வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
நவம்பர் 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 13-14
“மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?”
தீர்க்காயுசுடன் வாழ தீரா ஆசை
இது 3,500 வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. ஆனாலும், மனிதரின் குறுகிய கால வாழ்க்கையைப் பற்றிய இந்தக் கருத்தை மறுப்போர் இன்றும்கூட ஒருசிலரே. மான்போல துள்ளிக் குதிக்கும் பருவம் விரைவில் மாயமாக மறைந்துவிடுகிறது, பின்பு தள்ளாடும் வயது, தடுக்கி விழுந்தால் குழி—சவக்குழி. இதுதான் மனித வாழ்க்கை. இதை அறியாதோர் இல்லை. ஆகவே, தீர்க்காயுசுடன் வாழ்வதற்கான வழிமுறைகள் மனித சரித்திரம் முழுவதிலும் மண்டிக்கிடந்ததில் ஆச்சரியமில்லை.
யோபுவின் காலத்தில் எகிப்தியர் இளமை திரும்ப வீணான முயற்சியில் மிருகங்களின் விரைகளை சாப்பிட்டார்கள். இடைநிலை காலத்திய இரசவாதத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தீர்க்காயுசுடன் வாழ வழிநடத்தும் ஜீவாமிர்தத்தை தயாரிப்பதாகும். தங்கபஸ்பம் சாவாமையை தரும், ஆகவே அதை தங்கத் தட்டிலிருந்து சாப்பிட்டால் சாவில்லா வாழ்வு கிட்டும் என அநேக இரசவாதிகள் நம்பினார்கள். தியானம், சுவாச பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் போன்ற நுட்பங்களை பயன்படுத்தினால் உடலின் வேதியியல் அமைப்பை மாற்றி சாவாமையை அடைய முடியும் என பூர்வ சீன தாவோ மதத்தவர்கள் கருதினார்கள்.
ஸ்பானிய ஆய்வுப் பயணி ஜ்வான் பான்ட்ஸ் டே லீயோன் என்பவர் இளமை ஊற்றின் மனந்தளராத ஆராய்ச்சிக்குப் பேர் பெற்றவர். இளம் கன்னிப் பெண்களை இளவேனிற்காலத்தில் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, அவர்கள் வெளிவிடும் சுவாசத்தை பாட்டில்களில் சேர்த்து ஆயுள் காலத்தை நீடிக்க வைக்கும் அருமருந்தாக பயன்படுத்தலாம் என ஹெர்மிபஸ் ரெடிவிவஸ் என்ற புத்தகத்தில் பரிந்துரை செய்தார் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர். இந்த வழிமுறைகளில் எதுவும் பலனளிக்கவில்லை என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
வெட்டப்பட்ட மரம் மறுபடியும் துளிர்க்குமா?
லெபனானில் கம்பீரமாக நிற்கும் கேதுரு மரத்திற்கு முன்பு வளைந்து நெளிந்து நிற்கும் ஒலிவ மரம் (ஆலிவ் மரம்) அவ்வளவு அழகாக தெரியாதுதான். இருந்தாலும் மழை, வெயில், வறட்சி என்று எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த மரம் தாக்குப்பிடித்து நிற்கும். 1,000 வருடங்கள் பழமையான ஒலிவ மரங்கள் இன்றும்கூட அப்படியே இருக்கின்றன. ஒலிவ மரத்தின் வேர்கள் ஆழமாகப் பரந்து, விரிந்து இருப்பதால் அதை அடியோடு வெட்டினாலும் அது மறுபடியும் வளரும். வேர்கள் உயிரோடு இருந்தால் மட்டும் போதும், அந்த மரம் மறுபடியும் துளிர்க்கும்.
இறந்துபோனாலும் கடவுள் தன்னை மறுபடியும் உயிரோடு எழுப்புவார் என்று யோபு உறுதியாக நம்பினார். (யோபு 14:13-15) கடவுள்மீது அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கு ஒரு மரத்தைப் பற்றி சொன்னார். ஒருவேளை அவர் ஒலிவ மரத்தைப் பற்றி சொல்லியிருக்கலாம். “ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும்” என்று அவர் சொன்னார். வெட்டப்பட்ட ஒரு ஒலிவ மரத்தின் அடிமரம் வறட்சியினால் காய்ந்து போயிருந்தாலும் மழை பெய்யும்போது அந்த அடிமரம் மறுபடியும் துளிர்க்கும். அது “இளமரம்போலக் கிளைவிடும்.”—யோபு 14:7-9.
“நீர் ஏங்குகிறீர்”
யோபு சொன்ன வார்த்தைகளிலிருந்து யெகோவா எவ்வளவு கனிவானவர் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். யோபுவைப் போலவே அநேகர் தங்களை யெகோவாவின் கையில் ஒப்படைத்து, அவருக்குப் பிடித்தமான விதத்தில் தங்களைச் செதுக்கிச் சீராக்க அனுமதித்திருக்கிறார்கள்; அப்படிப்பட்டவர்கள்மீது அவருக்குத் தனி பாசம் உள்ளது. (ஏசாயா 64:8) தம்முடைய உண்மையுள்ள வணக்கத்தாரை யெகோவா விலைமதிப்புள்ள பொக்கிஷமாய்க் கருதுகிறார். தமக்கு விசுவாசமாய் இருந்து இறந்துபோனவர்களைப் பார்க்க அவர் ‘மிகவும் ஏங்குகிறார்.’ இங்கே, ‘ஏங்குகிறார்’ என்பதற்கான எபிரெய வார்த்தையைப் பற்றி ஓர் அறிஞர் இப்படிச் சொல்கிறார்: ‘ஒருவருக்கு இருக்கிற அளவுகடந்த ஏக்கத்தை இந்த வார்த்தை மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது என்பதில் சந்தேகமே இல்லை.” ஆம், தம்மை வழிபடுகிறவர்களை யெகோவா நினைவுகூருகிறார், அவர்களுக்கு மீண்டும் உயிரளிக்கவும் ஏங்குகிறார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E 191
சாம்பல்
மதிப்பில்லாததை, முக்கியத்துவம் இல்லாததை, குறிப்பதற்காகவும் சாம்பல் பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, ஆபிரகாம் யெகோவாவிடம் தன்னைப் பற்றி சொல்லும்போது, “நான் வெறும் தூசிதான், சாம்பல்தான்“ என்று சொன்னார். (ஆதி. 18:27; இவற்றையும் பாருங்கள்: ஏசா. 44:20; யோபு 30:19) யோபுவும் தன்னுடைய போலி நண்பர்களின் வார்த்தைகளை, “உங்களுடைய தத்துவங்கள், வெறும் சாம்பல்தான்” என்று சொன்னார்.—யோபு 13:12.
நவம்பர் 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 15-17
“ஆறுதல் சொல்லும்போது எலிப்பாசைப் போல நடந்துகொள்ளாதீர்கள்”
தவறான சிந்தனையை அறவே தவிர்த்திடுங்கள்!
