ராஜ்யத்தைத் தொடர்ந்து பிரசங்கியுங்கள்
“ராஜ்யத்தின் இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14.
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதே இந்த நூற்றாண்டின் மிக முக்கிய வேலையாக இருக்கிறது. இது இப்பொழுது நடந்தேற வேண்டும் என்பது சர்வவல்லமையுள்ள தேவனுடைய சித்தம். அவருடைய தீர்க்கதரிசன வார்த்தையின் நிறைவேற்றமாக இது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உங்களுடைய பிரதிபலிப்பு எப்படி இருக்கிறது என்பது உங்களுடைய நித்திய எதிர்காலத்தைப் பாதிக்கும்.—1 கொரிந்தியர் 9:16, 23.
2. இந்தப் பிரசங்க வேலையில் பங்கு கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது கிளர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. இதில் இப்போது முப்பது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்குகொள்கிறார்கள். இதுவரை இருந்திராதளவுக்கு அதிகமான ஆட்கள் முழுநேர ஊழியத்தில் பங்குகொள்கிறார்கள். அதிகமான ஆட்கள் அக்கறை காண்பிப்பவர்களாக ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டு, கடவுளுடைய சித்தத்தைச் செய்ய கற்றுக்கொள்வதற்கு முயற்சி எடுக்கிறார்கள்.
3. என்றாலும், சில சமயங்களில் பிரசங்க வேலையைக் குறித்ததில் சிலர் “நன்மை செய்வதில் சோர்ந்து” “இளைத்துப்போகக்” கூடும். (கலாத்தியர் 6:9; எபிரெயர் 12:3) தங்களுடைய பிராந்தியத்தில் நற்செய்தி அதிக விரிவாக பிரசங்கிக்கப்பட்டுவிட்டது, மக்களும் தங்களுடைய நிலைநிற்கையை உறுதிபடுத்திவிட்டனர், இப்போதெல்லாம் அவர்களை சந்திக்க செல்லும்போது அவர்கள் எரிச்சலடைகிறார்கள் என்று சிலர் சொல்லக்கூடும். அங்கு பிரசங்க வேலை செய்கிறவர்களுக்கு மிகக் குறைந்த பலன்தான் கிடைக்கிறது, அல்லது பலனில்லாமலேயே போய்விடுகிறது. எனவே, அடிப்படையாக வேலை செய்து முடிக்கப்பட்டுவிட்டது, அதைத் தொடர அவசியமில்லை என்று உணருகிறார்கள். இப்படிப்பட்ட யோசனையில் என்ன தவறு இருக்கிறது?
ஏன் தொடர்ந்து செய்யவேண்டும்?
4. முதல் காரியம், பிரசங்க வேலையில் நாம் உண்மையோடு நிலைத்திருப்பது, மக்கள் செவிகொடுத்து கேட்பதிலும் கேளாதிருப்பதிலும் சார்ந்ததாயிருக்கக்கூடாது. வெகு சிலரே செவி கொடுத்தபோதிலும், பலர் வன்மையாக எதிர்த்தபோதிலும் எரேமியா, எருசலேமில் 40 ஆண்டுகள் பிரசங்கித்தான். அவன் ஏன் தொடர்ந்து செய்தான்? ஏனென்றால், யெகோவா கட்டளையிட்ட ஒரு வேலையை செய்துகொண்டிருந்தான், மற்றும் எருசலேமுக்கு என்ன சம்பவிக்கப்போகிறது என்பதை அவன் முன்னறிந்திருந்ததுதானே அவனைத் தொடர்ந்து பேசுவதற்கு வற்புறுத்தியது. (எரேமியா 1:17-19) அவன் சொன்னான்: “அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது, அதைச் சகித்து இளைத்துப் போனேன், எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.” (எரேமியா 20:7-10) நம்முடைய நிலைமையுங்கூட அப்படித்தான் இருக்கிறது. “நற்செய்தி” குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்ற கட்டளையை யெகோவா தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாகக் கொடுத்திருக்கிறார். (மத்தேயு 24:14) மக்கள் செவிகொடுக்க மறுக்கும்போது, சரியானதைச் செய்வதில் நாம் தொடருவதன் மூலம் யெகோவாவின் பேரில் நமக்கு இருக்கும் அன்பின் ஆழத்தையும் பக்தியையும் காண்பிக்க இது ஒரு வாய்ப்பளிக்கிறது. (1 யோவான் 5:3) அதோடுகூட, சமீப எதிர்காலம் நமக்கு எதை வைத்திருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, நம்முடைய அயலகத்தாரை நாம் எப்படி எச்சரிக்காமலிருக்க முடியும்?—2 தீமோத்தேயு 4:2.
