வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜூலை 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 6-7
“தாராளமாக அளந்து கொடுங்கள்”
லூ 6:37-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
மன்னித்துக்கொண்டே இருங்கள், அப்போது நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்: வே.வா., “விடுவித்துக்கொண்டே இருங்கள், அப்போது நீங்களும் விடுவிக்கப்படுவீர்கள்.” ‘மன்னிப்பது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “சுதந்திரமாக அனுப்பிவிடுவது; (உதாரணத்துக்கு, ஒரு கைதியை) விடுதலை செய்வது.” நாம் மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்கும் கண்டனம் செய்வதற்கும் பதிலாக மன்னிக்க வேண்டுமென்று இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது; அதனால், ஒருவரைத் தண்டிப்பதோ பழிதீர்ப்பதோ நியாயமாகத் தோன்றினாலும் அவரை மன்னித்து விட்டுவிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
எப்போதும் நல்லதையே செய்யுங்கள்
13 “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்று இயேசு சொன்னதாக மத்தேயுவின் சுவிசேஷம் குறிப்பிடுகிறது. (மத். 7:1) இயேசு சொன்ன இதே விஷயத்தை லூக்காவின் சுவிசேஷம் இவ்வாறு சொல்கிறது: “மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.” (லூக். 6:37) முதல் நூற்றாண்டிலிருந்த பரிசேயர்கள், வேதத்தை விட்டுவிட்டு பாரம்பரியங்களின் அடிப்படையில் மற்றவர்களைக் குற்றவாளிகளென கடுமையாய்த் தீர்ப்பு செய்தார்கள். இயேசு போதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் அப்படிச் செய்கிறவர்கள் யாராவது இருந்திருந்தால், அவர்கள் இனியும் மற்றவர்களை ‘குற்றவாளிகளென்று தீர்க்கும்’ மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டியிருந்தது. மாறாக, அவர்கள் ‘விடுதலைபண்ணுகிறவர்களாக,’ அதாவது, மற்றவர்களின் குற்றங்குறைகளை மன்னிக்கிறவர்களாக ஆக வேண்டியிருந்தது. மன்னிப்பது சம்பந்தமாக இதே போன்ற அறிவுரையை அப்போஸ்தலன் பவுலும் கொடுத்தார்.—எபேசியர் 4:32-ஐ வாசியுங்கள்.
14 இயேசுவின் சீஷர்கள், தீங்கு செய்தவர்களை மன்னிக்க வேண்டும்; அப்போதுதான் அந்தத் தீங்கு செய்தவர்கள் மற்றவர்களை மன்னிக்கத் தூண்டப்படுவார்கள். “நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” என்று இயேசு சொன்னார். (மத். 7:2) மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விஷயத்தில், நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.—கலா. 6:7.
லூ 6:38-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்: வே.வா., “கொடுத்துக்கொண்டே இருங்கள்.” இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொல்லை “கொடுப்பது” என்று மொழிபெயர்க்கலாம்; அது தொடர்ந்து நடக்கும் செயலைக் குறிக்கிறது.
லூ 6:38-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
உங்களுடைய மடியில்: இதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “உங்களுடைய நெஞ்சில்.” ஆனால் இந்த வசனத்தில், தொளதொளவென்ற மேலங்கியின் மடிப்பை, அதாவது இடுப்புப்பட்டைக்கு மேல் மடிந்திருக்கும் துணியை, குறிப்பதாகத் தெரிகிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களை அவர்களுடைய அங்கியின் மடிப்பில் போடும் வழக்கம் சில விற்பனையாளர்களுக்கு இருந்தது; ‘மடியில் போடுவது’ என்ற வார்த்தைகள் இந்த வழக்கத்தைக் குறிக்கலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உண்மையான ஆன்மீகத்தை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்?
இயேசு அடிக்கடி நீண்ட நேரம் ஜெபம் செய்தார். (யோவான் 17:1-26) உதாரணத்திற்கு, தம்முடைய 12 சீஷர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக இயேசு ‘ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரா முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.’ (லூக்கா 6:12) உண்மையான ஆன்மீகவாதிகள் இரவு முழுவதும் ஜெபம் செய்யாவிட்டாலும் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். வாழ்க்கையில் முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பாக, கடவுளிடம் ஜெபிப்பதற்கு அதிகமான நேரத்தை அவர்கள் செலவிடுகிறார்கள்; இவ்வாறு, தங்களுடைய ஆன்மீகத்தில் முன்னேற்றம் செய்ய உதவும் தீர்மானங்களை எடுப்பதற்கு பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நாடுகிறார்கள்.
லூ 7:35-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
நீதியான செயல்கள்: வே.வா., “செயல்களால் கிடைக்கிற பலன்கள்.” இந்த வசனத்தின் நேரடி மொழிபெயர்ப்பு: “ஞானம் அதன் பிள்ளைகள் எல்லாராலும் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படுகிறது.” இங்கே ஞானம் ஒரு நபரைப் போலவும், அதற்குப் பிள்ளைகள் இருப்பதைப் போலவும் கிரேக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் இணைவசனமான மத் 11:19-ல் ஞானத்துக்கு “செயல்கள்” இருப்பதாக கிரேக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. ஞானத்தின் பிள்ளைகள் அல்லது செயல்கள், அதாவது யோவான் ஸ்நானகரும் இயேசுவும் காட்டிய அத்தாட்சிகள், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபித்தன. அப்படியென்றால், இயேசு சொல்லவந்த விஷயம் இதுதான்: ‘நீதியான செயல்களையும் நடத்தையையும் பாருங்கள், அப்போது இந்தக் குற்றச்சாட்டு பொய் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.’
ஜூலை 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 8-9
“என்னைப் பின்பற்றி வா—இதைச் செய்வதற்கு என்ன தேவை?”
it-2-E 494
கூடு
வேத அறிஞர்களில் ஒருவன் இயேசுவிடம், “போதகரே, நீங்கள் எங்கே போனாலும் நான் உங்கள் பின்னால் வருவேன்” என்று சொன்னபோது, இயேசு அவனிடம் இப்படிச் சொன்னார்: “குள்ளநரிகளுக்குக் குழிகளும் பறவைகளுக்குக் கூடுகளும் இருக்கின்றன, ஆனால் மனிதகுமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை.” (மத் 8:19, 20; லூ 9:57, 58) இயேசு சொல்ல வந்த குறிப்பு இதுதான்: ஒருவன் தன்னுடைய சீஷனாக ஆக வேண்டுமென்றால், அவன் எல்லா சௌகரியங்களோடு சொகுசாக வாழ வேண்டுமென்ற எண்ணத்தை விட்டுவிட்டு, யெகோவாவை முழுமையாக நம்ப வேண்டும். இந்த நியமத்தை அவர் கற்றுக்கொடுத்த மாதிரி ஜெபத்தின் வார்த்தைகளில், அதாவது “இன்றைக்குத் தேவையான உணவை எங்களுக்குக் கொடுங்கள்” என்ற வார்த்தைகளில் நம்மால் கவனிக்க முடியும்; அதோடு, “உங்களில் யாராவது தன் உடைமைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரவில்லை என்றால், அவன் நிச்சயமாகவே என்னுடைய சீஷனாக இருக்க முடியாது” என்ற வார்த்தைகளிலும் நம்மால் கவனிக்க முடியும்.—மத் 6:11; லூ 14:33.
