-
அத்தி மரத்தை வைத்து ஒரு பாடம்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 105
அத்தி மரத்தை வைத்து ஒரு பாடம்
மத்தேயு 21:19-27 மாற்கு 11:19-33 லூக்கா 20:1-8
பட்டுப்போன அத்தி மரம்—விசுவாசத்தைப் பற்றிய பாடம்
இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிய கேள்வி
இயேசு திங்கள்கிழமை மத்தியானம் எருசலேமிலிருந்து புறப்பட்டு, ஒலிவ மலையின் கிழக்கு மலைச்சரிவில் இருக்கிற பெத்தானியாவுக்குப் போகிறார். அநேகமாக, அன்று ராத்திரி அவர் தன்னுடைய நண்பர்களான லாசரு, மரியாள் மற்றும் மார்த்தாளின் வீட்டில் தங்கியிருக்கலாம்.
இப்போது நிசான் 11, காலை நேரம். இயேசுவும் அவருடைய சீஷர்களும் மறுபடியும் எருசலேமுக்குப் பயணம் செய்கிறார்கள். அவர் ஆலயத்துக்குப் போகிற கடைசி தடவை இதுதான். அவருடைய ஊழியத்தின் கடைசி நாளும் இதுதான். இதற்குப் பிறகு அவர் பஸ்காவைக் கொண்டாடிவிட்டு, தன்னுடைய மரண நினைவுநாள் அனுசரிப்பை ஆரம்பித்துவைப்பார். பிறகு, அவர் விசாரணை செய்யப்பட்டு, கொல்லப்படுவார்.
ஒலிவ மலையில் இருக்கிற பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்குப் போகும் வழியில், முந்தின நாள் காலையில் இயேசு சபித்த அத்தி மரத்தை பேதுரு பார்க்கிறார். உடனே, “ரபீ, இதோ! நீங்கள் சபித்த அத்தி மரம் பட்டுப்போய்விட்டது” என்று ஆச்சரியத்தோடு சொல்கிறார்.—மாற்கு 11:21.
இயேசு ஏன் அந்த அத்தி மரத்தைப் பட்டுப்போக வைத்திருந்தார்? அவர் சொல்கிற பதிலிலிருந்து அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு இருந்தால், நான் இந்த அத்தி மரத்துக்குச் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய்க் கடலில் விழு’ என்று சொன்னாலும் அது அப்படியே நடக்கும். விசுவாசத்தோடு ஜெபம் செய்தால், நீங்கள் கேட்கிற எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் சொல்கிறார். (மத்தேயு 21:21, 22) விசுவாசத்தால் மலையையும் பெயர்க்க முடியும் என்று இதற்கு முன்பு சொன்ன அதே விஷயத்தைத்தான் இயேசு இப்போது திரும்பவும் சொல்கிறார்.—மத்தேயு 17:20.
கடவுள்மேல் விசுவாசம் வைப்பது அவசியம் என்பதைப் புரிய வைப்பதற்காகத்தான் இயேசு அந்த மரத்தைப் பட்டுப்போக வைத்திருந்தார். “நீங்கள் கடவுளிடம் எதையெல்லாம் கேட்கிறீர்களோ அதையெல்லாம் பெற்றுக்கொண்டதாகவே விசுவாசியுங்கள், அப்போது அதையெல்லாம் நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள்” என்று சொல்கிறார். (மாற்கு 11:24) இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாருக்குமே இது ஒரு முக்கியமான பாடம். குறிப்பாக, இது அப்போஸ்தலர்களுக்குச் சரியான சமயத்தில் கொடுக்கப்படுகிற ஆலோசனை. ஏனென்றால், சீக்கிரத்திலேயே அவர்கள் பயங்கரமான சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. பட்டுப்போன அத்தி மரத்துக்கும் விசுவாசத்துக்கும் இன்னொரு சம்பந்தமும் இருக்கிறது.
இஸ்ரவேல் தேசத்து மக்கள் அந்த அத்தி மரத்தைப் போல ஏமாற்றம் அளிக்கிறார்கள். அவர்கள் கடவுளுடன் ஒரு ஒப்பந்தத்துக்குள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால், திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களைப் போலத் தெரியலாம். ஆனால் ஒரு தேசமாக அவர்கள் விசுவாசத்தையும் காட்டுவதில்லை, நல்ல கனிகளையும் கொடுப்பதில்லை. அவர்கள் கடவுளுடைய சொந்த மகனையே ஒதுக்கித்தள்ளுகிறார்கள். அதனால், கனி கொடுக்காத அத்தி மரத்தைப் பட்டுப்போக வைப்பதன் மூலம், விசுவாசமில்லாத, கனி தராத இந்தத் தேசத்துக்கு என்ன கதி ஏற்படப்போகிறது என்பதை இயேசு காட்டுகிறார்.
சீக்கிரத்திலேயே, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்குள் நுழைகிறார்கள். வழக்கம்போல, இயேசு ஆலயத்துக்குப் போய்க் கற்பிக்க ஆரம்பிக்கிறார். முதன்மை குருமார்களும் பெரியோர்களும் அங்கே வந்து, “எந்த அதிகாரத்தால் நீ இதையெல்லாம் செய்கிறாய்? இதையெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்று கேட்கிறார்கள். (மாற்கு 11:28) முந்தின நாள், ஆலயத்திலிருந்த காசு மாற்றுபவர்களை இயேசு துரத்தியதை மனதில் வைத்து அவர்கள் இப்படிக் கேட்டிருக்கலாம்.
அப்போது இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள்; அப்போது, எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன். ஞானஸ்நானம் கொடுக்கிற அதிகாரத்தை யோவானுக்குக் கொடுத்தது கடவுளா மனுஷர்களா? பதில் சொல்லுங்கள்” என்கிறார். அவரை எதிர்க்கிறவர்கள் இப்போது சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். “‘கடவுள்’ என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நம்பவில்லை?’ என்று கேட்பான். ‘மனுஷர்கள்’ என்று சொன்னால் நம் கதி என்னவாகும்?” என்று குருமார்களும் பெரியோர்களும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். ‘யோவான் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி என்று மக்கள் எல்லாரும் நம்புவதால்’ அப்படிச் சொல்ல பயப்படுகிறார்கள்.—மாற்கு 11:29-32.
இயேசுவை எதிர்க்கிறவர்கள், அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறுகிறார்கள். அதனால், “எங்களுக்குத் தெரியாது” என்று சொல்கிறார்கள். அப்போது அவர், “அப்படியானால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்கிறார்.—மாற்கு 11:33.
-
-
திராட்சைத் தோட்டத்தைப் பற்றிய இரண்டு உவமைகள்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 106
திராட்சைத் தோட்டத்தைப் பற்றிய இரண்டு உவமைகள்
மத்தேயு 21:28-46 மாற்கு 12:1-12 லூக்கா 20:9-19
இரண்டு மகன்களைப் பற்றிய உவமை
திராட்சைத் தோட்டக்காரர்களைப் பற்றிய உவமை
இயேசு இப்போதும் ஆலயத்தில்தான் இருக்கிறார். சற்று முன்புதான், எந்த அதிகாரத்தால் அவர் செயல்படுகிறார் என்று முதன்மை குருமார்களும் பெரியோர்களும் அவரிடம் கேட்டிருந்தார்கள். இயேசுவின் பதிலைக் கேட்டு அவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே எப்படிப்பட்ட ஆட்கள் என்பதைக் காட்டுவதற்கு இப்போது ஒரு உவமையை இயேசு சொல்கிறார்.
“ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர் தன்னுடைய முதல் மகனிடம் வந்து, ‘மகனே, நீ இன்றைக்குத் திராட்சைத் தோட்டத்துக்குப் போய் வேலை செய்’ என்று சொன்னார். அதற்கு அவன், ‘போக மாட்டேன்’ என்று சொன்னான். ஆனால், அதற்குப் பின்பு மனம் வருந்தி அங்கே போனான். அவர் தன் இரண்டாவது மகனிடம் வந்து அதையே சொன்னார். அதற்கு அவன், ‘போகிறேன், அப்பா’ என்று சொல்லிவிட்டு, போகாமலேயே இருந்துவிட்டான். இந்த இரண்டு பேரில் தங்களுடைய அப்பாவின் விருப்பப்படி நடந்துகொண்டது யார்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று இயேசு கேட்கிறார். (மத்தேயு 21:28-31) பதில் நமக்குத் தெரிந்ததுதான்! முதல் மகன்தான் தன் அப்பாவின் விருப்பப்படி நடந்துகொண்டான்.
இயேசு தன்னை எதிர்க்கிறவர்களைப் பார்த்து, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் உங்களுக்கு முன்பே கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார். வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் ஆரம்பத்தில் கடவுளுக்குச் சேவை செய்யவில்லை. ஆனால், முதல் மகனைப் போல அவர்கள் பிற்பாடு மனம் திருந்தினார்கள்; இப்போது கடவுளுக்குச் சேவை செய்கிறார்கள். ஆனால், மதத் தலைவர்கள் இரண்டாவது மகனைப் போல இருக்கிறார்கள். கடவுளுக்குச் சேவை செய்வதாக அவர்கள் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் அதைச் செய்வதில்லை. அதனால் இயேசு அவர்களிடம், “நீதியான வழியைக் காட்ட யோவான் [ஸ்நானகர்] உங்களிடம் வந்தார், நீங்களோ அவரை நம்பவில்லை. ஆனால், வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் அவரை நம்பினார்கள்; இதைப் பார்த்த பின்பும்கூட நீங்கள் மனம் வருந்தவில்லை, அவரை நம்பவும் இல்லை” என்று சொல்கிறார்.—மத்தேயு 21:31, 32.
அடுத்ததாக, அவர் இன்னொரு உவமையைச் சொல்கிறார். மதத் தலைவர்கள் கடவுளுடைய சேவையை அலட்சியம் செய்வதோடு, படுமோசமானவர்களாகவும் இருப்பதை இந்த உவமை படம்பிடித்துக் காட்டுகிறது. “ஒரு மனுஷர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, அதைச் சுற்றிலும் வேலியடைத்தார். அதில் திராட்சரசத் தொட்டியை அமைத்து, காவலுக்கு ஒரு கோபுரத்தைக் கட்டினார். அதைத் தோட்டக்காரர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டுத் தூர தேசத்துக்குப் போனார். அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குச் சேர வேண்டிய பங்கை வாங்கி வரச் சொல்லி ஓர் அடிமையை அந்தத் தோட்டக்காரர்களிடம் அனுப்பினார். ஆனால், அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு அனுப்பிவிட்டார்கள். அதனால், மறுபடியும் வேறொரு அடிமையை அனுப்பினார்; அவர்கள் அவனைத் தலையில் தாக்கி, அவமானப்படுத்தினார்கள். பின்பு இன்னும் ஒருவனை அனுப்பினார், அவனைக் கொன்றுபோட்டார்கள். வேறு பலரையும் அனுப்பினார்; அவர்களில் சிலரை அடித்தார்கள், சிலரைக் கொலை செய்தார்கள்” என்று சொல்கிறார்.—மாற்கு 12:1-5.
