தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கு வரவேற்கிறோம்
உலகெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாரந்தோறும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்தப்படுகிறது. இப்பள்ளி அளிக்கும் கல்வியால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைகிறார்கள். சிலர் புதியவர்கள். மற்றவர்கள் அநேக ஆண்டுகளாக இப்பள்ளியில் கல்வி பயில்பவர்கள். ஆயிரக்கணக்கான இடங்களில் இப்பள்ளி நடத்தப்படுகிறது. ஆகவே, நீங்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி அதே கல்வியைப் பெறலாம். வயது, இனம், படிப்பறிவு என எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து தரப்பினருமே இந்த தேவராஜ்ய பயிற்றுவிப்பை இலவசமாக பெற்றுவருகிறார்கள்.
இப்பள்ளி யெகோவாவின் சாட்சிகளது சபைகளில் முதன்முதலாக 1943-ல் துவக்கி வைக்கப்பட்டது. அச்சமயத்தில் இதன் நோக்கம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது: “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதில் தங்களுக்கு விசுவாசம் இருப்பதை நிரூபித்திருக்கும் ‘உண்மையுள்ளவர்கள்’ அனைவரையும் ‘மற்றவர்களுக்கு போதிக்க’ பயிற்றுவிப்பதே இதன் நோக்கம். . . . மனதிலுள்ள நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிக்க . . . அவர்கள் ஒவ்வொருவரையும் நன்கு தயார்படுத்துவதே இதன் இலட்சியம்.” (தேவராஜ்ய ஊழியத்திற்கான பயிற்சி [ஆங்கிலம்], பக். 4) அன்றும் இன்றும் அதன் இலட்சியம் இதுவே.
கடவுள் கொடுத்திருக்கும் வரமாகிய பேச்சுத் திறனை நாம் எப்படி சிறந்த விதத்தில் பயன்படுத்தலாம்? பைபிள் இவ்வாறு விடையளிக்கிறது: “சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.” (சங். 150:6, திருத்திய மொழிபெயர்ப்பு) அவ்வாறு நாம் துதிக்கும்போது நம் பரலோக தந்தையின் இருதயத்தைக் குளிர்விக்கிறோம். அவரது அன்பிற்காகவும் நற்குணத்திற்காகவும் நம் இருதயத்தில் நன்றி பெருக்கெடுப்பதற்கு அத்தாட்சி அளிக்கிறோம். “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை . . . எப்போதும் தேவனுக்குச் செலுத்த” கிறிஸ்தவர்கள் உற்சாகப்படுத்தப்படுவதில் ஆச்சரியமில்லை. (எபி. 13:15) யெகோவா கொடுத்திருக்கும் வரங்களைப் பயன்படுத்தி அவரை துதிப்பதற்கான உங்கள் திறனை மேம்படுத்த உதவும் குறிக்கோளோடு, தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் மாணாக்கராக உங்களை வரவேற்கிறோம்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேசும் கலை, போதிக்கும் கலை, பொது வாசிப்பு ஆகியவற்றிற்கு அதிக கவனம் செலுத்தப்படுவது உண்மையே; என்றாலும் இந்த அம்சங்களில் மட்டுமே பள்ளி பயனுள்ளதாக இல்லை. நீங்கள் இதில் பங்குகொள்ளும்போது, வாசிப்பது, கேட்பது, ஞாபகம் வைப்பது, படிப்பது, ஆராய்ச்சி செய்வது, பகுத்தறிந்து ஒழுங்கமைப்பது, உரையாடுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பது, எண்ணங்களை எழுத்தில் வடிப்பது போன்ற மதிப்புமிக்க திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவி பெறுவீர்கள். படிப்பதற்கும் குறிப்புகள் சொல்வதற்கும் பேச்சுக்கள் கொடுப்பதற்கும், பைபிளும் பைபிள் சார்ந்த பிரசுரங்களுமே அடிப்படையாக இருக்கும். கடவுளுடைய வார்த்தையிலுள்ள அருமையான சத்தியங்களால் உங்கள் மனதை நிரப்புகையில், கடவுள் யோசிக்கும் விதமாக யோசிக்க கற்றுக்கொள்வீர்கள். இது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் எப்பேர்ப்பட்ட பயனளிக்கும்! கடவுளுடைய வார்த்தையின் மதிப்பைக் குறித்து 20-ஆம் நூற்றாண்டு பல்கலைக்கழக பேராசிரியர் வில்லியம் லையன் ஃபெல்ப்ஸ் இவ்வாறு எழுதினார்: “பைபிளை முற்று முழுக்க அறிந்திருப்பவரையே படித்தவர் என அழைப்பது சரியானதாகும். . . . என்னைப் பொறுத்தவரை, பைபிள் அறிவில்லாத மேற்படிப்பைவிட மேற்படிப்பில்லாத பைபிள் அறிவு அதிக மதிப்பு வாய்ந்தது.”
முழுமையாக பயனடைவது எப்படி
தேவராஜ்ய ஊழியப் பள்ளி வழங்கும் கல்வியிலிருந்து முழுமையாக பயனடைய, மாணாக்கராகிய நீங்கள் சொந்த முயற்சி எடுக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு” என அப்போஸ்தலனாகிய பவுல் தன் சக கிறிஸ்தவரான தீமோத்தேயுவுக்கு அறிவுரை வழங்கினார். (1 தீ. 4:15) நீங்கள் இதை சிரத்தையுடன் செய்ய என்னென்ன நடைமுறையான வழிகள் உள்ளன?
