உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கடைசி பஸ்காவின்போது மனத்தாழ்மையைக் கற்பிக்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • மனத்தாழ்மையைக் கற்பிப்பதற்காக அப்போஸ்தலர்களின் பாதங்களை இயேசு கழுவுகிறார்

      அதிகாரம் 116

      கடைசி பஸ்காவின்போது மனத்தாழ்மையைக் கற்பிக்கிறார்

      மத்தேயு 26:20 மாற்கு 14:17 லூக்கா 22:14-18 யோவான் 13:1-17

      • அப்போஸ்தலர்களோடு கடைசி பஸ்காவை இயேசு சாப்பிடுகிறார்

      • அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம் ஒரு பாடத்தைக் கற்பிக்கிறார்

      இயேசு சொன்னபடியே, பஸ்காவுக்கு ஏற்பாடு செய்ய பேதுருவும் யோவானும் ஏற்கெனவே எருசலேமுக்கு வந்துவிட்டார்கள். பிற்பாடு, இயேசுவும் மற்ற அப்போஸ்தலர்களும் எருசலேமுக்குப் புறப்படுகிறார்கள். இப்போது பிற்பகல் நேரம். மேற்கே சூரியன் மெதுமெதுவாக மறைய ஆரம்பிக்கிறது. இயேசுவும் அப்போஸ்தலர்களும் ஒலிவ மலையிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மலையிலிருந்து, எருசலேமை பகல் நேரத்தில் அவர் பார்ப்பது இதுதான் கடைசி. இனி, உயிர்த்தெழுந்த பிறகுதான் அதை மறுபடியும் பார்ப்பார்.

      சீக்கிரத்தில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் நகரத்துக்கு வந்து, பஸ்கா உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற வீட்டுக்குப் போகிறார்கள். படியேறி, மாடியில் இருக்கிற ஒரு பெரிய அறைக்குள் நுழைகிறார்கள். அவர்கள் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்குத் தேவையான எல்லாமே தயாராக இருக்கிறது. இந்தச் சமயத்துக்காகத்தான் இயேசு ஆசையாகக் காத்திருந்தார். அதனால்தான், “நான் பாடுகள் படுவதற்கு முன்பு உங்களோடு சேர்ந்து இந்த பஸ்கா உணவைச் சாப்பிட மிகவும் ஆசையாக இருந்தேன்” என்று சொல்கிறார்.—லூக்கா 22:15.

      பஸ்கா கொண்டாடுகிறவர்கள் திராட்சமது கிண்ணங்களை ஒருவர் கையிலிருந்து வாங்கி மற்றவர் கையில் அடுத்தடுத்து கொடுக்கும் பழக்கம் பல வருஷங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இயேசு ஒரு கிண்ணத்தைத் தன்னுடைய கையில் வாங்கியதும், கடவுளுக்கு நன்றி சொல்லி, “ஒவ்வொருவராக இதை வாங்கிக் குடியுங்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கம் வரும்வரை இனி திராட்சமதுவைக் குடிக்க மாட்டேன்” என்று சொல்கிறார். (லூக்கா 22:17, 18) சீக்கிரத்தில் அவர் இறந்துவிடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

      பஸ்கா உணவைச் சாப்பிடுகிற சமயத்தில், யாருமே எதிர்பார்க்காத ஒன்று நடக்கிறது. இயேசு எழுந்து, தன் மேலங்கியைக் கழற்றிவிட்டு, ஒரு துண்டை எடுக்கிறார். பிறகு, பக்கத்தில் இருக்கிற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுகிறார். பொதுவாக, விருந்து கொடுக்கிறவர் தன்னுடைய விருந்தாளிகளின் கால்களைக் கழுவுவதற்கு ஏற்பாடு செய்வார். பெரும்பாலும், ஒரு வேலைக்காரரை வைத்து இதைச் செய்வார். (லூக்கா 7:44) இந்தச் சமயத்தில், விருந்து கொடுக்கிறவர் யாரும் அங்கே இல்லை. அதனால், இயேசுவே இதைச் செய்கிறார். அப்போஸ்தலர்களில் ஒருவர் இதைச் செய்திருக்கலாம். ஆனால், யாருமே செய்யவில்லை. ஒருவேளை, அவர்களுக்குள் இன்னும் போட்டி பொறாமை இருக்கிறதா? காரணம் எதுவாக இருந்தாலும், இயேசு தங்களுடைய பாதங்களைக் கழுவும்போது சீஷர்களுக்குத் தர்மசங்கடமாக இருப்பது மட்டும் உண்மை.

      பேதுருவிடம் இயேசு வந்தபோது, “நீங்கள் என் பாதங்களைக் கழுவவே கூடாது” என்று அவர் சொல்கிறார். இயேசுவோ, “நான் உன் பாதங்களைக் கழுவவில்லை என்றால் என்னோடு உனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்கிறார். அப்போது பேதுரு, “அப்படியென்றால் எஜமானே, என் பாதங்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவுங்கள்” என்கிறார். அதற்கு இயேசு, “குளித்தவன் தன் பாதங்களை மட்டும் கழுவினால் போதும், மற்றபடி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான். நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆனால் எல்லாருமே அல்ல” என்கிறார். அதைக் கேட்டு பேதுருவுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.—யோவான் 13:8-10.

      யூதாஸ் இஸ்காரியோத்து உட்பட, 12 அப்போஸ்தலர்களின் பாதங்களையும் இயேசு கழுவுகிறார். தன் மேலங்கியைப் போட்டுக்கொண்டு மேஜைமேல் மறுபடியும் சாய்ந்து உட்காருகிறார். பிறகு அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று புரிந்துகொண்டீர்களா? என்னை ‘போதகர்’ என்றும், ‘எஜமான்’ என்றும் நீங்கள் கூப்பிடுவது சரிதான். ஏனென்றால், நான் போதகர்தான், எஜமான்தான். எஜமானாகவும் போதகராகவும் இருக்கிற நானே உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும். நான் உங்களுக்குச் செய்தது போலவே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன். உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் கிடையாது, அனுப்பப்பட்டவரும் தன்னை அனுப்பியவரைவிட உயர்ந்தவர் கிடையாது. இதையெல்லாம் இப்போது தெரிந்துகொண்டீர்கள், ஆனால் இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்” என்கிறார்.—யோவான் 13:12-17.

      மனத்தாழ்மையாகச் சேவை செய்வதைப் பற்றி இயேசு எவ்வளவு அழகாகக் கற்பிக்கிறார்! அவரைப் பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு முதலிடம் வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. தங்களைப் பெரிய ஆட்களாக நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். மற்றவர்களுடைய பாதங்களை அவர்கள் சடங்குக்காகக் கழுவ வேண்டியதில்லை. மனத்தாழ்மையோடும் பாரபட்சம் இல்லாமலும் சேவை செய்ய தயாராக இருப்பதன் மூலம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும்.

      • பஸ்கா உணவைச் சாப்பிடும்போது, அப்போஸ்தலர்களிடம் இயேசு சொன்ன எந்த வார்த்தைகள் அவர் சீக்கிரத்தில் இறந்துவிடுவார் என்பதைக் காட்டுகின்றன?

      • பொதுவாக, ஒரு வேலைக்காரர் செய்கிற எந்த வேலையை இயேசு இப்போது செய்கிறார்?

      • அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம், இயேசு என்ன பாடத்தைக் கற்பிக்கிறார்?

  • எஜமானின் இரவு விருந்து
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • உண்மையுள்ள பதினொரு அப்போஸ்தலர்களோடு எஜமானின் இரவு விருந்தை இயேசு ஆரம்பித்துவைக்கிறார்

      அதிகாரம் 117

      எஜமானின் இரவு விருந்து

      மத்தேயு 26:21-29 மாற்கு 14:18-25 லூக்கா 22:19-23 யோவான் 13:18-30

      • யூதாஸ் ஒரு துரோகி என்று அடையாளம் காட்டுகிறார்

      • நினைவுநாள் விருந்தை இயேசு ஆரம்பித்துவைக்கிறார்

      மாலையில்தான், தன்னுடைய அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவி மனத்தாழ்மையை இயேசு கற்றுக்கொடுத்திருந்தார். பஸ்கா உணவுக்குப் பிறகு, “நான் நம்பிக்கை வைத்திருந்த நெருங்கிய நண்பனே எனக்குத் துரோகம் செய்துவிட்டான். என்னோடு சேர்ந்து சாப்பிட்டவனே எனக்கு எதிரியாகிவிட்டான்” என்று தாவீது தீர்க்கதரிசனமாகச் சொன்ன வார்த்தைகளை இயேசு சொல்கிறார். அதற்குப் பிறகு, “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்கிறார்.—சங்கீதம் 41:9; யோவான் 13:18, 21.

      அப்போஸ்தலர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். பிறகு ஒவ்வொருவராக, “எஜமானே, அது நானா, நானா?” என்று கேட்கிறார்கள். யூதாஸ் இஸ்காரியோத்தும்கூட கேட்கிறான். இயேசுவுக்குப் பக்கத்தில் யோவான் இருக்கிறார். அதனால், அது யார் என்று இயேசுவிடம் கேட்கும்படி யோவானிடம் பேதுரு சொல்கிறார். யோவான் இயேசுவின்மேல் சாய்ந்துகொண்டு, “எஜமானே, அது யார்?” என்று கேட்கிறார்.—மத்தேயு 26:22; யோவான் 13:25.

      அதற்கு இயேசு, “நான் யாருக்கு ரொட்டித் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” என்று சொல்கிறார். பிறகு, ரொட்டித் துண்டை மேஜையில் வைக்கப்பட்டிருக்கிற உணவில் தோய்த்து யூதாசிடம் கொடுக்கிறார். அப்போது, “மனிதகுமாரன் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறபடியே உங்களைவிட்டுப் போகிறார் என்பது உண்மைதான்; ஆனால், மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடுதான் வரும்! அவன் பிறக்காமல் இருந்திருந்தாலே அவனுக்கு நல்லதாக இருந்திருக்கும்” என்று சொல்கிறார். (யோவான் 13:26; மத்தேயு 26:24) பிறகு, சாத்தான் யூதாசுக்குள் நுழைகிறான். ஏற்கெனவே கெட்டுப்போயிருந்த யூதாஸ், இப்போது சாத்தானின் விருப்பப்படி நடக்க தன்னை முழுமையாகக் கொடுத்துவிடுகிறான். இதன்மூலம் ‘அழிவின் மகனாக’ ஆகிறான்.—யோவான் 6:64, 70; 12:4; 17:12.

      இயேசு அவனிடம், “நீ செய்யப்போவதைச் சீக்கிரமாகச் செய்” என்று சொல்கிறார். பணப்பெட்டி யூதாசிடம் இருந்ததால், “பண்டிகைக்குத் தேவையானதை வாங்கி வரும்படியோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கும்படியோ” இயேசு சொல்லியிருப்பார் என்று மற்ற அப்போஸ்தலர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். (யோவான் 13:27-30) ஆனால், இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ் போகிறான்.

      பஸ்கா உணவைச் சாப்பிட்ட அதே மாலை நேரத்தில், புது விதமான இன்னொரு விருந்தை இயேசு அறிமுகப்படுத்துகிறார். ஒரு ரொட்டியை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அதைப் பிட்டு, தன் அப்போஸ்தலர்களிடம் சாப்பிடக் கொடுக்கிறார். “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது. என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று சொல்கிறார். (லூக்கா 22:19) அப்போஸ்தலர்கள் அதை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

      இப்போது இயேசு திராட்சமது கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்களிடம் கொடுக்கிறார். ஒவ்வொருவரும் அந்தக் கிண்ணத்திலிருந்து குடிக்கிறார்கள். “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது” என்று சொல்கிறார்.—லூக்கா 22:20.