கடவுள் நம்மிடம் அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பதால் நாம் என்னதான் செய்தாலும் அவர் திருப்தியடையப் போவதில்லை என்ற கருத்தையே எலிப்பாஸ் மூன்று முறை பேசியபோதும் வெளிப்படுத்தினார். “கேளும், அவர் [கடவுள்] தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் பழியைச் சுமத்துகிறாரே” என யோபுவிடம் சொன்னார். (யோபு 4:18, NW) பிறகு எலிப்பாஸ் கடவுளைப் பற்றி சொன்னபோது, “இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல” என்றார். (யோபு 15:15) மேலுமாக, “நீர் நீதிமானாயிருப்பதனால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ?” என யோபுவிடம் கேட்டார். (யோபு 22:3) பில்தாத்தும்கூட இந்தக் கருத்தை ஆமோதித்து, “சந்திரனை அண்ணாந்து பாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல” என்று கூறினார்.—யோபு 25:5.
இப்படிப்பட்ட சிந்தனைகள் நம்மீது செல்வாக்கு செலுத்தாதபடிக்கு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கடவுள் நம்மிடம் அளவுக்கதிகமாக எதிர்பார்க்கிறார் என்ற எண்ணத்தை அது நம் மனதில் விதைத்துவிடும். யெகோவாவிடமுள்ள நம் உறவிற்கே அது பங்கம் விளைவித்துவிடும். அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட எண்ணத்திற்கு இடம் கொடுத்துவிட்டால் நமக்குச் சிட்சை கொடுக்கப்படும்போது, நாம் எவ்வாறு நடந்துகொள்வோம்? நம்முடைய இருதயம் மனத்தாழ்மையுடன் சிட்சையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, “கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும் [அதாவது, சினங்கொள்ளும்].” அதோடு, அவர்மீது வெறுப்பு வந்துவிடும். (நீதிமொழிகள் 19:3) கடவுளிடமுள்ள நம் உறவிற்கு எப்பேர்ப்பட்ட பங்கம்!
இயேசுவைப் போல் மனத்தாழ்மையாக, கனிவாக இருங்கள்
16 கனிவாக பேசுங்கள். நமக்கு கனிவும் கரிசனையும் இருந்தால் ‘சோகமாயிருக்கிறவர்களிடம் ஆறுதலாகப் பேசுவோம்.’ (1 தெ. 5:14) எப்படி ஆறுதலாகப் பேசலாம்? அவர்கள்மீது நமக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லலாம். அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களுக்காகவும் திறமைகளுக்காகவும் அவர்களை பாராட்டலாம். யெகோவா அவர்களை ரொம்ப நேசிப்பதால்தான் தம்முடைய மக்களில் ஒருவராக அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தலாம். (யோவா. 6:44) ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களை’ யெகோவா ஒருநாளும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையை கொடுக்கலாம். (சங். 34:18) சோகமாக இருப்பவர்களிடம் நாம் இப்படி கனிவாக பேசும்போது அவர்களுக்கு ரொம்ப தெம்பாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.—நீதி. 16:24.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யோபு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
7:9, 10; 10:21; 16:22—உயிர்த்தெழுதலில் யோபுவுக்கு நம்பிக்கை இல்லையென இந்த வசனங்கள் காட்டுகின்றனவா? தனக்கு வெகு சீக்கிரத்தில் சம்பவிக்கப்போவதைப் பற்றியே யோபு இந்த வசனங்களில் சொல்கிறார். அப்படியானால், அவர் எதை அர்த்தப்படுத்தினார்? ஒன்று, தான் மரிக்க வேண்டியிருந்தால் தன் காலத்தைச் சேர்ந்தவர் யாராலுமே தன்னைப் பார்க்க முடியாதென அர்த்தப்படுத்தியிருக்கலாம். அவர்களுடைய கண்ணோட்டத்தில், கடவுளுடைய குறிக்கப்பட்ட காலம் வரும்வரை அவர் இனி வீட்டிற்குத் திரும்பி வரப்போவதுமில்லை, அவரைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதுமில்லை. இரண்டாவது, யாருமே ஷியோலிலிருந்து தானாகத் திரும்பி வரமுடியாது என அர்த்தப்படுத்தியிருக்கலாம். எப்படியானாலும், உயிர்த்தெழுதலில் யோபுவுக்கு நம்பிக்கை இருந்ததை யோபு 14:13-15 தெளிவாகக் காட்டுகிறது.
நவம்பர் 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 18-19
“நம் சகோதர சகோதரிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்”
இயேசு சிந்திய கண்ணீர்—நமக்கு என்ன பாடம்?
9 துக்கத்தில் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவாக இருங்கள். மார்த்தாள், மரியாளோடு சேர்ந்து இயேசு அழுதது மட்டுமல்லாமல் அவர்கள் சொன்னதைக் கவனமாகக் கேட்டார், அவர்களிடம் ஆறுதலாகப் பேசினார். துக்கத்தில் தவிப்பவர்களிடம் இயேசுவைப் போலவே நாமும் ஆறுதலாகப் பேசலாம். ஆஸ்திரேலியாவில் இருக்கிற டான் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “என் மனைவி இறந்தப்ப, அந்த சூழ்நிலைய சமாளிக்க மத்தவங்களோட உதவி எனக்கு தேவைப்பட்டுச்சு. நிறைய தம்பதிகள், ராத்திரி பகல்னு பாக்காம நான் எப்ப பேசுனாலும் காதுகொடுத்து கேட்டாங்க. என் மனசில இருக்கறத எல்லாம் கொட்டுனப்ப பொறுமையா கேட்டாங்க. நான் அழறத அவங்க தர்மசங்கடமா நினைக்கல. எனக்கு நிறைய உதவி செஞ்சாங்க. கார் கழுவுறது, மளிகை சாமான் வாங்கறது, சமைக்கிறது, இதெல்லாம் என்னால செய்ய முடியாதப்ப அவங்க செஞ்சு கொடுத்தாங்க. அடிக்கடி என்கூட சேர்ந்து ஜெபம் பண்ணுனாங்க. அவங்க எனக்கு உண்மையான நண்பர்களாவும் ‘கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரர்களாகவும்’ இருந்தாங்க.”—நீதி. 17:17.
பாசத்துக்குரிய ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது
16 சபைநீக்கம் செய்யப்பட்டவருடைய குடும்பத்தாருக்குத் தொடர்ந்து ஆதரவு காட்டுங்கள். உங்களுடைய அன்பும் ஆறுதலும் இப்போது அவர்களுக்கு ரொம்பவே தேவை. (எபி. 10:24, 25) சில சமயங்களில், அவர்களையும் சபைநீக்கம் செய்யப்பட்டவர்களைப் போல் நடத்த வாய்ப்பிருக்கிறது. தயவுசெய்து அப்படிச் செய்யாதீர்கள்! பெற்றோர்கள் யெகோவாவைவிட்டு விலகினாலும், சில பிள்ளைகள் சத்தியத்தில் உறுதியாக இருக்கிறார்கள். அதுபோன்ற இளம் பிள்ளைகளை நாம் மனதார பாராட்ட வேண்டும். எப்போதுமே அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இப்போது, மரியா என்ற சகோதரியைப் பற்றிப் பார்க்கலாம். அவருடைய கணவர் சபைநீக்கம் செய்யப்பட்டார், குடும்பத்தைவிட்டும் போய்விட்டார். “சகோதர சகோதரிகள் சிலர் என்னோட வீட்டுக்கு வந்து எனக்கு சமையல் செஞ்சு கொடுத்தாங்க. என் பிள்ளைங்களோட சேர்ந்து குடும்ப வழிபாடு செஞ்சாங்க. என்னோட வலியை புரிஞ்சுக்க அவங்க முயற்சி பண்ணுனாங்க. என்னோட சேர்ந்து அழுதாங்க. என்னை பத்தி மத்தவங்க தப்பான விஷயங்கள பேசினப்ப, எனக்காக அவங்க பேசுனாங்க. இடிஞ்சுபோய் உக்காந்திருந்த என்னை தூக்கி நிறுத்துனாங்க!” என்று அவர் சொல்கிறார்.—ரோ. 12:13, 15.
w90 9/1 22 ¶20
நீங்கள் தகுதிபெற நாடுகிறீர்களா?
