ராஜ்யம்
சொற்பொருள் விளக்கம்: கடவுளுடைய ராஜ்யம் தம்முடைய சிருஷ்டிகளிடம் செலுத்தும் யெகோவாவின் சர்வலோகப் பேரரசாட்சியின் வெளிக்காட்டாகும், அல்லது அந்தப் பேரரசாட்சியைச் செலுத்த அவர் பயன்படுத்தும் கருவியாகும். இந்தப் பதம், அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்து தலைமை வகிக்கும் அந்த ராஜரீக அரசாங்கத்தின்மூலம் கடவுளுடைய பேரரசாட்சி வெளிப்படுத்தப்படுவதைக் குறிப்பதற்கு முக்கியமாய்ப் பயன்படுத்தப்படுகிறது. “ராஜ்யம்” அரசராக அபிஷேகஞ்செய்யப்பட்டவருடைய ஆட்சியைக் குறிக்கலாம் அல்லது அந்தப் பரலோக அரசாங்கம் ஆளும் பூமிக்குரிய அதிகார எல்லையைக் குறிக்கலாம்.
கடவுளுடைய ராஜ்யம் உண்மையான அரசாங்கமா?
அல்லது, அதற்குப் பதில் அது, மனிதரின் இருதயத்திலுள்ள ஒரு நிலைமையா?
லூக்கா 17:21: “இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது, இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே [TEV, Dy; ஆனால் KJ ஓரக் குறிப்பிலும், NE, JB-யிலும் “உங்கள் இடையில்” என்றிருக்கிறது; “உங்கள் நடுவில்,” RS; “உங்கள் மத்தியில்,” NW].” (20-ம் வசனத்தில் காட்டியிருக்கிறபடி, இயேசு பரிசேயரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள், இவர்களை அவர் பாசாங்குக்காரரெனவும் கண்டனஞ்செய்தார், ஆகையால் ராஜ்யம் அவர்களுடைய இருதயங்களில் இருந்ததென அவர் கருதியிருக்க முடியாது. ஆனால் ராஜ்யம் இயேசுவினால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு அவர்களுடைய மத்தியில் இருந்தது. இவ்வாறு தி எம்ஃபாட்டிக் டயக்ளாட்டில் பின்வருமாறு இருக்கிறது: “கடவுளுடைய ராஜரீக மாட்சிமை உங்கள் இடையில் இருக்கிறது.”)
கடவுளுடைய ராஜ்யம் ஓர் அரசாங்கமென பைபிளில் உண்மையில் பேசப்படுகிறதா?
ஏசா. 9:6, 7, தி.மொ.: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ராஜாதிகாரம் (KJ, AT, DY-லும்; “ஆட்சி,” JB, NE; “இளவரசாட்சி,” NW) அவர் தோள்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமான ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா, சமாதானப் பிரபு எனப்படும். . . . அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை.”
இந்த ராஜ்யத்தில் ஆளுபவர்கள் யாவர்?
வெளி. 15:3, தி.மொ.: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, [யெகோவாவே, NW] தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.”
தானி. 7:13, 14, தி.மொ.: “இதோ, மனுஷகுமாரன் [இயேசு கிறிஸ்து; மாற்கு 14:61, 62-ஐப் பாருங்கள்.] சாயலான ஒருவர் வானத்து மேகங்களோடு வந்தார்; அவர் நீண்ட ஆயுளுள்ளவர் [யெகோவா தேவன்] இடமட்டும் வரவே அவர் சந்நிதியில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்கு [இயேசு கிறிஸ்துவுக்கு] ஆளுகையும் மகிமையும் ராஜ்யமும் கொடுக்கப்பட்டன.”
வெளி. 5:9, 10: “நீர் [இயேசு கிறிஸ்து] கொல்லப்பட்டீர், உமது இரத்தத்தினால் ஒவ்வொரு கோத்திரத்திலும் பாஷையிலும் ஜனத்திலும் ஜாதியிலுமிருந்து கடவுளுக்கென்று மனிதரை மீட்டுக்கொண்டீர்; அவர்களை நமது கடவுளுக்கு ஒரு ராஜ்யமாக்கி ஆசாரியருமாக்கினீர். அவர்கள் பூமியின்மீது அரசாளுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 14:1-3-ல், பரலோக சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவருடன் அரசர்களாயிருக்கும்படி “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட” இவர்கள் 1,44,000 பேர் எனச் சொல்லப்படுகிறது.)