5. அதுமட்டுமல்லாமல், எரேமியாவின் பிரசங்கவேலை உண்மையில் ஒரு நியாயத்தீர்ப்பு வேலை. பொ.ச.மு. 607-ல் எருசலேம் வீழ்ச்சியடைந்த சமயத்தில் மரித்த அல்லது அடிமைகளாக்கப்பட்ட எவருமே, தங்களுக்கு ஏன் இது சம்பவிக்கிறது என்பதை அறிந்திராதவர்களாயில்லை. யெகோவாவுக்கு எதிராகத் தங்கள் கலகக்கார போக்கில் தொடர்ந்தால் இதுதான் விளைவடையும் என்பதை எரேமியா 40 வருடங்களுக்கு முன்பே அவர்களை எச்சரிக்கக்கூடியவனாயிருந்தான். (எசேக்கியேல் 2:5-ஐ ஒப்பிடவும்) அதுபோல இன்றும், “சகல தேசங்களுக்கும் சாட்சியாக” நற்செய்தி பிரசங்கிக்கப்படுதல் நியாயந்தீர்ப்பதற்கு ஓர் அடிப்படையாக இருக்கிறது. “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும்” கிறிஸ்து இயேசு ஆக்கினைத் தீர்ப்பைக் கொண்டுவருவார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவாகக் கூறுகிறான். (2 தெசலோனிக்கேயர் 1:8, 9) நற்செய்திக்குத் தங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கிறது என்பதன் அடிப்படையில்தான் மக்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். எனவே பிரசங்கித்தல் கடைசி மட்டும் சத்தமாகவும் தெளிவாகவும் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 14:6, 7) இந்த முக்கியமான செய்தி மக்களுடைய வீடுகளுக்கு அடிக்கடி செல்வதை எதுவும் தடை செய்யக்கூடாது. இது யெகோவாவின் ஒப்புக்கொடுத்த எல்லா ஊழியர்கள் மீதும் ஒரு பெருத்த உத்தரவாதத்தை வைக்கிறது.
6. நற்செய்தியை நம்முடைய பிராந்தியத்தில் விரிவாக பிரசங்கித்திருக்கக்கூடும் என்பது உண்மைதான். ஆனால் இந்த உலகத்தில் எவ்வளவோ காரியங்கள் நடந்து கொண்டிருப்பதால், அநேகர் நம்முடைய செய்தியைக் கேள்விப்பட்டிருந்தாலும், நாம் பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டால் அவர்கள் அதை விரைவில் மறந்துவிடுவார்கள். புரட்சிகள், பயங்கரவாதச் செயல்கள், வேலை நிறுத்தங்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற காரியங்கள் செய்தி மூலங்களால் அதிகளவில் அறிவிக்கப்பட்டு வருவதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். மற்றும் பொழுதுபோக்குகளும் கவனத்தை சிதறச் செய்யும் மற்ற காரியங்களும் ஏராளமாக இருக்கின்றன. இந்தக் காரியங்களனைத்தும் மக்களுடைய கவனத்தை எடுத்துக்கொள்கிறபோதிலும், நம் செய்தியை அவர்களுக்கு முன்னால் வைத்திருக்க நாம் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும்.
