உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 7/1 பக். 8-13
  • ‘சகல தேசத்தாருக்கும் ஜெபவீடு’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘சகல தேசத்தாருக்கும் ஜெபவீடு’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மகா பரிசுத்த ஸ்தலம்
  • பரிசுத்த ஸ்தலம்
  • பிரகாரம்
  • பாவநிவாரண நாள்
  • முதல் ஆலயமும் இரண்டாவதும்
  • கடவுள் தம்முடைய பூமிக்குரிய ஆலயத்தை என்றென்றுமாகக் கைவிடுகிறார்
  • யெகோவாவின் ஆன்மீக ஆலயத்துக்கு நன்றியோடு இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • யெகோவாவின் வீடு ‘விரும்பத்தக்கவைகளால்’ நிரம்புகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 7/1 பக். 8-13

‘சகல தேசத்தாருக்கும் ஜெபவீடு’

“‘என் வீடு சகல தேசத்தாருக்கும் ஜெபவீடு என்றழைக்கப்படும்’ என்று எழுதியிருக்கிறதல்லவா?”—மாற்கு 11:17, NW.

1. என்ன வகையான உறவை ஆதாமும் ஏவாளும் தொடக்கத்தில் கடவுளுடன் அனுபவித்து மகிழ்ந்தனர்?

ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்டபோது, அவர்கள் தங்கள் பரலோகத் தகப்பனுடன் நெருங்கிய ஓர் உறவை அனுபவித்து மகிழ்ந்தனர். யெகோவா தேவன் அவர்களோடு பேச்சுத்தொடர்பு கொண்டு, மனித குலத்துக்கானத் தம்முடைய அதிசய நோக்கத்தைச் சுருக்கமாகக் கூறினார். யெகோவாவின் சிறப்பான படைப்பு செயல்களுக்காக அவரைத் துதிக்கும்படியான உணர்ச்சியால் அவர்கள் நிச்சயமாகவே அடிக்கடி தூண்டியியக்கப்பட்டார்கள். எதிர்காலத்து மனித குடும்பத்துக்குத் தகப்பனும் தாயுமாக இருக்கப்போகிற தங்கள் பாகத்தை அவர்கள் சிந்திக்கையில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வழிநடத்துதல் தேவைப்பட்டால், தங்கள் பரதீசிய வீட்டில் எந்த இடத்திலிருந்தாயினும் கடவுளை அவர்கள் அணுகமுடிந்தது. ஓர் ஆலயத்தில் ஓர் ஆசாரியனின் சேவைகள் அவர்களுக்குத் தேவையாக இல்லை.—ஆதியாகமம் 1:28.

2. ஆதாமும் ஏவாளும் பாவஞ்செய்தபோது என்ன மாற்றம் உண்டாயிற்று?

2 யெகோவாவின் அரசாட்சியை ஏவாள் ஏற்க மறுத்துவிட்டால், வாழ்க்கையில் அவளுடைய நிலை முன்னேற்றமடையும் என்று சிந்திக்கும்படி கலகக்கார தூதன் ஒருவன் அவள் ‘தேவனைப்போல்’ இருப்பாள் என்று கூறி அவளைத் தூண்டுவித்தபோது, இந்த நிலைமை மாறிற்று. சாத்தானின் பொய்யை அவள் அதன்படியே, புசிக்க வேண்டாமென்று கடவுள் அவர்களுக்கு விலக்கி வைத்திருந்த மரத்தின் கனியை ஏவாள் புசித்தாள். பின்பு அவளுடைய கணவனை வசீகரிக்கும்படி சாத்தான் ஏவாளைப் பயன்படுத்தினான். வருந்தத்தக்கதாக ஆதாம், பாவஞ்செய்த தன் மனைவிக்குச் செவிகொடுத்தான். இவ்வாறு, அவளுடன் தனக்கு இருந்த உறவை, கடவுளுடன் தனக்கு இருந்த உறவைப் பார்க்கிலும் அதிக முக்கியமாய் மதித்ததாகக் காட்டினான். (ஆதியாகமம் 3:4-7) செயல்முறையளவில், ஆதாமும் ஏவாளும் சாத்தானைத் தங்கள் கடவுளாகத் தெரிந்துகொண்டார்கள்.—2 கொரிந்தியர் 4:4-ஐ ஒப்பிடுக.

3. ஆதாம் ஏவாளின் கலகத்தினுடைய கெட்ட விளைவுகள் யாவை?

