வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
நவம்பர் 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோசுவா 18-19
“தேசத்தைப் பிரித்த விதத்தில் யெகோவாவின் ஞானம் பளிச்சிடுகிறது”
it-1-E பக். 359 பாரா 1
தேசத்தின் எல்லைகள்
குலுக்கல் விழுவதை வைத்தும், ஒரு கோத்திரம் எவ்வளவு பெரியது என்பதை வைத்தும் நிலத்தைப் பிரித்தார்கள். ஒவ்வொரு கோத்திரத்துக்கும் தோராயமாக எந்த இடத்தில் நிலம் கிடைக்கும் என்பதைக் குலுக்கல் போட்டு தெரிந்துகொண்டார்கள். உதாரணத்துக்கு, ஒவ்வொரு கோத்திரத்துக்கும் வடக்குப் பக்கம் நிலம் கிடைக்குமா, தெற்கு பக்கமா, கிழக்கு பக்கமா, மேற்கு பக்கமா, கடற்கரை ஓரமாகவா அல்லது மலைப்பகுதியிலா என்று குலுக்கல் போட்டு தெரிந்துகொண்டார்கள். குலுக்கல் மூலமாக கிடைத்த பதில் யெகோவாவிடமிருந்து வந்ததால் கோத்திரங்களுக்குள் போட்டி பொறாமையோ சண்டை சச்சரவோ வராதபடி பார்த்துக்கொள்ள முடிந்தது. (நீதி 16:33) இந்த விஷயங்களை யெகோவா வழிநடத்தியதால், யாக்கோபு தன்னுடைய மரணப்படுக்கையில் ஒவ்வொரு கோத்திரத்தை பற்றியும் சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது.—ஆதி 49:1-33.
it-1-E பக். 1200 பாரா 1
பங்கு
பங்காக கிடைத்த நிலங்கள். ஆதியாகமம் 49:5, 7-ல் இருக்கும் யாக்கோபின் தீர்க்கதரிசனம் காட்டுவதுபோல், சிமியோன் வம்சத்தாருக்கும் லேவி வம்சத்தாருக்கும் தனித்தனி பங்கு கிடைக்கவில்லை. சிமியோன் வம்சத்தாருக்கு யூதா வம்சத்தார் நடுவில் பங்கு கிடைத்தது. (யோசு 19:1-9) லேவி வம்சத்தாருக்கு 48 நகரங்கள் கிடைத்தன. ஆனால், அந்த நகரங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் இஸ்ரவேல் தேசம் முழுவதும் ஆங்காங்கே இருந்தன.
it-1-E பக். 359 பாரா 2
தேசத்தின் எல்லைகள்
ஒவ்வொரு கோத்திரத்துக்கும் எங்கே பங்கு தர வேண்டும் என்று குலுக்கல் முறையில் முடிவான பிறகு, எவ்வளவு பெரிய இடம் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்ய வேண்டியிருந்தது. ஒரு கோத்திரம் எவ்வளவு பெரியது என்பதை வைத்து அதை முடிவு செய்தார்கள். “நீங்கள் அந்தத் தேசத்தை அந்தந்த கோத்திரங்களுக்கும் குடும்பங்களுக்கும் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும். ஒரு தொகுதியில் நிறைய பேர் இருந்தால் அதிக நிலத்தைக் கொடுக்க வேண்டும், கொஞ்சம் பேர் மட்டும் இருந்தால் கொஞ்சம் நிலத்தை மட்டும் கொடுக்க வேண்டும். குலுக்கல் முறையில் ஒரு கோத்திரத்துக்கு எந்த இடம் விழுகிறதோ அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்” என்று பைபிள் சொன்னது. (எண் 33:54) அப்படியென்றால், குலுக்கல் முறையில் ஒரு கோத்திரத்துக்கு எந்த இடம் என்று முடிவான பிறகு, அந்த இடம் மாறாது. ஆனால், எவ்வளவு பெரிய இடம் கொடுக்க வேண்டும் என்பது மாறலாம். இப்படித்தான், யூதாவுக்குக் கிடைத்த பங்கு ரொம்ப பெரிதாக இருந்ததால் அவர்களுடைய பங்கிலிருந்த சில இடங்களை சிமியோன் கோத்திரத்துக்குக் கொடுத்தார்கள்.—யோசு 19:9.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 359 பாரா 5
தேசத்தின் எல்லைகள்
யோர்தானுக்கு மேற்கே இருந்த பகுதிகளை ஏழு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றாமல் போனதற்கு பைபிள் வல்லுநர்கள் நிறைய காரணங்களைச் சொல்கிறார்கள். அந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே நிறைய பகுதிகளைக் கைப்பற்றி, ஏராளமான பொருள்களைச் சேர்த்திருந்ததால் அந்த இடங்களைக் கைப்பற்றாமல் இருந்திருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அதோடு, கானானியர்களால் இப்போதைக்கு தங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால், யோர்தானுக்கு மேற்கே இருந்த பகுதிகளை மெதுவாக கைப்பற்றிக்கொள்ளலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இன்னொரு காரணம் என்னவென்றால், எதிரிகள் நிறைய பேர் இருந்தார்கள்; அவர்கள் பலசாலிகளாகவும் இருந்தார்கள். அவர்களோடு சண்டை போடுவது அவ்வளவு சுலபம் இல்லை என்று யோர்தானுக்கு மேற்கே இருந்த இஸ்ரவேலர்கள் நினைத்திருக்கலாம். அதனால், மெதுவாக கைப்பற்றிக்கொள்ளலாம் என்று விட்டிருக்கலாம். (யோசு 13:1-7) அதோடு, அவர்கள் முன்பு கைப்பற்றிய இடங்களைப் பற்றித் தெரிந்திருந்ததைவிட, இனிமேல் கைப்பற்ற வேண்டிய இடங்களைப் பற்றி அவர்களுக்கு அவ்வளவாக தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால்கூட கைப்பற்றாமல் விட்டிருக்கலாம்.
