உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இயேசு உயிரோடு இருக்கிறார்!
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • இயேசுவின் கல்லறை காலியாக இருப்பதைப் பார்த்து பெண்கள் அதிர்ச்சியடைகிறார்கள்

      அதிகாரம் 134

      இயேசு உயிரோடு இருக்கிறார்!

      மத்தேயு 28:3-15 மாற்கு 16:5-8 லூக்கா 24:4-12 யோவான் 20:2-18

      • இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார்

      • இயேசுவின் கல்லறையில் நடக்கிற சம்பவங்கள்

      • வெவ்வேறு பெண்களுக்கு முன் தோன்றுகிறார்

      கல்லறை காலியாக இருப்பதைப் பார்த்து அந்தப் பெண்கள் அதிர்ந்துபோகிறார்கள். உடனே, மகதலேனா மரியாள் ‘சீமோன் பேதுருவையும் இயேசுவின் பாசத்துக்குரிய சீஷரான’ யோவானையும் பார்க்க ஓடுகிறாள். (யோவான் 20:2) அந்தச் சமயத்தில், கல்லறையில் நிற்கிற மற்ற பெண்கள் ஒரு தேவதூதரைப் பார்க்கிறார்கள். ‘வெள்ளை அங்கி போட்டிருக்கிற’ இன்னொரு தேவதூதர் கல்லறைக்குள் இருக்கிறார்.—மாற்கு 16:5.

      அந்தத் தேவதூதர்களில் ஒருவர் அந்தப் பெண்களிடம், “பயப்படாதீர்கள், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவைத்தானே தேடுகிறீர்கள்? அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார். அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள். சீக்கிரமாக அவருடைய சீஷர்களிடம் போய், அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார் என்று சொல்லுங்கள். உங்களுக்கு முன்பே அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்” என்று சொல்கிறார். (மத்தேயு 28:5-7) அதைக் கேட்டதும், அந்தப் பெண்கள் “நடுக்கத்தோடும், அதேசமயத்தில் பிரமிப்போடும்” சீஷர்களிடம் இந்த விஷயத்தைச் சொல்வதற்காக ஓடுகிறார்கள்.—மாற்கு 16:8.

      இதற்குள், பேதுருவையும் யோவானையும் மரியாள் பார்த்துவிடுகிறாள். “நம் எஜமானை யாரோ கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று மூச்சுவாங்க சொல்கிறாள். (யோவான் 20:2) உடனே, பேதுருவும் யோவானும் கல்லறைக்கு ஓடுகிறார்கள். யோவான் வேகமாக ஓடி, முதல் ஆளாக கல்லறைக்குப் போய்விடுகிறார். ஆனால், அவர் வெளியிலேயே நின்றுகொள்கிறார். அவர் கல்லறைக்குள் எட்டிப் பார்க்கும்போது, கட்டுகள் மட்டும்தான் உள்ளே இருக்கின்றன.

      பேதுரு வந்ததும் நேராகக் கல்லறைக்குள் போகிறார். நாரிழைத் துணிகளையும் இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த துணியையும் அங்கே பார்க்கிறார். இப்போது, யோவானும் உள்ளே போகிறார். அதற்குப் பிறகு, மரியாள் சொன்னதை அவர் நம்புகிறார். இயேசு முன்பே சொல்லியிருந்தாலும், அவர் உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார் என்று அவர்கள் இரண்டு பேருமே புரிந்துகொள்ளவில்லை. (மத்தேயு 16:21) குழப்பத்தோடு, அவர்கள் வீட்டுக்குப் போகிறார்கள். கல்லறைக்குத் திரும்பி வந்த மரியாள் அங்கேயே இருக்கிறாள்.

      இதற்கிடையே, இயேசு உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார் என்று சீஷர்களிடம் சொல்வதற்காக மற்ற பெண்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வழியில் இயேசு அவர்களைச் சந்தித்து ‘வாழ்த்துகிறார்.’ உடனே, அவர்கள் அவர் முன்னால் ‘மண்டிபோடுகிறார்கள்.’ இயேசு அவர்களிடம், “பயப்படாதீர்கள்! நீங்கள் என் சகோதரர்களிடம் போய், அவர்களை கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 28:9, 10.

