-
பிலாத்துவிடம் கொண்டுபோகப்படுகிறார்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 127
பிலாத்துவிடம் கொண்டுபோகப்படுகிறார்
மத்தேயு 27:1-11 மாற்கு 15:1 லூக்கா 22:66–23:3 யோவான் 18:28-35
காலையில் நியாயசங்கத்தின் முன்னால் விசாரணை
யூதாஸ் இஸ்காரியோத்து தூக்குப்போட முயற்சி செய்கிறான்
மரண தண்டனை கொடுக்கும்படி பிலாத்துவிடம் அனுப்பப்படுகிறார்
இயேசுவைத் தெரியாது என்று பேதுரு மூன்றாவது தடவை சொன்னபோது, கிட்டத்தட்ட விடியும் நேரம் ஆகிவிட்டது. நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் இயேசுவைப் பெயருக்கு விசாரித்துவிட்டு, அங்கிருந்து போய்விடுகிறார்கள். வெள்ளிக்கிழமை அதிகாலையில், அவர்கள் மறுபடியும் ஒன்றுகூடுகிறார்கள். தாங்கள் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்வதற்காகவும், ராத்திரியில் நடத்திய சட்டவிரோதமான விசாரணையை மூடிமறைப்பதற்காகவும் இப்படிச் செய்திருக்கலாம். இப்போது, அவர்கள் முன்னால் இயேசு நிறுத்தப்படுகிறார்.
நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும், “நீ கிறிஸ்துவா? எங்களுக்குச் சொல்” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு, “நான் அதை உங்களுக்குச் சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை. உங்களிடம் நான் கேள்வி கேட்டாலும் நீங்கள் பதில் சொல்லப்போவதில்லை” என்று சொல்கிறார். இருந்தாலும், தானியேல் 7:13 தன்னைப் பற்றித்தான் சொல்கிறது என்பதை அவர்களிடம் சுட்டிக்காட்டுகிறார். “இப்போதுமுதல் மனிதகுமாரன் வல்லமையுள்ள கடவுளின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பார்” என்று தைரியமாகச் சொல்கிறார்.—லூக்கா 22:67-69; மத்தேயு 26:63.
அதற்குப் பிறகும், “அப்படியானால், நீ கடவுளுடைய மகனா?” என்று அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு இயேசு, “நான் அவர்தான் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்” என்கிறார். இயேசு தெய்வ நிந்தனை செய்தார் என்று சொல்லி கொலை செய்வதற்கு இந்த வார்த்தைகளே போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், “இனி நமக்கு வேறு சாட்சி எதற்கு?” என்று சொல்கிறார்கள். (லூக்கா 22:70, 71; மாற்கு 14:64) பிறகு, அவர்கள் இயேசுவைக் கட்டி, ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவிடம் கூட்டிக்கொண்டு போகிறார்கள்.
பிலாத்துவிடம் இயேசு கொண்டுபோகப்படுவதை ஒருவேளை யூதாஸ் இஸ்காரியோத்து பார்த்திருக்கலாம். இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட விஷயம் தெரிந்ததும், தான் செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறான், வேதனைப்படுகிறான். ஆனாலும், உண்மையாக மனம் திருந்தி, கடவுளிடம் மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, 30 வெள்ளிக் காசுகளைத் திருப்பிக் கொடுப்பதற்காகப் போகிறான். அவன் முதன்மை குருமார்களிடம், “எந்தத் தப்பும் செய்யாத ஒருவரை காட்டிக்கொடுத்துப் பாவம் செய்துவிட்டேன்” என்று சொல்கிறான். அதற்கு அவர்கள், “எங்களுக்கென்ன? அது உன் பாடு!” என்று ஈவிரக்கமில்லாமல் பதில் சொல்கிறார்கள்.—மத்தேயு 27:4.
யூதாஸ் அந்த 30 வெள்ளிக் காசுகளையும் ஆலயத்தில் வீசியெறிகிறான். ஏற்கெனவே செய்த பாவம் போதாதென்று, இப்போது தூக்குப் போட்டுக்கொண்டு சாகவும் முயற்சி செய்கிறான். அநேகமாக, அவன் தூக்குக் கயிற்றைக் கட்டியிருந்த மரத்தின் கிளை முறிந்துபோயிருக்கலாம். அதனால், கீழே இருக்கிற பாறைகளில் விழுந்து, உடல் சிதறி செத்துப்போகிறான்.—அப்போஸ்தலர் 1:17, 18.
விடியற்காலையில், பொந்தியு பிலாத்துவின் மாளிகைக்கு இயேசு கொண்டுபோகப்படுகிறார். அவரைக் கொண்டுபோன யூதர்கள் அந்த மாளிகைக்குள் நுழையவில்லை. வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களின் மாளிகைக்குப் போய்த் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அப்படித் தீட்டுப்பட்டால், புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின் முதல் நாளான நிசான் 15-ல் அவர்களால் சாப்பிட முடியாது. இந்தப் பண்டிகை, பஸ்கா பண்டிகையின் பாகமாகக் கருதப்பட்டது.
பிலாத்து வெளியே வந்து, “இந்த மனுஷன்மேல் நீங்கள் என்ன குற்றம் சுமத்துகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கிறார். அதற்கு அவர்கள், “இவன் ஒரு குற்றவாளி இல்லையென்றால், இவனை உங்களிடம் ஒப்படைத்திருக்கவே மாட்டோம்” என்று சொல்கிறார்கள். அவர்கள் தனக்கு நெருக்கடி கொடுப்பதாக பிலாத்து நினைத்திருக்கலாம். அதனால், “இவனை நீங்களே கொண்டுபோய் உங்கள் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள்” என்கிறார். அதற்கு யூதர்கள், “யாருக்கும் மரண தண்டனை விதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்று சொல்கிறார்கள். இயேசுவைச் சாகடிப்பதற்காகத்தான் பிலாத்துவிடம் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை இந்த வார்த்தைகள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.—யோவான் 18:29-31.
பஸ்கா பண்டிகை சமயத்தில், அவர்கள் இயேசுவைக் கொலை செய்தால் மக்கள் மத்தியில் கலவரம் வெடிக்கலாம். ரோம அரசாங்கத்துக்கு எதிராகக் குற்றம் செய்கிற ஆட்களுக்கு மரண தண்டனை கொடுக்க ரோமர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால், இயேசு ரோம அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லி, அவருக்கு மரண தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று யூதர்கள் நினைக்கிறார்கள். அப்படிச் செய்தால், தங்கள்மீது எந்தப் பழியும் வராது என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள்.
இயேசு தெய்வ நிந்தனை செய்தார் என்று இந்த மதத் தலைவர்கள் பிலாத்துவிடம் சொல்லவில்லை. அதற்குப்பதிலாக, ‘இந்த மனுஷன் [1] எங்களுடைய மக்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான், [2] ரோம அரசனுக்கு வரி கட்டக் கூடாது என்றும், [3] தான்தான் கிறிஸ்துவாகிய ராஜா என்றும் சொல்லிக்கொள்கிறான்’ என்று புதிய குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.—லூக்கா 23:2.
பிலாத்து ரோம அரசாங்கத்தின் பிரதிநிதி. அதனால், இயேசு தன்னை ஒரு ராஜா என்று சொல்லிக்கொள்வதாக யூதர்கள் சொன்னதும் அதைப் பற்றி விசாரிக்க நினைக்கிறார். அவர் தன்னுடைய மாளிகைக்குள் போய் இயேசுவைக் கூப்பிட்டு, “நீ யூதர்களுடைய ராஜாவா?” என்று கேட்கிறார். அதாவது, ‘ரோம அரசனுக்குப் போட்டியாக உன்னை ஒரு ராஜா என்று சொல்லிக்கொண்டு இந்தப் பேரரசின் சட்டத்தை மீறினாயா?’ என்று கேட்கிறார். பிலாத்து தன்னைப் பற்றி எந்தளவு கேள்விப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென இயேசு நினைத்திருக்கலாம். அதனால், “நீங்களே இதைக் கேட்கிறீர்களா, அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொன்னதை வைத்துக் கேட்கிறீர்களா?” என்று இயேசு கேட்கிறார்.—யோவான் 18:33, 34.
