வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
நவம்பர் 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 5–6
“அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள்தான் அதிகம்”
யெகோவாவின் நெருப்பு போன்ற படை
சீரியாவின் ராஜா பெனாதாத், இஸ்ரவேலைத் தாக்கிக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு தடவையும் எலிசா தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவை எச்சரித்ததால் அவரால் தப்பிக்க முடிந்தது. அதனால், எலிசாவைக் கடத்த வேண்டும் என்று பெனாதாத் முடிவு செய்தான். அவர் தோத்தான் என்ற நகரத்தில் இருந்ததைத் தெரிந்துகொண்டான். அதனால், அவரைப் பிடிப்பதற்கு தன்னுடைய படையை அனுப்பினான்.
சீரியர்கள் ராத்திரியில் தோத்தானுக்கு வந்தார்கள். அடுத்த நாள் காலையில், எலிசாவின் வேலைக்காரர் வெளியே போய்ப் பார்த்தபோது, அந்த நகரத்தைச் சுற்றிலும் ஒரு படை நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவர் பயந்துபோய் எலிசாவிடம், ‘எலிசா, இப்போது என்ன செய்வது?’ என்று அலறினார். அதற்கு எலிசா, ‘அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள்தான் அதிகம்’ என்று சொன்னார். அப்போது, அந்த நகரத்தைச் சுற்றி இருந்த மலைகளில் குதிரைகளும் நெருப்புபோல் பிரகாசமான ரதங்களும் நிறைந்திருப்பது அந்தக் வேலைக்காரரின் கண்களுக்குத் தெரிந்தது. யெகோவாதான் இதெல்லாம் அவருக்குத் தெரியும்படி செய்தார்.
எலிசா அக்கினி ரதங்களைக் கண்டார்—நீங்களும் காண்கிறீர்களா?
தோத்தானில் எதிரிகள் தன்னைச் சூழ்ந்துகொண்டபோதிலும் எலிசா கலக்கமடையவில்லை. ஏன்? ஏனென்றால் யெகோவாமீது அவர் உறுதியான விசுவாசம் வைத்திருந்தார். நமக்கும் அப்படிப்பட்ட விசுவாசம் தேவை. ஆகவே, விசுவாசத்தையும் கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படுகிற பிற பண்புகளையும் வெளிக்காட்ட உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்வோமாக.—லூக். 11:13; கலா. 5:22, 23.
it-1-E பக். 343 பாரா 1
குருட்டுத்தன்மை
சீரியப் படைவீரர்கள் எல்லாரும் நிஜமாகவே குருடாகியிருந்தால், அவர்களுடைய கையைப் பிடித்துத்தான் கூட்டிக்கொண்டு போக வேண்டியிருந்திருக்கும். அதனால், அவர்களுடைய கண்கள் குருடாகவில்லை, அவர்களுடைய மனம்தான் குருடானது என்று சொல்லலாம். இந்த விதத்தில் குருடாவதைப் பற்றி மனோதத்துவம் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் இப்படிச் சொல்கிறது: ‘ஒருவரின் கண்களைப் பாதிக்காமல் புரிந்துகொள்ளும் திறனை மட்டும் பாதிக்கும் ஒருவகையான குருட்டுத்தன்மை இருக்கிறது. இப்படிப்பட்ட குருட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறவர்களுக்குத் தாங்கள் பார்க்கும் விஷயங்கள் புரியாது. அவர்களுடைய பார்வைக்கும் யோசனைக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிட்டதுபோல் இருக்கும்.’
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
5:15, 16—நாகமான் கொடுத்த காணிக்கையை எலிசா ஏன் வாங்கவில்லை? நாகமானை யெகோவாவின் வல்லமையினால் அற்புதமாகச் சுகப்படுத்தினாரே தவிர, தன்னுடைய வல்லமையினால் அல்ல என்பதை எலிசா அறிந்திருந்தார். அதனால்தான் அந்தக் காணிக்கையை அவர் வாங்க மறுத்தார். கடவுள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பது அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயமாக இருந்திருக்கும். உண்மை கிறிஸ்தவர்கள், யெகோவாவின் சேவையிலிருந்து தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொள்ள முயலுவதில்லை. அவர்கள் இயேசு கொடுத்த இந்த அறிவுரைக்குக் கவனம் செலுத்துகிறார்கள்: “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.”—மத்தேயு 10:8.