20 அவர் தானாகவே அந்தச் சிலாக்கியத்தை விட்டுகொடுத்தாலும், விலக்கப்படும்போது, ஒரு முன்னாள் கண்காணி அல்லது உதவி ஊழியர் மீது கவலையின் அழுத்தம் வரலாம் என்பதை மூப்பர் குழு உணர வேண்டும். அவர் சபை நீக்கம் செய்யப்படவில்லையென்றாலும், ஆனால் அந்தச் சகோதரர் மனச்சோர்வுடன் இருப்பதை மூப்பர்கள் கவனித்தால், அவர்கள் அன்பான ஆவிக்குரிய உதவியை கட்டாயமாகக் கொடுக்க வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:14) அவர் சபையில் தேவைப்படுகிறார் என்பதை உணர அவருக்கு அவர்கள் உதவிபுரிய வேண்டும். ஆலோசனை வழங்குவது தேவைப்பட்டாலும், மனத்தாழ்மையும் நன்றியுமுள்ள ஒரு மனிதன் மறுபடியுமாக சபையில் கூடுதலான ஊழிய சிலாக்கியங்களைப் பெற அவ்வளவு நீண்ட காலம் ஆகாது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
தயவான ஒரு வார்த்தையின் வல்லமை
என்றபோதிலும், யோபுவுக்கே ஊக்குவிப்பு தேவைப்பட்டபோது, எலிப்பாஸும் அவனுடைய தோழர்களும் தயவான வார்த்தைகளைச் சொல்லவில்லை. அவருடைய துன்பத்துக்கு யோபை குறைகூறி இரகசியமாக ஏதோவொரு தவற்றை அவர் செய்திருக்கவேண்டும் என்று அவர்கள் மறைமுகமாக சொன்னார்கள். (யோபு 4:8) இன்டர்பிரட்டர்ஸ் பைபிள் இவ்வாறு குறிப்பு சொல்கிறது: “யோபுவுக்குத் தேவையாயிருப்பது மனித இதயத்தின் இரக்கமே. அவர் பெற்றுக்கொள்வதோ தொடர்ச்சியாக முற்றிலும் ‘மெய்யான’ மற்றும் முற்றிலும் அழகாக இருக்கும் மதசம்பந்தமாக வழங்கி அலுத்துப்போன சொற்றொடர்களும் நன்னெறி வெற்றுரைகளுமே.” எலிப்பாஸ் மற்றும் அவன் தோழர்களின் பேச்சைக் கேட்டபோது அது யோபுவை அத்தனை குழப்பமடையச் செய்ததால், அவர் பின்வருமாறு கூக்குரலிட கட்டாயப்படுத்தப்பட்டார்: “நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?”—யோபு 19:2.
நம்முடைய யோசனையில்லாத தயவற்ற வார்த்தைகளினால் கடவுளுடைய உடன் ஊழியன் ஒருவர் துயரத்தில் கூக்குரலிட நாம் ஒருபோதும் காரணராயிருக்க மாட்டோம். (உபாகமம் 24:15-ஐ ஒப்பிடவும்.) பைபிள் நீதிமொழி ஒன்று எச்சரிக்கிறது: ‘நீங்கள் சொல்வது உயிரைப் பாதுகாக்கக்கூடும் அல்லது அதை அழித்திடக்கூடும்; ஆகவே உங்கள் வார்த்தைகளின் பின்விளைவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.’—நீதிமொழிகள் 18:21, TEV.
நவம்பர் 27–டிசம்பர் 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 20-21
“நீதிமான் யாரென்று பணம் தீர்மானிக்காது”
நீங்கள் ‘தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய்’ இருக்கிறீர்களா?
12 இயேசு கூறிய வாக்கியத்தில், தேவனிடம் ஐசுவரியவானாய் இருப்பதும் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைப்பதும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. ஆம், பொருள் செல்வங்களைச் சேர்த்து வைப்பதும் நம்மிடம் உள்ள பொருள்களை மகிழ்ந்து அனுபவிப்பதுமே நம் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக இருக்கக்கூடாது என்பதை இயேசு வலியுறுத்தினார். மாறாக, யெகோவாவிடமுள்ள நம் உறவை பலப்படுத்தும் விதத்தில் அந்தச் சொத்துக்களை நாம் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்கையில், யெகோவாவிடமிருந்து நாம் நிறைய ஆசீர்வாதங்களைப் பெற்று அவரிடத்தில் ஐசுவரியவான்களாய் ஆவோம் என்பதில் சந்தேகமேயில்லை. “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 10:22.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w95 1/1 9 ¶19
சாத்தான்மீதும் அவன் செயல்கள்மீதும் வெற்றிபெறுதல்
19 கடவுளுடைய ஊழியராகிய யோபு, எலிப்பாஸ் மற்றும் சோப்பாரின் மூலமாகச் சாத்தான் அளித்த ‘மனங்கலங்கச் செய்யும் எண்ணங்களோடு’ போராட வேண்டியிருந்ததென்பது கவனத்தைத் தூண்டுவதாக உள்ளது. (யோபு 4:13-18, NW; 20:2, 3) இவ்வாறு யோபு ‘சஞ்சலத்தை’ அனுபவித்தார், இது அவருடைய மனதைத் துன்புறுத்தின ‘பயங்கரங்களைப்’ பற்றி ‘சொல்தடுமாறி’ தன்போக்கில் பேசுவதில் விளைவடைந்தது. (யோபு 6:2-4; 30:15, 16) யோபு சொல்வதை எலிகூ அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்து, காரியங்களைப் பற்றியதில் யெகோவாவின் சர்வஞான கருத்தைக் காணும்படி அவருக்கு உள்ளப்பூர்வமாய் உதவிசெய்தார். அவ்வாறே இன்று, தெளிந்துணர்வுள்ள மூப்பர்கள் துன்பப்படுகிறவர்களுக்கு மேலுமாக ‘தொல்லையைக்’ கூட்டாமல், அவர்களுக்காகக் கவலையுள்ளோராக இருக்கின்றனரென்று காட்டுகின்றனர். மாறாக, எலிகூவைப்போல், அவர்கள் பொறுமையுடன் அவர்களுக்குச் செவிகொடுத்துக் கேட்டு பின்பு கடவுளுடைய வார்த்தையாகிய சாந்தப்படுத்தும் எண்ணெய்யைப் பயன்படுத்துகின்றனர். (யோபு 33:1-3, 7; யாக்கோபு 5:13-15) இவ்வாறு, உண்மையான அல்லது கற்பனையான உணர்வதிர்ச்சிகளால் தன் உணர்ச்சிவேகங்கள் தொல்லைப்படுத்தப்படுபவராக இருக்கும் ஒருவர், அல்லது யோபு இருந்ததுபோல் ‘சொப்பனங்களாலும் தரிசனங்களாலும் திகிலடைந்திருப்பவர்,’ சாந்தப்படுத்தும் வேதப்பூர்வ ஆறுதலைச் சபைக்குள் கண்டடையலாம்.—யோபு 7:14; யாக்கோபு 4:7.
