யெகோவாவின் அன்பான வழிநடத்துதலைப் பின்பற்றுவீர்களா?
“சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.”—சங். 119:128.
1, 2. (அ) ஒரு நண்பரிடம் வழி கேட்கும்போது அவர் என்ன எச்சரிக்கையைக் கொடுத்தால் சந்தோஷப்படுவீர்கள், ஏன்? (ஆ) யெகோவா எதைக் குறித்து நம்மை எச்சரிக்கிறார், ஏன்?
இதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்: நீங்கள் ஓர் இடத்திற்குப் பயணப்படுகிறீர்கள். அங்கு செல்ல நம்பகமான ஒரு நண்பரிடம் வழி கேட்கிறீர்கள். அவர் தெள்ளத் தெளிவாக வழியை விளக்குகிறார்; அதோடு, “அடுத்த திருப்பத்தில் ரொம்பவே கவனமாக இருங்கள். அங்குள்ள வழிகாட்டிப் பலகையைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். அநேகர் அப்படி ஏமாந்து வழி மாறிப் போயிருக்கிறார்கள்” என்றும் சொல்கிறார். அவர் அக்கறையோடு கொடுக்கிற எச்சரிக்கையை நீங்கள் கேட்டு நடப்பீர்கள், அல்லவா? சில விதங்களில், யெகோவாவும் அந்த நண்பரைப் போலத்தான் இருக்கிறார். நாம் புது உலகத்திற்குப் போய்ச் சேருவதற்கு அவர் தெளிவான வழிநடத்துதலைக் கொடுக்கிறார்; அதோடு, நம்மை வழி மாறிப் போகச் செய்யும் ஆபத்துகளைக் குறித்தும் எச்சரிக்கிறார்.—உபா. 5:32; ஏசா. 30:21.
2 அந்த ஆபத்துகள் சிலவற்றைக் குறித்து இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் சிந்திக்கப் போகிறோம். நம்முடைய நண்பராகிய யெகோவா தேவனுக்கு நம்மீது அன்பும் அக்கறையும் இருப்பதாலேயே அத்தகைய ஆபத்துகளைக் குறித்து எச்சரிக்கிறார் என்பதை மனதில் வையுங்கள். நாம் முடிவில்லா வாழ்வைப் பெற வேண்டுமென அவர் விரும்புகிறார். சிலர் தவறான தீர்மானங்கள் எடுத்து அவருக்குச் சேவை செய்வதை நிறுத்திவிடும்போது அவர் வேதனைப்படுகிறார். (எசே. 33:11) இந்தக் கட்டுரையில் நாம் மூன்று ஆபத்துகளைப் பற்றிச் சிந்திக்கப் போகிறோம். முதலாவது மற்றவர்களிடமிருந்து வருகிறது, இரண்டாவது நம்மிடமிருந்தே வருகிறது, மூன்றாவது வீணானவற்றிலிருந்து வருகிறது. இந்த ஆபத்துகள் யாவை, அவற்றை எப்படித் தவிர்க்கலாம் என்பது சம்பந்தமாக நம்முடைய பரலோகத் தகப்பன் சொல்வதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த ஆபத்துகளைக் குறித்து ஒரு சங்கீதக்காரன் அறிந்திருந்ததால், “சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்” என்று சொன்னார். (சங். 119:128) யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகச் செய்யும் எல்லாவற்றையுமே அவர் வெறுத்தார். நீங்களும் அப்படி வெறுக்கிறீர்களா? நாம் எப்படி எல்லாப் “பொய் வழிகளையும்” அடியோடு வெறுக்கலாம் என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.
“திரளானபேர்களை” பின்பற்றாதீர்கள்
3. (அ) எந்த வழியாகச் செல்வதெனத் தெரியாதபோது மற்றவர்களின் பின்னாலேயே போவது ஏன் ஆபத்தானது? (ஆ) யாத்திராகமம் 23:2-ல் என்ன முக்கிய நியமம் காணப்படுகிறது?