இந்த உவமை அங்கிருக்கிற மக்களுக்குப் புரிந்திருக்குமா? “பரலோகப் படைகளின் யெகோவா நானே. இஸ்ரவேல் ஜனங்கள்தான் என் திராட்சைத் தோட்டம். யூதா மக்கள்தான் நான் ஆசையோடு நட்ட திராட்சைக் கொடி. அவர்கள் நியாயமாக நடப்பார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆனால், அநியாயம்தான் செய்தார்கள்” என்று ஏசாயா மூலம் கடவுள் சொன்னது அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். (ஏசாயா 5:7) இந்த வசனத்துக்கும் இயேசு சொல்கிற உவமைக்கும் ஒற்றுமை இருக்கிறது. யெகோவாதான் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர். இஸ்ரவேல் தேசம்தான் திராட்சைத் தோட்டம்; திருச்சட்டம் ஒரு வேலியைப் போல அந்தத் தேசத்தைப் பாதுகாத்தது. தன்னுடைய மக்களுக்கு ஆலோசனை தரவும், நல்ல கனிகளைக் கொடுக்க அவர்களுக்கு உதவி செய்யவும் தீர்க்கதரிசிகளை யெகோவா அனுப்பினார்.
ஆனால், ‘தோட்டக்காரர்கள்’ தங்களிடம் அனுப்பப்பட்ட ‘அடிமைகளை’ அடித்து, கொலை செய்தார்கள். “[திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரருக்கு] ஒரு அன்பான மகன் இருந்தான்; ‘என் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று நினைத்து, கடைசியாக அவர் தன்னுடைய மகனையே அனுப்பினார். ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், ‘இவன்தான் வாரிசு. வாருங்கள், நாம் இவனைத் தீர்த்துக்கட்டிவிடலாம், இவனுடைய சொத்து நமக்குக் கிடைத்துவிடும்’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு, அவனைப் பிடித்து, கொலை செய்து, திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தூக்கிப்போட்டார்கள்” என்று இயேசு சொல்கிறார்.—மாற்கு 12:6-8.
“இப்போது, அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் என்ன செய்வார்?” என்று இயேசு கேட்கிறார். (மாற்கு 12:9) அதற்கு மதத் தலைவர்கள், “அந்த அக்கிரமக்காரர்களை அடியோடு ஒழித்துக்கட்டிவிடுவார்; தனக்குச் சேர வேண்டிய பங்கைச் சரியான சமயத்தில் கொடுக்கிற வேறு தோட்டக்காரர்களிடம் திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்” என்று சொல்கிறார்கள்.—மத்தேயு 21:41.
இப்படி, தங்களையே அறியாமல் தங்களுக்குத் தீர்ப்பு சொல்லிக்கொள்கிறார்கள். ஏனென்றால், யெகோவாவின் ‘திராட்சைத் தோட்டமான’ இஸ்ரவேல் தேசத்துக்கு அவர்களும்கூட ‘தோட்டக்காரர்களை’ போல இருக்கிறார்கள். யெகோவா அவர்களிடம் கனிகளை எதிர்பார்க்கிறார். மேசியாவான தன் மகன்மேல் விசுவாசம் வைப்பதும்கூட யெகோவா எதிர்பார்க்கிற கனிகளில் ஒன்றாக இருக்கிறது. இயேசு அந்த மதத் தலைவர்களை நேராகப் பார்த்து, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது; இது யெகோவாவின் செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’ என்ற வசனத்தை நீங்கள் வாசித்ததே இல்லையா?” என்று கேட்கிறார். (மாற்கு 12:10, 11) பிறகு அவர்களிடம், “அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கத்தின் ஆசீர்வாதங்கள் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஒரு ஜனத்திடம் கொடுக்கப்படும்” என்று அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார்.—மத்தேயு 21:43.
“தங்களை மனதில் வைத்துதான் அதை அவர் சொன்னார்” என்று வேத அறிஞர்களும் முதன்மை குருமார்களும் புரிந்துகொள்கிறார்கள். (லூக்கா 20:19) அதனால் இயேசுவை, அதாவது ‘வாரிசை,’ இனி உயிரோடு விடக் கூடாது என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு தீர்க்கதரிசி என்று மக்கள் நினைப்பதால், அவர்கள் மக்களுக்குப் பயப்படுகிறார்கள். அதனால், இயேசுவைக் கொல்ல அவர்கள் இந்தச் சமயத்தில் முயற்சி செய்வதில்லை.
-
-
திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை ராஜா கூப்பிடுகிறார்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 107
திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை ராஜா கூப்பிடுகிறார்
கல்யாண விருந்தைப் பற்றிய உவமை
இயேசுவின் ஊழியம் சீக்கிரத்தில் முடியப்போகிறது. அவர் பல உவமைகளைச் சொல்லி, வேத அறிஞர்கள் மற்றும் முதன்மை குருமார்களின் வெளிவேஷத்தை அம்பலப்படுத்துகிறார். அதனால், அவர்கள் இயேசுவைக் கொல்ல நினைக்கிறார்கள். (லூக்கா 20:19) ஆனாலும், இயேசு அவர்களைப் பற்றி மக்களிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அடுத்ததாக, அவர் இன்னொரு உவமையைச் சொல்கிறார்.
“பரலோக அரசாங்கம், மகனுடைய திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்த ஒரு ராஜாவைப் போல் இருக்கிறது. திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரச் சொல்லி அவர் தன்னுடைய அடிமைகளை அனுப்பினார்; ஆனால், அழைக்கப்பட்டவர்கள் வர விரும்பவில்லை” என்று சொல்கிறார். (மத்தேயு 22:2, 3) “பரலோக அரசாங்கம்” என்ற வார்த்தைகளோடு இயேசு இந்த உவமையை ஆரம்பிக்கிறார். இதிலிருந்தே, யெகோவா தேவன்தான் அந்த “ராஜா” என்று தெரிகிறது. ராஜாவின் மகன் யார்? விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்? யெகோவாவின் மகன்தான் அந்த ராஜாவின் மகன். அவர்தான் இந்த உவமையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். பரலோக அரசாங்கத்தில் மகனோடு இருக்கப்போகிறவர்கள்தான் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள்.
அந்த விருந்துக்கு யார் முதன்முதலில் அழைக்கப்பட்டார்கள்? சரி, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி யாரிடம் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்? யூதர்களிடம்தானே? (மத்தேயு 10:6, 7; 15:24) இந்தத் தேசத்தார் கி.மு. 1513-ல் திருச்சட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதனால் “ஆட்சி செய்கிற குருமார்களாக” ஆவதற்கான வாய்ப்பு முதலில் இவர்களுக்குத்தான் கிடைத்தது. (யாத்திராகமம் 19:5-8) ஆனால், “திருமண விருந்துக்கு” இவர்கள் எப்போது அழைக்கப்பட்டார்கள்? கி.பி. 29-ல், பரலோக அரசாங்கத்தைப் பற்றி இயேசு பிரசங்கிக்க ஆரம்பித்தபோது இவர்களுக்கு அழைப்பு கிடைத்தது.
அழைப்பு கிடைத்தபோது, பெரும்பாலான இஸ்ரவேலர்கள் என்ன செய்தார்கள்? இயேசு அந்த உவமையில் சொன்னபடி, அவர்கள் “வர விரும்பவில்லை.” பெரும்பாலான மதத் தலைவர்களும் மக்களும் இயேசுவை மேசியாவாகவும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை.
யூதர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று இயேசு சொல்கிறார். “[ராஜா] மறுபடியும் வேறு அடிமைகளைக் கூப்பிட்டு, ‘அழைக்கப்பட்டவர்களிடம் நீங்கள் போய், “இதோ! நான் மதிய விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன், காளைகளையும் கொழுத்த மிருகங்களையும் அடித்துச் சமைத்து வைத்திருக்கிறேன், எல்லாம் தயாராக இருக்கிறது; திருமண விருந்துக்கு வாருங்கள்” என நான் அழைப்பதாகச் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார். ஆனால், அழைக்கப்பட்டவர்கள் அதை அசட்டை செய்து, ஒருவன் தன்னுடைய வயலுக்குப் போய்விட்டான், வேறொருவன் தன்னுடைய வியாபாரத்தைக் கவனிக்கப் போய்விட்டான். மற்றவர்களோ, அவருடைய அடிமைகளைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொன்றுபோட்டார்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 22:4-6) கிறிஸ்தவ சபை ஆரம்பமான பிறகு என்ன நடக்கும் என்பதை இது காட்டுகிறது. கடவுளுடைய அரசாங்கத்தில் பங்கு பெற யூதர்களுக்கு அப்போதும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான யூதர்கள் இதை அலட்சியம் செய்தார்கள். ‘ராஜாவின் அடிமைகளை’ அவமானப்படுத்தும் அளவுக்கு மோசமாக நடந்துகொண்டார்கள்.—அப்போஸ்தலர் 4:13-18; 7:54, 58.
அதனால் அந்தத் தேசத்துக்கு என்ன கதி ஏற்படும்? “ராஜாவுக்குப் பயங்கர கோபம் வந்தது; அதனால், தன் படைவீரர்களை அனுப்பி அந்தக் கொலைகாரர்களைக் கொன்றுபோட்டார், அவர்களுடைய நகரத்தையும் கொளுத்தினார்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 22:7) கி.பி. 70-ல், ‘யூதர்களுடைய நகரமான’ எருசலேமை ரோமர்கள் அழித்தபோது இது நிறைவேறியது.
ராஜாவின் விருந்துக்கு அவர்கள் வராததால், வேறு யாருக்குமே அந்த அழைப்பு கிடைக்காதா? அப்படியில்லை என்று இயேசு தன் உவமையில் சொல்கிறார். “பின்பு [ராஜா] தன் அடிமைகளிடம், ‘திருமண விருந்து தயாராக இருக்கிறது, ஆனால் அழைக்கப்பட்டவர்கள் அதற்குத் தகுதியில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள். அதனால், நகரத்துக்கு வெளியே செல்லும் சாலைகளுக்குப் போய், யாரையெல்லாம் பார்க்கிறீர்களோ அவர்களையெல்லாம் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்று சொன்னார். அதன்படியே, அந்த அடிமைகள் அந்தச் சாலைகளுக்குப் போய், அவர்கள் பார்த்த நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லாரையும் அழைத்து வந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பி வழிந்தது” என்று அவர் சொல்கிறார்.—மத்தேயு 22:8-10.