லூ 9:59, 60-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
என்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு: தன்னுடைய அப்பா அப்போது இறந்துவிட்டதால் அவரை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் பண்ண வேண்டுமென்று அந்த மனிதன் சொன்னதாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் அவன் அங்கே இயேசுவிடம் பேசிக்கொண்டு இருந்திருக்க மாட்டான். பழங்கால மத்தியக் கிழக்குப் பகுதியில், குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் அவரை உடனடியாக அடக்கம் செய்துவிடுவார்கள்; பொதுவாக, அதே நாளில் அடக்கம் செய்துவிடுவார்கள். அதனால், அந்த மனிதனின் அப்பா உடல்நிலை சரியில்லாதவராக இருந்திருக்கலாம் அல்லது வயதானவராக இருந்திருக்கலாம், ஆனால் இறந்துபோயிருந்ததாகத் தெரியவில்லை. முடியாமல் இருக்கும் அப்பாவை அம்போவென்று விட்டுவிட்டு வர வேண்டுமென இயேசு கண்டிப்பாகச் சொல்லியிருக்க மாட்டார்; அந்த முக்கியமான பொறுப்பைக் கவனித்துக்கொள்ள அந்த மனிதனின் குடும்பத்தில் மற்றவர்கள் இருந்திருப்பார்கள். (மாற் 7:9-13) அப்படியென்றால் அவன் இயேசுவிடம், ‘நான் உங்களைப் பின்பற்றுகிறேன், ஆனால் என் அப்பா உயிரோடு இருக்கும்வரை அது முடியாது. அவர் இறந்துபோய், நான் அவரை அடக்கம் செய்யும்வரை காத்திருங்கள்’ என்று சொன்னதாகத் தெரிகிறது. ஆனால் இயேசுவின் கண்ணோட்டத்தில், அவன் தன்னுடைய வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்க வேலைகளுக்கு முதலிடம் கொடுக்கத் தவறிவிட்டான்.—லூ 9:60, 62.
இறந்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யட்டும்: முந்தின ஆராய்ச்சிக் குறிப்பில் பார்த்தபடி, இயேசுவிடம் பேசிக்கொண்டிருந்த மனிதனின் அப்பா உடல்நிலை சரியில்லாதவராக இருந்திருக்கலாம் அல்லது வயதானவராக இருந்திருக்கலாம், ஆனால் இறந்துபோயிருந்ததாகத் தெரியவில்லை. அதனால், இயேசு அநேகமாக அவனிடம், ‘ஆன்மீக அர்த்தத்தில் இறந்தவர்கள், இறந்துபோன தங்கள் குடும்பத்தாரை அடக்கம் செய்யட்டும்’ என்று சொன்னார். அதாவது, அவனுடைய அப்பா இறந்துபோய் அடக்கம் செய்யப்படும்வரை அவனுடைய குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் அவரைக் கவனித்துக்கொள்ள அவன் அனுமதிக்க வேண்டுமென்று சொன்னார். இயேசுவைப் பின்பற்றுவதன் மூலம், முடிவில்லாத வாழ்வின் வழியில் அவன் நடக்க ஆரம்பிப்பான்; கடவுளுடைய பார்வையில் இறந்துபோயிருந்த ஆட்களின் மத்தியில் இருக்க மாட்டான். இயேசு அவனுக்குத் தந்த பதில், ஆன்மீக அர்த்தத்தில் உயிரோடு இருப்பதற்கு எது அவசியம் என்பதைக் காட்டுகிறது; அதாவது, வாழ்க்கையில் ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கு’ முதலிடம் தருவதும், அதைப் பற்றி எல்லா இடங்களிலும் அறிவிப்பதும்தான் அவசியம் என்பதைக் காட்டுகிறது.
லூ 9:61, 62-க்கான nwtsty மீடியா
உழுதல்
பெரும்பாலும் இலையுதிர் காலத்தில்தான் மக்கள் தங்களுடைய நிலத்தை உழுதார்கள். ஏனென்றால், கோடைக் கால வெயிலில் இறுகிப்போன நிலம் அப்போதுதான் மழையில் நனைந்து இளகியிருக்கும். (இணைப்பு B15-ஐப் பாருங்கள்.) சில கலப்பைகளில், வெறுமனே ஒரு மரச்சட்டத்தில் கூர்மையான ஒரு மரக்கம்பம் பொருத்தப்பட்டிருந்தது; ஒருவேளை, உலோக முனைகொண்ட மரக்கம்பம் பொருத்தப்பட்டிருக்கலாம். ஒரு விலங்கினால் அல்லது அதற்கும் அதிகமான விலங்குகளினால் அது இழுக்கப்பட்டது. நிலம் உழப்பட்ட பிறகு விதை விதைக்கப்பட்டது. எபிரெய வேதாகமத்தில், எல்லாருக்கும் பழக்கமான உழவு வேலையைப் பற்றி உவமைகளில் அடிக்கடி குறிப்பிடப்பட்டது. (நியா 14:18; ஏசா 2:4; எரே 4:3; மீ 4:3) முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதற்காக இயேசு அடிக்கடி விவசாய வேலைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். உதாரணத்துக்கு, முழு இதயத்தோடு சீஷராக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கு உழவு வேலையை உவமையாகக் குறிப்பிட்டார். (லூ 9:62) உழவரின் கவனம் சிதறினால் சால்கள் கோணலாகிவிடும். அதேபோல், கிறிஸ்துவின் சீஷருடைய கவனம் சிதறினால், அதாவது தன்னுடைய பொறுப்புகளை அவர் செய்யாமல்போனால், கடவுளுடைய அரசாங்கத்துக்குத் தகுதி இல்லாதவராக ஆகிவிடுவார்.