டிசம்பர் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 22-24
“மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?”
தவறான சிந்தனையை அறவே தவிர்த்திடுங்கள்!
கடவுள் நம்மிடமிருந்து அளவுக்கதிகமாக எதிர்ப்பார்க்கிறார் என்ற கருத்தோடு நெருங்கிய தொடர்புடைய மற்றொரு கருத்து, மனிதர்கள் கடவுளுக்குப் பிரயோஜனமற்றவர்கள் என்பதே. எலிப்பாஸ் மூன்றாவது முறை பேசியபோது இந்தக் கேள்வியைக் கேட்டார்: “ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?” (யோபு 22:2) இந்த வசனத்தில் மனிதன் கடவுளுக்குப் பிரயோஜனமற்றவன் என்று எலிப்பாஸ் சொல்லாமல் சொன்னார். பில்தாத்தும் அதை ஒத்துக்கொண்டு, “மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?” என்று விவாதித்தார். (யோபு 25:4) எனவே, இவர்களுடைய சிந்தனையின்படி: போயும்போயும் ஒரு சாதாரண மனிதனான யோபு, துணிந்து கடவுளுக்கு முன் நீதிமானாக இருக்க முடியுமா?
இன்று சிலர் தங்களைப் பற்றியே தவறான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தவிக்கிறார்கள். குடும்ப சூழல், வாழ்க்கையின் அழுத்தங்கள், இன வெறியின் பாதிப்புகள் போன்றவை அதற்கு காரணிகளாக இருக்கலாம். ஆனால், சாத்தானும் அவனுடைய பேய்களும்கூட மனிதனை அவ்வாறு உணர வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, நாம் என்னதான் செய்தாலும் சர்வவல்லமையுள்ள கடவுள் திருப்தியடையப் போவதில்லை என்ற சிந்தனையை நம் மனதில் நுழைக்கப் பார்க்கிறார்கள். அவர்களுடைய இந்த வலையில் நாம் சிக்கிவிட்டால் அவ்வளவுதான். நாம் சீக்கிரமாகவே சோர்வடைந்துவிடுவோம். பிறகென்ன, காலம் செல்லச்செல்ல ஜீவனுள்ள தேவனிடமிருந்து வழுவிச் சென்று கடைசியில் ஒரேயடியாகவே விலகிப் போய்விடுவோம்.—எபிரெயர் 2:1; 3:12.
வியாதி, முதுமை போன்றவை நம் பலத்தை உறிஞ்சிவிடுகின்றன. எனவே, ராஜ்ய பிரசங்க வேலையில் முன்பு செய்ததைவிட—அதாவது வாலிப வயதில் ஆரோக்கியமாக, வலுவாக இருந்தபோது செய்ததைவிட—இப்போது மிகக் குறைவாகவே செய்ய முடிகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் நாம் எவ்வளவுதான் செய்தாலும் கடவுள் திருப்தியடையப் போவதில்லை என்ற சிந்தனை நமக்கு வரவேண்டுமென சாத்தானும் அவனுடைய பேய்களும் விரும்புகிறார்கள். இதை நாம் நினைவில் வைப்பது ரொம்பவும் முக்கியம்! இப்படிப்பட்ட சிந்தனையை நாம் அறவே தவிர்த்திட வேண்டும்.
w95 2/15 27 ¶6
பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என்பதில் ஒரு பாடம்
தெய்வீக ஞானத்துக்குப் பதிலாக தனிப்பட்ட அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் யோபுவின் மூன்று தோழர்களும் அவரை மேலுமாக சோர்வடையச் செய்தனர். ‘கடவுள் தம்முடைய ஊழியர்களிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை,’ என்றும் யோபு நீதிமானாக இருந்தாரா இல்லையா என்பது யெகோவாவுக்கு உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்றும்கூட சொல்லும் அளவுக்கு எலிப்பாஸ் சென்றான். (யோபு 4:18; 22:2, 3) அதைவிட அதிக சோர்வுதரும்—அல்லது அதிக உண்மையற்ற—ஒரு குறிப்பைக் கற்பனைசெய்வது கடினமாக இருக்கிறது! இந்தத் தூஷணத்துக்காக யெகோவா எலிப்பாஸையும் அவனுடைய தோழர்களையும் பின்னால் கடிந்துகொண்டது ஆச்சரியமாயில்லை. “நீங்கள் என்னைக்குறித்து உண்மையைப் பேசவில்லை,” என்று அவர் சொன்னார். (யோபு 42:7, NW) ஆனால் மிகவும் தீங்குசெய்யும் வற்புறுத்தலான கருத்துக்கள் இன்னும் வரவிருந்தன.
யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும் இளைஞர்கள்
10 பைபிள் பதிவில் காட்டப்பட்டுள்ளபடி, யோபுவின் உத்தமத்தை மட்டுமல்ல, கடவுளை சேவிக்கும் மற்ற எல்லாருடைய உத்தமத்தையும் சாத்தான் கேள்விக்குறியாக்கினான். இதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், மனிதவர்க்கத்தைப் பற்றி பேசியபோது யெகோவாவிடம் சாத்தான் இப்படி சொன்னான்: “தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் [யோபு மட்டுமல்ல, எந்த மனுஷனும்] கொடுத்துவிடுவான்.” (யோபு 2:4) இந்த முக்கிய விவாதத்தில் உங்கள் பங்கு என்ன என்று தெரிகிறதா? யெகோவாவிற்கு நீங்கள் ஒன்றை தர முடியும் என்று அவரே நீதிமொழிகள் 27:11-ல் சுட்டிக்காட்டுகிறார்; அதாவது, அவரை நிந்திக்கும் சாத்தானுக்கு உத்தரவு கொடுப்பதற்கான ஒரு அடிப்படையை தர முடியும் என்று சுட்டிக்காட்டுகிறார். இதை யோசித்துப் பாருங்கள்: விவாதங்களிலேயே மிகப் பெரிய விவாதத்தைத் தீர்ப்பதில் பங்கு கொள்ளும்படி சர்வலோகப் பேரரசர் உங்களை அழைக்கிறார். எப்பேர்ப்பட்ட மலைக்க வைக்கும் பொறுப்பும் பாக்கியமும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது! யெகோவா உங்களிடம் கேட்பதை நீங்கள் தருவீர்களா? யோபு தந்தார். (யோபு 2:9, 10) இயேசுவும், இளைஞர்கள் உட்பட மற்ற எண்ணற்றவர்களும் அவ்வாறே செய்தார்கள். (பிலிப்பியர் 2:8; வெளிப்படுத்துதல் 6:9) நீங்களும் அவ்வாறே செய்யலாம். என்றாலும், இந்த விஷயத்தில் இடைப்பட்ட நிலை எதுவுமே இல்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். சாத்தானின் நிந்தை, யெகோவாவின் பதில் ஆகிய இரண்டில் ஒன்றை உங்கள் நடத்தை ஆதரிக்கும். ஆக, நீங்கள் எதை ஆதரிப்பீர்கள்?