மற்ற தேசத்து மக்கள், அதாவது யூதரல்லாதவர்களும் யூத மதத்துக்கு மாறாதவர்களும், உண்மை கிறிஸ்தவர்களாக ஆவதற்கு பேதுரு உதவி செய்தபோது இது நிறைவேறியது. கி.பி. 36-ல் ரோமப் படை அதிகாரியான கொர்நேலியுவும் அவருடைய குடும்பத்தாரும் கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள். பரலோக அரசாங்கத்துக்குள் போகும் வாய்ப்பு அப்போது அவர்களுக்குக் கிடைத்தது.—அப்போஸ்தலர் 10:1, 34-48.
விருந்துக்கு வருகிற எல்லாருமே “ராஜா” ஏற்றுக்கொள்கிற மாதிரி இருக்க மாட்டார்கள் என்று இயேசு குறிப்பிடுகிறார். “விருந்தாளிகளைப் பார்வையிட ராஜா உள்ளே வந்தபோது, திருமண நிகழ்ச்சிக்குப் பொருத்தமான உடையைப் போடாத ஒருவன் அங்கே இருப்பதைப் பார்த்தார். அதனால் அவனிடம், ‘திருமண நிகழ்ச்சிக்குப் பொருத்தமான உடையைப் போடாமல் நீ எப்படி உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. அப்போது ராஜா தன் வேலையாட்களிடம், ‘அவனுடைய கை கால்களைக் கட்டி, வெளியே இருட்டில் வீசியெறியுங்கள். அங்கே அவன் அழுது அங்கலாய்ப்பான்’ என்று சொன்னார். இப்படியாக, அழைக்கப்படுகிறவர்கள் பலர், ஆனால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் சிலர்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 22:11-14.
இயேசு சொல்கிற எல்லாமே மதத் தலைவர்களுக்குப் புரிந்திருக்காது. ஆனாலும், அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் ரொம்பக் கோபப்படுகிறார்கள். தங்களை இந்தளவு தர்மசங்கடப்படுத்துகிற ஒருவரை இனியும் விட்டுவைக்கக் கூடாது என்று தீர்மானமாக இருக்கிறார்கள்.
-
-
அவர்களுடைய வலையில் இயேசு சிக்கவில்லைஇயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 108
அவர்களுடைய வலையில் இயேசு சிக்கவில்லை
மத்தேயு 22:15-40 மாற்கு 12:13-34 லூக்கா 20:20-40
அரசனுடையதை அரசனுக்கு
உயிர்த்தெழுந்து வருகிறவர்கள் திருமணம் செய்துகொள்வார்களா?
மிக முக்கியமான கட்டளை
இயேசுவை எதிர்க்கிற மதத் தலைவர்கள் பயங்கர கோபத்தோடு இருக்கிறார்கள். சற்று முன்பு அவர் சொன்ன உவமைகள் அவர்கள் எந்தளவு மோசமானவர்கள் என்பதைப் படம்பிடித்துக் காட்டின. பரிசேயர்கள் இப்போது அவரைச் சிக்க வைக்க சதித்திட்டம் போடுகிறார்கள். அவருடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைத்து, ரோம ஆளுநரிடம் பிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக தங்களுடைய சீஷர்கள் சிலருக்குக் கூலி கொடுக்கிறார்கள்.—லூக்கா 6:7.
அவர்கள் இயேசுவிடம் வந்து, “‘போதகரே, நீங்கள் சரியாகப் பேசுகிறவர், சரியாகக் கற்பிக்கிறவர், பாரபட்சம் காட்டாதவர், கடவுளைப் பற்றிய சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டு, ‘ரோம அரசனுக்கு வரி கட்டுவது சரியா இல்லையா?’” என்று கேட்கிறார்கள். (லூக்கா 20:21, 22) அவர்கள் புகழ்வதைக் கேட்டு இயேசு மயங்கிவிடவில்லை. தன்னைத் தந்திரமாகப் பிடிப்பதற்காகத்தான் அவர்கள் இப்படி நாடகமாடுகிறார்கள் என்று அவருக்குத் தெரியும். ஒருவேளை, ‘வரி கட்டுவது தவறு’ என்று அவர் சொன்னால், ரோமர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று அவர்மேல் குற்றம்சாட்டப்படலாம். ஒருவேளை அவர் ‘ஆமாம், வரி கட்ட வேண்டும்’ என்று சொன்னால், ரோம ஆதிக்கத்தை வெறுக்கிற மக்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு அவருக்கு எதிராகத் திரும்பிவிடலாம். சரி, இப்போது இயேசு என்ன பதில் சொல்கிறார்?
இயேசு அவர்களிடம், “வெளிவேஷக்காரர்களே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரிக் காசு ஒன்றை என்னிடம் காட்டுங்கள்” என்று சொல்கிறார். அப்போது அவர்கள் ஒரு தினாரியுவை அவரிடம் கொண்டுவருகிறார்கள். “இதில் இருக்கிற உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?” என்று அவர் கேட்கிறார். அதற்கு அவர்கள், “ரோம அரசனுடையது” என்று சொல்கிறார்கள். அப்போது இயேசு, “அப்படியானால், அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று திறமையாகப் பதில் சொல்கிறார்.—மத்தேயு 22:18-21.
இயேசு சொன்னதைக் கேட்டு அவர்கள் அசந்துபோகிறார்கள். அதற்குமேல் எதுவும் பேச முடியாமல், அங்கிருந்து கிளம்புகிறார்கள். ஆனால், இயேசுவின் எதிரிகள் அவரை விடுவதாக இல்லை. பரிசேயர்கள் போட்ட திட்டம் தோல்வியடைந்த பிறகு, வேறொரு மதப் பிரிவின் தலைவர்கள் அவரிடம் வருகிறார்கள்.
உயிர்த்தெழுதல் கிடையாது என்று சொல்கிற சதுசேயர்கள், உயிர்த்தெழுதலையும் கொழுந்தன்முறை கல்யாணத்தையும் பற்றிய ஒரு கேள்வியை அவரிடம் கேட்கிறார்கள். “போதகரே, ‘ஒருவன் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டு அவனுக்காக வாரிசு உருவாக்க வேண்டும்’ என மோசே சொன்னார். எங்களோடு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம் செய்து, வாரிசு இல்லாமல் இறந்துபோனான். அதனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டான். இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரை அப்படியே நடந்தது. கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். அவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது, அந்த ஏழு பேரில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லாருக்கும் அவள் மனைவியாக இருந்தாளே” என்று கேட்கிறார்கள்.—மத்தேயு 22:24-28.
மோசே எழுதிய புத்தகங்களைத்தான் சதுசேயர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால், இயேசு அந்தப் புத்தகங்களிலிருந்தே அவர்களுக்குப் பதில் சொல்கிறார். அவர்களிடம், “உங்கள் எண்ணம் தவறு. ஏனென்றால் உங்களுக்கு வேதவசனங்களும் தெரியவில்லை, கடவுளுடைய வல்லமையும் தெரியவில்லை; உயிரோடு எழுப்பப்படுகிற ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்; அவர்கள் பரலோகத்திலுள்ள தேவதூதர்களைப் போல் இருப்பார்கள். இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் புத்தகத்தில் இருக்கிற முட்புதரைப் பற்றிய பதிவில் நீங்கள் வாசித்ததில்லையா? கடவுள் அவரிடம், ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’ என்று சொன்னார், இல்லையா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார். அதனால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு” என்று சொல்கிறார். (மாற்கு 12:24-27; யாத்திராகமம் 3:1-6) அவர் சொன்ன பதிலைக் கேட்டு மக்கள் மலைத்துப்போகிறார்கள்.
இயேசு பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் வாயை அடைத்துவிட்டார். இப்போது அவர்கள் ஒன்றுசேர்ந்துகொண்டு அவரைச் சோதிப்பதற்காக வருகிறார்கள். “போதகரே, திருச்சட்டத்திலேயே மிக முக்கியமான கட்டளை எது?” என்று வேத அறிஞன் ஒருவன் கேட்கிறான்.—மத்தேயு 22:36.
அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கடவுளாகிய யெகோவா ஒருவரே யெகோவா. உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்’ என்பதே முதலாவது கட்டளை. ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட முக்கியமான கட்டளை வேறெதுவும் இல்லை” என்று சொல்கிறார்.—மாற்கு 12:29-31.
அதற்கு அந்த வேத அறிஞன், “போதகரே, நீங்கள் அருமையாகச் சொன்னீர்கள், நீங்கள் சொன்னதுதான் உண்மை; ‘கடவுள் ஒருவரே, அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை’; அதுமட்டுமல்ல, தகன பலிகளையும் மற்ற பலிகளையும் கொடுப்பதைவிட முழு இதயத்தோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அவர்மேல் அன்பு காட்டுவதும், தன்மேல் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்டுவதும்தான் சிறந்தது” என்று சொல்கிறான். அவன் புத்திசாலித்தனமாகச் சொன்னதைப் பார்த்து, “கடவுளுடைய அரசாங்கம் உனக்கு ரொம்பத் தூரத்தில் இல்லை” என்று இயேசு சொல்கிறார்.—மாற்கு 12:32-34.
மூன்று நாட்களாக (நிசான் 9, 10, 11) இயேசு ஆலயத்தில் கற்பித்துக்கொண்டிருக்கிறார். அந்த வேத அறிஞனைப் போலச் சிலர் அவர் சொல்வதை ஆசையாகக் கேட்கிறார்கள். ஆனால், மதத் தலைவர்களுக்கு இனி ‘அவரிடம் கேள்வி கேட்க தைரியமும்’ இல்லை, அவர் சொல்வதைக் கேட்க விருப்பமும் இல்லை.
-
-
தன்னை எதிர்க்கிறவர்களை இயேசு கண்டனம் செய்கிறார்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 109
தன்னை எதிர்க்கிறவர்களை இயேசு கண்டனம் செய்கிறார்
மத்தேயு 22:41–23:24 மாற்கு 12:35-40 லூக்கா 20:41-47
கிறிஸ்து யாருடைய மகன்?
தன்னை எதிர்க்கிறவர்களின் வெளிவேஷத்தை வெட்டவெளிச்சமாக்குகிறார்
இயேசுவுக்கு இருக்கிற நல்ல பெயரைக் கெடுக்க எதிரிகளால் முடியவில்லை, அவரைத் தந்திரமாகச் சிக்க வைத்து ரோமர்களிடம் பிடித்துக் கொடுக்கவும் முடியவில்லை. (லூக்கா 20:20) இப்போது நிசான் 11. இயேசு இன்னமும் ஆலயத்தில்தான் இருக்கிறார். தன்னை எதிர்க்கிறவர்களிடம் எதிர்க்கேள்வி கேட்டு, அவர்களை மடக்குகிறார். தான் உண்மையில் யார் என்பதையும் தெரியப்படுத்துகிறார். இயேசு அவர்களிடம், “நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்கிறார். (மத்தேயு 22:42) கிறிஸ்து, அதாவது மேசியா, தாவீதின் வம்சத்தில் வருவார் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதனால், அவர் தாவீதின் மகன் என்று அந்த ஆட்கள் சொல்கிறார்கள்.—மத்தேயு 9:27; 12:23; யோவான் 7:42.
