சந்தோஷத்தைக் கொண்டுவரும் குடும்பப் படிப்பு
“அறிவினால் அவ்வீட்டின் அறைகள் விலை உயர்ந்தனவும், மிகவும் அலங்காரமுள்ளனவுமான எவ்விதப் பொருளாலும் நிறைக்கப்படும்” என்பதாக பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 24:4, தமிழ் கத்தோலிக்க பைபிள்.) இந்த விலை உயர்ந்த பொருட்கள் வெறுமனே பொருள் சம்பந்தமான பொக்கிஷங்கள் அல்ல, ஆனால் அவற்றில் உண்மையான அன்பும், தேவ பயமும் பலமான விசுவாசமும் உள்ளடங்குகின்றன. இப்படிப்பட்ட குணங்களே சிறப்பான ஒரு குடும்ப வாழ்க்கையை உருவாக்குகின்றன. (நீதிமொழிகள் 15:16, 17; 1 பேதுரு 1:7) ஆனால் அவற்றைப் பெற்றுக்கொள்ள நாம் தேவனை அறியும் அறிவை நம்முடைய வீடுகளுக்குள் கொண்டுவரவேண்டும்.
இந்த அறிவை குடும்ப அங்கத்தினர்களில் வளர்க்கும் பொறுப்பு குடும்பத் தலைவனுடையது. (உபாகமம் 6:6, 7; எபேசியர் 5:25, 26; 6:4) இதைச் செய்வதற்கு மிகச் சிறந்த வழிகளில் ஒன்று ஒழுங்கான ஒரு குடும்பப் படிப்பே ஆகும். போதிக்கும் முறையிலும் மகிழ்ந்து அனுபவிக்கும் முறையிலும் படிப்பு நடத்தப்படும்போது அதில் கலந்துகொள்பவர்களுக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்! அப்படியென்றால், பயனுள்ள ஒரு குடும்பப் படிப்பை நடத்துவதில் இன்றியமையாதவையாக இருக்கும் சிலவற்றை நாம் சிந்திப்போமாக.a
குடும்பப் படிப்பு ஒழுங்காக நடத்தப்படும்போதுதான் அது அதிக பயனுள்ளதாக இருக்கிறது. ஒழுங்குமுறைப்படியாக இல்லாமல் அல்லது அந்த ஒரு கணத்தில் அவசரமாக செய்யப்படுமானால் அது எப்பொழுதாவது நடத்தப்படும் ஒன்றாகவே இருக்கும். ஆகவே படிப்புக்காக நீங்கள் ‘நேரத்தை வாங்கவேண்டும்.’ (எபேசியர் 5:15-17, NW) எல்லாருக்கும் செளகரியமாக இருக்கும் ஒரு நேரத்தை தெரிவு செய்வது ஒரு சவாலாக இருக்கக்கூடும். “ஒழுங்காக எங்களுடைய குடும்பப் படிப்பை நடத்துவதில் எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன” என்பதாக ஒரு குடும்பத் தலைவர் ஒப்புக்கொள்கிறார். “கடைசியாக எங்களுக்கு வசதியாக பொழுதுசாய்ந்த வேளையில் நாங்கள் நேரத்தை கண்டுபிடிக்கும் வரையாக பல்வேறு சமயங்களை முயற்சி செய்து பார்த்துவிட்டோம். இப்பொழுது எங்களுடைய குடும்பப் படிப்பு ஒழுங்காக நடக்கிறது.”
பொருத்தமான ஒரு நேரம் உங்களுக்கு கிடைத்தபிறகு, கவனத்தைச் சிதறடிக்கும் காரியங்கள் அந்தப் படிப்பை பாதிக்க அனுமதிக்காதபடி ஜாக்கிரதையாயிருங்கள். “நாங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது விருந்தினர் வந்தால் அவர்களை வரவேற்றுவிட்டு, படிப்பு முடியும் வரையாக காத்திருக்கும்படியாக அப்பா அவர்களிடம் சொல்வார். தொலைபேசி அழைப்புகள் வந்தால், அவருக்குப் பிறகு ஃபோன் செய்வதாக சொல்லிவிடுவார்” என்பதாக இப்பொழுது 33 வயதுடையவராக இருக்கும் மரியா நினைவுபடுத்திச் சொல்கிறார்.b
இருப்பினும் வளைந்துகொடுப்பதற்கு இடமே இல்லை என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. கவனிக்க வேண்டிய அவசர காரியங்கள் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகள் ஏற்படலாம்; எப்போதாவது படிப்பை ரத்துசெய்துவிடுவது அல்லது தள்ளிப்போடுவது அவசியமாக இருக்கலாம். (பிரசங்கி 9:11) ஆனால் இவற்றில் எதுவும் உங்கள் வழக்கமான அட்டவணையைக் கெடுத்துவிட அனுமதிக்காதபடி கவனமாயிருங்கள்.—பிலிப்பியர் 3:16.