      இப்படி, தன்னுடைய மரண நினைவுநாளை அனுசரிப்பதற்கு இயேசு ஏற்பாடு செய்கிறார். அவரைப் பின்பற்றுகிறவர்கள் ஒவ்வொரு வருஷமும் நிசான் 14 அன்று அதை அனுசரிக்க வேண்டும். உண்மையுள்ள மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்வதற்கு இயேசுவும் அவருடைய தகப்பனும் செய்த ஏற்பாட்டை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்தும். யூதர்கள் கொண்டாடிய பஸ்காவைவிட இது மேலானது. ஏனென்றால், விசுவாசமுள்ள மனிதர்களுக்குக் கிடைக்கப்போகிற உண்மையான விடுதலையை இது நினைவுபடுத்துகிறது.

      தன்னுடைய இரத்தம் “பாவ மன்னிப்புக்கென்று பலருக்காகச் சிந்தப்படப்போகிறது” என்று இயேசு சொல்கிறார். அந்தப் பாவ மன்னிப்பைப் பெறப்போகிற பலரில் அப்போஸ்தலர்களும் உண்மையுள்ள மற்ற சீஷர்களும் அடங்குவர். இயேசுவுடன் சேர்ந்து அவருடைய தகப்பனின் அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கும்.—மத்தேயு 26:28, 29.

      • நண்பனைப் பற்றிய எந்த பைபிள் தீர்க்கதரிசனத்தை இயேசு குறிப்பிடுகிறார், தன்னுடைய விஷயத்தில் அது எப்படி நிறைவேறும் என்று சொல்கிறார்?

      • யூதாசிடம் என்ன செய்யும்படி இயேசு சொல்கிறார், மற்ற சீஷர்கள் அதை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள்?

      • எந்தப் புதிய நிகழ்ச்சியை இயேசு ஆரம்பித்துவைக்கிறார், அந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன?

  • யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • தங்களில் யார் உயர்ந்தவர் என்று இயேசுவின் அப்போஸ்தலர்கள் வாக்குவாதம் செய்கிறார்கள்

      அதிகாரம் 118

      யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம்

      மத்தேயு 26:31-35 மாற்கு 14:27-31 லூக்கா 22:24-38 யோவான் 13:31-38

      • பதவி பற்றி இயேசு ஆலோசனை கொடுக்கிறார்

      • இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவார்

      • அன்புதான் இயேசுவின் சீஷர்களுக்கு அடையாளம்

      இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களோடு இருந்த கடைசி இரவில், மனத்தாழ்மையாகச் சேவை செய்வதைப் பற்றிய அருமையான பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். இது ஏன் தேவையாக இருந்தது? ஏனென்றால், அவர்களுக்கு ஒரு பலவீனம் இருக்கிறது. அவர்களுக்குக் கடவுள்மேல் அதிகமான அன்பு இருப்பது உண்மைதான். ஆனாலும், தங்களில் யார் உயர்ந்தவர் என்ற எண்ணம் இன்னமும் அவர்கள் மனதுக்குள் இருக்கிறது. (மாற்கு 9:33, 34; 10:35-37) அவர்களுடைய பலவீனம் இப்போது மறுபடியும் தலைகாட்டுகிறது.

      “தங்களில் யார் மிக உயர்ந்தவர் என்பதைப் பற்றி அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம்” ஏற்படுகிறது. (லூக்கா 22:24) இதைப் பார்த்து இயேசுவுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. அவர் இப்போது என்ன செய்வார்?

      அவர்களுடைய எண்ணம் சரியில்லை என்பதற்காகவும், அவர்கள் நடந்துகொண்டது சரியில்லை என்பதற்காகவும் இயேசு அவர்களைத் திட்டவில்லை. அதற்குப் பதிலாக, பொறுமையாகப் பேசி அவர்களுக்குப் புரிய வைக்கிறார். இயேசு அவர்களிடம், “மற்ற தேசத்து ராஜாக்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள், மக்கள்மேல் அதிகாரம் உள்ளவர்கள் ‘மக்கள் தொண்டர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்களோ அப்படி இருக்கக் கூடாது. . . . யார் உயர்ந்தவர்? சாப்பிட உட்கார்ந்திருப்பவரா அல்லது பணிவிடை செய்பவரா?” என்று கேட்கிறார். பிறகு, தான் எப்போதும் அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்ததை ஞாபகப்படுத்துகிறார். “நான் உங்கள் மத்தியில் பணிவிடை செய்பவனாக இருக்கிறேன்” என்று சொல்கிறார்.—லூக்கா 22:25-27.

      அப்போஸ்தலர்களிடம் சில குறைகள் இருந்தாலும், கஷ்டமான சூழ்நிலைகளில் அவர்கள் இயேசுவுடன் நிலைத்திருந்தார்கள். அதனால், “ஒரு அரசாங்கத்துக்காக என் தகப்பன் என்னோடு ஒப்பந்தம் செய்திருப்பதுபோல் நானும் உங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன்” என்று சொல்கிறார். (லூக்கா 22:29) அவர்கள் இயேசுவை உண்மையோடு பின்பற்றுகிறார்கள். அவர்களோடு ஒரு ஒப்பந்தத்தைச் செய்வதன்மூலம், அவர்கள் பரலோக அரசாங்கத்தில் தன்னுடன் ஆட்சி செய்வார்கள் என்ற உறுதியை இயேசு அவர்களுக்குக் கொடுக்கிறார்.

      அப்போஸ்தலர்களுக்கு இந்த அருமையான நம்பிக்கை இருந்தாலும், இப்போது அவர்கள் பாவத்தன்மையுள்ள மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். “கோதுமையைப் புடைத்தெடுப்பதுபோல் உங்கள் எல்லாரையும் புடைத்தெடுக்க வேண்டும் என்று சாத்தான் கேட்டிருக்கிறான்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 22:31) அதோடு, “இன்று ராத்திரி எனக்கு நடக்கப்போவதைப் பார்த்து நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள்; ஏனென்றால், ‘நான் மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையில் இருக்கிற ஆடுகள் சிதறி ஓடும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” என அவர்களை எச்சரிக்கிறார்.—மத்தேயு 26:31; சகரியா 13:7.

      அப்போது பேதுரு, “உங்களுக்கு நடக்கப்போவதைப் பார்த்து மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போகவே மாட்டேன்!” என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார். (மத்தேயு 26:33) அன்று ராத்திரி, சேவல் இரண்டு தடவை கூவுவதற்கு முன்பு, பேதுரு தன்னைத் தெரியாதென்று சொல்லிவிடுவார் என்று பேதுருவிடம் இயேசு சொல்கிறார். ஆனாலும், “நீ விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க வேண்டுமென்று உனக்காக மன்றாடியிருக்கிறேன். நீ மனம் திருந்தியதும் உன் சகோதரர்களைப் பலப்படுத்து” என்று சொல்கிறார். (லூக்கா 22:32) அப்போதும் பேதுரு, “நான் உங்களோடு சாக வேண்டியிருந்தாலும் உங்களைத் தெரியாது என்று சொல்லவே மாட்டேன்” என்று அடித்துச் சொல்கிறார். (மத்தேயு 26:35) மற்ற எல்லா சீஷர்களும் அதையே சொல்கிறார்கள்.

      அப்போது இயேசு, “இன்னும் கொஞ்ச நேரம்தான் நான் உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனாலும், ‘நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது’ என்று நான் யூதர்களிடம் சொன்னதையே இப்போது உங்களிடமும் சொல்கிறேன்” என்கிறார். பிறகு, “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 13:33-35.

      அவர்களோடு இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கப்போவதாக இயேசு சொன்னதைக் கேட்டதும், பேதுரு அவரிடம், “எஜமானே, நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு இயேசு, “நான் போகிற இடத்துக்கு என் பின்னால் வர இப்போது உன்னால் முடியாது, ஆனால் பிற்பாடு வருவாய்” என்று சொல்கிறார். பேதுருவுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. அதனால், “எஜமானே, இப்போது உங்கள் பின்னால் வர என்னால் ஏன் முடியாது? உங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன்” என்று சொல்கிறார்.—யோவான் 13:36, 37.

      கலிலேயாவில் பிரசங்கிப்பதற்காக, உணவுப் பையோ பணப் பையோ இல்லாமல் அவர்களை அனுப்பியதை இயேசு இப்போது ஞாபகப்படுத்துகிறார். (மத்தேயு 10:5, 9, 10) பிறகு அவர்களிடம், “உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?” என்று கேட்கிறார். அவர்கள், “இல்லை!” என்று சொல்கிறார்கள். ஆனால், இனிவரும் நாட்களில் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இயேசு அவர்களிடம், “இப்போதோ, பணப் பையை வைத்திருப்பவன் அதைக் கொண்டுபோகட்டும், அதுபோல உணவுப் பையையும் கொண்டுபோகட்டும். வாள் இல்லாதவன் தன்னுடைய மேலங்கியை விற்று ஒரு வாளை வாங்கிக்கொள்ளட்டும். ‘அக்கிரமக்காரர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார்’ என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனம் என்னில் நிறைவேற வேண்டும் என்பதற்காக இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்னைப் பற்றி எழுதப்பட்டதெல்லாம் நிறைவேறி வருகிறது” என்று சொல்கிறார்.—லூக்கா 22:35-37.

      கெட்டவர்கள், அதாவது அக்கிரமக்காரர்களுக்குப் பக்கத்தில், தான் ஒரு மரக் கம்பத்தில் அறையப்படப்போவதைப் பற்றி இயேசு இங்கே சொல்கிறார். அதற்குப் பிறகு, அவருடைய சீஷர்கள் கடுமையான துன்புறுத்தலைச் சந்திப்பார்கள். தாங்கள் தயாராக இருப்பதாக அப்போஸ்தலர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்கள், “எஜமானே, இதோ! இங்கே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்று சொல்கிறார்கள். அதற்கு அவர், “இது போதும்” என்று சொல்கிறார். (லூக்கா 22:38) அவர்களிடம் வாள்கள் இருப்பதால், இயேசு அதை வைத்து சீக்கிரத்தில் இன்னொரு முக்கியமான பாடத்தைக் கற்பிப்பார்.

      • அப்போஸ்தலர்கள் ஏன் வாக்குவாதம் செய்கிறார்கள், அதைப் பார்க்கும்போது இயேசுவுக்கு எப்படி இருக்கிறது?

      • இயேசு தன்னுடைய உண்மையுள்ள சீஷர்களோடு செய்கிற ஒப்பந்தத்தால் என்ன நன்மை கிடைக்கும்?

      • பேதுரு தன்னம்பிக்கையோடு பதில் சொன்னதைக் கேட்டு, இயேசு என்ன சொல்கிறார்?

  • இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • மாடி அறையில் தன்னுடைய 11 உண்மையுள்ள அப்போஸ்தலர்களுடன் இயேசு இருக்கிறார்

      அதிகாரம் 119

      இயேசு—வழி, சத்தியம், வாழ்வு

      யோவான் 14:1-31

      • ஒரு இடத்தைத் தயார்படுத்துவதற்காக இயேசு போகிறார்

      • சகாயரை அனுப்புவதாக வாக்குக் கொடுக்கிறார்

      • இயேசுவைவிட தகப்பன் பெரியவர்

      நினைவுநாள் விருந்துக்குப் பிறகு இயேசு இன்னமும் தன் அப்போஸ்தலர்களோடு அந்த மாடி அறையில்தான் இருக்கிறார். அவர்களிடம், “நீங்கள் மனம் கலங்க வேண்டாம். கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள், என்மேலும் விசுவாசம் வையுங்கள்” என்று சொல்லித் தைரியப்படுத்துகிறார்.—யோவான் 13:36; 14:1.

      தான் அவர்களைவிட்டுப் போகப் போவதை நினைத்து அவர்கள் ஏன் கவலைப்படத் தேவையில்லை என்பதை இயேசு விளக்குகிறார். “என்னுடைய தகப்பனின் வீட்டில் தங்குவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. . . . நான் போய் உங்களுக்காக ஒரு இடத்தைத் தயார்படுத்திய பின்பு, மறுபடியும் வந்து என் வீட்டுக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன். அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்” என்கிறார். பரலோகத்துக்குப் போவதைப் பற்றிப் பேசுகிறார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அதனால் தோமா, “எஜமானே, நீங்கள் எங்கே போகிறீர்கள் என்றுகூட எங்களுக்குத் தெரியாது, அப்படியிருக்கும்போது அந்த வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கிறார்.—யோவான் 14:2-5.