3 இவ்வாறு செய்ததில், அந்த முதல் மனிதத் தம்பதிகள் கடவுளுடன் தங்களுக்கிருந்த அருமையான உறவை இழந்ததுமட்டுமல்லாமல், பூமிக்குரிய ஒரு பரதீஸில் என்றென்றுமாக வாழும் எதிர்பார்ப்பையும் இழந்தனர். (ஆதியாகமம் 2:16, 17) அவர்களுடைய பாவமுள்ள உடல்கள் முடிவில் அவர்கள் மரிக்கும் வரையாகப் படிப்படியாய்க் கேடடைந்துகொண்டே வந்தன. இந்தப் பாவ நிலைமையை அவர்களுடைய பிள்ளைகள் சுதந்தரித்தார்கள். “இப்படியாக, . . . மரணம் எல்லாருக்கும் பரவினது,” என்று பைபிள் விளக்குகிறது.—ரோமர் 5:12, திருத்திய மொழிபெயர்ப்பு.

4. பாவிகளான மனிதவர்க்கத்தினருக்கு என்ன நம்பிக்கையை கடவுள் முன்வைத்தார்?

4 பாவிகளான மனிதவர்க்கத்தினரைத் தங்கள் பரிசுத்த சிருஷ்டிகருடன் ஒப்புரவாக்குவதற்கு ஒன்று தேவைப்பட்டது. ஆதாம் ஏவாளுக்குத் தீர்ப்பளித்தபோது, சாத்தானின் கலகத்தினுடைய விளைவுகளிலிருந்து மனிதவர்க்கத்தை இரட்சிக்கப்போகும் ஒரு “வித்து”வை வாக்களிப்பதன்மூலம், கடவுள் அவர்களுடைய எதிர்கால சந்ததியாருக்கு நம்பிக்கை அளித்தார். (ஆதியாகமம் 3:15) பின்னால், ஆசீர்வாதத்துக்குரிய அந்த வித்து ஆபிரகாமின் வழியாக வருவாரென்று கடவுள் வெளிப்படுத்தினார். (ஆதியாகமம் 22:18) இந்த அன்புள்ள நோக்கத்தை மனதில் கொண்டு கடவுள், ஆபிரகாமின் சந்ததியாராகிய இஸ்ரவேலரை, தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாகும்படி தேர்ந்தெடுத்தார்.

5. இஸ்ரவேலுடன் செய்த கடவுளுடைய நியாயப்பிரமாண உடன்படிக்கையின் நுட்பவிவரங்களில் நாம் ஏன் அக்கறையுடையோராக இருக்க வேண்டும்?

5 பொ.ச.மு. 1513-ல், இஸ்ரவேலர் கடவுளுடன் ஓர் உடன்படிக்கை உறவில் உட்பட்டு, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய ஒப்புக்கொண்டனர். இன்று கடவுளை வணங்க விரும்புகிற யாவருக்கும் அந்த நியாயப்பிரமாண உடன்படிக்கை மிகுந்த அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும், ஏனெனில் வாக்குக்கொடுக்கப்பட்ட வித்துவை அது குறிப்பிட்டுக் காட்டினது. அது, ‘வரப்போகிற நன்மைகளின் நிழல்’ அடங்கியதாக இருந்ததென்று பவுல் சொன்னார். (எபிரெயர் 10:1) பவுல் இதைச் சொன்னபோது, இடம் விட்டு இடம் பெயர்த்தெடுத்துச் செல்லக்கூடிய ஆசரிப்புக் கூடாரத்தில், அல்லது வணக்கத்துக்குரிய கூடாரத்தில் இஸ்ரவேலின் ஆசாரியர்களுடைய சேவையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அது ‘யெகோவாவின் ஆலயம்’ அல்லது ‘யெகோவாவின் வாசஸ்தலம்’ என்றழைக்கப்பட்டது. (1 சாமுவேல் 1:9, 24, தி.மொ.) யெகோவாவின் பூமிக்குரிய வாசஸ்தலத்தில் நடப்பிக்கப்பட்ட பரிசுத்த சேவையை ஆராய்ந்து பார்ப்பதன்மூலம், இன்று பாவிகளான மனிதர் கடவுளுடன் ஒப்புரவாகுவதற்கான இரக்கமுள்ள ஏற்பாட்டை மேலும் முழுமையாக நாம் மதித்துணரக் கூடியோராகலாம்.

மகா பரிசுத்த ஸ்தலம்

6. மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்ன வைக்கப்பட்டிருந்தது, அங்கே கடவுளுடைய சமுகம் எவ்வாறு பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது?