ஒரு படிப்பு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்? ஒரு மகளையும் மகனையும் வெற்றிகரமாக வளர்த்திருக்கும் ராபர்ட் இவ்வாறு சொல்கிறார்: “எங்களுடைய படிப்பு பொதுவாக ஒரு மணிநேரம் நீடித்தது. பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது, காவற்கோபுரம் பத்திரிகையில் படிப்புக் கட்டுரையிலிருந்து சில பாராக்கள், பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்ட சில பகுதிகள் இன்னும் மற்ற பிரசுரங்களிலிருந்து சில பாகங்கள் போன்று பல்வேறு காரியங்களைச் சிந்திப்பதன் மூலம் ஒரு மணிநேரத்தில் எங்களுடைய பிள்ளைகளின் கவனம் சிதறிப்போகாமல் இருக்க முயற்சிசெய்தோம்.” மரியா நினைவுபடுத்திச் சொல்கிறார்: “என்னுடைய இரண்டு அக்காமாரும் நானும் மிகவும் சிறியவர்களாக இருந்தபோது, எங்களுடைய படிப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது, வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் படிப்பைக் கொண்டிருந்தோம். நாங்கள் வளர்ந்து பெரியவர்களானபோது, எங்களுடைய வாராந்தர குடும்பப் படிப்பு ஒரு மணிநேரம் போல் நீடித்தது.”
நாம் என்ன படிக்கவேண்டும்?
ஒரு படிப்புக்காக எல்லாரும் கூடிவந்திருக்கும்போது இந்தக் கேள்வியைப் பற்றி சிந்திப்பது ஆர்வம் குறைவதிலும் பயனுள்ள படிப்பு நேரம் வீணாவதிலும் விளைவடையும். இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டால், பிள்ளைகள் எதிர்பார்ப்பதற்கு திட்டவட்டமாக எதையும் கொண்டில்லாமல் சீக்கிரத்தில் ஆர்வத்தை இழந்துவிடுவர். ஆகவே, சிந்திப்பதற்கு சங்கத்தின் பிரசுரங்களில் ஒன்றை முன்கூட்டியே தெரிவுசெய்து வைத்துவிடுங்கள்.
தெரிவு செய்வதற்கு ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ ஏராளமான பிரசுரங்களை அளித்துள்ளது. (மத்தேயு 24:45-47) குடும்பம் இதுவரையாக ஒருவேளை படித்திராத ஒரு புத்தகத்தை நீங்கள் பயன்படுத்தலாம். வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை புத்தகங்கள் உங்களுடைய மொழியில் கிடைப்பதாக இருந்தால் அவற்றிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு சில பகுதிகளைச் சிந்திப்பது எத்தனை மகிழ்ச்சி தருவதாய் இருக்கும்! உதாரணமாக, நினைவு ஆசரிப்பு நாளுக்கு முந்தின வாரங்களில் கர்த்தருடைய இராப்போஜனத்தின் பேரிலுள்ள கட்டுரையை மறுபார்வை செய்யலாம். அநேக குடும்பங்கள் அந்த வாரத்துக்குரிய காவற்கோபுரம் படிப்புக் கட்டுரையைத் தயாரிப்பதை மகிழ்ந்து அனுபவிக்கிறார்கள். ஆனால் காவற்கோபுரம் பத்திரிகையில் உள்ள துணைக் கட்டுரைகளும்கூட படிப்பதற்கு மிகச் சிறந்த விஷயங்களைக் கொண்டிருக்கின்றன. குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளை அறிந்திருக்கும் குடும்பத் தலைவனே என்ன பிரசுரங்கள் படிக்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு மிகச்சிறந்த நிலையில் இருக்கிறார்.