3 நீங்கள் நீண்ட தூரம் பயணிக்கும்போது திடீரென எந்த வழியாகச் செல்வதெனத் தெரியவில்லை என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அநேகர் ஒரு பாதையில் செல்வதைப் பார்க்கிறீர்கள். அவர்கள் பின்னாலேயே போக நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படிப் போவது ஆபத்தானது. ஏனென்றால், நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு அவர்கள் போகாமலிருக்கலாம் அல்லது அவர்களும் உங்களைப் போலவே வழிதெரியாமல் போய்க் கொண்டிருக்கலாம். இந்த உதாரணம், யெகோவா இஸ்ரவேலருக்குக் கொடுத்த ஒரு சட்டத்திலிருந்து புகட்ட விரும்பிய பாடத்தை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளாகவும் சாட்சிகளாகவும் இருப்பவர்கள் கூட்டத்தைப் பின்பற்றக்கூடாது என்றும் மக்களைப் பிரியப்படுத்துவதற்காகத் தவறான தீர்ப்புகளைச் செய்யக்கூடாது என்றும் யெகோவா எச்சரித்தார். (யாத்திராகமம் 23:2-ஐ வாசியுங்கள்.) அபூரண மனிதர்கள் அப்படி நடந்துகொள்வது ரொம்பவே சுலபம். என்றாலும், “திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக” என்ற நியமம் வழக்கு விசாரணைகளுக்கு மட்டுமே பொருந்துகிறதா? இல்லவே இல்லை.
4, 5. கூட்டத்தைப் பின்பற்றும் ஆபத்தை யோசுவாவும் காலேபும் எப்படி எதிர்ப்பட்டார்கள், ஆனால், தைரியமாய் இருக்க எது அவர்களுக்கு உதவியது?
4 உண்மையில், கூட்டத்தைப் பின்பற்றும் ஆசை எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் நமக்கு வரலாம். அது திடீரென வரலாம்; அதைக் கட்டுப்படுத்துவது பெரும் கஷ்டமாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு, யோசுவாவுக்கும் காலேபுக்கும் நடந்ததை எண்ணிப் பாருங்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவு பார்த்து வரும்படி அனுப்பப்பட்ட 12 பேரில் இவர்களும் இருந்தார்கள். வேவு பார்த்துத் திரும்பியதும் அவர்களில் பத்துப் பேர் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கினார்கள். அந்தத் தேசத்திலிருந்த சிலர் இராட்சதப் பிறவிகளாக, அதாவது கலகக்கார தூதர்களுக்கும் பூமியிலிருந்த பெண்களுக்கும் பிறந்தவர்களாக, இருந்தார்களென அவர்கள் சொன்னார்கள். (ஆதி. 6:4) அது சுத்தப் பொய். ஏனென்றால், அந்தக் கலப்பின பிறவிகளான துன்மார்க்கர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஜலப்பிரளயத்தின்போது முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், இஸ்ரவேலர் விசுவாசத்தில் குறைவுபட்டிருந்ததால் அந்தப் பத்து வேவுக்காரர் சொன்ன ஆதாரமற்ற செய்தியை நம்பிவிட்டார்கள். அந்தச் செய்தி காட்டுத் தீபோல் பரவியது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவது ஆபத்தாக இருக்குமென மக்களில் பெரும்பாலோர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த இக்கட்டான சூழ்நிலையில் யோசுவாவும் காலேபும் என்ன செய்தார்கள்?—எண். 13:25-33.
5 அவர்கள் கூட்டத்தைப் பின்பற்றவில்லை. உண்மையைக் கேட்க அந்தக் கூட்டத்தார் விரும்பாதபோதிலும் இந்த இருவரும் உண்மையையே சொன்னார்கள். ஆம், கல்லெறிந்து கொலை செய்யப்படும் ஆபத்து இருந்தபோதிலும் சரியானதைச் செய்வதில் உறுதியாய் இருந்தார்கள். அவர்கள் இந்தளவு தைரியமாக இருந்ததற்குக் காரணம் என்ன? அவர்கள் கடவுள்மீது வைத்திருந்த விசுவாசமே. விசுவாசமுள்ளவர்கள், மனிதருடைய ஆதாரமற்ற கருத்துகளுக்கும் யெகோவாவுடைய பரிசுத்த வாக்குறுதிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள். யெகோவா தம்முடைய ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றினார் என்பதை யோசுவாவும் காலேபும் பின்னர் தெரிவித்தார்கள். (யோசுவா 14:6, 8; 23:2, 14-ஐ வாசியுங்கள்.) இவர்கள் இருவரும் உண்மையுள்ள கடவுள்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள்; விசுவாசமற்ற கூட்டத்தைப் பின்பற்றி, அவருடைய மனதைப் புண்படுத்த அவர்கள் துளியும் விரும்பாதிருந்தார்கள். கூட்டத்தைப் பின்பற்றாதிருப்பதில் உறுதி காட்டியதன் மூலம் நமக்கு அருமையான முன்மாதிரி வைத்தார்கள்.—எண். 14:1-10.