6 “உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்,” என்று பைபிள் சொல்லுகிறது. (அப்போஸ்தலர் 7:48) எனினும், தம்முடைய பூமிக்குரிய வாசஸ்தலத்தில் கடவுள் இருப்பது, மகா பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்பட்ட மிக உட்புற அறையில் ஒரு மேகத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. (லேவியராகமம் 16:2) இந்த மேகம் ஒளியுடன் பிரகாசித்து, மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு வெளிச்சத்தை அளித்ததாகத் தெரிகிறது. கடவுள் இஸ்ரவேலுக்கு கொடுத்த கட்டளைகள் சில செதுக்கப்பட்டிருந்த கற்பலகைகள் அடங்கிய “சாட்சிப்பெட்டி” என்று அழைக்கப்பட்ட ஒரு பரிசுத்த பெட்டிக்கு மேலாக அது நின்றது. அந்தப் பெட்டியினுடைய மூடியின்மீது பொன்னால் செய்யப்பட்ட இரண்டு கேருபீன்கள், செட்டைகள் விரித்திருக்கும் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவை, கடவுளுடைய பரலோக அமைப்பில் உயர் மேன்மையுடைய ஆவி சிருஷ்டிகளைப் படமாகக் குறித்து நின்றன. அந்த அற்புதமான ஒளி மேகம் அந்தப் பெட்டியின் மூடிக்கு மேலாக அந்த இரண்டு கேருபீன்களுக்கு இடையே இருந்தது. (யாத்திராகமம் 25:22) இது, சர்வவல்லமையுள்ள தேவன், உயிருள்ள கேருபீன்களால் தாங்கப்பட்ட பரலோக இரதம் ஒன்றின்மீது சிங்காசனத்தில் வீற்றிருப்பதன் படக்குறிப்பாக இருந்தது. (1 நாளாகமம் 28:18) “சேனைகளின் யெகோவாவே, கேரூபுகள்மீது வீற்றிருக்கிற இஸ்ரவேலின் கடவுளே,” என்று அரசன் எசேக்கியா ஜெபித்ததன் காரணத்திற்கு இது விளக்கம் தருகிறது.—ஏசாயா 37:16, தி.மொ.

பரிசுத்த ஸ்தலம்

7. பரிசுத்த ஸ்தலத்தில் என்ன பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன?

7 ஆசரிப்புக் கூடாரத்தின் இரண்டாவது அறை பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள், வாசலின் இடதுபுறத்தில், ஏழு கிளைகளையுடைய அழகிய ஒரு விளக்குத் தண்டு நின்றது, வலதுபுறத்தில் சமுகத்தப்பம் வைக்கும் ஒரு மேசை இருந்தது. நேரே முன்னால் ஒரு பலிபீடம் நின்றது, அதிலிருந்து தூபவர்க்கம் எரிக்கும் நறுமணம் எழும்பிக்கொண்டிருந்தது. இது, பரிசுத்த ஸ்தலத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பிரித்து வைத்த ஒரு திரைச்சீலைக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது.

8. பரிசுத்த ஸ்தலத்தில் என்ன கடமைகளை ஆசாரியர்கள் காலந்தவறாமல் நடப்பித்து வந்தனர்?

8 ஒவ்வொரு காலையிலும் ஒவ்வொரு மாலையிலும், ஆசாரியர் ஒருவர் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, அந்தத் தூப பீடத்தின்மீது தூபவர்க்கத்தை எரிக்க வேண்டும். (யாத்திராகமம் 30:7, 8) காலையில் தூபம் எரிகையில், பொன் விளக்குத் தண்டின்மீது இருந்த ஏழு குத்துவிளக்குகளுக்கும் மறுபடியுமாக எண்ணெய் நிரப்ப வேண்டும். மாலையில் பரிசுத்த ஸ்தலத்துக்கு வெளிச்சம் தரும்படி அந்தக் குத்துவிளக்குகள் எரிய வைக்கப்பட்டன. ஒவ்வொரு ஓய்வுநாளிலும் அந்த மேசையின்மீது புதியவையான 12 சமுகத்தப்பங்களை ஓர் ஆசாரியன் வைக்க வேண்டும்.—லேவியராகமம் 24:4-8.

பிரகாரம்

9. தண்ணீர் நிரம்பிய தொட்டி இருந்ததன் நோக்கம் என்ன, இதிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?

9 ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஒரு பிரகாரமும் இருந்தது, அது தொங்குதிரை அடைப்பால் சூழப்பட்டிருந்தது. இந்தப் பிரகாரத்தில் ஒரு பெரிய தொட்டி இருந்தது, அங்கே ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்பாகத் தங்கள் கைகளையும் பாதங்களையும் கழுவினார்கள். பிரகாரத்தில் அமைக்கப்பட்ட பலிபீடத்தின்மேல் பலிகளைச் செலுத்துவதற்கு முன்பாகவும் அவர்கள் கழுவிக் கொள்ள வேண்டியிருந்தது. (யாத்திராகமம் 30:18-21) இன்று கடவுளுடைய ஊழியர்கள், தங்கள் வணக்கம் கடவுளால் அங்கீகரிக்கப்படத்தக்கதாக இருக்க விரும்பினால், உடல், ஒழுக்கம், மனம், மற்றும் ஆவிக்குரிய தூய்மையுடையோராக இருக்கும்படி பெரும் முயற்சி எடுக்க வேண்டும் என்பதற்கு, சுத்தத்துக்குரிய இந்தக் கட்டளை அவர்களுக்கு உறுதியான நினைப்பூட்டுதலாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 7:1) கடைசியாக, பலிபீடத்தின்மீது எரிப்பதற்கான விறகும், தொட்டியை நிரப்புவதற்கானத் தண்ணீரும், ஆலய அடிமைகளான இஸ்ரவேலரல்லாதவர்களால் கொண்டுவரப்பட்டன.—யோசுவா 9:27.