“முன்கூட்டியே தெரிந்துகொள்ளப்பட்ட பிரசுரத்தையே நாங்கள் எப்பொழுதும் படித்தோம்” என்பதாக மரியா நினைவுகூருகிறார். “ஆனால் ஒரு கேள்வி எழுப்பப்படுகையில் அல்லது பள்ளியில் ஒரு நிலைமை ஏற்படுகையில், அப்போது நாங்கள் பொருத்தமான தகவலுக்கு கவனத்தைத் திருப்புவோம்.” எதிர்பாலாரோடு பழகுதல், பாட திட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் போன்ற பள்ளியில் இளைஞர் எதிர்ப்படும் காரியங்களான, விசேஷமான கவனத்துக்குரிய காரியங்கள் எழும்பும். இப்படி சம்பவிக்கும்போது, நடப்பிலுள்ள பிரச்சினையைக் கையாளும் கட்டுரைகள் அல்லது பிரசுரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். அண்மையில் வந்திருக்கும் காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளில் நீங்கள் காணும் தகவலை அப்பொழுதே உங்களுடைய குடும்பத்தோடு கலந்தாலோசிக்க விரும்பினால், அதற்கு ஏற்பாடு செய்யத் தயங்கவேண்டாம். நிச்சயமாகவே, மாற்றத்தை முன்கூட்டியே குடும்ப அங்கத்தினர்களுக்கு தெரியப்படுத்திவிட நீங்கள் விரும்புவீர்கள். ஆனால் அந்தத் தேவைக்கு கவனம் செலுத்திய பிறகு, ஏற்கெனவே அட்டவணையிலிருக்கும் தகவலுக்குத் திரும்பிவிடுவதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்.
அமைதியான ஒரு சூழலை காத்துக்கொள்ளுங்கள்
மிகவும் அமைதியான நிலைமைகளில்தான் நன்றாகக் கற்றுக்கொள்ளமுடியும். (யாக்கோபு 3:18) ஆகவே, சகஜமான, அதேசமயத்தில் மரியாதைக்குரிய ஒரு சூழலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஐக்கிய மாகாணங்களில் ஒரு குடும்பத் தலைவன் இவ்வாறு சொல்கிறார்: “ஒரு பெரிய அறையில் ஒவ்வொருவரும் மிகவும் தள்ளித் தள்ளி உட்காருவதற்குப் பதிலாக, ஹாலில் படித்தாலும் அல்லது வராந்தாவில் படித்தாலும், நாங்கள் ஓரளவு நெருங்கியே உட்கார்ந்திருக்க முயற்சிசெய்கிறோம். எங்களுக்கு இது அன்பான ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.” மரியா மிகவும் ஆசையுடன் நினைவுகூர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “வீட்டில் எந்த இடத்தில் அந்த வாரத்தின் படிப்பை நாங்கள் வைத்துக்கொள்ளலாம் என்பதை தெரிவு செய்ய என்னுடைய அக்காமார்களும் நானும் அனுமதிக்கப்பட்டோம். இது எங்களை செளகரியமாக உணரச்செய்தது.” சரியான வெளிச்சம், தகுதியான இருக்கை ஏற்பாடு, இன்பகரமாகவும் சுத்தமாகவும் இருக்கும் சுற்றுப்புறம் ஆகிய அனைத்துமே அமைதிக்குப் பங்களிக்கக்கூடும் என்பதை மனதில் வையுங்கள். படிப்புக்குப்பின், சிற்றுண்டிகளைக் கொண்டிருப்பதும்கூட மாலைநேரத்தை அனுபவித்து மகிழுவதற்கு உதவிசெய்கிறது.
சில குடும்பங்கள் தங்களுடைய படிப்பில் மற்ற எப்போதாவது குடும்பங்களையும்கூட சேர்த்துக்கொள்ள தெரிவுசெய்கிறார்கள்; இது படிப்பை அதிக சுவாரசியமானதாக ஆக்குகிறது; பல்வேறு குறிப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் உதவிசெய்கிறது. சத்தியத்தில் புதிதாக இருப்பவர்கள் இந்த ஏற்பாட்டில் பங்குகொள்ள அழைக்கப்படுகையில், அனுபவமுள்ள ஒரு குடும்பத் தலைவன் நடத்தும் குடும்பப் படிப்பை கவனிப்பதன் மூலம் அவர்கள் பயனடையலாம்.