நவம்பர் 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோசுவா 20-22
“தவறாகப் புரிந்துகொண்டார்கள்—நமக்கு என்ன பாடம்?”
உங்கள் துணையுடன் பேச்சுத்தொடர்பு கொள்ள வழிகள்
வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் தவறான அபிப்பிராயங்களைத் தவிர்க்கலாம். இஸ்ரவேலருடைய சரித்திரத்தின் ஆரம்பத்தில், ரூபன், காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் யோர்தான் நதிக்கு கிழக்கே வசித்து வந்தார்கள்; இவர்கள் யோர்தானின் ஓரத்தில் ‘ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டினார்கள்.’ நதிக்கு மேற்கே இருந்த மற்ற கோத்திரத்தார் இதை தவறாகப் புரிந்துகொண்டார்கள்; தங்களுடைய சகோதரர்கள் விசுவாசதுரோகம் செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, இந்தக் “கலகக்காரர்களை” எதிர்த்துப் போரிட தயாரானார்கள். ஆனால் போரிடச் செல்வதற்கு முன்பு, கிழக்கே இருந்த கோத்திரத்தாருடன் பேச்சு வார்த்தை நடத்த ஒரு குழுவை அனுப்பிவைத்தார்கள். எவ்வளவு ஞானமான செயல்! அவர்கள் அந்தப் பலிபீடத்தைக் கட்டியது சட்ட விரோதமாய் தகன பலியிடுவதற்கோ போஜன பலியிடுவதற்கோ அல்ல என்பதை தெரிந்துகொண்டார்கள். மேற்கே இருந்த கோத்திரத்தார் பிற்காலத்தில் தங்களிடம் வந்து, ‘யெகோவாவிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லிவிடுவார்களோ’ என்று பயந்துதான் கிழக்கே இருந்த கோத்திரத்தார் அந்தப் பலிபீடத்தை கட்டினார்கள். அவர்களும் யெகோவாவை வழிபடுகிறவர்கள் என்பதற்கு சாட்சியாக அந்தப் பலிபீடம் இருந்தது. (யோசுவா 22:10-29) ஆகவே, அந்தப் பலிபீடத்திற்கு “சாட்சி” என பெயரிட்டார்கள்; யெகோவாவே உண்மையான கடவுள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு அது ஒரு சாட்சியாக இருந்திருக்கலாம்.—யோசுவா 22:34, NW அடிக்குறிப்பு.
‘சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களை நாடிச்செல்லுங்கள்’
அவர்கள் குற்றம் செய்ததற்குப் போதிய அத்தாட்சி இருந்ததாகவும், திடீரென்று போய் அவர்களைத் தாக்கினால் தங்கள் மத்தியில் உயிர்ச்சேதம் அதிகம் ஏற்படாது என்றும் இஸ்ரவேலரில் சிலர் நினைத்திருக்கலாம். என்றாலும், யோர்தான் நதியின் மேற்குப் பகுதியிலிருந்த கோத்திரத்தார் அவசரப்பட்டு எதையாவது செய்துவிடுவதற்குப் பதிலாக, பிரச்சினையைப் பற்றி தங்கள் சகோதரர்களோடு பேச ஆட்களை அனுப்பினார்கள். அந்த ஆட்கள் போய், “நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, . . . இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?” என்று கேட்டார்கள். உண்மையில், அந்தக் கோத்திரத்தார் யெகோவாவுக்குத் துரோகம் செய்யும் நோக்கத்தோடு அந்தப் பீடத்தைக் கட்டியிருக்கவில்லை. இருந்தபோதிலும், தங்கள்மீது குற்றம் சுமத்தியவர்களிடம் என்ன பதில் சொன்னார்கள்? முகத்தில் அடித்தாற்போல் பேசினார்களா, அல்லது முகம்கொடுத்துப் பேச மறுத்தார்களா? உண்மையில் அவர்கள் சாந்தமாகப் பதில் சொன்னார்கள்; யெகோவாவைச் சேவிக்கும் ஆசையில்தான் அப்படிச் செய்ததாய்த் தெளிவாக எடுத்துச்சொன்னார்கள். இப்படிப் பேசியதால், கடவுளோடு இருந்த உறவையும் காத்துக்கொள்ள முடிந்தது, ஏராளமான உயிர்களையும் காத்துக்கொள்ள முடிந்தது. அவர்கள் சாந்தமாகப் பேசியதால் பிரச்சினை தீர்ந்தது, மீண்டும் சமாதானம் பிறந்தது.—யோசு. 22:13–34.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 402 பாரா 3
கானான்
இஸ்ரவேலர்களைச் சுற்றியிருந்த எதிரிகள் ஏற்கெனவே ரொம்ப பயந்துபோய் இருந்ததால், அவர்களால் இஸ்ரவேலர்களுக்கு எந்த ஆபத்தும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதோடு, கானானியர்களை “கொஞ்சம் கொஞ்சமாகத்தான்” துரத்தியடிக்க போவதாக யெகோவா சொல்லியிருந்தார். ஒருவேளை, யெகோவா அவர்களை ஒரேயடியாக துரத்திவிட்டால், இஸ்ரவேலர்களால் அவ்வளவு சீக்கிரம் முழு தேசத்திலும் குடியேற முடியாமல் போய்விடும். அதனால், காட்டு மிருகங்கள் பெருகி அவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக ஆக வாய்ப்பு இருந்தது. (யாத் 23:29, 30; உபா 7:22)
நவம்பர் 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோசுவா 23-24
“இஸ்ரவேலர்களுக்கு யோசுவாவின் கடைசி வார்த்தைகள்”
it-1-E பக். 75
ஒப்பந்தம்
சர்வ வல்லமையுள்ள கடவுளாக இருக்கிற யெகோவாதான் கானான் தேசத்தைக் கைப்பற்றுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்திருந்தார். அதனால், அந்நியர்களாக அவர்கள் அந்தத் தேசத்துக்குள் நுழைய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அங்கே இருந்தவர்களோடு எந்தவொரு ஒப்பந்தம் பண்ண வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. அதனால்தான், கானானியர்களோடு எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டாம் என்று யெகோவா தெளிவாகச் சொல்லியிருந்தார். (யாத் 23:31-33; 34:11-16) முக்கியமாக, அந்தத் தேசத்தில் இருந்தவர்களோடு திருமண ஒப்பந்தம் பண்ணக் கூடாது என்று சொல்லியிருந்தார். ஒருவேளை அப்படித் திருமணம் செய்தால், அவர்களுடைய மனைவிகள் மட்டுமல்ல அவர்களுடைய சொந்தக்காரர்களும் யெகோவாவை வணங்காதவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால், காலப்போக்கில் கானானியர்களுடைய பொய் மத பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் இஸ்ரவேலர்கள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பிறகு, யெகோவாவின் பாதுகாப்பும் ஆசீர்வாதமும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.—உபா 7:2-4; யாத் 34:16; யோசு 23:12, 13.
