படிப்பு 30
பிறர்மீது அக்கறை காட்டுதல்
பிறருக்கு பைபிள் சத்தியங்களை சொல்லும்போது நாம் அவர்களுடைய மனதை நிரப்பினால் மட்டும் போதாது, அவர்களுடைய இருதயத்தைக் கவரவும் வேண்டும். இதற்கு ஒரு வழி, செவிசாய்ப்போர் மீது உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுவதாகும். இப்படிப்பட்ட அக்கறையை பல வழிகளில் காட்டலாம்.
செவிசாய்ப்போருடைய நோக்குநிலையை கருத்தில் கொள்ளுங்கள். அப்போஸ்தலன் பவுல் தனக்கு செவிகொடுத்து கேட்டுக் கொண்டிருந்தவர்களுடைய பின்னணியையும் மனநிலையையும் கவனத்தில் எடுத்துக்கொண்டார். அவர் இவ்வாறு விளக்கினார்: “யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்கு முன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.” (1 கொ. 9:20-23) இன்று நாம் எவ்வாறு ‘எல்லாருக்கும் எல்லாமாகலாம்’?
பிறருடன் பேசுவதற்கு முன்பு, அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு சிறிது நேரத்திற்கு கிடைத்தாலும், அவர்களுடைய விருப்பங்களையும் சூழ்நிலைகளையும் சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள் உங்களுடைய கண்ணில் படலாம். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என உங்களால் சொல்ல முடியுமா? அவர்களுடைய மத நம்பிக்கைகளுக்கு ஏதாவது அத்தாட்சியை பார்க்கிறீர்களா? அவர்களுடைய குடும்ப சூழ்நிலைக்கு ஏதாவது அறிகுறி தென்படுகிறதா? நீங்கள் கவனிப்பதை வைத்து, செவிகொடுப்போருடைய மனதைக் கவரும்படி உங்களுடைய பிரசங்கத்தை மாற்றியமைத்துக்கொள்ள முடியுமா?
மனதைக் கவரும் விதத்தில் பேசுவதற்கு, உங்களுடைய பிராந்தியத்திலுள்ள மக்களை எப்படி அணுகலாம் என்பதைக் குறித்து நீங்கள் முன்னதாகவே யோசித்துப் பார்க்க வேண்டும். சில இடங்களில், அயல்நாடுகளிலிருந்து குடிமாறி வந்தவர்களும் இருக்கலாம். இப்படிப்பட்ட ஜனங்கள் உங்களுடைய பிராந்தியத்தில் இருந்தால், அவர்களுக்கு சாட்சிகொடுப்பதற்கு திறம்பட்ட வழியை கண்டுபிடித்திருக்கிறீர்களா? “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டும் என்பதே கடவுளுடைய சித்தமாக இருப்பதால், நீங்கள் சந்திக்கும் அனைவருடைய மனதையும் கவரும் விதத்தில் ராஜ்ய செய்தியை சொல்வதை உங்களுடைய குறிக்கோளாக வைத்துக்கொள்ளுங்கள்.—1 தீ. 2:4.
கூர்ந்து செவிகொடுங்கள். எல்லாவற்றையும் அறிந்துகொள்ளக்கூடிய வல்லமை யெகோவாவுக்கு இருந்தாலும், பிறர் சொல்வதை அவர் செவிகொடுத்துக் கேட்கிறார். தீர்க்கதரிசியாகிய மிகாயா கண்ட ஒரு தரிசனத்தின்படி, ஒரு விஷயத்தை கையாளுவது சம்பந்தமாக சொந்த கருத்துக்களை சொல்லும்படி தேவதூதர்களை யெகோவா உற்சாகப்படுத்தினார். பின்பு அந்தத் தேவதூதர்களில் ஒருவர் சொன்ன ஆலோசனையை ஏற்று, அதை நிறைவேற்ற அவரை அனுமதித்தார். (1 இரா. 22:19-22) சோதோம் மீது நிறைவேற்றப்படும் நியாயத்தீர்ப்பைக் குறித்து ஆபிரகாம் தன்னுடைய கவலையை தெரிவித்தபோது, உணர்ச்சிகளை வெளிப்படுத்த யெகோவா அவரை அனுமதித்து அவர் சொன்னதை தயவோடு கேட்டார். (ஆதி. 18:23-33) செவிகொடுத்துக் கேட்பதில் சிறந்த முன்மாதிரியாக திகழும் யெகோவாவை நாம் எப்படி ஊழியத்தில் பின்பற்றலாம்?