      அதற்கு இயேசு, “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று சொல்கிறார். அவரையும் அவருடைய போதனைகளையும் ஏற்றுக்கொண்டு, அவர் வாழ்ந்தது போல் வாழ்ந்தால் மட்டும்தான் தகப்பனின் பரலோக வீட்டுக்குப் போக முடியும். அதனால்தான், “என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 14:6.

      அவர் சொல்வதை பிலிப்பு ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் இயேசுவிடம், “எஜமானே, தகப்பனை எங்களுக்குக் காட்டுங்கள், அது போதும்” என்கிறார். மோசே, எலியா, ஏசாயா ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த தரிசனங்களில் கடவுளை ஏதோவொரு விதத்தில் பார்த்ததுபோல, தானும் பார்க்க வேண்டும் என்று பிலிப்பு ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட தரிசனங்களைவிட சிறந்த ஒன்றை அப்போஸ்தலர்கள் பார்த்திருக்கிறார்கள். அதை பிலிப்புவுக்குச் சுட்டிக்காட்ட இயேசு விரும்புகிறார். அதனால், “பிலிப்பு, இத்தனை காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னைத் தெரிந்துகொள்ளவில்லையா? என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று சொல்கிறார். தகப்பனின் குணங்களை இயேசு அச்சு அசலாக வெளிக்காட்டுகிறார். அதனால், இயேசுவோடு இருந்து, அவர் செய்வதைப் பார்ப்பது தகப்பனைப் பார்ப்பது போல இருக்கிறது. ஆனாலும், மகனைவிட தகப்பன் உயர்ந்தவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. “நான் உங்களுக்குச் சொல்கிற விஷயங்களைச் சொந்தமாகச் சொல்லவில்லை” என்று இயேசுவே சொல்கிறார். (யோவான் 14:8-10) அதற்கான எல்லா புகழையும் தன்னுடைய தகப்பனுக்கு இயேசு கொடுப்பதை அப்போஸ்தலர்கள் கவனிக்கிறார்கள்.

      இயேசு அற்புதங்கள் செய்வதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அவர் அறிவிப்பதைக் கேட்டிருக்கிறார்கள். இப்போது இயேசு அவர்களிடம், “என்மேல் விசுவாசம் வைக்கிறவன் நான் செய்கிற செயல்களைச் செய்வான், அவற்றைவிட பெரிய செயல்களையும் செய்வான்” என்கிறார். (யோவான் 14:12) தான் செய்ததைவிட பெரிய அற்புதங்களை அவர்கள் செய்வார்கள் என்று இயேசு சொல்லவில்லை. தன்னைவிட அவர்கள் ரொம்பக் காலத்துக்கு ஊழியம் செய்வார்கள், நிறைய இடங்களில் செய்வார்கள், நிறைய பேரிடம் பிரசங்கிப்பார்கள் என்ற அர்த்தத்தில்தான் அப்படிச் சொல்கிறார்.

      இயேசு போன பிறகு அவர்கள் நிர்க்கதியாக நிற்க மாட்டார்கள். ஏனென்றால், “என் பெயரில் நீங்கள் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்” என்று அவர் சொல்கிறார். அதோடு, “என் தகப்பனிடம் நான் வேண்டிக்கொள்வேன். அப்போது, என்றென்றும் உங்களோடு இருப்பதற்காக இன்னொரு சகாயரை அவர் உங்களுக்குத் தருவார். அதுதான் சத்தியத்தை வெளிப்படுத்துகிற கடவுளுடைய சக்தி” என்றும் சொல்கிறார். (யோவான் 14:14, 16, 17) இன்னொரு சகாயரான, கடவுளுடைய சக்தி அவர்களுக்குக் கிடைக்கும் என்று இயேசு உறுதியளிக்கிறார். பெந்தெகொஸ்தே நாளில் அது கிடைத்தது.

      “இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள். ஏனென்றால் நான் உயிரோடிருக்கிறேன், நீங்களும் உயிரோடிருப்பீர்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார். (யோவான் 14:19) உயிர்த்தெழுந்த பிறகு, மனித உடலில் இயேசு அவர்கள் முன்னால் தோன்றுவார். சில காலத்துக்குப் பிறகு, பரலோகத்தில் தன்னோடு இருப்பதற்காகச் சீஷர்களைப் பரலோகத்துக்குரிய உடலில் உயிர்த்தெழுப்புவார்.

      ஒரு எளிமையான உண்மையை இயேசு அடுத்ததாகச் சொல்கிறார். “என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவற்றின்படி நடப்பவன்தான் என்மேல் அன்பு காட்டுகிறான். என்மேல் அன்பு காட்டுகிறவனிடம் என் தகப்பனும் அன்பு காட்டுவார், நானும் அவன்மேல் அன்பு காட்டி அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்” என்கிறார். அப்போது ததேயு என்ற யூதாஸ் அவரிடம், “எஜமானே, நீங்கள் உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்துவதாகச் சொல்கிறீர்களே, ஏன்?” என்று கேட்கிறார். அதற்கு இயேசு, “ஒருவனுக்கு என்மேல் அன்பு இருந்தால், அவன் என் வார்த்தையின்படி நடப்பான், என் தகப்பனும் அவன்மேல் அன்பு காட்டுவார். . . . என்மேல் அன்பு காட்டாதவன் என் வார்த்தைகளின்படி நடக்க மாட்டான்” என்கிறார். (யோவான் 14:21-24) அவர்தான் வழி, சத்தியம், வாழ்வு என்பதை அவருடைய சீஷர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்த உலகம் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

      இயேசு சீக்கிரத்தில் அவர்களைவிட்டுப் போய்விடுவார். அவர் கற்றுக்கொடுத்த எல்லா விஷயங்களும் அவருடைய சீஷர்களுக்கு ஞாபகம் இருக்குமா? “என் தகப்பன் என்னுடைய பெயரில் அனுப்பப்போகிற அவருடைய சக்தியாகிய சகாயர் எல்லா காரியங்களையும் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லா விஷயங்களையும் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார்” என்று அவர் சொல்கிறார். கடவுளுடைய சக்திக்கு இருக்கிற வல்லமையை அப்போஸ்தலர்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால், இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன. அவர் கூடுதலாக, “உங்களுக்குச் சமாதானத்தைத் தந்துவிட்டுப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குத் தருகிறேன். . . . நீங்கள் மனம் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம்” என்கிறார். (யோவான் 14:26, 27) சீஷர்கள் மனம் கலங்க வேண்டிய அவசியமில்லை. இயேசுவின் தகப்பன் அவர்களை வழிநடத்தி, பாதுகாப்பார்.

      கடவுள் எப்படிப் பாதுகாப்பார் என்பதைச் சீக்கிரத்தில் அவர்கள் பார்ப்பார்கள். “இந்த உலகத்தை ஆளுகிறவன் வருகிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை” என்று இயேசு சொல்கிறார். (யோவான் 14:30) யூதாசுக்குள் நுழைந்து அவனைத் தன் பிடியில் கொண்டுவர பிசாசினால் முடிந்தது. ஆனால், இயேசுவிடம் எந்தவொரு பாவமோ பலவீனமோ இல்லாததால், கடவுளுக்கு எதிராக அவரைச் செயல்பட வைக்க அவனால் முடியாது. இயேசுவை மரணத்தின் பிடியில் நிரந்தரமாக வைத்திருக்கவும் அவனால் முடியாது. ஏன்? ‘நான் என் தகப்பனின் கட்டளைப்படியே செய்கிறேன்’ என்று இயேசு சொல்கிறார். தகப்பன் தன்னை உயிரோடு எழுப்புவார் என்பதில் இயேசுவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.—யோவான் 14:31.

      • இயேசு எங்கே போகிறார், அங்கே போவதற்கான வழியைப் பற்றி தோமாவிடம் என்ன சொல்கிறார்?

      • யாரைக் காட்டும்படி இயேசுவிடம் பிலிப்பு கேட்கிறார்?

      • இயேசுவின் சீஷர்கள் எப்படி அவர் செய்வதைவிட பெரிய செயல்களைச் செய்வார்கள்?

      • தன்னைவிட தகப்பன் பெரியவராக இருப்பதால், இயேசுவுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

  • இயேசுவின் நண்பராக, கனி கொடுப்பவராக இருக்க வேண்டும்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • மாடி அறையிலிருந்து இயேசு தன் சீஷர்களோடு பேசிக்கொண்டே புறப்படுகிறார்

      அதிகாரம் 120

      இயேசுவின் நண்பராக, கனி கொடுப்பவராக இருக்க வேண்டும்

      யோவான் 15:1-27

      • உண்மையான திராட்சைக் கொடியும் கிளைகளும்

      • இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பது எப்படி?

      இயேசு தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களிடம் மனம் திறந்து பேசி அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறார். நேரம் இப்போது நடுராத்திரியையும் தாண்டியிருக்கும். இப்போது அவர்களைச் செயல்படத் தூண்டுகிற ஒரு உவமையைச் சொல்கிறார்.

      “நான்தான் உண்மையான திராட்சைக் கொடி, என் தகப்பன்தான் திராட்சைத் தோட்டக்காரர்” என்று இயேசு ஆரம்பிக்கிறார். (யோவான் 15:1) பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இஸ்ரவேல் தேசம் யெகோவாவின் திராட்சைக் கொடி என்று அழைக்கப்பட்டது. (எரேமியா 2:21; ஓசியா 10:1, 2) அந்தத் தேசத்தை யெகோவா இப்போது ஒதுக்கித்தள்ளுகிறார். (மத்தேயு 23:37, 38) அதனால், ஒரு புதிய விஷயத்தை இயேசு இப்போது அறிமுகப்படுத்துகிறார். கி.பி. 29-ல், கடவுளுடைய சக்தியால் இயேசு அபிஷேகம் செய்யப்பட்டதிலிருந்து, அவரை ஒரு திராட்சைக் கொடியாக தகப்பன் வளர்த்துவருகிறார். இப்போது, அதில் இருக்கிற கிளைகளைப் பற்றி இயேசு சொல்கிறார்.

      “கனி தராத என்னுடைய கிளைகள் எல்லாவற்றையும் [என் தகப்பன்] வெட்டிப்போடுகிறார். கனி தருகிற கிளைகள் ஒவ்வொன்றையும், அது அதிகமாகக் கனி தரும்படி சுத்தம் செய்கிறார். . . . எந்தவொரு கிளையும் தானாகக் கனி தர முடியாது, திராட்சைக் கொடியோடு நிலைத்திருந்தால் மட்டும்தான் கனி தர முடியும். அதேபோல், நீங்களும் என்னோடு நிலைத்திருந்தால் மட்டும்தான் உங்களால் கனி தர முடியும். நான் திராட்சைக் கொடி, நீங்கள் கிளைகள்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 15:2-5.

      தான் போன பிறகு, கடவுளுடைய சக்தி என்ற சகாயரை அனுப்புவதாக தன்னுடைய உண்மையுள்ள சீஷர்களுக்கு இயேசு வாக்குக் கொடுத்திருந்தார். 51 நாட்களுக்குப் பிறகு, அப்போஸ்தலர்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கும்போது, அவர்கள் திராட்சைக் கொடியின் கிளைகளாக ஆவார்கள். அதற்குப் பிறகு, எல்லா ‘கிளைகளும்’ இயேசுவுடன் நிலைத்திருக்க வேண்டும். எதற்காக?

      “ஒருவன் என்னோடும் நான் அவனோடும் நிலைத்திருந்தால் அவன் அதிகமாகக் கனி தருவான். என்னோடு இல்லையென்றால் உங்களால் எதையுமே செய்ய முடியாது” என்று இயேசு விளக்குகிறார். அவரை உண்மையோடு பின்பற்றுகிற இந்த “கிளைகள்” அதிகமாகக் கனி கொடுப்பார்கள். அதாவது, அவருடைய குணங்களை வெளிக்காட்டுவார்கள்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிப்பார்கள்; நிறைய சீஷர்களை உருவாக்குவார்கள். ஒருவன் இயேசுவுடன் நிலைத்திருக்கவில்லை என்றால்... கனி கொடுக்கவில்லை என்றால்... என்ன ஆகும்? ‘ஒருவன் என்னோடு நிலைத்திருக்கவில்லை என்றால், அவன் வெட்டியெறியப்படுவான்’ என்று அவர் சொல்கிறார். ஆனால், “நீங்கள் என்னோடு நிலைத்திருந்தால், அதோடு என் வார்த்தைகள் உங்களுடைய இதயத்தில் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேளுங்கள், கேட்டபடியே உங்களுக்கு நடக்கும்” என்கிறார்.—யோவான் 15:5-7.