6. எந்த விஷயங்களில் நாம் கூட்டத்தைப் பின்பற்றும் ஆபத்தை எதிர்ப்படலாம்?
6 நீங்கள் கூட்டத்தைப் பின்பற்ற எப்போதாவது விரும்பியிருக்கிறீர்களா? இன்று பெரும் திரளான மக்கள் யெகோவாவிடமிருந்து விலகியிருக்கிறார்கள், அவருடைய ஒழுக்கநெறிகளை உதறித்தள்ளுகிறார்கள். பொழுதுபோக்கு விஷயத்தில் அவர்கள் ஆதாரமற்ற கருத்துகளையே பரப்புகிறார்கள். டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் வீடியோ கேம்ஸுகளிலும் பரவலாகக் காணப்படும் பாலியல் முறைகேடு, வன்முறை, ஆவியுலகத் தொடர்பு போன்றவை ஆபத்தற்றவை என அவர்கள் சொல்கிறார்கள். (2 தீ. 3:1-5) நீங்களோ உங்கள் குடும்பத்தாரோ எத்தகைய பொழுதுபோக்கில் ஈடுபடுவதென எப்படித் தீர்மானிப்பீர்கள்? மற்றவர்கள் சொல்வதை வைத்து ஒரு பொழுதுபோக்கு சரியானது என்றோ தவறானது என்றோ தீர்மானிப்பீர்களா? அப்படிச் செய்தால் நீங்கள் கூட்டத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று ஆகிவிடாதா?
7, 8. (அ) ‘பகுத்தறியும் திறன்களை’ நாம் எப்படிப் பயிற்றுவிக்கிறோம், அப்படிப் பயிற்றுவிப்பது கறாரான சட்டதிட்டங்களைக் கொண்ட பெரிய பட்டியலைப் பின்பற்றுவதைவிட ஏன் அதிக பயனுள்ளது? (ஆ) அநேக கிறிஸ்தவ இளைஞர்களுடைய முன்மாதிரி ஏன் நம் மனதைத் தொடுகிறது?
7 தீர்மானங்களை எடுப்பதற்கு உதவியாக ‘பகுத்தறியும் திறன்கள்’ என்ற அற்புதப் பரிசை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். அந்தத் திறன்களை ‘பயன்படுத்துவதன்’ மூலம் பயிற்றுவிக்க வேண்டும். (எபி. 5:14) மற்றவர்கள் செய்வதை மட்டுமே செய்தால் அல்லது நாம் என்ன செய்ய வேண்டுமென மற்றவர்கள் சொல்லும்படி எதிர்பார்த்தால் நம்முடைய பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்க முடியாது. பல விஷயங்களில் நம்முடைய மனசாட்சியைப் பயன்படுத்தி, சுயமாய்த் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதனால்தான், எந்தெந்த திரைப்படங்களைப் பார்க்கக்கூடாது, எந்தெந்த புத்தகங்களைப் படிக்கக்கூடாது, எந்தெந்த வெப்சைட்டுகளை அலசக்கூடாது என்ற பெரிய பட்டியலை யெகோவாவின் ஜனங்கள் எதிர்பார்ப்பதில்லை. அப்படியொரு பட்டியல் இருந்தால், இன்றைய பட்டியல் நாளைக்கு உதவாது; ஏனென்றால், இந்த உலகத்தின் போக்கு வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. (1 கொ. 7:31) அத்தகைய பட்டியல் இருந்தால், பைபிள் நியமங்களை ஜெபத்துடன் கவனமாக அலசி ஆராய்ந்து அதற்கேற்ப தீர்மானங்கள் எடுக்கும் நம் திறனுக்கே அவசியமில்லாமல் போய்விடும்.—எபே. 5:10.