10. பலிபீடத்தின்மீது செலுத்தப்பட்ட சில பலிகள் யாவை?

10 ஒவ்வொரு காலையிலும் ஒவ்வொரு மாலையிலும், பலிக்குரிய ஒரு செம்மறியாட்டுக் குட்டி, தானியம் மற்றும் பானபலியோடுகூட பலிபீடத்தின்மீது எரிக்கப்பட்டது. (யாத்திராகமம் 29:38-41) விசேஷித்த நாட்களில் மற்ற பலிகள் செலுத்தப்பட்டன. சில சமயங்களில் ஒருவரின் தனிப்பட்ட ஒரு பாவத்தினிமித்தமாக ஒரு பலி செலுத்த வேண்டியிருந்தது. (லேவியராகமம் 5:5, 6) வேறு சமயங்களில் ஓர் இஸ்ரவேலன் தன் மனப்பூர்வ சமாதான பலி ஒன்றைச் செலுத்தலாம். இதில் சில பகுதிகளை ஆசாரியர்களும் பலி செலுத்தினவரும் சாப்பிட்டனர். இது, பாவிகளான மனிதர்கள் கடவுளோடு ஒரு போஜனத்தை அனுபவிப்பதுபோல், அவருடன் சமாதானமுடையோராக இருக்கக்கூடும் என்பதைக் குறித்துக்காட்டிற்று. இஸ்ரவேலில் தங்கும் அந்நியனும்கூட யெகோவாவை வணங்குபவனாகி, அவருடைய ஆலயத்தில் தன் மனப்பூர்வ சமாதான பலிகளைச் செலுத்துவதற்கு சிலாக்கியமளிக்கப்படலாம். ஆனால் யெகோவாவுக்குரிய உயர் மதிப்பைக் காட்டுவதற்கு, மிகச் சிறந்த பண்புவாய்ந்த பலிகளை மாத்திரமே ஆசாரியர்கள் ஏற்க முடியும். தானிய பலிகளின் மாவு மெல்லியதாக அரைக்கப்பட வேண்டியிருந்தது, பலிகளுக்குரிய மிருகங்கள் முற்றிலும் பழுதற்றவையாக இருக்க வேண்டியிருந்தன.—லேவியராகமம் 2:1; 22:18-20; மல்கியா 1:6-8.

11. (அ) மிருக பலிகளின் இரத்தம் என்ன செய்யப்பட்டது, இது எதைக் குறிப்பிட்டது? (ஆ) மனித மற்றும் மிருக இரத்தம் இரண்டையுமே குறித்ததில் கடவுளுடைய கருத்து என்ன?

11 இந்தப் பலிகளின் இரத்தம் பலிபீடத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது, தாங்கள் ஒரு மீட்பர் தேவைப்படுகிற பாவிகள் என்றும், அவருடைய சிந்தப்பட்ட இரத்தமே தங்கள் பாவங்களுக்கு நிலைபேறாக பிராயச்சித்தம் செய்து, மரணத்திலிருந்து தங்களை மீட்கக்கூடும் என்றும் அந்த ஜனத்துக்கு அன்றாட நினைப்பூட்டுதலாகச் சேவித்தது. (ரோமர் 7:24, 25; கலாத்தியர் 3:24; எபிரெயர் 10:3-ஐ ஒப்பிடுக.) மேலும், இரத்தத்தின் இந்தப் பரிசுத்த உபயோகமானது, இரத்தம் உயிரைக் குறிக்கிறதென்றும் உயிர் கடவுளுக்கு உரியது என்றும்கூட இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டிற்று. இரத்தத்தை வேறு எவ்வாறாகிலும் மனிதர் பயன்படுத்தக்கூடாதென்று கடவுள் எப்போதும் தடைக் கட்டளையிட்டிருந்தார்.—ஆதியாகமம் 9:4; லேவியராகமம் 17:10-12; அப்போஸ்தலர் 15:28, 29.

பாவநிவாரண நாள்

12, 13. (அ) பாவநிவாரண நாள் என்பது என்ன? (ஆ) பிரதான ஆசாரியர் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் இரத்தத்தைக் கொண்டு செல்வதற்கு முன்பாக, அவர் என்ன செய்ய வேண்டியிருந்தது?