      தன்னுடைய கட்டளைகளின்படி நடப்பதைப் பற்றி இயேசு ஏற்கெனவே இரண்டு தடவை பேசியிருந்தார். இப்போது மறுபடியும் அதைப் பற்றிப் பேசுகிறார். (யோவான் 14:15, 21) “நான் என் தகப்பனுடைய கட்டளைகளின்படி நடந்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போலவே, நீங்களும் என் கட்டளைகளின்படி நடந்தால் என்னுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள்” என்கிறார். யெகோவாமீதும் அவருடைய மகன்மீதும் அன்பு இருந்தால்தான் நாம் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். அதோடு, முக்கியமான இன்னொரு விஷயத்தையும் நாம் செய்ய வேண்டும் என்று அவர் சொல்கிறார். “நான் உங்கள்மேல் அன்பு காட்டியதுபோல் நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் என் கட்டளை. ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை. என்னுடைய கட்டளைப்படி நீங்கள் நடந்தால் என் நண்பர்களாக இருப்பீர்கள்” என்கிறார்.—யோவான் 15:10-14.

      தன்மீது விசுவாசம் வைக்கிற எல்லாருக்காகவும் உயிரைக் கொடுப்பதன் மூலம், இன்னும் சில மணிநேரத்தில் இயேசு தன்னுடைய அன்பை நிரூபிப்பார். அதேபோன்ற சுயநலமில்லாத அன்பைக் காட்ட இயேசுவின் முன்மாதிரி அவருடைய சீஷர்களைத் தூண்டுகிறது. இந்த அன்புதான் அவர்களின் அடையாளம். “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று இயேசு ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.—யோவான் 13:35.

      இயேசு தன் அப்போஸ்தலர்களை “நண்பர்கள்” என்று குறிப்பிட்டார். அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார். “நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், என் தகப்பனிடமிருந்து கேட்ட எல்லா விஷயங்களையும் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்” என்கிறார். இது எப்பேர்ப்பட்ட நட்பு! இயேசுவின் நெருங்கிய நண்பர்களாக இருப்பதும், தகப்பன் அவரிடம் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இந்த நட்பு நீடிக்க வேண்டுமென்றால், அவர்கள் தொடர்ந்து ‘கனி கொடுக்க வேண்டும்.’ அப்படிச் செய்தால், “என் பெயரில் தகப்பனிடம் எதைக் கேட்டாலும் அதை அவர் உங்களுக்குத் தருவார்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 15:15, 16.

      இந்த “கிளைகள்,” அதாவது சீஷர்கள், ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பு வரப்போகிற கஷ்டங்களைச் சகிக்க அவர்களுக்கு உதவி செய்யும். இந்த உலகம் அவர்களை வெறுக்கும் என்று இயேசு எச்சரிக்கிறார். ஆனால், ‘உலகம் உங்களை வெறுத்தால், அது உங்களை வெறுப்பதற்கு முன்பே என்னை வெறுத்தது என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், அவர்களுக்குச் சொந்தமான உங்களை இந்த உலகம் நேசித்திருக்கும். ஆனால், நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லாததால், . . . உலகம் உங்களை வெறுக்கிறது’ என்று ஆறுதலாகச் சொல்கிறார்.—யோவான் 15:18, 19.

      இந்த உலகம் ஏன் அவர்களை வெறுக்கும் என்பதற்கு இன்னும் சில காரணங்களையும் அவர் சொல்கிறார். “நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால்தான் உங்களுக்கு விரோதமாக இவற்றையெல்லாம் செய்வார்கள். ஏனென்றால், என்னை அனுப்பியவரைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது” என்று அவர்களிடம் சொல்கிறார். அவர் செய்த அற்புதங்கள் அவரை வெறுக்கிறவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்க்கும் என்றும் சொல்கிறார். “வேறு யாருமே செய்யாத செயல்களை நான் அவர்கள் மத்தியில் செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இருந்திருக்காது. ஆனால், இப்போது அவர்கள் என்னைப் பார்த்தும்கூட என்னையும் என் தகப்பனையும் வெறுத்திருக்கிறார்கள்” என்கிறார். சொல்லப்போனால், அவர்கள் காட்டுகிற வெறுப்புகூட பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது.—யோவான் 15:21, 24, 25; சங்கீதம் 35:19; 69:4.

      மறுபடியும், கடவுளுடைய சக்தியாகிய சகாயரை அனுப்புவதாக இயேசு வாக்குக் கொடுக்கிறார். அவரைப் பின்பற்றுகிற எல்லாருக்குமே அந்தச் சக்தி கிடைக்கும். கனி கொடுக்க, அதாவது “சாட்சி கொடுக்க,” அந்தச் சக்தி அவர்களுக்கு உதவி செய்யும்.—யோவான் 15:27.

      • இயேசு சொன்ன உவமையில், திராட்சைத் தோட்டக்காரர் யார்? திராட்சைக் கொடி யார்? கிளைகள் யார்?

      • கிளைகளிடமிருந்து என்ன கனியைக் கடவுள் எதிர்பார்க்கிறார்?

      • இயேசுவின் சீஷர்கள் எப்படி அவருடைய நண்பர்களாக இருக்க முடியும், உலகத்தின் வெறுப்பைச் சமாளிக்க அவர்களுக்கு எது உதவி செய்யும்?

  • ”தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்”
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • இயேசு கொடுத்த எச்சரிப்பைக் கேட்டு அப்போஸ்தலர்கள் கவலையோடு இருக்கிறார்கள்

      அதிகாரம் 121

      “தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்”

      யோவான் 16:1-33

      • கொஞ்சக் காலத்தில் இயேசுவை அப்போஸ்தலர்கள் பார்க்க மாட்டார்கள்

      • அப்போஸ்தலர்களின் வேதனை சந்தோஷமாக மாறும்

      பஸ்கா உணவைச் சாப்பிட்ட பிறகு, அந்த மாடி அறையிலிருந்து இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் புறப்படத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை இயேசு கொடுத்துவிட்டார். இப்போது அவர்களிடம், “நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப்போகாமல் இருப்பதற்காக இவற்றை நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன்” என்கிறார். இயேசு ஏன் இப்படி எச்சரிக்கிறார்? “அவர்கள் உங்களை ஜெபக்கூடத்தைவிட்டு நீக்கிவிடுவார்கள். சொல்லப்போனால், உங்களைக் கொலை செய்கிறவர்கள் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வதாக நினைத்துக்கொள்கிற காலம் வரும்” என்று அவர்களிடம் விளக்குகிறார்.—யோவான் 16:1, 2.

      அப்போஸ்தலர்கள் இதைக் கேட்டு பயந்திருக்கலாம். இந்த உலகம் அவர்களை வெறுக்கும் என்று ஏற்கெனவே இயேசு சொல்லியிருந்தார். ஆனால், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று இதுவரை நேரடியாகச் சொன்னதில்லை. ஏன்? “இவற்றை முதலிலேயே நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால், நான் உங்களோடு இருந்தேன்” என்கிறார். (யோவான் 16:4) இப்போது, அவர்களைவிட்டுப் போவதற்கு முன்பு இயேசு அவர்களை எச்சரிக்கிறார். விசுவாசத்தைவிட்டு விலகிப்போகாமல் இருக்க அவர்களுக்கு இந்த எச்சரிப்பு பிற்பாடு உதவியாக இருக்கும்.

      பிறகு அவர்களிடம், “இப்போது என்னை அனுப்பியவரிடம் போகப் போகிறேன். அப்படியிருந்தும், ‘எங்கே போகிறீர்கள்?’ என்று நீங்கள் யாருமே என்னிடம் கேட்கவில்லை” என்று சொல்கிறார். சில மணிநேரங்களுக்கு முன்பு, அவர் எங்கே போகப் போகிறார் என்று கேட்டிருந்தார்கள். (யோவான் 13:36; 14:5; 16:5) ஆனால் இப்போது, துன்புறுத்தலைப் பற்றி இயேசு சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள், தங்களைப் பற்றிய கவலையில் மூழ்கியிருக்கிறார்கள். அதனால், அவருக்குக் கிடைக்கப்போகிற மகிமையைப் பற்றியோ, உண்மை வணக்கத்தாருக்குக் கிடைக்கப்போகிற நன்மைகளைப் பற்றியோ அவர்கள் கேள்வி கேட்கவில்லை. “நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 16:6.

      பிறகு அவர்களிடம், “உங்களுடைய நன்மைக்காகத்தான் நான் போகிறேன். நான் போகவில்லை என்றால் அந்தச் சகாயர் உங்களிடம் வர மாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்” என்று சொல்கிறார். (யோவான் 16:7) இயேசு இறந்து, பரலோகத்துக்குப் போனால்தான் அவருடைய சீஷர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கும். அவருடைய மக்கள் இந்தப் பூமியில் எங்கே வாழ்ந்தாலும், அவர்களுக்கு உதவி செய்வதற்கு அந்தச் சக்தியை அவர் அனுப்புவார்.

      கடவுளுடைய சக்தி, “பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் பற்றி இந்த உலகத்திலுள்ள மக்களுக்கு நம்பகமான அத்தாட்சி” கொடுக்கும். (யோவான் 16:8) அதாவது, கடவுளுடைய மகன்மீது இந்த உலகம் விசுவாசம் வைக்கவில்லை என்பதைக் கடவுளுடைய சக்தி வெட்டவெளிச்சமாக்கும். இயேசு பரலோகத்துக்குப் போவது அவருடைய நீதிக்கு நம்பகமான அத்தாட்சியாக இருக்கும். அதோடு, “இந்த உலகத்தை ஆளுகிற” சாத்தான் தண்டிக்கப்படுவது நியாயம்தான் என்பதை எடுத்துக்காட்டும்.—யோவான் 16:11.

      “இன்னும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் இப்போது அவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று இயேசு சொல்கிறார். கடவுளுடைய சக்தியை அவர் பொழியும்போது, “சத்தியத்தை முழுமையாக” புரிந்துகொள்ள சீஷர்களுக்கு அது உதவி செய்யும். அதனால், அந்தச் சத்தியத்துக்கு ஏற்றபடி நடக்கவும் அவர்களால் முடியும்.—யோவான் 16:12, 13.

      அடுத்ததாக இயேசு, “இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்கள், அதன் பின்பு கொஞ்சக் காலத்தில் மறுபடியும் என்னைப் பார்ப்பீர்கள்” என்கிறார். அதைக் கேட்டு அவர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. அவர் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். அதைப் பற்றித் தன்னிடம் கேட்க நினைக்கிறார்கள் என்பதை இயேசு புரிந்துகொள்கிறார். அதனால், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும். நீங்கள் வேதனைப்படுவீர்கள், ஆனால் உங்களுடைய வேதனை சந்தோஷமாக மாறும்” என்று விளக்குகிறார். (யோவான் 16:16, 20) அடுத்த நாள் மத்தியானம் இயேசு கொல்லப்படும்போது, மதத் தலைவர்கள் சந்தோஷப்படுவார்கள். அவருடைய சீஷர்களோ வேதனைப்படுவார்கள். இயேசு உயிரோடு எழுந்த பிறகு, அவர்களுடைய வேதனை சந்தோஷமாக மாறும். அவர் கடவுளுடைய சக்தியை அவர்கள்மேல் பொழியும்போது அவர்களுடைய சந்தோஷம் நிலைத்திருக்கும்.