யெகோவா உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்!
11 நீங்கள் எதை ஆதரிக்க தீர்மானிக்கிறீர்கள் என்பது உண்மையிலேயே யெகோவாவிற்கு முக்கியமா? சாத்தானுக்கு போதியளவு பதில் சொல்லும் விதத்தில் ஏற்கெனவே நிறைய பேர் கடவுளுக்கு உத்தமமாக நிலைத்திருக்கிறார்கள் அல்லவா? யாருமே யெகோவாவை அன்பினால் சேவிப்பதில்லை என்ற சாத்தானின் குற்றச்சாட்டு ஏற்கெனவே பொய்யாக நிரூபிக்கப்பட்டுவிட்டது உண்மைதான். இருந்தாலும், தனிப்பட்ட விதமாக உங்கள்மீது யெகோவா அக்கறை உள்ளவராக இருப்பதால் பேரரசுரிமை சார்ந்த விவாதத்தில் தம் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் என்று விரும்புகிறார். “இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல” என்று இயேசுவும் சொன்னார்.—மத்தேயு 18:14.
12 நீங்கள் என்ன தெரிவை செய்கிறீர்கள் என்பதில் யெகோவா அக்கறையுள்ளவராக இருப்பது தெளிவாக தெரிகிறது. அதைவிட முக்கியமாக, உங்கள் தெரிவு அவரை பாதிக்கிறது. யெகோவாவிற்கு ஆழ்ந்த உணர்ச்சிகள் உண்டு என்றும் மனிதர்களின் நல்ல நடத்தை அல்லது தீய நடத்தை அவரது உணர்ச்சிகளை பாதிக்கிறது என்றும் பைபிள் தெளிவாக காட்டுகிறது. உதாரணத்திற்கு இஸ்ரவேலர்கள் மறுபடியும் மறுபடியுமாக கலகம் செய்தபோது யெகோவா ‘வேதனைப்பட்டார்.’ (சங்கீதம் 78:40, 41, NW) நோவாவின் நாளில் ஜலப்பிரளயம் வருவதற்கு முன்பு ‘மனிதனுடைய அக்கிரமம் பெருகியிருந்தபோது,’ அது யெகோவாவின் “இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” (ஆதியாகமம் 6:5, 6) இதன் அர்த்தத்தை சற்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் தவறான பாதையில் சென்றால் உங்கள் படைப்பாளரின் மனதிற்கு வேதனையளிப்பீர்கள். கடவுள் பலவீனராக இருக்கிறார் என்றோ உணர்ச்சிகளுக்கு அடிமையாயிருக்கிறார் என்றோ இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அவர் உங்களை நேசிக்கிறார் என்றும் உங்கள் நலனில் அக்கறையாக இருக்கிறார் என்றுமே அர்த்தப்படுத்துகிறது. மறுபட்சத்தில், நீங்கள் சரியானதை செய்யும்போது யெகோவாவின் இருதயம் சந்தோஷப்படுகிறது. சாத்தானுக்கு மேலும் பதிலளிக்க முடியும் என்பதால் மட்டும் அல்ல, உங்களுக்கு பலன் அளிக்க முடியும் என்பதாலும் அவர் சந்தோஷப்படுகிறார். பலன் அளிக்கவே அவர் காத்திருக்கிறார். (எபிரெயர் 11:6) யெகோவா தேவன் எப்படிப்பட்ட அன்பான தகப்பன்!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஆன்மீக இலக்குகளால் உங்கள் படைப்பாளருக்கு மகிமை சேருங்கள்
யெகோவா இந்தப் பிரபஞ்சத்தை எப்படி படைத்தார் என்பதைக் கவனியுங்கள். “சாயங்காலமும் விடியற்காலமுமாகி” என்ற வார்த்தைகளில் படைப்பின் அடுத்தடுத்த காலப்பகுதியை யெகோவா திட்டமாக வரையறுத்தார். (ஆதியாகமம் 1:5, 8, 13, 19, 23, 31) படைப்பின் ஒவ்வொரு காலப்பகுதியின் ஆரம்பத்திலும் அந்த நாளுக்கான தம் இலக்கை அல்லது குறிக்கோளை அவர் நன்கு அறிந்திருந்தார். எல்லாவற்றையும் படைக்கும் தம் நோக்கத்தை கடவுள் நிறைவேற்றினார். (வெளிப்படுத்துதல் 4:11) “எதை அவர் [யெகோவா] விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்” என கோத்திரப் பிதாவாகிய யோபு சொன்னார். (யோபு 23:13, பொது மொழிபெயர்ப்பு) “தாம் உண்டாக்கின எல்லாவற்றையும்” பார்த்து அது “மிகவும் நன்றாயிருந்தது” என யெகோவா அறிவித்தபோது அது அவருக்கு எவ்வளவு திருப்தி அளித்திருக்க வேண்டும்!—ஆதியாகமம் 1:31.
நமது இலக்குகள் நிஜமாவதற்கு, அவற்றை அடைய வேண்டுமென்ற பலமான ஆசையும் நமக்கு வேண்டும். அத்தகைய உள்ளான ஆசையை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்? பூமி உருப்பெறாமல் வெறுமையாய் இருந்த சமயத்திலேயே, அது விண்வெளியில் அழகிய மணிக்கல்லாய் ஜொலித்து தமக்கு மகிமையையும் கனத்தையும் சேர்க்குமென யெகோவாவால் காண முடிந்தது. அதேபோல், நாம் வைத்துள்ள இலக்கை எட்டுவதால் கிடைக்கப் போகும் பலன்களையும் நன்மைகளையும் குறித்து தியானிப்பதன் மூலம் அதை அடைவதற்கான ஆசையை நாம் வளர்த்துக் கொள்ள முடியும். அதுவே 19 வயது டோனியின் அனுபவமும்கூட. மேற்கு ஐரோப்பாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கிளை அலுவலகத்திற்கு முதன்முதலாக சென்று பார்த்தபோது அது அவனுடைய மனதில் நீங்காத முத்திரையை பதித்தது. அப்போதிலிருந்து அவனது மனதில் எப்பொழுதும் எழுந்த கேள்வி, ‘அதுபோன்ற ஓர் இடத்தில் இருந்து சேவை செய்வது எப்படி இருக்கும்?’ என்பதே. அதற்கான வாய்ப்பைக் குறித்து அவன் சிந்தித்துக் கொண்டே இருந்தான், அதை எட்டுவதற்கு தொடர்ந்து பாடுபட்டான். பல ஆண்டுகளுக்குப் பிறகு பெத்தேலில் சேவை செய்வதற்கான அவனுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அவன் எவ்வளவாய் சந்தோஷப்பட்டான்!