அப்போது இயேசு, “அப்படியானால், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது அவரை எஜமான் என்று அழைத்தது எப்படி? ‘யெகோவா என் எஜமானிடம், “உன்னுடைய எதிரிகளை நான் உன் காலடியில் வீழ்த்தும்வரை நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’ என தாவீது சொன்னாரே. தாவீதே அவரை எஜமான் என்று அழைத்திருப்பதால் அவர் எப்படி இவருடைய மகனாக இருக்க முடியும்?” என்று அவர்களிடம் கேட்கிறார்.—மத்தேயு 22:43-45.
பரிசேயர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். ஏனென்றால், தாவீதின் வம்சத்தில் வருகிற ஒரு மனிதர், ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுதலை செய்வார் என்று அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சங்கீதம் 110:1, 2-ல் இருக்கிற தாவீதின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி, மேசியா ஒரு மனித ராஜாவைவிட மேலானவர் என்பதை இயேசு புரிய வைக்கிறார். மேசியா, தாவீதுக்கு எஜமானாக இருக்கிறார். கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்த பின்பு அவர் ஆட்சி செய்ய ஆரம்பிப்பார். இயேசுவை எதிர்க்கிறவர்கள் அவர் சொன்ன பதிலைக் கேட்டு வாயடைத்துப்போகிறார்கள்.
இயேசு சொல்வதை அவருடைய சீஷர்களும் இன்னும் பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர் இப்போது அவர்களிடம் வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் பற்றி எச்சரிக்கிறார். அவர்கள் ‘மோசேயின் இருக்கையில் உட்கார்ந்து’ திருச்சட்டத்தைக் கற்பிக்கிறார்கள். அதனால், “அவர்கள் உங்களுக்கு என்னவெல்லாம் சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்யுங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள்; ஏனென்றால், சொல்வதுபோல் அவர்கள் செய்வதில்லை” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 23:2, 3.
அவர்கள் எப்படியெல்லாம் வெளிவேஷம் போடுகிறார்கள் என்பதற்கு இயேசு சில உதாரணங்களைச் சொல்கிறார். “தாங்கள் கட்டியிருக்கிற வேதாகமத் தாயத்துகளை அகலமாக்குகிறார்கள்” என்கிறார். யூதர்களில் சிலர், திருச்சட்ட வாசகங்களைக் கொண்ட சிறிய பெட்டிகளைத் தங்களுடைய நெற்றியிலோ கையிலோ கட்டுவது வழக்கம். ஆனால் பரிசேயர்கள், தாங்கள் திருச்சட்டத்தைப் பக்திவைராக்கியத்தோடு கடைப்பிடிப்பதுபோல் காட்டிக்கொள்வதற்காகச் சற்று பெரிய பெட்டிகளைக் கட்டிக்கொள்கிறார்கள். அதோடு, “தங்களுடைய அங்கிகளின் ஓரங்களைப் பெரிதாக்குகிறார்கள்.” இஸ்ரவேலர்கள் தங்களுடைய அங்கிகளின் ஓரங்களில் தொங்கல்களை வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. (எண்ணாகமம் 15:38-40) ஆனால், பரிசேயர்கள் நீளமான தொங்கல்களை வைத்துக்கொள்கிறார்கள். “மனுஷர்கள் பார்க்க வேண்டும்” என்பதற்காகத்தான் அவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள்.—மத்தேயு 23:5.
தன்னுடைய சீஷர்களுக்கும் பதவி ஆசை வந்துவிட வாய்ப்பிருக்கிறது என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால் அவர்களிடம், “நீங்கள் ரபீ என்று அழைக்கப்படாதீர்கள்; ஒரே ஒருவர்தான் உங்கள் போதகர்; நீங்கள் எல்லாரும் சகோதரர்கள். அதுமட்டுமல்ல, பூமியில் இருக்கிற யாரையும் தந்தை என்று அழைக்காதீர்கள், பரலோகத்தில் இருக்கிற ஒருவர்தான் உங்கள் தந்தை. தலைவர் என்றும் அழைக்கப்படாதீர்கள், கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்” என்று ஆலோசனை கொடுக்கிறார். சீஷர்கள் தங்களை எப்படிக் கருத வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும்? “உங்களில் யார் மிகவும் உயர்ந்தவராக இருக்கிறாரோ அவர் உங்களுக்குச் சேவை செய்கிறவராக இருக்க வேண்டும். தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்று சொல்கிறார்.—மத்தேயு 23:8-12.
வெளிவேஷம் போடுகிற வேத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் வரப்போகிற கேடுகளைப் பற்றி இயேசு அடுத்ததாகச் சொல்கிறார். “வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! மனுஷர்கள் போக முடியாதபடி பரலோக அரசாங்கத்தின் கதவைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்களும் அதில் போவதில்லை, போக முயற்சி செய்கிறவர்களையும் போக விடுவதில்லை” என்று சொல்கிறார்.—மத்தேயு 23:13.
யெகோவாவின் பார்வையில் எது உண்மையிலேயே முக்கியம் என்பதைப் பற்றிப் பரிசேயர்கள் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அதற்காக இயேசு அவர்களைக் கண்டனம் செய்கிறார். அவர்கள் தங்கள் இஷ்டப்படி சட்டங்களைப் போட்டுக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, “ஒருவன் ஆலயத்தின் மேல் சத்தியம் செய்தால் ஒன்றுமில்லை, ஆனால் ஆலயத்தில் இருக்கிற தங்கத்தின் மேல் சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறான்” என்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று தெரியாத குருடர்களைப் போல அவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் யெகோவாவை வணங்கவும், அவருடன் நெருங்கி வரவும் உதவுகிற இடம் ஆலயம்தான்; அதைவிட அதில் இருக்கிற தங்கத்துக்குப் பரிசேயர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ‘திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற நியாயம், இரக்கம், விசுவாசம் ஆகிய மிக முக்கியமான காரியங்களை விட்டுவிடுகிறார்கள்.’—மத்தேயு 23:16, 23; லூக்கா 11:42.
இயேசு இவர்களைப் பார்த்து, “குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் கொசுவை வடிகட்டிவிட்டு, ஒட்டகத்தை விழுங்கிவிடுகிறீர்கள்!” என்று சொல்கிறார். (மத்தேயு 23:24) திருச்சட்டத்தின்படி கொசு ஒரு அசுத்தமான பூச்சி; அதனால், அவர்கள் திராட்சமதுவை வடிகட்டி, கொசுவை எடுத்துவிடுவார்கள். ஆனால், திருச்சட்டத்தில் இருக்கிற மிக முக்கியமான கட்டளைகளை அவர்கள் அலட்சியம் செய்வது, ஒட்டகத்தை விழுங்குவதுபோல் இருக்கிறது. கொசுவைவிட பல மடங்கு பெரிதாக இருக்கிற ஒட்டகமும் திருச்சட்டத்தின்படி அசுத்தமானதுதான்.—லேவியராகமம் 11:4, 21-24.
-
-
ஆலயத்தில் இயேசுவின் கடைசி நாள்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 110
ஆலயத்தில் இயேசுவின் கடைசி நாள்
மத்தேயு 23:25–24:2 மாற்கு 12:41–13:2 லூக்கா 21:1-6
மதத் தலைவர்களை இயேசு கண்டனம் செய்கிறார்
ஆலயம் அழிக்கப்படும்
ஏழை விதவை இரண்டு சிறிய காசுகளைப் போடுகிறாள்
ஆலயத்துக்கு கடைசியாகப் போயிருக்கிற இந்தச் சமயத்திலும், வேத அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் வெளிவேஷத்தை இயேசு அம்பலப்படுத்துகிறார். அவர்களை வெளிவேஷக்காரர்கள் என்று வெளிப்படையாகவே கண்டிக்கிறார். “கிண்ணத்தையும் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் சுத்தம் செய்கிறீர்கள், ஆனால் உட்புறத்தில் அவை பேராசையாலும் கட்டுக்கடங்காத ஆசைகளாலும் நிறைந்திருக்கின்றன. குருட்டுப் பரிசேயனே, கிண்ணத்தையும் பாத்திரத்தையும் முதலாவது உள்ளே சுத்தம் செய், அப்போது அது வெளியிலும் சுத்தமாகும்” என்று உதாரணத்தோடு சொல்கிறார். (மத்தேயு 23:25, 26) தூய்மைச் சடங்கு செய்வதற்கும் தங்களுடைய வெளித்தோற்றத்துக்கும் பரிசேயர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தங்கள் இதயத்தை அவர்கள் சுத்தப்படுத்துவதில்லை.
தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டி அவற்றை அலங்கரிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதுவும்கூட அவர்கள் வெளிவேஷக்காரர்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால், அவர்கள் “தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களுடைய பிள்ளைகள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 23:31) இயேசுவைக் கொல்ல முயற்சி செய்வதன் மூலம் இது உண்மை என்பதை அவர்கள் நிரூபித்துவிட்டார்கள்.—யோவான் 5:18; 7:1, 25.
இந்த மதத் தலைவர்கள் மனம் திருந்தவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதை இயேசு அடுத்ததாகச் சொல்கிறார். “பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே, கெஹென்னாவின் தண்டனையிலிருந்து நீங்கள் எப்படித் தப்பிக்க முடியும்?” என்று கேட்கிறார். (மத்தேயு 23:33) கெஹென்னா என்பது இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிக்கிறது. இது குப்பைகள் எரிக்கப்படுகிற இடம். பொல்லாத வேத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் வரப்போகிற நிரந்தர அழிவுக்கு இது பொருத்தமான அடையாளமாக இருக்கிறது.
இயேசுவின் சீஷர்கள் அவரால் அனுப்பப்பட்ட ‘தீர்க்கதரிசிகளாகவும் ஞானிகளாகவும் போதகர்களாகவும்’ இருக்கிறார்கள். மதத் தலைவர்கள் அவர்களை என்ன செய்வார்கள்? ‘[என் சீஷர்களில்] சிலரை நீங்கள் கொலை செய்வீர்கள், மரக் கம்பங்களில் அறைவீர்கள், உங்கள் ஜெபக்கூடங்களில் முள்சாட்டையால் அடிப்பீர்கள், நகரத்துக்கு நகரம் போய்த் துன்புறுத்துவீர்கள். இதனால், நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல், நீங்கள் கொலை செய்த சகரியாவின் இரத்தம்வரை, உலகத்தில் கொல்லப்பட்ட எல்லா நீதிமான்களுடைய கொலைப்பழிக்கும் நீங்கள் ஆளாவீர்கள்’ என்று மதத் தலைவர்களிடம் இயேசு சொல்கிறார். பிறகு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் இந்தத் தலைமுறைமேல் நிச்சயம் வரும்” என்று எச்சரிக்கிறார். (மத்தேயு 23:34-36) கி.பி. 70-ல், ரோமப் படைவீரர்கள் எருசலேமை அழித்து, ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்றுபோட்டபோது இது நிறைவேறியது.
