-
ஆலயத்தை மறுபடியும் சுத்தப்படுத்துகிறார்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 103
ஆலயத்தை மறுபடியும் சுத்தப்படுத்துகிறார்
மத்தேயு 21:12, 13, 18, 19 மாற்கு 11:12-18 லூக்கா 19:45-48 யோவான் 12:20-27
அத்தி மரத்தை இயேசு சபிக்கிறார், ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார்
நிறைய பேருக்கு வாழ்வளிக்க, இயேசு தன் உயிரைக் கொடுக்க வேண்டும்
இயேசுவும் அவருடைய சீஷர்களும் எரிகோவிலிருந்து பெத்தானியாவுக்கு வந்து மூன்று நாட்களாகிவிட்டது; அங்கேதான் அவர்கள் ராத்திரி நேரத்தில் தங்கியிருந்தார்கள். நிசான் 10-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று விடியற்காலையில் அவர்கள் எருசலேமுக்குப் புறப்படுகிறார்கள். இயேசுவுக்குப் பசி எடுக்கிறது. ஒரு அத்தி மரத்தைப் பார்த்ததும், அதன் பக்கத்தில் போகிறார். அதில் ஏதாவது பழம் இருக்கிறதா?
பொதுவாக, ஜூன் மாதத்தில்தான் அத்திப்பழங்கள் கிடைக்கும். ஆனால், இது மார்ச் மாதத்தின் பிற்பகுதி. இருந்தாலும், அந்த அத்தி மரத்தில் சீக்கிரமே இலைகள் துளிர்த்திருக்கின்றன. அதனால், அதில் பழங்கள் இருக்கும் என்று இயேசு நினைக்கிறார். ஆனால், அதில் ஒன்றுகூட இல்லை. அந்த மரத்தின் இலைகள்தான் பார்ப்பவர்களை ஏமாற்றுகின்றன. அதனால் இயேசு அந்த மரத்தைப் பார்த்து, “இனி யாரும் எப்போதும் உன் கனிகளைச் சாப்பிடாமல் இருக்கட்டும்” என்று சொல்கிறார். (மாற்கு 11:14) உடனே, அந்த மரம் பட்டுப்போக ஆரம்பிக்கிறது. அதற்கு என்ன அர்த்தம் என்பது அடுத்த நாள் காலையில் தெரியும்.
சீக்கிரத்தில், இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்குப் போகிறார்கள். பிறகு, ஆலயத்துக்கு இயேசு போகிறார். முந்தின நாள் மத்தியானம், அங்கே நடப்பதையெல்லாம் அவர் பார்த்திருந்தார். இன்றோ, பார்ப்பதோடு அவர் நிறுத்திவிடவில்லை. மூன்று வருஷங்களுக்கு முன்பு, கி.பி. 30-ஆம் வருஷத்தின் பஸ்கா சமயத்தில் செய்தது போலவே இப்போதும் செய்கிறார். (யோவான் 2:14-16) இந்தத் தடவை, ஆலயத்தில் ‘விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருக்கிறவர்களை’ இயேசு வெளியே துரத்துகிறார். “காசு மாற்றுபவர்களின் மேஜைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும்” கவிழ்த்துப்போடுகிறார். (மாற்கு 11:15) ஆலயப் பிரகாரத்தைக் குறுக்கு வழியாகப் பயன்படுத்தி, நகரத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குப் பொருள்களை எடுத்துக்கொண்டு போகக்கூட அவர் யாரையும் அனுமதிப்பதில்லை.
ஆலயத்தில் காசு மாற்றுபவர்களுக்கும் மிருகங்களை விற்பவர்களுக்கும் எதிராக இயேசு ஏன் இப்படிக் கடுமையான நடவடிக்கை எடுக்கிறார்? “‘என்னுடைய வீடு எல்லா தேசத்தாருக்கும் ஜெப வீடாக இருக்கும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது, இல்லையா? ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்கிவிட்டீர்கள்” என்று சொல்கிறார். (மாற்கு 11:17) பலிக்கான மிருகங்களை அநியாய விலைக்கு விற்று, மக்களிடமிருந்து அவர்கள் கொள்ளையடிப்பதால்தான், இயேசு அவர்களைக் கொள்ளைக்காரர்கள் என்று சொல்கிறார். அவர்கள் செய்கிற வியாபாரத்தை, கொள்ளையடிப்பதற்குச் சமமாகக் கருதுகிறார்.