இயேசுவைப் பற்றி எந்த உண்மையும் பிலாத்துவுக்குத் தெரியாது. ஆனால், உண்மையைத் தெரிந்துகொள்ள பிலாத்து ஆசைப்படுகிறார். அதனால், “நான் ஒரு யூதனா என்ன?” என்று கேட்கிறார். பிறகு, “உன்னுடைய தேசத்தாரும் முதன்மை குருமார்களும்தான் உன்னை என்னிடம் ஒப்படைத்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்கிறார்.—யோவான் 18:35.
அப்போது, அரசாங்கத்தைப் பற்றி மழுப்பாமல் இயேசு தெளிவாகப் பதில் சொல்கிறார். அவர் பதில் சொல்கிற விதத்தைப் பார்த்து ஆளுநரான பிலாத்து ரொம்ப ஆச்சரியப்படுகிறார்.
-
-
இயேசு நிரபராதி என்று பிலாத்துவும் ஏரோதுவும் புரிந்துகொள்கிறார்கள்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 128
இயேசு நிரபராதி என்று பிலாத்துவும் ஏரோதுவும் புரிந்துகொள்கிறார்கள்
மத்தேயு 27:12-14, 18, 19 மாற்கு 15:2-5 லூக்கா 23:4-16 யோவான் 18:36-38
பிலாத்துவும் ஏரோதுவும் இயேசுவை விசாரிக்கிறார்கள்
தான் ஒரு ராஜா என்பதை பிலாத்துவிடமிருந்து இயேசு மறைக்கவில்லை. அதேசமயத்தில், அவருடைய அரசாங்கம் ரோம அரசாங்கத்துக்கு எதிரானது கிடையாது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல. என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள். ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று சொல்கிறார். (யோவான் 18:36) இயேசுவுக்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது. ஆனால், அது இந்த உலகத்தைச் சேர்ந்தது கிடையாது.
பிலாத்து அந்த விஷயத்தை அதோடு விடவில்லை. “அப்படியென்றால் நீ ஒரு ராஜாவா?” என்று கேட்கிறார். அவர் சரியான முடிவுக்குத்தான் வந்திருக்கிறார் என்பதை இயேசு அவருக்குத் தெரியப்படுத்துகிறார். இயேசு அவரிடம், “நான் ஒரு ராஜாவென்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்துக்கு வந்தேன். சத்தியத்தின் பக்கம் இருக்கிற ஒவ்வொருவனும் நான் சொல்வதைக் கேட்கிறான்” என்று சொல்கிறார்.—யோவான் 18:37.
இயேசு ஒருசமயம் தோமாவிடம், “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று சொல்லியிருந்தார். இப்போது, பிலாத்துவிடமும் “சத்தியத்தை” பற்றி சாட்சி கொடுக்கவே தான் வந்ததாகச் சொல்கிறார். அதுவும் தன்னுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுப்பதற்காகவே இந்தப் பூமிக்கு வந்ததாகச் சொல்கிறார். உயிரே போனாலும் அந்தச் சத்தியத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியோடு இருக்கிறார். பிலாத்து அவரிடம், “சத்தியமா? அது என்ன?” என்று கேட்கிறார். ஆனால் இயேசு பதில் சொல்லும்வரை அவர் காத்திருக்கவில்லை. தீர்ப்பு சொல்வதற்கு, இதுவரை கேட்ட விஷயங்களே போதும் என்று அவர் நினைக்கிறார்.—யோவான் 14:6; 18:38.
தன்னுடைய மாளிகைக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிற கூட்டத்தாரிடம் பிலாத்து வருகிறார். அப்போது, இயேசுவும் அவருக்குப் பக்கத்தில் இருந்திருக்கலாம். பிலாத்து முதன்மை குருமார்களையும் அவர்களோடு இருக்கிறவர்களையும் பார்த்து, “இந்த மனுஷன் எந்தக் குற்றமும் செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்கிறார். அதைக் கேட்டு அந்தக் கூட்டத்தார் கொதிக்கிறார்கள். “இவன் யூதேயா முழுவதிலும், கலிலேயா தொடங்கி இந்த இடம் வரையிலும், மக்களுக்குக் கற்பித்து, அவர்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான்” என்று அடித்துச் சொல்கிறார்கள்.—லூக்கா 23:4, 5.
காரணமே இல்லாமல், யூதர்கள் இப்படி வெறித்தனமாக நடந்துகொள்வதைப் பார்த்து பிலாத்து ஆச்சரியப்படுகிறார். முதன்மை குருமார்களும் பெரியோர்களும் கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பதைப் பார்த்து, “இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்கள், அதையெல்லாம் நீ கேட்கவில்லையா?” என்று இயேசுவிடம் கேட்கிறார். (மத்தேயு 27:13) இயேசு அமைதியாக இருக்கிறார். அந்தக் காட்டுக் கூச்சலுக்கு மத்தியில் இயேசு அமைதியாக இருப்பதைப் பார்த்து பிலாத்து அசந்துபோகிறார்.
இயேசு ‘கலிலேயாவில் கற்பிக்கத் தொடங்கியதாக’ யூதர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதைக் கேட்ட பிறகு, இயேசு ஒரு கலிலேயர்தானா என்பதை பிலாத்து விசாரித்து, உறுதிசெய்துகொள்கிறார். இயேசுவுக்குத் தீர்ப்பு கொடுக்காமல் தப்பித்துக்கொள்ள பிலாத்துவுக்கு இப்போது ஒரு யோசனை வருகிறது. ஏரோது அந்திப்பாதான் (மகா ஏரோதுவின் மகன்) கலிலேயாவை ஆட்சி செய்துவருகிறான். பஸ்கா சமயத்தில் அவனும் எருசலேமுக்கு வந்திருக்கிறான். அதனால், இயேசுவை ஏரோதுவிடம் பிலாத்து அனுப்புகிறார். இந்த ஏரோது அந்திப்பாதான் யோவான் ஸ்நானகரின் தலையை வெட்டியவன். பிற்பாடு, இயேசு அற்புதங்கள் செய்வதைக் கேள்விப்பட்டதும், யோவான்தான் உயிரோடு எழுந்துவிட்டாரோ என்று பயந்தவன்.—லூக்கா 9:7-9.
இயேசுவைப் பார்க்க ஏரோது ஆசையாகக் காத்திருக்கிறான். அவருக்கு உதவி செய்வதற்காகவோ, அவர் உண்மையிலேயே தவறு செய்தாரா என்று விசாரிப்பதற்காகவோ அவன் காத்திருக்கவில்லை. அவர் செய்கிற “அற்புதங்களில் ஒன்றைப் பார்க்க” அவன் ஆசைப்படுகிறான், அவ்வளவுதான்! (லூக்கா 23:8) ஆனால், இயேசு அவன் முன்னால் எந்த அற்புதமும் செய்யவில்லை. சொல்லப்போனால், ஏரோது கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. அவனுக்கு ஒரே ஏமாற்றமாக இருக்கிறது. அவனும் அவனுடைய படைவீரர்களும் இயேசுவை ‘அவமதிக்கிறார்கள்.’ (லூக்கா 23:11) அவருக்கு ஆடம்பரமான உடையை உடுத்தி, அவரைக் கேலி செய்கிறார்கள். பிறகு ஏரோது, பிலாத்துவிடம் அவரைத் திருப்பி அனுப்புகிறான். அதுவரை எதிரிகளாக இருந்த ஏரோதுவும் பிலாத்துவும் அன்றைக்கு நல்ல நண்பர்களாக ஆகிறார்கள்.