நவம்பர் 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 7-8
“யாரும் எதிர்பார்க்காததை யெகோவா நடத்திக் காட்டினார்”
it-1-E பக். 716-717
எலிசா
சமாரியாவை சீரிய ராஜா முற்றுகை போட்டதால் அங்கே பஞ்சம் ஏற்பட்டது. ஒரு பெண் தன்னுடைய மகனையே சாப்பிடும் அளவுக்கு அந்தப் பஞ்சம் பயங்கரமாக இருந்தது. அதையெல்லாம் பார்த்த ஆகாபின் மகனான யோராம் ராஜா, எலிசாவைக் கொல்லப்போவதாக சபதம் போட்டார். அவர் தன்னுடைய படை அதிகாரியைக் கூட்டிக்கொண்டு தீர்க்கதரிசியான எலிசாவின் வீட்டுக்குப் போனார். அப்போது எலிசா, அடுத்த நாள் நிறைய உணவு இருக்கும் என்று சொன்னார். ராஜாவின் அதிகாரி அதை நம்பவில்லை. அதனால்தான் எலிசா, “அதை உன் கண்ணால் பார்ப்பாய், ஆனால் சாப்பிட மாட்டாய்” என்று சொன்னார். எலிசா சொன்னது அப்படியே நடந்தது. சீரியர்களுக்கு ஒரு பெரிய சத்தம் கேட்கும்படி யெகோவா செய்தார். அதைக் கேட்டு அவர்கள் மிரண்டுபோய், தங்கள் சாமான்களையும் உணவுப் பொருள்களையும் முகாமிலேயே விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். நடந்ததை ராஜா கேள்விப்பட்டபோது, சமாரியாவின் நகரவாசலைக் காவல்காப்பதற்காகத் தன் படை அதிகாரியை நியமித்தார். ஆனால், பஞ்சத்தில் அடிபட்டிருந்த இஸ்ரவேல் மக்கள் சீரியர்களின் முகாமில் இருந்ததையெல்லாம் கொள்ளையடிப்பதற்காக முந்தியடித்துக்கொண்டு ஓடினார்கள். அந்த நெரிசலில் அந்தப் படை அதிகாரி மிதிபட்டுச் செத்துப்போனார். எலிசா சொல்லியிருந்தபடியே, அந்தப் படை அதிகாரி உணவுப்பொருள்களைப் பார்த்தார், ஆனால் அவற்றைச் சாப்பிடவில்லை.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 195 பாரா 7
விளக்கு
தாவீது ஞானமுள்ள நல்ல ராஜாவாக வாழ்ந்து காட்டியபோது அவரை ‘இஸ்ரவேலின் விளக்கு’ என்று யெகோவா சொன்னார். (2சா 21:17) அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை யெகோவா தாவீதோடு செய்தபோது, “உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்” என்று சொன்னார். வேறு வார்த்தைகளில், தாவீதின் ‘விளக்கு’ என்றென்றும் அணையாது என்று அவர் வாக்குக் கொடுத்தார். (2சா 7:11-16) இப்படித்தான், தாவீதின் மகன் சாலொமோன் மூலமாக வந்த ராஜ வம்சம் இஸ்ரவேலுக்கு ஒரு ‘விளக்காக’ ஆனது.—1ரா 11:36; 15:4; 2ரா 8:19; 2நா 21:7.
நவம்பர் 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 9-10
“தைரியத்தையும் மன உறுதியையும் பக்திவைராக்கியத்தையும் காட்டினார்”
யெகூ பக்திவைராக்கியத்தோடு உண்மை வணக்கத்தை ஆதரித்தார்
இஸ்ரவேலில் மோசமான சூழல் நிலவிய சமயத்தில் கடவுளிடமிருந்து யெகூ ஒரு பொறுப்பைப் பெற்றார். காலஞ்சென்ற ஆகாபின் மனைவியும் அப்போது ஆட்சி செய்து வந்த யோராம் ராஜாவின் அம்மாவுமான யேசபேலின் மோசமான செல்வாக்கின்கீழ் தேசம் இருந்தது. யெகோவாவை வழிபடுவதற்குப் பதிலாக பாகாலை வழிபடும்படி அவள் மக்களை ஊக்குவித்தாள்; கடவுளுடைய தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, ‘வேசித்தனங்களாலும்,’ ‘பில்லிசூனியங்களாலும்’ மக்களை அவள் பாழ்ப்படுத்தியிருந்தாள். (2 இரா. 9:22; 1 இரா. 18:4, 13) யோராம், யேசபேல் உட்பட ஆகாபின் வீட்டார் அனைவரையும் வேரோடு அழிக்க யெகோவா முடிவுசெய்திருந்தார். அந்தப் பொறுப்பை யெகூ நிறைவேற்ற வேண்டியிருந்தது.
யெகூ பக்திவைராக்கியத்தோடு உண்மை வணக்கத்தை ஆதரித்தார்
தன்னிடம் அனுப்பப்பட்ட இரண்டு குதிரை வீரர்களிடம் யெகூ எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்; பின்னர், தனித்தனி ரதங்களில் வந்த யோராம் ராஜாவையும் அவருடன் கூட்டுச் சேர்ந்திருந்த யூதாவின் ராஜாவாகிய அகசியாவையும் சந்தித்தார். “யெகூவே, சமாதானமா” என்று யோராம் கேட்டார். அப்போது, “உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது” என்று யெகூ பதிலளித்தார். இந்தப் பதிலைக் கேட்ட யோராம் பயந்துபோய் தன் ரதத்தைத் திருப்பிக்கொண்டு தப்பிப்போக முயன்றார். ஆனால், யெகூ அவரைவிட வேகமாகச் சென்று அவரைப் பிடித்துவிட்டார்! யெகூ வில்லை நாணேற்றி யோராமுடைய நெஞ்சிலே பாய்ச்சினார்; அந்த ராஜா தன் ரதத்திலே சுருண்டுவிழுந்து செத்தார். அகசியா எப்படியோ தப்பித்துவிட்டார்; பிற்பாடு, அவரையும் யெகூ தேடிக் கண்டுபிடித்து வெட்டிப்போடும்படி செய்தார்.—2 இரா. 9:22-24, 27.