மனதில் உள்ளதை சொல்வதற்கு மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள். பொருத்தமான கேள்வி கேட்டு, அவர்கள் பதில் சொல்வதற்கு போதுமான நேரம் கொடுங்கள். நன்கு செவிகொடுத்துக் கேளுங்கள். நீங்கள் கூர்ந்து கவனம் செலுத்துவது மனம் திறந்து பேச அவர்களை உற்சாகப்படுத்தும். அவர்கள் தங்களுடைய அக்கறைகளைப் பற்றி ஏதாவது தெரிவித்தால், சாதுரியமாக மேலும் விசாரியுங்கள். குறுக்கு விசாரணை நடத்தாமல், அவர்களை நன்கு புரிந்துகொள்ள முயலுங்கள். அவர்களுடைய கருத்துக்களை மனப்பூர்வமாக பாராட்டுங்கள். அவர்களுடைய கருத்தோடு நீங்கள் ஒத்துப்போகாவிட்டாலும், அவர்கள் சொல்வதை தயவோடு கேளுங்கள்.—கொலோ. 4:6.
ஆனால் ஜனங்கள் மீது வரம்புமீறி அக்கறை காட்டாதவாறு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் மீது அக்கறை இருந்தாலும், அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிட நமக்கு அனுமதியில்லை. (1 பே. 4:15) நாம் காட்டும் அன்பான அக்கறையை எதிர்பாலார் தவறாக புரிந்துகொள்ளாதபடி கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் அக்கறை காட்டுவது எந்தளவுக்கு தகுதியானது என்பது நாட்டுக்கு நாடும் நபருக்கு நபரும்கூட மாறுபடுவதால், நல்ல பகுத்துணர்வு அவசியம்.—லூக். 6:31.
நன்கு செவிசாய்ப்பவராக இருப்பதற்கு ஒரு வழி தயாரிப்பதாகும். செய்தி நம்முடைய மனதில் தெளிவாக இருக்கும்போது, பயமின்றி பேசவும் இயல்பான முறையில் மற்றவர்களுக்கு கவனம் செலுத்தவும் முடியும். இது அவர்களை ரிலாக்ஸாக இருக்கச் செய்கிறது, நம்மோடு நன்கு பேசுவதற்கும் தூண்டுகிறது.
பிறர் சொல்வதை செவிகொடுத்துக் கேட்பதன் மூலம் நாம் அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறோம். (ரோ. 12:10) அவர்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மதிக்கிறோம் என்பதை காட்டுகிறோம். நாம் என்ன சொல்கிறோம் என்பதை கூர்ந்து கவனிப்பதற்கும் அவர்களைத் தூண்டுகிறோம். ஆகவே, ‘கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் இருங்கள்’ என்று நல்ல காரணத்தோடுதான் பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது.—யாக். 1:19.
மற்றவர்கள் முன்னேற உதவுங்கள். மற்றவர்கள் மீது நமக்கு அக்கறை இருந்தால், ஆர்வம் காட்டிய அவர்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்போம்; மேலும், அவர்களுடைய தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்யும் பைபிள் சத்தியங்களை பகிர்ந்துகொள்வதற்கு அவர்களை மீண்டும் சந்திப்போம். மறுபடியும் சந்திப்பதைப் பற்றி யோசிக்கும்போது, முன்பு சந்தித்தபோது அவர்களைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அவர்கள் அக்கறை காட்டிய பொருளில் தகவலை தயாரியுங்கள். கற்றுக்கொள்ளும் விஷயங்களிலிருந்து எவ்வாறு பயனடையலாம் என்பதை புரிந்துகொள்வதற்கு உதவிசெய்து, அந்தத் தகவலின் நடைமுறைப் பயனை சிறப்பித்துக் காட்டுங்கள்.—ஏசா. 48:17.