இயேசு திரும்பி வந்ததும், முதன்மை குருமார்களையும் யூதத் தலைவர்களையும் மக்களையும் பிலாத்து ஒன்றுகூட்டுகிறார். “இவனை உங்கள் முன்னால் விசாரித்தேன். ஆனால், இவனுக்கு எதிராக நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஏரோதுவுக்கும் தெரியவில்லை; அதனால்தான், அவரும் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பிவிட்டார். மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு எந்தக் குற்றத்தையும் இவன் செய்யவில்லை. அதனால், இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்கிறார்.—லூக்கா 23:14-16.
இயேசுவின் மேல் இருக்கிற பொறாமையால்தான் குருமார்கள் அவரைப் பிடித்து கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டதால், அவரை எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும் என்று பிலாத்து நினைக்கிறார். அதோடு, அவர் நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்திருக்கும்போது, அவருடைய மனைவி அவருக்கு ஆள் அனுப்பி, “அந்த நல்ல மனுஷனுடைய விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்; அவரைப் பற்றி இன்று நான் ஒரு கனவு கண்டு [அநேகமாக, அது கடவுளின் செயலாக இருக்கலாம்] ரொம்பவே கலங்கிப்போனேன்” என்று சொல்கிறாள். இதற்குப் பிறகு, இயேசுவை விடுதலை செய்ய அவர் இன்னும் மும்முரமாக முயற்சி செய்கிறார்.—மத்தேயு 27:19.
இந்த நிரபராதியை பிலாத்து விடுதலை செய்ய வேண்டும். ஆனால், அவர் எப்படி விடுதலை செய்வார்?
-
-
”இதோ! இந்த மனுஷன்!”இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 129
“இதோ! இந்த மனுஷன்!”
மத்தேயு 27:15-17, 20-30 மாற்கு 15:6-19 லூக்கா 23:18-25 யோவான் 18:39–19:5
இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து முயற்சி செய்கிறார்
பரபாசை விடுவிக்கும்படி யூதர்கள் கேட்கிறார்கள்
இயேசு கேலி செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்படுகிறார்
இயேசுவைக் கொல்லும்படி கூச்சல்போட்ட கூட்டத்தாரிடம், “இவனுக்கு எதிராக நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஏரோதுவுக்கும் தெரியவில்லை” என்று பிலாத்து சொல்லியிருந்தார். (லூக்கா 23:14, 15) இப்போது, இயேசுவைக் காப்பாற்ற அவர் வேறொரு விதத்தில் முயற்சி செய்கிறார். அவர் மக்களிடம், “பஸ்கா பண்டிகையின்போது உங்களுக்காக நான் ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் இருக்கிறதே. அதன்படி, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்கு விடுதலை செய்யட்டுமா?” என்று கேட்கிறார்.—யோவான் 18:39.
பரபாஸ் என்ற கைதி சிறையில் இருப்பது பிலாத்துவுக்குத் தெரியும். அவன் பேர்போன கொள்ளைக்காரன், கலகக்காரன், கொலைகாரன். அதனால் பிலாத்து அவர்களிடம், “நான் யாரை விடுதலை செய்ய வேண்டும், பரபாசையா அல்லது கிறிஸ்து என்று அழைக்கப்படும் இயேசுவையா?” என்று கேட்கிறார். முதன்மை குருமார்கள் மக்களை நன்றாகத் தூண்டிவிட்டிருப்பதால், பரபாசை விடுதலை செய்யும்படி மக்கள் சொல்கிறார்கள். பிலாத்து மறுபடியும், “இந்த இரண்டு பேரில் யாரை உங்களுக்காக விடுதலை செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார். “பரபாசை!” என்று அவர்கள் கத்துகிறார்கள்.—மத்தேயு 27:17, 21.
பிலாத்து நொந்துபோய், “அப்படியானால், கிறிஸ்து என்று அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார். மக்கள் எல்லாரும், “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று கத்துகிறார்கள். (மத்தேயு 27:22) கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல், ஒரு அப்பாவியைக் கொல்லும்படி அவர்கள் கேட்கிறார்கள். பிலாத்து அவர்களிடம், “ஏன்? இவன் என்ன குற்றம் செய்தான்?” என்று ஆதங்கத்தோடு கேட்கிறார். “மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு இவன் எந்தக் குற்றமும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. அதனால், இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—லூக்கா 23:22.
பிலாத்து இத்தனை தடவை கேட்டும்கூட, “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று ஆவேசமாகக் கத்துகிறார்கள். (மத்தேயு 27:23) மதத் தலைவர்கள் மக்களை நன்றாகத் தூண்டிவிட்டு, இப்படி வெறியாட்டம் போட வைத்திருக்கிறார்கள். இரத்தத்தைப் பார்க்கும்வரை அவர்கள் ஓயப்போவதில்லை. அவர்கள் கொல்லச் சொல்வது ஒரு குற்றவாளியையோ, கொலைகாரனையோ அல்ல, ஒரு நிரபராதியை! அதுவும், ஐந்து நாட்களுக்கு முன்னால் எருசலேமுக்குள் ராஜாவாக வரவேற்கப்பட்ட ஒருவரைத்தான் அவர்கள் கொல்லச் சொல்கிறார்கள். இயேசுவின் சீஷர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்திருந்தாலும், இருக்கிற இடம் தெரியாமல் அமைதியாகத்தான் நின்றிருப்பார்கள்.
அங்கே கலவரம் வெடிக்கிற சூழ்நிலை உருவாகிறது. இனி தான் என்ன சொன்னாலும், அவர்கள் கேட்கப்போவதில்லை என்று பிலாத்து புரிந்துகொள்கிறார். அதனால், கொஞ்சம் தண்ணீரை எடுத்து, அவர்கள் எல்லார் முன்பாகவும் தன் கைகளைக் கழுவி, “இந்த மனுஷனுடைய சாவுக்கு நான் பொறுப்பாளி கிடையாது. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். அதைப் பார்த்தும் அந்தக் கூட்டத்தார் அடங்கவில்லை. “இவனுடைய சாவுக்கு நாங்களும் எங்கள் பிள்ளைகளுமே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறோம்” என்று சொல்கிறார்கள்.—மத்தேயு 27:24, 25.
சரியானதைச் செய்வதைவிட மக்களைத் திருப்திப்படுத்தத்தான் ஆளுநர் ஆசைப்படுகிறார். அதனால், அவர்கள் கேட்டபடியே பரபாசை விடுதலை செய்கிறார். இயேசுவின் உடையைக் கழற்றி, அவரைச் சாட்டையால் அடிக்கும்படி படைவீரர்களுக்குக் கட்டளையிடுகிறார்.
படைவீரர்கள் இயேசுவை மிருகத்தனமாக அடித்து ஆளுநரின் மாளிகைக்குள் கொண்டுபோகிறார்கள். பிறகு, மற்ற படைவீரர்கள் எல்லாரும் கூடிவந்து, அவரை இன்னும் சித்திரவதை செய்கிறார்கள். முட்களால் ஒரு கிரீடத்தைச் செய்து அவருடைய தலையில் வைத்து அழுத்துகிறார்கள். அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, ராஜாக்கள் அணிகிற கருஞ்சிவப்பு நிற சால்வையைப் போர்த்திவிடுகிறார்கள். பிறகு, “யூதர்களுடைய ராஜாவே, வாழ்க!” என்று சொல்லிக் கேலி செய்கிறார்கள். (மத்தேயு 27:28, 29) இது போதாதென்று, அவர்மேல் துப்பி, அவருடைய கன்னத்தில் மாறி மாறி அறைகிறார்கள். அவர் கையில் இருக்கிற பலமான கோலை வாங்கி, அவருடைய தலையில் அடிக்கிறார்கள். அவரை அவமானப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட கிரீடம் அவருடைய தலையில் இன்னும் ஆழமாக இறங்குகிறது.