முதன்மை குருமார்களும், வேத அறிஞர்களும், முக்கியப் பிரமுகர்களும் இயேசு செய்ததைப் பற்றிக் கேள்விப்படுகிறார்கள். இப்போது அவரைக் கொலை செய்ய இன்னும் அதிகமாகத் துடிக்கிறார்கள். ஆனால், இயேசுவின் பேச்சைக் கேட்பதற்காக மக்கள் எப்போதும் அவரைச் சுற்றியிருப்பதால், அவரை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.
யூதர்கள் மட்டுமல்லாமல், யூத மதத்துக்கு மாறியவர்களும் பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்கு வந்திருக்கிறார்கள். பண்டிகை சமயத்தில், கடவுளை வணங்குவதற்காக கிரேக்கர்கள் சிலரும் வந்திருக்கிறார்கள். அவர்கள் பிலிப்புவிடம் போய், இயேசுவைப் பார்க்க விரும்புவதாக சொல்கிறார்கள். பிலிப்புவின் பெயர், கிரேக்கப் பெயராக இருப்பதால் அந்த ஆட்கள் அவரிடம் போயிருக்கலாம். அப்போது, பிலிப்புவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால், அவர் அந்திரேயாவிடம் இதைப் பற்றிச் சொல்கிறார். அவர்கள் இரண்டு பேரும் இயேசுவிடம் போய் விஷயத்தைச் சொல்கிறார்கள். அநேகமாக, அந்தச் சமயத்தில் இயேசு ஆலயத்தில்தான் இருந்திருப்பார்.
தான் இன்னும் சில நாட்களில் சாகப்போவது இயேசுவுக்குத் தெரியும். தன்னைப் பார்க்க நினைக்கிற மக்களைச் சந்திப்பதற்கோ, தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதற்கோ இது நேரம் கிடையாது என்பதும் அவருக்குத் தெரியும். அதனால், ஒரு உவமையின் மூலம் அந்த அப்போஸ்தலர்கள் இரண்டு பேருக்கும் அவர் பதில் சொல்கிறார். இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமைப்படுத்தப்படும் நேரம் வந்துவிட்டது. உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் அது ஒரே மணியாகத்தான் இருக்கும்; அது செத்தால்தான் அதிக விளைச்சலைத் தரும்” என்று சொல்கிறார்.—யோவான் 12:23, 24.
ஒரு கோதுமை மணியைப் பார்க்கும்போது நமக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அது ஒரு விதையாக நிலத்தில் விழுந்து “செத்தால்,” அது முளைத்து ஒரு தண்டாக ஆகி, பல கதிர்களைக் கொடுக்கும். அதேபோல், இயேசு ஒருவர் மட்டும்தான் பரிபூரண மனிதராக இருக்கிறார். ஆனால், மரணம்வரை கடவுளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம், அவரைப் போலவே தியாக உள்ளம் கொண்ட நிறைய பேருக்கு அவரால் முடிவில்லாத வாழ்வைக் கொடுக்க முடியும். அதனால்தான், “தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துபோவான். இந்த உலகத்தில் தன் உயிரை வெறுக்கிறவனோ அதைப் பாதுகாத்துக்கொண்டு முடிவில்லாத வாழ்வைப் பெறுவான்” என்று அவர் சொல்கிறார்.—யோவான் 12:25.
தன்னைப் பற்றி மட்டுமே இயேசு யோசிக்கவில்லை. ஏனென்றால், “ஒருவன் எனக்கு ஊழியம் செய்ய விரும்பினால், அவன் என்னைப் பின்பற்றி வரவேண்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியனும் இருப்பான். ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால், அவனை என் தகப்பன் கெளரவிப்பார்” என்று சொல்கிறார். (யோவான் 12:26) இது மிகப் பெரிய பரிசு! தகப்பன் யாரை கௌரவிக்கிறாரோ அவர்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்வார்கள்.
தான் அனுபவிக்கப்போகிற சித்திரவதையையும், கொடூரமான மரணத்தையும் நினைத்து, “இப்போது என் மனம் கலங்குகிறது, நான் என்ன சொல்வேன்? தகப்பனே, இந்தச் சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று இயேசு சொல்கிறார். ஆனால், கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றாமல் இருக்க இயேசு விரும்பவில்லை. அதனால், “நான் இந்தச் சோதனையை எதிர்ப்பட்டே ஆக வேண்டும்” என்று சொல்கிறார். (யோவான் 12:27) தன்னுடைய தியாக மரணம் உட்பட, கடவுளுடைய நோக்கங்கள் எல்லாமே நிறைவேற வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
-
-
கடவுள்மீது யூதர்கள் விசுவாசம் காட்டுவார்களா?இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 104
கடவுள்மீது யூதர்கள் விசுவாசம் காட்டுவார்களா?