      அந்தப் பெண்கள் கல்லறைக்கு வருவதற்கு முன்பு, அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது, தேவதூதர்கள் தோன்றியிருந்தார்கள். அப்போது, கல்லறையைக் காவல்காத்த காவல்காரர்கள் “பயந்து நடுங்கி, செத்தவர்களைப் போல ஆனார்கள்.” அவர்கள் சுயநினைவுக்கு வந்த பிறகு, நகரத்துக்குள் போய் “நடந்த எல்லாவற்றையும் முதன்மை குருமார்களிடம் சொன்னார்கள்.” அந்தக் குருமார்கள் யூதர்களுடைய பெரியோர்களிடம் இதைப் பற்றிப் பேசி, காவல்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்து இந்த விஷயத்தை அப்படியே மூடிமறைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். “ராத்திரியில் நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவருடைய சீஷர்கள் வந்து அவருடைய உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்” என்று காவல்காரர்களிடம் சொல்லச் சொன்னார்கள்.—மத்தேயு 28:4, 11, 13.

      வேலை நேரத்தில் தூங்கினால், ரோம வீரர்களுக்கு மரண தண்டனைகூட கொடுக்கப்படலாம். அதனால், அந்தக் குருமார்கள், “இது [அவர்கள் தூங்கிவிட்டார்கள் என்ற பொய்யான தகவல்] ஆளுநருடைய காதுக்கு எட்டினால், நாங்கள் அவரிடம் பேசிக்கொள்கிறோம், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்” என்று வாக்குக் கொடுத்தார்கள். (மத்தேயு 28:14) காவல்காரர்களும் லஞ்சம் வாங்கிக்கொண்டு, குருமார்கள் சொன்னபடியே செய்கிறார்கள். அதனால், இயேசுவின் உடல் திருடப்பட்டது என்ற பொய்யான செய்தி யூதர்கள் மத்தியில் பரவுகிறது.

      மகதலேனா மரியாள் இன்னமும் அந்தக் கல்லறையில் அழுதுகொண்டு நிற்கிறாள். அந்தக் கல்லறைக்குள் அவள் எட்டிப் பார்க்கும்போது, வெள்ளை உடையில் இரண்டு தேவதூதர்கள் அங்கே இருக்கிறார்கள். இயேசுவின் உடல் வைக்கப்பட்ட இடத்தில், தலைமாட்டில் ஒருவரும் கால்மாட்டில் ஒருவரும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்கிறார்கள். அதற்கு மரியாள், “யாரோ என் எஜமானை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்கிறாள். அவள் இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பும்போது, இன்னொருவர் அங்கே நிற்பதைப் பார்க்கிறாள். தேவதூதர்கள் கேட்ட அதே கேள்வியை அவரும் கேட்கிறார். பிறகு, “யாரைத் தேடுகிறாய்?” என்றும் கேட்கிறார். அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து, “ஐயா, நீங்கள் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால், எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள், நான் போய் அவரை எடுத்துக்கொள்கிறேன்” என்று சொல்கிறாள்.—யோவான் 20:13-15.

      உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவிடம்தான் மரியாள் பேசிக்கொண்டிருக்கிறாள். ஆனால், அந்தச் சமயத்தில் அவரை அவள் அடையாளம் தெரிந்துகொள்ளவில்லை. அப்போது அவர், “மரியாளே!” என்று கூப்பிடுகிறார். அவர் கூப்பிட்ட விதத்தை வைத்தே, அவர் இயேசுதான் என்று மரியாள் புரிந்துகொள்கிறாள். உடனே சந்தோஷமாக, “ரபூனி!” (“போதகரே!” என்று அர்த்தம்) என்று சொல்கிறாள். ஆனாலும், இயேசு உடனே பரலோகத்துக்குப் போய்விடுவார் என்ற பயத்தில் அவரைப் பிடித்துக்கொள்கிறாள். அதனால் இயேசு அவளிடம், “என்னைப் பிடித்துக்கொண்டிருக்காதே. ஏனென்றால், நான் இன்னும் என் தகப்பனிடம் போகவில்லை. நீ என் சகோதரர்களிடம் போய், ‘நான் என் தகப்பனிடமும் உங்கள் தகப்பனிடமும் என் கடவுளிடமும் உங்கள் கடவுளிடமும் போகப்போகிறேன்’ என்று சொல்” என்கிறார்.—யோவான் 20:16, 17.

      அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் கூடியிருக்கிற இடத்துக்கு மரியாள் ஓடுகிறாள். அவர்களிடம், “நான் எஜமானைப் பார்த்தேன்!” என்று சொல்கிறாள். ஏற்கெனவே மற்ற பெண்கள் சொன்னதுபோல, இவளும் கல்லறையில் நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்கிறாள். (யோவான் 20:18) ஆனால், இந்த விஷயங்கள் ‘அவர்களுக்கு அபத்தமாகத் தோன்றுகிறது.’—லூக்கா 24:11.