யெகோவாவின் வார்த்தை ஒருபோதும் தவறிப்போவதில்லை
19 நாம் கண்ணாரக் கண்டவற்றிலிருந்து, “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை . . . அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை” என்று நாமும் உறுதியாகச் சொல்லலாம். (யோசுவா 23:14) ஆம், தம்முடைய மக்களை யெகோவா விடுவிக்கிறார், பாதுகாக்கிறார், பராமரிக்கிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றாவது குறித்த காலத்தில் நிறைவேறவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? சொல்லவே முடியாது. எனவே, நாம் ஞானமாக கடவுளுடைய நம்பகமான வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறோம்.
20 எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? இன்பமயமாய் காட்சியளிக்கும் பூங்காவன பூமியில் நம்மில் அநேகர் வாழ்வோம் என்ற நம்பிக்கையை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். நம்மில் சிலர், பரலோகத்தில் கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்கிற நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். நமக்கு எந்த நம்பிக்கை இருந்தாலும், யோசுவாவைப்போல விசுவாசத்தில் நிலைத்திருக்க நமக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. நம்முடைய நம்பிக்கை நிஜமாகும் அந்த நாள் வரும். அப்பொழுது, யெகோவா கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நினைவுபடுத்தி, “அவைகளெல்லாம் . . . நிறைவேறிற்று” என்று நாமும் சொல்வோம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யோசுவா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
24:2—ஆபிரகாமின் தகப்பன் தேராகு விக்கிரகங்களை வழிபடுபவராக இருந்தாரா? ஆரம்பத்தில், தேராகு யெகோவாவை வழிபடுபவராக இல்லை. ஊர் பட்டணத்தில் பிரபலமாக இருந்த சின் என்ற சந்திரக் கடவுளை அவர் வழிபட்டிருக்கலாம். யூத பாரம்பரியம் சொல்கிறபடி, தேராகு விக்கிரகங்களை உண்டாக்குபவராகவும் இருந்திருக்கலாம். என்றாலும், கடவுளுடைய கட்டளைப்படி ஊர் பட்டணத்தை விட்டு ஆபிரகாம் கிளம்பும்போது தேராகுவும் அவருடன் சேர்ந்து ஆரானுக்குப் போகிறார்.—ஆதியாகமம் 11:31.
நவம்பர் 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நியாயாதிபதிகள் 1-3
“ஒரு வீரனின் கதை”
ஒடுக்குகிறவர்களுடைய நுகத்தை ஏகூத் முறிக்கிறார்
ஏகூத்தின் திட்டங்கள் வெற்றி பெற்றன, அவருடைய சூழ்ச்சியாலும் அல்ல, விரோதியுடைய திறமையின்மையாலும் அல்ல. கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேற எந்தவொரு மனித சக்தியும் தேவையில்லை. ஏகூத் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், தமது ஜனங்களை விடுவிக்க அபார சக்தி படைத்த கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக செயல்பட்டபோது அவருடைய துணை அவருக்கு இருந்ததால்தான். கடவுளே ஏகூத்தை எழும்பப் பண்ணினார், ஆகவே ‘கர்த்தர் அவர்களுக்கு [தம்முடைய மக்களுக்கு] நியாயாதிபதிகளை எழும்பப் பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்தார்.’—நியா. 2:18; 3:15.
ஒடுக்குகிறவர்களுடைய நுகத்தை ஏகூத் முறிக்கிறார்
முதலில் ஏகூத் தனக்காக “வாள் ஒன்றைச் செய்துகொண்டார்”—அது தனது ஆடைகளுக்குள் மறைத்து வைப்பதற்கேற்ற இருபுறமும் கருக்குள்ள சிறிய வாள். தான் சோதனை செய்யப்படலாம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கலாம். பொதுவாக வாள்களை உடம்பின் இடது பக்கத்தில் அணிவது வழக்கம், அதனால் வலதுகை பழக்கமுடையவர்கள் சட்டென்று அவற்றை எடுக்க முடியும். ஏகூத் இடதுகை பழக்கமுடையவராக இருந்ததால், தனது ஆயுதத்தை “தம் ஆடைகளுக்கு அடியில் வலது தொடையில் கட்டி வைத்துக்கொண்டார்;” பொதுவாக ராஜாவின் சேவகர்கள் உடலின் அந்தப் பகுதியை சோதனை செய்ய மாட்டார்கள். ஆகவே, எந்தத் தடங்கலுமின்றி ‘மோவாபின் மன்னன் எக்லோனுக்குக் கப்பம் செலுத்த’ அரண்மனைக்குள் நுழைய முடிந்தது.—நியாயாதிபதிகள் 3:16, 17, பொ.மொ.