யெகோவாவுக்கு எப்போதும் முழு இருதயத்தோடு சேவை செய்யுங்கள்
11 இயேசுவின் உவமையிலுள்ள பாடத்தை இன்னும் நன்கு புரிந்துகொள்ள கூடுதல் விவரங்களைச் சேர்த்து அதைக் கற்பனை செய்து பார்ப்போம். ஒரு வேலைக்காரன் வயலை மும்முரமாய் உழுதுகொண்டிருக்கிறார். அந்தச் சமயத்தில், வீட்டைப் பற்றிய நினைவுகளும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. வீட்டில் இருந்தால், குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் இருக்கலாம்... இதமான நிழலில் இனிமையான இசையைக் கேட்டு, சுவையான உணவை ருசித்து, சந்தோஷமாய்ச் சிரித்து மகிழலாம். அதற்காக அவர் ரொம்பவே ஏங்குகிறார். அந்த ஏக்கத்துடனேயே வெகு தூரம்வரை உழுகிறார். ஒரு கட்டத்தில் தன் ஆசையை அடக்க முடியாமல், “பின்னால் இருப்பவற்றைத் திரும்பிப் பார்க்கிறார்.” இன்னும் விதைப்பு முடியாததால் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. என்றாலும், அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் ஒழுங்காக வேலை செய்வதில்லை. அவருடைய அரைகுறை வேலை எஜமானருக்கு வருத்தம் அளிக்கிறது.
12 இந்த உவமையை இப்போது நம்முடைய நாளுக்குப் பொருத்திப் பார்ப்போம். ஆன்மீகக் காரியங்களில் சுறுசுறுப்பாய் இருப்பதுபோல் தோன்றுகிற ஆனால் முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யாத ஒரு கிறிஸ்தவருக்கு அந்த வேலைக்காரனை ஒப்பிடலாம். உதாரணத்திற்கு, ஒரு சகோதரர் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் தவறாமல் செல்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒருபக்கம் இதிலெல்லாம் அவர் தவறாமல் கலந்துகொண்டாலும்... இன்னொரு பக்கம் இந்த உலகத்திலுள்ள சில காரியங்களை அடைவதைக் குறித்து சதா மனதுக்குள் அசைபோட்டுக் கொண்டிருக்கிறார். அவற்றிற்காக ரொம்பவே ஏங்குகிறார். அந்த ஏக்கத்துடனேயே, பல வருடங்கள் கடவுளுக்குச் சேவை செய்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த ஆசை தீவிரமாகி “பின்னால் இருப்பவற்றை” திரும்பிப் பார்க்கிறார். ஊழியத்தில் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறபோதிலும் ‘வாழ்வளிக்கும் வார்த்தையை அவர் இறுகப் பற்றிக்கொள்வதில்லை.’ அதனால், முன்பு போல் ஊழியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபடுவதில்லை. (பிலி. 2:15) தம்முடைய ஊழியர்களில் ஒருவர் இப்படி நடந்துகொள்ளும்போது ‘அறுவடையின் எஜமானரான’ யெகோவா நிச்சயம் வருத்தப்படுவார்.—லூக். 10:2.
13 இயேசுவின் உவமை கற்பிக்கும் பாடம் தெளிவாகப் புரிகிறது. சபைக் கூட்டங்களுக்குச் செல்வது, வெளி ஊழியத்தில் ஈடுபடுவது போன்ற சந்தோஷமும் திருப்தியும் தருகிற காரியங்களில் நாம் தவறாமல் ஈடுபடுகிறோம் என்றால் அது பாராட்டுக்குரியது. ஆனால், யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்வதில் இவை மட்டுமல்ல, இன்னும் நிறைய உட்பட்டுள்ளன. (2 நா. 25:1, 2, 27) ஒரு கிறிஸ்தவர் ‘பின்னால் இருப்பவற்றை’ பற்றி, அதாவது இந்த உலகத்தின் சில காரியங்களைப் பற்றி, இன்னும் ஆசை ஆசையாய் நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தால் கடவுளோடு தனக்குள்ள நல்லுறவை இழந்துவிடலாம். (லூக். 17:32) ‘பொல்லாததை அறவே வெறுத்து, நல்லதை இறுகப் பற்றிக்கொண்டால்’ மட்டுமே ‘கடவுளுடைய அரசாங்கத்திற்கு நாம் தகுதி உள்ளவர்களாய்’ இருப்போம். (ரோ. 12:9; லூக். 9:62) எனவே, சாத்தானின் உலகத்திலுள்ள எதுவும்—அது எத்தனை பயனுள்ளதாக, இன்பம் அளிப்பதாகத் தோன்றினாலும்—கடவுளுடைய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட காரியங்களில் நாம் முழு இருதயத்தோடு ஈடுபடுவதற்குத் தடையாக இருக்க ஒருபோதும் அனுமதிக்காதிருப்போமாக!—2 கொ. 11:14; பிலிப்பியர் 3:13, 14-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 8:3-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
பணிவிடை செய்துவந்தார்கள்: வே.வா., “ஆதரித்துவந்தார்கள் (தேவையானவற்றைக் கொடுத்துவந்தார்கள்).” இதற்கான கிரேக்க வார்த்தை டையக்கொனீயோ. உணவுப்பொருள்களை வாங்கிவருவது, சமைப்பது, பரிமாறுவது போன்ற வேலைகளைச் செய்வதன் மூலம் மற்றவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதை இந்த வார்த்தை குறிக்கலாம். இதுபோன்ற அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை லூ 10:40 (“வேலை செய்ய”), லூ 12:37 (“பணிவிடை செய்வார்”), லூ 17:8 (“பரிமாறு”), அப் 6:2 (“உணவு கொடுக்கிற வேலை”) ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்குத் தனிப்பட்ட விதமாகச் செய்யப்படும் இதுபோன்ற மற்ற எல்லா வேலைகளையும்கூட இந்த வார்த்தை குறிக்கலாம். இந்த அதிகாரத்தில், வசனங்கள் 2 மற்றும் 3-ல் சொல்லப்பட்டுள்ள பெண்கள் எப்படி இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் ஆதரவு காட்டி, கடவுளுடைய வேலையை முடிக்க அவர்களுக்கு உதவினார்கள் என்பதை இந்த வார்த்தை காட்டுகிறது. அந்தப் பெண்கள் அப்படிச் செய்வதன் மூலம் கடவுளை மகிமைப்படுத்தினார்கள். அவர்கள் செய்ததைக் கடவுள் உயர்வாக மதித்ததால், அவர்களுடைய இரக்கத்தையும் தாராள குணத்தையும் பற்றி வருங்காலத் தலைமுறைகள் படித்துத் தெரிந்துகொள்வதற்காக அவற்றை பைபிளில் பதிவு செய்திருக்கிறார். (நீதி 19:17; எபி 6:10) இதே கிரேக்க வார்த்தைதான் மத் 27:55 மற்றும் மாற் 15:41-ல் சொல்லப்பட்டிருக்கும் பெண்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
லூக்கா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
9:49, 50—பிசாசுகளைத் துரத்திய மனிதன் தம்முடைய சீஷனாக இல்லாதிருந்தும் அவனை இயேசு ஏன் தடுக்கவில்லை? கிறிஸ்தவ சபை இன்னும் ஸ்தாபிக்கப்படாமல் இருந்ததே அதற்குக் காரணம். எனவே, இயேசுவின் பெயரில் விசுவாசம் வைத்து பிசாசுகளைத் துரத்துவதற்கு அந்த மனிதன் இயேசுவுடன் செல்ல வேண்டுமென்ற அவசியம் இருக்கவில்லை.—மாற்கு 9:38-40.