பைபிளை உயிர்பெற்றுவரச் செய்யுங்கள்
படிப்பு நேரங்களைப் பிள்ளைகளுக்கு உற்சாகமான ஒன்றாக ஆக்குங்கள், அப்போது அவர்கள் அவற்றை ஆவலோடு எதிர்நோக்கியிருப்பார்கள். பைபிள் காட்சிகளின் படங்களை வரையும்படியாக சிறு பிள்ளைகளை உற்சாகப்படுத்துவதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம். பொருத்தமாக இருக்கும்போது, பிள்ளைகளை பைபிள் சம்பவங்களையும் நாடகங்களையும் நடித்துக்காட்டச் செய்யுங்கள். சிறு பிள்ளைகள் இருக்கையில் முறைப்படியான கேள்வி பதில் முறையை பின்பற்றுவது அவசியமில்லை. பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றி வாசிப்பது அல்லது கதைசொல்லுவது தெய்வீக நியமங்களை மனதில் பதியவைப்பதற்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு வழியாகும். முன்பு குறிப்பிடப்பட்ட ராபர்ட் இவ்வாறு நினைவுபடுத்திக் கூறுகிறார்: “சில சமயங்களில் பைபிளின் சில பகுதிகளை வாசிப்போம், அப்போது நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று மாறி மாறி வாசிப்போம்.” வாசிப்பில் அவர்கள் ஏற்க விரும்பும் கதாபாத்திரங்களை பிள்ளைகள் தெரிவுசெய்யும்படியாக அழைக்கப்படலாம்.
நிலப்படங்களையும் வரைப்படங்களையும் பயன்படுத்துவது, சிந்திக்கப்படும் சம்பவங்கள் நடந்த தேசத்தின் இடங்களையும் அம்சங்களையும் கற்பனைசெய்துப் பார்க்க வயதில் மூத்த பிள்ளைகளுக்கு உதவிசெய்யும். கொஞ்சம் கற்பனை இருந்தால் ஒரு குடும்பப் படிப்பு உயிரோட்டமுள்ளதாயும் வித்தியாசப்பட்டதாயும் செய்யப்பட முடியும். அப்போது பிள்ளைகள் கடவுளுடைய வார்த்தைக்காக வாஞ்சையை வளர்த்துக்கொள்வார்கள்.—1 பேதுரு 2:2, 3.
அனைவரும் பங்குகொள்ள உதவுங்கள்
பிள்ளைகள் படிப்பை அனுபவித்து மகிழுவதற்கு, அதில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்கூட அவர்கள் உணரவேண்டும். பல்வேறு வயதுகளிலுள்ள பிள்ளைகளை இதில் கலந்துகொள்ள வைப்பது ஒரு சவாலாக இருக்கக்கூடும். ஆனால் ஒரு பைபிள் நியமம் இவ்வாறு சொல்கிறது: “தலைமை வகிப்பவன் அதை உண்மையான ஊக்கத்தோடு செய்யக்கடவன்.” (ரோமர் 12:8, NW) உற்சாகமாய் இருப்பது உதவிசெய்கிறது, ஏனென்றால் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
வாசிப்பு பொருளின் உபதலைப்புகளை வாசிக்கச்செய்வதன் மூலமும் படங்களின் பேரில் குறிப்புகளைக் கேட்பதன் மூலமும் ரோனால்ட் தன்னுடைய ஐந்து வயது மகள் டீனாவை அதில் உட்படுத்துகிறார். கடந்த வருடம் கிறிஸ்துவின் நினைவு ஆசரிப்பு நெருங்கியபோது, அவர் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்c புத்தகத்தில் பொருத்தமான விளக்க படங்களின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினார். அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இது நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள அவளுக்கு உதவியது.”