இந்தப் பயங்கரமான சூழ்நிலையை நினைத்துப் பார்க்கும்போதே இயேசுவுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. அதனால், “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவளே, உன்னிடம் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொன்றவளே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளின் கீழே கூட்டிச்சேர்ப்பதுபோல் நான் உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்க எத்தனையோ தடவை ஆசைப்பட்டேன்! ஆனால் மக்களே, நீங்கள் அதை விரும்பவில்லை. இதோ! உங்கள் வீடு ஒதுக்கித்தள்ளப்பட்டு உங்களிடமே விடப்படும்” என்று வருத்தத்தோடு சொல்கிறார். (மத்தேயு 23:37, 38) “வீடு” என்று எதைச் சொல்கிறார் என்று அங்கிருக்கிற மக்கள் யோசித்திருக்கலாம். எருசலேமில் இருக்கிற பிரமாண்டமான ஆலயத்தை கடவுள் பாதுகாப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஒருவேளை, அந்த ஆலயத்தைத்தான் “வீடு” என்று இயேசு குறிப்பிடுகிறாரா?
பிறகு அவர், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், ‘யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!’ என்று நீங்கள் சொல்லும்வரை இனி ஒருபோதும் என்னைப் பார்க்க மாட்டீர்கள்” என்கிறார். (மத்தேயு 23:39) சங்கீதம் 118:26-ல், “யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர். நாங்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்து உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிக்கிறோம்” என்று பதிவு செய்யப்பட்டிருக்கிற தீர்க்கதரிசன வார்த்தைகளைத்தான் அவர் இங்கே குறிப்பிடுகிறார். இந்த ஆலயம் அழிக்கப்பட்ட பிறகு, கடவுளை வணங்க யாருமே இங்கே வர மாட்டார்கள்.
ஆலயத்தில் காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிற பகுதிக்கு இயேசு இப்போது போகிறார். அந்தப் பெட்டிகளின் மேல் இருக்கிற சிறிய திறப்புகள் வழியாக மக்கள் காணிக்கைகளைப் போடுவார்கள். யூதர்களில் பலர், அங்கே காணிக்கை போடுவதை இயேசு பார்க்கிறார். பணக்காரர்கள் பலர் “நிறைய காசுகளை” போடுகிறார்கள். அந்தச் சமயத்தில், ஒரு ஏழை விதவை வந்து, “மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை” போடுவதை அவர் பார்க்கிறார். (மாற்கு 12:41, 42) அவள் கொடுத்த காணிக்கையைப் பார்த்து கடவுள் ரொம்பச் சந்தோஷப்பட்டிருப்பார் என்பது இயேசுவுக்குத் தெரியும்.
அவர் தன் சீஷர்களைக் கூப்பிட்டு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், காணிக்கைப் பெட்டிகளில் மற்ற எல்லாரும் போட்டதைவிட இந்த ஏழை விதவைதான் அதிகமாகப் போட்டாள்” என்று சொல்கிறார். அது எப்படி? “அவர்கள் எல்லாரும் தங்கள் தேவைக்கு அதிகமாக இருந்ததைத்தான் போட்டார்கள்; ஆனால், இவள் தனக்குத் தேவையிருந்தும், தன்னிடமிருந்த எல்லாவற்றையும், தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள்” என்று விளக்குகிறார். (மாற்கு 12:43, 44) எண்ணத்திலும் செயலிலும், இந்த விதவைக்கும் மதத் தலைவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்!
நிசான் 11-ஆம் தேதி அன்று இயேசு கடைசி தடவையாக ஆலயத்திலிருந்து புறப்படுகிறார். அப்போது அவருடைய சீஷர்களில் ஒருவர், “போதகரே, பாருங்கள்! எவ்வளவு அழகான கற்கள், எவ்வளவு அழகான கட்டிடங்கள்!” என்கிறார். (மாற்கு 13:1) ஆலய மதில்களில் இருக்கிற சில கற்கள் மிகப் பெரிதாக இருக்கின்றன. அதனால், இந்த மதில்களை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று நிறைய பேர் யோசித்திருக்கலாம். ஆனால் இயேசு அவரிடம், “பிரமாண்டமான இந்தக் கட்டிடங்களையா பார்க்கிறாய்? ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாமே நிச்சயமாகத் தரைமட்டமாக்கப்படும்” என்கிறார்; அதைக் கேட்டபோது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.—மாற்கு 13:2.
இவற்றைச் சொன்ன பிறகு, இயேசு தன்னுடைய சீஷர்களோடு கீதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து, ஒலிவ மலைமேல் ஏறிப் போகிறார். ஒரு இடத்தில், இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களான பேதுருவும் அந்திரேயாவும் யாக்கோபும் யோவானும் மட்டும் தனியாக இருக்கிறார்கள். அங்கிருந்து, அந்தப் பிரமாண்டமான ஆலயத்தை அவர்களால் பார்க்க முடிகிறது.
-
-
அப்போஸ்தலர்கள் அடையாளம் கேட்கிறார்கள்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 111
அப்போஸ்தலர்கள் அடையாளம் கேட்கிறார்கள்
மத்தேயு 24:3-51 மாற்கு 13:3-37 லூக்கா 21:7-38
நான்கு சீஷர்கள் அடையாளம் கேட்கிறார்கள்
அந்த அடையாளம் முதல் நூற்றாண்டிலும் அதற்குப் பிறகும் நிறைவேறுகிறது
நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
இது நிசான் 11–ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை மத்தியானம். இந்த நாள் சீக்கிரத்தில் முடியப்போகிறது. இந்தப் பூமியில் இயேசு செய்த சுறுசுறுப்பான ஊழியமும் சீக்கிரத்தில் முடியப்போகிறது. இதுவரை பகல் நேரத்தில் அவர் ஆலயத்தில் கற்பித்துவந்தார்; ராத்திரி நேரத்தில், நகரத்துக்கு வெளியே தங்கிவந்தார். மக்களும் ரொம்ப ஆர்வத்தோடு ‘ஆலயத்தில் அவர் பேசுவதைக் கேட்பதற்காக விடியற்காலையிலேயே அவரிடம் கூடிவந்தார்கள்.’ (லூக்கா 21:37, 38) இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது! இயேசு தன்னுடைய நான்கு அப்போஸ்தலர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவானுடன் ஒலிவ மலையில் உட்கார்ந்திருக்கிறார்.
இவர்கள் நான்கு பேரும் அவரிடம் தனியாகப் பேச வந்திருக்கிறார்கள். ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி ஆலயம் தரைமட்டமாகும் என்று இயேசு கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் சொல்லியிருந்தார். அதனால், ஆலயத்தை நினைத்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். அதைத் தவிர, வேறு பல விஷயங்களும் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இயேசு அவர்களிடம், “தயாராயிருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார்” என்று இதற்கு முன்பு சொல்லியிருந்தார். (லூக்கா 12:40) அதோடு, ‘மனிதகுமாரன் வெளிப்படும் நாளை’ பற்றியும் அவர்களிடம் பேசியிருந்தார். (லூக்கா 17:30) இந்த விஷயங்களுக்கும் ஆலயத்தைப் பற்றி இப்போது அவர் சொன்ன விஷயத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அதைத் தெரிந்துகொள்ள அப்போஸ்தலர்கள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால், “இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்கள்.—மத்தேயு 24:3.
அவர்களுடைய கண் முன்னால் கம்பீரமாக நிற்கிற ஆலயத்தின் அழிவை மனதில் வைத்து அவர்கள் இப்படிக் கேட்டிருக்கலாம். அதோடு, மனிதகுமாரனின் பிரசன்னத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பியதாலும் அப்படிக் கேட்டிருக்கலாம். ஏனென்றால், ‘அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ராஜ அதிகாரத்தைப் பெற்றுவர தூர தேசத்துக்குப் புறப்பட்டதை’ பற்றி இயேசு சொன்ன உவமை அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். (லூக்கா 19:11, 12) அதோடு, ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தில்’ என்னவெல்லாம் நடக்கும் என்ற யோசனையும் வந்திருக்கும்.
இயேசு அவர்களுக்கு விளக்கமாகப் பதில் சொல்கிறார். எருசலேமும் அதன் ஆலயமும் எப்போது அழியும் என்பதைக் காட்டுகிற ஒரு அடையாளத்தை இயேசு கொடுக்கிறார். இது எதிர்காலத்தில் இன்னும் பெரியளவில் நிறைவேறும். கிறிஸ்துவின் ‘பிரசன்னம்’ ஆரம்பமாகிவிட்டதையும், இந்தச் சகாப்தத்தின் முடிவு நெருங்கிவிட்டதையும் புரிந்துகொள்ள, எதிர்காலத்தில் வாழ்கிற கிறிஸ்தவர்களுக்கு இந்த அடையாளம் உதவியாக இருக்கும்.
வருஷங்கள் போகப் போக, இயேசு கொடுத்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை அப்போஸ்தலர்கள் பார்க்கிறார்கள். இயேசு சொன்ன நிறைய விஷயங்கள் தங்களுடைய வாழ்நாளிலேயே நிறைவேற ஆரம்பிப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அதனால், 37 வருஷங்களுக்குப் பிறகு, கி.பி. 70-ல் யூத சமுதாயத்துக்கும் அதன் ஆலயத்துக்கும் அழிவு வந்தபோது, விழிப்புள்ள கிறிஸ்தவர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், இயேசு சொன்ன எல்லா தீர்க்கதரிசனங்களுமே அந்தச் சமயத்தில் நிறைவேறவில்லை. அப்படியானால், அவர் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இதற்கான பதிலை இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் சொல்கிறார்.
“போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும்” பற்றி மக்கள் கேள்விப்படுவார்கள் என்று இயேசு சொல்கிறார். அதோடு, “ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும்” என்றும் சொல்கிறார். (மத்தேயு 24:6, 7) “பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும். அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும் உண்டாகும்” என்றும்கூட சொல்கிறார். (லூக்கா 21:11) ‘மக்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்’ என்று தன் சீஷர்களை எச்சரிக்கிறார். (லூக்கா 21:12) போலித் தீர்க்கதரிசிகள் வந்து நிறைய பேரை ஏமாற்றுவார்கள். அக்கிரமம் அதிகமாகும், நிறைய பேருடைய அன்பு குறைந்துவிடும். அதோடு, ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்’ என்றும் சொல்கிறார்.—மத்தேயு 24:14.