டிசம்பர் 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 25-27
“உத்தமத்தைக் காட்டுவதற்கு பரிபூரணராக இருக்க வேண்டிய அவசியமில்லை”
it-1 1210 ¶4
உத்தமத்தன்மை
யோபு. யோபு யோசேப்பு இறப்பதற்கும் மோசே பிறப்பதற்கும் இடையே இருந்த காலத்தில் வாழ்ந்தவர். “அவர் கடவுளுக்குப் பயந்து நடந்தார், நேர்மையானவராகவும் உத்தமராகவும் இருந்தார், கெட்டதை வெறுத்து ஒதுக்கினார்” என்று பைபிள் அவரைப் பற்றி சொல்கிறது. (யோபு 1:1) யோபு கடவுளை தப்பான உள்நோக்கத்தோடுதான் வணங்குவதாக சாத்தான் சொன்னான். கடவுள்மேல் உள்ள பக்தியால் அல்ல, அவர் கொடுக்கிற நல்ல காரியங்களுக்காகத்தான் யோபு அவரை வணங்குகிறான் என்று குற்றம்சாட்டினான். இதன்மூலம், யோபு உண்மையாகவே கடவுளுக்கு உத்தமமாக இருக்கிறாரா என்று சாத்தான் கேள்வி எழுப்பினான். அவருடைய ஏராளமான சொத்துகளை சூறையாடவும், அவருடைய பிள்ளைகளுடைய உயிரைப் பறிக்கவும் சாத்தானை யெகோவா அனுமதித்தார், ஆனாலும் யோபுவுடைய உத்தமத்தன்மையை சாத்தானால் முறிக்க முடியவில்லை. (யோபு 1:6–2:3) யோபு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருப்பதாக சாத்தான் சொன்னான். (யோபு 2:4, 5) அதன்பின், அவர் வலி நிறைந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய மனைவியே அவரிடம், உத்தமத்தை விட்டுவிடும்படி சொன்னாள். அதுமட்டுமல்ல, கடவுளுடைய சட்டங்களையும் நோக்கங்களையும் மதிக்காத நண்பர்களுடைய குத்தலான பேச்சுக்கும் கேலிக்கும் ஆளானார். (யோபு 2:6-13; 22:1, 5-11) ஆனாலும் யோபு தன்னுடைய உத்தமத்தை விடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார். “சாகும்வரை நான் என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன். நான் எப்போதும் நீதியாக நடந்துகொள்வேன், ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டேன். உயிரோடு இருக்கும்வரை என் உள்ளம் என்னை உறுத்தாது” என்று சொன்னார். (யோபு 27:5, 6) யோபு இப்படி உத்தமமாக நடந்து, சாத்தானை ஒரு பொய்யன் என்று நிரூபித்தார்.
உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
3 முழுமனதோடு யெகோவாமீது அன்பு காட்டுவதும், அவரோடு முறிக்கமுடியாத ஒரு பந்தத்தை வைத்துக்கொள்வதும், எப்போதும் அவருக்குப் பிரியமானதைச் செய்வதும்தான் உத்தமம்! இப்படிச் செய்வதன் மூலம் கடவுளுடைய ஊழியர்கள் உத்தமத்தைக் காட்டுகிறார்கள். இப்போது, உத்தமம் என்ற வார்த்தை பைபிளில் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம். “உத்தமம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, நிறைவான, குறையில்லாத அல்லது முழுமையான ஒன்றைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு மிருக பலிகளைச் செலுத்தும்போது, அவை குறையில்லாதவையாக இருக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது. (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (லேவி. 22:21, 22) காலோ காதோ கண்ணோ இல்லாத ஒரு மிருகத்தை அல்லது நோய் பிடித்த ஒரு மிருகத்தை அவர்கள் பலி செலுத்த முடியாது. அந்த மிருகம் முழுமையானதாகவும் நோயில்லாததாகவும் இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார்; அதை அவர் ரொம்ப முக்கியமானதாக நினைத்தார். (மல். 1:6-9) யெகோவா ஏன் இப்படி எதிர்பார்த்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதை யோசித்துப்பாருங்கள். அழுகிப்போன பழத்தையோ, சில பக்கங்கள் இல்லாத புத்தகத்தையோ, சில பாகங்கள் இல்லாத கருவியையோ நாம் வாங்குவோமா? நிச்சயம் வாங்க மாட்டோம். நாம் வாங்குகிற பொருள்கள் நிறைவானவையாக, குறையில்லாதவையாக அல்லது முழுமையானவையாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். நம்முடைய அன்பையும் உண்மைத்தன்மையையும் பொறுத்தவரை யெகோவாவும் அதைத்தான் எதிர்பார்க்கிறார். அது நிறைவானதாக, குறையில்லாததாக அல்லது முழுமையானதாக இருக்க வேண்டும்!
4 நாம் பரிபூரணர்களாக இருந்தால்தான் உத்தமமாக இருக்க முடியுமா? ஒருவேளை, நம்மிடம் நிறைய குறைகள் இருக்கின்றன என்றும், நாம் நிறைய தவறுகளைச் செய்துவிடுகிறோம் என்றும் நினைக்கலாம். ஆனால், அதை நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்? முதலாவதாக, நம்முடைய தவறுகளைப் பற்றியே யெகோவா யோசித்துக்கொண்டிருப்பது கிடையாது. “‘யா’வே, நீங்கள் குற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தால், யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?” என்று அவருடைய வார்த்தை சொல்கிறது. (சங். 130:3) நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் அவர் நம்மைத் தாராளமாக மன்னிக்கிறார். (சங். 86:5) இரண்டாவதாக, நம்முடைய வரம்புகளைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். நம்மால் முடியாததை அவர் எதிர்பார்ப்பது கிடையாது. (சங்கீதம் 103:12-14-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், யெகோவாவின் பார்வையில், எந்த அர்த்தத்தில் நாம் நிறைவானவர்களாக, குறையில்லாதவர்களாக அல்லது முழுமையானவர்களாக இருக்க முடியும்?
5 யெகோவாவின் ஊழியர்களாக, உத்தமத்தைக் காத்துக்கொள்ள அன்பு ரொம்ப முக்கியம். கடவுள்மீது இருக்கும் அன்பும், பரலோகத் தந்தையான அவர்மீது நாம் வைத்திருக்கும் உண்மையான பக்தியும், நிறைவானதாக, குறையில்லாததாக அல்லது முழுமையானதாக இருக்க வேண்டும். சோதனைகள் வரும்போதும் நம்முடைய அன்பு மாறாமல் இருந்தால், நாம் உத்தமமாக இருக்கிறோம் என்று அர்த்தம். (1 நா. 28:9; மத். 22:37) ஆரம்பத்தில் பார்த்த யெகோவாவின் சாட்சிகள் மூன்று பேருடைய விஷயத்தைக் கவனிக்கலாம். அவர்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள்? பள்ளியில் ஜாலியாக இருப்பது அந்த இளம் பெண்ணுக்குப் பிடிக்கவில்லையா? கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டும் என்று அந்த இளைஞர் ஆசைப்பட்டாரா? தன் வேலையைப் பறிகொடுக்க வேண்டும் என்று அந்தக் குடும்பத் தலைவர் நினைத்தாரா? கண்டிப்பாக இல்லை! யெகோவாவுக்கென்று சில நீதியான தராதரங்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியும். தங்களுடைய பரலோகத் தந்தைக்கு எது பிடிக்கும் என்பதைப் பற்றியே அவர்கள் யோசித்தார்கள். அவர்கள் அவரை அந்தளவு நேசித்ததால், அவரை மனதில் வைத்துதான் எல்லா முடிவுகளையும் எடுத்தார்கள். இப்படி, உத்தமமாக இருப்பதைச் செயலில் காட்டினார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
பைபிளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்
3 யெகோவா படைத்திருப்பவற்றைப் பார்க்கும்போது, அவர் ஒழுங்கின் கடவுள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர், “ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.” (நீதி. 3:19) யெகோவாவின் எல்லா படைப்புகளைப் பற்றியும் நமக்குத் தெரியாது. சொல்லப்போனால், ‘அவரைக்குறித்து நாம் கேட்டது கொஞ்சம்தான்.’ (யோபு 26:14) இருந்தாலும், நம்முடைய பிரபஞ்சத்தை அவர் எவ்வளவு அருமையாக ஒழுங்கமைத்திருக்கிறார் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. (சங். 8:3, 4) விண்வெளியில், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒழுங்காகப் பயணம் செய்கின்றன. அதோடு, சூரியக் குடும்பத்தில் இருக்கும் கோள்கள், சூரியனைச் சுற்றிவரும் விதத்தைப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது! நட்சத்திரங்களும் கோள்களும் எப்படிச் சுற்றிவர வேண்டும் என்பதை யெகோவா ஒழுங்கமைத்திருக்கிறார். அதனால்தான், அவை ஒழுங்காக இயங்குகின்றன. அவர், ‘வானங்களையும் பூமியையும் ஞானமாக உண்டாக்கியிருப்பதை’ பார்க்கும்போது அவரைப் புகழவும், வணங்கவும், அவருக்கு உண்மையாக இருக்கவும் நாம் தூண்டப்படுகிறோம்.—சங். 136:1, 5-9.