இத்தனை கொடுமைகளுக்கு நடுவிலும், இயேசு அமைதியாக, தைரியமாக இருப்பதைப் பார்த்து பிலாத்து அசந்துபோகிறார். இயேசுவின் சாவுக்குக் காரணமாகிவிடாமல் தப்பித்துக்கொள்ள அவர் இன்னொரு தடவை முயற்சி செய்கிறார். அவர் மக்களிடம், “அவனிடம் எந்தக் குற்றத்தையும் நான் பார்க்கவில்லை. இதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்று சொல்கிறார். உடல் முழுவதும் வெட்டுக்காயங்களோடு, இரத்தம் வடிய வடிய நிற்கிற இயேசுவைப் பார்த்தாலாவது அந்த மக்களின் மனம் மாறாதா என்று பிலாத்து நினைத்திருக்கலாம். ஈவிரக்கமற்ற அந்த கூட்டத்தின் முன்னால் இயேசுவை நிறுத்தி, “இதோ! இந்த மனுஷன்!” என்று சொல்கிறார்.—யோவான் 19:4, 5.
பிலாத்துவின் வார்த்தைகளில் மரியாதையும் பரிதாபமும் தெரிகிறது. ஏனென்றால், இத்தனை சித்திரவதைகளுக்கும் ரணங்களுக்கும் நடுவிலும் இயேசு அமைதியாக, தைரியமாக இருந்ததை அவர் கவனிக்கிறார்.
-
-
இயேசு கொல்லப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிறார்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 130
இயேசு கொல்லப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிறார்
மத்தேயு 27:31, 32 மாற்கு 15:20, 21 லூக்கா 23:24-31 யோவான் 19:6-17
இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து முயற்சி செய்கிறார்
இயேசு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படுகிறார்
இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்றுபோகின்றன. இயேசுவைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்து, கேலி செய்து, மக்கள் முன்னால் நிறுத்தியபோதும்கூட, முதன்மை குருமார்களும் அவர்களுடைய ஆட்களும் மனம் மாறவில்லை. இயேசுவை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதனால், “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்! மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று விடாமல் கத்துகிறார்கள். அப்போது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள், இவனிடம் எந்தக் குற்றத்தையும் நான் பார்க்கவில்லை” என்கிறார்.—யோவான் 19:6.
இயேசு ரோம அரசாங்கத்துக்கு எதிரானவர் என்று பிலாத்துவை நம்ப வைத்து, அவருக்கு மரண தண்டனை வாங்கிக்கொடுக்க யூதர்களால் முடியவில்லை. அதனால், மத சம்பந்தமான ஒரு குற்றச்சாட்டை இப்போது சொல்கிறார்கள். நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் இயேசுவை விசாரணை செய்தபோது, அவர் தெய்வ நிந்தனை செய்தார் என்று குற்றம்சாட்டியிருந்தார்கள். இப்போது அதே குற்றச்சாட்டை பிலாத்துவிடம் சொல்கிறார்கள். “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது, அந்தச் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனென்றால், இவன் தன்னைக் கடவுளுடைய மகன் என்று சொல்லிக்கொண்டான்” என்கிறார்கள். (யோவான் 19:7) இந்தக் குற்றச்சாட்டு பிலாத்துவுக்குப் புதிதாக இருக்கிறது!
பயங்கர சித்திரவதையை இயேசு அமைதியாகத் தாங்கிக்கொண்டதை பிலாத்து பார்த்திருந்தார். இயேசுவைப் பற்றி பிலாத்துவின் மனைவியும் கனவு கண்டிருந்தாள். அதனால், இயேசுவை விடுதலை செய்ய ஏதாவது வழி கிடைக்குமா என்று பார்க்க பிலாத்து தன்னுடைய மாளிகைக்குள் போகிறார். (மத்தேயு 27:19) இந்தக் கைதி “கடவுளுடைய மகன்” என்று யூதர்கள் குற்றம்சாட்டியதைக் கேட்டு பிலாத்து குழம்புகிறார். இயேசு கலிலேயாவைச் சேர்ந்தவர் என்று பிலாத்துவுக்குத் தெரியும். (லூக்கா 23:5-7) ஆனாலும், “நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?” என்று கேட்கிறார். (யோவான் 19:9) இயேசு இதற்கு முன்னால் பரலோகத்தில் வாழ்ந்திருப்பாரோ, அவர் கடவுளாக இருப்பாரோ என்றெல்லாம் பிலாத்து யோசித்திருக்கலாம்.
தான் ஒரு ராஜா என்றும், தன்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகம் அல்ல என்றும் பிலாத்துவிடம் இயேசு நேரடியாகவே சொல்லியிருந்தார். அதைப் பற்றி இன்னும் விளக்கமாகப் பேச இயேசு விரும்பாததால், பிலாத்துவுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இயேசு தன்னை அவமதிப்பதாக பிலாத்து நினைத்துக்கொள்கிறார். அதனால், “என்னிடம் பேச மாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, உன்னைக் கொல்லவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா?” என்று இயேசுவிடம் கோபமாகக் கேட்கிறார்.—யோவான் 19:10.
அப்போது இயேசு, “மேலே இருந்து உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றால் எனக்கு எதிராக எதையும் செய்ய உங்களுக்கு அதிகாரம் இருக்காது. இதனால்தான் என்னை உங்களிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவம் இருக்கிறது” என்று சொல்கிறார். (யோவான் 19:11) அநேகமாக, யாரோ ஒரு ஆளைப் பற்றி இயேசு இங்கே சொல்லியிருக்க மாட்டார். பிலாத்துவைவிட காய்பா, அவருடைய கூட்டாளிகள், யூதாஸ் இஸ்காரியோத்து ஆகியோருக்கு இந்தப் பாவத்தில் பெரும் பங்கு இருக்கிறது என்றுதான் சொல்லியிருப்பார்.
இயேசு நடந்துகொள்கிற விதமும் அவருடைய வார்த்தைகளும் பிலாத்துவை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இயேசு ஒரு கடவுளாக இருப்பாரோ என்ற பயம் அவருக்கு இன்னும் அதிகமாகிறது. அதனால், இயேசுவை விடுதலை செய்ய அவர் மறுபடியும் முயற்சி செய்கிறார். யூதர்களோ, “இவனை விடுதலை செய்தால் ரோம அரசனுக்கு நீங்கள் நண்பர் கிடையாது. தன்னை ராஜா என்று சொல்லிக்கொள்கிற எவனும் ரோம அரசனுக்கு விரோதி” என்று அவரை மிரட்டுகிறார்கள்.—யோவான் 19:12.
இயேசுவை ஆளுநர் மறுபடியும் வெளியே கொண்டுவருகிறார். நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்து, “இதோ! உங்கள் ராஜா!” என்று மக்களிடம் சொல்கிறார். ஆனாலும், யூதர்கள் மசியவில்லை. “இவனை ஒழித்துக்கட்டுங்கள்! ஒழித்துக்கட்டுங்கள்! மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று கோஷம் போடுகிறார்கள். பிலாத்து அவர்களிடம், “உங்கள் ராஜாவையா கொல்லச் சொல்கிறீர்கள்?” என்று ஆதங்கத்தோடு கேட்கிறார். யூதர்கள் பல காலமாக ரோம ஆட்சியின்கீழ் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாலும், “ரோம அரசனைத் தவிர வேறெந்த ராஜாவும் எங்களுக்கு இல்லை” என்று முதன்மை குருமார்கள் கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் சொல்கிறார்கள்.—யோவான் 19:14, 15.
யூதர்கள் விடாப்பிடியாக இருப்பதால், பிலாத்து கோழைத்தனமாக, இயேசுவைக் கொல்வதற்கு ஒத்துக்கொள்கிறார். இயேசு போட்டிருக்கிற கருஞ்சிவப்பு நிற சால்வையை எடுத்துவிட்டு, அவருடைய மேலங்கியை அவருக்குப் போட்டுவிடுகிறார்கள். அவருடைய மரக் கம்பத்தை அவரையே சுமக்க வைக்கிறார்கள்.