மனித அரசாங்கங்களின்மேல் இந்த ராஜ்யத்தின் பாதிப்பு என்னவாயிருக்கும்?
தானி. 2:44, தி.மொ.: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் கடவுள் என்றென்றும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி அழித்துவிடும்; தானோ என்றென்றுமாக நிலைநிற்கும்.”
சங். 2:8, 9: “என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும்கொடுப்பேன். இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்.”
கடவுளுடைய ராஜ்யம் நிறைவேற்றவிருப்பவை என்ன?
யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்தும் அவருடைய பேரரசாட்சியை உறுதியாய்க் கடைப்பிடிக்கச் செய்யும்
மத். 6:9, 10, தி.மொ.: “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக.” (இங்கே கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்படுவது அவருடைய ராஜ்யம் வருவதோடு நெருங்க இணைந்திருக்கிறது.)
எசே. 38:23, தி.மொ.: “நான் பல ஜாதியாரின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி அவர்கள் என்னை அறியும்படி செய்வேன்; நானே யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள்.” (கடவுளுடைய பெயர் எல்லா அவதூறுகளிலிருந்தும் சுத்திகரிக்கப்படும்; அது பரிசுத்தமாயும் மதிப்புக்குகந்ததாயும் கையாளப்படும், மேலும் உயிர்வாழும் எல்லாரும் யெகோவாவின் பேரரசாட்சியை மனமுவந்து கடைப்பிடித்து, அவருடைய சித்தத்தைச் செய்ய பெருமகிழ்ச்சிகொள்ளும் ஆட்களாயிருப்பர். யெகோவாவின் பெயர் இம்முறையில் பரிசுத்தமாக்கப்படுவதின்மீதே சர்வலோகம் முழுவதின் சமாதானமும் ஆரோக்கியமும் சார்ந்திருக்கின்றன.)
இவ்வுலகத்தின்மேல் சாத்தானின் விட்டுக்கொடுக்கப்பட்ட ஆட்சிக்கு முடிவைக் கொண்டுவரும்
வெளி. 20:2, 3: “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் [பரலோக அரசர், இயேசு கிறிஸ்து] பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே [அபிஸ்ஸுக்குள், NW] தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.” (இவ்வாறு நேர்மையானதைச் செய்ய விரும்பும் ஆட்களுக்கு வாழ்க்கையை வெகுக் கடினமாக்கியிருக்கும் சாத்தானிய செல்வாக்கிலிருந்து மனிதவர்க்கம் விடுதலையாக்கப்படும். மனிதத் தன்மையற்ற மட்டுக்குமீறிய கொடிய செயல்களை உண்டுபண்ணியிருக்கிற பேய்த்தனமான செல்வாக்கும் பலருடைய வாழ்க்கையைத் திகிலால் நிரப்பியிருக்கிற பேய்ச் செல்வாக்கும் ஒழிந்துபோய்விட்டிருக்கும்.)
எல்லாச் சிருஷ்டிப்பையும் ஒரே உண்மையான கடவுளின் வணக்கத்தில் ஒன்றுபடுத்தும்
வெளி. 5:13; 15:3, 4, NW: “அப்பொழுது வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் [யெகோவா தேவனுக்கும்] ஆட்டுக்குட்டியானவருக்கும் [இயேசு கிறிஸ்துவுக்கும்] ஸ்தாத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.” “சர்வவல்லவராகிய யெகோவா தேவனே, உம்முடைய செயல்கள் மகத்துவமும் அதிசயமுமானவைகள். நித்தியத்தின் ராஜாவே, உம்முடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவை. யெகோவாவே, நீர் ஒருவரே உண்மைத்தவறாதவராதலால், யார் உமக்கு உண்மையில் பயப்படாமலும், உம்முடைய பெயரை மகிமைப்படுத்தாமலும் இருப்பான்? எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாக வணங்குவார்கள், ஏனெனில் உம்முடைய நீதியுள்ள தீர்ப்புகள் வெளிப்படச் செய்யப்பட்டிருக்கின்றன.”
மனிதவர்க்கத்தைக் கடவுளுடன் ஒத்திசைவான உறவுக்குள் திரும்பக் கொண்டுவரும்
ரோமர் 8:19-21: “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் [இயேசுவுடனிருக்கப் பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்பட்டவர்கள் அரசர்களாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டனர் என்ற அத்தாட்சிக்காக] சிருஷ்டியானது [மனிதவர்க்கம்] மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது [பொதுவில் மனிதவர்க்கம்] அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.”