7. அநேகர் நாம் சொல்வதை அசட்டை செய்ய முற்படும்போது ஏசாயா தீர்க்கதரிசி எப்படிப்பட்ட மக்களிடம் பேச வேண்டியதாயிருந்தது என்பதை நாம் நினைவுகூர்ந்திட வேண்டும். யெகோவா அவனிடம் பின்வருமாறு சொன்னார்: “இவர்கள் முரட்டாட்டமுள்ள ஜனம், பொய் பேசுகிற பிள்ளைகள், யெகோவாவின் பிரமாணத்தைக் கேட்க மனதில்லாத புத்திரர். இவர்கள் ஞானதிருஷ்டிகரிடம்: ஞானதிருஷ்டி வேண்டாம் என்றும், தரிசனங்கண்டுரைப்பவரிடம்: நியாயமான தரிசனம் எங்களுக்கு உரைக்கவேண்டாம், எங்களுக்கு இதமான சொற்களையே உரையுங்கள்; மாயமானவைகளைக் கண்டு சொல்லுங்கள் என்றும், நீங்கள் வழியை விட்டுப் போங்கள், பாதையினின்று விலகுங்கள், இஸ்ரவேலின் பரிசுத்தர் எங்கள் முன்பாக இராதபடி செய்யுங்கள் என்றும் சொல்லுங்கள்.” என்றபோதிலும் ஏசாயா உண்மையுள்ளவனாக அந்த மக்களிடம் பின்வருமாறு சொன்னான்: “யெகோவா நியாயம் செய்யும் கடவுள், அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.” (ஏசாயா 30:9-11, 18) நாமும் அதையே செய்ய வேண்டும். நாம் தொடர்ந்து செய்யும் வரையில் நம்முடைய செய்தி ஓரளவுக்கு ஊடுருவிச் செல்லக்கூடும். சிலர் செவி கொடுப்பார்கள், மற்றவர்கள் செவி கொடுக்க மாட்டார்கள். ஆனால் எல்லோருக்குமே கேட்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
‘அவர்கள் எப்படி கேள்விப்படுவார்கள்?’
8. ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திலுள்ள மக்கள் திட்டவட்டமான ஒரு நிலைநிற்கை எடுத்துவிட்டார்கள், நம்முடைய செய்தியை மறுப்பதற்கும் அல்லது எதிர்ப்பதற்கும் தீர்மானித்துவிட்டார்கள் என்று நாம் ஒருவேளை உணரக்கூடும். ஆனால் மக்களுடைய வாழ்க்கையில் சூழ்நிலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதை மனதிற்கொள்ளுங்கள். அவர்கள் அடுத்த நாள், அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் புதிய பிரச்னைகளை அல்லது புதிய சூழ்நிலைகளை எதிர்படக்கூடும், அது ஒருவேளை அது சத்தியத்திற்கு சாதகமாக செவிகொடுக்க அவர்களுக்கு இடமளிக்கக்கூடும். அவர்கள் ஒருவேளை உலகத்தில் திகிலூட்டும் செய்திகளைக் கேள்விப்படக்கூடும், அல்லது பொருளாதார நிலையில் திருப்பம், வியாதி அல்லது குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட காரியங்கள் அவர்களை விழிப்படையச் செய்து, அதனால் தங்கள் துயரத்திற்குக் காரணத்தைக் கற்றுக்கொள்ள விரும்பக்கூடும். நாம் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருந்தால், எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
9. நம்முடைய நிலைமையை, பூமியதிர்ச்சி போன்ற பெருஞ்சேதம் விளையும் இடத்திலுள்ள மீட்புப் பணியாட்களுக்கு ஒப்பிடலாம். அவர்களில் சிலர், வெகு குறைந்த எண்ணிக்கையான ஆட்களே மீட்கப்படக்கூடிய ஒரு பகுதியில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடும், ஆனால் அவர்களுடைய உடன் பணியாட்கள் இன்னொரு பகுதியில் அநேக ஆட்களை மீட்பவர்களாக இருக்கிறார்கள் என்பதுதானே அவர்களை சோர்வடையவோ அல்லது பணியை விட்டுவிடவே செய்யாது. மாறாக, தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதியில் மீட்கப்படுவதற்கு ஒருவரும் இல்லை என்று அவர்கள் உணர்ந்தாலும், எல்லா மீட்புப் பணியாட்களும் இடையறாது தங்கள் பணியில் தொடருகிறார்கள். மற்றும் அவர்கள் ஒருவேளை உயிருக்குப் போராடும் இன்னொரு நபரைக் கண்டுபிடிக்கக்கூடும். தேடி கண்டுபிடிக்கும் நம்பிக்கை இல்லை என்று கடந்துவிட்ட நேரம் சுட்டிக் காட்டினாலொழிய அவர்களுடைய தேடும் பணி அல்லது மீட்புப் பணி நிறுத்தப்படமாட்டாது. ஆம், நம்முடைய தேடும் பணி இன்னும் நிறுத்தப்படவில்லை, அதே சமயத்தில் இந்தப் பழைய உலகத்திலிருந்து மீட்கப்படவும் “மிகுந்த உபத்திரவத்தை” தப்பிப்பிழைக்கவும் விரும்பும் ஆயிரக்கணக்கான ஆட்களை நாம் இன்னும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 7:9, 14) முழுமையாக வேலை செய்யப்பட்டும், பெரும்பான்மையான மக்கள் செவிகொடாமலும் இருக்கும் பிராந்தியங்களில்கூட ஓரளவு பலன்கள் இருக்கின்றன. தொடர்ந்து பிரசங்கிப்பதற்குக் கூடுதலான காரணங்களும் உண்டு.