தன்னுடைய பத்து வயது மகள் மிஷாவோடு ரோனால்ட் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். “விளக்கப்படங்கள் என்ன என்பதை புரிந்துகொள்ள முடிவதோடுகூட அவை விளக்கும் கருத்தையும்கூட புரிந்துகொள்ளும் அளவுக்கு மிஷா முன்னேறியிருக்கிறாள்” என்பதாக ரோனால்ட் சொல்கிறார். “ஆகவே வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!* என்ற புத்தகத்தைச் சிந்திக்கையில், நாங்கள் விளக்கப் படங்களின் பொருளின்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தினோம்; இது அவளுக்கு உதவிசெய்துள்ளது.”
பிள்ளைகள் தங்கள் பருவ வயதை அடைகையில், சிந்திக்கப்படும் விஷயத்தை நடைமுறைப்படுத்திப் பார்க்க அவர்களை அழையுங்கள். படிப்பு சமயத்தில் கேள்விகள் வருகையில், ஆராய்ச்சி செய்வதற்கு சில பகுதிகளை நியமனம் செய்யுங்கள். டன்ஜன்ஸ் அண்டு டிராகன்ஸ் என்ற விளையாட்டை உட்படுத்திய புதிதாக பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கிளப்பைப் பற்றி அவருடைய 12 வயது மகன் பால் கேட்டபோது, ராபர்ட் இதைச் செய்தார். பாலும் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் உவாட்ச்டவர் பப்பிளிகேஷன்ஸ் இன்டெக்ஸ்-ஐ பயன்படுத்தி தகவலை சேகரித்து அவர்களுடைய குடும்பப் படிப்பில் அதை மறுபார்வை செய்தார்கள். “இதன் விளைவாக, இந்த விளையாட்டு கிறிஸ்தவர்களுக்கு தவறானது என்பதை பால் உடனடியாக விளங்கிக்கொண்டான்” என்பதாக ராபர்ட் சொல்லுகிறார்.
ராபர்ட் மற்ற சமயங்களிலும்கூட ஆராய்ச்சி செய்வதற்கு நியமனங்களைக் கொடுத்தார். அவருடைய மனைவி நான்சி நினைவுபடுத்தி சொல்கிறாள்: “இயேசுவின் அப்போஸ்தலர்களைக் குறித்து நாங்கள் ஆய்வு செய்தபோது, எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாரத்துக்கு ஒரு அப்போஸ்தலர் என்பதாக நியமனம் கொடுக்கப்பட்டது. பிள்ளைகள் தங்கள் அறிக்கையை குடும்பப் படிப்பில் உற்சாகமாக சமர்ப்பிப்பதைக் காண்பது எத்தனைக் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது!” தங்கள் சொந்த ஆராய்ச்சிகளைச் செய்து பின்னர் குடும்பத்தோடு தகவலைப் பகிர்ந்துக்கொள்வது பிள்ளைகள் ‘யெகோவாவோடு வளருவதற்கு’ உதவிசெய்கிறது!—1 சாமுவேல் 2:20, 21.
கேள்விகள் கேட்பதுகூட—நோக்குநிலை கேள்விகள் மற்றும் வழிகாட்டும் கேள்விகள்—பிள்ளைகளை உட்படுத்துவதற்கு சிறந்த ஒரு வழியாகும். மிகச் சிறந்த போதகர், இயேசுவும்கூட “உனக்கு எப்படித் தோன்றுகிறது?” என்பதை போன்ற நோக்குநிலை கேள்விகளைக் கேட்டார். (மத்தேயு 17:25) “எங்களில் எவருக்காவது கேள்வி இருந்தால், எங்களுடைய பெற்றோர் நேரடியாக ஒருபோதும் பதிலளிக்கவில்லை. அவர்கள் எப்போதும் வழிகாட்டும் கேள்விகளைக் கேட்டு அந்த விஷயத்தின்பேரில் எண்ணிப்பார்த்து எப்போதும் முடிவுசெய்ய எங்களுக்கு உதவினார்கள்” என்பதாக மரியா நினைவுகூருகிறார்.
பேச்சுத்தொடர்பு கொள்ளுங்கள்—எரிச்சலூட்டாதேயுங்கள்!