எக்லோனின் அரண்மனையில் ஆரம்பத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்படவில்லை. ஏகூத் “கப்பத்தைச் செலுத்தி முடித்ததும், கப்பப் பொருள்களைச் சுமந்துவந்த மக்களை அவர் அனுப்பிவிட்டார்” என்று மட்டுமே பைபிள் சொல்கிறது. (நியாயாதிபதிகள் 3:18, பொ.மொ.) ஏகூத் அந்தக் கப்பத்தைச் செலுத்தியபின், எக்லோனின் இருப்பிடத்திலிருந்து பாதுகாப்பான தூரம் வரை கப்பத்தை சுமந்துவந்த ஆட்களுடன் சென்று அவர்களை அனுப்பிவிட்டு, திரும்பவும் எக்லோன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார். ஏன்? அவருடன் வந்த ஆட்கள் அவருக்கு பாதுகாப்புக்காக வந்தார்களா, அல்லது கெளரவத்திற்காக வந்தார்களா, அல்லது ஒருவேளை வெறுமனே அந்தக் கப்பத்தை சுமப்பதற்காக வந்தார்களா? தனது திட்டத்தை நிறைவேற்றும் முன் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடும்படி அவர் விரும்பினாரா? அவருடைய நோக்கம் எதுவாக இருந்திருந்தாலும்சரி, ஏகூத் தனியாக தைரியத்துடன் சென்றார்.
“[ஏகூத்] கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்ல வேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான்.” எக்லோன் இருந்த இடம்வரை எப்படி நுழைந்து வந்தார் என்பது பைபிளில் விளக்கப்படவில்லை. சேவகர்கள் சந்தேகப்பட்டிருக்க வேண்டாமா? ஒரேவொரு இஸ்ரவேலன் வந்ததால் தங்களுடைய பிரபுவுக்கு எந்த ஆபத்துமில்லை என அவர்கள் நினைத்தார்களா? ஏகூத் தனியாக வந்ததால் தனது நாட்டவரை காட்டிக்கொடுக்க வந்திருக்கலாமென்ற எண்ணத்தை உருவாக்கியதா? எதுவாக இருந்தாலும்சரி, ராஜாவை தனியாக சந்திப்பதற்கு விரும்பினார், அந்த வாய்ப்பும் கிடைத்தது.—நியாயாதிபதிகள் 3:19.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நியாயாதிபதிகள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
2:10-12. ‘யெகோவா செய்த சகல உபகாரங்களையும் மறக்காமல்’ இருப்பதற்கு பைபிளை நாம் தவறாமல் படிக்க வேண்டும். (சங்கீதம் 103:2) தங்களுடைய பிள்ளைகளின் இருதயத்தில் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை பெற்றோர் ஆழப் பதிய வைக்க வேண்டும்.—உபாகமம் 6:6-9.
நவம்பர் 29–டிசம்பர் 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நியாயாதிபதிகள் 4-5
“இரண்டு பெண்களை யெகோவா பயன்படுத்தினார்”
w15-E 8/1 பக். 13 பாரா 1
“இஸ்ரவேலின் தாயாக நான் வந்தேன்”
சிசெரா! இந்தப் பெயரைக் கேட்டபோதெல்லாம் இஸ்ரவேலர்கள் குலைநடுங்கிப் போனார்கள். கானானியர்களின் மதமும் சரி கலாச்சாரமும் சரி, காட்டுத்தனமாக இருந்தது. குழந்தைகளை அவர்கள் பலி கொடுத்தார்கள். கோயில்களில் விபச்சாரம் செய்தார்கள். இப்படிப்பட்ட ஒரு தேசத்தைச் சேர்ந்த படைத் தளபதியும் படையும் இஸ்ரவேல் தேசத்தை ஆட்டிப்படைத்தபோது நிலைமை எப்படி இருந்திருக்கும்? தெபொராள் பாடிய பாட்டிலிருந்து இஸ்ரவேலில் இருந்த நிலைமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. யாராலும் நிம்மதியாகப் பயணம் செய்யவே முடியவில்லை. கிராமவாசிகள் படாதபாடு பட்டார்கள். (நியாயாதிபதிகள் 5:6, 7) பயந்துபோய் காடுகளிலும் மலைகளிலும் மக்கள் பதுங்கி வாழ்ந்தார்கள். விவசாயம் செய்வதற்கும் சுற்றுச்சுவர் இல்லாத கிராமங்களில் வாழ்வதற்கும் மக்கள் பயந்தார்கள். யாராவது தங்களைத் தாக்கிவிடுவார்களோ, பிள்ளைகளைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்களோ, மனைவிமக்களை கற்பழித்துவிடுவார்களோ என்று நினைத்து சாலைகளில் பயணம் செய்யக்கூட பயந்தார்கள்.