10. “யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்,” என்று மக்களை தொடர்ந்து நினைப்பூட்ட வேண்டும். என்றபோதிலும், பவுல், ரோமருக்கு எழுதிய தன் கடிதத்தில் தொடர்ந்து கூறுவதுபோல், “அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்?” (ரோமர் 10:13, 14) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் தொடர்ந்திருக்க வேண்டிய அவசியத்தை இந்த வார்த்தைகள் நம் ஒவ்வொருவரிலும் ஊன்றிட வேண்டும்.
11. முடிவின் காலம் தொடர்ந்திருக்க, பிள்ளைகள் பிறந்து பெரியவர்களாக வளர்ந்தும் பொறுப்புள்ள வயதை அடைந்தவர்களுமாயிருக்கிறார்கள். இந்த இளம் மக்கள் அநேகமாய் சத்தியத்திற்கு எந்த வகையிலும் செவிகொடுக்காதவர்கள். அவர்களுடைய பெற்றோர்கள் செய்தியை மறுத்தவர்களும் அதற்கு எதிராகப் பேசியவர்களுமாயிருக்கக்கூடும். ஆனால் இப்பொழுது, இந்த இளைஞர்கள் உலக நிலைமைகளைக் குறித்தும், எதிர்காலத்தைக் குறித்தும், வாழ்க்கையில் தங்கள் நோக்கத்தைக் குறித்தும் கவனமாக சிந்தித்துப் பார்க்கும் வயதிலிருக்கிறார்கள். இவர்களும் இரட்சிக்கப்படுவதற்கு யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ள வேண்டும். ஆனால் “அவரைக் குறித்து கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?” (ரோமர் 10:14) அநேக சந்தர்ப்பங்களில் இந்த இளைஞரும் இளம் மனிதரும் சத்தியத்திற்கு செவிகொடுக்கிறார்கள், எனவே நாம் அவர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டும்.
12. பிரசங்கிப்பதற்கான வழி இன்னும் திறக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மைத்தானே யெகோவாவின் இரக்கத்தை வெளிப்படுத்துகிறது. அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகிறான்: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி யெகோவா தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்.” (2 பேதுரு 3:9, 15) எல்லா வகையான மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற யெகோவாவின் ஆசை, ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்குமுன் பொறுமையுடன் காலத்தை அனுமதித்திருப்பதில் மட்டுமல்ல, ஆனால் தம்மிடமாகத் திரும்பி இரட்சிப்படையும்படி அவர்களைக் தொடர்ந்து கேட்டுக்கொள்ளுவதிலும் வெளிப்படுத்தப்படுகிறது. (1 தீமோத்தேயு 2:4) நற்செய்தியை நாம் தொடர்ந்து பிரசங்கிக்கும்போது நாம் கடவுளுடைய இரக்கத்தை சிறப்பிக்கிறோம், இப்படியாக அவருக்குத் துதியுண்டாக்குகிறோம்.