முடிந்தவரை, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாரந்தோறும் கலந்துகொள்ளுங்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் என்ற இந்தப் பாட புத்தகத்தை ஞானமாக பயன்படுத்துங்கள். முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்கள் பெயரை தெளிவாக எழுதுங்கள். பள்ளிக்கு வரும்போது மறக்காமல் இப்புத்தகத்தையும் எடுத்து வாருங்கள். இந்தப் பாட புத்தகம் பயிற்சி புத்தகமும்கூட. இதை வாசிக்கும்போது, உங்களுக்கு உதவும் என நீங்கள் நினைக்கும் முக்கிய குறிப்புகளை கோடிட்டுக் கொள்ளுங்கள். பள்ளி கலந்தாலோசிப்புகளின்போது கற்றுக்கொள்ளும் நடைமுறையான குறிப்புகளை புத்தக பக்கங்களின் ஓரங்களிலுள்ள அகலமான இடத்தில் எழுதி வையுங்கள்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கான அட்டவணை தனியாக அச்சிடப்படுகிறது. பள்ளி எவ்வாறு நடத்தப்படும் என்ற விவரங்களும் அந்த அட்டவணையில் கொடுக்கப்படுகிறது. அதை இந்தப் புத்தகத்தில் வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்க வசதியாக இருக்கும்.
வாராந்தர பள்ளிப் பாடங்களை தயாரிக்கும்போது, பைபிளே முக்கிய பாட புத்தகம் என்பதை நினைவில் வையுங்கள். அவ்வாரத்திற்குரிய பைபிள் பகுதியை எப்படியும் வாசித்துவிட முயலுங்கள். மற்ற பேச்சுக்களுக்கான தகவல்களையும் முடிந்தளவு முன்கூட்டியே வாசித்தால் அதிக பிரயோஜனமடைவீர்கள்.
பள்ளி நடக்கையில், சபையாரும் குறிப்புகள் சொல்ல வாய்ப்புண்டு. இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட கலந்தாலோசிப்புகளில் பங்குகொள்வது, கேட்பதை ஞாபகம் வைத்துக்கொள்வதற்கும் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கும் அத்தியாவசியமானது.
சபையாருக்கு முன்பாக பேச்சுக்கள் கொடுப்பதற்கும் நடித்துக் காட்டுவதற்கும் எல்லா மாணாக்கர்களுக்குமே நிச்சயம் வாய்ப்பளிக்கப்படும். அந்த ஒவ்வொரு வாய்ப்பையும் நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். எவ்வித பேச்சுப் பண்பு உங்களுக்கு நியமிக்கப்பட்டாலும் அதில் முன்னேற சிரத்தையுடன் முயலுங்கள். நீங்கள் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஏதுவான ஆலோசனை பள்ளியில் வழங்கப்படும். இந்தத் தனிப்பட்ட உதவியை மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். முன்னேறுவதற்கு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்குரிய குறிப்பான ஆலோசனைகளை உங்கள் புத்தகத்தில் எழுதிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் நம்மை எடைபோடும் விதமாக நம்மை நாமே எடைபோட்டு அறிவது கடினம். ஆகவே கொடுக்கப்படும் அன்பான, பைபிள் சார்ந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் ஏற்பது உங்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். பல ஆண்டுகளாக நீங்கள் இப்பள்ளியில் பயிலுபவராக இருந்தாலும் இது பெரிதும் உதவும்.—நீதி. 1:5.
இன்னும் வேகமாக முன்னேற ஆசையா? நீங்கள் முயற்சி செய்தால் இதை சாதிக்கலாம். ஒவ்வொரு மாணாக்கர் பேச்சுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகவலையும் முன்கூட்டியே நன்கு படியுங்கள். பேச்சு கொடுக்க ஆள் தேவைப்படும்போது உங்களால் உடனடியாக முன்வர முடியும், இதனால் அதிக அனுபவமும் பெறுவீர்கள். மற்றவர்கள் பேச்சு கொடுக்கும்போது, அவர்கள் எப்படி தயாரித்து அளிக்கிறார்கள் என்பதை கவனமாக கேளுங்கள். நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்கிறோம்.
அதுமட்டுமல்ல, முடிந்தால் இந்தப் பாட புத்தகத்தை முன்னதாகவே தனிப்பட்ட விதத்தில் படியுங்கள். வேகமாக முன்னேற இது உதவும். அடுத்த 15 படிப்புகளை நன்கு கற்றுக்கொண்ட பின்னர், “பேசுவதிலும் போதிப்பதிலும் திறமையை வளர்க்க உதவும் திட்டம்” என்ற பகுதிக்கு செல்லுங்கள். இது 78-ஆம் பக்கத்தில் ஆரம்பிக்கிறது. முதலில் ஒவ்வொரு பாடத்தையும் படித்து, அதற்குரிய பயிற்சிகளை செய்யுங்கள். கற்கும் விஷயங்களை ஊழியத்தில் கடைப்பிடியுங்கள். இது, கடவுளுடைய வார்த்தையின் பேச்சாளராகவும் போதகராகவும் மிக வேகமாக முன்னேற வழிவகுக்கும்.
வாழ்க்கையில் அதிமுக்கியமான விஷயத்திற்கு கவனம் செலுத்த தேவராஜ்ய ஊழியப் பள்ளி உங்களை தயார்படுத்தும். கடவுளுடைய சித்தத்தினால் நாம் உயிர்வாழ்வதால், அவரை துதிப்பதே நம் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருக்கும். துதியிலேயே மிகச் சிறந்த துதிக்கு உரியவர் யெகோவா தேவனே. (வெளி. 4:11) அத்துதியை அவருக்கு செலுத்த இந்தப் பள்ளியில் நாம் பெறும் கல்வி உதவும்; எப்படியெனில், தெளிவாக யோசிக்கவும், ஞானமாக செயல்படவும், கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் அருமையான சத்தியங்களை திறம்பட எடுத்துச் சொல்லவும் உதவும்.
[பக்கம் 4-ன் முழுபக்க படம்]