இப்போது நிசான் 14, வெள்ளிக்கிழமை மத்தியான நேரம். வியாழக்கிழமை விடியற்காலையிலிருந்து இப்போதுவரை இயேசு தூங்கவே இல்லை. பயங்கரமான சித்திரவதைகளை அடுத்தடுத்து அனுபவித்திருக்கிறார். அதனால், கனமான மரக் கம்பத்தைத் தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் திணறுகிறார். கடைசியில், அதைத் தூக்க அவருக்குக் கொஞ்சம்கூட சக்தியில்லாமல் போய்விடுகிறது. அதனால், படைவீரர்கள் சீமோன் என்பவரைக் கட்டாயப்படுத்தி இயேசுவின் மரக் கம்பத்தைச் சுமக்க வைக்கிறார்கள். அவர் ஆப்பிரிக்காவில் இருக்கிற சிரேனே ஊரைச் சேர்ந்தவர். இயேசுவுக்குப் பின்னால் நிறைய பேர் போகிறார்கள். அவர்களில் சிலர் துக்கத்தில் தங்களை அடித்துக்கொண்டு, அழுது புலம்பிக்கொண்டே போகிறார்கள்.
தன் பின்னால் அழுதுகொண்டு வருகிற பெண்களை இயேசு பார்த்து, “எருசலேம் மகள்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். ஏனென்றால், ‘கருத்தரிக்க முடியாத பெண்களும் பிள்ளை பெறாத பெண்களும் பாலூட்டாத பெண்களும் சந்தோஷமானவர்கள்!’ என்று சொல்லப்படும் நாட்கள் வரும். அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்!’ என்றும், குன்றுகளைப் பார்த்து, ‘எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!’ என்றும் சொல்வார்கள். மரம் பச்சையாக இருக்கும்போதே இப்படிச் செய்கிறார்கள் என்றால், மரம் பட்டுப்போன பின்பு என்ன நடக்கும்?” என்று சொல்கிறார்.—லூக்கா 23:28-31.
யூத தேசத்தைப் பற்றித்தான் அவர் இங்கே சொல்கிறார். இயேசுவும் அவர்மேல் விசுவாசம் வைத்திருக்கிற யூதர்கள் பலரும் அந்தத் தேசத்தில் இருப்பதால், இப்போது அந்தத் தேசம் ஓரளவு பச்சையாக இருக்கிற மரத்தைப் போல இருக்கிறது. இயேசு இறந்து, இந்தச் சீஷர்கள் ஒரு புதிய ஆன்மீக தேசத்தின் பாகமாக ஆகும்போது, இந்த யூத தேசம் ஆன்மீக ரீதியில் காய்ந்துபோய், பட்டுப்போன மரத்தைப் போல ஆகிவிடும். இந்தத் தேசத்துக்கு எதிராகக் கடவுள் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை ரோமப் படைவீரர்கள் நிறைவேற்றும்போது, மக்கள் கதறி அழுவார்கள்.
-
-
மரக் கம்பத்தில் ராஜா அறையப்படுகிறார்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 131
மரக் கம்பத்தில் ராஜா அறையப்படுகிறார்
மத்தேயு 27:33-44 மாற்கு 15:22-32 லூக்கா 23:32-43 யோவான் 19:17-24
சித்திரவதைக் கம்பத்தில் இயேசு அறையப்படுகிறார்
இயேசுவின் தலைக்கு மேல் வைக்கப்பட்ட வாசகத்தைப் பார்த்து கேலி செய்கிறார்கள்
பூஞ்சோலையில் வாழ்கிற நம்பிக்கையை இயேசு கொடுக்கிறார்
நகரத்திலிருந்து கொஞ்சத் தூரத்தில் இருக்கிற ஒரு இடத்துக்கு இயேசு கொண்டுபோகப்படுகிறார். அங்குதான் அவரும் இன்னும் இரண்டு கொள்ளைக்காரர்களும் கொல்லப்படுவார்கள். அந்த இடத்துக்கு கொல்கொதா, அதாவது மண்டையோடு, என்று பெயர். அந்த இடத்தை ஓரளவு “தூரத்திலிருந்து” பார்க்க முடியும்.—மாற்கு 15:40.
தண்டனை பெற்ற மூன்று பேரின் உடைகளும் கழற்றப்படுகின்றன. போதையூட்டும் வெள்ளைப்போளமும் கசப்புப் பொருளும் கலந்த திராட்சமது அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அநேகமாக, எருசலேம் பெண்கள் இதைத் தயாரித்திருக்கலாம். வலியைக் குறைக்கிற இந்தக் கலவையை மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்குக் கொடுக்க ரோமர்கள் அனுமதிக்கிறார்கள். இயேசு அதை ருசிபார்த்த பிறகு, அதைக் குடிக்க மறுக்கிறார். ஏன்? இந்த முக்கியமான சோதனையின் சமயத்தில், தன்னுடைய எல்லா உணர்வுகளும் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். சாகும்வரை சுயநினைவோடும், உண்மையோடும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
இயேசு மரக் கம்பத்தில் படுக்க வைக்கப்படுகிறார். (மாற்கு 15:25) படைவீரர்கள் அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணியடிக்கிறார்கள். அந்த ஆணிகள் அவருடைய சதையையும் தசைநார்களையும் கிழித்து, பயங்கர வலியை ஏற்படுத்துகின்றன. அந்த மரக் கம்பம் நேராக நிமிர்த்தி வைக்கப்படும்போது, இயேசுவின் உடல் பாரம் முழுவதும் அந்த ஆணிகளில் தொங்குகிறது. அப்போது, அவருடைய கைகளிலும் கால்களிலும் உள்ள காயங்கள் இன்னும் அதிகமாகக் கிழிகின்றன. இயேசு வலியில் துடிக்கிறார். ஆனாலும், படைவீரர்களை அவர் திட்டவில்லை. அதற்குப் பதிலாக, “தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை” என்று ஜெபம் செய்கிறார்.—லூக்கா 23:34.
குற்றவாளி செய்த தவறை ஒரு பலகையில் எழுதி மாட்டுவது ரோமர்களின் வழக்கம். இயேசு அறையப்பட்ட கம்பத்தின் மேல், “நாசரேத்தூர் இயேசு, யூதர்களுடைய ராஜா” என்ற வாசகம் வைக்கப்படுகிறது. இப்படி எழுதும்படி பிலாத்து கட்டளையிட்டிருந்தார். அது எபிரெயுவிலும் லத்தீனிலும் கிரேக்கிலும் எழுதப்பட்டிருக்கிறது. அதனால், கிட்டத்தட்ட எல்லாராலும் அதைப் படிக்க முடிகிறது. இயேசுவைக் கொல்லும்படி வற்புறுத்திய யூதர்கள்மேல் தனக்கு இருக்கிற வெறுப்பைக் காட்டுவதற்காக பிலாத்து இப்படிச் செய்கிறார். முதன்மை குருமார்கள் அதைப் பார்த்து எரிச்சலடைந்து, “‘யூதர்களுடைய ராஜா’ என்று எழுதாமல், ‘நான் யூதர்களுடைய ராஜா’ என்று அவன் சொல்லிக்கொண்டதாக எழுதுங்கள்” என்று பிலாத்துவிடம் சொல்கிறார்கள். இந்தத் தடவையும் அவர்கள் ஆட்டி வைக்கிற பொம்மையாக இருக்க பிலாத்து விரும்பவில்லை. அதனால், “நான் எழுதியது எழுதியதுதான்” என்று சொல்லிவிடுகிறார்.—யோவான் 19:19-22.