      அப்போஸ்தலர்களுடைய நிலைமையைப் பிரசவ வேதனைப்படுகிற ஒரு பெண்ணின் சூழ்நிலைமையோடு இயேசு ஒப்பிடுகிறார். “குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண், தனக்குப் பிரசவ நேரம் வந்துவிட்டதற்காக வேதனைப்படுகிறாள். ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த பின்பு, இந்த உலகத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்ட சந்தோஷத்தில் அந்த வேதனையை மறந்துவிடுகிறாள்” என்று இயேசு சொல்கிறார். “நீங்களும்கூட இப்போது வேதனைப்படுகிறீர்கள். ஆனால், நான் மறுபடியும் உங்களைப் பார்ப்பேன். அப்போது, உங்கள் இதயம் சந்தோஷத்தால் நிரம்பும். உங்கள் சந்தோஷத்தை யாராலும் பறிக்க முடியாது” என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.—யோவான் 16:21, 22.

      அந்தச் சமயம்வரை, இயேசுவின் பெயரில் அப்போஸ்தலர்கள் ஜெபம் செய்தது கிடையாது. ஆனால் இப்போது, “அந்த நாளில் என்னுடைய பெயரில் நீங்கள் தகப்பனிடம் வேண்டிக்கொள்வீர்கள்” என்று இயேசு சொல்கிறார். வேண்டுதலைக் கேட்க தகப்பனுக்கு விருப்பம் இல்லை என்ற அர்த்தத்திலா அப்படிச் சொல்கிறார்? இல்லை! சொல்லப்போனால், “தகப்பனே உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார். ஏனென்றால், நீங்கள் என்மேல் பாசம் வைத்து, கடவுளுடைய பிரதிநிதியாக நான் வந்திருப்பதை நம்புகிறீர்கள்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 16:26, 27.

      இவ்வளவு நேரமாக இயேசு அவர்களை உற்சாகப்படுத்தி பேசியிருந்ததால், அவர்கள் தைரியமாக, “நீங்கள் கடவுளிடமிருந்து வந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்” என்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கை சீக்கிரத்திலேயே சோதிக்கப்படும். அடுத்து என்ன நடக்கும் என்று இயேசுவே சொல்கிறார். “நேரம் வரும், சொல்லப்போனால், அது வந்துவிட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டு அவரவருடைய வீட்டுக்குப் போவீர்கள். என்னையோ தனியாக விட்டுவிடுவீர்கள்” என்று சொல்கிறார். ஆனாலும், “என் மூலம் உங்களுக்குச் சமாதானம் கிடைப்பதற்காக இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன். இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும். ஆனால் தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்” என்று அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். (யோவான் 16:30-33) இயேசு அவர்களைத் தனியாகத் தவிக்க விட்டுவிட மாட்டார். அவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்வார். சாத்தானும் இந்த உலக மக்களும் அவர்களுடைய உத்தமத்தைக் குலைத்துப்போட முயற்சி செய்வார்கள். ஆனாலும், கடவுள் விரும்புவதை அவர்கள் உண்மையோடு செய்தால், இயேசுவைப் போல அவர்களாலும் இந்த உலகத்தை ஜெயிக்க முடியும்.

      • இயேசு கொடுத்த எந்த எச்சரிப்பைக் கேட்டு அப்போஸ்தலர்கள் பயப்படுகிறார்கள்?

      • அப்போஸ்தலர்கள் ஏன் இயேசுவிடம் கூடுதலாக எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை?

      • அப்போஸ்தலர்களின் வேதனை சந்தோஷமாக மாறும் என்பதை இயேசு எப்படி உதாரணத்துடன் விளக்குகிறார்?

  • மாடி அறையில் இயேசுவின் முடிவான ஜெபம்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, தன்னுடைய அப்போஸ்தலர்கள் முன்னால் ஜெபம் செய்கிறார்

      அதிகாரம் 122

      மாடி அறையில் இயேசுவின் முடிவான ஜெபம்

      யோவான் 17:1-26

      • கடவுளையும் அவருடைய மகனையும் பற்றித் தெரிந்துகொள்வதால் கிடைக்கும் நன்மை

      • யெகோவாவும் இயேசுவும் சீஷர்களும் ஒன்றாயிருக்கிறார்கள்

      இயேசு தன் அப்போஸ்தலர்கள்மீது உயிரையே வைத்திருக்கிறார். சீக்கிரத்தில் அவர்களைவிட்டு அவர் போகப் போவதால் அவர்களுடைய மனதைத் தயார்படுத்த நிறைய விஷயங்களை இவ்வளவு நேரமாகப் பேசியிருந்தார். இப்போது அவர் வானத்தை அண்ணாந்து பார்த்து தகப்பனிடம் இப்படி ஜெபிக்கிறார்: “உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் அவருக்குத் தந்திருக்கிற எல்லா மனுஷர்களுக்கும் அவர் முடிவில்லாத வாழ்வைக் கொடுப்பதற்காக அவர்கள் எல்லார்மேலும் அவருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறீர்கள்.”—யோவான் 17:1, 2.

      கடவுளுக்கு மகிமை சேர்ப்பதுதான் மிக முக்கியம் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். அதேசமயத்தில், முடிவில்லாத வாழ்வைப் பற்றியும் சொல்கிறார். இயேசுவுக்குக் கடவுள் ‘எல்லார்மேலும் அதிகாரத்தை’ கொடுத்திருப்பதால், மீட்புவிலையின் நன்மைகளை எல்லாருக்கும் அவரால் கொடுக்க முடியும். அதைப் பெற்றுக்கொள்ள ஒருவர் என்ன செய்ய வேண்டும்? “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று இயேசு குறிப்பிடுகிறார். (யோவான் 17:3) இதைச் செய்கிறவர்களுக்கு மட்டும்தான் மீட்புவிலையின் நன்மைகளை இயேசு கொடுப்பார்.

      தகப்பனைப் பற்றியும் மகனைப் பற்றியும் ஒருவர் நன்றாகத் தெரிந்துகொண்டு, அவர்களோடு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்களோ, அதேபோல் அவரும் உணர வேண்டும். அவர்களுடைய அருமையான குணங்களை அவர் வளர்த்துக்கொண்டு, மற்றவர்களிடம் பழகும்போது அவற்றைக் காட்ட வேண்டும். முடிவில்லாத வாழ்வைப் பெற்றுக்கொள்வதைவிட கடவுளுக்கு மகிமை சேர்ப்பதுதான் மிக முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது கடவுளுக்கு மகிமை சேர்ப்பதைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்ல ஆரம்பிக்கிறார்.

      “நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்து பூமியில் உங்களை மகிமைப்படுத்தியிருக்கிறேன். அதனால் தகப்பனே, உலகம் உண்டாவதற்கு முன்பு உங்கள் பக்கத்தில் எனக்கிருந்த அதே மகிமையைத் தந்து இப்போது உங்கள் பக்கத்தில் என்னை மகிமைப்படுத்துங்கள்” என்கிறார். (யோவான் 17:4, 5) தன்னை உயிர்த்தெழுப்பி, பரலோகத்தில் முன்பு தனக்கு இருந்த அதே மகிமையைத் தரும்படி இயேசு கேட்கிறார்.

      ஆனால், ஊழியத்தில் தான் செய்து முடித்த காரியங்களை இயேசு மறக்கவில்லை. “நீங்கள் இந்த உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தியிருக்கிறேன். இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள், இவர்களை என்னிடம் தந்தீர்கள், இவர்கள் உங்களுடைய வார்த்தையின்படி நடந்திருக்கிறார்கள்” என்று ஜெபம் செய்கிறார். (யோவான் 17:6) இயேசு ஊழியம் செய்த சமயத்தில், கடவுளுடைய பெயரைச் சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. கடவுளுடைய குணங்களைத் தெரிந்துகொள்ளவும், அவர் எப்படி மனிதர்களிடம் அன்பாக நடந்துகொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு உதவி செய்தார்.

      யெகோவாவைப் பற்றியும், அவருடைய மகனுக்கு இருக்கிற பொறுப்பைப் பற்றியும், இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்களைப் பற்றியும் அப்போஸ்தலர்கள் இப்போது தெரிந்துகொண்டார்கள். பிறகு இயேசு மனத்தாழ்மையோடு இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் எனக்குச் சொன்ன வார்த்தைகளை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; இவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு, நான் உங்களுடைய பிரதிநிதியாக வந்திருக்கிறேன் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டார்கள், நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை நம்புகிறார்கள்.”—யோவான் 17:8.

      தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கும் இந்த உலகத்துக்கும் இருக்கிற வித்தியாசத்தைப் பற்றி இயேசு இப்படிச் சொல்கிறார்: “இவர்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். உலகத்துக்காக அல்ல, நீங்கள் எனக்குத் தந்தவர்களுக்காகவே வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால், இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள். . . . பரிசுத்த தகப்பனே, நாம் ஒன்றாயிருப்பது போல இவர்களும் ஒன்றாயிருப்பதற்காக, நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைக் காத்துக்கொள்ளுங்கள். நான் . . . இவர்களைப் பாதுகாத்தும் காப்பாற்றியும் வந்தேன். . . . அழிவின் மகனைத் தவிர இவர்களில் ஒருவர்கூட அழிந்துபோகவில்லை.” அவரைக் காட்டிக்கொடுப்பதற்காகப் போன யூதாஸ்தான் அந்த அழிவின் மகன்.—யோவான் 17:9-12.

      “இந்த உலகம் இவர்களை வெறுக்கிறது; . . . நீங்கள் இவர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் கேட்கவில்லை, பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை” என்று இயேசு ஜெபிக்கிறார். (யோவான் 17:14-16) அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் இந்த உலகத்தில்தான், அதாவது சாத்தானால் ஆளப்படுகிற ஒரு சமுதாயத்தில்தான், வாழ்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இந்த உலகத்திலிருந்தும் அதன் கெட்ட வழியிலிருந்தும் எப்போதும் பிரிந்திருக்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்?

      எபிரெய வேதாகமத்தில் உள்ள சத்தியங்களையும் இயேசு கற்பித்த விஷயங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் அதைச் செய்யலாம். இதன் மூலம், கடவுளுக்குச் சேவை செய்வதற்காகத் தங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளலாம். “சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்; உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்” என்று இயேசு ஜெபிக்கிறார். (யோவான் 17:17) அப்போஸ்தலர்களில் சிலர் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு சில புத்தகங்களைப் பிற்பாடு எழுதுவார்கள். அவையும் ‘சத்தியத்தின்’ பாகமாகி, ஒரு நபரைப் புனிதப்படுத்த உதவும்.

      காலப்போக்கில், மற்றவர்களும் அந்த ‘சத்தியத்தை’ ஏற்றுக்கொள்வார்கள். அதனால் இயேசு ‘இவர்களுக்காக [11 அப்போஸ்தலர்களுக்காக] மட்டுமல்ல, இவர்களுடைய வார்த்தையைக் கேட்டு [தன்மேல்] விசுவாசம் வைப்பவர்களுக்காகவும்’ வேண்டிக்கொள்கிறார். “இவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். தகப்பனே, நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே அவர்களும் நம்மோடு ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெபிக்கிறார். (யோவான் 17:20, 21) இயேசுவும் அவருடைய தகப்பனும் ஒரே நபராக இல்லை, எல்லா விஷயங்களிலும் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில்தான் தகப்பனோடு ஒன்றுபட்டிருப்பதாக இயேசு சொல்கிறார். அவரைப் பின்பற்றுகிறவர்களும் அப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் ஜெபம் செய்கிறார்.

      சற்று முன்புதான், பேதுருவிடமும் மற்ற அப்போஸ்தலர்களிடமும் பரலோகத்தில் அவர்களுக்காக ஒரு இடத்தைத் தயார்படுத்தப் போவதாக இயேசு சொல்லியிருந்தார். (யோவான் 14:2, 3) அதைப் பற்றி இயேசு இப்போது ஜெபிக்கிறார். “தகப்பனே, இந்த உலகம் உண்டாவதற்கு முன்பு நீங்கள் என்மேல் அன்பு காட்டியதால் எனக்கு மகிமை தந்தீர்கள்; நீங்கள் எனக்குத் தந்தவர்கள் அந்த மகிமையைப் பார்ப்பதற்காக நான் இருக்கும் இடத்தில் அவர்கள் என்னோடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்கிறார். (யோவான் 17:24) பல காலத்துக்கு முன்பே, அதாவது ஆதாம் ஏவாளுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பே, கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் அன்பு காட்டியிருந்தார் என்பதை அவர் இங்கே உறுதிப்படுத்துகிறார். அந்த ஒரே மகன்தான் இயேசு கிறிஸ்துவாக ஆனார்.