ரோமர்களால் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பும், அந்த நகரம் அழிக்கப்பட்ட சமயத்திலும் இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின் சில அம்சங்கள் நிறைவேறின. ஆனாலும், அந்தத் தீர்க்கதரிசனம் பிற்பாடு பெரியளவில் நிறைவேறும் என்று இயேசு சொன்னாரா? இயேசு சொன்ன அந்த முக்கியமான தீர்க்கதரிசனம் நம்முடைய காலத்தில் பெரியளவில் நிறைவேறுவதை நீங்கள் பார்க்கிறீர்களா?
தன்னுடைய பிரசன்னத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தில், ‘பாழாக்கும் அருவருப்பை’ பற்றியும் இயேசு சொல்கிறார். (மத்தேயு 24:15) கி.பி. 66-ல், தங்களுடைய மத சின்னங்களைப் பிடித்துக்கொண்டு வந்த ரோம “படைகள்” பாழாக்கும் அருவருப்பாக இருந்தன. ரோமர்கள் எருசலேமைச் சுற்றிவளைத்து, அதன் மதிலுக்குக் கீழே குழி தோண்டி அதை வலுவிழக்க வைத்தார்கள். (லூக்கா 21:20) இப்படி, “பாழாக்கும் அருவருப்பு” நிற்கக்கூடாத இடத்தில், அதாவது யூதர்கள் ‘பரிசுத்தமாக’ கருதுகிற இடத்தில், நின்றது.
“அப்போது மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதற்குப் பிறகும் வரப்போவதில்லை” என்று இயேசு சொல்கிறார். அவர் சொன்னபடியே, கி.பி. 70-ல் ரோமர்கள் எருசலேமை அழித்தார்கள். யூதர்களின் ‘பரிசுத்த நகரத்தையும்’ அதில் இருக்கிற ஆலயத்தையும் ரோமர்கள் கைப்பற்றி தரைமட்டமாக்கினார்கள். அந்தச் சமயத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இது மிகுந்த உபத்திரவமாக இருந்தது. (மத்தேயு 4:5; 24:21) இதற்கு முன்பு, அந்த நகரமும் யூத மக்களும் சந்தித்த எந்த அழிவையும்விட இது பயங்கரமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக யூதர்கள் பின்பற்றிவந்த வழிபாட்டு முறைக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இயேசுவின் இந்தத் தீர்க்கதரிசனம் பிற்பாடு பெரியளவில் நிறைவேறும்போது, கண்டிப்பாகப் படுபயங்கரமாக இருக்கும் என்று தெரிகிறது.
முடிவு காலத்தில் நம்பிக்கை
இயேசு தன்னுடைய பிரசன்னத்தையும் இந்தச் சகாப்தத்தின் முடிவையும் பற்றி இன்னும் சில விஷயங்களைச் சொல்கிறார். ‘போலிக் கிறிஸ்துக்கள் மற்றும் போலித் தீர்க்கதரிசிகள்’ பின்னால் போகக் கூடாது என்று தன் அப்போஸ்தலர்களை எச்சரிக்கிறார். “முடிந்தால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக்கூட ஏமாற்றுவதற்கு” அந்த ஆட்கள் முயற்சி செய்வார்கள் என்று சொல்கிறார். (மத்தேயு 24:24) ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஏமாற மாட்டார்கள். இப்படிப்பட்ட போலிக் கிறிஸ்துக்களை நேரில் பார்க்க முடியும். ஆனால், கிறிஸ்துவின் பிரசன்னத்தை நேரில் பார்க்க முடியாது.
இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தில் வரப்போகிற மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி இயேசு இப்படிச் சொல்கிறார்: “சூரியன் இருண்டுவிடும், சந்திரன் ஒளி கொடுக்காது, வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழும், வான மண்டலங்கள் அசைக்கப்படும்.” (மத்தேயு 24:29) குலைநடுங்க வைக்கிற அந்த விவரிப்பை இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் சொல்லும்போது, இவையெல்லாம் எப்படி நடக்கும் என்று அவர்களால் ஊகிக்க முடிவதில்லை. ஆனால், இவை கண்டிப்பாக மக்களை அதிர வைக்கும் என்பதை மட்டும் அவர்களால் உணர முடிகிறது.
அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது மக்களுக்கு எப்படி இருக்கும்? “உலகத்துக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தில் மக்களுக்குத் தலைசுற்றும். ஏனென்றால், வான மண்டலங்கள் அசைக்கப்படும்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 21:26) உண்மைதான், அது மனித சரித்திரத்தின் மிக மிக இருண்ட காலப்பகுதியாக இருக்கும்.
ஆனால், “மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்” வரும்போது எல்லாருமே புலம்பிக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் சொல்கிறார். (மத்தேயு 24:30) ஏனென்றால், “தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக” கடவுள் தலையிடுவார் என்று அவர் ஏற்கெனவே சொல்லியிருந்தார். (மத்தேயு 24:22) இப்படிப்பட்ட உண்மையுள்ள சீஷர்கள் அவர் சொல்கிற இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கும்போது என்ன செய்ய வேண்டும்? “இவையெல்லாம் நடக்க ஆரம்பிக்கும்போது நீங்கள் நேராக நிமிர்ந்து நின்று, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; ஏனென்றால், உங்கள் விடுதலை நெருங்கிவருகிறது” என்று சொல்லி இயேசு உற்சாகப்படுத்துகிறார்.—லூக்கா 21:28.
அவர் முன்னறிவித்த இந்தக் காலப்பகுதியில் வாழ்கிற சீஷர்கள், முடிவு சீக்கிரத்தில் வரப்போவதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்காக, அத்தி மரத்தைப் பற்றிய உவமையை இயேசு சொல்கிறார். “அதில் இளங்கிளைகள் தோன்றி, இலைகள் துளிர்க்க ஆரம்பித்ததுமே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிந்துகொள்கிறீர்கள். அப்படியே, இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, கதவுக்குப் பக்கத்திலேயே அவர் வந்துவிட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது” என்று அவர் சொல்கிறார்.—மத்தேயு 24:32-34.
இந்த அடையாளத்தின் ஒவ்வொரு அம்சமும் நிறைவேறுவதைப் பார்க்கும்போது, முடிவு சீக்கிரத்தில் வந்துவிடும் என்பதைச் சீஷர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த விறுவிறுப்பான காலப்பகுதியில் வாழப்போகிற சீஷர்களுக்கு இயேசு இந்த அறிவுரையைக் கொடுக்கிறார்:
“அந்த நாளும் அந்த நேரமும் பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது. நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும் நடக்கும். எப்படியென்றால், பெருவெள்ளம் வருவதற்கு முந்தின காலத்தில், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். நோவா பேழைக்குள் நுழைந்த நாள்வரை அப்படித்தான் இருந்தார்கள். பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை; மனிதகுமாரனுடைய பிரசன்னத்தின்போதும் அப்படியே நடக்கும்.” (மத்தேயு 24:36-39) நோவாவின் காலத்தில் வந்த பெருவெள்ளம் உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோலத்தான், இந்தச் சகாப்தத்தின் முடிவிலும் இருக்கும்.
ஒலிவ மலையில் இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிற அப்போஸ்தலர்கள், விழிப்போடு இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று புரிந்துகொள்கிறார்கள். இயேசு அவர்களிடம், “பெருந்தீனியாலும் குடிவெறியாலும் வாழ்க்கைக் கவலைகளாலும் உங்கள் இதயம் பாரமடையாதபடி எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால், எதிர்பாராத வேளையில் அந்த நாள் திடீரென உங்கள்மேல் கண்ணியைப் போல் வரும். பூமி முழுவதும் குடியிருக்கிற எல்லார்மேலும் அது வரும். அதனால், விழித்திருந்து எப்போதும் மன்றாடுங்கள். அப்படிச் செய்தால்தான், நடக்கப்போகிற இவை எல்லாவற்றிலிருந்தும் உங்களால் தப்பிக்க முடியும், மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கவும் முடியும்” என்கிறார்.—லூக்கா 21:34-36.
தான் சொல்கிற இந்தச் சம்பவங்கள் பெரியளவில் நடக்கும் என்பதை இயேசு மறுபடியும் வலியுறுத்துகிறார். ஒருசில பத்தாண்டுகளில் நடக்கப்போகிற சம்பவங்களையோ, எருசலேம் நகரத்தையும் யூத தேசத்தையும் மட்டுமே பாதிக்கப்போகிற சம்பவங்களையோ பற்றி இயேசு இங்கே சொல்லிக்கொண்டில்லை. ‘பூமி முழுவதும் குடியிருக்கிற எல்லார்மேலும் வரப்போகிற’ சம்பவங்களைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருக்கிறார்.
தன்னுடைய சீஷர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும், தயாராகவும் இருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இதை வலியுறுத்துவதற்காக இயேசு இன்னொரு உவமையைச் சொல்கிறார். “ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்: ராத்திரி எந்த நேரத்தில் திருடன் வருவான் என்பது வீட்டு எஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவர் விழித்திருந்து, வீட்டுக்குள் திருடன் புகுந்துவிடாமல் பார்த்துக்கொள்வார். அதனால், நீங்களும் தயாராக இருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார்” என்று எச்சரிக்கிறார்.—மத்தேயு 24:43, 44.
அதேசமயத்தில், தன்னுடைய சீஷர்கள் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம் என்றும் இயேசு சொல்கிறார். இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிற சமயத்தில், எச்சரிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுகிற ஒரு “அடிமை” கண்டிப்பாக இருப்பார் என்று சொல்கிறார். அப்போஸ்தலர்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயத்தை வைத்தே இதை விளக்குகிறார். “ஏற்ற வேளையில் தன்னுடைய வீட்டாருக்கு உணவு கொடுப்பதற்காக எஜமான் நியமித்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்? எஜமான் வரும்போது அப்படிச் செய்துகொண்டிருக்கிற அடிமையே சந்தோஷமானவன்! உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவர் தன்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அவனை நியமிப்பார்” என்று சொல்கிறார். ஒருவேளை அந்த “அடிமை” பொல்லாதவனாக மாறி, மற்றவர்களை அடிக்க ஆரம்பித்தால் அவனுடைய எஜமான் வந்து, “அவனை மிகக் கடுமையாகத் தண்டிப்பார்” என்றும் சொல்கிறார்.—மத்தேயு 24:45-51; லூக்கா 12:45, 46-ஐ ஒப்பிடுங்கள்.
தன்னுடைய சீஷர்களில் ஒரு பிரிவினர் பொல்லாதவர்களாக மாறிவிடுவார்கள் என்று இயேசு இங்கே சொல்லவில்லை. அப்படியானால், தன் சீஷர்களுக்கு என்ன பாடத்தை அவர் இங்கே கற்பிக்கிறார்? அவர்கள் எச்சரிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்றுதான் அவர் சொல்கிறார். இதைத் தெளிவுபடுத்துவதற்காக அவர் இன்னொரு உவமையைச் சொல்கிறார்.