ஆகாபின் வீட்டாரில் அடுத்து தீர்த்துக்கட்டப்படவிருந்தவள் கெட்ட ராணியான யேசபேல். ‘சபிக்கப்பட்ட ஸ்திரீ’ என்று அவளை யெகூ குறிப்பிட்டது பொருத்தமானதே. யெஸ்ரயேலுக்கு யெகூ ரதத்தில் விரைந்தபோது அவள் தன் மாளிகையின் ஜன்னல் வழியாய் எட்டிப் பார்ப்பதைக் கண்டார். யெகூ கொஞ்சமும் காலம்தாழ்த்தாமல் உடனடியாக, அவளை ஜன்னலிலிருந்து கீழே தள்ளும்படி பிரதானிகளுக்குக் கட்டளையிட்டார். இஸ்ரவேலர் அனைவரையும் நெறிகெட்டுப் போகச் செய்த அந்த யேசபேல்மீது தன்னுடைய குதிரைகளை ஓட்டிக்கொண்டு சென்றார். பிறகு, கெட்ட ராஜாவான ஆகாபின் வீட்டாரில் இன்னும் ஏராளமானோரை அவர் வெட்டி வீழ்த்த ஆரம்பித்தார்.—2 இரா. 9:30-34; 10:1-14.
யெகூ பக்திவைராக்கியத்தோடு உண்மை வணக்கத்தை ஆதரித்தார்
யெகூ பேரளவான இரத்தத்தைச் சிந்தினார் என்பது உண்மைதான். என்றாலும், யேசபேல் மற்றும் அவளுடைய குடும்பத்தாருடைய கொடுங்கோல் ஆதிக்கத்திலிருந்து இஸ்ரவேலரை விடுவித்த தைரியசாலி என்று பைபிள் அவரைக் குறிப்பிடுகிறது. தைரியமும் திடத்தீர்மானமும் பக்திவைராக்கியமும் உடைய ஒருவரே இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருக்க முடியும். பைபிள் அகராதி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “அது கடினமான வேலை, தீவிரத்துடன் முற்றும் முழுமையாக நிறைவேற்ற வேண்டியிருந்த வேலை. சாதாரண முயற்சி எடுத்திருந்தால் இஸ்ரவேலிலிருந்து பாகால் வணக்கத்தை வேரோடு அகற்ற முடியாமல் போயிருக்கலாம்.”
இன்றுள்ள சூழ்நிலையில் கிறிஸ்தவர்களும் யெகூ வெளிக்காட்டிய சில குணங்களையே வெளிக்காட்ட வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, யெகோவா கண்டனம் செய்கிற ஏதோவொரு காரியத்தில் ஈடுபடும் ஆசை வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? உடனுக்குடனும், தைரியத்துடனும், பக்திவைராக்கியத்துடனும் அதை விட்டொழிக்க வேண்டும். தேவபக்தியை வெளிக்காட்டும் விஷயத்தில் நாம் வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகூ பக்திவைராக்கியத்தோடு உண்மை வணக்கத்தை ஆதரித்தார்
இஸ்ரவேலும் யூதாவும் தனித்தனி ராஜ்யங்களாக இருக்க வேண்டுமென்றால் அவை வணக்கத்தில் பிரிந்திருக்க வேண்டுமென யெகூ ஒருவேளை நினைத்திருக்கலாம். எனவே, தனக்கு முன்பு இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களைப் போலவே கன்றுக்குட்டி வணக்கத்தை ஆதரிப்பதன் மூலம் அந்த இரு தேசங்களையும் பிரித்து வைக்க முயன்றார். ஆனால் இது, அவரை ராஜாவாக்கிய யெகோவாவின்மீது அவருக்கு நம்பிக்கை இல்லாததையே காட்டியது.
யெகூ யெகோவாவின் ‘பார்வைக்குச் செம்மையானதை நன்றாய்ச் செய்தார்’; அதனால் யெகோவா அவரைப் பாராட்டினார். என்றாலும் யெகூ, “ஆண்டவரின் சட்டத்தைத் தன் முழு இதயத்தோடு பின்பற்றவில்லை.” (2 இரா. 10:30, 31, பொ.மொ.) யெகூ என்னவெல்லாம் செய்திருந்தார் என்பதை எண்ணிப் பார்க்கும்போது அவர் இவ்வாறு நடந்துகொண்டது உங்களுக்கு ஆச்சரியத்தையும் அதேசமயத்தில் வேதனையையும் அளிக்கலாம். என்றாலும், இது நமக்கு ஒரு பாடத்தைப் புகட்டுகிறது. யெகோவாவுடன் நமக்குள்ள பந்தத்தை நாம் ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு நாளும் அவரிடம் உண்மைப்பற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்; அதற்கு, அவருடைய வார்த்தையைப் படிக்க வேண்டும், தியானிக்க வேண்டும், மனந்திறந்து ஜெபம் செய்ய வேண்டும். ஆக, முழு இருதயத்தோடு யெகோவாவின் சட்டத்தை எப்போதும் பின்பற்ற நாம் மிகக் கவனமாக இருப்போமாக.—1 கொ. 10:12.