w15-E 8/1 பக். 13 பாரா 2
“இஸ்ரவேலின் தாயாக நான் வந்தேன்”
20 வருஷங்கள் இஸ்ரவேலர்கள் பயந்துபயந்து வாழ்ந்தார்கள். அவர்கள் திருந்தும் வரைக்கும், அதாவது தெபொராளும் பாராக்கும் பாடியதுபோல், ‘கடைசியில் தெபொராள் . . . இஸ்ரவேலின் தாயாக வரும்’ சமயம்வரைக்கும், யெகோவா இஸ்ரவேலர்களை அப்படியே விட்டிருந்தார். (நியாயாதிபதிகள் 4:3, 6, 7; 5:7) லபிதோத்தின் மனைவியான தெபொராள் உண்மையிலேயே ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால், அடையாள அர்த்தத்தில் அவரை தாய் என்று பைபிள் சொல்கிறது. ஒரு தாயைப் போலிருந்து இஸ்ரவேல் தேசத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யெகோவா அவருக்குக் கொடுத்தார். சிசெராவை எதிர்த்துப் போருக்குப் போகும்படி நியாயாதிபதியான பாராக்கிடம் சொல்கிற பொறுப்பையும் கொடுத்தார்.—நியாயாதிபதிகள் 4:3, 6, 7; 5:7.
w15-E 8/1 பக். 15 பாரா 2
“இஸ்ரவேலின் தாயாக நான் வந்தேன்”
சிசெரா ஓய்வு எடுப்பதற்கு யாகேல் இடம் கொடுத்தாள். அவன் யாகேலிடம், “யாராவது என்னை தேடி வந்தால், ‘நான் இங்கே இல்லை’ என்று சொல்லிவிடு” என்று சொன்னான். அவன் படுத்ததும் அவள் அவனுக்கு போர்த்திவிட்டாள். அவன் தண்ணீர் கேட்டபோது பால் கொண்டுவந்து கொடுத்தாள். அதைக் குடித்துவிட்டு, அவன் நன்றாகத் தூங்கிவிட்டான். யாகேல் இப்போது சட்டென செயல்பட வேண்டியிருந்தது. உடனடியாக, கூடார ஆணியையும் சுத்தியையும் கையில் எடுத்தாள். பொதுவாக, கூடாரங்களில் வாழ்ந்த பெண்கள் இதையெல்லாம் திறமையாக பயன்படுத்த தெரிந்துவைத்திருந்தார்கள். சிசெராவின் தலைமாட்டிற்கு யாகேல் மெல்லமெல்ல போகிறாள். யெகோவாவின் சார்பாக தண்டனை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது! ஒரு விநாடி தயங்கினாலும் ஆபத்துதான்! நிறைய வருஷங்களாக இஸ்ரவேலர்களை சிசெரா எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினான் என்று அந்த நேரத்தில் யோசித்தாளா? அல்லது, யெகோவாவின் சார்பாக செயல்படும் பாக்கியம் கிடைத்திருப்பதைப் பற்றி யோசித்தாளா? நமக்குத் தெரியாது! ஆனால், அவள் உடனடியாக செயல்பட்டாள் என்று நமக்குத் தெரியும். சிசெராவை தீர்த்துக்கட்டினாள்!—நியாயாதிபதிகள் 4:18-21; 5:24-27.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யோசுவா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
5:20—பாராக்கின் சார்பாக வானத்து நட்சத்திரங்கள் எப்படிப் போரிட்டன? இது தேவதூதர்களுடைய உதவி கிடைத்ததையோ, சிசெராவின் ஞானிகள் நினைத்தபடி கெட்ட சகுனத்திற்கு அடையாளமாக விண்கற்கள் விழுந்ததையோ, சோதிட முன்கணிப்புகளை ஒருவேளை சிசெரா நம்பியிருந்தது பொய்யாகிப் போனதையோ குறிப்பதாக பைபிள் சொல்வதில்லை. ஆனால் ஏதோவொரு விதத்தில் கடவுள் தலையிட்டார் என்பதில் சந்தேகமில்லை.
டிசம்பர் 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நியாயாதிபதிகள் 6-7
“உனக்கு இருக்கிற பலத்தோடு நீ புறப்பட்டுப் போ”
கடவுள் தரும் நெறிகள் உங்கள் நன்மைக்கு
பூர்வகால எபிரெயர்களுக்கு நியாயாதிபதியாக இருந்தவர்தான் கிதியோன்; இவர் தன்னைப் பற்றி சரியான மனப்பான்மையை வைத்திருந்தவர், தன்னுடைய மதிப்பை சரியாக எடைபோட்டவர். அவர் இஸ்ரவேலின் தலைவர் பதவியை நாடிச் செல்லவில்லை. ஆனால் அந்த ஸ்தானத்திற்கு நியமிக்கப்பட்டபோது, அதற்குத் தான் தகுதியற்றவன் என சுட்டிக்காட்டினார். “மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” என்று சொன்னார்.—நியாயாதிபதிகள் 6:12-16.
‘யெகோவாவுடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்’
இப்பொழுது மீதியானியருக்கு எப்பேர்ப்பட்ட திகில் ஏற்படுகிறது! திடீரென 300 மண்பானைகளும் உடைய, 300 எக்காளங்களும் முழங்க, 300 ஆட்களும் ஆரவாரம் செய்ய நிசப்தமான அந்த இரவின் அமைதி குலைகிறது. முக்கியமாக, ‘யெகோவாவுடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்’ என்ற சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, மீதியானியர் கூக்குரலிட ஆரம்பிக்கிறார்கள். அந்தக் குழப்பத்தில், யார் விரோதி யார் நண்பன் என அவர்களால் அடையாளம் கண்டுபிடிப்பது அசாத்தியமே. விரோதிகள் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் பட்டயத்தால் வெட்டி சாய்க்கும்படி கடவுள் செய்கையில் அந்த 300 பேரும் தங்களுடைய இடத்திலேயே ஆடாமல் அசையாமல் நிற்கிறார்கள். பாளயத்தில் இருந்தவர்கள் முறியடிக்கப்படுகிறார்கள், தப்பிச்செல்வது தடுக்கப்படுகிறது, மீதமுள்ளோர் பிடிக்கப்படுகிறார்கள். இதனால் மீதியானியருடைய அச்சுறுத்தல் நிரந்தரமாக நீக்கப்படுகிறது. வெகு காலமாக இருந்துவந்த கொடூர ஆக்கிரமிப்பு கடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறது.—நியாயாதிபதிகள் 7:19-25; 8:10-12, 28.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நியாயாதிபதிகள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
6:25-27. எதிர்க்கிறவர்களின் கோபத்தை அநாவசியமாக கிளறிவிடாதிருக்கும் விஷயத்தில் கிதியோன் விவேகமாக நடந்துகொண்டார். நற்செய்தியைப் பிரசங்கிக்கையில், நாம் பேசும் விதம் மற்றவர்களைத் தேவையில்லாமல் புண்படுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
டிசம்பர் 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நியாயாதிபதிகள் 8-9
“தலைக்கனத்தை பிடுங்கியெறியுங்கள், மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்”
மனத்தாங்கல்களை எப்படி சரிசெய்துகொள்கிறீர்கள்?
