ஒரு விசேஷ அழைப்பு
1. மாநாட்டு அழைப்பிதழை எப்போது முதல் கொடுப்போம்?
1 உங்களுடைய நண்பர்களுக்கோ குடும்பத்தாருக்கோ தடபுடலான விருந்தை ஏற்பாடு செய்கிறீர்கள். அதற்கு அதிக சிரமமெடுத்து, எக்கச்சக்கமாக செலவும் செய்கிறீர்கள். அப்படியென்றால் விருந்திற்காக அவர்களை அழைக்க எவ்வளவு உற்சாகமாக இருப்பீர்கள்! அதுபோல், 2014 மண்டல மற்றும் சர்வதேச மாநாடுகளுக்காக ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மாநாடு துவங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே அழைப்பிதழ்களை கொடுக்க ஆரம்பிப்போம். இதை உற்சாகமாகக் கொடுக்க எது நமக்கு உதவும்?
2. விநியோகிப்பில் முழுமையாகப் பங்குகொள்ள எது நம்மைத் தூண்டும்?
2 யெகோவா அளிக்கப்போகும் ஆன்மீக விருந்திலிருந்து நீங்கள் பெறவிருக்கும் அளவில்லா நன்மைகளை யோசித்துப் பார்ப்பது, அழைப்பிதழை மும்முரமாகக் கொடுக்க உதவும். (ஏசா. 65:13, 14) ஒவ்வொரு வருடமும், அழைப்பிதழ்களைக் கொடுக்க நாம் எடுக்கும் கடின முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. நாம் அழைக்கும் சிலர் நம்மோடு சேர்ந்து மாநாட்டிற்கு வரலாம். ஆனால் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைவிட நாம் எந்தளவு ஊக்கமாக விநியோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஏனென்றால், இது யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது, அவருடைய தாராள குணத்தைப் பறைசாற்றுகிறது.—சங். 145:3, 7; வெளி. 22:17.
3. அழைப்பிதழ்கள் எப்படி விநியோகிக்கப்படும்?
3 பிராந்தியம் முழுவதும் அழைப்பிதழ்களை கொடுக்க சபையின் மூப்பர் குழு ஏற்பாடு செய்வார்கள். பூட்டியிருக்கும் வீடுகளிலும் பொது ஊழியத்திலும் விநியோகிப்பதைப் பற்றி அவர்கள் ஆலோசனை கொடுப்பார்கள். வார இறுதி நாட்களில், அழைப்பிதழோடு பத்திரிகைகளையும் கொடுங்கள். மாதத்தின் முதல் சனிக்கிழமை, அழைப்பிதழ்களை விநியோகித்தால் பைபிள் படிப்பு ஆரம்பிப்பதைவிட அழைப்பிதழ்களைக் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். விநியோகிப்பிற்குப் பின், நாம் சுறுசுறுப்பாக ஈடுபட்டதையும் யெகோவாவின் ஆன்மீக விருந்துக்கு நம்மால் முடிந்த பலரை அழைத்ததையும் நினைத்துப் பார்க்கும்போது அளவில்லா சந்தோஷம் அடைவோம்.