குருமார்களுக்குப் பயங்கர எரிச்சலாக இருக்கிறது. அதனால், நியாயசங்கத்தில் இயேசுவை விசாரணை செய்தபோது சொன்ன அதே பொய்யை இப்போதும் சொல்கிறார்கள். அதைக் கேட்டு, அந்த வழியாகப் போகிறவர்கள் கேலியாகத் தலையை ஆட்டி, “ஹா! ஆலயத்தைத் தரைமட்டமாக்கி மூன்று நாட்களில் கட்டப்போகிறவனே, இப்போது சித்திரவதைக் கம்பத்தைவிட்டு இறங்கி வந்து, உன்னை நீயே காப்பாற்றிக்கொள்” என்று பழிக்கிறார்கள். இதேபோல் வேத அறிஞர்களும் முதன்மை குருமார்களும், “இஸ்ரவேலின் ராஜாவான கிறிஸ்து இப்போது சித்திரவதைக் கம்பத்தைவிட்டு கீழே இறங்கி வருகிறானா பார்ப்போம், பிறகு அவனை நம்புவோம்” என்று சொல்லிக்கொள்கிறார்கள். (மாற்கு 15:29-32) அங்கே மரக் கம்பங்களில் ஏற்றப்பட்ட ஆட்களில் இயேசு ஒருவர்தான் நிரபராதி. ஆனாலும், அவருடைய இடது பக்கத்திலும் வலது பக்கத்திலும் ஏற்றப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரைப் பழிக்கிறார்கள்.
ரோமப் படைவீரர்கள் நான்கு பேரும்கூட இயேசுவை ஏளனம் செய்கிறார்கள். அவர்கள் ஒருவேளை புளிப்பான திராட்சமதுவைக் குடித்துக்கொண்டிருந்திருக்கலாம். இயேசுவைக் கேலி செய்வதற்காக அதை அவரிடம் நீட்டுகிறார்கள். மரக் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருக்கிற இயேசுவினால் அதை எப்படிக் கைநீட்டி வாங்க முடியும்? அவருடைய தலையின் மேல் வைக்கப்பட்டிருக்கிற வாசகத்தைச் சுட்டிக்காட்டி, “நீ யூதர்களுடைய ராஜாவாக இருந்தால், உன்னை நீயே காப்பாற்றிக்கொள்” என்று கிண்டலாகச் சொல்கிறார்கள். (லூக்கா 23:36, 37) கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! வழியாகவும், சத்தியமாகவும், வாழ்வாகவும் இருக்கிற மனிதர் இப்போது அநியாயமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு, கேலி செய்யப்படுகிறார். ஆனாலும், வேடிக்கை பார்க்கிற யூதர்களையோ, கேலி செய்கிற ரோம வீரர்களையோ, தன் பக்கத்தில் மரக் கம்பங்களில் தொங்குகிற குற்றவாளிகளையோ திட்டாமல், எல்லா கஷ்டங்களையும் இயேசு தைரியமாகத் தாங்கிக்கொள்கிறார்.
படைவீரர்கள் நான்கு பேர் இயேசுவின் மேலங்கிகளை நான்கு பாகங்களாக்கி, ஆளுக்கொரு பாகத்தை எடுத்துக்கொள்கிறார்கள். யாருக்கு எந்தப் பாகம் என்று பார்ப்பதற்காகக் குலுக்கல் போடுகிறார்கள். இயேசுவின் உள்ளங்கி உயர்தரமாக இருக்கிறது. அது ‘தையல் இல்லாமல் மேலிருந்து கீழ்வரை ஒரே துணியாக நெய்யப்பட்டிருக்கிறது.’ அதனால், “இதைக் கிழிக்க வேண்டாம்; இது யாருக்கு என்று குலுக்கல் போட்டுப் பார்க்கலாம்” என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். “என்னுடைய அங்கிகளைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள், என்னுடைய உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்” என்ற வேதவசனம் இப்படி நிறைவேறுகிறது.—யோவான் 19:23, 24; சங்கீதம் 22:18.
கொஞ்ச நேரத்தில், அந்தக் குற்றவாளிகளில் ஒருவன் இயேசு ஒரு ராஜாவாகத்தான் இருப்பார் என்பதைப் புரிந்துகொள்கிறான். அதனால் இன்னொரு குற்றவாளியை அதட்டி, “கடவுளுக்குப் பயப்பட மாட்டாயா? உனக்கும் இதே தீர்ப்புதானே கிடைத்திருக்கிறது? நாம் தண்டிக்கப்படுவது நியாயம். நம்முடைய செயல்களுக்கு ஏற்ற தண்டனைதான் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையே” என்கிறான். பிறகு இயேசுவிடம், “நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று கெஞ்சுகிறான்.—லூக்கா 23:40-42.
அதற்கு அவர், “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று சொல்கிறார். (லூக்கா 23:43) என்னோடு பரலோக அரசாங்கத்தில் இருப்பாய் என்று இயேசு சொல்லவில்லை, “பூஞ்சோலையில் இருப்பாய்” என்றுதான் சொல்கிறார். தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு இயேசு கொடுத்த வாக்குறுதிக்கும் இந்தக் குற்றவாளிக்கு அவர் கொடுத்த வாக்குறுதிக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால், தன்னுடைய அப்போஸ்தலர்கள் பரலோக அரசாங்கத்தில் தன்னோடு சிம்மாசனங்களில் உட்காருவார்கள் என்ற வாக்குறுதியை அவர் கொடுத்திருந்தார். (மத்தேயு 19:28; லூக்கா 22:29, 30) இந்தக் குற்றவாளி ஒரு யூதனாக இருப்பதால், ஆதாம்-ஏவாளும் அவர்களுடைய பிள்ளைகளும் வாழ்வதற்காக இந்தப் பூமியில் கடவுள் ஏற்படுத்திய பூஞ்சோலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பான். இப்போது ஒரு அருமையான நம்பிக்கையோடு, இந்தக் குற்றவாளி கண்மூடலாம்.
-
-
“நிச்சயமாகவே இந்த மனுஷர் கடவுளுடைய மகன்தான்”இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 132
“நிச்சயமாகவே இந்த மனுஷர் கடவுளுடைய மகன்தான்”
மத்தேயு 27:45-56 மாற்கு 15:33-41 லூக்கா 23:44-49 யோவான் 19:25-30
மரக் கம்பத்தில் இயேசு இறந்துபோகிறார்
இயேசு சாகும்போது அசாதாரணமான சம்பவங்கள் நடக்கின்றன
இப்போது ‘ஆறாம் மணிநேரம்,’ அதாவது மத்தியானம் 12 மணி. திடீரென்று, “பூமி முழுவதும்” அசாதாரணமான இருள் சூழ்கிறது. “ஒன்பதாம் மணிநேரம்வரை,” அதாவது, மத்தியானம் மூன்று மணிவரை இந்த இருள் தொடர்கிறது. (மாற்கு 15:33) அசாதாரணமான இந்த இருள், சூரிய கிரகணத்தால் ஏற்படவில்லை. ஏனென்றால், அமாவாசை நேரத்தில்தான் சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால், இது முழு நிலா வருகிற பஸ்கா சமயம். அதுமட்டுமல்ல, சூரிய கிரகணம் ஒரு சில நிமிஷங்கள்தான் இருக்கும். ஆனால், இந்த இருள் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கிறது. இதிலிருந்து, கடவுள்தான் இந்த இருளுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இயேசுவைக் கேலி செய்தவர்களுக்கு இந்தத் திடீர் இருளைப் பார்த்தபோது எப்படி இருந்திருக்கும்! இந்த நேரத்தில், இயேசுவின் அம்மா, சலோமே, மகதலேனா மரியாள், அப்போஸ்தலனான சின்ன யாக்கோபின் அம்மாவான மரியாள் ஆகியோர் சித்திரவதைக் கம்பத்துக்குப் பக்கத்தில் வருகிறார்கள்.