8 சில சமயங்களில், பைபிள் அடிப்படையில் நாம் எடுக்கிற தீர்மானங்களை மற்றவர்கள் விரும்ப மாட்டார்கள். உதாரணத்திற்கு, பள்ளியில் படிக்கிற கிறிஸ்தவ இளைஞர்களுக்குச் சக மாணவர்கள் தொல்லை கொடுக்கலாம்; தாங்கள் எதைப் பார்க்கிறார்களோ செய்கிறார்களோ அதையே பார்க்கும்படியும் செய்யும்படியும் அவர்களை வற்புறுத்தலாம். (1 பே. 4:4) ஆனால், கூட்டத்தைப் பின்பற்றாதிருப்பதில் யோசுவாவும் காலேபும் காட்டிய விசுவாசத்தைக் கிறிஸ்தவ இளைஞர்களும் சரி பெரியவர்களும் சரி பின்பற்றுவதைப் பார்ப்பது நம் மனதை எவ்வளவாய்க் குளிர்விக்கிறது!
‘உங்கள் இருதயத்தையும் உங்கள் கண்களையும்’ பின்பற்றாதீர்கள்
9. (அ) நாம் பயணம் செய்கையில் மனதுக்குப் பிடித்த பாதைகளில் செல்வது ஏன் ஆபத்தாக இருக்கலாம்? (ஆ) எண்ணாகமம் 15:37-39-ல் உள்ள சட்டம் ஏன் கடவுளுடைய பூர்வகால மக்களுக்கு முக்கியமானதாக இருந்தது?
9 நாம் சிந்திக்கப்போகிற இரண்டாவது ஆபத்து நம்மிடமிருந்தே வருகிறது. அதை இவ்வாறு விளக்கலாம்: நீங்கள் ஓர் இடத்திற்குப் பயணப்படுகிறீர்கள். உங்களிடமுள்ள வரைபடத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு, மனதுக்குப் பிடித்த பாதைகளில் எல்லாம் செல்கிறீர்கள்; ஆம், ரம்யமான காட்சிகள் தெரிகிற பாதைகளில் எல்லாம் செல்கிறீர்கள். அப்போது, போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைய முடியுமா? முடியாது. இது சம்பந்தமாக, பூர்வ இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்திருந்த மற்றொரு சட்டத்தைக் கவனியுங்கள். வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டும்படி யெகோவா சொல்லியிருந்தார்; இதைப் புரிந்துகொள்வது இன்றுள்ள அநேகருக்குக் கஷ்டமாக இருக்கலாம். (எண்ணாகமம் 15:37-39-ஐ வாசியுங்கள்.) அந்தச் சட்டம் ஏன் முக்கியமானதாக இருந்தது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? அந்தச் சட்டத்திற்குக் கடவுளுடைய மக்கள் கீழ்ப்படிந்தது, மற்ற தேசத்தாரிலிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டியதோடு அத்தேசத்தாரிடமிருந்து விலகியிருக்கவும் உதவியது. யெகோவாவின் தயவைப் பெறவும் அதை இழந்துவிடாதிருக்கவும் இது அவர்களுக்கு அவசியமாய் இருந்தது. (லேவி. 18:24, 25) ஆனால், அந்தச் சட்டம் கொடுக்கப்பட்டதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அந்தக் காரணத்தையும், நம்மை யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போக வைக்கக்கூடிய இரண்டாவது ஆபத்தையும் பற்றி இன்னும் அதிகமாக இப்போது சிந்திக்கலாம்.
10. மனிதர்களை யெகோவா நன்கு அறிந்திருந்ததை எப்படிக் காட்டினார்?