டிசம்பர் 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 28-29
“யோபுவைப்போல் நீங்களும் நல்ல பெயர் எடுத்திருக்கிறீர்களா?”
தேவைப்படுவோருக்கு அன்புள்ள தயவை காட்டுங்கள்
19 சுயமாக தீர்த்துக்கொள்ள முடியாத குறைபாட்டில் தவிப்பவர்களுக்கு அன்புள்ள தயவு காட்ட வேண்டும் என்ற உண்மையையும் நாம் கலந்தாராய்ந்த பைபிள் சம்பவங்கள் வலியுறுத்துகின்றன. தன் குடும்ப வம்சாவளி தழைக்க ஆபிரகாமுக்கு பெத்துவேலின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. தன் உடலை கானான் தேசத்திற்கு எடுத்துச் செல்ல யாக்கோபுக்கு யோசேப்பின் உதவி தேவைப்பட்டது. ஒரு வாரிசை உருவாக்க, நகோமிக்கு ரூத்தின் உதவி தேவைப்பட்டது. ஆபிரகாம், யாக்கோபு, நகோமி இவர்களில் யாராலும் தங்களது தேவைகளை பிறரது உதவியின்றி பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. அதுபோலவே இன்று அன்புள்ள தயவையும், தேவைப்படுவோருக்கு முக்கியமாக காட்ட வேண்டும். (நீதிமொழிகள் 19:17) முற்பிதா யோபுவை நாம் பின்பற்ற வேண்டும்; ‘கெட்டுப்போக இருந்தவனை’ கவனித்ததுடன், “முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும்” அவர் கவனித்தார். மேலும் யோபு, ‘விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப் பண்ணினார்,’ ‘குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாய்’ இருந்தார்.—யோபு 29:12-15.
it-1 655 பக். 10
உடை
பைபிள் காலங்களில், உடை என்பது அடிக்கடி ஒரு நபரைப் பற்றியும் அவருடைய செயல்கள் பற்றியும் குறிப்பிடுவதற்கு அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, ஒருவருடைய சீருடை அல்லது விசேஷ உடையை வைத்து அவர் ஒரு குறிப்பிட்ட தொகுதியை சேர்ந்தவர், ஒரு இயக்கத்தை ஆதரிப்பவர் என்று சொல்லிவிடலாம். அதேபோல், ஒரு நபர் ஒன்றை ஆதரிக்கிறார், அதற்கு இசைவாக செயல்படுகிறார் என்பதை ஒருவருடைய உடை சுட்டிக்காட்டலாம். திருமண நிகழ்ச்சிக்கு பொருத்தமான உடையை பற்றி இயேசு சொன்ன உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்.—மத். 22:11, 12; வெளி. 16:14, 15.
w09 2/1 15 ¶3-4
நாம் எப்படிப்பட்ட பெயர் எடுக்கிறோம் என்பது முக்கியமா?
நாம் பிறந்தவுடன் நமக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது, ஆனால் எப்படிப்பட்ட பெயரை எடுப்போம் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். (நீதி. 20:11) இப்படி யோசித்துப் பாருங்கள்: இயேசுவிடமோ அப்போஸ்தலர்களிடமோ என்னைப் பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்? என்னிடம் பளிச்சென்று தெரிகிற குணத்தையோ நான் சம்பாதித்திருக்கிற பெயரைப் பற்றியோ எப்படி விவரிப்பார்கள்?
இந்தக் கேள்விகளைப் பற்றி நாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், “நிறைய சொத்துகளைச் சம்பாதிப்பதைவிட நல்ல பெயரைச் சம்பாதிப்பது சிறந்தது. தங்கத்தையும் வெள்ளியையும் சம்பாதிப்பதைவிட மரியாதையைச் சம்பாதிப்பது சிறந்தது” என்று ஞானியான சாலொமோன் ராஜா சொன்னார். (நீதி. 22:1) மனிதர்களிடம் நல்ல பெயர் எடுப்பது முக்கியம்தான். ஆனால், கடவுளிடம் நல்ல பெயர் எடுப்பது அதைவிட முக்கியம். ஏனென்றால், அந்தப் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும். ஏன் அப்படிச் சொல்கிறோம்? தனக்கு பயந்து நடக்கிறவர்களின் பெயர்களை அவருடைய ‘நினைவுப் புத்தகத்தில்’ எழுதி வைப்பதாகவும் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்க்கையைக் கொடுப்பதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார். —மல். 3:16; வெளி. 3:5; 20:12-15.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
g00 7/8 11 ¶3
புன்னகை—புரிவீர்! புத்துணர்ச்சி அடைவீர்!
புன்னகைக்கு இவ்வளவு சக்தியா? யாரோ ஒருவர் உங்களைப் பார்த்து புன்னகைத்ததால் நிம்மதியடைந்தது அல்லது சந்தோஷப்பட்டது ஞாபகமிருக்கிறதா? அல்லது ஒருவர் புன்னகைக்காதபோது பயந்துபோனது அல்லது மனம் நொந்துபோனது ஞாபகமிருக்கிறதா? ஆம், புன்னகைக்கு சக்தி உண்டு. அது புன்னகை புரிபவரையும் அவர் யாரைப் பார்த்து புன்னகைக்கிறாரோ அவரையும் சந்தோஷப்படுத்துகிறது. பண்டைய காலத்தில் வாழ்ந்த யோபு தன்னுடைய சத்துருக்களைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “அவர்களைப் பார்த்து நான் புன்முறுவல் பூத்தபோது, ‘அத்தகைய பேறு நமக்குக் கிடைத்ததோ’ என ஐயுற்றனர், என் முகத்தோற்றத்தின் ஒளியைப் பெற ஏங்கிக் கிடந்தனர்.” (யோபு 29:24, கத்தோலிக்க பைபிள்.) யோபுவின் முகத்தில் வீசிய “ஒளி” நம்பிக்கையை அல்லது உற்சாகத்தை பரப்பியது.