ஜூலை 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 10-11
“சமாரியனைப் பற்றிய உவமை”
லூ 10:29-32-க்கான nwtsty மீடியா
எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும் சாலை
இந்த வீடியோவில் காட்டப்படும் சாலை (1), எருசலேமையும் எரிகோவையும் இணைத்த பழங்கால சாலையைக் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது. அந்தச் சாலை 20 கி.மீ. (12 மைல்) நீளத்தில் இருந்தது; அது கீழ்நோக்கி இறங்கியது; ஏனென்றால், எருசலேமிலிருந்து எரிகோ 1 கி.மீ. (.6 மைல்) இறக்கத்தில் இருந்தது. அந்த ஒதுக்குப்புறமான பொட்டல் காட்டில் அடிக்கடி திருட்டு நடந்தது. அதனால், பயணிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு காவல்படை அங்கே நிறுத்தப்பட்டது. யூதேய வனாந்தரத்திலிருந்து அந்தச் சாலை புறப்பட்ட இடத்தில்தான் ரோமர்களின் எரிகோ நகரம் (2) அமைந்திருந்தது. அங்கிருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ. (வெறும் 1 மைலுக்குச் சற்று அதிக) தூரத்தில்தான் பழங்கால எரிகோ நகரம் (3) அமைந்திருந்தது.
“உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை”
14 இரண்டாவதாக, நல்ல சமாரியனைப் பற்றிய உவமையை எடுத்துக்கொள்ளுங்கள். இயேசு அதை இவ்வாறு ஆரம்பித்தார்: “ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப்போனார்கள்.” (லூக்கா 10:30) தம்முடைய குறிப்பை வலியுறுத்துவதற்கு இயேசு “எருசலேமிலிருந்து எரிகோவுக்கு” போகும் வழியை பயன்படுத்தியது மிகவும் பொருத்தமானது. இந்த உவமையை அவர் சொல்லுகையில் எருசலேமுக்கு அருகில் இருந்த யூதேயாவில் இருந்தார்; ஆகவே அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் உவமையில் சொல்லப்பட்ட அந்த சாலையைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் சாலை, முக்கியமாக தனியாக பயணிப்பவர்களுக்கு அதிக ஆபத்தானதாக இருந்தது. அது மிகவும் வளைந்து நெளிந்து சென்ற தனிமையான பாதையாக இருந்ததால் திருடர்கள் பதுங்கியிருக்க வசதியாக பல மறைவான இடங்கள் இருந்தன.
15 உவமையில் “எருசலேமிலிருந்து எரிகோவுக்கு” போகும் வழியை இயேசு பயன்படுத்தியதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. உவமையின்படி, முதலில் ஒரு ஆசாரியனும் பின்னர் ஒரு லேவியனும் அதே வழியில் போனார்கள்—இவர்களில் ஒருவருமே காயப்பட்டிருந்த மனிதனுக்கு உதவி செய்ய அங்கே நிற்கவில்லை. (லூக்கா 10:31, 32) ஆசாரியர்கள் எருசலேமிலிருந்த ஆலயத்தில் சேவை செய்தார்கள், லேவியர்கள் அவர்களுக்கு உதவி செய்தார்கள். ஆலய சேவை செய்யாத நாட்களில் அநேக ஆசாரியர்களும் லேவியர்களும் எரிகோவில் தங்கியிருந்தார்கள், ஏனென்றால் எரிகோ எருசலேமிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருந்தது. ஆகவே, அவர்கள் அந்த வழியில் பயணம் செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டதில் சந்தேகமில்லை. ஆசாரியனும் லேவியனும் அந்த சாலையில் “எருசலேமிலிருந்து” போய்க் கொண்டிருந்தார்கள், அதாவது ஆலயத்திலிருந்து மறு திசையில் போய்க்கொண்டிருந்தார்கள் என்பதை கவனியுங்கள். ‘காயப்பட்டுக் கிடந்தவன் செத்தவன் போல அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும், ஒரு சவத்தை தொடப் போய் தீட்டுப்பட்டு தற்காலிகமாக ஆலயத்தில் சேவை செய்ய முடியாமல் போய்விடுமோ என அவர்கள் நினைத்திருக்கலாம்’; ஆகவே அவர்கள் கண்டும் காணாதது போல கடந்து போயிருக்கலாம் என்று யாரும் அவர்களுடைய செயலை நியாயப்படுத்த முடியாது. (லேவியராகமம் 21:1; எண்ணாகமம் 19:11, 16) கேட்பவர்களுக்கு பழக்கமான காரியங்களையே இயேசு தம் உவமையில் பயன்படுத்தியது தெளிவாக தெரிகிறது அல்லவா?
லூ 10:33, 34-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
சமாரியர் ஒருவர்: யூதர்கள் பொதுவாகச் சமாரியர்களைத் தாழ்வாகப் பார்த்தார்கள். அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. (யோவா 4:9) சில யூதர்கள் வெறுப்பையும் அவமதிப்பையும் காட்டுவதற்குக்கூட “சமாரியன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். (யோவா 8:48) ஒரு ரபீ இப்படிச் சொன்னதாக மிஷ்னா குறிப்பிடுகிறது: “சமாரியர்களின் ரொட்டியைச் சாப்பிடுகிறவன் பன்றி இறைச்சியைச் சாப்பிடுகிறவன்போல் இருக்கிறான்.” (ஷெபித் 8:10) யூதர்களில் நிறைய பேர் சமாரியர்கள் சொன்ன சாட்சியை நம்பவில்லை, அவர்களுடைய பணிவிடையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. யூதர்கள் அவர்களை ஏளனமாகக் கருதியதைப் பற்றி இயேசுவுக்குத் தெரிந்திருந்தது; அதனால், நல்ல சமாரியன் கதை என்று பெரும்பாலும் குறிப்பிடப்படும் உவமையில் இது சம்பந்தமாக ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தார்.
அவனுடைய காயங்கள்மேல் எண்ணெயையும் திராட்சமதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார்: மருத்துவரான லூக்கா, இயேசுவின் உவமையைக் கவனமாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் விவரித்திருக்கிற முறையில்தான் அன்று மக்கள் காயங்களுக்குக் கட்டுப்போட்டார்கள். வீட்டு மருத்துவத்தில் எண்ணெய், திராட்சமது ஆகிய இரண்டுமே காயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. புண் வறண்டுபோகாமல் இருப்பதற்கு (ஏசா 1:6-ஐ ஒப்பிடுங்கள்) சிலசமயங்களில் எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. திராட்சமதுவுக்கும் மருத்துவப் பயன் இருப்பதில் சந்தேகமே இல்லை; அது ஒரு மிதமான கிருமிநாசினி. காயங்கள் பெரிதாகாமல் இருப்பதற்குக் கட்டுப் போடப்பட்டதைப் பற்றியும் லூக்கா பதிவு செய்திருக்கிறார்.