மனதை வாட்டிக்கொண்டே இருக்கும் ஒரு சூழ்நிலையை அல்லது பிரச்சினையைப் பற்றி செவிசாய்ப்பவர் சொன்னால், அவரோடு நற்செய்தியை பகிர்ந்துகொள்வதற்கு கிடைத்த ஒரு விசேஷ வாய்ப்பாக அதை கருதுங்கள். வேதனையில் துவண்டவர்களுக்கு ஆறுதலளிக்க எப்பொழுதும் தயாராக இருந்த இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றுங்கள். (மாற். 6:31-34) அவசரப்பட்டு ஏதாவது பரிகாரத்தை சொல்வதையோ மேலோட்டமாக அறிவுரை வழங்குவதையோ தவிருங்கள். அப்படிச் செய்தால், உங்களுக்கு உள்ளப்பூர்வமான அக்கறை இல்லை என அந்த நபர் நினைக்க வாய்ப்புண்டு. மாறாக, அனுதாபம் காட்டுங்கள். (1 பே. 3:8, NW) பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து, அவருடைய சூழ்நிலையை சமாளிக்க உதவும் தகவலை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நியாயமான காரணம் இருந்தால் தவிர, அவர் உங்களிடம் சொன்ன இரகசிய தகவல்களைப் பிறரிடம் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு அன்பான அக்கறை உதவும்.—நீதி. 25:9.
முக்கியமாக பைபிள் படிப்பவர்களிடம் நாம் தனிப்பட்ட அக்கறை காட்ட வேண்டும். ஒவ்வொரு மாணாக்கருடைய தேவைகளையும் ஜெபத்தோடு சிந்தித்துப் பார்த்து அதற்கேற்ப படிப்பை தயாரியுங்கள். நீங்கள் இவ்வாறு உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘தொடர்ந்து ஆவிக்குரிய விதத்தில் முன்னேறுவதற்கு அவர் அடுத்து என்ன செய்ய வேண்டும்?’ ஒரு விஷயத்தின் பேரில் பைபிளும் ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியர்களுடைய’ பிரசுரங்களும் என்ன சொல்கின்றன என்பதை மாணாக்கர் புரிந்துகொள்ள அன்புடன் உதவுங்கள். (மத். 24:45) சில சந்தர்ப்பங்களில், விளக்கம் கொடுப்பது மாத்திரமே போதாது. குறிப்பிட்ட பைபிள் நியமம் ஒன்றை எப்படி பொருத்துவது என்பதை உதாரணத்துடன் மாணாக்கருக்கு விளக்கிக் காட்ட வேண்டியதாக இருக்கலாம்.—யோவா. 13:1-15.
யெகோவாவின் தராதரங்களுக்கு இசைவாக வாழ பிறருக்கு உதவி செய்யும்போது சமநிலையும் பகுத்துணர்வும் அவசியம். ஆட்கள் வித்தியாசமான பின்னணிகளைச் சேர்ந்தவர்களாகவும் திறமைகளை உடையவர்களாகவும் இருப்பதால் அவர்களுடைய முன்னேற்றம் வித்தியாசப்படுகின்றன. நீங்கள் மற்றவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதில் நியாயமானவர்களாக இருங்கள். (பிலி. 4:5, NW) வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய அவர்களை வற்புறுத்தாதீர்கள். கடவுளுடைய வார்த்தையும் அவருடைய ஆவியும் அவர்களை உந்துவிக்க அனுமதியுங்கள். ஜனங்கள் தமக்கு மனப்பூர்வமாக சேவை செய்யவே யெகோவா விரும்புகிறார், வற்புறுத்தலினால் அல்ல. (சங். 110:3) அவர்கள் தனிப்பட்ட தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருந்தால் உங்களுடைய சொந்த அபிப்பிராயங்களை தெரிவிப்பதை தவிருங்கள், அப்படியே உங்களிடம் கேட்டாலும் அவர்களுக்காக நீங்கள் தீர்மானம் எடுக்காமல் இருப்பதற்கு கவனமாயிருங்கள்.—கலா. 6:5.
நடைமுறையான உதவி செய்யுங்கள். தமக்கு செவிகொடுப்போருடைய ஆவிக்குரிய நலன் மீதே இயேசு முக்கியமாக அக்கறை காட்டியபோதிலும், அவர்களுடைய பிற தேவைகளைக் குறித்தும் உணர்வுடையவராக இருந்தார். (மத். 15:32) நமக்கு குறைந்த வசதியே இருந்தாலும், வேறு பல வழிகளில் நடைமுறையான உதவி அளிக்கலாம்.