கிதியோனுக்கும் மீதியானியருக்கும் இடையே கடும் போர் நடந்துகொண்டிருந்தது. எனவே, உதவிக்காக எப்பிராயீம் மனுஷரை கிதியோன் அழைத்தார். போர் முடிவடைந்தது. ஆனாலும், எப்பிராயீம் மனுஷர் கிதியோனை குறை கூறினர். சண்டை ஆரம்பித்தபோதே ஏன் தங்களை கூப்பிடவில்லை என கடுமையாக விவாதித்தனர். “அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்” என பதிவு சொல்கிறது. அதற்கு கிதியோன் அளித்த பதில்: “நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா? தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம்.” (நியாயாதிபதிகள் 8:1-3) அந்த வாக்குவாதம், படுநாசம் விளைவிக்கும் மாபெரும் கோத்திரப் போராக மாறியிருக்க வேண்டியது. ஆனால், சாந்தப்படுத்தும், இதமான வார்த்தைகளால் கிதியோன் அதை தவிர்த்தார். கர்வமும் தற்பெருமையும் ஒருவேளை எப்பிராயீம் கோத்திரத்தாரை அப்படி பேசச் செய்திருக்கலாம். என்றாலும், சமாதானமான ஒரு முடிவை கொண்டுவர, அவர்களுடைய அந்தப் போக்கு கிதியோனை எந்தவிதத்திலும் தடை செய்யவில்லை. நாமும் அதேமாதிரியை பின்பற்ற முடியுமா?
அடக்கமானவர்களாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
15 அடக்கமாக இருப்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கிதியோன். மீதியானியர்களிடமிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றும் பொறுப்பை யெகோவா அவருக்குக் கொடுத்தார். அப்போது கிதியோன், “மனாசே கோத்திரத்திலேயே என்னுடைய குடும்பம்தான் ரொம்பச் சாதாரண குடும்பம். என்னுடைய அப்பாவின் குடும்பத்திலேயே நான்தான் ரொம்ப அற்பமானவன்” என்று சொன்னார். (நியா. 6:15) இருந்தாலும், யெகோவாமேல் நம்பிக்கை வைத்து தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிறகு, யெகோவா தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அவர் முழுமையாகப் புரிந்துகொண்டார். வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (நியா. 6:36-40) கிதியோன் பலசாலியாகவும் தைரியசாலியாகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல், ஞானமுள்ளவராகவும் கவனமுள்ளவராகவும் இருந்தார். (நியா. 6:11, 27) பிறகு, தங்களை ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தபோது, அதை மறுத்துவிட்டார். பேர் புகழுக்காக ஆசைப்படாமல், தன்னுடைய வேலை முடிந்தவுடன், தன்னுடைய இடத்துக்கே திரும்பிப் போய்விட்டார்.—நியா. 8:22, 23, 29.
யெகோவாவின் வழிகளில் நடவுங்கள்
9 கடவுளுடைய நண்பர்களாய் இருப்பதற்கு நாம் ‘தாழ்மையுள்ளவர்களாய்’ இருக்க வேண்டும். (யாக். 4:6; சங். 138:6) தாழ்மையுள்ளவர்களாய் இருப்பதன் அவசியத்தை நியாயாதிபதிகள் 9-ஆம் அதிகாரம் விளக்குகிறது. ‘விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போனதைப்பற்றி’ கிதியோனின் மகனான யோதாம் சொன்னார். ஒலிவமரம், அத்திமரம், திராட்சச் செடி ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டன. இவை, சக இஸ்ரவேலர்மீது ஆட்சி செய்ய தகுதியிருந்தும் அதை நாடாத ஆட்களைக் குறித்தன. ஆனால், அடுப்பெரிக்க மட்டுமே பயன்படுகிற முட்செடி தலைக்கனமிக்க அபிமெலேக்கின் அரசாட்சியைப் பிரதிநிதித்துவம் செய்தது. கொலைகாரனான அபிமெலேக்கு மற்றவர்களை அடக்கி ஒடுக்க விரும்பினான். “இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்ட [ஆட்டிப் படைத்த]” இவன் அகால மரணத்தை சந்தித்தான். (நியா. 9:8-15, 22, 50-54) ‘தாழ்மையுள்ளவர்களாய்’ இருப்பது எவ்வளவு நல்லது!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 753 பாரா 1
ஏபோத், I
கிதியோன் நல்ல எண்ணத்தோடுதான் ஏபோத்தை செய்தார். யெகோவா கொடுத்த வெற்றியின் ஞாபகார்த்தமாகவும் யெகோவாவை புகழ்வதற்காகவும் அதை செய்தார். இஸ்ரவேலர்கள் அதை வணங்க ஆரம்பித்தது “கிதியோனுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் கண்ணியாக ஆனது.” (நியா. 8:27) ஆனால், கிதியோன் அதை வணங்கியதாக பைபிளில் எங்கேயும் சொல்லப்படவில்லை. அதற்குப் பதிலாக, மேகம் போன்ற திரளான சாட்சிகளில் கிதியோனுடைய பெயரையும் அப்போஸ்தலன் பவுல் சொல்லி இருக்கிறார்.—எபி. 11:32; 12:1.