ஒரு சத்திரத்துக்கு: இதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “எல்லாருமே வரவேற்கப்படுகிற அல்லது தங்க வைக்கப்படுகிற இடம்.” பயணிகள் அப்படிப்பட்ட இடங்களில் தங்கினார்கள்; அவர்களுடைய விலங்குகளுக்கும் அங்கு இடம் தரப்பட்டது. சத்திரக்காரர் பயணிகளுக்குத் தேவைப்பட்ட முக்கியமான உணவுப் பொருள்களைக் கொடுத்தார். சிலசமயங்களில், அவருடைய பொறுப்பில் விடப்படுகிறவர்களைக் கவனித்துக்கொண்டார்; அதற்குப் பணம் வாங்கினார்.
ஒரு சமாரியன் அன்புள்ள அயலானாக நடந்துகொள்கிறான்
உண்மையான நீதிமான் என்பவன் கடவுளது சட்டங்களைக் கடைப்பிடிப்பவனாக மட்டுமல்ல, ஆனால் அவரது குணாதிசயங்களைப் பின்பற்றுபவனாகவும் இருக்கவேண்டும் என இயேசுவின் நீதிக்கதை காட்டுகிறது. (எபேசியர் 5:1) உதாரணத்திற்கு, “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 10:34) இந்த விஷயத்தில் நாம் கடவுளைப் பின்பற்றுகிறோமா? அயலாருக்கு காட்டும் அன்பு, தேசம், கலாச்சாரம், மதம் என்ற எல்லா தடைகளையும் மீறிச்செல்ல வேண்டும் என மனதைத் தூண்டும் இந்த நீதிக்கதை காட்டுகிறது. ‘யாவருக்கும் நன்மைசெய்யக்கடவோம்’ என்றே கிறிஸ்தவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது; அதே சமூக அந்தஸ்தையும் இனத்தையும் தேசத்தையும் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அல்லது உடன் விசுவாசத்தாருக்கு மட்டுமே நன்மை செய்யவேண்டுமென சொல்லப்படவில்லை.—கலாத்தியர் 6:10.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 10:18-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
சாத்தான் பரலோகத்திலிருந்து மின்னல் வேகத்தில் விழுந்துவிட்டதை நான் பார்க்கிறேன்: இயேசு அநேகமாக ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார்; சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்படுவதற்கு முன்பே அவன் அப்படித் தள்ளப்பட்டதுபோல் தான் பார்த்ததாகச் சொன்னார். பரலோகத்தில் நடந்த போரைப் பற்றி வெளி 12:7-9-ல் சொல்லப்பட்டிருக்கிறது; சாத்தான் தள்ளப்பட்டதற்கும் மேசியானிய அரசாங்கம் பிறந்ததற்கும் சம்பந்தம் இருந்ததை அந்த வசனங்கள் காட்டுகின்றன. எதிர்காலத்தில் நடக்கவிருந்த அந்தப் போரில் சாத்தானும் அவனுடைய பேய்களும் கண்டிப்பாகத் தோற்றுப்போவார்கள் என்பதைத்தான் இயேசு இந்த வசனத்தில் வலியுறுத்தினார். ஏனென்றால், பேய்களை விரட்டும் சக்தியைப் பாவ இயல்புள்ள சாதாரண மனிதர்களுக்கு, அதாவது அந்த 70 சீஷர்களுக்கு, அப்போதுதான் கடவுள் கொடுத்திருந்தார்.—லூ 10:17.
w08-E 3/15 31 ¶11
லூக்கா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
10:18—“சாத்தான் பரலோகத்திலிருந்து மின்னல் வேகத்தில் விழுந்துவிட்டதை நான் பார்க்கிறேன்” என்று இயேசு தன்னுடைய 70 சீஷர்களிடம் எந்த அர்த்தத்தில் சொன்னார்? சாத்தான் ஏற்கெனவே பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டுவிட்டான் என்று இயேசு சொல்லவில்லை. இந்தச் சம்பவம் 1914-ல் கிறிஸ்து பரலோக ராஜாவாக ஆன பிறகுதான் நடந்தது. (வெளி. 12:1-10) ஒரு எதிர்கால சம்பவத்தை இறந்த காலத்தில் குறிப்பிடுவதன் மூலம், அந்தச் சம்பவம் நிச்சயமாக நடக்கும் என்பதை இயேசு வலியுறுத்திக் காட்டியதாகத் தெரிகிறது. இருந்தாலும், இதை நம்மால் ஆணித்தரமாகச் சொல்ல முடியாது.
லூ 11:5-9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
நண்பா, மூன்று ரொட்டிகளை எனக்குக் கடனாகக் கொடு: மத்தியக் கிழக்கு நாடுகளின் கலாச்சாரத்தில், உபசரிப்பது ஒரு கடமையாகக் கருதப்பட்டது. அந்தக் கடமையை நல்லபடியாகச் செய்ய வேண்டுமென்று மக்கள் விரும்பியதை இந்த உவமை காட்டுகிறது. உவமையில் வரும் நபர், தன்னுடைய விருந்தாளி எதிர்பாராத நேரத்தில், அதாவது நடுராத்திரியில், வந்துவிட்டபோதும் சாப்பிட அவருக்கு ஏதாவது கொடுத்தே ஆக வேண்டுமென்று நினைத்தார். அந்த நடுராத்திரி நேரத்தில் தன் நண்பனை எழுப்பியாவது உணவைக் கடனாக வாங்கிவர வேண்டுமென்று அவர் நினைத்தார்.
என்னைத் தொந்தரவு செய்யாதே: இந்த உவமையில் வரும் நண்பர் உதவி செய்யத் தயங்கியதற்குக் காரணம் அன்பு இல்லாததால் அல்ல, ஆனால் ஏற்கெனவே படுக்கப் போய்விட்டதால்தான். அந்தக் காலத்து வீடுகளில், அதுவும் ஏழைகளின் வீடுகளில், பெரும்பாலும் ஒரேவொரு பெரிய அறைதான் இருந்தது. கணவர் எழுந்துகொண்டால், தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகள் உட்பட, குடும்பத்திலிருந்த எல்லாருக்குமே தொந்தரவாக இருக்கும்.
விடாப்பிடியாகக் கேட்கிறான்: இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “அடக்கம் இல்லாமல்” அல்லது “வெட்கம் இல்லாமல்.” ஆனால், இந்த வசனத்தில் அது துணிந்து விடாப்பிடியாகக் கேட்பதைக் குறிக்கிறது. இந்த உவமையில் வரும் நபர், தனக்குத் தேவையானதைக் கேட்க வெட்கப்படவில்லை; அவர் விடாமல் தொடர்ந்து கேட்டார். அதேபோல், சீஷர்களும் விடாமல் ஜெபம் செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார்.—லூ 11:9, 10.