இரத்தப்பழிக்கு விலகியிருத்தல்
13. கடவுளுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து மக்களை எச்சரிக்கும் யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சிகளின் உத்தரவாதத்தை எசேக்கியேலுக்கு இருந்த உத்தரவாதத்துக்கு ஒப்பிடலாம். அவன் இ,ஸ்ரவேல் வீட்டாருக்கு ஒரு காவற்காரனாக நியமிக்கப்பட்டிருந்தான். இஸ்ரவேலர் தங்களுடைய கெட்ட வழிகளிலிருந்து திரும்பாவிட்டால் அவர்கள் மீது அழிவு வரும் என்று அவர்களை எச்சரிக்கும் பொறுப்பையுடையவனாயிருந்தான். ஒரு காவற்காரனாக, அவன் எச்சரிக்கத் தவறினால், அழிவு அந்த துன்மார்க்கர் மீது வரும், ஆனால் அவர்களுடைய இரத்தப்பழி அசதியாயிருந்துவிட்ட இந்த காவற்காரன் மீது இருக்கும். இந்தக் காரியத்தில், ஆக்கினைத் தீர்ப்பை நிறைவேற்றுவதனிடமாக யெகோவா தம்முடைய மனப்பான்மையை வெளிப்படுத்துகிறார்: “நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் . . . இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாக வேண்டும்?”—எசேக்கியேல் 33:1-11.
14. அப்போஸ்தலனாகிய பவுல், ஒரு காவற்காரனாக தன்னுடைய உத்தரவாதத்தை மதித்துணர்ந்தவனாய் எபேசு சபையிலிருந்து வந்த மூப்பர்களிடம் பின்வருமாறு சொல்லுகிறான்: “எல்லோருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றைய தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.” அவன் ஏன் அப்படிச் சொல்ல முடிந்தது? தொடர்ந்து சொல்லுகிறவனாய்: “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.” (அப்போஸ்தலர் 20:26, 27) எனவே அது இன்றிருக்கும் காவற்காரர் வகுப்பின் விஷயத்தில், அதாவது இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் விஷயத்தில் உண்மையாயிருக்கிறது. இவர்களும், இந்த ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைத்து பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையுடைய முப்பது லட்சத்திற்குமதிகமான இவர்களுடைய தோழர்களும் ஒன்று சேர்ந்து, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலும், அவருடைய நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படுவது குறித்த எச்சரிப்பைக் கொடுப்பதிலும் ஒருபோதும் தளர்ந்துவிடக்கூடாது. இப்படியாக அவர்கள் இரத்தப்பழிக்கு விலகியிருக்கிறார்கள்.
15. இன்று செய்யப்படும் பிரசங்க வேலை தீர்க்கதரிசனமாக எசேக்கியேல் 9-ம் அதிகாரத்தில் விளக்கப்படுகிறது. இங்கு, எருசலேம் பட்டணத்தின் மீது யெகோவாவின் தண்டனை தீர்மானிக்கப்பட்டது. அந்த நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படுவதற்கு முன்பு சணல்நூல் அங்கி தரித்து தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒரு மனிதன் நகரமெங்கும் போய், அங்கு செய்யப்படுகிற எல்லா அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டழுகிற அனைவருடைய நெற்றிகளிலும் அடையாளம் போடும்படி சொல்லப்படுகிறான். இந்த அடையாளம் போடும் வேலை முடிக்கப்பட்டதும், தப்பிப் பிழைப்பதற்காக குறிபோடப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள். அடையாளம் போடும் தன்னுடைய வேலையை வெற்றிகரமாக முடித்த அந்த மனிதன், “நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன்” என்று அறிக்கை செய்தான். (எசேக்கியேல் 9:11) அவனுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தை அவன் உண்மையுள்ளவனாய் நிறைவேற்றினான்.