-
-
விழிப்போடு இருக்க வேண்டும்—கன்னிப்பெண்கள் உவமைஇயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 112
விழிப்போடு இருக்க வேண்டும்—கன்னிப்பெண்கள் உவமை
பத்துக் கன்னிப்பெண்களைப் பற்றிய உவமை
தன்னுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் என்ன அடையாளம் என்பதைப் பற்றிச் சீஷர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போது இன்னொரு உவமையின் மூலமாக அவர்களுக்கு ஞானமான ஆலோசனையைக் கொடுக்கிறார். இந்த உவமையில் சொல்லப்பட்ட விஷயங்கள் நிறைவேறுவதை அவருடைய பிரசன்னத்தின்போது வாழ்கிறவர்கள் பார்ப்பார்கள்.
“பரலோக அரசாங்கம் விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைப் பார்க்க போன பத்துக் கன்னிப்பெண்களைப் போல் இருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் புத்தியில்லாதவர்கள், ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 25:1, 2.
பரலோக அரசாங்கத்துக்குள் போகப்போகிற சீஷர்களில் பாதி பேர் புத்தியில்லாதவர்கள், இன்னொரு பாதி பேர் புத்தியுள்ளவர்கள் என்று இயேசு இங்கே சொல்லவில்லை. அந்த அரசாங்கத்தைப் பற்றிய விஷயங்களில், விழிப்பாக இருப்பதா வேண்டாமா என்ற முடிவை சீஷர்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும் என்பதைத்தான் இயேசு இங்கே சுட்டிக்காட்டுகிறார். ஆனாலும், தன்னுடைய சீஷர்கள் ஒவ்வொருவரும் கடைசிவரை உண்மையோடு இருந்து, தகப்பனின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் இயேசுவுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்த உவமையில், பத்துக் கன்னிப்பெண்களும் மணமகனை வரவேற்பதற்காகவும், திருமண ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காகவும் புறப்பட்டுப் போகிறார்கள். மணமகன் வந்ததும், இந்தக் கன்னிப்பெண்கள் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு அவர் வருகிற பாதையைப் பிரகாசிக்க வைப்பார்கள். மணமகளுக்காகத் தயார் செய்யப்பட்டிருக்கிற வீட்டுக்கு மணமகன் அவளைக் கூட்டிக்கொண்டு வரும்போது இந்தக் கன்னிப்பெண்கள் அவரை இப்படிக் கௌரவப்படுத்துவார்கள். ஆனால், இந்த உவமையில் என்ன நடக்கிறது?
“புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளைக் கொண்டுபோனார்கள், ஆனால் எண்ணெயைக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்களோ தங்கள் விளக்குகளோடு குப்பிகளில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணமகன் வரத் தாமதித்ததால், அவர்கள் எல்லாரும் அசந்து தூங்கிவிட்டார்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:3-5) அவர்கள் எதிர்பார்த்த நேரத்தில் மணமகன் வரவில்லை. அவர் வருவதற்கு ரொம்பத் தாமதமாவதுபோல் தெரிவதால், அந்தக் கன்னிப்பெண்கள் எல்லாரும் தூங்கிவிடுகிறார்கள். இயேசு இதற்கு முன்பு சொன்ன ஒரு உவமையில், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தூர தேசத்துக்குப் போய், ‘கடைசியில், ராஜ அதிகாரத்தை பெற்றுக்கொண்டு திரும்பி வந்தார்’ என்பது அப்போஸ்தலர்களின் ஞாபகத்துக்கு வந்திருக்கும்.—லூக்கா 19:11-15.
மணமகன் வரும்போது என்ன நடக்கிறது என்பதைப் பத்துக் கன்னிப்பெண்கள் பற்றிய உவமையில் இயேசு சொல்கிறார்: “நடுராத்திரியில், ‘இதோ, மணமகன் வருகிறார்! அவரைப் பார்க்கப் புறப்பட்டுப் போங்கள்’ என்ற சத்தம் கேட்டது.” (மத்தேயு 25:6) கன்னிப்பெண்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்களா? விழிப்போடு இருக்கிறார்களா?
“அப்போது, அந்தக் கன்னிப்பெண்கள் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளைத் தயார்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம், ‘எங்களுடைய விளக்குகள் அணையப்போகின்றன, உங்களிடம் இருக்கிற எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள்’ என்று கேட்டார்கள். அதற்குப் புத்தியுள்ளவர்கள், ‘எங்களுக்கும் உங்களுக்கும் எண்ணெய் போதாமல் போய்விடலாம். அதனால், விற்கிறவர்களிடம் போய் நீங்களே அதை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார்கள்” என இயேசு சொல்கிறார்.—மத்தேயு 25:7-9.
புத்தியில்லாத ஐந்து கன்னிப்பெண்களும் மணமகனைச் சந்திக்கத் தயாராகவும் இல்லை, விழிப்பாகவும் இல்லை. அவர்களிடம் தேவையான அளவு எண்ணெய் இல்லை. அதனால், அவர்கள் போய் வாங்கிக்கொண்டு வர வேண்டியிருக்கிறது. “அவர்கள் அதை வாங்கப் போனபோது மணமகன் வந்துவிட்டார்; தயாராக இருந்த கன்னிப்பெண்கள் அவரோடு திருமண விருந்தில் கலந்துகொள்ள வீட்டுக்குள் போனார்கள், கதவும் மூடப்பட்டது. அதன் பின்பு, மற்ற ஐந்து கன்னிப்பெண்களும் அங்கே வந்து, ‘எஜமானே! எஜமானே! கதவைத் திறங்கள்!’ என்றார்கள். அதற்கு அவர், ‘நிஜமாகச் சொல்கிறேன், நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டார்” என இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:10-12) தயாராகவும் விழிப்பாகவும் இல்லாததால் எப்பேர்ப்பட்ட சோக முடிவு!
இயேசு தன்னைத்தான் மணமகன் என்று குறிப்பிடுகிறார் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்கிறார்கள். இதற்கு முன்பும், இயேசு தன்னை ஒரு மணமகனுக்கு ஒப்பிட்டுப் பேசியிருந்தார். (லூக்கா 5:34, 35) புத்தியுள்ள கன்னிப்பெண்கள் யார்? அரசாங்கத்தைப் பெறப்போகிற ‘சிறுமந்தையை’ பற்றிப் பேசும்போது, “இடுப்புப்பட்டையைக் கட்டிக்கொண்டு தயாராயிருங்கள், உங்கள் விளக்குகளை எரியவிடுங்கள்” என்று இயேசு சொல்லியிருந்தார். (லூக்கா 12:32, 35) அதனால், தங்களைப் போன்ற உண்மையுள்ள சீஷர்களைப் பற்றித்தான் இயேசு இந்த உவமையில் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்கிறார்கள். இந்த உவமை மூலமாக இயேசு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறார்?
இயேசுவே அதைத் தெளிவாகச் சொல்கிறார். “விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” என்று அவர் கடைசியில் சொல்கிறார்.—மத்தேயு 25:13.
தன்னை உண்மையோடு பின்பற்றுகிறவர்கள், தன்னுடைய பிரசன்னத்தின்போது ‘விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்று இயேசு சொல்கிறார். அவர் கண்டிப்பாக வருவார். அப்படி வரும்போது, புத்தியுள்ள ஐந்து கன்னிப்பெண்களைப் போல அவர்கள் தயாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், தங்களுடைய அருமையான நம்பிக்கையை அவர்கள் எப்போதும் கண் முன்னால் வைத்திருக்க முடியும்; பரிசை இழந்துவிடாமல் இருக்கவும் முடியும்.
-
-
சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும்—தாலந்து உவமைஇயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 113
சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும்—தாலந்து உவமை
தாலந்து உவமையை இயேசு சொல்கிறார்
இயேசு தன்னுடைய நான்கு அப்போஸ்தலர்களோடு இன்னமும் ஒலிவ மலையில் இருக்கிறார். இப்போது அவர்களுக்கு இன்னொரு உவமையைச் சொல்கிறார். ஒருசில நாட்களுக்கு முன்பு எரிகோவில் இருந்தபோது, கடவுளுடைய அரசாங்கம் எதிர்காலத்தில்தான் ஆட்சியை ஆரம்பிக்கும் என்பதைக் காட்டுவதற்காக மினாவைப் பற்றிய உவமையைச் சொல்லியிருந்தார். அந்த உவமைக்கும் இப்போது சொல்லப்போகிற உவமைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அவருடைய பிரசன்னத்தையும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தையும் பற்றிய கேள்விக்குப் பதில் சொல்லும்போதுதான் இந்த உவமையையும் சொல்கிறார். அவர் தன்னுடைய சீஷர்களிடம் ஒப்படைக்கிற உடைமைகளை வைத்து அவர்கள் சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும் என்பதை இந்த உவமை காட்டுகிறது.
“பரலோக அரசாங்கம், தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போகிற ஒருவரைப் போல் இருக்கிறது. அவர் போவதற்கு முன்பு, தன்னுடைய அடிமைகளைக் கூப்பிட்டுத் தன் உடைமைகளை அவர்களிடம் ஒப்படைத்தார்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:14) இதற்கு முன்பு சொன்ன ஒரு உவமையில், ‘ராஜ அதிகாரத்தைப் பெற்றுவருவதற்காக’ தூர தேசத்துக்குப் போன ஒரு மனிதரோடு இயேசு தன்னை ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அதனால், இந்த உவமையில் சொல்லப்படுகிற மனிதரும் இயேசுவைத்தான் குறிக்கிறார் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்கிறார்கள்.—லூக்கா 19:12.
அந்த மனிதர் தூர தேசத்துக்குப் போவதற்கு முன்பு, தன்னுடைய அடிமைகளிடம் விலைமதிப்புள்ள உடைமைகளை ஒப்படைக்கிறார். இயேசு ஊழியம் செய்த மூன்றரை வருஷங்களில், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதில் முழு கவனம் செலுத்தினார். அந்த வேலையைச் செய்ய தன்னுடைய சீஷர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். அவர்களைவிட்டு அவர் போன பிறகும், அந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி, சீஷர்கள் பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்வார்கள் என்று அவர் நம்பிக்கையோடு இருக்கிறார்.—மத்தேயு 10:7; லூக்கா 10:1, 8, 9; யோவான் 4:38; 14:12-ஐ ஒப்பிடுங்கள்.
அந்த மனிதர் தன்னுடைய உடைமைகளை எப்படிப் பிரித்துக் கொடுக்கிறார்? “அவனவனுடைய திறமைக்கு ஏற்றபடி, ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவனுக்கு இரண்டு தாலந்தும், மற்றொருவனுக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டுத் தூர தேசத்துக்குப் போனார்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:15) தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட தாலந்தை வைத்து அந்த அடிமைகள் என்ன செய்வார்கள்? அவர்கள் சுறுசுறுப்பாக உழைத்து, எஜமானுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பார்களா?