10 அந்தச் சட்டம் கொடுக்கப்பட்டதற்கான காரணத்தைப் பற்றி யெகோவா பின்வருமாறு அவர்களிடம் சொன்னதைக் கவனியுங்கள்: ‘நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாதீர்கள்.’ யெகோவா மனிதருடைய இயல்பைத் தெள்ளத் தெளிவாக அறிந்திருப்பதால் அவ்வாறு சொன்னார். நாம் பார்ப்பவற்றை அடைய நம் இருதயம், அதாவது உள்மனம், துடிக்கும் என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார். எனவே, “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” என்று பைபிளில் நம்மை எச்சரிக்கிறார். (எரே. 17:9) அப்படியென்றால், இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமானது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த புறதேசத்தாரைப் பார்த்து, அவர்களைப் பின்பற்ற விரும்புவார்கள் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ஆம், அவர்களைப் போலவே தோற்றமளிக்க விரும்புவார்கள் என்பதையும், அவர்களைப் போலவே யோசிக்கவும் செயல்படவும் தூண்டப்படுவார்கள் என்பதையும் அறிந்திருந்தார்.—நீதி. 13:20.
11. எந்தச் சமயத்தில் நம்முடைய கண்களையும் இருதயத்தையும் பின்பற்ற நாம் தூண்டப்படலாம்?
11 இன்று, திருக்குள்ள நம் இருதயம் இச்சைகளுக்கு அடிபணிந்துவிடுவது இன்னுமதிக சுலபம். இச்சைகளுக்குத் தீனிபோடுகிற உலகில் நாம் வாழ்கிறோம். அப்படியென்றால், எண்ணாகமம் 15:39-லுள்ள நியமத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? இதைச் சற்று யோசியுங்கள்: பள்ளியில், வேலை செய்யுமிடத்தில், அல்லது உங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காம இச்சைகளைத் தூண்டும் விதத்தில் உடை உடுத்தினால், அவர்களைப் போலவே உடுத்த நீங்களும் ஆசைப்படுவீர்களா? ‘உங்கள் இருதயத்தையும் உங்கள் கண்களையும்’ பின்பற்றவும், கண்களின் ஆசைக்கு அடிபணியவும் தூண்டப்படுவீர்களா? அவர்களைப் போலவே உடுத்துவதன் மூலம் கடவுளுடைய ஒழுக்கநெறிகளை ஒதுக்கித்தள்ளுவீர்களா?—ரோ. 12:1, 2.
12, 13. (அ) பார்க்கக்கூடாத காட்சிகளைப் பார்க்க நம்முடைய கண்கள் அலைபாயும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) மற்றவர்கள் தவறு செய்வதற்கு நாம் காரணமாகிவிடாதிருக்க என்ன செய்ய வேண்டும்?
12 ஆசைகளுக்கு அணைபோடுவது மிக அவசியமானதும், அவசரமானதும்கூட. பார்க்கக்கூடாத காட்சிகளைப் பார்க்க நம்முடைய கண்கள் அலைபாயும்போது, கண்களைக் கட்டுப்படுத்த உண்மையுள்ள யோபு எடுத்த நடவடிக்கையைச் சற்று எண்ணிப் பார்ப்போமாக. ஆம், எந்தவொரு பெண்ணையும் காம உணர்வோடு ஏறெடுத்துப் பார்க்காதிருக்க அவர் தன் கண்களோடு ஒப்பந்தம் செய்திருந்தார். (யோபு 31:1) அதேபோல் தாவீதும் தீர்மானித்திருந்தார்; “தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்” என்று அவர் சொன்னார். (சங். 101:3) நம்முடைய சுத்தமான மனசாட்சியைக் களங்கப்படுத்துவதன் மூலம் யெகோவாவுடன் நமக்குள்ள பந்தத்தைப் பாதிக்கிற எதுவுமே நமக்கு ‘தீங்கான காரியம்.’ நம் கண்களைக் கவரக்கூடிய, கெட்டதைச் செய்ய நம் இதயத்தைத் தூண்டக்கூடிய எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம்.