      இயேசு தன்னுடைய ஜெபத்தை முடிக்கும்போது, மறுபடியும் தன்னுடைய தகப்பனின் பெயரைப் பற்றிச் சொல்கிறார். அதோடு, அப்போஸ்தலர்கள்மீதும் ‘சத்தியத்தை’ இனிமேல் ஏற்றுக்கொள்ளப்போகிறவர்கள்மீதும் கடவுள் அன்பு வைத்திருப்பதைப் பற்றியும் சொல்கிறார். “நீங்கள் என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும் இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்” என்று சொல்கிறார்.—யோவான் 17:26.

      • கடவுளைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்றால் என்ன?

      • கடவுளுடைய பெயரை இயேசு எந்தெந்த வழிகளில் தெரியப்படுத்தியிருக்கிறார்?

      • கடவுளும், அவருடைய மகனும், உண்மை வணக்கத்தார் எல்லாரும், எப்படி ஒன்றுபட்டிருக்கிறார்கள்?

  • மிகுந்த துக்கத்தோடு ஜெபிக்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • கெத்செமனே தோட்டத்தில் இயேசு ஜெபம் செய்கிறார். பேதுருவும் யாக்கோபும் யோவானும் தூங்குகிறார்கள்

      அதிகாரம் 123

      மிகுந்த துக்கத்தோடு ஜெபிக்கிறார்

      மத்தேயு 26:30, 36-46 மாற்கு 14:26, 32-42 லூக்கா 22:39-46 யோவான் 18:1

      • கெத்செமனே தோட்டத்தில் இயேசு

      • வியர்வை இரத்தத் துளிகள்போல் விழுகிறது

      தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களோடு இயேசு ஜெபம் செய்து முடிக்கிறார். பிறகு, ‘கடவுளைப் புகழ்ந்து பாடல்கள் பாடிவிட்டு, ஒலிவ மலைக்கு அவர்கள் போகிறார்கள்.’ (மாற்கு 14:26) அங்கிருந்து கிழக்கு நோக்கி நடந்து கெத்செமனே என்ற தோட்டத்துக்குப் போகிறார்கள். இயேசு அங்கே போவது வழக்கம்.

      இது ஒலிவ மரங்கள் சூழ்ந்த அழகான இடம். இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களில் எட்டுப் பேரிடம், “நான் அங்கே போய் ஜெபம் செய்கிற வரைக்கும் நீங்கள் இங்கேயே உட்கார்ந்திருங்கள்” என்று சொல்கிறார். ஒருவேளை, தோட்டத்தின் நுழைவாசலில் உட்கார்ந்திருக்கும்படி அவர்களிடம் சொல்லியிருக்கலாம். பிறகு, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் கூட்டிக்கொண்டு அந்தத் தோட்டத்துக்குள்ளே போகிறார். இயேசு அதிக மனவேதனையோடு, “உயிர் போகுமளவுக்கு நான் துக்கத்தில் தவிக்கிறேன். நீங்கள் இங்கேயே இருந்து, என்னோடு விழித்திருங்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—மத்தேயு 26:36-38.

      அவர்களைவிட்டு இன்னும் கொஞ்சம் தள்ளிப் போய், இயேசு ‘மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து ஜெபம் செய்கிறார்.’ இந்த நெருக்கடியான நேரத்தில் இயேசு எதைப் பற்றி ஜெபிக்கிறார்? “தகப்பனே, உங்களால் எல்லாமே முடியும்; இந்தக் கிண்ணத்தை என்னிடமிருந்து எடுத்துவிடுங்கள். ஆனாலும், என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும்” என்று ஜெபிக்கிறார். (மாற்கு 14:35, 36) இதற்கு என்ன அர்த்தம்? தன் உயிரை மீட்புவிலையாகக் கொடுக்காமல் இருந்துவிடலாம் என்று இயேசு நினைக்கிறாரா? இல்லவே இல்லை!

      ரோமர்கள் எப்படியெல்லாம் ஆட்களைச் சித்திரவதை செய்து கொல்வார்கள் என்பதை இயேசு பரலோகத்திலிருந்து பார்த்திருக்கிறார். அவர் இப்போது ஒரு மனிதராக இருப்பதால் பயம், கவலை போன்ற உணர்ச்சிகள் அவருக்கும் இருக்கும். அவரால் வலியை உணர முடியும். அதனால், இப்போது அனுபவிக்கப்போகிற சித்திரவதையை அவர் விரும்பவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதைவிட முக்கியமாக, அவர் படுமோசமான குற்றவாளியைப் போலச் சாவதைப் பார்த்து, அவருடைய தகப்பனின் பெயரை மக்கள் பழித்துப் பேசுவார்களோ என்று நினைத்துதான் இயேசு அதிகமாக வேதனைப்படுகிறார். ஏனென்றால், இன்னும் சில மணிநேரங்களில், கடவுளை நிந்தித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு மரக் கம்பத்தில் அவர் தொங்கவிடப்படுவார்.

      ரொம்ப நேரம் ஜெபம் செய்துவிட்டு, இயேசு திரும்பி வந்து பார்க்கும்போது மூன்று அப்போஸ்தலர்களும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர் பேதுருவிடம், “உங்களால் ஒரு மணிநேரம்கூட என்னோடு சேர்ந்து விழித்திருக்க முடியவில்லையா? சோதனைக்கு இணங்கிவிடாதபடி நீங்கள் விழித்திருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்கிறார். அப்போஸ்தலர்களும் பயங்கர மனவேதனையோடு இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். அதோடு, நேரம் இப்போது நடுராத்திரியையும் தாண்டிவிட்டது. அதனால், “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்கிறார்.—மத்தேயு 26:40, 41.

      பிறகு, அவர் இரண்டாவது தடவையாகப் போய், “இந்தக் கிண்ணத்தை” எடுத்துவிடும்படி ஜெபம் செய்கிறார். அவர் திரும்பி வந்து பார்க்கும்போது, அப்போஸ்தலர்கள் மூன்று பேரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். சோதனைக்கு இணங்கிவிடாதபடி ஜெபம் செய்ய வேண்டிய நேரத்தில் அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இயேசு அதைச் சுட்டிக்காட்டியபோது, “அவரிடம் என்ன சொல்வதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை.” (மாற்கு 14:40) மூன்றாவது தடவையாக இயேசு போய் மண்டிபோட்டு ஜெபம் செய்கிறார்.

      ஒரு குற்றவாளியைப் போலத் தான் சாவதால் தகப்பனின் பெயருக்குக் களங்கம் வந்துவிடுமோ என்று நினைத்து இயேசு ரொம்ப வேதனைப்படுகிறார். தன்னுடைய மகன் செய்கிற ஜெபங்களை யெகோவா கேட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில், அவர் ஒரு தேவதூதரை அனுப்பி இயேசுவைப் பலப்படுத்துகிறார். அதற்குப் பிறகும், இயேசு தன் தகப்பனிடம் மன்றாடுவதை நிறுத்தவில்லை. அவர் “இன்னும் அதிக உருக்கமாக ஜெபம்” செய்கிறார். மிகப் பெரிய பொறுப்பை அவர் சுமந்துகொண்டிருக்கிறார். அவருடைய முடிவில்லாத வாழ்வும், உண்மையுள்ள மனிதர்களின் முடிவில்லாத வாழ்வும் ஆபத்தில் இருக்கிறது. அவர் தாங்க முடியாத மனவேதனையில் தவிக்கிறார். சொல்லப்போனால், அவருடைய “வியர்வைத் துளிகள் இரத்தத் துளிகள்போல் தரையில்” விழுகின்றன.—லூக்கா 22:44.

      இயேசு மூன்றாவது தடவையாக அப்போஸ்தலர்களிடம் வரும்போதும், அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இயேசு அவர்களிடம், “இப்படிப்பட்ட நேரத்தில் தூங்கிக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டும் இருக்கிறீர்களே! இதோ, மனிதகுமாரன் பாவிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிற நேரம் நெருங்கிவிட்டது. எழுந்திருங்கள், போகலாம். இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் நெருங்கி வந்துவிட்டான்” என்கிறார்.—மத்தேயு 26:45, 46.

      வியர்வைத் துளிகள் இரத்தத் துளிகள்போல்

      இயேசுவின் வியர்வைத் துளிகள் எப்படி “இரத்தத் துளிகள்போல்” ஆனது என்பதை மருத்துவரான லூக்கா விளக்கவில்லை. (லூக்கா 22:44) இயேசுவின் வியர்வை, காயத்திலிருந்து சொட்டுகிற இரத்தத்தைப் போல இருந்தது என்ற அர்த்தத்தில் அப்படிச் சொல்லியிருக்கலாம். தி ஜர்னல் ஆஃப் த அமெரிக்கன் மெடிக்கல் அஸோசியேஷன் என்ற ஆங்கில புத்தகத்தில் டாக்டர் வில்லியம் டி. எட்வர்ட்ஸ் இதைப் பற்றிய இன்னொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். இரத்த வியர்வை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், ஆனால் இது ரொம்ப அபூர்வம் என்றும் அவர் சொல்கிறார். ஒருவர் பயங்கரமான மனவேதனையில் இருக்கும்போது, அவருடைய உடலில் இருக்கிற மெல்லிய இரத்தக் குழாய்கள் உடைந்து, வியர்வையோடு இரத்தம் கலந்து விடும். அப்போது அவருடைய வியர்வை, இரத்தம் போலத் தெரியும் என்று அவர் விளக்குகிறார்.

      • மாடி அறையிலிருந்து புறப்பட்டதும், இயேசு தன் அப்போஸ்தலர்களை எங்கே கூட்டிக்கொண்டு போகிறார்?

      • இயேசு ஜெபம் செய்யும்போது, மூன்று அப்போஸ்தலர்கள் என்ன செய்கிறார்கள்?

      • இயேசுவின் வியர்வைத் துளிகள் இரத்தத் துளிகள் போல் ஆனதை வைத்து, அவருடைய உணர்ச்சிகளைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

  • கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • மல்குசின் காதை வாளால் வெட்டியதற்காக பேதுருவை இயேசு கண்டிக்கிறார். இயேசுவைக் கைது செய்வதற்காக போர்வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்

      அதிகாரம் 124

      கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்

      மத்தேயு 26:47-56 மாற்கு 14:43-52 லூக்கா 22:47-53 யோவான் 18:2-12

      • தோட்டத்தில் இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுக்கிறான்

      • ஒருவரின் காதை பேதுரு வெட்டுகிறார்

      • இயேசு கைது செய்யப்படுகிறார்

      நேரம் இப்போது நடுராத்திரியைத் தாண்டிவிட்டது. இயேசுவைக் காட்டிக்கொடுத்தால் 30 வெள்ளிக் காசுகள் தருவதாக, யூதாசிடம் குருமார்கள் சொல்லியிருந்தார்கள். அதனால் முதன்மை குருமார்கள், பரிசேயர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு பெரிய கூட்டத்தோடு இயேசுவைத் தேடி யூதாஸ் வருகிறான். ஆயுதம் ஏந்திய ரோம வீரர்களும் அவர்களுடைய தளபதியும் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள்.

      பஸ்கா உணவு சாப்பிடும்போது, யூதாசை இயேசு வெளியே அனுப்பிவிட்டார். அவன் நேராக முதன்மை குருமார்களிடம் போயிருக்கலாம். (யோவான் 13:27) அவர்கள் தங்களுடைய அதிகாரிகளையும் போர்வீரர்களையும் ஒன்றுகூட்டுகிறார்கள். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பஸ்காவைக் கொண்டாடிய அந்த மாடி அறைக்கு யூதாஸ் அவர்களைக் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம். அதற்குப் பிறகு, அந்தக் கூட்டத்தார் கீதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து, அந்தத் தோட்டத்துக்குப் போகிறார்கள். ஆயுதங்கள் மட்டுமல்லாமல், தங்கள் கையில் விளக்குகளையும் தீப்பந்தங்களையும் பிடித்துக்கொண்டு இயேசுவை எப்படியாவது பிடித்தே தீர வேண்டும் என்று போகிறார்கள்.