அனைவராலும் தங்களுடைய கருத்துக்களையும் உணர்வுகளையும், கேலிசெய்யப்படுவோம் என்ற பயமில்லாமல் தெரிவிக்கமுடியுமென்றால் குடும்பப் படிப்பின் சந்தோஷம் அதிகமாகிறது. ஆனால் “பேச்சுத் தொடர்பு மற்ற சமயங்களில் தடையில்லாமல் இருந்தால் மட்டுமே குடும்பப் படிப்பின்போது நல்ல பேச்சுத்தொடர்பு கூடிய காரியம்” என்பதாக ஒரு தந்தை சொல்லுகிறார். “படிப்பு நேரத்தின்போது மாத்திரமே நல்ல பேச்சுதொடர்பு இருப்பதாக நீங்கள் பாவனை செய்ய முடியாது.” ‘இதைத்தானா சொல்ல வந்தாய்? நீ ஏதோ முக்கியமானதை சொல்லப்போகிறாய் என்று நான் நினைத்தேன்’; ‘இது அசட்டுத்தனமாக இருக்கிறது’; ‘ஆம், உன்னிடமிருந்து உருப்படியான எதையும் எதிர்ப்பார்க்க முடியுமா, என்ன? என்ன இருந்தாலும் நீ சிறுபிள்ளைதானே.’ போன்ற புண்படுத்தும் யோசனையில்லாத குறிப்புகளைச் சொல்வதை கட்டாயமாகவே நீங்கள் தவிர்க்க வேண்டும். (நீதிமொழிகள் 12:18) உங்கள் பிள்ளைகளிடம் கருணையுடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்ளுங்கள். (சங்கீதம் 103:13; மல்கியா 3:17) அவர்களில் மகிழ்ச்சியைக் காணுங்கள், கற்றுக்கொண்டவற்றைப் பொருத்தி பிரயோகிக்க அவர்கள் பிரயாசப்படும்போது அவர்களுக்கு துணையாக இருங்கள்.
பிள்ளையின் மனது, அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் விதமான குடும்ப சூழல் அங்கு இருக்கவேண்டும். “பிள்ளைகளை நீங்கள் திருத்த ஆரம்பிக்கும்போது, பிள்ளைகள் கொஞ்சம் வெறுப்பில் இருப்பார்கள்” என்பதாக நான்கு பிள்ளைகளை வெற்றிகரமாக வளர்த்திருக்கும் ஒரு பெற்றோர் சொல்கிறார். அப்படிப்பட்ட ஒரு சூழலில், தகவல் ஒருவேளை உள்ளே ஊடுருவிச் செல்லாது. ஆகவே படிப்பு நேரங்களை சிட்சையும் தண்டனையும் கொடுக்கும் நேரங்களாக ஆக்கிவிடுவதைத் தவிர்த்திடுங்கள். அவற்றை தேவைப்படுமானால், பிற்பாடும் தனித்தனியாகவும் செய்யுங்கள்.
முயற்சி தகுதியுள்ளதே
ஆவிக்குரிய விதத்தில் ஐசுவரியமுள்ள ஒரு குடும்பத்தைக் கட்டுவதற்கு நேரமும் முயற்சியும் எடுக்கிறது. ஆனால் சங்கீதக்காரன் இவ்வாறு அறிவிக்கிறார்: “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.” (சங்கீதம் 127:4) மேலும் பிள்ளைகளை ‘யெகோவாவின் சிட்சையிலும் மனசீரமைப்பிலும்’ வளர்க்கவேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (எபேசியர் 6:4, NW) ஆகவே திறம்பட்டதும் மகிழ்ந்து அனுபவிக்கத்தக்கதுமான ஒரு குடும்பப் படிப்பை நடத்துவதற்கு திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் ‘வளர்ச்சிப்பெற்று மீட்படைவதற்காக’ ‘கலப்பற்ற ஞானப்பாலை’ அளிப்பதற்கு உங்களாலான மிகச் சிறந்ததைச் செய்யுங்கள்.—1 பேதுரு 2:2, கத்.பை.; யோவான் 17:3.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் அநேக ஆலோசனைகள் குடும்பப் படிப்பில் பிள்ளைகளுக்கு உதவுவதைக் குறித்து இருந்தபோதிலும், பிள்ளைகள் இல்லாத குடும்பப் படிப்பிலும் இவை பொருந்தும்.
b ஒரு சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
c உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியினால் பிரசுரிக்கப்பட்டது.