டிசம்பர் 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நியாயாதிபதிகள் 10-12
“யெப்தா—எப்போதும் யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுத்தார்”
உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
9 யோசேப்பின் உதாரணமும் யெப்தாவுக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கும். யோசேப்புடைய அண்ணன்கள் அவரை வெறுத்தாலும் யோசேப்பு அவர்கள்மீது இரக்கம் காட்டியதை யெப்தா யோசித்துப் பார்த்திருப்பார். (ஆதி. 37:4; 45:4, 5) இப்படிச் செய்தது, யெகோவாவுக்கு பிடித்த மாதிரி இருக்க யெப்தாவுக்கு உதவியாக இருந்திருக்கும். தன்னுடைய சகோதரர்கள் நடந்துகொண்ட விதம் யெப்தாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் அவர்கள்மீது அவர் மனக்கசப்பை வளர்த்துக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, யெகோவாவுக்காகவும் அவருடைய மக்களுக்காகவும் போர் செய்வதைத்தான் யெப்தா முக்கியமாக நினைத்தார். (நியா. 11:9) யெகோவாவுக்கு உண்மையாக இருக்க அவர் தீர்மானமாக இருந்ததால் அவருக்கும் இஸ்ரவேலர்களுக்கும் நிறைய ஆசீர்வாதங்கள் கிடைத்தது.—எபி. 11:32, 33.
it-2-E பக். 27 பாரா 2
யெப்தா
தங்களுடைய தேசத்தின் ஒரு பகுதியை இஸ்ரவேலர்கள் பிடுங்கிக்கொண்டதாக அம்மோனியர்களின் ராஜா குற்றம் சுமத்தினான். (நியா. 11:12, 13) ஆனால், இஸ்ரவேலர்களுடைய சரித்திரத்தைப் பற்றித் தெரியாமல் கண்மூடித்தனமாக போர் செய்யும் வீரன் தான் கிடையாது என்பதை யெப்தா காட்டினார். அம்மோனியர்கள் சொல்வது தவறு என்பதை இப்படி எல்லாம் நிரூபித்தார்: (1) இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அம்மோனியர்களுக்கும் மோவாபியர்களுக்கும் ஏதோமியர்களுக்கும் அவர்கள் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. (நியா 11:14-18; உபா. 2:9, 19, 37; 2நா 20:10, 11) (2) இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்த சமயத்தில், சர்ச்சைக்குரிய இந்தப் பகுதி அம்மோனியர்களின் கையில் இல்லை என்றும் எமோரியர்களின் கையில்தான் இருந்ததாகவும் யெப்தா சொன்னார். யெகோவாதான் எமோரியர்களின் தேசத்தையும் அந்த ராஜாவையும் இஸ்ரவேலர்களின் கையில் கொடுத்ததாகவும் சொன்னார். (3) அந்தப் பகுதி 300 வருஷங்கள் இஸ்ரவேலர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இத்தனை வருஷங்களாக விட்டுவிட்டு இப்போது மட்டும் அதை சொந்தம் கொண்டாட வருவது என்ன நியாயம் என்றும் கேட்டார்.—நியா. 11:19-27.
it-2-E பக். 27 பாரா 3
யெப்தா
இது வெறும் இடம் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. கடவுளையும் அவருடைய வழிபாட்டையும் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை யெப்தா காட்டினார். யெகோவா தங்களுக்கு அந்தத் தேசத்தைக் கொடுத்திருப்பதால், பொய் தெய்வங்களைக் கும்பிடுபவர்களுக்கு அதிலிருந்து ஒரு இன்ஞ்கூட கொடுக்க முடியாது என்று அவர் சொன்னார். (நியா 11:24; 1ரா 11:1, 7, 8, 33; 2ரா 23:13)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 26
யெப்தா
யெப்தா முறைகேடாகப் பிறந்தவர் இல்லை. யெப்தா விபச்சாரியின் மகன் என்று பைபிள் சொல்கிறது. அதற்காக, அவருடைய அப்பா ஒரு விபச்சாரியோடு தொடர்பு வைத்துக்கொண்டதால் அவர் பிறந்தார் என்று அர்த்தம் கிடையாது. எப்படி சல்மோனை கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு ராகாப் விபச்சாரியாக இருந்தாளோ, அதேபோல் யெப்தாவின் அப்பாவான கீலேயாத்துக்கு மற்றொரு மனைவியாக ஆவதற்கு முன்பு யெப்தாவின் அம்மா விபச்சாரியாக இருந்தாள். (நியா. 11:1; யோசு. 2:1; மத். 1:5) யெப்தா முறைகேடாகப் பிறந்தவர் கிடையாது என்பதற்கு மூன்று காரணங்களை சொல்லலாம். ஒன்று, யெப்தாவுக்கு சொத்தில் பங்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக கீலேயாத்தின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் அவரைத் துரத்திவிட்டார்கள். யெப்தா முறைகேடாகப் பிறந்தவராக இருந்திருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், முறைகேடாகப் பிறந்தவருக்கு சொத்தில் எந்தப் பங்கும் கிடைக்காது. (நியா. 11:2) இரண்டு, கீலேயாத்தில் இருப்பவர்களுக்கு யெப்தா தலைவரானார். அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் முக்கியமான பதவியில் இருந்தார்கள். ஒருவேளை யெப்தா முறைகேடாகப் பிறந்தவராக இருந்திருந்தால், தலைவராவதற்கு அவரை விட்டிருக்க மாட்டார்கள். (நியா. 11:11) மூன்றாவது, வழிபாட்டுக் கூடாரத்தில் யெப்தா பலி செலுத்தினார். (நியா. 11:30, 31) முறைகேடாகப் பிறந்தவராக இருந்திருந்தால் அப்படிச் செலுத்தியிருக்க முடியாது. ஏனென்றால், “முறைகேடாகப் பிறந்த எவனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது. அவனுடைய வம்சத்தார் யாருமே, அவன் பத்தாம் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.”—உபா 23:2.