      யூதாஸ் அந்தக் கூட்டத்தாருடன் ஒலிவ மலைமேல் ஏறிப் போகிறான். இயேசு எங்கே இருப்பார் என்பதில் அவனுக்கு இப்போது எந்தச் சந்தேகமும் இல்லை. கடந்த ஒரு வாரமாக, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பெத்தானியாவுக்கும் எருசலேமுக்கும் இடையே பல தடவை பயணம் செய்திருக்கிறார்கள். அந்தச் சமயங்களிலெல்லாம், அடிக்கடி கெத்செமனே தோட்டத்தில் கொஞ்ச நேரம் செலவழிப்பது அவர்களுடைய வழக்கம். ஆனால், இப்போது ராத்திரி நேரம். அந்தத் தோட்டத்தில் இருக்கிற ஒலிவ மரங்களின் நிழலில் இயேசு இருக்கலாம். அப்படியிருக்கும்போது, போர்வீரர்கள் எப்படி இயேசுவை அடையாளம் கண்டுகொள்வார்கள்? ஒருவேளை, அவர்கள் இதற்குமுன் இயேசுவைப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். அதனால்தான் யூதாஸ் அவர்களிடம், “நான் யாருக்கு முத்தம் கொடுக்கிறேனோ அவர்தான் அந்த ஆள்; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள், காவலோடு கொண்டுபோங்கள்” என்று சொல்லியிருந்தான்.—மாற்கு 14:44.

      அந்தக் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு கெத்செமனே தோட்டத்துக்குள் யூதாஸ் நுழைகிறான். இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் அங்கே பார்த்ததும், நேராக அவரிடம் போகிறான். “ரபீ, வாழ்க!” என்று சொல்லி, மென்மையாக முத்தம் கொடுக்கிறான். அப்போது இயேசு, “நீ எதற்காக இங்கே வந்தாய்?” என்று கேட்கிறார். (மத்தேயு 26:49, 50) இயேசுவுக்குப் பதில் தெரியும். அதனால், “யூதாஸ், மனிதகுமாரனை முத்தம் கொடுத்தா காட்டிக்கொடுக்கிறாய்?” என்று கேட்கிறார். (லூக்கா 22:48) அந்தத் துரோகியிடம் அதற்குமேல் அவர் எதுவும் பேசவில்லை.

      இயேசு அந்தக் கூட்டத்தாரிடம் நேராகப் போய், தீப்பந்தங்கள் மற்றும் விளக்குகளின் வெளிச்சத்தில் நின்று, “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொல்கிறார்கள். அப்போது அவர், “நான்தான்” என்று தைரியமாகச் சொல்கிறார். (யோவான் 18:4, 5) அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் அந்த ஆட்கள் தரையில் விழுகிறார்கள்.

      கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இயேசு அங்கிருந்து தப்பித்து ஓடிவிடவில்லை. அவர்கள் யாரைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று மறுபடியும் கேட்கிறார். அவர்கள் மறுபடியும், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொல்கிறார்கள். அப்போது இயேசு, “நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே. என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்று அமைதியாகச் சொல்கிறார். இந்த நெருக்கடியான நேரத்திலும்கூட, அப்போஸ்தலர்களில் ஒருவரைக்கூட இழக்கப்போவதில்லை என்று சற்று முன்பு சொன்னதை இயேசு நினைத்துப்பார்க்கிறார். (யோவான் 6:39; 17:12) தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களை இயேசு பாதுகாக்கிறார். ‘அழிவின் மகனான’ யூதாசைத் தவிர வேறு யாரையும் அவர் இழக்கவில்லை. (யோவான் 18:7-9) அதனால், அவர்களை விட்டுவிடும்படி அந்தக் கூட்டத்தாரிடம் இயேசு சொல்கிறார்.

      போர்வீரர்கள் எழுந்து, இயேசுவை நெருங்கும்போதுதான், அங்கே என்ன நடக்கிறது என்பது அப்போஸ்தலர்களுக்குப் புரிகிறது. உடனே, “எஜமானே, நாங்கள் வாளால் வெட்டலாமா?” என்று அவர்கள் கேட்கிறார்கள். (லூக்கா 22:49) இயேசு பதில் சொல்வதற்கு முன்னால், அப்போஸ்தலர்களிடம் இருந்த வாள்களில் ஒன்றை பேதுரு எடுத்து, தலைமைக் குருவின் வேலைக்காரனான மல்குசைத் தாக்குகிறார். அதில், மல்குசின் வலது காது அறுந்துபோகிறது.

      அப்போது இயேசு, மல்குசின் காதைத் தொட்டு அவனைக் குணமாக்குகிறார். பேதுருவைப் பார்த்து, “உன் வாளை உறையில் போடு” என்று கட்டளையிடுகிறார். “வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்ற முக்கியமான பாடத்தை அப்போது கற்பிக்கிறார். கைது செய்யப்பட இயேசு தயாராக இருக்கிறார். அதனால்தான், “நான் அப்படிச் செய்தால், இதெல்லாம் நடக்க வேண்டுமென்று சொல்கிற வேதவசனங்கள் எப்படி நிறைவேறும்?” என்று கேட்கிறார். (மத்தேயு 26:52, 54) அதோடு, “என் தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கிற கிண்ணத்திலிருந்து நான் குடித்தாக வேண்டும், இல்லையா?” என்றும் கேட்கிறார். (யோவான் 18:11) உயிரே போனாலும், கடவுளுடைய விருப்பத்தின்படி நடக்க இயேசு தயாராக இருக்கிறார்.

      பிறகு அந்தக் கூட்டத்தாரைப் பார்த்து, “ஒரு கொள்ளைக்காரனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைப் பிடிக்க வந்திருக்கிறீர்களா? நான் தினமும் ஆலயத்தில் உட்கார்ந்து கற்பித்துக்கொண்டிருந்தேன்; அப்போதெல்லாம் நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை. ஆனால், தீர்க்கதரிசிகள் எழுதிவைத்த வசனங்கள் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்திருக்கின்றன” என்று சொல்கிறார்.—மத்தேயு 26:55, 56.

      போர்வீரர்களும், படைத் தளபதியும், அதிகாரிகளும் இயேசுவைப் பிடித்துக் கட்டுகிறார்கள். அதைப் பார்த்ததும் அப்போஸ்தலர்கள் அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். ஆனால், “ஓர் இளம் மனிதர்” இயேசுவைப் பின்தொடர விரும்புவதால், அந்தக் கூட்டத்தாருடன் போகிறார். ஒருவேளை, அது சீஷராகிய மாற்குவாக இருக்கலாம். (மாற்கு 14:51) சிலர் அந்த இளம் மனிதரை அடையாளம் கண்டுபிடித்து, அவரைப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அதனால், தான் போட்டிருந்த நாரிழை உடையை அப்படியே விட்டுவிட்டு அவர் ஓடிவிடுகிறார்.

      • யூதாஸ் ஏன் இயேசுவைத் தேடிக்கொண்டு கெத்செமனே தோட்டத்துக்குப் போகிறான்?

      • இயேசுவைப் பாதுகாப்பதற்காக பேதுரு என்ன செய்கிறார், இயேசு அதற்கு என்ன சொல்கிறார்?

      • கடவுளுடைய விருப்பத்தின்படி நடக்க விரும்புவதை இயேசு எப்படிக் காட்டுகிறார்?

      • அப்போஸ்தலர்கள் இயேசுவைவிட்டு ஓடிப்போனாலும், யார் அங்கே இருக்கிறார்? அதற்குப் பிறகு என்ன நடக்கிறது?

  • அன்னாவிடமும், பிறகு காய்பாவிடமும் கொண்டுபோகப்படுகிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • காய்பா தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொள்கிறார்; மற்றவர்கள் இயேசுவை அறைகிறார்கள், கேலி செய்கிறார்கள், கைமுட்டியால் குத்துகிறார்கள்

      அதிகாரம் 125

      அன்னாவிடமும், பிறகு காய்பாவிடமும் கொண்டுபோகப்படுகிறார்

      மத்தேயு 26:57-68 மாற்கு 14:53-65 லூக்கா 22:54, 63-65 யோவான் 18:13, 14, 19-24

      • முன்னாள் தலைமைக் குருவிடம் இயேசு கொண்டுபோகப்படுகிறார்

      • சட்டவிரோதமாக நியாயசங்கம் விசாரிக்கிறது

      இயேசு ஒரு குற்றவாளியைப் போலக் கட்டப்பட்டு, அன்னாவிடம் கொண்டுபோகப்படுகிறார். சின்ன வயதில் ஆலயத்திலிருந்த போதகர்களை இயேசு ஆச்சரியப்படுத்திய சமயத்தில், அவர் தலைமைக் குருவாகச் சேவை செய்திருந்தார். (லூக்கா 2:42, 47) பிற்பாடு, அன்னாவின் மகன்களில் சிலர் தலைமைக் குருக்களாக சேவை செய்திருந்தார்கள். இப்போது அவருடைய மருமகனான காய்பா தலைமைக் குருவாக இருக்கிறார்.

      இயேசுவிடம் அன்னா கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போது, காய்பா நியாயசங்கத்தைக் கூட்டுகிறார். தலைமைக் குரு, முன்னாள் தலைமைக் குருக்கள் ஆகியோர் உட்பட 71 உறுப்பினர்கள் நியாயசங்கத்தில் இருக்கிறார்கள்.

      இயேசுவிடம் “அவருடைய சீஷர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும்” அன்னா விசாரணை செய்கிறார். அப்போது இயேசு, “நான் உலகறியப் பேசியிருக்கிறேன். யூதர்கள் எல்லாரும் கூடிவருகிற ஜெபக்கூடத்திலும் ஆலயத்திலும் எப்போதும் கற்பித்திருக்கிறேன்; எதையும் நான் ரகசியமாகப் பேசியதே இல்லை. அப்படியிருக்கும்போது, ஏன் என்னை விசாரணை செய்கிறீர்கள்? நான் பேசியதைக் கேட்டவர்களிடம் விசாரணை செய்யுங்கள்” என்று மட்டும் சொல்கிறார்.—யோவான் 18:19-21.

      இயேசு இப்படிச் சொன்னதும், அங்கே நின்றுகொண்டிருக்கிற காவலர்களில் ஒருவன் அவருடைய கன்னத்தில் அறைந்து, “முதன்மை குருவுக்கு இப்படித்தான் பதில் சொல்வதா?” என்று கேட்கிறான். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால் இயேசு, “நான் தவறாகப் பேசியிருந்தால், அந்தத் தவறு என்னவென்று சொல். சரியாகப் பேசியிருந்தால், என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்கிறார். (யோவான் 18:22, 23) பிறகு அன்னா, தன்னுடைய மருமகனான காய்பாவிடம் இயேசுவை அனுப்புகிறார்.

      இதற்குள், தலைமைக் குரு, பெரியோர்கள், வேத அறிஞர்கள் என நியாயசங்கத்தைச் சேர்ந்த எல்லாரும் காய்பாவின் வீட்டில் கூடிவிடுகிறார்கள். பஸ்கா இரவில், இப்படி விசாரணை செய்வது சட்டப்படி தவறு. ஆனால், தாங்கள் நினைத்ததைச் சாதிப்பதில் குறியாக இருப்பதால், நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தச் சட்டத்தை அலட்சியம் செய்கிறார்கள்.