இயேசுவின் அம்மா “சித்திரவதைக் கம்பத்துக்கு பக்கத்தில்” துக்கத்தோடு நின்றுகொண்டிருக்கிறாள். அப்போஸ்தலன் யோவான் அவளோடு நிற்கிறார். தான் பாலூட்டி, சீராட்டி வளர்த்த மகன், மரண வேதனையோடு மரக் கம்பத்தில் தொங்குவதை மரியாள் பார்க்கிறாள். “நீண்ட வாள்” ஒன்று தன்னை ஊடுருவிப்போவது போல அவளுக்கு இருக்கிறது. (யோவான் 19:25; லூக்கா 2:35) வலியில் துடித்துக்கொண்டிருந்தாலும், தன் அம்மாவின் நலனைப் பற்றி இயேசு யோசிக்கிறார். அவர் ரொம்பச் சிரமத்தோடு யோவானின் பக்கமாகத் தலையசைத்து, தன் அம்மாவிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்!” என்று சொல்கிறார். பிறகு, மரியாளின் பக்கமாகத் தலையசைத்து, யோவானிடம், “இதோ! உன் அம்மா!” என்று சொல்கிறார்.—யோவான் 19:26, 27.
இயேசுவின் அம்மா இப்போது ஒரு விதவையாக இருக்கலாம். அதனால், தன் அம்மாவைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பைத் தன் அன்புக்குரிய அப்போஸ்தலரான யோவானிடம் இயேசு ஒப்படைக்கிறார். இயேசுவின் சகோதரர்கள், அதாவது மரியாளின் மற்ற ஆண் பிள்ளைகள், இன்னமும் இயேசுமேல் விசுவாசம் வைக்கவில்லை. அதனால், தன்னுடைய அம்மாவை உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் கவனித்துக்கொள்ள இயேசு ஏற்பாடு செய்கிறார். நாம் பின்பற்றுவதற்கு எவ்வளவு அருமையான முன்மாதிரி!
இருள் முடியப்போகிற நேரத்தில், “எனக்குத் தாகமாக இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார். இப்படிச் சொல்லி அவர் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார். (யோவான் 19:28; சங்கீதம் 22:15) தன்னுடைய உத்தமத்தை முழுவதுமாகச் சோதிப்பதற்காக, பரலோகத் தகப்பன் தனக்கு இதுவரை கொடுத்துவந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டது போல இயேசு உணருகிறார். அதனால், “ஏலி, ஏலி, லாமா சபக்தானி?” என்று சத்தமாகச் சொல்கிறார்; இது ஒருவேளை கலிலேயாவில் பேசப்பட்ட அரமேயிக் மொழியாக இருந்திருக்கலாம். “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?” என்பதுதான் இதன் அர்த்தம். பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிற சிலர் அவர் சொல்வதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், “இதோ! இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்று சொல்கிறார்கள். அப்போது ஒருவன் ஓடிப்போய், புளிப்பான திராட்சமதுவில் ஒரு கடற்பஞ்சை நனைத்து, அதை ஒரு கோலில் மாட்டி, குடிப்பதற்காக இயேசுவிடம் நீட்டுகிறான். ஆனால் மற்றவர்கள், “பொறுங்கள்! எலியா இவனைக் கீழே இறக்கிவிட வருகிறாரா பார்ப்போம்” என்று சொல்கிறார்கள்.—மாற்கு 15:34-36.
பிறகு இயேசு, “முடித்துவிட்டேன்!” என்று சத்தமாகச் சொல்கிறார். (யோவான் 19:30) அவருடைய அப்பா எதற்காக இந்தப் பூமிக்கு அவரை அனுப்பினாரோ அந்த வேலைகள் எல்லாவற்றையும் இயேசு முடித்துவிட்டார். கடைசியாக, “தகப்பனே, என் உயிரை உங்களுடைய கைகளில் ஒப்படைக்கிறேன்” என்று சொல்கிறார். (லூக்கா 23:46) யெகோவா மறுபடியும் தன்னை உயிரோடு எழுப்புவார் என்ற நம்பிக்கையோடு, தன் உயிரை அவர் கையில் ஒப்படைக்கிறார். கடவுள்மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடு, கிறிஸ்து தலைசாய்த்து இறந்துபோகிறார்.
உடனே, பயங்கர நிலநடுக்கம் ஏற்படுகிறது, பாறைகள் பிளக்கின்றன. அந்த நிலநடுக்கத்தில் எருசலேமுக்கு வெளியே இருந்த கல்லறைகள் திறந்துகொண்டு, சடலங்கள் வெளியே வீசப்படுகின்றன. சடலங்கள் வெளியே வந்து விழுந்து கிடப்பதைப் பார்க்கிற ஆட்கள், “பரிசுத்த நகரத்துக்குள்” போய் இந்த விஷயத்தைச் சொல்கிறார்கள்.—மத்தேயு 12:11; 27:51-53.
இயேசு இறந்தபோது, கடவுளுடைய ஆலயத்தில் இருக்கிற பரிசுத்த அறையையும் மகா பரிசுத்த அறையையும் பிரிக்கிற கனமான பெரிய திரைச்சீலை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிகிறது. அதிர வைக்கும் இந்தச் சம்பவம், தன் மகனைக் கொன்றவர்கள்மீது கடவுள் பயங்கர கோபமாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அதோடு, மகா பரிசுத்த அறையான பரலோகத்தில் நுழைய இப்போது வழி திறந்துவிட்டது என்பதையும் இந்தச் சம்பவம் காட்டுகிறது.—எபிரெயர் 9:2, 3; 10:19, 20.
நடக்கிற சம்பவங்களைப் பார்த்து மக்கள் ரொம்பப் பயந்துபோகிறார்கள். இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக வந்த படை அதிகாரி, “நிச்சயமாகவே இந்த மனுஷர் கடவுளுடைய மகன்தான்” என்று சொல்கிறார். (மாற்கு 15:39) அவர் கடவுளுடைய மகனா, இல்லையா என்பதைப் பற்றி பிலாத்து அவரிடம் விசாரணை செய்த சமயத்தில், இந்தப் படை அதிகாரி அங்கே இருந்திருக்கலாம். இப்போது, இயேசு ஒரு நீதிமான் என்பதையும் அவர் கடவுளுடைய மகன் என்பதையும் அவர் நம்புகிறார்.
இந்த அசாதாரணமான சம்பவங்களைப் பார்த்து அங்கிருக்கிற மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள். வெட்கத்தோடும் வேதனையோடும் தங்கள் “நெஞ்சில் அடித்துக்கொண்டு” வீடுகளுக்குத் திரும்பிப் போகிறார்கள். (லூக்கா 23:48) இயேசுவுடன் சில சமயம் பயணம் செய்த சிஷ்யைகளும் தூரத்தில் நின்று இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அற்புதமான சம்பவங்களைப் பார்த்து அவர்களும் மலைத்துப்போகிறார்கள்.
-
-
இயேசு அடக்கம் செய்யப்படுகிறார்இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
-
-
அதிகாரம் 133
இயேசு அடக்கம் செய்யப்படுகிறார்
மத்தேயு 27:57–28:2 மாற்கு 15:42–16:4 லூக்கா 23:50–24:3 யோவான் 19:31–20:1
இயேசுவின் உடல் மரக் கம்பத்திலிருந்து இறக்கப்படுகிறது
அடக்கம் செய்வதற்காக இயேசுவின் உடல் தயார் செய்யப்படுகிறது
கல்லறை காலியாக இருப்பதைப் பெண்கள் பார்க்கிறார்கள்
இப்போது நிசான் 14, வெள்ளிக்கிழமை மத்தியானம். சூரியன் மறைந்த பிறகு, ஓய்வுநாளான நிசான் 15 ஆரம்பமாகும். இயேசு இறந்துவிட்டார், ஆனால் அவர் பக்கத்தில் இருக்கிற மரக் கம்பங்களில் ஏற்றப்பட்ட கொள்ளைக்காரர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். இறந்தவரின் உடலை ‘ராத்திரி முழுவதும் மரக் கம்பத்திலேயே விட்டுவிடக் கூடாது, அந்த நாளிலேயே’ அதைப் புதைக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொல்கிறது.—உபாகமம் 21:22, 23.