13 மற்றவர்கள் தவறு செய்வதற்கு நாம் காரணமாகிவிடுவதன் மூலம் ஒரு விதத்தில் நாமே ‘தீங்கான காரியமாக’ ஆகிவிடக்கூடாது. எனவே, நேர்த்தியான, அடக்கமான உடை அணியும்படி சொல்கிற பைபிளின் அறிவுரைக்கு நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். (1 தீ. 2:9) நாம் அடக்கமாக உடை உடுத்தினால், நம்முடைய கருத்துகளுக்கும் மேலாக மற்றவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்று அர்த்தம். நமக்குப் பிரியமாக நடப்பதைவிட மற்றவர்களுக்குப் பிரியமாக நடக்கவே விரும்புகிறோம் என்று அர்த்தம். (ரோ. 15:1, 2) உடை உடுத்தும் விஷயத்தில், கிறிஸ்தவச் சபையிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அருமையான முன்மாதிரி வைக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ‘இருதயத்தையும் கண்களையும்’ பின்பற்றாமல், ஒவ்வொரு விஷயத்திலும் யெகோவாவைப் பிரியப்படுத்துவதைப் பார்த்து நாம் பூரித்துப் போகிறோம்.
‘வீணானவற்றை’ பின்பற்றாதீர்கள்
14. சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் யெகோவா என்ன எச்சரிக்கையைக் கொடுத்தார்?
14 நீங்கள் பரந்து விரிந்து கிடக்கிற பாலைவனத்தைக் கடப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். கானல் நீரைப் பார்த்து உங்கள் பாதையை மாற்றிக்கொண்டால் என்னவாகும்? அந்த மாயக் காட்சியை நம்பி அங்கு போவது உங்கள் உயிருக்கே உலை வைக்கலாம்! அப்படிப்பட்ட ஆபத்தை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார். ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். இஸ்ரவேல் தேசத்தைச் சுற்றிலும் இருந்த தேசங்களை ராஜாக்கள் ஆட்சி செய்தார்கள்; அதனால் தங்களையும் ஒரு ராஜா ஆட்சி செய்ய வேண்டுமென அவர்கள் ஆசைப்பட்டார்கள். அது அவர்கள் செய்த பெரும் பாவமாகும்; ஏனென்றால், ராஜாவாக அவர்களை ஆட்சி செய்த யெகோவாவை ஒதுக்கிவிட்டார்கள். அவர்களை ஒரு மனித ராஜா ஆட்சி செய்ய அவர் அனுமதித்தபோதிலும், “வீணானவைகளை” பின்பற்றக் கூடாதென சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் அவர்களை எச்சரித்தார்.—1 சாமுவேல் 12:21-ஐ வாசியுங்கள்.
15. இஸ்ரவேலர் எந்த வழிகளில் வீணானவற்றைப் பின்பற்றினார்கள்?
15 யெகோவாவைவிட ஒரு மனித ராஜாவை அதிகமாக நம்பலாமென இஸ்ரவேலர் நினைத்திருக்கலாம். அப்படியென்றால், அவர்கள் வீணானதைப் பின்பற்றினார்கள். சாத்தானுடைய இன்னுமதிக வீணான காரியங்களைப் பின்பற்றும் ஆபத்திலும் இருந்தார்கள். உதாரணத்திற்கு, மனித ராஜாக்கள் சிலை வழிபாடு செய்ய அவர்களைத் தூண்டலாம். சிலை வழிபாடு செய்கிறவர்கள், பார்க்க முடியாத படைப்பாளராகிய யெகோவாவைவிட கல்லாலும் மரத்தாலும் ஆன அந்தச் சிலைகளை அதிகமாக நம்பலாமெனத் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், சிலைகள் “ஒன்றுமில்லை” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 கொ. 8:4) சிலைகளால் பார்க்கவும், கேட்கவும், பேசவும் முடியாது; ஏன், எதையுமே செய்ய முடியாது. நம்மால் அந்தச் சிலைகளைப் பார்க்க முடியும், தொட முடியும் என்பதற்காக அவற்றை வழிபட்டால் வீணானதைப் பின்பற்றுவோம்; இந்த ‘கானல் நீரை’ நம்புவது உயிருக்கே உலை வைக்கலாம்!—சங். 115:4-8.