நவம்பர் 28–டிசம்பர் 4
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 11-12
“பதவி வெறிபிடித்த அகங்காரி தண்டிக்கப்படுகிறாள்”
யோய்தா தைரியமாக நடந்துகொண்டார்
யேசபேலுக்கு அத்தாலியாள் என்ற மகள் இருந்தாள். அவளும் தன் அம்மா மாதிரியே ரொம்ப மோசமானவள். அவளை யூதாவின் ராஜா கல்யாணம் செய்துகொண்டார். அத்தாலியாளின் கணவர் இறந்த பிறகு, அவளுடைய மகன் யூதாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அவரும் இறந்த பிறகு, அத்தாலியாள் ஆட்சி செய்ய ஆரம்பித்தாள். தன்னுடைய இடத்தை யாரும் பிடித்துவிடக் கூடாது என்று நினைத்தாள். அதனால், ராஜ பரம்பரையையே அழித்துப்போட முயற்சி செய்தாள். தன்னுடைய பேரன்களைக்கூட கொன்றுபோட்டாள். எல்லாரும் அவளைப் பார்த்து பயந்தார்கள்.
அத்தாலியாள் செய்தது பெரிய தப்பு என்பது தலைமைக் குரு யோய்தாவுக்கும் அவருடைய மனைவி யோசேபாளுக்கும் தெரியும். அதனால், தங்களுடைய உயிரைக்கூட பெரிதாக நினைக்காமல், அத்தாலியாளின் பேரன்களில் ஒருவனைக் காப்பாற்றினார்கள். அவன் பெயர் யோவாஸ். குழந்தையாக இருந்த அவனை ஆலயத்தில் வைத்து வளர்த்தார்கள்.
யோய்தா தைரியமாக நடந்துகொண்டார்
யோவாசுக்கு ஏழு வயதானபோது, யோய்தா எல்லா தலைவர்களையும் லேவியர்களையும் ஒன்றுகூட்டி, ‘ஆலயத்தின் கதவுகளுக்குப் பக்கத்தில் காவலுக்கு நில்லுங்கள். யாரையும் உள்ளே விடாதீர்கள்’ என்று சொன்னார். பிறகு யோவாசை யூதாவின் ராஜாவாக்கி, அவன் தலையில் கிரீடத்தை வைத்தார். மக்கள் எல்லாரும், ‘ராஜா வாழ்க!’ என்று சத்தமாகச் சொன்னார்கள்.
மக்கள் போடுகிற சத்தம் அத்தாலியாள் ராணியின் காதில் விழுந்தது. அவள் வேகவேகமாக ஆலயத்துக்கு வந்தாள். புது ராஜாவைப் பார்த்ததும், “சதி! சதி!” என்று கத்தினாள். தலைவர்கள் அந்தப் பொல்லாத ராணியை இழுத்துக்கொண்டு போய் கொன்றுபோட்டார்கள். ஆனால், அவளால் கெட்டுப்போயிருந்த தேசத்தை எப்படிச் சரிசெய்வது?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1265-1266
யோவாஸ்
தலைமைக் குரு யோய்தா இறந்த பிறகு யோவாஸ் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டார். ஆனாலும், தொடர்ந்து உயிர்வாழவும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கவும் யெகோவா அவரை அனுமதித்தார். ஏன்? ஏனென்றால், மேசியா வர வேண்டிய தாவீதின் வம்சம் அழிவின் வாசலுக்கே போய்விட்டது. அந்த வம்சத்தை மறுபடியும் காப்பாற்றுவதற்குத்தான் யெகோவா அப்படிச் செய்தார்.—2ரா 12:1-3; 2நா 24:1-3; 25:1.
டிசம்பர் 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 13-15
“முழு முயற்சி முடிவில்லாத ஆசீர்வாதங்களைத் தரும்!”
கிறிஸ்துவை முழுமையாய்ப் பின்பற்றுகிறீர்களா?
11 கடவுளுடைய சேவையில் பக்திவைராக்கியமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இஸ்ரவேல் ராஜாவான யோவாஸின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சீரியர்களின் கைகளில் இஸ்ரவேலர் சிக்கிக்கொள்வார்களோ என்ற கவலையில் யோவாஸ் அழுதுகொண்டே எலிசா தீர்க்கதரிசியிடம் சென்றார். அப்போது, சீரியா தேசம் இருந்த திசை பார்த்து ஜன்னல் வழியாக ஓர் அம்பை எய்யும்படி யோவாஸிடம் அந்தத் தீர்க்கதரிசி சொன்னார்; அந்த நாட்டின்மீது வெற்றி பெற யெகோவா உதவுவார் என்பதற்கு அது அடையாளமாக இருந்தது. இது, அந்த ராஜாவுக்கு நிச்சயமாகவே உத்வேகத்தை அளித்திருக்க வேண்டும். பின்பு, அம்புகளை எடுத்துத் தரையில் அடிக்கும்படி யோவாஸிடம் எலிசா கூறினார். ஐந்து அல்லது ஆறு முறை அடிப்பதற்குப் பதிலாக யோவாஸ் மூன்றே மூன்று முறை அடித்துவிட்டு நிறுத்திக்கொண்டார். இதைப் பார்த்த எலிசாவுக்குக் கடுங்கோபம் வந்தது. யோவாஸ் தொடர்ந்து அடித்திருந்தால் ‘சீரியரைத் தீர முறியடிப்பார்’ என்பதற்கு அது அடையாளமாக இருந்திருக்கும். ஆனால், யோவாஸ் மூன்று முறை மட்டுமே அடித்ததால் அவர் மூன்று முறை மட்டுமே வெற்றி பெறுவார் என்பதற்கு அது அடையாளமாக இருந்தது. அவர் பக்திவைராக்கியத்தில் குறைவுபட்டதால் முழுமையாக வெற்றி பெற மாட்டார் என்பதை அந்தச் சம்பவம் குறித்துக் காட்டியது. (2 இரா. 13:14-19) இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? யெகோவா நமக்கு அளித்திருக்கும் வேலையை முழு இருதயத்தோடும் பக்திவைராக்கியத்தோடும் செய்தால் மட்டுமே அவர் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார்.