மற்றவர்கள் மீதுள்ள அக்கறை, கரிசனையோடு நடந்துகொள்வதற்கு நம்மை தூண்டும். உதாரணமாக, மோசமான சீதோஷ்ண நிலையின் காரணமாக நீங்கள் சொல்வதைக் கேட்பது ஒருவருக்கு சிரமமாக இருந்தால், பொருத்தமான வேறொரு இடத்திற்குச் சென்று கலந்துரையாடுங்கள், அல்லது வேறொரு சமயத்தில் கலந்துரையாட ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு அசௌகரியமான ஒரு சமயத்தில் நீங்கள் சந்தித்தால், பிற்பாடு வருவதாக சொல்லுங்கள். ஆர்வம் காண்பித்த அக்கம்பக்கத்தாரோ வேறொருவரோ சுகமில்லாமல் இருந்தால் அல்லது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தால், கார்டையோ சின்ன கடிதத்தையோ அனுப்பி உங்களுடைய அக்கறையை காண்பியுங்கள்; அவரை நேரில் சென்று சந்திப்பதன் மூலமும் அக்கறை காட்டலாம். பொருத்தமானால், எளிய உணவை தயாரித்துக் கொடுங்கள் அல்லது வேறொரு அன்பான உதவியை செய்யுங்கள்.
பைபிள் மாணாக்கர்கள் முன்னேற்றம் செய்கையில் முன்னாள் கூட்டாளிகளோடு நேரம் செலவழிப்பதைக் குறைத்துக்கொள்வார்கள்; இதனால் உணர்ச்சிப்பூர்வமாக ஒருவித வெறுமையுணர்வு அவர்களுக்கு ஏற்படலாம். ஆகவே அவர்களை நண்பராக்கிக் கொள்ளுங்கள். பைபிள் படிப்பிற்குப் பிறகும் வேறுசில சமயங்களிலும் அவர்களோடு பேசுவதில் நேரத்தை செலவழியுங்கள். நல்ல கூட்டுறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு அவர்களை உற்சாகப்படுத்துங்கள். (நீதி. 13:20) கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராக உதவுங்கள். அப்படிப்பட்ட கூட்டங்களில் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து, அவர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் உதவுங்கள்; அப்பொழுது நிகழ்ச்சி நிரலிலிருந்து அனைவரும் பயனடைய முடியும்.
இருதயப்பூர்வமான அக்கறை காட்டுங்கள். மக்கள் மீது அக்கறை காட்டுவது என்பது கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு திறமை அல்ல, ஆனால் இருதயத்தில் வளர்க்க வேண்டிய ஒரு பண்பாகும். பிறர் மீது நாம் எந்தளவு அக்கறை காட்டுகிறோம் என்பது பல வழிகளில் தெளிவாகத் தெரிகிறது. நாம் எவ்வாறு செவிகொடுத்துக் கேட்கிறோம், என்ன சொல்கிறோம் என்பதிலிருந்து இது தெரிகிறது. மற்றவர்களுக்கு நாம் காண்பிக்கும் தயவின் மூலமும் கரிசனையின் மூலமும் இது வெளிப்படுத்தப்படுகிறது. நாம் எதுவும் சொல்லாவிட்டால் அல்லது செய்யாவிட்டால்கூட நம்முடைய மனப்பான்மையிலும் முகபாவங்களிலும் வெளிப்படுகிறது. ஆகவே நாம் உண்மையிலேயே பிறர்மீது அக்கறை கொள்வோமென்றால், அதை அவர்களால் நிச்சயம் உணர முடியும்.
பிறர் மீது அக்கறை காட்டுவதற்கு மிக முக்கியமான காரணம், நம்முடைய பரலோக தகப்பனுடைய அன்பையும் இரக்கத்தையும் பின்பற்ற முயல்வதே. நாம் அக்கறை காட்டுகையில் செவிசாய்ப்போரை யெகோவாவிடம் ஈர்க்க முடியும், அதோடு நம்மிடம் அவர் ஒப்படைத்திருக்கும் செய்தியிடமும் ஈர்க்க முடியும். ஆகவே, நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்போது, ‘தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவதற்கு’ முயற்சி செய்யுங்கள்.—பிலி. 2:4.