16. சணல் நூல் அங்கி தரித்த மனிதன் கிறிஸ்துவைப் பின்பற்றும் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருக்குப் படமாயிருக்கிறான். அவர்கள் “வேறே ஆடுகளின்” “திரள் கூட்டத்தால்” சேர்ந்துகொள்ளப்படுகிறார்கள். இன்றிருக்கும் பெரிய விவாதம், எசேக்கியேலின் காலத்திலிருந்ததுபோலவே, யெகோவாவின் அரசுரிமை மெய்ப்பித்துக் காட்டப்படுவதாகும். சர்வவல்ல தேவனுடைய மகா நாளில் நடக்கப்போகும் யுத்தத்தில் அழியவிருக்கும் தற்போதைய பொல்லாத ஒழுங்கு முறையின் முடிவைக் குறித்து யெகோவா சொல்லுவதாவது: “நான் யெகோவா என்று தேசங்கள் அறிந்துகொள்வார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16; எசேக்கியேல் 39:7) தேசங்கள் இதை அறிந்துகொள்வதற்கு பூமியிலுள்ள யெகோவாவின் ஊழியர்கள் சகல தேசங்களிலும் அவருடைய நாமத்தையும் நோக்கத்தையும் சாட்சியாக பிரசங்கிப்பதில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
17. ராஜ்யத்தின் நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கிப்பதன் மூலம், நாம் தாமே விழிப்பாயிருக்க முடிகிறது. யெகோவாவின் நாமமும் நோக்கமும் எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து கவனமாயிருக்க முடிகிறது. நாம் தளர்ந்து விடுவோமானால், நம்முடைய ராஜ்ய நம்பிக்கை பலவீனமடைந்து, “பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும்” இழுக்கப்பட்டு “பலன் கொடாதிருப்போம்.” (லூக்கா 8:14) நற்செய்தியை அறிவிப்பதில் வைராக்கியத்துடன் தொடர்ந்து நிலைத்திருப்பதன் மூலம் நாம் நம்முடைய எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளை உண்மையோடு பின்பற்றுகிறவர்களாயிருக்கிறோம்: “அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருங்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்.”—மாற்கு 13:10, 33, 37.
18. எனவே, யெகோவா காலத்தை அனுமதித்திருக்கும் வரையில் நாம் எல்லாருமே ‘பெருமூச்சு விட்டழுகிறவர்களைத்’ தேடி கண்டுபிடிப்பதில் தொடர்ந்து செயல்படுவோமாக. நாம் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோராயிருந்தாலுஞ்சரி அல்லது “வேறே ஆடுகளாய்” இருந்தாலுஞ்சரி, ராஜ்யத்தின் நற்செய்தியை குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசங்களிலும் சாட்சியாக பிரசங்கிக்கும் உத்தரவாதத்தை உண்மையோடு நிறைவேற்றக்கடவோம். (மத்தேயு 24:14) யெகோவா தாமே “மிகுந்த உபத்திரவத்தைத்” துவக்குவதன் மூலம் இந்த வேலைக்கு முடிவைக் கொண்டுவரும்போது, நாம் ஒவ்வொருவரும் யெகோவாவிடம் ‘நீர் கட்டளையிட்டபடியே நாங்கள் செய்தோம்’ என்று சொல்லக் கூடியவர்களாயிருப்போமாக. (w88 1/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ நம்முடைய பிரசங்கத்தின் பேரில் பலன்கள் என்ன காண்பிக்கின்றன?
◻ நாம் ஏன் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்பதற்கு வேறு என்ன காரணங்கள் இருக்கின்றன?
◻ நம்முடைய பிரசங்க வேலை எப்படி யெகோவாவின் இரக்கத்தை வெளிப்படுத்துவதாயிருக்கிறது?
◻ எல்லா மனிதருடைய இரத்தப் பழியிலிருந்தும் நாம் எப்படி விலகியிருக்கலாம்?
◻ நம்முடைய பிரசங்கவேலை எப்படி நம்மை விழிப்பாய் வைத்துக்கொள்ள உதவுகிறது?
[கேள்விகள்]
1, 2. (எ) இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வேலை எது? அது எந்தளவுக்குச் செய்யப்பட்டு வருகிறது? (பி) இந்த வேலையில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
3. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டியதைக் குறித்து சிலர் என்ன சொல்லக்கூடும்?
4. செவிகொடுக்கும் ஆட்கள் குறைவாய் இருக்கும் பிராந்தியத்திலும் தொடர்ந்து செயல்படுவதற்கு நம்மை எது தூண்டிட வேண்டும்?
