ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்
அன்பான சகோதர சகோதரிகளே,
கி.மு. ஏழாம் நூற்றாண்டில், எசேக்கியேல் தீர்க்கதரிசி பிரமிப்பூட்டும் ஒரு தரிசனத்தைப் பார்த்தார். இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசருடைய கட்டுப்பாட்டில் போய்க்கொண்டிருந்த பிரமாண்டமான ஒரு வாகனத்தை, பரலோக ரதத்தை, அந்தத் தரிசனத்தில் பார்த்தார். அந்த ரதம் போய்க்கொண்டிருந்த விதம் மிகவும் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. ஆம், மின்னல் வேகத்தில் படுவேகமாகப் போய்க்கொண்டிருந்தது; திசை மாற்றுகிறபோதுகூட அதன் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை, எங்கேயும் திரும்பக்கூட இல்லை!—எசே. 1:4, 9, 12, 14, 16-27.
யெகோவாவின் சர்வலோக அமைப்பின் பரலோகத்திற்குரிய பாகம் எப்போதும் முன்னே போய்க்கொண்டிருக்கிறது என்ற விஷயத்தை அந்தத் தரிசனம் நமக்கு நினைப்பூட்டுகிறது. அப்படியானால், பூமிக்குரிய பாகத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? பூமியில் ஒழுங்கமைப்பட்டுள்ள தன்னுடைய அமைப்பையும்கூட யெகோவா அதிசயத்தக்க வேகத்தில் செலுத்திக்கொண்டிருக்கிறார்! கடந்த ஊழிய ஆண்டில் அதைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது!
ஆம், இங்கே ஐக்கிய மாகாணங்களில், பெத்தேல் ஊழியர்கள் நியு யார்க்கில் உள்ள புருக்லினைவிட்டு, வார்விக்கில் உள்ள புதிய உலகத் தலைமை அலுவலகத்திற்கும், வேறுசில வளாகங்களுக்கும் குடிமாறிப்போவதில் மும்முரமாக இருந்தார்கள்; அவர்களில் சிலர் வேறு நியமிப்புகளைப் பெற்று பயனியர்களாகப் போயிருக்கிறார்கள். உலகெங்கும் உள்ள அநேக கிளை அலுவலகங்களில் சேவை செய்கிற பெத்தேல் ஊழியர்கள்கூட கட்டுமான வேலையில், கட்டிடங்களைப் புதுப்பிக்கிற வேலையில், கிளை அலுவலகங்களை ஒன்றிணைக்கிற வேலையில், அல்லது புதிய இடங்களுக்குக் குடிமாறிப் போய் ஊழியம் செய்வதில் படுபிஸியாக இருந்துவருகிறார்கள். உங்களுடைய விஷயத்தைப் பற்றி என்ன? ஒருவேளை நீங்கள் வேறு இடத்திற்குக் குடிமாறிப்போகாவிட்டாலும்கூட, வேறு விதமான சேவைகளில் நிச்சயம் பிஸியாக இருந்திருப்பீர்கள்.
யெகோவாவின் அமைப்பு போகிற அதே வேகத்துக்கு உலகெங்குமுள்ள கடவுளுடைய மக்கள் ஈடுகொடுத்து வருவதைப் பார்த்து ஆளும் குழுவினராகிய நாங்கள் மனம் நெகிழ்கிறோம், உற்சாகமடைகிறோம். உங்களில் பலர், தேவை அதிகமுள்ள இடங்களுக்குக் குடிமாறிப் போயிருக்கிறார்கள்; வேறுமொழி பேசும் சபைகளில் சேவை செய்வது போன்ற புதிய ஊழிய அம்சங்களில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்; தங்களுக்குப் பழக்கமில்லாத புதுப்புது வழிகளில் சாட்சி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்; இன்னும் பலர், வேறுபல வழிகளில் தங்களுடைய ஊழியத்தை அதிகரித்திருக்கிறார்கள். முதியவர்கள், உடல்நலமில்லாதவர்கள் உட்பட விசுவாசமிக்க கிறிஸ்தவர்கள் அனைவரும் வாழ்வுக்கான ஓட்டப்பந்தயத்தில் உண்மையோடு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; யெகோவாவின் சேவையை அதிகமதிகமாகச் செய்து, சாத்தானைப் பொய்யன் என்று நிரூபித்துவருகிறார்கள்.—1 கொ. 9:24.