12 பாவநிவாரண நாள் என்று அழைக்கப்படுவதில் ஆண்டுக்கு ஒரு முறை, இஸ்ரவேலின் முழு ஜனமும், யெகோவாவை வணங்கின அந்நிய குடியிருப்பாளர்களும் உட்பட, எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருந்து உபவாசிக்க வேண்டும். (லேவியராகமம் 16:29, 30) இந்த முக்கியமான நாளில், அந்த ஜனம், இன்னுமொரு ஆண்டு, கடவுளுடன் சமாதானமான உறவுகளை அனுபவித்து மகிழும்படி, ஓர் அடையாள முறையில் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டது. அந்தக் காட்சியை நாம் கற்பனைசெய்து பார்த்து, முக்கிய குறிப்புகள் சிலவற்றைச் சிந்திக்கலாம்.

13 பிரதான ஆசாரியர் ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் இருக்கிறார். தொட்டியிலிருந்த நீரில் தன்னைக் கழுவிக்கொண்ட பின்பு, பலிக்காக ஒரு காளையை வெட்டுகிறார். இந்தக் காளையின் இரத்தம் ஒரு கிண்ணத்தில் ஊற்றப்படுகிறது; இது, லேவியின் ஆசாரிய கோத்திரத்தாரினுடைய பாவங்களுக்காக நிவாரணம் செய்வதற்கு தனிப்பட்ட ஒரு முறையில் பயன்படுத்தப்படும். (லேவியராகமம் 16:4, 6, 11) ஆனால் அந்தப் பலிசெலுத்துதலை மேலுமாகத் தொடர்வதற்கு முன்பாக, பிரதான ஆசாரியர் செய்ய வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது. அவர் சுகந்த தூபவர்க்கத்தையும் (ஒருவேளை ஒரு அகப்பையில் அதை போட்டு), ஒரு தூபகலசத்தில் பலிபீடத்திலிருந்து எடுக்கப்பட்ட எரியும் கரித்தணல்களையும் எடுத்துக் கொள்கிறார். இப்போது அவர் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரையை நோக்கி நடக்கிறார். அவர் மெதுவாக அந்தத் திரையைச் சுற்றி கடந்து, உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நிற்கிறார். அடுத்தபடியாக, மற்றெந்த மனிதனின் காட்சியிலிருந்தும் மறைந்து, தூபவர்க்கத்தை எரியும் தணல்களில் கொட்டுகிறார், அந்த மகா பரிசுத்த ஸ்தலம் நற்கந்த புகைமேகத்தால் நிரப்பப்படுகிறது.—லேவியராகமம் 16:12, 13.

14. பிரதான ஆசாரியர் ஏன் வெவ்வேறுபட்ட இரண்டு மிருகங்களின் இரத்தத்துடன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்க வேண்டியிருந்தது?

14 இப்போது கடவுள் இரக்கத்தைக் காட்டவும் அடையாள முறையில் சமாதானப்படுத்தப்படவும் மனமுள்ளவராக இருக்கிறார். இந்தக் காரணத்தினிமித்தமாக அந்தப் பெட்டியின் மூடி “கிருபாசனம்” அல்லது “அமைதிப்படுத்தும் மூடி” என்றழைக்கப்பட்டது. (எபிரெயர் 9:5, NW, அடிக்குறிப்பு) பிரதான ஆசாரியர் மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளிச்சென்று, காளையின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு, மறுபடியுமாக மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறார். நியாயப்பிரமாணத்தில் கட்டளையிட்டபடி, தன் விரலை அந்த இரத்தத்துக்குள் தோய்த்து பெட்டியின் மூடியின்மீது ஏழு தடவை தெளிக்கிறார். (லேவியராகமம் 16:14) அடுத்தபடியாக, பிரகாரத்துக்குத் திரும்பச் சென்று ஒரு வெள்ளாட்டுக்கடாவைக் கொல்கிறார், இது ‘ஜனங்களுக்கான’ பாவநிவாரண பலியாகும். அந்த வெள்ளாட்டுக்கடாவின் சிறிது இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைக் கொண்டு அவர் செய்ததைப் போலவே இதையும் செய்கிறார். (லேவியராகமம் 16:15) அந்தப் பாவநிவாரண நாளில் மற்ற முக்கிய சேவைகளும் நடந்தேறின. உதாரணமாக, பிரதான ஆசாரியர் இரண்டாவதான ஒரு வெள்ளாட்டுக்கடாவின் தலைமீது தன் கைகளை வைத்து “இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும்” அதன்மீது அறிக்கையிட வேண்டும். பின்பு இந்த உயிருள்ள வெள்ளாட்டுக்கடா, அந்த ஜனத்தின் பாவங்களை அடையாளக் கருத்தில் சுமந்து செல்லும்படி வனாந்தரத்துக்குள் கொண்டுசென்று விடப்பட்டது. இம்முறையில் ஒவ்வொரு ஆண்டிலும் “ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும்” பாவநிவாரணம் செய்யப்பட்டது.—லேவியராகமம் 16:16, 21, 22, 33.

