படிப்பு 11
கனிவும் உணர்ச்சியும்
உணர்ச்சி என்பது மனித வாழ்வின் அடிப்படை அம்சம். ஒருவர் தன் உணர்ச்சிகளை காட்டும்போது தன் இருதயத்தில் இருப்பதையும் தன் உண்மையான இயல்பையும் வெளிப்படுத்துகிறார்; சூழ்நிலைகளையும் மக்களையும் பற்றி எவ்வாறு உணருகிறார் என்பதையும் வெளிக்காட்டுகிறார். சில கசப்பான அனுபவங்களின் காரணமாகவும் சிலசமயம் கலாச்சார பின்னணியின் காரணமாகவும் அநேகர் தங்கள் உணர்ச்சிகளை மூடி மறைக்கின்றனர். ஆனால் நற்குணங்களை உள்ளூர வளர்த்துக்கொள்ளவும் அதன்பின் அவற்றை பொருத்தமாக வெளிக்காட்டவும் யெகோவா நம்மை உற்சாகப்படுத்துகிறார்.—ரோ. 12:10; 1 தெ. 2:7, 8.
நாம் பேசும்போது பயன்படுத்தும் வார்த்தைகள் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்துபவையாக இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளை ஏற்ற உணர்ச்சியோடு சொல்லாவிட்டால் நாம் உள்ளப்பூர்வமாகத்தான் பேசுகிறோமா என்ற சந்தேகம் கேட்போருக்கு எழும். மறுபட்சத்தில், வார்த்தைகளை பொருத்தமான உணர்ச்சியோடு சொல்லும்போது நம் பேச்சு, சுவாரஸ்யமும் நயமும் மிக்கதாக கேட்போரின் இருதயங்களை சென்றெட்டும்.
கனிவைக் காட்டுதல். கனிவான உணர்ச்சிகள் பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிய சிந்தனைகளோடு தொடர்புடையவை. ஆகவே, யெகோவாவின் அருமையான குணங்களைப் பற்றி பேசும்போதும் அவரது நற்குணத்திற்கு போற்றுதல் காட்டும்போதும் நம் குரலில் கனிவு கலந்திருக்க வேண்டும். (ஏசா. 63:7-9) மனிதர்களிடம் பேசுகையில், நாம் பேசும் விதமும் மனதைத் தொடும் விதத்தில் கனிவாக இருக்க வேண்டும்.
ஒரு குஷ்டரோகி இயேசுவிடம் வந்து தன்னைக் குணப்படுத்துமாறு கெஞ்சினான். “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என இயேசு எப்படிப்பட்ட தொனியில் சொல்லியிருப்பார் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். (மாற். 1:40, 41) 12 வருடங்களாக உதிரப் போக்கினால் அவதிப்பட்ட ஒரு பெண் மெதுவாக இயேசுவின் பின்பக்கமாக வந்து அவரது வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட சம்பவத்தையும் கற்பனை செய்து பாருங்கள். இனியும் மறைந்திருக்க முடியாது என்பதை உணர்ந்து அந்தப் பெண் நடுங்கியவாறே அவர் முன் வந்து அவரது பாதத்தில் விழுந்தாள்; அவரது வஸ்திரத்தைத் தொட்டதற்கான காரணத்தையும் உடனடியாக தன் பிணி நீங்கியதையும் அனைவர் முன்பாக அறிவித்தாள். அப்போது இயேசு அவளிடம் எப்படிப்பட்ட குரலில் பின்வருமாறு சொல்லியிருப்பார் என யோசித்துப் பாருங்கள்: “மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ.” (லூக். 8:42ஆ-48) அந்தச் சந்தர்ப்பங்களில் இயேசு காட்டிய கனிவு இந்நாள்வரை நம் இருதயங்களைத் தொடுகிறது.
இயேசுவைப் போல் நாம் மக்களுக்காக அனுதாபப்படும்போதும் அவர்களுக்கு உதவ மனதார விரும்பும்போதும் அவர்களிடம் பேசும் விதத்திலேயே அவை வெளிப்படும். இப்படிப்பட்ட கனிவு உள்ளப்பூர்வமானதாக இருக்கும், அளவுக்கதிகமாய் வெளிக்காட்டப்படுவதுபோல் தோன்றாது. மக்கள் எப்படி பிரதிபலிக்கிறார்கள் என்பது நாம் காட்டும் கனிவின்மீதே பெரிதும் சார்ந்திருக்கிறது. வெளி ஊழியத்தில் நாம் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள், கனிவோடு சொல்ல வேண்டியவை; முக்கியமாக நியாயப்படுத்தும்போதும் உற்சாகப்படுத்தும்போதும் அறிவுறுத்தும்போதும் அனுதாபம் காட்டும்போதும் கனிவு அவசியம்.
மற்றவர்களுக்காக உங்கள் மனதில் கனிவு சுரக்கும்போது அதை முகத்தில் காட்டுங்கள். நீங்கள் கனிவை வெளிக்காட்டும்போது, கடுங்குளிரான இரவில் கதகதப்பூட்டும் நெருப்பிடம் ஈர்க்கப்படுவதுபோல் கேட்போர் உங்களிடம் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் முகத்தில் கனிவு தென்படவில்லை என்றால், தங்கள்மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருப்பதை கேட்போரால் முழுமையாக நம்ப முடியாமல் போகலாம். கனிவை முகமூடிபோல் அணிந்துகொள்ள முடியாது, அது உண்மையாகவே இருதயத்திலிருந்து பிறக்க வேண்டும்.