நிறைய பேர் கடவுளின் குரலைக் கேட்கிறார்கள்
நியாயத்தீர்ப்புக்கு அடிப்படை எது?
நிசான் 10, திங்கள்கிழமை அன்று, தன்னுடைய மரணத்தைப் பற்றி ஆலயத்தில் இயேசு பேசிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய மரணத்தால் கடவுளுடைய பெயருக்குக் களங்கம் வந்துவிடுமோ என்று அவர் கவலைப்படுகிறார். அதனால், “தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொல்கிறார். அப்போது, “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்” என்று வானத்திலிருந்து ஒரு கம்பீரமான குரல் கேட்கிறது.—யோவான் 12:27, 28.
அதைக் கேட்டு மக்கள் குழம்பிப்போகிறார்கள். இடி இடித்ததென்று சிலர் நினைக்கிறார்கள். மற்றவர்களோ, “ஒரு தேவதூதர் இவரோடு பேசினார்” என்று சொல்கிறார்கள். (யோவான் 12:29) ஆனால், இப்போது பேசியது யெகோவா! இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்ய ஆரம்பித்த சமயத்திலிருந்து, யெகோவா பேசியதை ஏற்கெனவே சிலர் கேட்டிருக்கிறார்கள்.
மூன்றரை வருஷங்களுக்கு முன்பு இயேசு ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கடவுள் சொன்னதை யோவான் ஸ்நானகர் கேட்டார். கி.பி. 32-ஆம் வருஷத்தின் பஸ்காவுக்குப் பிறகு, யாக்கோபு, யோவான், பேதுரு ஆகியோருக்கு முன்னால் இயேசு தோற்றம் மாறினார். அப்போது, “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்; இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று கடவுள் சொன்னதை அவர்கள் மூன்று பேரும் கேட்டார்கள். (மத்தேயு 3:17; 17:5) இப்போது மூன்றாவது தடவையாக, பல பேர் கேட்கும் விதத்தில் யெகோவா பேசுகிறார்.
“இந்தக் குரல் எனக்காக அல்ல, உங்களுக்காக வந்தது” என்று இயேசு சொல்கிறார். (யோவான் 12:30) அவர் உண்மையிலேயே கடவுளுடைய மகன், வரவேண்டிய மேசியா என்பதற்கு இது அத்தாட்சியாக இருக்கிறது.
கடவுளுக்கு உண்மையுள்ளவராக இயேசு வாழ்கிறார். மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கை காட்டுகிறது. அதோடு, இந்த உலகத்தை ஆளுகிற பிசாசாகிய சாத்தான் அழிக்கப்பட வேண்டும் என்பதையும் நிரூபிக்கிறது. அதனால், “இப்போதே இந்த உலகம் நியாயந்தீர்க்கப்படுகிறது, இந்த உலகத்தை ஆளுகிறவன் வீழ்த்தப்படுவான்” என்று இயேசு சொல்கிறார். இயேசுவின் மரணத்தை தோல்வி என்று சொல்ல முடியாது, அது வெற்றிதான். எப்படி? “நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது எல்லா விதமான மக்களையும் என்னிடம் ஈர்த்துக்கொள்வேன்” என்று இயேசு விளக்குகிறார். (யோவான் 12:31, 32) ஒரு மரக் கம்பத்தில் இயேசு கொல்லப்படுவார். தன்னுடைய மரணத்தின் மூலம், மற்றவர்களைத் தன்னிடம் ஈர்த்துக்கொள்வார். அதோடு, முடிவில்லாத வாழ்வுக்கு வழியைத் திறந்துவைப்பார்.