w13-E 11/1 பக். 11 பாரா. 5-6
“அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார்”
யெகோவா யாருக்குப் பலன் கொடுக்கிறார்? “அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்கு” என்று பவுல் சொல்கிறார். இதற்கான கிரேக்க வார்த்தை, ரொம்பத் தீவிரமாகவும் முழுமையாகவும் முயற்சி எடுத்து கடவுளை வணங்குவதைக் குறிக்கிறது. விசுவாசத்தோடு யெகோவாவை வணங்குகிறவர்களுக்கு, அதாவது முழு இதயத்தோடு அவர்மேல் அன்பு காட்டி பக்திவைராக்கியத்தோடு அவரை வணங்குகிறவர்களுக்கு, அவர் பலன் கொடுக்கிறார்.—மத்தேயு 22:37.
அவர்களுக்கு யெகோவா எப்படிப் பலன் கொடுக்கிறார்? பூஞ்சோலை பூமியில் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வைத் தரப்போவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:3, 4) யெகோவா எந்தளவு தாராள குணமுள்ளவர், அவருக்கு நம்மேல் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதையெல்லாம் இந்த வாக்குறுதி காட்டுகிறது. ஆனால் இன்றும்கூட, தன்னை ஊக்கமாகத் தேடுகிறவர்களை யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறார். அவர்கள் பைபிள் சொல்கிறபடியும் கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியிலும் நடக்கும்போது, சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள்.—சங்கீதம் 144:15; மத்தேயு 5:3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
13:20, 21—இந்த அற்புதம், மத உருவச் சின்னங்களை வணங்குவதை ஆதரிக்கிறதா? ஆதரிப்பதில்லை. எலிசாவின் எலும்புகள் வணங்கப்பட்டதாக பைபிள் சொல்வதே இல்லை. எலிசா உயிரோடிருக்கையில் செய்த எல்லா அற்புதங்களையும் போல இதுவும் கடவுளுடைய வல்லமையால்தான் நிகழ்ந்தது.
டிசம்பர் 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 16-17
“யெகோவாவின் பொறுமைக்கு எல்லை இருக்கிறது”
it-2-E பக். 908 பாரா 5
சல்மனாசார்
ஓசெயா ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த காலத்தில் (சுமார் கி.மு. 758-740), ஐந்தாவது சல்மனாசார் சமாரியாவுக்கு எதிராகப் போர் செய்தான். அதனால், ஓசெயா அவனுக்கு அடிபணிந்து வருஷாவருஷம் கப்பம் கட்டிவந்தார். (2ரா 17:1-3) ஆனால், கொஞ்சக் காலம் கழித்து ஓசெயா எகிப்தின் ராஜாவான சோவுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து, அசீரிய ராஜாவுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்திவிட்டார். அதனால், சல்மனாசார் அவரை சிறையில் அடைத்தான். சமாரியாவை மூன்று வருஷங்களுக்கு முற்றுகை போட்டான். அந்த மூன்று வருஷங்களுக்குப் பிறகு சமாரியா கைப்பற்றப்பட்டது, இஸ்ரவேலர்கள் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டார்கள்.—2ரா 17:4-6; 18:9-12; ஓசி 7:11-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்; எசே 23:4-10.