16. (அ) இன்று மக்கள் வீணானவற்றை பின்பற்ற சாத்தான் என்ன செய்கிறான்? (ஆ) யெகோவாவுடன் ஒப்பிட பணமும் பொருளும் வீணானவை என்று ஏன் சொல்லலாம்?
16 வீணானவற்றைப் பின்பற்றும்படி மக்களைத் தூண்டுவதில் சாத்தான் இன்னும் கெட்டிக்காரத்தனமாகச் செயல்படுகிறான். உதாரணத்திற்கு, கைநிறையப் பணம், நல்ல வேலை, அநேக பொருள்கள் இருந்தால் சந்தோஷமாகவும் சுகமாகவும் இருக்கலாமென அநேகரை அவன் நம்ப வைத்திருக்கிறான். அதனால், தங்களுடைய பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் இவை பரிகாரமளிக்குமென அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், வியாதிப்படும்போதோ, பொருளாதார சரிவை எதிர்ப்படும்போதோ, இயற்கைப் பேரழிவுகளில் சிக்கும்போதோ இவையெல்லாம் எந்தளவுக்குக் கைகொடுக்கும்? தாங்கள் வாழ்வதே வீண் என்று அவர்கள் நினைக்கையில் இவை அவர்களுக்கு எப்படி உதவும்? வாழ்க்கை சம்பந்தமான முக்கிய கேள்விகளுக்கு இவை தகுந்த பதிலைக் கொடுக்க முடியுமா? சாவின் விளிம்பில் இருக்கையில் இவை அவர்களுக்கு உறுதுணையாய் இருக்குமா? பணத்தையும் பொருளையும் நம்பினால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். நாம் சந்தோஷமாய் இருப்பதற்குத் தேவையானவற்றை அவற்றால் தர முடியாது; நோய்நொடியும் சாவும் வருவதை அவற்றால் தடுக்க முடியாது. அவை வீணானவை. (நீதி. 23:4, 5) யெகோவாவோ நிஜமானவர், உண்மையுள்ள கடவுள். அவருடன் நெருக்கமான பந்தம் இருந்தால் மட்டுமே நாம் சந்தோஷமாகவும் சுகமாகவும் இருக்க முடியும். நம்முடைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் யெகோவாவால் மட்டுமே தீர்க்க முடியும். அவருடைய நண்பர்களாய் இருக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவரை விட்டுவிட்டு வீணானவற்றை ஒருபோதும் பின்பற்றாதிருப்போமாக!
17. இந்தக் கட்டுரையில் கற்றுக்கொண்ட ஆபத்துகள் சம்பந்தமாக உங்கள் தீர்மானம் என்ன?
17 யெகோவா நம்முடைய நண்பராய் இருப்பதாலும் முடிவில்லா வாழ்வை அடையும் பயணத்தில் அவர் நமக்கு வழிகாட்டியாய் இருப்பதாலும் சந்தோஷப்படுகிறோம். அவருடைய எச்சரிக்கைகளுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்தினால் நாம் என்றென்றும் வாழலாம். இந்தக் கட்டுரையில், நம்மைப் பாதை மாறிப் போகச் செய்யும் மூன்று ஆபத்துகளைப் பற்றிக் கற்றுக்கொண்டோம்; அவை: கூட்டத்தைப் பின்பற்றுவது, நம் இருதயத்தைப் பின்பற்றுவது, வீணானவற்றைப் பின்பற்றுவது. அடுத்த கட்டுரையில், “பொய்வழிகளை” அடியோடு வெறுத்து ஒதுக்குவதற்கு யெகோவா கொடுக்கிற இன்னும் மூன்று எச்சரிப்புகளைக் குறித்துக் கற்றுக்கொள்ளப் போகிறோம்.—சங். 119:128.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பின்வரும் வசனங்களில் உள்ள நியமங்களை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?
[பக்கம் 11-ன் படம்]
கூட்டத்தைப் பின்பற்ற எப்போதாவது விரும்பியிருக்கிறீர்களா?
[பக்கம் 13-ன் படம்]
மனம்போன போக்கில் போவது ஏன் ஆபத்தானது?
[பக்கம் 14-ன் படம்]
நீங்கள் வீணானவற்றைப் பின்பற்றுகிறீர்களா?