‘உயர்த்தப்படுவதை’ பற்றி இயேசு சொன்னதைக் கேட்ட மக்கள், “கிறிஸ்து என்றென்றும் இருப்பார் என்று திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதைக் கேட்டிருக்கிறோம். அப்படியிருக்கும்போது, மனிதகுமாரன் உயர்த்தப்படுவார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? யார் இந்த மனிதகுமாரன்?” என்று கேட்கிறார்கள். (யோவான் 12:34) எத்தனையோ அத்தாட்சிகள் இருந்தும், கடவுளுடைய குரலை நேரடியாகக் கேட்ட பிறகும், பெரும்பாலான மக்கள் இயேசுவை உண்மையான மனிதகுமாரனாகவும், வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியாவாகவும் ஏற்றுக்கொள்வதில்லை.
முன்பு சொன்னபடியே, இப்போதும் இயேசு தன்னை “ஒளி” என்று குறிப்பிடுகிறார். (யோவான் 8:12; 9:5) “இன்னும் கொஞ்சக் காலத்துக்குத்தான் ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்களை அடக்கி ஆளாதபடி, ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்துபோங்கள். . . . நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு ஒளி உங்களோடு இருக்கும்போதே அதில் விசுவாசம் வையுங்கள்” என்று சொல்கிறார். (யோவான் 12:35, 36) இவற்றைச் சொன்ன பின்பு, இயேசு அங்கிருந்து போய்விடுகிறார். ஏனென்றால், நிசான் 10-ஆம் தேதியில் அவர் சாகக் கூடாது. பஸ்கா கொண்டாடப்படுகிற நிசான் 14-ஆம் தேதியில்தான் அவர் ‘உயர்த்தப்பட’ வேண்டும், அதாவது மரக் கம்பத்தில் அறையப்பட வேண்டும்.—கலாத்தியர் 3:13.
இயேசு ஊழியம் செய்தபோது, யூதர்கள் அவர்மீது விசுவாசம் வைக்கவில்லை. இது பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்கள் தங்கள் கண்களால் பார்க்காமல் இருப்பார்கள் என்றும், இதயம் இறுகிப்போயிருப்பதால் கடவுளிடம் திரும்பி வந்து குணமடையாமல் இருப்பார்கள் என்றும் ஏசாயா சொல்லியிருந்தார். (ஏசாயா 6:10; யோவான் 12:40) எத்தனையோ அத்தாட்சிகள் இருந்தும்கூட, இயேசுதான் கடவுளால் வாக்குக் கொடுக்கப்பட்ட மீட்பர் என்பதையும், வாழ்வுக்கான வழி என்பதையும் ஏற்றுக்கொள்ள பெரும்பாலான யூதர்கள் வேண்டுமென்றே மறுக்கிறார்கள்.
நிக்கொதேமு, அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு ஆகியோரும், யூதத் தலைவர்களில் நிறைய பேரும் இயேசுமேல் “விசுவாசம் வைத்தார்கள்.” ஆனால், தங்களுடைய விசுவாசத்தை அவர்கள் செயலில் காட்டுவார்களா? அல்லது, ஜெபக்கூடத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவோமா என்ற பயத்தாலோ, ‘மனிதர்களிடமிருந்து வரும் மகிமையை விரும்புவதாலோ’ தங்கள் விசுவாசத்தை மூடிமறைப்பார்களா?—யோவான் 12:42, 43.
தன்மீது விசுவாசம் வைப்பதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதை இயேசு விளக்குகிறார். “என்மேல் விசுவாசம் வைக்கிறவன், என்மேல் மட்டுமல்ல, என்னை அனுப்பியவர்மேலும் விசுவாசம் வைக்கிறான். என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பியவரையும் பார்க்கிறான்” என்று சொல்கிறார். மக்களுக்குக் கற்பிக்கும்படி இயேசுவிடம் கடவுள் ஒப்படைத்த சத்தியங்களும், இயேசு தொடர்ந்து அறிவிக்கிற சத்தியங்களும் மிக முக்கியமானவை. அதனால்தான், “என்னை அலட்சியம் செய்து நான் சொல்கிறவற்றை ஏற்றுக்கொள்ளாத ஒருவனை நியாயந்தீர்க்கும் ஒன்று இருக்கிறது. நான் சொன்ன செய்தியே அது; கடைசி நாளில் அதுவே அவனை நியாயந்தீர்க்கும்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 12:44, 45, 48.
கடைசியாக, “நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய கட்டளையைக் கடைப்பிடிக்கும்போது முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்” என இயேசு சொல்கிறார். (யோவான் 12:49, 50) தன்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுக்காக, சீக்கிரத்தில் தன்னுடைய உயிரையே பலியாகக் கொடுக்க வேண்டும் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது.—ரோமர் 5:8, 9.
-