      இந்தக் கூட்டத்தில் இருக்கிற நிறைய பேர் இயேசுவுக்கு எதிராக இருக்கிறார்கள். லாசருவை உயிரோடு எழுப்பிய பிறகு, இயேசுவைக் கொல்ல வேண்டும் என்று நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். (யோவான் 11:47-53) ஒருசில நாட்களுக்கு முன்னால், இயேசுவைப் பிடித்துக் கொலை செய்ய மதத் தலைவர்கள் சதித்திட்டம் போட்டிருந்தார்கள். (மத்தேயு 26:3, 4) விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே, இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

      சட்டவிரோதமாகக் கூடிவந்தது மட்டுமல்லாமல், இயேசுவுக்கு எதிராகச் சாட்சி சொல்வதற்கு நியாயசங்கத்தில் இருக்கிற முதன்மை குருமார்களும் மற்றவர்களும் பொய் சாட்சிகளைத் தேடுகிறார்கள். நிறைய பேரை அவர்கள் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர்களுடைய சாட்சிகள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. கடைசியாக இரண்டு பேர் வந்து, “‘கைகளால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தைத் தரைமட்டமாக்கி, கைகளால் கட்டப்படாத வேறொரு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன்’ என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்கிறார்கள். (மாற்கு 14:58) ஆனால், இவர்களுடைய சாட்சியும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது.

      காய்பா இயேசுவைப் பார்த்து, “உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்கிறார்களே, நீ பதில் சொல்ல மாட்டாயா?” என்று கேட்கிறார். (மாற்கு 14:60) அந்தப் பொய் சாட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இயேசு அமைதியாக இருக்கிறார். அதனால், தலைமைக் குருவான காய்பா இன்னொரு வழியைக் கண்டுபிடிக்கிறார்.

      யாராவது தங்களைக் கடவுளுடைய மகன் என்று சொன்னால் யூதர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது காய்பாவுக்குத் தெரியும். முன்பு, கடவுள் தன்னுடைய தகப்பன் என்று இயேசு சொன்னபோது, அவர் “தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொண்டதாக” யூதர்கள் நினைத்துக்கொண்டு அவரைக் கொலை செய்யப் பார்த்தார்கள். (யோவான் 5:17, 18; 10:31-39) இதெல்லாம் காய்பாவுக்குத் தெரியும். அதனால் அவர் இயேசுவிடம், “உயிருள்ள கடவுள்மேல் ஆணையாகச் சொல், நீதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்துவா?” என்று தந்திரமாகக் கேட்கிறார். (மத்தேயு 26:63) தான் கடவுளுடைய மகன் என்பதை இயேசு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். (யோவான் 3:18; 5:25; 11:4) இப்போது அதை ஒத்துக்கொள்ளவில்லை என்றால், தான் கடவுளுடைய மகன் என்பதையும், கிறிஸ்து என்பதையும் அவர் மறுப்பது போல ஆகிவிடும். அதனால் இயேசு, “நான் கிறிஸ்துதான்; மனிதகுமாரன் வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும் வானத்து மேகங்களோடு வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள்” என்று சொல்கிறார்.—மாற்கு 14:62.

      உடனே, ஏதோ கேட்கக் கூடாததை கேட்டதுபோல் தலைமைக் குரு தன் மேலங்கியைக் கிழித்து, “இது தெய்வ நிந்தனை! இனி நமக்கு வேறு சாட்சிகள் எதற்கு? இதோ! இந்த நிந்தனையை நீங்களே இப்போது கேட்டீர்கள். உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று உணர்ச்சிபொங்க கேட்கிறார். உடனே நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள், “இவன் சாக வேண்டும்” என்று அநியாயமாகத் தீர்ப்பு சொல்கிறார்கள்.—மத்தேயு 26:65, 66.

      பிறகு, இயேசுவைக் கேலி செய்து, அவரைத் தங்கள் கைமுட்டிகளால் தாக்குகிறார்கள். மற்றவர்கள் அவரைக் கன்னத்தில் அறைந்து, முகத்தில் துப்புகிறார்கள். அவருடைய முகத்தை மூடி, அவரை அறைந்து, “நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் உன்னை அடித்தது யார் என்று சொல் பார்க்கலாம்” என்று சொல்லிக் கேலி செய்கிறார்கள். (லூக்கா 22:64) சட்டவிரோதமான இந்த ராத்திரி நேர விசாரணையில், கடவுளுடைய மகன் மோசமாக நடத்தப்படுகிறார்.

      • இயேசு முதலில் எங்கே கொண்டுபோகப்படுகிறார்? அங்கே என்ன நடக்கிறது?

      • அடுத்ததாக எங்கே கொண்டுபோகப்படுகிறார்? இயேசு சாக வேண்டும் என்று நியாயசங்கத்தைச் சொல்ல வைப்பதற்கு காய்பா என்ன செய்கிறார்?

      • விசாரணை செய்யப்படும்போது, இயேசு எப்படி மோசமாக நடத்தப்படுகிறார்?

  • இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுகிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • தன்னைத் தெரியாது என்று சொன்ன பேதுருவை மேல்மாடத்திலிருந்து இயேசு பார்க்கிறார். பின்னால் ஒரு சேவல் நிற்கிறது

      அதிகாரம் 126

      இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுகிறார்

      மத்தேயு 26:69-75 மாற்கு 14:66-72 லூக்கா 22:54-62 யோவான் 18:15-18, 25-27

      • இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார்

      கெத்செமனே தோட்டத்தில் இயேசு கைது செய்யப்பட்டதும், அப்போஸ்தலர்கள் பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். ஆனால், “சீமோன் பேதுருவும் மற்றொரு சீஷரும்” திரும்பி வருகிறார்கள். அந்த ‘மற்றொரு சீஷர்’ ஒருவேளை அப்போஸ்தலனாகிய யோவானாக இருக்கலாம். (யோவான் 18:15; 19:35; 21:24) அன்னாவிடம் இயேசு கொண்டுபோகப்பட்ட சமயத்தில், இவர்களும் பின்னாலேயே போகிறார்கள். அங்கிருந்து தலைமைக் குருவான காய்பாவின் வீட்டுக்கு அவர் கொண்டுபோகப்பட்ட சமயத்தில், பேதுருவும் யோவானும் சற்று தூரத்தில் அவர் பின்னால் போகிறார்கள். தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் ஒருபக்கம்... தங்கள் எஜமானுக்கு என்ன ஆகுமோ என்ற கவலை ஒருபக்கம்... இந்த இரண்டுக்கும் நடுவே இவர்கள் தவியாய்த் தவிக்கிறார்கள்.

      யோவான் தலைமைக் குருவுக்குத் தெரிந்தவர். அதனால், நேராக காய்பாவின் வீட்டு முற்றத்துக்குள் போகிறார். ஆனால், பேதுரு வாசல் பக்கத்திலேயே நிற்கிறார். யோவான் திரும்பி வந்து, வாசலில் காவல்காக்கிற வேலைக்காரப் பெண்ணிடம் பேசிய பிறகு, பேதுருவுக்கு உள்ளே போக அனுமதி கிடைக்கிறது.

      அன்று ராத்திரி ஒரே குளிராக இருக்கிறது. அதனால், முற்றத்தில் இருக்கிறவர்கள் கரியைப் போட்டு தீ மூட்டியிருக்கிறார்கள். இயேசுவுக்கு “என்ன நடக்கப்போகிறது” என்று பார்ப்பதற்காக பேதுருவும் அவர்களோடு உட்கார்ந்து குளிர்காய்கிறார். (மத்தேயு 26:58) இப்போது நெருப்பு வெளிச்சத்தில், அந்த வேலைக்காரப் பெண் பேதுருவின் முகத்தை நன்றாகப் பார்க்கிறாள். உடனே, “நீயும் அந்த மனுஷனுடைய சீஷன்தானே?” என்று பேதுருவிடம் கேட்கிறாள். (யோவான் 18:17) மற்றவர்களும் பேதுருவை அடையாளம் கண்டுகொண்டு, அவர் இயேசுவுடன் இருந்தவர் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.—மத்தேயு 26:69, 71-73; மாற்கு 14:70.

      பேதுருவுக்கு எரிச்சலாக இருக்கிறது. தன்னை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று அவர் நினைக்கிறார். அதனால், வாசல் மண்டபத்துக்குப் போய் நின்றுகொள்கிறார். தான் இயேசுவுடன் இருந்ததையும் மறுக்கிறார். ஒரு கட்டத்தில், “எனக்கு அவரைத் தெரியாது, நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்குப் புரியவில்லை” என்றுகூட சொல்லிவிடுகிறார். (மாற்கு 14:67, 68) அதுமட்டுமல்ல, “தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன்மேல் சாபம் வரட்டும் என்று சொல்லி” சத்தியமும் செய்கிறார்.—மத்தேயு 26:74.

      இதற்கிடையில், இயேசுவின் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை, காய்பாவின் வீட்டு முற்றத்துக்கு மேல் இருந்த பகுதியில் விசாரணை நடந்திருக்கலாம். சாட்சி சொல்வதற்காக அழைத்து வரப்பட்ட ஆட்கள், உள்ளே போவதையும் வருவதையும் பேதுருவும் மற்றவர்களும் பார்க்கிறார்கள்.

      பேதுருவின் பேச்சே அவர் ஒரு கலிலேயர் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. அவர் பொய் சொல்கிறார் என்பதை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதோடு, அந்தக் கூட்டத்தில் இருக்கிற ஒருவன் மல்குசின் சொந்தக்காரன். இந்த மல்குசின் காதைத்தான் பேதுரு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வெட்டியிருந்தார். அவன் பேதுருவைப் பார்த்து, “தோட்டத்தில் நான் உன்னை அவரோடு பார்த்தேனே” என்று சொல்கிறான். அப்போதும் பேதுரு மறுக்கிறார். இயேசு சொன்னபடியே, பேதுரு மூன்றாவது தடவையாக மறுக்கும்போது, சேவல் கூவுகிறது.—யோவான் 13:38; 18:26, 27.

      அந்தச் சமயத்தில், முற்றத்தைப் பார்த்தபடி இருக்கிற மேல்மாடத்தில் இயேசு இருந்திருக்கலாம். எஜமான் திரும்பி, பேதுருவைப் பார்க்கிறார். பேதுரு அப்படியே நொறுங்கிவிடுகிறார். ஒருசில மணிநேரங்களுக்கு முன்னால், மாடி அறையில் இயேசு சொன்னது பேதுருவின் ஞாபகத்துக்கு வருகிறது. தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிந்ததும் பேதுரு இடிந்துபோகிறார். அதனால் வெளியே போய்க் கதறி அழுகிறார்.—லூக்கா 22:61, 62.

      இது எப்படி நடந்தது? தன்னுடைய ஆன்மீக பலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த பேதுரு... கடைசிவரை உண்மையோடு இருக்கப்போவதாக அடித்துச் சொன்ன பேதுரு... எப்படி தன் எஜமானைத் தெரியாது என்று சொன்னார்? இந்தச் சூழ்நிலையை பேதுரு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எதிரிகள் பொய்களை ஜோடித்து, இயேசுவைப் பயங்கரமான குற்றவாளி போல நிற்க வைத்திருக்கிறார்கள். நிரபராதியான இயேசுவுக்கு பேதுரு இப்போது ஆதரவாக நின்றிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, ‘முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகளை’ கற்பித்தவரையே பேதுரு தெரியாது என்று சொல்லிவிட்டார்.—யோவான் 6:68.

      பேதுருவுக்கு ஏற்பட்ட இந்தப் பயங்கரமான அனுபவத்திலிருந்து நாம் எல்லாருமே பாடம் கற்றுக்கொள்ளலாம். எதிர்பாராத நேரத்தில் வருகிற சோதனைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்கத் தயாராக இல்லாவிட்டால், விசுவாசமும் கடவுள்பக்தியும் உள்ள ஒருவர்கூட தடுமாறிவிடலாம். கடவுளுடைய ஊழியர்களான நம் எல்லாருக்குமே இது ஒரு எச்சரிக்கை!

      • காய்பாவின் வீட்டு முற்றத்துக்குள் பேதுருவும் யோவானும் எப்படிப் போனார்கள்?

      • பேதுருவும் யோவானும் முற்றத்தில் இருக்கும்போது, வீட்டுக்குள் என்ன நடக்கிறது?

      • பேதுரு என்ன சொல்லி சத்தியம் செய்கிறார்?

      • பேதுருவின் அனுபவத்திலிருந்து நாம் முக்கியமான என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்