it-1-E பக். 414-415
சிறையிருப்பு
வடக்கிலிருந்த பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யமும் சரி, தெற்கிலிருந்த இரண்டு கோத்திர யூதா ராஜ்யமும் சரி, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டன. ஒரே காரணத்துக்காகத்தான் அந்த இரண்டு ராஜ்யங்களுமே சிறைபிடிக்கப்பட்டன: அந்த இரண்டு ராஜ்யங்களைச் சேர்ந்தவர்களுமே, உண்மைக் கடவுளான யெகோவாவை வணங்குவதை விட்டுவிட்டு, பொய்த் தெய்வங்களை வணங்கிக்கொண்டிருந்தார்கள். (உபா 28:15, 62-68; 2ரா 17:7-18; 21:10-15) யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகளை அனுப்பி அவர்களை எச்சரித்துக்கொண்டே இருந்தார், ஆனால் அவர்கள் கேட்கவே இல்லை. (2ரா 17:13) பத்துக் கோத்திர ராஜ்யத்தை ஆட்சி செய்த ராஜாக்களில் யாருமே, அவர்களுடைய முதல் ராஜாவான யெரொபெயாம் ஆரம்பித்து வைத்த பொய் வணக்கத்தை இஸ்ரவேலிலிருந்து துடைத்தழிக்கவில்லை. யூதா ராஜ்யமும் யெகோவா கொடுத்த நேரடியான எச்சரிப்புகளைக் காதில் வாங்கவில்லை, இஸ்ரவேல் சிறைபிடிக்கப்பட்டதைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளவும் இல்லை.—எரே 3:6-10.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 847
சமாரியன்
கி.மு. 740-ல் பத்துக் கோத்திர ராஜ்யம் கைப்பற்றப்பட்ட பிறகுதான் முதல் முறையாக “சமாரியர்கள்” என்ற வார்த்தை பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் அது வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களை மட்டும்தான் குறித்தது, அசீரியர்கள் அங்கே கொண்டுவந்து வாழவைத்த மற்ற தேசத்து மக்களைக் குறிக்கவில்லை. (2ரா 17:29) பிற்பாடு, அந்த இஸ்ரவேலர்கள் மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களைக் கல்யாணம் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது, “சமாரியர்கள்” என்ற வார்த்தை அங்கே வாழ்ந்த இஸ்ரவேலர்களை மட்டுமல்லாமல் மற்ற தேசத்து மக்களையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. இப்படி, அந்தப் பெயர் ஓர் இனத்தையோ தேசத்தையோ குறித்தது. ஆனால் பிற்பாடு அதன் அர்த்தம் மாறிவிட்டது. இயேசுவின் காலத்தில் “சமாரியன்” என்ற பெயர், சமாரியாவின் பகுதியில் பிரபலமாக இருந்த மதப்பிரிவைச் சேர்ந்தவர்களைக் குறித்தது. இவர்களுடைய சில நம்பிக்கைகள், யூத மத நம்பிக்கைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தன.—யோவா 4:9.
டிசம்பர் 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 18-19
“நம் நம்பிக்கையைத் தகர்க்க எதிரிகள் பயன்படுத்தும் முறைகள்”
இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
18:19-21, 25—எகிப்துடன் எசேக்கியா ஒப்பந்தம் செய்துகொண்டாரா? இல்லை. ‘யெகோவாவின் கட்டளைப்படி’ வந்ததாக ரப்சாக்கே மார்தட்டி சொன்னதைப் போலவே அவரது இந்தக் குற்றச்சாட்டும் பொய்யாகவே இருந்தது. ஆனால் உண்மையுள்ள எசேக்கியா ராஜா யெகோவாவையே முற்றிலும் சார்ந்திருந்தார்.
“பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்”
ரப்சாக்கே தந்திரமான நியாய விவாதங்களைப் பயன்படுத்தி மக்களின் மனதில் சந்தேக விதைகளை விதைக்க முயன்றான். ‘யெகோவாவுடைய மேடைகளையும், அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றினான்? . . . இந்தத் தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னோடே சொன்னார்’ என அவன் கூறினான். (2 இரா. 18:22, 25) இவ்வாறு, தம்முடைய மக்கள் மீதுள்ள அதிருப்தியினால் யெகோவா அவர்களுக்காகப் போரிடப் போவதில்லை என ரப்சாக்கே சொன்னான். ஆனால், அது உண்மையே அல்ல. எசேக்கியாவையும் உண்மை வணக்கத்திடம் திரும்பிய யூதர்களையும் யெகோவா நேசித்தார்.—2 இரா. 18:3-7.
ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளும்—இன்று யார்?
14 எருசலேமுக்குத் தென்மேற்கே லாகீஸ் என்ற இடத்தில் அசீரிய ராஜா முகாமிட்டான். அங்கிருந்து எருசலேமுக்குத் தூதுவர்களை அனுப்பி, சரணடையச் சொல்லி மூன்று முறை கட்டளையிட்டான். ரப்சாக்கே என்ற பட்டப்பெயரைக் கொண்ட அவனுடைய பிரதிநிதி பல சூழ்ச்சிகளைக் கையாண்டான். யூதர்களின் சொந்த மொழியான எபிரெய பாஷையில் பேசி மக்களை ஏமாற்ற நினைத்தான். எசேக்கியாவின் பேச்சைக் கேட்காமல், அசீரியரின் பக்கம் சேர்ந்துகொள்ளும்படி யூதர்களை ஊக்குவித்தான். அவர்களை வேறு இடத்திற்கு மாற்றி வசதியாக வாழ வைப்பதாகப் பொய் சொல்லி, ஆசை காட்டி மோசம்போக்க நினைத்தான். (2 இராஜாக்கள் 18:31, 32-ஐ வாசியுங்கள்.) மற்ற தேசங்களின் தெய்வங்கள் எப்படி அசீரியாவின் பிடியிலிருந்து அவர்களது பக்தர்களைக் காப்பாற்ற முடியாமல் போனதோ அப்படியே யெகோவாவும் யூதர்களைக் காப்பாற்ற முடியாது என்று ரப்சாக்கே சொன்னான். இன்று போலவே அன்றும் யெகோவாவின் மக்கள் ஞானமாகச் செயல்பட்டு இப்படிப்பட்ட பொய் பிரச்சாரத்திற்கு மௌனம் சாதித்தார்கள்.—2 இராஜாக்கள் 18:35, 36-ஐ வாசியுங்கள்.