      • கல்லறை காலியாக இருப்பதைப் பார்த்த பிறகு மகதலேனா மரியாள் என்ன செய்கிறாள், மற்ற பெண்களுக்கு என்ன நடக்கிறது?

      • கல்லறை காலியாக இருப்பதைப் பார்த்து பேதுருவும் யோவானும் என்ன செய்கிறார்கள்?

      • சீஷர்களைப் பார்க்க ஓடிக்கொண்டிருந்த பெண்கள், வழியில் யாரைப் பார்க்கிறார்கள்? மகதலேனா மரியாள் கல்லறைக்குத் திரும்பிப் போன பிறகு என்ன நடக்கிறது?

      • இந்தப் பெண்கள் சொன்ன விஷயங்களைக் கேட்டு சீஷர்கள் என்ன நினைக்கிறார்கள்?

  • உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு பலர் முன்னால் தோன்றுகிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
    • உயிரோடு எழுப்பப்பட்ட இயேசு, தோமா முன்னால் தோன்றுகிறார்

      அதிகாரம் 135

      உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு பலர் முன்னால் தோன்றுகிறார்

      லூக்கா 24:13-49 யோவான் 20:19-29

      • எம்மாவு கிராமத்துக்குப் போகிற வழியில் இயேசு தோன்றுகிறார்

      • வேதவசனங்களைத் தன்னுடைய சீஷர்களுக்குத் திரும்பத் திரும்ப விளக்குகிறார்

      • சந்தேகப்படுவதை தோமா நிறுத்துகிறார்

      நிசான் 16, ஞாயிற்றுக்கிழமை அன்று சீஷர்கள் எல்லாரும் ரொம்பச் சோர்வாக இருக்கிறார்கள். கல்லறை ஏன் காலியாக இருந்தது என்று அவர்களுக்குப் புரியவே இல்லை. (மத்தேயு 28:9, 10; லூக்கா 24:11) அதேநாளில், கிலெயோப்பாவும் இன்னொரு சீஷரும் எருசலேமிலிருந்து கிட்டத்தட்ட 11 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற எம்மாவு என்ற கிராமத்துக்குப் பயணம் செய்கிறார்கள்.

      நடந்த விஷயங்களைப் பேசிக்கொண்டே அவர்கள் போகிறார்கள். அப்போது ஒருவர் அவர்களோடு சேர்ந்து நடக்க ஆரம்பிக்கிறார். “நீங்கள் ஒருவருக்கொருவர் எதைப் பற்றி விவாதம் செய்துகொண்டே போகிறீர்கள்?” என்று அவர் கேட்கிறார். அப்போது கிலெயோப்பா, “நீங்கள் எருசலேமில் தனியாக வாழ்கிற அன்னியரா? கடந்த சில நாட்களாக இங்கு நடந்த விஷயங்களைப் பற்றித் தெரியாமல் இருக்கிறீர்களே!” என்று கேட்கிறார். அதற்கு அவர், “எந்த விஷயங்களை?” என்று கேட்கிறார்.—லூக்கா 24:17-19.

      அப்போது அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைப் பற்றிய விஷயங்களைத்தான் சொல்கிறோம். . . . அவர்தான் இஸ்ரவேலை விடுவிப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தோம்” என்கிறார்கள்.—லூக்கா 24:19-21.

      அன்று நடந்த சம்பவங்களை கிலெயோப்பாவும் அவருடன் வந்த சீஷரும் அந்தப் புதியவரிடம் சொல்கிறார்கள். இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்குப் போன பெண்கள், அது காலியாக இருப்பதைப் பார்த்ததையும், இயேசு உயிரோடு இருக்கிறார் என்று தேவதூதர்கள் அவர்களிடம் சொன்னதையும் அந்தப் புதியவரிடம் சொல்கிறார்கள். மற்றவர்கள் அந்தக் கல்லறைக்குப் போய் “அந்தப் பெண்கள் சொன்னபடியே இருந்ததைப் பார்த்தார்கள்” என்றும் சொல்கிறார்கள்.—லூக்கா 24:24.