அதோடு, வெள்ளிக்கிழமை ஆயத்த நாள் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், ஓய்வுநாள் ஆரம்பிப்பதற்கு முன்பு முடிக்க வேண்டிய சமையல் வேலைகளையும் மற்ற வேலைகளையும் மக்கள் அப்போது செய்வார்கள். சூரியன் மறைந்த பிறகு, இரட்டை ஓய்வுநாள், அதாவது பெரிய ஓய்வுநாள் ஆரம்பமாகும். (யோவான் 19:31) ஏழு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிற புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை நிசான் 15-ல் ஆரம்பிக்கிறது. அந்தப் பண்டிகையின் முதல் நாள் எப்போதுமே ஓய்வுநாளாக இருக்கும். (லேவியராகமம் 23:5, 6) இந்தச் சமயம் புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை, வழக்கமான ஓய்வுநாளில், அதாவது வாரத்தின் ஏழாம் நாளில், ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு ஓய்வுநாட்களும் ஒரே நாளில் வந்திருப்பதால், இது பெரிய ஓய்வுநாள் என்று சொல்லப்படுகிறது.
யூதர்கள் பிலாத்துவிடம் போய் இயேசுவையும் அவர் பக்கத்தில் இருக்கிற இரண்டு கொள்ளைக்காரர்களையும் சீக்கிரம் சாகடிக்கும்படி சொல்கிறார்கள். பொதுவாக, குற்றவாளிகளைச் சீக்கிரம் சாகடிப்பதற்கு அவர்களுடைய கால்களை உடைப்பார்கள். அதற்குப் பிறகு, மூச்சு விடுவதற்காக அந்தக் குற்றவாளிகளால் தங்களுடைய கால்களைப் பயன்படுத்தி உடலை நிமிர்த்த முடியாது. அதனால், படைவீரர்கள் வந்து இரண்டு கொள்ளைக்காரர்களின் கால்களையும் உடைக்கிறார்கள். ஆனால், இயேசு இறந்துவிட்டது போலத் தெரிகிறது. அதனால், அவருடைய கால்களை அவர்கள் உடைக்காமல் போய்விடுகிறார்கள். “அவருடைய எல்லா எலும்புகளையும் அவர் பாதுகாக்கிறார். அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படுவதில்லை” என்று சங்கீதம் 34:20-ல் சொல்லப்பட்ட வார்த்தைகள் நிறைவேறுகின்றன.
இயேசு உண்மையிலேயே இறந்துவிட்டாரா என்று உறுதி செய்துகொள்வதற்காக, படைவீரர்களில் ஒருவன் அவருடைய விலாவில், அவருடைய இதயம் இருக்கிற பக்கத்தில் குத்துகிறான். ‘உடனே இரத்தமும் தண்ணீரும் வெளியே வருகின்றன.’ (யோவான் 19:34) “அவர்கள், யாரைக் குத்தினார்களோ அவரைப் பார்ப்பார்கள்” என்ற வேதவசனம் அப்போது நிறைவேறுகிறது.—சகரியா 12:10.
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த “பணக்காரரும்” நியாயசங்கத்தின் மதிப்புக்குரிய உறுப்பினர்களில் ஒருவருமான யோசேப்பு அங்கே இருக்கிறார். (மத்தேயு 27:57) அவர் “நல்லவர்” என்றும், “நீதிமான்” என்றும் சொல்லப்படுகிறார். அவர் ‘கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் காத்திருந்தவர்.’ அவர் “இயேசுவின் சீஷர்களில் ஒருவர். ஆனால், யூதர்களுக்குப் பயந்து அதை வெளியே சொல்லாமல் இருந்தவர்.” நியாயசங்கம் இயேசுவுக்குக் கொடுத்த தீர்ப்பை அவர் ஆதரிக்கவில்லை. (லூக்கா 23:50; மாற்கு 15:43; யோவான் 19:38) யோசேப்பு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைக் கேட்கிறார். பிலாத்து உடனே சம்பந்தப்பட்ட படை அதிகாரியைக் கூப்பிட்டு விசாரிக்கிறார். இயேசு இறந்துவிட்டதை அவர் உறுதி செய்தவுடன், இயேசுவின் உடலை எடுத்துக்கொண்டு போக யோசேப்புக்கு பிலாத்து அனுமதி கொடுக்கிறார்.
இயேசுவின் உடலை மரக் கம்பத்திலிருந்து யோசேப்பு இறக்குகிறார். அவரை அடக்கம் செய்வதற்கு முன், தான் வாங்கிவந்த சுத்தமான, உயர்தரமான நாரிழைத் துணியால் அவருடைய உடலைச் சுற்றிக் கட்டுகிறார். “முதல் தடவை ஒரு ராத்திரி நேரத்தில் [இயேசுவை] சந்தித்திருந்த” நிக்கொதேமுவும் இயேசுவின் உடலைத் தயார்படுத்த உதவி செய்கிறார். (யோவான் 19:39) வெள்ளைப்போளமும் அகில் தூளும் கலந்த விலை உயர்ந்த நறுமணக் கலவையைக் கிட்டத்தட்ட நூறு ராத்தல் (33 கிலோ) கொண்டுவருகிறார். யூதர்கள் அடக்கம் செய்கிற முறைப்படி, இந்த நறுமணப் பொருள்கள் இயேசுவின் உடலைச் சுற்றிக் கட்டப்படுகின்றன.
அந்த இடத்துக்குப் பக்கத்தில், ஒரு பாறையில் வெட்டப்பட்ட ஒரு புதிய கல்லறை இருக்கிறது. அது யோசேப்புக்குச் சொந்தமானது. இதற்கு முன் யாருமே அதில் அடக்கம் செய்யப்படவில்லை. இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்த பிறகு, அதன் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைக்கிறார்கள். ஓய்வுநாள் ஆரம்பிப்பதற்கு முன்பு, இதையெல்லாம் அவசர அவசரமாகச் செய்கிறார்கள். இயேசுவின் உடலைத் தயார் செய்வதற்கு மகதலேனா மரியாளும் சின்ன யாக்கோபின் அம்மாவான மரியாளும் உதவி செய்திருக்கலாம். ஓய்வுநாள் முடிந்த பிறகு, இயேசுவின் உடலில் போடுவதற்கு, “நறுமணப் பொருள்களையும் வாசனை எண்ணெய்களையும் தயார் செய்வதற்காக” அவர்கள் வேகவேகமாக வீட்டுக்குத் திரும்பிப் போகிறார்கள்.—லூக்கா 23:56.
அடுத்த நாளான ஓய்வுநாளில், முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் போய், “அந்த மோசக்காரன் உயிரோடு இருந்தபோது, ‘மூன்று நாட்களுக்குப் பிறகு நான் உயிரோடு எழுப்பப்படுவேன்’ என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. அதனால், அவனுடைய சீஷர்கள் வந்து அவன் உடலைத் திருடிக்கொண்டு போய், ‘அவர் உயிரோடு எழுப்பப்பட்டார்!’ என்று மக்களிடம் சொல்லிவிடாதபடி, மூன்றாம் நாள்வரை கல்லறையைக் காவல் காப்பதற்குக் கட்டளையிடுங்கள்; இல்லையென்றால், முதலில் செய்த மோசடியைவிட இந்த மோசடி படுமோசமாக இருக்கும்” என்று சொல்கிறார்கள். அதற்கு பிலாத்து, “காவலர்களைக் கூட்டிக்கொண்டு போய், உங்களால் முடிந்தளவு காவல் காத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 27:63-65.
ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையிலேயே, மகதலேனா மரியாளும், யாக்கோபின் அம்மாவான மரியாளும், மற்ற பெண்களும் இயேசுவின் உடலில் போடுவதற்காக நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு கல்லறைக்குப் போகிறார்கள். “கல்லறை வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் உருட்டிப் போடுவார்கள்?” என்று அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். (மாற்கு 16:3) ஆனால், அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு, யெகோவாவின் தூதர் அந்தக் கல்லை உருட்டிப் போட்டிருந்தார். காவலர்கள் யாரும் அங்கே இல்லை, கல்லறையும் காலியாக இருக்கிறது!
-