yb74-E பக். 177 பாரா 1
பகுதி 2—ஜெர்மனி
மத நம்பிக்கையை விட்டுக்கொடுப்பதாகக் கையெழுத்துப் போட்டு கொடுக்கச் சொல்லி எஸ்எஸ் காவலர்கள் மற்றவர்களை வற்புறுத்தினார்கள். அதற்கு ரொம்பக் கேவலமான சூழ்ச்சியை அடிக்கடி பயன்படுத்தினார்கள். ஆனால், ஒருவர் கையெழுத்து போட்டுக் கொடுத்ததும், முன்பைவிடப் படுமோசமாக அவரை நடத்தினார்கள். அதைப் பற்றி கார்ல் கிர்ஷட் இப்படிச் சொல்கிறார்: “வேற யாரையும்விட யெகோவாவின் சாட்சிகளைத்தான் எஸ்எஸ் காவலர்கள் ரொம்பக் கொடுமைப்படுத்தினார்கள். யெகோவாவின் சாட்சிகளை சித்திரவதை செய்தால் அவர்கள் கையெழுத்து போட்டுவிடுவார்கள் என்று அந்தக் காவலர்கள் நினைத்தார்கள். கையெழுத்து போடச் சொல்லி அடிக்கடி எங்களை வற்புறுத்தினார்கள். சிலர் கையெழுத்து போட்டுவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் ஒரு வருஷத்துக்கும் மேல் சிறையில்தான் இருந்தார்கள். அந்தச் சமயத்தில், அந்தக் காவலர்கள் அவர்களை வெளிவேஷக்காரர்கள் என்றும் கோழைகள் என்றும் சொல்லி எல்லார் முன்பும் அசிங்கப்படுத்தினார்கள். அதுமட்டுமல்ல, அவர்களை இன்னும் அவமானப்படுத்துவதற்காக, முகாமைவிட்டுப் போவதற்கு முன்பு மற்ற சகோதரர்களைச் சுற்றி நடந்துவர வைத்தார்கள்.”
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 155 பாரா 4
புதைபொருள் ஆராய்ச்சி
அசீரிய ராஜா சனகெரிபை அவனுடைய இரண்டு மகன்களான அத்ரமலேக்கும் சரேத்சேரும் கொன்றுவிட்டதாக பைபிள் சொல்கிறது. அதன் பிறகு சனகெரிபின் இன்னொரு மகனான எசரத்தோன் ராஜாவானதாகவும் பைபிள் சொல்கிறது. (2ரா 19:36, 37) ஆனால், சனகெரிபுடைய ஒரேவொரு மகன்தான் அவனைக் கொன்றதாக ஒரு பாபிலோனிய கல்வெட்டு சொல்கிறது. இதே விஷயத்தைத்தான் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாபிலோனிய மதகுருவும், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபிலோனிய ராஜா நபோனிடஸும்கூட சொன்னார்கள். ஆனால், சமீபத்தில் வேறொரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில், சனகெரிபுக்குப் பிறகு ராஜாவாக ஆன அவனுடைய மகன் எசரத்தோன், தன்னுடைய சகோதரர்கள் (பன்மை) கலகம் செய்து தங்களுடைய அப்பாவைக் கொன்றுவிட்டு தப்பியோடியதாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதைப் பற்றி ஒரு சரித்திர வல்லுநர் இப்படிச் சொல்கிறார்: “பாபிலோனிய கல்வெட்டும், நபோனிடும், பெரோசஸும் சொன்னது தவறு. பைபிள் சொன்னது மட்டும்தான் உண்மை. எசரத்தோன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதால், பைபிள் சொன்ன சின்னச் சின்ன விவரங்கள்கூட உண்மை என்பது நிரூபணமாகிவிட்டது. பாபிலோனிய பதிவுகளைவிட பைபிள்தான் ரொம்ப துல்லியமானது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இது ரொம்ப முக்கியமான ஒரு உண்மை. ஏனென்றால், பைபிள் பதிவுகளின் அதே காலத்தைச் சேர்ந்த மற்ற பதிவுகளை நாம் கண்மூடித்தனமாக நம்பிவிட முடியாது என்பதை இது காட்டுகிறது.”
டிசம்பர் 26–ஜனவரி 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 ராஜாக்கள் 20-21
“ஜெபம் யெகோவாவைச் செயல்படத் தூண்டியது”
ip-1 பக். 394 பாரா 23
ராஜாவின் விசுவாசத்திற்கு கிடைத்த பலன்
23 யூதாவுக்கு எதிராக சனகெரிப் முதன்முறையாக படையெடுத்து வந்த சமயத்தில், எசேக்கியா மரணப்படுக்கையில் விழுகிறார். அவர் இறந்துவிடுவார் என ஏசாயா அவரிடம் சொல்கிறார். (ஏசாயா 38:1) 39 வயதே நிரம்பிய அந்த ராஜாவை துக்கம் வாட்டுகிறது. தன்னுடைய உடல் நலனைப் பற்றி மட்டுமல்ல, மக்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும் அதிக கவலைப்படுகிறார். அசீரியர்களால் தாக்கப்படும் அபாயத்தில் யூதாவும் எருசலேமும் இருக்கிறது. எசேக்கியா இறந்துவிட்டால், யார் போரை முன்நின்று நடத்த முடியும்? அப்போது, எசேக்கியாவுக்கு அடுத்ததாக ஆட்சிக்கு வர அவருக்கு குமாரர் எவரும் இல்லை. தன்மீது இரக்கம் காட்டும்படி, எசேக்கியா யெகோவாவிடம் கெஞ்சி மன்றாடுகிறார்.—ஏசாயா 38:2, 3.
முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
16 பிறகு, எசேக்கியாவுக்கு நோய் வந்து, சாகும் நிலைக்குப் போய்விட்டார். அந்தக் கஷ்டமான சூழ்நிலையில், தான் உண்மையாக நடந்துகொண்டதை நினைத்துப் பார்க்கும்படியும், தனக்கு உதவி செய்யும்படியும் அவர் யெகோவாவிடம் கெஞ்சினார். (2 ராஜாக்கள் 20:1-3-ஐ வாசியுங்கள்.) எசேக்கியா செய்த ஜெபத்தை யெகோவா கேட்டார், அவரை குணமாக்கினார். கடவுள் நம்முடைய நோய்களை அற்புதமான விதத்தில் குணமாக்குவார் என்றும், ரொம்ப நாள் வாழ்வதற்கு நமக்கு உதவுவார் என்றும் நாம் இன்று எதிர்பார்க்க முடியாது என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். இருந்தாலும், எசேக்கியாவைப் போல நாம் யெகோவாவை நம்பியிருக்கலாம். “யெகோவாவே, நான் எப்போதும் உங்களுக்கு உண்மையாக நடந்திருக்கிறேன், முழு இதயத்தோடு கீழ்ப்படிந்திருக்கிறேன் . . . தயவுசெய்து இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்” என்று அவரிடம் சொல்லலாம். நீங்கள் நோயால் அவதிப்படும் சமயத்தில்கூட யெகோவா உங்களை அக்கறையோடு கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறீர்களா?—சங். 41:3.
g01 8/8 பக். 13 பாரா 4
ஜெபம் எனக்கு எப்படி உதவ முடியும்?
பைபிள் காலங்களில் விசுவாசமிக்க சிலருடைய ஜெபங்களுக்கு நேரடியாக, அற்புதமாகவும்கூட பதில் கிடைத்திருக்கிறது. உதாரணமாக, தனக்கு தீராத வியாதி இருப்பது எசேக்கியாவுக்கு தெரிந்தபோது உயிர்ப்பிச்சைக் கேட்டு கடவுளிடம் ஜெபித்தார். “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்” என கடவுள் அவருக்கு பதிலளித்தார். (2 இராஜாக்கள் 20:1-6) இதைப் போலவே கடவுள் பயத்துடன் வாழ்ந்த மற்ற ஆண்களும் பெண்களும்கூட தங்கள் சார்பில் கடவுள் செயல்பட்டதை அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.—1 சாமுவேல் 1:1-20; தானியேல் 10:2-12; அப்போஸ்தலர் 4:24-31; 10:1-7.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 240 பாரா 1
தூக்குநூல்
ஒரு கட்டிடத்தைச் சரியாகக் கட்டுவதற்கு தூக்குநூல் (தூக்குக்குண்டு அல்லது மட்டப்பலகை) பயன்படுத்தப்படலாம். அல்லது, ஒரு கட்டிடம் நல்ல நிலையில் இருக்கிறதா இல்லையா, அதைப் பாதுகாக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு பண்ணுவதற்கு அது பயன்படுத்தப்படலாம். “சமாரியாவை அளந்த அதே அளவுநூலால் எருசலேமையும் அளப்பேன்; ஆகாப் வீட்டாருக்குப் பயன்படுத்திய அதே தூக்குநூலை எருசலேமுக்கும் பயன்படுத்துவேன்” என்று யெகோவா சொல்லியிருந்தார். அவர் ஏற்கெனவே சமாரியாவை அளந்து பார்த்து, ஆகாப் ராஜாவின் வம்சத்தார் மோசமாக வாழ்ந்துவந்ததாக முடிவு செய்திருந்தார். அதனால், அவர்களை அழித்தார். அதேபோல், அவர் எருசலேமையும் அதன் ராஜாக்களையும் நியாயந்தீர்த்து, அவர்களுடைய அக்கிரமத்தை அம்பலமாக்கப்போவதாகவும், அந்த நகரத்தை அழிக்கப்போவதாகவும் சொன்னார். (2ரா 21:10-13; 10:11) “நான் நியாயத்தை அளவுநூலாக ஆக்குவேன். நீதியை மட்டப்பலகையாக ஆக்குவேன்” என்று ஏசாயா மூலம் யெகோவா சொல்லியிருந்தார். யாரெல்லாம் உண்மையிலேயே யெகோவாவின் ஊழியர்கள், யாரெல்லாம் அவருடைய ஊழியர்கள் இல்லை என்பதை அவருடைய நீதியான தராதரங்கள் காட்டிக்கொடுத்துவிடும். அதைப் பொறுத்து, அவர்கள் ஒன்று பாதுகாக்கப்படுவார்கள் (காப்பாற்றப்படுவார்கள்) அல்லது அழிக்கப்படுவார்கள்.—ஏசா 28:14-19.