எல்லாப் போர் பயமுறுத்தலினின்றும் மனிதவர்க்கத்தை விடுதலையாக்கும்
சங். 46:8, 9, தி.மொ.: “யெகோவாவின் செயல்களை வந்து பாருங்கள்; அவர் பூமியிலே எவ்வளவு பயங்கரமானவைகளைச் செய்திருக்கிறார்! பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.”
ஏசா. 2:4, தி.மொ.: “அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தம் கற்பதுமில்லை.”
அடக்கியாளுகின்ற நேர்மையற்ற ஆட்சியாளர்களை பூமியிலிருந்து நீக்கிவிடும்
சங். 110:5, தி.மொ.: “உமது வலதுபாரிசத்திலிருக்கிற ஆண்டவர் [யெகோவாதாமே, NW] தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களைச் சங்கரிப்பார்.”
சங். 72:12-14: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் [யெகோவாவின் மேசியானிய அரசர்] விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”
மனிதவர்க்கம் முழுவதற்கும் ஏராளமான உணவை அளிக்கும்
சங். 72:16, NW: “பூமியில் ஏராளமான தானியம் உண்டாயிருக்கும், மலைகளின் உச்சியில் நிறைந்து வழியும்.”
ஏசா. 25:6, தி.மொ.: “இந்த மலையிலே [கடவுளுடைய ராஜ்யத்தின் இருப்பிடமாகிய பரலோகச் சீயோன் மலையில், பூமிக்குரிய குடிமக்களுக்காக ஏற்பாடுகள் செய்யப்படும்], சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தைச் சேனைகளின் யெகோவா ஆயத்தப்படுத்துவார்; அதிலே கொழும் பதார்த்தங்களும் பழந்திராட்சரசமும் நிறைந்திருக்கும்; கொழும் பதார்த்தங்கள் ஊன் மிகுந்தவை; பழந்திராட்சரசம் வடிகட்டப்பட்டது.”
எல்லா வகையான நோயையும் குறைபாடுகளையும் நீக்கும்
லூக்கா 7:22; 9:11; “நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவனுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.” “அவர்களை அவர் [இயேசு கிறிஸ்து] ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடைய வேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.” (இவ்வாறு தாம் பரலோக அரசராக மனிதவர்க்கத்துக்குச் செய்யப்போவதை இயேசு நடப்பித்துக் காட்டினார்.)
எல்லாருக்கும் வசதியான வீடுகளை அளிக்கும்
ஏசா. 65:21, 22: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை.”
எல்லாருக்கும் திருப்திதரும் வேலையை உறுதிப்படுத்தும்
ஏசா. 65:23: “அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே [யெகோவாவால், தி.மொ.] ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.”
ஆளுக்கும் உடைமைக்கும் அபாயத்திலிருந்து விடுதலையையும் பாதுகாப்பையும் உறுதிதரும்
மீகா 4:4, தி.மொ.: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும் தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளின் யெகோவாவினுடைய வாய் இதைச் சொல்லிற்று.”
சங். 37:10, 11: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தனத்தை உற்றுவிசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”
நீதியும் நியாயமும் நிலவியிருக்கச் செய்யும்
2 பேதுரு 3:13: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”
ஏசா. 11:3-5, தி.மொ.: “அவர் [மேசியானிய அரசர்] தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்கமாட்டார், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யமாட்டார். நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரிப்பார், தேசத்தில் சிறுமையுற்றார்க்கு நேர்மையாய்த் தீர்ப்புச் செய்வார்; . . . நீதி அவருக்கு அரைக்கட்டு, உண்மை அவருக்கு இடைக்கச்சை.”
இயற்கை சக்திகளினால் எந்தத் தீங்கும் உண்டாகாதபடி மனிதவர்க்கத்தைப் பாதுகாக்கும்
மாற்கு 4:37-41: “அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. . . . அவர் [இயேசு] எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து; இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. . . . அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.” (இவ்வாறு தாம் பரலோக அரசராயிருக்கையில் இத்தகைய இயற்கை ஆற்றல்கள்மீது செலுத்தப்போகும் வல்லமையைக் கிறிஸ்து நடப்பித்துக் காட்டினார்.)