ஜூலை 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 12-13
“சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்”
லூ 12:6-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
சிட்டுக்குருவிகளை: கிரேக்கில், ஸ்ட்ரௌத்தியான் என்ற வார்த்தை குறுமை வடிவத்தில் இருக்கிறது; அப்படியென்றால், அது எந்தவொரு சின்னஞ்சிறு பறவையையும் குறித்திருக்கலாம். ஆனாலும், அது பெரும்பாலும் சிட்டுக்குருவிகளைக் குறித்தது. உணவுக்காக விற்கப்பட்ட பறவைகளிலேயே அவைதான் விலை குறைவாக இருந்தன.
லூ 12:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது: மனிதர்களுடைய தலையில் சராசரியாக 1,00,000-க்கும் அதிகமான முடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட நுணுக்கமான விவரங்களைக்கூட யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருப்பது, கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவர் மீதும் அவர் காட்டுகிற அளவுகடந்த அக்கறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
‘தேவனுடைய அன்பைவிட்டு நம்மை எதுவும் பிரிக்க முடியாது’
4 முதலாவதாக, கடவுள் தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவரையும் மதிப்புமிக்கவர்களாக கருதுகிறார் என பைபிள் நேரடியாக சொல்கிறது. உதாரணமாக, இயேசு இவ்வாறு கூறினார்: “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (மத்தேயு 10:29-31) முதல் நூற்றாண்டில் இயேசுவின் போதனைகளை செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்தியது என்பதை கவனியுங்கள்.
5 அடைக்கலான் குருவியைப் போய் யார் வாங்குவார் என நாம் யோசிக்கலாம். ஆனால் இயேசுவின் காலத்தில், அடைக்கலான் குருவியே உணவுக்காக விற்கப்பட்ட பறவைகளில் மிகவும் மலிவானது. சொற்ப மதிப்புள்ள ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகள் விற்கப்பட்டதைக் கவனியுங்கள். ஆனால் ஒருவர் இரண்டு காசுக்கு வாங்கினால், நான்கு அல்ல, ஐந்து அடைக்கலான் குருவிகள் அவருக்கு கிடைத்தது என இயேசு குறிப்பிட்டார். அந்த ஐந்தாவது குருவி, ஏதோ மதிப்பே இல்லாததுபோல சேர்த்துக் கொடுக்கப்பட்டது. ஒருவேளை மனிதருடைய பார்வையில் இப்படிப்பட்ட ஜீவராசிகள் அற்பமாக இருந்திருக்கலாம், ஆனால் படைப்பாளர் அவற்றை எவ்வாறு கருதினார்? “அவைகளில் ஒன்றாகிலும் [சேர்த்துக் கொடுக்கப்பட்ட ஒன்றும்கூட] தேவனால் மறக்கப்படுகிறதில்லை” என்று இயேசு கூறினார். (லூக்கா 12:6, 7) இப்பொழுது இயேசுவின் குறிப்பு நமக்கு நன்றாக புரியலாம். ஒரேவொரு அடைக்கலான் குருவி மீது யெகோவா இவ்வளவு மதிப்பு வைத்தால், ஒரு மனிதன்மீது எவ்வளவு மதிப்பு வைத்திருப்பார்! இயேசு விளக்கியபடி, நம்மைப் பற்றிய எல்லா விவரங்களும் யெகோவாவுக்குத் தெரியும். ஏன், நம்முடைய தலை மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறதே!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 13:24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
தீவிரமாக முயற்சி செய்யுங்கள்: வே.வா., “போராடிக்கொண்டே இருங்கள்.” இடுக்கமான கதவின் வழியாகப் போக முழுமூச்சோடு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத்தான் இயேசு வலியுறுத்தினார். “முடிந்தளவுக்கு அதிகமாக முயற்சி எடுங்கள்; எல்லா முயற்சியும் எடுங்கள்” என்றெல்லாம் இந்த வார்த்தைகளை இந்த வசனத்தில் மொழிபெயர்க்கலாம் என்று பல புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. “தீவிரமாக முயற்சி செய்யுங்கள்” என்பதற்கான கிரேக்க வினைச்சொல் ஏகோனீசோமேய். இது, விளையாட்டுப் போட்டிகளைக் குறிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்ட ஏகோன் என்ற கிரேக்க பெயர்ச்சொல்லோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல். எபி 12:1-ல், வாழ்க்கைக்கான கிறிஸ்தவ ‘ஓட்டப் பந்தயத்தை’ குறிப்பதற்கு இந்தப் பெயர்ச்சொல் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘போராட்டம்’ அல்லது ‘பாடுபடுதல்’ (பிலி 1:30; கொலோ 2:1; 1தீ 6:12; 2தீ 4:7) போன்ற பொதுப்படையான அர்த்தத்திலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. லூ 13:24-ல் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொல்லின் மற்ற வடிவங்கள், ‘போட்டியில் கலந்துகொள்வது’ (1கொ 9:25), ‘தீவிரமாக உழைப்பது’ (கொலோ 1:29; 1தீ 4:10), ‘போராடுவது’ (1தீ 6:12) என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிலருடைய கருத்துப்படி, இந்த வார்த்தை விளையாட்டுப் போட்டிகளோடு சம்பந்தப்பட்டிருப்பதால், பரிசை வெல்வதற்காக ஒரு விளையாட்டு வீரர் எப்படித் தன் சக்தியையெல்லாம் திரட்டி, நாடி நரம்பையெல்லாம் வருத்தி, மிகத் தீவிரமாக முயற்சி செய்வாரோ, அப்படியே நாமும் முயற்சி செய்ய வேண்டுமென இயேசு சொல்லியிருக்கலாம்.
லூ 13:33-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
கொல்லப்படுவது நடக்காத காரியம்: வே.வா., “கொல்லப்படுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.” மேசியா எருசலேமில் இறப்பார் என்று எந்த பைபிள் தீர்க்கதரிசனமும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தானி 9:24-26 அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாகத் தெரிகிறது. அதோடு, யூதர்கள் ஒரு தீர்க்கதரிசியை, முக்கியமாக மேசியாவை, கொல்வதாக இருந்தால் எருசலேமில்தான் அப்படிச் செய்வார்கள். 71 உறுப்பினர்களைக் கொண்ட உயர் நீதிமன்றமாகிய நியாயசங்கம் எருசலேமில்தான் கூடியது; பொய்த் தீர்க்கதரிசிகள் என்று குற்றம்சாட்டப்படுகிறவர்கள் அங்குதான் விசாரிக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, பலிகள் வழக்கமாகச் செலுத்தப்பட்டதும், பஸ்கா ஆட்டுக்குட்டி வெட்டப்பட்டதும் எருசலேமில்தான் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. கடைசியில், இயேசு சொன்னபடியே நடந்தது. எருசலேமில் இருந்த நியாயசங்கத்துக்கு முன்பாக அவர் கொண்டுபோகப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டார். இப்படி, அவர் எருசலேமில்தான், அதன் மதில்களிலிருந்து கொஞ்சத் தூரம் தள்ளிதான், ‘பஸ்கா ஆட்டுக்குட்டியாக’ இறந்தார்.—1கொ 5:7.