“ஐந்து தாலந்தை வாங்கியவன் உடனே போய், அவற்றை வைத்து வியாபாரம் செய்து, இன்னும் ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அதேபோல், இரண்டு தாலந்தை வாங்கியவனும் இன்னும் இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரேவொரு தாலந்தை வாங்கியவனோ புறப்பட்டுப் போய், தன் எஜமான் கொடுத்த பணத்தை குழிதோண்டிப் புதைத்து வைத்தான்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:16-18) எஜமான் திரும்பி வரும்போது என்ன நடக்கும்?
“ரொம்பக் காலத்துக்குப் பிறகு, அந்த அடிமைகளுடைய எஜமான் திரும்பி வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 25:19) முதல் இரண்டு அடிமைகளும் தங்களுடைய “திறமைக்கு ஏற்றபடி” தங்களால் முடிந்ததையெல்லாம் செய்தார்கள். அவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள்; கடினமாக உழைத்தார்கள்; தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை வைத்து இன்னும் அதிகமாகச் சம்பாதித்தார்கள். ஐந்து தாலந்தை வாங்கியவன், இன்னும் ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். இரண்டு தாலந்தை வாங்கியவனும், இன்னும் இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். (அந்தக் காலத்தில், ஒருவர் கிட்டத்தட்ட 20 வருஷங்கள் வேலை செய்தால்தான் ஒரு தாலந்துக்குச் சமமான பணத்தைச் சம்பாதிக்க முடியும்.) எஜமான் அவர்கள் இரண்டு பேரையும் ஒரே மாதிரி பாராட்டுகிறார். “சபாஷ்! உண்மையுள்ள நல்ல அடிமையே, நீ கொஞ்சக் காரியங்களில் உண்மையுள்ளவனாக இருந்தாய்; அதனால், நிறைய காரியங்களைக் கவனித்துக்கொள்ள உன்னை நியமிப்பேன். உன் எஜமானோடு சேர்ந்து நீயும் சந்தோஷப்படு” என்று அவர்களிடம் சொல்கிறார்.—மத்தேயு 25:21.
ஆனால், ஒரு தாலந்தை வாங்கியவனின் கதை வேறு மாதிரியாக இருக்கிறது. அவன் தன் எஜமானிடம் வந்து, “எஜமானே, நீங்கள் கறாரானவர், மற்றவர்கள் விதைத்ததை அறுவடை செய்கிறவர், மற்றவர்கள் புடைத்ததைச் சேகரிக்கிறவர் என்றெல்லாம் எனக்குத் தெரியும். அதனால் நான் உங்களுக்குப் பயந்து, நீங்கள் கொடுத்த தாலந்தை மண்ணுக்குள் புதைத்து வைத்தேன். இதோ, உங்கள் தாலந்து” என்று சொல்கிறான். (மத்தேயு 25:24, 25) அவன் அந்தப் பணத்தை வட்டிக் கடைக்காரர்களிடம் கொடுத்து வைத்திருந்தால், அவனுடைய எஜமானுக்குக் கொஞ்சமாவது லாபம் கிடைத்திருக்கும். ஆனால், அதைக்கூட அவன் செய்யவில்லை. அவன் தன் எஜமானுக்கு நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தியிருந்தான்.
அதனால்தான், எஜமான் அவனை “பொல்லாத அடிமையே, சோம்பேறியே” என்று சொல்கிறார். பிறகு அவனிடம் இருந்த தாலந்தை வாங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்யத் தயாராக இருக்கிற அடிமையிடம் கொடுக்கிறார். அதன் பிறகு, “இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றிருப்பான்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்று சொல்கிறார்.—மத்தேயு 25:26, 29.
இந்த உவமையைப் பற்றியும் இயேசுவின் சீஷர்கள் ரொம்ப ஆழமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. தங்களிடம் இயேசு ஒப்படைக்கிற வேலை, அதாவது சீஷராக்கும் வேலை, மிகவும் மதிப்புள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அந்த வேலையை அவர்கள் சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். எல்லாரும் ஒரேவிதமாக அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. அவர் இந்த உவமையில் சொன்னதுபோல, ஒவ்வொருவரும் தங்களுடைய “திறமைக்கு ஏற்றபடி,” தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஆனால், எஜமானுடைய உடைமைகளை இன்னும் அதிகமாக்குவதற்குத் தங்களால் முடிந்ததைச் செய்யாமல் ‘சோம்பேறியாக’ இருப்பவர்களைப் பார்த்து இயேசு கண்டிப்பாகச் சந்தோஷப்பட மாட்டார்.
“இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும்” என்று இயேசு சொன்னதைக் கேட்டு அப்போஸ்தலர்கள் கண்டிப்பாகச் சந்தோஷப்பட்டிருப்பார்கள்!
-
-
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 114
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்
செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமை
ஒலிவ மலையில், இயேசு இப்போதுதான் பத்துக் கன்னிப்பெண்களைப் பற்றிய உவமையையும் தாலந்து பற்றிய உவமையையும் சொல்லி முடித்திருந்தார். தன்னுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் என்ன அடையாளம் என்று சீஷர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு எப்படிப் பதில் சொல்லி முடிக்கிறார்? செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையுடன் அதை முடிக்கிறார்.
இந்த உவமையில் சொல்லப்படுகிற விஷயங்கள் எப்போது நடக்கும் என்பதை இயேசு முதலில் விளக்குகிறார். “மனிதகுமாரன் தன்னுடைய மகிமையில் எல்லா தேவதூதர்களோடும் வரும்போது, தன் மகிமையான சிம்மாசனத்தில் உட்காருவார்” என்று அவர் சொல்கிறார். (மத்தேயு 25:31) இந்த உவமையில் வரும் முக்கிய நபர் இயேசுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் தன்னை அடிக்கடி “மனிதகுமாரன்” என்று சொல்லியிருக்கிறார்.—மத்தேயு 8:20; 9:6; 20:18, 28.
இயேசு “தன்னுடைய மகிமையில்” தேவதூதர்களோடு வந்து “தன் மகிமையான சிம்மாசனத்தில்” உட்காரும்போது இந்த உவமை நிறைவேறும். “மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்து மேகங்கள்மேல்” தன்னுடைய தூதர்களோடு வருவார் என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்தார். இது எப்போது நடக்கும்? “உபத்திரவத்துக்குப் பின்பு, உடனடியாக” நடக்கும். (மத்தேயு 24:29-31; மாற்கு 13:26, 27; லூக்கா 21:27) இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இயேசு எதிர்காலத்தில் மகிமையோடு வரும்போது இந்த உவமை நிறைவேறும் என்று தெரிகிறது. அப்போது அவர் என்ன செய்வார்?
“மனிதகுமாரன் . . . வரும்போது, . . . எல்லா தேசத்தாரும் அவர் முன்னால் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் ஒரு மேய்ப்பன் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர்களை அவர் பிரிப்பார். செம்மறியாடுகளைத் தன் வலது பக்கத்தில் நிறுத்துவார், வெள்ளாடுகளையோ தன் இடது பக்கத்தில் நிறுத்துவார்” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 25:31-33.
மனிதகுமாரனின் தயவைப் பெற்று, அவருடைய வலது பக்கத்தில் நிறுத்தப்படுகிற செம்மறியாடுகளுக்கு என்ன நடக்கும்? “பின்பு, ராஜா தன் வலது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’ என்று சொல்வார்.” (மத்தேயு 25:34) செம்மறியாடுகளுக்கு ஏன் ராஜாவின் தயவு கிடைக்கிறது?
ராஜா அவர்களைப் பார்த்து, “நான் பசியாக இருந்தேன், எனக்குச் சாப்பிடக் கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், குடிக்கக் கொடுத்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரித்தீர்கள்; உடையில்லாமல் இருந்தேன், எனக்கு உடை கொடுத்தீர்கள். நோயாளியாக இருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள். சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்” என்று சொல்கிறார். ‘நாங்கள் எப்போது அந்த உதவிகளைச் செய்தோம்?’ என்று செம்மறியாடுகளான அந்த ‘நீதிமான்கள்’ கேட்கிறார்கள். அதற்கு ராஜா, “மிகச் சிறியவர்களான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்” என்று சொல்கிறார். (மத்தேயு 25:35, 36, 40, 46) அவர்கள் இந்த உதவிகளைப் பரலோகத்தில் செய்ய வாய்ப்பில்லை. ஏனென்றால் அங்கே நோயாளிகளும் இல்லை, பசியால் வாடுகிறவர்களும் இல்லை. அதனால் இந்த உதவிகள் எல்லாம் பூமியில் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு செய்யப்பட்ட உதவிகளாகத்தான் இருக்க வேண்டும்.
இடது பக்கத்தில் நிறுத்தப்படுகிற வெள்ளாடுகளுக்கு என்ன நடக்கும்? “பின்பு, [ராஜா] தன்னுடைய இடது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு விலகி, பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் தயார்படுத்தப்பட்டுள்ள, என்றென்றும் அணையாத நெருப்புக்குள் போய் விழுங்கள். ஏனென்றால் நான் பசியாக இருந்தேன், நீங்கள் எனக்குச் சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், குடிக்க எதுவும் தரவில்லை. அன்னியனாக இருந்தேன், என்னை வரவேற்று உபசரிக்கவில்லை; உடையில்லாமல் இருந்தேன், உடை கொடுக்கவில்லை; நோயாளியாகவும் சிறைக்கைதியாகவும் இருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்று சொல்வார்.” (மத்தேயு 25:41-43) இது நியாயமான தீர்ப்புதான்! ஏனென்றால், பூமியில் இருக்கிற கிறிஸ்துவின் சகோதரர்களிடம் இந்த வெள்ளாடுகள் அன்பாக நடந்துகொள்ளவில்லை.
எதிர்காலத்தில் வரப்போகிற இந்த நியாயத்தீர்ப்பு நிரந்தரமான நன்மைகளையோ பாதிப்புகளையோ கொண்டுவரும் என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால் இயேசு அவர்களிடம், “அதற்கு [ராஜா], ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மிகச் சிறியவர்களான என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்யவில்லையோ அதை எனக்கே செய்யவில்லை’ என்று சொல்வார். இவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள், ஆனால் நீதிமான்கள் நிரந்தரமான வாழ்வைப் பெறுவார்கள்” என்கிறார்.—மத்தேயு 25:45, 46.
அப்போஸ்தலர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு பதில் சொல்லிவிட்டார். அவர்கள் இப்போது நிறைய விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தங்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் அலசி ஆராய இயேசுவின் பதில் அவர்களுக்கு உதவி செய்கிறது.
-