கனிவு குரலிலும் வெளிப்பட வேண்டும். உங்களுக்கு கட்டையான, முரட்டுக் குரல் இருந்தால் கனிவு தொனிக்க பேசுவது கடினமாக இருக்கலாம். ஆனால் மனதார முயற்சி செய்தால் காலப்போக்கில் உங்களாலும் வெற்றி பெற முடியும். விரைவாகவும் விழுங்கி விழுங்கியும் பேசினால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினம் என்பதை ஞாபகம் வைக்க வேண்டும். வார்த்தைகளில் உள்ள மென்மையான ஒலிகளை இழுத்துச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். இது கனிவு தொனிக்க பேச்சு கொடுப்பதற்கு உங்களுக்கு உதவும்.
என்றாலும் எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானது, உங்கள் ஆர்வத்தை எதன்மீது ஒருமுகப்படுத்துகிறீர்கள் என்பதாகும். கேட்போரின்மீது உங்கள் சிந்தனைகளை உள்ளப்பூர்வமாக ஒருமுகப்படுத்தும்போதும், அவர்களுக்கு நன்மையளிக்கும் ஏதோவொன்றை சொல்ல மனதார விரும்பும்போதும், நீங்கள் பேசும் விதத்திலேயே உங்கள் உணர்ச்சி தென்படும்.
உயிர்த்துடிப்புள்ள பேச்சு உள்ளங்களைத் தூண்டும் என்றாலும் கனிவான உணர்ச்சியும் அவசியம். மனதளவில் ஒத்துக்கொள்ள வைத்தால் மட்டுமே போதாது, இருதயத்தையும் தூண்டுவிக்க வேண்டும்.
மற்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டுதல். கவலை, பயம், சோர்வு ஆகிய உணர்ச்சிகள் சோகத்தில் மூழ்கியிருக்கும் ஒருவரிடம் வெளிப்படலாம். நம் வாழ்க்கையில் மேலோங்கி இருக்க வேண்டிய உணர்ச்சி சந்தோஷமே, மற்றவர்களிடம் பேசும்போது தாராளமாக வெளிக்காட்டும் உணர்ச்சியும் அதுவே. அதேசமயத்தில், சில உணர்ச்சிகளை நாம் கட்டுப்படுத்த வேண்டியதாக இருக்கிறது. அவை கிறிஸ்தவ குணாதிசயத்திற்கு பொருந்தாதவை. (எபே. 4:31, 32; பிலி. 4:4) சகலவிதமான உணர்ச்சிகளையும் நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளாலும், தொனியாலும், குரலின் வலிமையினாலும், முகபாவனைகளாலும், சைகைகளாலும் வெளிக்காட்ட முடியும்.
பைபிள், பலதரப்பட்ட மனித உணர்ச்சிகளைப் பற்றி அறிக்கை செய்கிறது. சிலசமயம் அவற்றை வெறுமனே குறிப்பிடுகிறது. மற்ற சமயங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சம்பவங்களை விவரிக்கிறது அல்லது கூற்றுகளை மேற்கோள் காட்டுகிறது. அப்படிப்பட்ட பதிவுகளை நீங்கள் சத்தமாக வாசிக்கும்போது அந்த உணர்ச்சிகளை குரலில் வெளிக்காட்டினால் உங்கள்மீது மட்டுமல்ல கேட்போர்மீதும் அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு, நீங்கள் யாரைப் பற்றி வாசிக்கிறீர்களோ அவர்களாகவே மாறிவிட வேண்டும். ஆனால் பேச்சு என்பது வெறுமனே மற்றவர்களை கவருவதற்காக கொடுக்கப்படுவதில்லை, ஆகவே மிகைப்படுத்தாதிருக்க கவனமாய் இருங்கள். கேட்போரின் மனங்களில் அப்பதிவுகளை உயிர்பெறச் செய்யுங்கள்.
தகவலுக்குப் பொருத்தமாக. உற்சாகத்தைப் போலவே, நீங்கள் வெளிக்காட்டும் கனிவும் மற்ற உணர்ச்சிகளும், என்ன சொல்கிறீர்கள் என்பதன் பேரிலேயே மிக அதிகம் சார்ந்திருக்கின்றன.
மத்தேயு 11:28-30 வசனங்களுக்கு திருப்பி, என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கவனியுங்கள். அதன்பின், சதுசேயர்களையும் பரிசேயர்களையும் கண்டனம் செய்து இயேசு சொன்னவற்றை மத்தேயு 23-ஆம் அதிகாரத்தில் வாசியுங்கள். இந்தக் கடும் கண்டனத்தீர்ப்புகளை அவர் உணர்ச்சியில்லாமல் சொல்லியிருக்கவே முடியாது.
யூதா தன் சகோதரன் பென்யமீனுக்காக மன்றாடியதைப் பற்றி விவரிக்கும் ஆதியாகமம் 44-ஆம் அதிகாரத்தைப் போன்ற பதிவுக்கு எப்படிப்பட்ட உணர்ச்சியை வெளிக்காட்டுவது அவசியம் என நீங்கள் நினைக்கிறீர்கள்? 13-ஆம் வசனத்தில் வெளிக்காட்டப்பட்டிருக்கும் உணர்ச்சியையும், பெருந்துன்பத்திற்கான காரணத்தைப் பற்றி யூதா எப்படி உணர்ந்தார் என காட்டும் 16-ஆம் வசனத்தையும், யோசேப்பு எவ்வாறு பிரதிபலித்தார் என குறிப்பிடும் ஆதியாகமம் 45:1-ஐயும் கவனியுங்கள்.
இவ்வாறு, வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் மட்டுமல்ல இவற்றோடு வெளிக்காட்ட வேண்டிய உணர்ச்சிகளுக்கும் கவனம் செலுத்தினால்தான் நம்மால் சிறப்பாக வாசிக்க அல்லது பேச முடியும்.