ஜூலை 30–ஆகஸ்ட் 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 14-16
“காணாமல்போன மகனைப் பற்றிய உவமை”
லூ 15:11-16-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
ஒரு மனுஷருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்: ஊதாரி மகன் (அல்லது, “காணாமல்போன மகன்”) பற்றிய உவமையின் சில அம்சங்கள் விசேஷமானவை. இயேசு சொன்ன பெரும்பாலான மற்ற உவமைகளைவிட இது பெரியது. குடும்ப உறவுகளைப் பற்றி அவர் விவரித்ததுதான் இதிலுள்ள ஒரு விசேஷ அம்சம். மற்ற உவமைகளில், வெவ்வேறு விதமான விதைகள், நிலங்கள் போன்ற உயிரற்ற பொருள்களைப் பற்றி இயேசு அடிக்கடி குறிப்பிட்டார்; அல்லது, ஒரு எஜமானுக்கும் அவருடைய அடிமைகளுக்கும் இடையிலுள்ள சம்பிரதாயமான உறவைப் பற்றிக் குறிப்பிட்டார். (மத் 13:18-30; 25:14-30; லூ 19:12-27) ஆனால் இந்த உவமையில், ஒரு அப்பாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் இருக்கிற நெருங்கிய உறவைச் சிறப்பித்துக்காட்டினார். இந்த உவமையைக் கேள்விப்படுகிற நிறைய பேருக்கு, அப்படிப்பட்ட அன்பான, கரிசனையான அப்பா இல்லாதிருக்கலாம். நம் பரலோகத் தகப்பன் பூமியிலுள்ள தன் பிள்ளைகளிடம் எந்தளவுக்குக் கரிசனையோடும் அன்போடும் நடந்துகொள்கிறார் என்பதை இந்த உவமை காட்டுகிறது. எப்போதும் தன்னோடு இருக்கிற பிள்ளைகளிடம் மட்டுமல்ல, வழிதவறிப் போன பிறகு மறுபடியும் தன்னிடம் வந்து சேருகிற பிள்ளைகளிடமும் அவர் அப்படித்தான் நடந்துகொள்கிறார்.
இளைய மகன்: திருச்சட்டத்தின்படி, முதல் மகனுக்கு எல்லாவற்றிலும் இரண்டு பங்கு கிடைத்தது. (உபா 21:17) அப்படியென்றால், இந்த உவமையில் வரும் மூத்த மகனுக்குக் கிடைத்த சொத்தில் பாதிதான் இளைய மகனுக்குக் கிடைத்தது.
மோசமான வாழ்க்கை: வே.வா., “வீணான (கட்டுப்பாடற்ற; மனம்போன) வாழ்க்கை.” இதனோடு சம்பந்தப்பட்ட ஒரு கிரேக்க வார்த்தை, எபே 5:18; தீத் 1:6; 1பே 4:4 ஆகிய வசனங்களில் ‘சீரழிக்கிற,’ ‘மோசமான’ என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கிரேக்க வார்த்தை, வீண் செலவுகள் செய்து வெட்டியாக வாழ்வதைக் குறிக்கலாம் என்பதால், இதை “ஊதாரித்தனமான வாழ்க்கை” என்று சில பைபிள்கள் மொழிபெயர்த்திருக்கின்றன.
ஊதாரித்தனமாகச் செலவழித்தான்: இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “(வெவ்வேறு திசைகளில்) சிதறடிப்பது.” (லூ 1:51; அப் 5:37) மத் 25:24, 26-ல் அது ‘புடைப்பது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வசனத்தில், வீணாகவும் முட்டாள்தனமாகவும் செலவழிப்பதைக் குறிக்கிறது.
பன்றிகளை மேய்க்க: திருச்சட்டத்தின்படி பன்றிகள் அசுத்தமான மிருகங்களாக இருந்தன. அதனால், அவற்றை மேய்ப்பதைக் கீழ்த்தரமான, மதிப்புக்குறைவான வேலையாக யூதர்கள் கருதினார்கள்.—லேவி 11:7, 8.
பன்றித் தீவனம்: நே.மொ., “கருப்பட்டி (கரோப்) காய்கள்.” கரோப் மரத்தின் காய்களுக்கு, ஊதாவும் பழுப்பும் கலந்த நிறத்தில் பளபளப்பான, வழுவழுப்பான தோல் இருக்கிறது. கிரேக்கில் இந்தக் காய்களின் பெயர் கிராட்டியான். இதன் நேரடி அர்த்தம், “சின்ன கொம்பு.” இந்தப் பெயருக்கு ஏற்றபடி, இந்தக் காய்கள் கொம்புபோல் வளைவாக இருக்கின்றன. இன்றுவரை இந்தக் காய்கள் குதிரைகளுக்கும், மாடுகளுக்கும், பன்றிகளுக்கும் தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த இளைய மகன் பன்றித் தீவனத்தைச் சாப்பிட ஏங்கியது, எந்தளவுக்கு மோசமான நிலையில் இருந்தான் என்பதைக் காட்டுகிறது.—முந்தின ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
லூ 15:17-24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
உங்களுக்கும் விரோதமாக: வே.வா., “உங்கள் பார்வையில்.” இதற்கான கிரேக்க முன்னிடைச்சொல் இனூப்பையான். இதன் நேரடி அர்த்தம், “முன்பாக; பார்வையில்.” இதுபோன்ற அர்த்தத்தில்தான் இந்த வார்த்தையை 1சா 20:1-ல் செப்டுவஜன்ட் பயன்படுத்தியுள்ளது. அந்த வசனத்தில், யோனத்தானிடம் தாவீது, “உங்களுடைய அப்பாவுக்கு விரோதமாக என்ன பாவம் செய்தேன்?” என்று கேட்பதாக செப்டுவஜன்ட் மொழிபெயர்த்திருக்கிறது.
கூலியாட்களில்: அந்த இளைய மகன் வீட்டுக்குத் திரும்பிப் போய், தன்னை மகனாக அல்லாமல் கூலியாட்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளும்படி தன் அப்பாவிடம் கேட்க நினைத்தான். கூலியாட்கள் அடிமைகளைப் போல எஜமானின் வீட்டில் தங்கி வேலை செய்யவில்லை. அவர்கள் கூலிக்கு வேலை செய்த வெளியாட்களாக இருந்தார்கள். பெரும்பாலும், அந்தந்த நாள் மட்டும் கூலிக்கு வேலை செய்தார்கள்.—மத் 20:1, 2, 8.