மரித்தோரை உயிர்த்தெழுப்பும்
யோவான் 5:28, 29, NW: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், அந்த மணிநேரம் வருகிறது, அதில் ஞாபகார்த்தக் கல்லறைகளிலிருக்கிற அனைவரும் அவருடைய குரலைக் [அரசராகிய கிறிஸ்துவின் குரலைக்] கேட்டு வெளியில் வருவார்கள்.”
வெளி. 20:12: “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக் கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் [புத்தகச் சுருள்கள்] திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக [அவர்களுடைய உயிர்த்தெழுதலுக்குப் பின் செய்த கிரியைகள்; ரோமர் 6:7-ஐ ஒத்துப்பாருங்கள்] நியாயத்தீர்ப்படைந்தார்கள்.”
சுதந்தரித்த ஆதாமின் பாவத்தின் காரணமாயுண்டான மரணத்தை முழுமையாக நீக்கிவிடும்
ஏசா. 25:8, தி.மொ.: “அவர் மரணத்தை என்றுமாக விழுங்குவார்; யெகோவாவாகிய கடவுள் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்துப்[போடுவார்].”
வெளி. 21:4: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”
மக்கள் ஒருவரையொருவர் உண்மையாய் நேசிக்கும் ஓர் உலகத்தை அளிக்கும்
யோவான் 13:35: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று [ஆகவே, அந்தப் பரலோக ராஜ்யத்தில் இயேசுவின் உடனுழைப்பாளர்களாகப் போகிறவர்கள் அல்லது அந்த ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாக இருக்கப்போகிறவர்கள் என] எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”
மிருகங்களையும் மனிதரையும் ஒருவருக்கொருவர் இணக்கமாயுள்ள உறவுக்குள் கொண்டுவரும்
ஏசா. 11:6-9: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், பால்மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை.” (மேலும் ஏசாயா 65:25)
ஓசியா 2:18: “அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, . . . அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.”
இந்தப் பூமியை ஒரு பரதீஸாக்கும்
லூக்கா 23:43, NW: “மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்கிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்.”
சங். 98:7-9, தி.மொ.: “யெகோவாவுக்கு முன்பாக, சமுத்திரமும் அதின் நிறைவும் பூமியும் அதின் குடிகளும் முழங்குவதாக. ஆறுகள் கைகொட்டி மலைகள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுவதாக. அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், பூலோகத்தை நீதியாகவும் ஜாதியாரை நேர்மையாகவும் நியாயந்தீர்ப்பார்.”
ஆதியாகமம் 1:28; 2:15; ஏசாயா 55:11 ஆகியவற்றை ஒத்துப்பாருங்கள்.
கடவுளுடைய ராஜ்யம் எப்பொழுது ஆட்சிசெய்யத் தொடங்க வேண்டியிருந்தது?
முதல் நூற்றாண்டிலா?
கொலோ. 1:1, 2, 13, தி.மொ.: “கடவுளின் சித்தத்தினால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான பவுலும் சகோதரன் தீமோத்தேயுவும் . . . பரிசுத்தவான்களு[க்கு] [பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாக இருந்தவர்களுக்கு] . . . அவரே [கடவுள்] நம்மை [பரிசுத்தவான்களை, கிறிஸ்தவ சபையின் உறுப்பினரை] இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கித் தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவந்தார்.” (ஆகையால், இது எழுதப்படுவதற்கு முன்பே, முதல் நூற்றாண்டில் கிறிஸ்து, கிறிஸ்தவ சபையின் உறுப்பினரின்மேல், நிச்சயமாகவே, ஆளத் தொடங்கிவிட்டிருந்தார், ஆனால் பூமி முழுவதன்பேரிலும் ஆட்சி செய்ய ராஜ்யம் ஸ்தபிக்கப்படுவது இன்னும் எதிர்காலத்திலிருந்தது.)
1 கொரி. 4:8, தி.மொ.: “இதற்குள்ளாகத் திருப்தியடைந்து விட்டீர்களே, இதற்குள்ளாக ஐசுவரியவான்களாகி விட்டீர்களே, எங்களையல்லாமல் அரசராகிவிட்டீர்களே. நீங்கள் ஆளுகிறவர்களானால் எனக்குச் சந்தோஷந்தான்; அப்பொழுது நாங்களும் உங்களோடு ஆளுவோமே.” (அவர்கள் தவறான நோக்குநிலையைக் கொண்டிருந்ததற்காக அப்போஸ்தலன் பவுல் அவர்களைக் கடிந்துகொள்வது தெளிவாயிருக்கிறது.)
