் அல்லது ஒரு வார்த்தையின் மூலம் தெரியப்படுத்துங்கள். குறுக்கே பேசாதீர்கள். திறந்த மனதோடு, சொல்லப்படுவதை கவனியுங்கள். ‘கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் இருங்கள்.’ (யாக். 1:19) மறுபடியும் நீங்கள் பேசும்போது, அவர்கள் சொன்னதை உண்மையிலேயே கேட்டுக்கொண்டிருந்ததை காட்டுங்கள்.
எனினும் உங்கள் கேள்விகளுக்கு அனைவருமே பதிலளிக்க மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். சிலர் வெறுமனே புருவங்களை உயர்த்துவார்கள் அல்லது புன்னகைப்பார்கள். மற்றவர்கள் ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே சொல்வார்கள். சோர்ந்து போகாதீர்கள். பொறுமையாக இருங்கள். கட்டாயப்படுத்தி பேச வைக்க முயலாதீர்கள். அந்நபர் கேட்பதற்கு விருப்பமுள்ளவராக இருந்தால், ஊக்கமூட்டும் வேதப்பூர்வ கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள். சீக்கிரத்தில் அவர் உங்களை தனது நண்பராக பாவிக்கலாம். அதன்பின் இன்னுமதிகமாக மனம் திறந்து பேச ஆரம்பிக்கலாம்.
மற்றவர்களோடு பேசும்போது, மறுபடியும் சந்திக்க வேண்டுமென்ற குறிக்கோளை மனதில் வைத்து பேசுங்கள். அந்நபர் அநேக கேள்விகளை கேட்டால், அவற்றில் சிலவற்றிற்கு அப்போது பதிலளியுங்கள், ஆனால் மற்ற ஓரிரண்டு கேள்விகளுக்கு அடுத்த முறை பதிலளிப்பதாக சொல்லுங்கள். ஆராய்ச்சி செய்துவிட்டு வந்து விளக்குவதாக சொல்லுங்கள். அவர் கேள்விகள் கேட்கவில்லை என்றால், அவரது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியை உரையாடலின் முடிவில் நீங்களே கேட்கலாம். அடுத்த சந்திப்பின்போது அதற்கு பதிலளிப்பதாக சொல்லலாம். வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேடு, சமீபத்திய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் ஆகியவற்றிலிருந்து ஏராளமான தகவலைப் பெறலாம்.
உடன் விசுவாசிகளோடு இருக்கையில்
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை முதன்முதலாக பார்க்கும்போது, நீங்களாகவே சென்று முதலில் பேச்சுக் கொடுக்கிறீர்களா? அல்லது வெறுமனே அமைதியாக நிற்கிறீர்களா? சகோதரர்களின் மீதுள்ள அன்பு, அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள நம்மைத் தூண்ட வேண்டும். (யோவா. 13:35) எப்படி ஆரம்பிப்பது? வெறுமனே உங்கள் பெயரைச் சொல்லலாம், அதன்பின் அவருடைய பெயரையும் கேட்கலாம். அவர் எப்படி சத்தியத்துக்குள் வந்தார் என கேட்பது, சுவாரஸ்யமான உரையாடலுக்கு வழிவகுக்கும். இப்படி ஒருவருக்கொருவர் பரிச்சயமாகலாம். உங்களால் சரளமாக பேச முடியாவிட்டாலும், உங்கள் முயற்சி அவர்மீது அக்கறையிருப்பதை அவருக்குக் காட்டும்; இதுவே முக்கியமானது.
உங்கள் சபையில் இருக்கும் ஒருவரோடு அர்த்தமுள்ள விதத்தில் உரையாடுவதற்கு எது உதவும்? அவர்மீதும் அவர் குடும்பத்தார்மீதும் உண்மையான அக்கறை காட்டுங்கள். கூட்டம் அப்போதுதான் முடிந்திருக்கிறதா? பயனளிப்பதாக நீங்கள் கண்ட குறிப்புகளைப் பற்றி சொல்லுங்கள். இது உங்கள் இருவருக்குமே நன்மை தரும். காவற்கோபுரம் அல்லது விழித்தெழு!-வின் சமீபத்திய பிரதியில் உங்கள் ஆர்வத்தைக் கவர்ந்த ஒரு குறிப்பை சொல்லலாம். ஆனால் படித்துவிட்டதை பெருமையாக காட்டிக்கொள்வதற்காகவோ அந்நபரின் அறிவை சோதித்துப் பார்ப்பதற்காகவோ இதை செய்யக்கூடாது. மிகவும் ரசித்துப் படித்த விஷயத்தை பகிர்ந்துகொள்வதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் உங்களுக்கோ அவருக்கோ இருக்கும் நியமிப்பைப் பற்றி பேசலாம், பேச்சை எப்படி கொடுப்பது என கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். வெளி ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.
மக்கள்மீது இருக்கும் அக்கறை, மக்களைப் பற்றி—அவர்கள் சொல்கிறவற்றையும் செய்கிறவற்றையும் பற்றி—உரையாடுவதில் பெரும்பாலும் விளைவடைகிறது என்பதில் சந்தேகமில்லை. நம் பேச்சில் நகைச்சுவையும் கலந்திருக்கலாம். நாம் சொல்வது கட்டியெழுப்புமா? கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆலோசனையை இருதயத்தில் ஏற்று, தெய்வீக அன்பினால் தூண்டப்படுகையில், நம் பேச்சு நிச்சயமாகவே ஊக்கமூட்டும்.—நீதி. 16:27, 28; எபே. 4:25, 29; 5:3, 4; யாக். 1:26.
நாம் வெளி ஊழியத்திற்கு செல்லும் முன்பு அதற்காக தயாரிக்கிறோம். அதேவிதமாக, நண்பர்களோடு உரையாடுவதற்கு ஏற்ற சுவாரஸ்யமான துணுக்கையும் ஏன் தயாரிக்கக்கூடாது? சுவையான விஷயங்களை வாசிக்கும்போது அல்லது கேட்கும்போது, மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பும் குறிப்புகளை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். காலப்போக்கில், தேர்ந்தெடுப்பதற்கு ஏராளமான விஷயங்கள் மனதில் குவிந்திருக்கும். தினசரி வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்லாமல் இன்னும் பல விஷயங்களையும் கலந்துரையாட இது உங்களுக்கு உதவும். எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுடைய வார்த்தை உங்களுக்கு எந்தளவு மதிப்புமிக்கது என்பதற்கு உங்கள் பேச்சு அத்தாட்சி அளிக்கட்டும்!—சங். 139:17.