      நடந்த விஷயங்களைப் புரிந்துகொள்ளாமல் அந்தச் சீஷர்கள் இரண்டு பேரும் பயங்கர குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சரியாக யோசிக்காததால், இயேசு உயிரோடு எழுந்துவிட்டார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. அந்தப் புதியவர் அவர்களிடம், “புத்தியில்லாதவர்களே, மந்த இதயம் உள்ளவர்களே, தீர்க்கதரிசிகள் சொன்ன விஷயங்களையெல்லாம் நம்பாமல் இருக்கிறீர்களே! கிறிஸ்து தன்னுடைய மகிமையைப் பெறுவதற்காக இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிப்பது அவசியமாக இருந்ததுதானே?” என்று அதிகாரத்தோடு கேட்கிறார். (லூக்கா 24:25, 26) பிறகு, கிறிஸ்துவைப் பற்றிய நிறைய வேதவசனங்களை அவர்களுக்கு விளக்கமாகச் சொல்கிறார்.

      கடைசியில், அவர்கள் மூன்று பேரும் எம்மாவு கிராமத்துக்குப் பக்கத்தில் வந்துசேர்கிறார்கள். அந்தச் சீஷர்கள் இரண்டு பேரும் அவரிடமிருந்து இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்கள், “எங்களோடு தங்கிவிடுங்கள்; பொழுது சாயப்போகிறது, சீக்கிரத்தில் இருட்டிவிடும்” என்று அவரை வருந்திக் கேட்கிறார்கள். அவரும் ஒத்துக்கொள்கிறார். அவர்களோடு சாப்பிட உட்கார்ந்தபோது, அவர் ஜெபம் செய்து, ரொட்டியைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார். அப்போது அவரை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். ஆனால் அவர் மறைந்துவிடுகிறார். (லூக்கா 24:29-31) இயேசு உயிரோடு இருக்கிறார் என்பதை இப்போது அவர்கள் நம்புகிறார்கள்!

      அந்தச் சீஷர்கள் இரண்டு பேரும், நடந்ததைப் பற்றி ஆச்சரியத்தோடு பேசிக்கொள்கிறார்கள். “வழியில் அவர் நம்மோடு பேசி, வேதவசனங்களை முழுமையாக விளக்கிக் காட்டியபோது, நம் இதயம் கொழுந்துவிட்டு எரிந்தது, இல்லையா?” என்று சொல்லிக்கொள்கிறார்கள். (லூக்கா 24:32) உடனே, வேகவேகமாக எருசலேமுக்குத் திரும்பிப் போகிறார்கள். அங்கே அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் கூடியிருப்பதைப் பார்க்கிறார்கள். கிலெயோப்பாவும் அவருடன் வந்த சீஷரும் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே, “எஜமான் நிஜமாகவே உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார்! சீமோனுக்குத் தோன்றினார்!” என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்கிறார்கள். (லூக்கா 24:34) பிறகு, இயேசு தங்களுக்குத் தோன்றியதைப் பற்றி அவர்களிடம் சொல்கிறார்கள். இயேசு உயிரோடு இருக்கிறார் என்பதற்கு இவர்களும் கண்கண்ட சாட்சிகள்!

      திடீரென்று, இயேசு அந்த அறையில் தோன்றுகிறார்! எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி! அவர்களால் தங்கள் கண்களையே நம்ப முடிவதில்லை. ஏனென்றால், யூதர்களுக்குப் பயந்து அவர்கள் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருக்கிறார்கள். ஆனாலும், இயேசு அவர்கள் நடுவில் நிற்கிறார். “உங்களுக்குச் சமாதானம்!” என்று அவர் அமைதியாகச் சொல்கிறார். ஆனால் அவர்கள் நடுநடுங்குகிறார்கள். இதற்கு முன்பு ஒரு தடவை பயந்தது போலவே இப்போதும், “ஒரு மாய உருவத்தைப் பார்ப்பதாக நினைத்து” பயப்படுகிறார்கள்.—லூக்கா 24:36, 37; மத்தேயு 14:25-27.

      தான் ஒரு மாய உருவமோ, அவர்களுடைய கற்பனையோ கிடையாது என்பதையும், தனக்கு ஒரு மாம்ச உடல் இருக்கிறது என்பதையும் அவர்களுக்கு நிரூபிக்க இயேசு நினைக்கிறார். அதனால், தன்னுடைய கைகளையும் கால்களையும் அவர்களிடம் காட்டி, “ஏன் கலங்குகிறீர்கள், உங்கள் இதயத்தில் ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? என் கைகளையும் பாதங்களையும் பாருங்கள். நான்தான், என்னைத் தொட்டுப் பாருங்கள். எனக்குச் சதையும் எலும்புகளும் இருக்கின்றன, மாய உருவத்துக்கு இவை இருக்காதே” என்று சொல்கிறார். (லூக்கா 24:36-39) அதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், சந்தோஷத்தில் துள்ளுகிறார்கள். ஆனால், இன்னமும் அவர்கள் மனதில் கொஞ்சம் சந்தேகம் ஒட்டியிருக்கிறது.