வெளி. 12:10, 12: “இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். . . . ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” (இங்கே கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதுடன் சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்படுவது சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. யோபு 1-ம், 2-ம் அதிகாரங்களில் காட்டியிருக்கிறபடி, ஏதேனில் கலகம் செய்த சமயத்தில் இது நடக்கவில்லை. வெளிப்படுத்துதல் பொ.ச. 96-ல் எழுதப்பட்டது, அப்பொழுது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களைப்பற்றி அதில் சொல்லியிருப்பதாக வெளிப்படுத்துதல் 1:1 காட்டுகிறது.)
கடவுளுடைய ராஜ்யம் அதிகாரத்துக்கு வருவது உலக மதமாற்றத்துக்காகக் காத்திருக்கவேண்டுமா?
சங். 110:1, 2, தி.மொ.: “யெகோவா என் ஆண்டவரிடம்: நான் உமது சத்துருக்களை உமது பாதபடியாக்கிப்போடுமட்டும் நீர் என் வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை ஓச்சுவார், நீர் உமது சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்யும் [கீழ்ப்படுத்திக்கொண்டு செல்லும், NW].” (ஆகையால் எல்லாரும் அவருடைய ஆட்சிக்குக் கீழ்ப்படியமாட்டார்கள்; அவர் கீழ்ப்படுத்துவதற்குச் சத்துருக்கள் அங்கிருப்பர்.)
மத். 25:31-46: “மனுஷகுமாரன் [இயேசு கிறிஸ்து] தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து . . . நிறுத்துவார். . . . அந்தப்படி, இவர்கள் [அவருடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரருக்கு அன்பு காட்டாதவர்கள்] நித்திய ஆக்கினையை [நித்திய அறுப்புண்டுபோதலை, NW] அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவர்கள்.” (கிறிஸ்து தமது சிங்காசனத்தில் ஏறுவதற்கு முன்னால் எல்லா மனிதரும் மதமாற்றப்படவேண்டியதில்லை எனவும், எல்லாரும் நீதிமான்களாக நிரூபிக்கமாட்டார்களெனவும் தெளிவாய்த் தெரிகிறது.)
இந்த ராஜ்யம் எப்பொழுது அதன் ஆட்சியை தொடங்குமென்பது பைபிளில் குறிப்பிட்டுள்ளதா?
பக்கங்கள் 95-97-ல், “தேதிகள்” என்ற முக்கிய தலைப்பின்கீழும், பக்கங்கள் 234-239-ல், “கடைசி நாட்கள்” என்பதன்கீழும் பாருங்கள்.
ஒருவர் இவ்வாறு சொன்னால்—
‘அது என் வாழ்நாளில் வராது’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘ஆனால் அது யாராவது ஒருவருடைய வாழ்நாளில் வரப்போகிறதல்லவா? . . . தன்னுடைய சந்ததியே அதைக் காணப்போகிற சந்ததியென எவராவது தெரிந்துகொள்ள முடியுமா? இயேசுவின் சொந்த அப்போஸ்தலர் இதை அறிய விரும்பினர், அவர்களுக்கு அவர் கொடுத்த விடை இன்று நமக்கு மிகுந்த உட்பொருளுள்ளதாயிருக்கிறது. (மத். 24:3-14; லூக்கா 21:29-32)’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘இது பொதுவாய் இருந்துவரும் கருத்து. ஆனால் கடவுளுடைய ராஜ்யம் ஏற்கெனவே பரலோகங்களில் ஆட்சிசெய்கிறதெனவும் கடவுளுடைய நீதியுள்ள அரசாங்கத்தின்கீழ், பூமியில் தொடர்ந்து வாழ நாம் விரும்புகிறோமா இல்லையாவென காட்டுவது நம் பொறுப்பெனவும் யெகோவாவின் சாட்சிகள் பைபிளின் ஆதாரத்தின்பேரில் உறுதியாய் நம்புகின்றனர். இதனிமித்தமே இன்று நான் உங்கள் வாசலண்டை வந்தேன். இங்கே மத்தேயு 25:31-33-ல் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்.’