15. (அ) சாலொமோனின் ஆலயம் எவ்வாறு ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஒத்திருந்தது? (ஆ) ஆசரிப்புக் கூடாரத்திலும் ஆலயத்திலும் நடப்பிக்கப்பட்ட பரிசுத்த சேவையைப் பற்றி, எபிரெயருக்கு எழுதின நிருபம் என்ன சொல்கிறது?

15 கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்களாக இஸ்ரவேலருடைய சரித்திரத்தின் முதல் 486 ஆண்டுகளுக்கு, இடம்விட்டு இடம் பெயர்த்தெடுத்து செல்லக்கூடிய ஆசரிப்புக் கூடாரம், தங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்குவதற்குரிய இடமாக சேவித்தது. பின்பு இஸ்ரவேலின் அரசனான சாலொமோன் நிலையான ஒரு கட்டட அமைப்பைக் கட்டும்படி சிலாக்கியம் அளிக்கப்பட்டார். இந்த ஆலயம் பெரியதும் அதிக விளக்கமானதுமாக இருக்க வேண்டியபோதிலும் ஆசரிப்புக் கூடாரத்தினுடையதைப் போன்ற அதே மாதிரியை, கடவுளால் அருளப்பட்ட திட்டம் பின்பற்றினது. ஆசரிப்புக் கூடாரத்தைப்போல் இது, “மனுஷரால் அல்ல,” யெகோவாவால் ஸ்தாபிக்கப்பட்ட, வணக்கத்துக்குரிய பெரிதும் மேலுமதிக பயன்மதிப்புள்ளதுமான ஏற்பாட்டுக்குப் படவிளக்கமாக இருந்தது.—எபிரெயர் 8:2, 5; 9:9, 11.

முதல் ஆலயமும் இரண்டாவதும்

16. (அ) ஆலயத்தை பிரதிஷ்டை செய்தபோது, சாலொமோன் என்ன வேண்டுதலைச் செய்தார்? (ஆ) சாலொமோனின் ஜெபத்தை தாம் ஏற்றார் என்பதை யெகோவா எவ்வாறு காட்டினார்?

16 அந்த மகிமையான ஆலயத்தை பிரதிஷ்டை செய்தபோது, சாலொமோன் தேவாவியால் ஏவப்பட்ட இந்த வேண்டுதலையும் சேர்த்துக்கொண்டார்: “உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், . . . தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக நின்று விண்ணப்பம்பண்ணினால், உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்குப் பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக.” (2 நாளாகமம் 6:32, 33) சாலொமோனின் பிரதிஷ்டை ஜெபத்தை தாம் ஏற்றார் என்பதை, தெளிவாக விளங்கும் முறையில் கடவுள் காட்டினார். வானத்திலிருந்து ஒரு நெருப்பு சுடர் விழுந்து பலிபீடத்தின்மீதிருந்த மிருக பலிகளை எரித்துப்போட்டது, யெகோவாவின் மகிமை ஆலயத்தை நிரப்பினது.—2 நாளாகமம் 7:1-3.

17. சாலொமோன் கட்டின ஆலயத்துக்கு முடிவில் என்ன நடந்தது, ஏன்?

17 விசனத்துக்கு ஏதுவாக இஸ்ரவேலர், யெகோவாவுக்குப் பயப்படும் தங்கள் நலமான பயத்தை இழந்தனர். காலப்போக்கில், இரத்தஞ்சிந்துதல், விக்கிரகாராதனை, விபசாரம், வேசித்தனம், மற்றும் திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும், அந்நியர்களையும் தவறாக நடத்துதல் ஆகிய இச்செயல்களின்மூலம் அவருடைய உன்னதப் பெயருக்கு அவமதிப்பைக் கொண்டுவந்தனர். (எசேக்கியேல் 22:2, 3, 7, 11, 12, 26, 29) இதனால், பொ.ச.மு. 607-ம் ஆண்டில், ஆலயத்தை அழிக்கும்படி பாபிலோனிய சேனைகளைக் கொண்டுவந்ததன்மூலம் கடவுள் ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றினார். தப்பிப் பிழைத்திருந்த இஸ்ரவேலர் கைதிகளாக பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

18. யெகோவாவின் வணக்கத்தை முழு இருதயத்தோடும் ஆதரித்த இஸ்ரவேலரல்லாத ஆண்கள் சிலருக்கு, இந்த இரண்டாவது ஆலயத்தில், என்ன சிலாக்கியங்கள் கிடைத்தன?