டிசம்பர் 25-31
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 30-31
“ஒழுக்கமாக நடக்க யோபு என்ன செய்தார்?”
வீணானவற்றைப் பார்க்காதபடி கண்களைத் திருப்பிக்கொள்ளுங்கள்!
8 கண்களின் இச்சைக்கும் உடலின் இச்சைக்கும் உண்மைக் கிறிஸ்தவர்கள்கூடச் சிலசமயம் அடிபணிந்துவிடலாம். ஆகவே, நாம் எதைப் பார்க்கிறோம், எதற்கு ஏங்குகிறோம் என்ற விஷயத்தில் சுயக்கட்டுப்பாட்டோடு இருக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துகிறது. (1 கொ. 9:25, 27; 1 யோவான் 2:15-17-ஐ வாசியுங்கள்.) பார்ப்பதற்கும் இச்சிப்பதற்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பை நீதிமானாகிய யோபு உணர்ந்திருந்தார். “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” என அவர் சொன்னார். (யோபு 31:1) யோபு எந்தவொரு பெண்ணையும் கெட்ட எண்ணத்தோடு தொடாமல் இருந்தது மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட எண்ணத்திற்குக்கூடத் தன் மனதில் இடங்கொடுக்கவில்லை. நம் மனதில் ஒழுக்கக்கேடான எண்ணங்கள் வரக் கூடாதென்ற குறிப்பை வலியுறுத்த இயேசுவும்கூட இவ்வாறு சொன்னார்: “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.”—மத். 5:28.
“முடிவை” யோசித்துப் பாருங்கள்
அப்படிப்பட்ட ஆபத்தான பாதையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு, “இந்தப் பாதை எங்கே போய் முடியும்?” என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ‘முடிவு’ என்னவாயிருக்கும் என்பதைச் சற்று யோசித்துப் பார்த்தால், விபரீத விளைவுகளுக்கு வழிநடத்தும் பாதையைத் தேர்ந்தெடுக்க மாட்டோம். எச்சரிக்கை பலகைகளை அசட்டை செய்து தவறான பாதையில் செல்ல தீர்மானித்திருப்பவர்கள் எய்ட்ஸ், பால்வினை நோய்கள், முறையற்ற கர்ப்பங்கள், கருச்சிதைவு, கணவன் மனைவி உறவில் விரிசல்கள், குற்ற உணர்வு போன்ற படுகுழிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஒழுக்கங்கெட்ட நடத்தையுள்ளவர்கள் செல்லும் பாதையின் முடிவை அப்போஸ்தலன் பவுல் மிகத் தெளிவாகச் சொன்னார்: அவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—1 கொரிந்தியர் 6:9, 10.
இளைஞர்களே—கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுங்கள்
15 உங்களுடைய உத்தமத்தன்மை எப்போது அதிகமாகச் சோதிக்கப்படும்—மற்றவர்களோடு இருக்கும்போதா, தனிமையில் இருக்கும்போதா? பள்ளியிலோ வேலை செய்யும் இடத்திலோ ஆன்மீக ரீதியில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். அப்போது, என்னென்ன சோதனைகள் வரலாம் என்பதில் நீங்கள் கவனமாக இருப்பீர்கள். ஆனால், நீங்கள் தனிமையில் இருக்கும்போதும் ஜாக்கிரதையாக இல்லாதபோதும் ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்வது கஷ்டமாகி விடலாம்.
16 தனிமையில் இருக்கும்போதுகூட நீங்கள் ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் யெகோவாவின் மனதை விசனப்படுத்தவோ சந்தோஷப்படுத்தவோ முடியும் என்பதை மனதில் வையுங்கள். (ஆதி. 6:5, 6; நீதி. 27:11) யெகோவா “உங்கள்மீது அக்கறையாக இருப்பதால்” உங்களுடைய செயல்கள் அவரைப் பாதிக்கும். (1 பே. 5:7) உங்களுடைய நன்மைக்காக நீங்கள் அவருக்குச் செவிகொடுக்க வேண்டுமென்று விரும்புகிறார். (ஏசா. 48:17, 18) பூர்வ இஸ்ரவேலில் இருந்த யெகோவாவின் ஊழியர்கள் சிலர் அவர் கொடுத்த அறிவுரையைப் புறக்கணித்தது அவரது மனதுக்கு விசனமாயிருந்தது. (சங். 78:40, 41) மாறாக, தானியேல் தீர்க்கதரிசிமீது அவருக்கு அளவற்ற அன்பு இருந்தது; ஒரு தேவதூதர் அவரை “பிரியமான புருஷனாகிய தானியேலே” என்று அழைத்ததிலிருந்து இது தெரிகிறது. (தானி. 10:11) ஏன் அப்படி அழைத்தார்? மற்றவர்களுக்குமுன் மட்டுமல்ல, தனிமையில் இருக்கும்போதும் யெகோவாவுக்கு தானியேல் உண்மையுடன் இருந்தார்.—தானியேல் 6:10-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
அன்போடு கவனித்துக் கேட்பது ஒரு கலை
யோபுவின் நண்பர்கள் குறைந்தது பத்து முறையாவது அவர் பேசியதைக் கேட்டிருப்பார்கள். இருந்தாலும், “ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்” என்று யோபு புலம்பினார். (யோபு 31:35) ஏன்? ஏனெனில் அவர்கள் கேட்டது அவருக்கு ஆறுதலை அளிக்கவில்லை. அவர்களுக்கு யோபுவின் மீது அக்கறையும் இருக்கவில்லை, அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள விருப்பமும் இருக்கவில்லை. அனுதாபத்தோடு கூர்ந்து கேட்கும் குணம் அவர்களுக்குத் துளியும் இருக்கவில்லை. ‘நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும் [அதாவது, அனுதாபமுள்ளவர்களும்], சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருக்க வேண்டும்’ என்று அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார். (1 பேதுரு 3:8) நாம் எப்படி நம்முடைய அனுதாபத்தைக் காட்டலாம்? அதைக் காட்டுவதற்கு ஒரு வழி மற்றவர்களுடைய உணர்ச்சிகளில் அக்கறை காண்பித்து, அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான். “அது உங்களை ரொம்பவே பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்” அல்லது “உங்களைத் தவறாக எடைபோட்டுவிட்டார்களே என்று வருத்தப்பட்டிருப்பீர்கள் இல்லையா” என்றெல்லாம் இரக்கத்தோடு சொல்வது நாம் மற்றவர்கள்மீது அக்கறை காட்டுவதற்கான ஒரு வழியாகும். மற்றொரு வழி அந்த நபர் சொல்வதை நம்முடைய சொந்த வார்த்தைகளில் திரும்பச் சொல்வது. இப்படிச் செய்வது நாம் அவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை அர்த்தப்படுத்தும். அன்போடு கவனித்துக் கேட்பதென்பது வெறும் வார்த்தைகளுக்கு மட்டுமல்ல, வெளிக்காட்டப்படாத அவர்களுடைய உணர்ச்சிகளுக்கும் செவி கொடுப்பதாகும்.