முத்தம் கொடுத்தார்: வே.வா., “பாசமாக முத்தம் கொடுத்தார்.” ஃபைலேயோ என்ற கிரேக்க வினைச்சொல்லின் வலிமையான வடிவம்தான் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வினைச்சொல் சிலசமயங்களில் ‘முத்தம் கொடு’ (மத் 26:48; மாற் 14:44; லூ 22:47) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ‘பாசம் வை’ (யோவா 5:20; 11:3; 16:27) என்ற அர்த்தத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உவமையில் வரும் அப்பா, மனம் திருந்திய தன் மகனை அந்தளவுக்கு அன்போடும் பாசத்தோடும் வரவேற்றதன் மூலம் அவனை மறுபடியும் ஏற்றுக்கொண்டதைக் காட்டினார்.
எனக்கு அருகதையில்லை: சில கையெழுத்துப் பிரதிகளில், “உங்களுடைய கூலியாட்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்ற வார்த்தைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நம்பகமான பல பழங்கால கையெழுத்துப்பிரதிகளில் அவை இல்லை. இந்த வசனம் லூ 15:19-ஆம் வசனத்துக்கு இசைவாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள்.
அங்கியை[யும்] . . . மோதிரத்தையும் . . . செருப்பையும் போட்டுவிடுங்கள்: இந்த அங்கி சாதாரண அங்கி அல்ல, முதல்தரமான அங்கியாக இருந்தது. ஒருவேளை, முக்கியமான ஒரு விருந்தாளிக்குக் கொடுக்கப்பட்ட, நுணுக்கமான தையல் வேலைப்பாடு செய்யப்பட்ட அங்கியாக இருந்திருக்கலாம். மோதிரத்தை மகனின் விரலில் போட்டுவிடுவது, அப்பாவின் கருணையையும் பாசத்தையும் காட்டுகிறது; அதோடு, திரும்பிவந்த மகனுக்குக் கொடுக்கப்பட்ட கௌரவத்தையும், மதிப்பையும், அந்தஸ்தையும் காட்டுகிறது. அடிமைகள் பொதுவாக மோதிரத்தையும் செருப்புகளையும் போட்டுக்கொள்ளவில்லை. அதனால், இதையெல்லாம் தன் மகனுக்குக் கொடுப்பதன் மூலம், அவனைத் தன் குடும்பத்தில் ஒருவனாகவே மறுபடியும் ஏற்றுக்கொண்டதை அந்த அப்பா காட்டினார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
லூ 14:26-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
வெறுக்கவில்லை: பைபிளில் ‘வெறுப்பு’ என்ற வார்த்தை பல அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக, வன்மத்தினால் தூண்டப்படும் பகையை அது குறிக்கலாம்; மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய அது ஒருவரைத் தூண்டும். இரண்டாவதாக, யாராவது ஒருவரை அல்லது ஏதோ ஒன்றை அடியோடு தவிர்க்கும் அளவுக்குக் கடுமையாக வெறுப்பதைக் குறிக்கலாம். மூன்றாவதாக, வெறுமனே குறைவாக அன்பு காட்டுவதைக் குறிக்கலாம். உதாரணத்துக்கு, யாக்கோபு லேயாளை வெறுத்ததாக எபிரெய மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது; ஆனால், ராகேலைவிட லேயாளைக் குறைவாக நேசித்தார் என்பதுதான் அதன் அர்த்தம். (ஆதி 29:31; உபா 21:15) அந்த அர்த்தத்தில்தான் மற்ற பழங்கால யூதப் புத்தகங்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றன. அதனால், சீஷர்கள் தங்களையோ தங்கள் குடும்பத்தாரையோ வெறுக்க வேண்டுமென்று இயேசு சொல்லவில்லை. அப்படிச் சொல்வது மற்ற வசனங்களுக்கு முரணாக இருக்கும். (ஒப்பிடுங்கள்: மாற் 12:29-31; எபே 5:28, 29, 33) அதனால் இந்த வசனத்தில், ‘வெறுக்கவில்லை’ என்பதை ‘குறைவாக நேசிக்கவில்லை’ என்று மொழிபெயர்க்கலாம்.
உண்மையான செல்வங்களை நாடுங்கள்!
7 லூக்கா 16:10-13-ஐ வாசியுங்கள். இயேசுவின் உதாரணத்தில் வரும் அந்த நிர்வாகி, தன் சுயநலத்துக்காக நண்பர்களைச் சம்பாதித்துக்கொண்டான். ஆனால், தன்னைப் பின்பற்றுபவர்கள் சுயநலமற்ற காரணத்துக்காக பரலோகத்தில் நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொன்னார். அந்த உதாரணத்துக்கு அடுத்து வருகிற வசனங்கள், ‘அநீதியான செல்வங்களை’ பயன்படுத்துவதை கடவுளுக்கு உண்மையாக இருப்பதோடு சம்பந்தப்படுத்திப் பேசுகின்றன. அநீதியான செல்வங்களை நாம் பயன்படுத்துவதை வைத்து, நாம் கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்; இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இயேசு விரும்பினார். அப்படியென்றால், கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
8 கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான ஒரு வழி, உலகம் முழுவதும் நடக்கும் பிரசங்க வேலைக்கு நன்கொடை கொடுப்பதற்காக நம் செல்வங்களைப் பயன்படுத்துவதாகும். (மத். 24:14) இந்தியாவில் இருக்கும் ஒரு சிறுமி, ஒரு சிறிய பணப்பெட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக காசுகளைச் சேர்த்து வைத்தாள். தனக்கென்று அவள் பொம்மைகளைக்கூட வாங்கவில்லை. அந்தப் பெட்டி நிறைந்தவுடன், அந்த எல்லா காசுகளையும் பிரசங்க வேலைக்காகக் கொடுத்துவிட்டாள். இந்தியாவில், தென்னந்தோப்பு வைத்திருக்கும் ஒரு சகோதரர், மலையாள மொழிபெயர்ப்பு அலுவலகத்துக்கு நிறைய தேங்காய்களை நன்கொடையாகக் கொடுத்தார். அந்த அலுவலகத்துக்குத் தேங்காய் தேவைப்பட்டதால், தான் கொடுக்கும் பணத்தைவிட தான் கொடுக்கும் தேங்காய் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும் என்று அவர் நினைத்தார். இதுதான் ‘ஞானமான’ செயல்! அதே போல, கிரீஸில் இருக்கும் சகோதரர்கள், ஒலிவ எண்ணெய், பாலாடைக் கட்டி ஆகிய பொருள்களையும் மற்ற உணவுப் பொருள்களையும் பெத்தேல் குடும்பத்துக்குத் தவறாமல் கொடுத்துவருகிறார்கள்.