18 மனந்திரும்பினவர்களான யூத மீதிபேர், 70 ஆண்டு சிறையிருப்புக்குப் பின், எருசலேமுக்குத் திரும்பி வந்தனர்; யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படியான சிலாக்கியம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. கவனிக்கத்தக்கதாய், இந்த இரண்டாவது ஆலயத்தில் சேவிப்பதற்கு போதியளவு ஆசாரியர்களும் லேவியர்களும் இல்லை. இதன் பலனாக, இஸ்ரவேலராயிராத ஆலய அடிமைகளின் பரம்பரையிலிருந்து வந்தவர்களான நிதனீமியர், கடவுளுடைய வீட்டின் பணிவிடைக்காரராக மேலும் அதிகப்படியான சிலாக்கியங்கள் அளிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் ஈடானவர்களாக ஒருபோதும் ஆகவில்லை.—எஸ்றா 7:24; 8:17, 20.

19. இந்த இரண்டாவது ஆலயத்தைக் குறித்து கடவுள் என்ன வாக்குக்கொடுத்தார், இந்த வார்த்தைகள் எவ்வாறு உண்மையாக நிறைவேறின?

19 முந்தின ஆலயத்துடன் ஒப்பிட, இந்த இரண்டாவது ஆலயம் ஒன்றுமில்லாததுபோல் இருக்கும் என்று முதன்முதலில் தோன்றினது. (ஆகாய் 2:3) ஆனால் யெகோவா இவ்வாறு வாக்களித்தார்: “சகல ஜாதியாரையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதியாரின் அருமையானவைகளும் வரும்; இந்த ஆலயத்திலே மகிமை நிறையப்பண்ணுவேன் . . . முந்தின ஆலயத்தின் மகிமையிலும் பிந்தின இந்த ஆலயத்தின் மகிமை பெரிதாகும்.” (ஆகாய் 2:7, 9, தி.மொ.) இந்த வார்த்தைகளின்படி உண்மையாக, இரண்டாவது ஆலயம் மேலும் பெரிதான மகிமை அடைந்தது. முந்தினதைப் பார்க்கிலும் 164 ஆண்டுகள் அதிகமாய் இது நீடித்திருந்தது, மேலுமதிகமான வணக்கத்தார் பலர், மேலும் பல நாடுகளிலிருந்து இதன் பிரகாரங்களில் கூட்டமாகக் கூடினர். (அப்போஸ்தலர் 2:5-11-ஐ ஒப்பிடுக.) அரசன் ஏரோதின் நாட்களில் இந்த இரண்டாவது ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டுவது தொடங்கினது, இதன் பிரகாரங்கள் விரிவாக்கப்பட்டன. பெருத்த கல் மேடையின்மீது உயர்த்தப்பட்டதாயும் அழகிய தூண்களால் சூழப்பட்டதாயும் பேரழகில் இது, சாலொமோன் கட்டின முதல் ஆலயத்துக்குச் சமமாக இருந்தது. யெகோவாவை வணங்க விரும்பின தேசங்களின் ஜனங்களுக்காக, பெரிய ஒரு வெளிப்பிரகாரம் அடங்கியதாக இது இருந்தது. இஸ்ரவேலருக்காக மாத்திரமே ஒதுக்கிவைக்கப்பட்ட உட்பிரகாரங்களிலிருந்து, புறஜாதியாரின் இந்தப் பிரகாரத்தை கல் அடைப்பு ஒன்று பிரித்து வைத்தது.

20. (அ) திரும்பக் கட்டப்பட்ட ஆலயத்தை என்ன பிரத்தியேகமான மதிப்பு குறிப்பிட்டது? (ஆ) யூதர்கள் அந்த ஆலயத்தைத் தவறான முறையில் நோக்கினரென்று எது காண்பித்தது, இதற்குப் பதிலாக இயேசு என்ன செய்தார்?

20 கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, இதன் பிரகாரங்களுக்குள் கற்பித்த பெரும் தனி மதிப்பை இந்த இரண்டாவது ஆலயம் அனுபவித்தது. ஆனால், முதல் ஆலயத்தின் காரியத்தில் இருந்ததைப்போலவே, பொதுவில் யூதர்கள், கடவுளுடைய வாசஸ்தலத்தின் பொறுப்பாளராயிருந்த தங்கள் சிலாக்கியத்தைப் பற்றி சரியான நோக்கை உடையோராக இல்லை. புறஜாதியாரின் பிரகாரத்தில் வியாபாரிகள் விற்பனை செய்வதையும்கூட அவர்கள் அனுமதித்திருந்தார்களே. மேலும், எருசலேமைச் சுற்றி பொருட்களைச் சுமந்து செல்கையில், ஆலயத்தைக் குறுக்கு வழியாகப் பயன்படுத்தவும் ஜனங்கள் அனுமதிக்கப்பட்டனர். தம்முடைய மரணத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக, இயேசு, “என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்,” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு, மதசார்பற்ற அத்தகைய உலகப்பிரகாரமான நடவடிக்கைகளிலிருந்து ஆலயத்தைச் சுத்திகரித்தார்.—மாற்கு 11:15-17.