நீங்கள் காட்டுகிற நல்ல மனப்பான்மையை யெகோவா கவனிக்கிறார் என்பதில் உறுதியாய் இருங்கள். (எபி. 6:10) மனமுவந்து செயல்படுகிறவர்களுடைய மனப்பான்மை ஆபிரகாம் சாராளை எங்களுக்கு நினைப்பூட்டுகிறது. 70 வயதைத் தாண்டிய ஆபிரகாம், ஊர் என்ற கல்தேயரின் நகரத்தைவிட்டு வெளியேறி, கானான்வரை குடும்பத்தோடு சென்றார்; அதன் பிறகு, நூறு வருடங்களுக்குக் கூடாரங்களில் அவர் தங்க வேண்டியிருந்தது. அவரும் அவருடைய அன்பு மனைவியும் எப்பேர்ப்பட்ட சுய தியாக மனப்பான்மையைக் காட்டினார்கள்!—ஆதி. 11:31; அப். 7:2, 3.
அதே மனப்பான்மையை நீங்கள் காட்டுகிறீர்களா? இந்தக் கொடிய காலங்களில் பல கஷ்டங்களைச் சகித்துவருகிற நீங்கள் எல்லாரும், இயேசு சொன்ன வேலையை உண்மையோடு செய்துவருகிறீர்கள். அவர் இப்படிச் சொன்னார்: “அதனால், நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள்.”—மத். 28:19.
“புறப்பட்டுப் போய்” என்று இயேசு பயன்படுத்திய வார்த்தையும்கூட, நாம் முன்னேறிச் செல்ல வேண்டும், சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டில், கிறிஸ்துவின் பக்திவைராக்கியமிக்க சீஷர்கள் ஊழியத்தில் என்னவெல்லாம் சாதித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது எங்கள் உள்ளத்தில் நன்றி பொங்குகிறது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி எல்லா தேசத்தாருக்கும் அறிவிக்கிற வேலையில் யெகோவாவின் ஆதரவும் ஆசீர்வாதமும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.—மாற். 13:10.
ஏராளமானோர் இந்தச் செய்தியைக் கேட்டு அதை மனதார ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு பிரஸ்தாபிகளின் உச்ச எண்ணிக்கை 83,40,847-ஆக இருந்தது, மாதந்தோறும் நடத்தப்பட்ட பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை சராசரியாக 1,01,15,264-ஆக இருந்தது. ஆம், சந்தேகமே இல்லை, பரலோக ரதம் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது, நீங்களும்கூடத்தான்! மீட்பின் கதவுகளை யெகோவா அடைத்துவிடுவதற்குமுன் மீந்திருக்கிற இந்தக் குறுகிய காலப்பகுதியில் நீங்கள் செய்துவருகிற நல்ல வேலையை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்யுங்கள்.
2017-ன் வருடாந்தர வசனம் எவ்வளவு பொருத்தமானது: “யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, நல்லது செய்.” (சங். 37:3) இந்த வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும்போது, அதாவது யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்து நல்லது செய்யும்போது, அவர்மேல் உங்களுக்கு நம்பிக்கை இருப்பதைக் காட்டுவீர்கள். நீங்கள் தனியாக இல்லை என்பதைத் தயவுசெய்து எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள். “இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று இயேசு சொன்ன வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாகிப்போகாது.—மத். 28:20.
உண்மை மனதோடு நீங்கள் செய்கிற சேவையை யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பார் என்பதில் நிச்சயமாய் இருங்கள். இந்தச் சேவையில் உங்களுடைய பங்களிப்பு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்வதும், சரியான நோக்கத்தோடு அதைச் செய்வதும்தான் யெகோவாவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. அப்படிச் செய்யப்படுகிற எல்லா சேவையும் அவருடைய இதயத்தைத் தொடுகிறது, அவருடைய அங்கீகாரத்தைப் பெறுகிறது. (2 கொ. 9:6, 7) அதனால், தவறாமல் ஜெபம் செய்வதன் மூலமும், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும், கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலமும், ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடுவதன் மூலமும் உங்கள் அன்பான தகப்பனோடுள்ள பந்தத்தைத் தொடர்ந்து பலப்படுத்திக்கொள்ளுங்கள்.
பிசாசாகிய சாத்தான் தனக்குக் கொடுக்கப்பட்ட “கொஞ்சக் காலம்” முடிவடைவதற்குள், தன் கைவசமுள்ள எல்லா வழிகளையும் பயன்படுத்தி நம்முடைய உத்தமத்தன்மையைக் குலைத்துப்போட குறியாய் இருக்கிறான். (வெளி. 12:12) அதனால், யெகோவாவிடம் எப்போதும் நெருங்கியே இருங்கள், அப்போது சாத்தான் தன்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வி அடைவான். (சங். 16:8) நாங்கள் உங்களை ரொம்பவே நேசிக்கிறோம் என்பதையும், இந்தக் கடைசி நாட்களில் நம் எஜமானுடைய வேலைகளைச் செய்துமுடிக்க நீங்கள் எங்களுக்கு அளிக்கிற உதவிகளைப் பெரிதும் போற்றுகிறோம் என்பதையும் தாழ்மையுடன் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் சகோதரர்கள்,
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு
© 2017 Watch Tower Bible and Tract Society of Pennsylvania