5. (எ) வேறு எந்தக் காரணத்திற்காகவும் நாம் பிரசங்க வேலையில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்? (பி) பிரசங்க வேலை எப்படி நியாயத்தீர்ப்புக்கு அடிப்படையாக இருக்கிறது?
6. நம்முடைய செய்தி விரிவாக அறியப்பட்டிருந்தும், நாம் ஏன் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும்?
7. இன்று பலருடைய பிரதிபலிப்பு எப்படி, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்துக்கு இஸ்ரவேலரின் பிரதிபலிப்புக்கு ஒப்பாயிருக்கிறது? ஆனால் இது ஏன் பிரசங்கிப்பதிலிருந்து நம்மைப் பின்வாங்கச் செய்யக்கூடாது?
8. மக்கள் சத்தியத்திற்கு எதிராக நிலைநிற்கை எடுத்திருப்பதாகக் காணப்பட்டாலும், அவர்களுடைய மனதை எந்த அம்சங்கள் மாற்றக்கூடும்?
9. நம்முடைய பிரசங்க வேலை எப்படி சேதம் ஏற்பட்டிருக்கும் ஓர் இடத்திலுள்ள மீட்புப் பணியாளர்களின் வேலைக்கு ஒப்பிடப்படலாம்?
10. ரோமர் 10:13, 14-ன்படி, சத்தியத்தை விரும்பும் ஆட்கள் அதற்காக எங்கு திரும்ப வேண்டும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வார்கள்?
11. பெரியவர்களாக வளரும் இளைஞரிடமாக நமக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
12. நாம் பிரசங்க வேலையில் தொடர்ந்திருப்பது எப்படி யெகோவாவின் இரக்கத்தை வெளிப்படுத்தும் காரியமாக இருக்கிறது?
13, 14. (எ) எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி, நம்முடைய பிரசங்க வேலை எப்படி ஒரு காவற்காரனின் வேலைக்கு ஒப்பாக இருக்கிறது? (பி) “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி சுத்தமாயிருப்பதாகப்” பவுல் ஏன் சொல்லக்கூடியவனாயிருந்தான்? யெகோவாவின் சாட்சிகள் இன்று இதை எப்படி மட்டுமே சொல்ல முடியும்?
15. எசேக்கியேல் 9-ம் அதிகாரத்தின்படி யார் அடையாளம் போடப்பட்டார்கள்? அடையாளத்தைப் போட்டது யார்?
16. (எ) சணல் நூல் அங்கி தரித்த மனிதன் இன்று யாருக்குப் படமாயிருக்கிறான்? (பி) யெகோவாவின் அரசுரிமை மெய்ப்பித்துக் காட்டப்படுவதன் சம்பந்தமான விவாதம் எப்படி நம்மைத் தொடர்ந்து பிரசங்கிக்கத் தூண்டுகிறது?
17, 18. (எ) நாம் தொடர்ந்து பிரசங்கிப்பது எப்படி நம்மை விழிப்பாய் வைத்துக்கொள்ள உதவுகிறது? (பி) யெகோவா பிரசங்க வேலைக்கு ஒரு முடிவைக் கொண்டுவருகையில் நாம் அவரிடம் என்ன அறிக்கை செய்திட விரும்புவோம்? இதை நாம் எப்படி மட்டுமே செய்ய முடியும்?
[பக்கம் 28-ன் அட்டவணை]
கடந்த ஏழு ஆண்டுகளாக செய்யப்பட்ட பிரசங்க வேலையின் பலன்கள்
முழுக்காட்டப்பட்டவர்களின் ஞாபகார்த்த தினத்திற்கு பைபிள் படிப்புகளின்
எண்ணிக்கை வருகை தந்தவர்கள் எண்ணிக்கை
1981 1,19,836 59,87,893 14,75,177
1982 1,38,540 62,52,787 15,86,293
1983 1,61,896 67,67,707 17,97,112
1984 1,79,421 74,16,974 20,47,113
1985 1,89,800 77,92,109 23,79,146
1986 2,25,868 81,60,597 27,26,252
1987 2,30,843 89,65,221 30,05,048