கடவுள் தம்முடைய பூமிக்குரிய ஆலயத்தை என்றென்றுமாகக் கைவிடுகிறார்

21. எருசலேமின் ஆலயத்தைக் குறித்து இயேசு எதைத் தெரிவித்தார்?

21 கடவுளுடைய சுத்தமான வணக்கத்தைக் கடைப்பிடித்ததில் இயேசு எடுத்த தைரியமான நடவடிக்கையின் காரணமாக, யூத மதத் தலைவர்கள் அவரைக் கொல்லும்படி தீர்மானித்தார்கள். (மாற்கு 11:18) சீக்கிரத்தில் தாம் கொலை செய்யப்படுவாரென்று அறிந்து, இயேசு அந்த யூத மதத் தலைவர்களிடம்: “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்,” என்று சொன்னார். (மத்தேயு 23:37, 38) எருசலேமிலிருந்த கட்டடமான ஆலயத்தில் அனுசரிக்கப்பட்ட வணக்க முறையை கடவுள் சீக்கிரத்தில் இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்று அதனால் குறிப்பிட்டுக் காட்டினார். அது ‘எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடாக’ இனிமேலும் இராது. அந்த மிகச் சிறப்புவாய்ந்த ஆலய கட்டடங்களை இயேசுவின் சீஷர்கள் அவருக்குக் குறிப்பிட்டுக் காட்டினபோது, அவர்: “இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும்,” என்று சொன்னார்.—மத்தேயு 24:1, 2.

22. (அ) ஆலயத்தைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறின? (ஆ) பூமிக்குரிய ஒரு நகரத்தில் தங்கள் நம்பிக்கைகளை ஒருமுகப்படுத்துவதற்குப் பதிலாக, பூர்வ கிறிஸ்தவர்கள் எதை நாடித்தேடினர்?

22 இயேசுவின் தீர்க்கதரிசனம், 37 ஆண்டுகளுக்குப் பின்னால் பொ.ச. 70-ம் ஆண்டில், ரோம சேனைகள் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழித்தபோது, நிறைவேறினது. கடவுள் நிச்சயமாகவே தம்முடைய அடையாளக் குறிப்பான வாசஸ்தலத்தைக் கைவிட்டார் என்பதற்கு அது மனதில் பதியத்தக்க நிரூபணத்தை அளித்தது. எருசலேமில் மற்றொரு ஆலயம் திரும்பக் கட்டப்படுமென இயேசு ஒருபோதும் முன்னறிவிக்கவில்லை. பூமிக்குரிய அந்த நகரத்தைப் பற்றி, அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை, வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.” (எபிரெயர் 13:14) ‘பரம எருசலேமின்’—நகரத்தைப் போன்ற கடவுளுடைய ராஜ்யத்தின்—பாகமாகும்படி, பூர்வ கிறிஸ்தவர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். (எபிரெயர் 12:22) இவ்வாறு, யெகோவாவின் உண்மையான வணக்கம், பூமியில் கட்டட வேலையான ஓர் ஆலயத்தில் இனிமேலும் ஒருமுகப்படுத்தப்படுகிறதில்லை. கடவுளை ‘ஆவியோடும் உண்மையோடும்’ வணங்க விரும்புகிற எல்லாருக்கும் கடவுள் ஏற்படுத்தி வைத்திருக்கிற மேம்பட்ட ஏற்பாட்டை, நம்முடைய அடுத்தக் கட்டுரையில் நாம் சிந்திப்போம்.—யோவான் 4:21, 24.

மறுபார்வைக்குரிய கேள்விகள்

◻ கடவுளுடன் இருந்த என்ன உறவை ஆதாமும் ஏவாளும் இழந்தனர்?

◻ ஆசரிப்புக் கூடாரத்தின் அம்சங்கள் நமக்கு ஏன் அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும்?

◻ ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் நடவடிக்கைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

◻ தம்முடைய ஆலயம் அழிக்கப்படும்படி கடவுள் ஏன் அனுமதித்தார்?

[பக்கம் 10, 11-ன் படங்கள்]

ஏரோதால் திரும்பக் கட்டப்பட்ட ஆலயம்

1. மகா பரிசுத்த ஸ்தலம்

2. பரிசுத்த ஸ்தலம்

3. சர்வாங்கத் தகனபலிக்குரிய பலிபீடம்

4. தண்ணீர்த் தொட்டி

5. ஆசாரியர்களுக்குரிய பிரகாரம்

6. இஸ்ரவேலருக்குரிய பிரகாரம்

7. பெண்களுக்குரிய பிரகாரம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்