      அவர் உண்மையிலேயே ஒரு நபர்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, “உங்களிடம் சாப்பிட ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கிறார். அவர்கள் கொடுத்த சுட்ட மீன் துண்டை வாங்கி சாப்பிடுகிறார். பிறகு, “என்னைப் பற்றி மோசேயின் திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் எழுதப்பட்ட எல்லா விஷயங்களும் நிறைவேற வேண்டுமென்று நான் உங்களோடு இருந்தபோது [என்னுடைய மரணத்துக்கு முன்பு] சொன்னேனே” என்கிறார்.—லூக்கா 24:41-44.

      கிலெயோப்பாவுக்கும் அவருடைய நண்பருக்கும் வேதவசனங்களை விளக்கியதைப் போலவே, இப்போது அங்கே கூடியிருக்கிற எல்லாருக்கும் இயேசு விளக்குகிறார். “கிறிஸ்து பாடுகள் பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பார் என்றும், பாவ மன்னிப்பு பெறுவதற்காக மனம் திருந்தும்படி எருசலேம் தொடங்கி எல்லா தேசங்களிலும் அவருடைய பெயரில் பிரசங்கிக்கப்படும் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இவற்றைப் பற்றி நீங்கள் சாட்சி கொடுக்க வேண்டும்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—லூக்கா 24:46-48.

      ஏதோ ஒரு காரணத்தால் அப்போஸ்தலரான தோமா அங்கே இல்லை. அதற்கு அடுத்த நாட்களில் மற்றவர்கள் அவரிடம், “நாங்கள் எஜமானைப் பார்த்தோம்!” என்று சந்தோஷமாகச் சொல்கிறார்கள். அப்போது தோமா, “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட காயத்தை பார்த்து, அதில் என் விரலைவிட்டு, அவருடைய விலாவில் கை வைத்தால் தவிர நான் நம்ப மாட்டேன்” என்று சொல்கிறார்.—யோவான் 20:25.

      எட்டு நாட்களுக்குப் பிறகு, பூட்டப்பட்ட ஒரு வீட்டுக்குள் சீஷர்கள் கூடியிருக்கிறார்கள். இந்தச் சமயம், தோமாவும் அங்கே இருக்கிறார். இயேசு மாம்ச உடலில் அவர்கள் நடுவே வந்துநின்று, “உங்களுக்குச் சமாதானம்!” என்று சொல்கிறார். பின்பு தோமாவிடம், “உன் விரலால் என் கைகளைத் தொட்டுப் பார். உன் கையை என் விலாவில் வைத்துப் பார். சந்தேகப்படுவதை விட்டுவிட்டு நம்பிக்கை வை” என்று சொல்கிறார். உடனே தோமா, “என் எஜமானே, என் கடவுளே!” என்று ஆச்சரியத்தோடு சொல்கிறார். (யோவான் 20:26-28) யெகோவா தேவனின் பிரதிநிதியாக, தெய்வீகத்தன்மையுள்ள ஒருவராக இயேசு உயிரோடு இருக்கிறார் என்பதை தோமா இப்போது உறுதியாக நம்புகிறார்.

      அப்போது இயேசு, “என்னைப் பார்த்ததால்தான் நம்புகிறாயா? பார்க்காமலேயே நம்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 20:29.

      • எம்மாவு கிராமத்துக்குப் போய்க்கொண்டிருக்கிற சீஷர்கள் இரண்டு பேரிடம் புதியவர் ஒருவர் என்ன கேட்கிறார்?

      • சீஷர்களின் இதயம் ஏன் கொழுந்துவிட்டு எரிகிறது?

      • கிலெயோப்பாவும் அவருடைய நண்பரும் எருசலேமுக்குத் திரும்பிப் போனபோது, மற்றவர்கள் அவர்களிடம் என்ன சொல்கிறார்கள்? அதற்குப் பிறகு என்ன நடக்கிறது?

      • இயேசு உயிரோடு இருப்பதை தோமா எப்படி நம்புகிறார்?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்