டிசம்பர் 27–ஜனவரி 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நியாயாதிபதிகள் 13-14
“மனோவாவிடமிருந்தும் அவருடைய மனைவியிடமிருந்தும் பெற்றோர்களுக்குப் பாடங்கள்”
பெற்றோரே—சிசுப் பருவத்திலிருந்தே பிள்ளையைப் பயிற்றுவியுங்கள்
பூர்வ இஸ்ரவேலிலிருந்த சோரா ஊரானான தாண் வம்சத்தைச் சேர்ந்த மனோவாவை எடுத்துக்கொள்ளுங்கள். குழந்தை பாக்கியம் இல்லாதிருந்த அவருடைய மனைவி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்று யெகோவாவின் தூதர் அவளுக்கு அறிவித்தார். (நியா. 13:2, 3) இதைக் கேட்டு மனோவாவும் அவருடைய மனைவியும் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு பெரிய கவலையும் இருந்தது. எனவே, மனோவா இப்படி ஜெபம் செய்தார்: “ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக.” (நியா. 13:8) அந்த மகனை எப்படி வளர்க்கப்போகிறோமோ என்ற நியாயமான கவலை அவர்களுக்கு இருந்தது. சிம்சோன் பிறந்தபின் அவனுக்கு கடவுளுடைய சட்டங்களைக் கற்றுக்கொடுத்தார்கள்; சிம்சோனும் கற்றுக்கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. சீக்கிரத்திலேயே கடவுளுடைய சக்தி சிம்சோன்மீது செயல்பட ஆரம்பித்தது என பைபிள் சொல்கிறது. அதனால், இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் ஒருவரான அவர் நிறைய வல்லமையான செயல்களைச் செய்தார்.—நியா. 13:25; 14:5, 6; 15:14, 15.
யெகோவாவின் பலத்தில் சிம்சோன் வெற்றி சிறக்கிறார்!
சிம்சோன் வளர்ந்து வருகையில், ‘யெகோவா அவரைத் தொடர்ந்து ஆசீர்வதித்தார்.’ (நியாயாதிபதிகள் 13:24, NW) ஒருநாள் அவர் தன்னுடைய அம்மா, அப்பாவிடம் வந்து, “திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும்” என்றார். (நியாயாதிபதிகள் 14:2) அது அவர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சி அளித்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அவர்களுடைய மகன், ஒடுக்குவோரின் கையிலிருந்து இஸ்ரவேலரை விடுவிப்பதற்குப் பதிலாக அவர்களுடன் திருமண ஒப்பந்தம் செய்ய விரும்பினார். புறமதப் பெண்ணை மணமுடிப்பது கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமானது. (யாத்திராகமம் 34:11-16) அதனால், அவருடைய பெற்றோர் “நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ள வேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா?” என்று சொல்லி அதை ஆட்சேபித்தார்கள். ஆனாலும் அவர், “அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள் [“பொருத்தமானவள்,” NW], அவளையே எனக்குக் கொள்ள வேண்டும்” என்று வற்புறுத்தினார்.—நியாயாதிபதிகள் 14:3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவின் பலத்தில் சிம்சோன் வெற்றி சிறக்கிறார்!
எவ்விதத்தில் இந்தப் பெலிஸ்திய பெண் சிம்சோனுக்கு ‘பொருத்தமானவளாக’ இருந்தாள்? “அவள் அழகாக, வசீகரமாக, கவர்ச்சியாக” இருந்தாள் என்ற அர்த்தத்தில் அல்ல, “ஆனால் ஒரு குறிக்கோளை, நோக்கத்தை, அல்லது இலக்கை அடைவது சம்பந்தமாகவே பொருத்தமானவளாக இருந்தாள்” என்பதாக மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. சிம்சோனுக்கு என்ன குறிக்கோள் இருந்தது? அவர் “பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம்” தேடிக்கொண்டிருந்தார் என்று நியாயாதிபதிகள் 14:4 விளக்குகிறது. அந்தக் குறிக்கோளுடனேயே அவர் அந்தப் பெண்ணை மணமுடிக்க விரும்பினார். வயதில் முதிர்ச்சியடைந்தபோது, ‘யெகோவாவுடைய ஆவி அவரை ஏவத் துவங்கியது’ அல்லது செயல்படும்படி அவரைத் தூண்டியது. (நியாயாதிபதிகள் 13:25) அவர் வினோதமான விதத்தில் ஒரு மனைவிக்காக கேட்டபோதும் சரி, இஸ்ரவேலில் நியாயாதிபதியாக பணியாற்றிய காலம் முழுவதும் சரி, யெகோவாவின் ஆவியாலேயே உந்துவிக்கப்பட்டார். சிம்சோன் எதிர்நோக்கியிருந்த சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்ததா? ஆதரவு அளிப்பதாக அவருக்கு யெகோவா எப்படி உறுதியளித்தார் என்பதை முதலாவது கவனிக்கலாம்.