எப்போதும் நல்ல விதத்தில் பேசுங்கள்
‘என் வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் . . . உங்களுக்குப் பிரியமாக இருக்கட்டும்.’—சங். 19:14, NW.
1, 2. பேச்சு திறமையை பைபிள் ஏன் நெருப்புக்கு ஒப்பிடுகிறது?
அக்டோபர் 1871-ல் அமெரிக்காவில் இருக்கும் விஸ்கான்ஸினில் உள்ள காடுகள் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தன. தீ வேகமாக பரவியதால் கிட்டத்தட்ட 200 கோடி மரங்கள் எரிந்து சாம்பலானது. 1,200-க்கும் அதிகமானவர்கள் இறந்துபோனார்கள். இதுவரை அமெரிக்காவில் நடந்த தீ விபத்தில் இத்தனை பேர் இறந்ததே இல்லை. அந்தக் காடு வழியாக போன ரயில் வண்டியிலிருந்து வந்த தீப்பொறியால் இந்த விபத்து நடந்திருக்கலாம். அது அவ்வளவு பெரிய காட்டையே அழித்துவிட்டது. “சிறிதளவு நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது, பாருங்கள்!” என்று யாக்கோபு சொன்ன வார்த்தைகளை இந்தச் சம்பவம் ஞாபகப்படுத்துகிறது. (யாக். 3:5) யாக்கோபு ஏன் இப்படிச் சொன்னார்?
2 நம் ‘நாவு நெருப்பு’ போல் இருக்கிறது என்று அவரே சொன்னார். (யாக். 3:6) “நாவு” என்பது நம் பேச்சு திறமையைக் குறிக்கிறது. நெருப்பு எப்படி ஒரு பொருளை அழித்துவிடுமோ அதேபோல் நாம் பேசும் விதத்தால் நிறையப் பிரச்சினைகள் வரலாம். ‘மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில்’ இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 18:21) ஆனால், மற்றவர்களைக் காயப்படுத்தும் விதத்தில் பேசிவிடுவோம் என்பதற்காக நாம் பேசாமல் இருக்க வேண்டுமா? இல்லை! நெருப்பு ரொம்ப ஆபத்தானது என்பதற்காக நாம் அதைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. அதை நாம் ரொம்ப கவனமாகப் பயன்படுத்துவோம். உதாரணத்துக்கு, உணவு சமைக்க... குளிர்காய... வெளிச்சத்துக்காக... நாம் நெருப்பைப் பயன்படுத்துகிறோம். அதேபோல், நாம் கவனமாகப் பேசினால் யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்போம், மற்றவர்களை உற்சாகப்படுத்துவோம்.—சங். 19:14.
3. என்ன மூன்று விஷயங்களை நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்?
3 நாம் என்ன யோசிக்கிறோம், எப்படி உணர்கிறோம் என்பதை வார்த்தையிலும் சைகையிலும் நம்மால் சொல்ல முடிகிறது. இந்தத் திறமையை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். மற்றவர்களை உற்சாகப்படுத்த இந்த அற்புதமான பரிசை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்? (யாக்கோபு 3:9, 10-ஐ வாசியுங்கள்.) அதற்கு நாம் எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
எப்போது பேச வேண்டும்?
4. நாம் எப்போதெல்லாம் அமைதியாக இருக்க வேண்டும்?
4 சிலநேரம் நாம் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு” என்று பைபிளும் சொல்கிறது. (பிர. 3:7) மற்றவர்கள் பேசும்போது நாம் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு மரியாதை காட்டுகிறோம் என்று அர்த்தம். (யோபு 6:24) மற்றவர்கள் தெரிந்துகொள்ள அவசியம் இல்லாத விஷயங்களை நாம் ரகசியமாக வைக்கும்போது விவேகமாக இருக்கிறோம் என்று அர்த்தம். (நீதி. 20:19) மற்றவர்கள் நம்மை கோபப்படுத்தும்போது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் ஞானமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.—1 பே. 3:10, 11.
5. பேச்சு திறமையைக் கொடுத்ததற்காக நாம் யெகோவாவுக்கு எப்படி நன்றியோடு இருக்கலாம்?
5 “பேச ஒரு காலமுண்டு” என்றும் பைபிள் சொல்கிறது. (பிர. 3:7) நண்பர் ஒருவர் நமக்கு ஒரு அழகான பரிசைக் கொடுத்தால் அதை நாம் நல்ல விதத்தில் பயன்படுத்துவோம். அப்படிச் செய்வதன் மூலம் அதைக் கொடுத்தவருக்கு நாம் நன்றியோடு இருப்போம். அதேபோல், யெகோவா நமக்கு பேச்சு திறமையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அதை நல்ல விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் அவருக்கு நன்றியோடு இருப்போம். எதற்கெல்லாம் அந்தத் திறமையைப் பயன்படுத்தலாம்? யெகோவாவைப் புகழ... மற்றவர்களை உற்சாகப்படுத்த... நம் உணர்ச்சிகளையும் தேவைகளையும் மற்றவர்களிடம் சொல்ல... அந்தத் திறமையைப் பயன்படுத்தலாம்.—சங். 51:15.
6. சரியான நேரத்தில் பேசுவது ஏன் முக்கியம்?
6 சரியான நேரத்தில் பேசுவது ரொம்ப முக்கியம். “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” என்று நீதிமொழிகள் 25:11 சொல்கிறது. உதாரணத்துக்கு, தங்கத்தில் செய்யப்பட்ட ஆப்பிள் பழங்கள் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும். அதுவும் அதை வெள்ளித்தட்டில் வைத்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கும்! அதேபோல், நாம் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோஜனமான விஷயங்களைச் சொல்ல நினைக்கலாம். அதைச் சரியான நேரத்தில் சொன்னால் அந்த நபருக்கு இன்னும் எவ்வளவு உதவியாக இருக்கும்! இதை நாம் எப்படிச் செய்யலாம்?
7, 8. ஜப்பானில் இருந்த சகோதரர்கள் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொண்டார்கள்?
7 ஒரு விஷயத்தைச் சரியான நேரத்தில் சொல்லவில்லை என்றால் அதை மற்றவர்களால் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. (நீதிமொழிகள் 15:23-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, மார்ச் 2011-ல் பூமியதிர்ச்சியும் சுனாமியும் கிழக்கு ஜப்பானில் இருந்த நிறைய இடங்களை நாசமாக்கியது. 15,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டார்கள். நிறைய சகோதரர்கள் அவர்களுடைய குடும்பத்தையும் நண்பர்களையும் இழந்தார்கள். இருந்தாலும், அவர்களைப் போலவே கஷ்டத்தில் இருந்த மற்றவர்களுக்கு பைபிளிலிருந்து ஆறுதல் சொல்ல விரும்பினார்கள். ஆனால், நிறையப் பேர் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்களுக்கு பைபிளைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. அதனால், உயிர்த்தெழுதலைப் பற்றி அந்த நேரத்தில் பேசுவதற்குப் பதிலாக நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றி பேசினார்கள்.
8 எப்போது பேச வேண்டும், எப்போது பேசக் கூடாது என்று இயேசு நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். (யோவா. 18:33-37; 19:8-11) அதோடு, சீடர்களுக்கு சில விஷயங்களைக் கற்றுக்கொடுக்க சரியான நேரம் வரும்வரை பொறுமையாக காத்துக்கொண்டிருந்தார். (யோவா. 16:12) ஜப்பானில் இருந்த சகோதரர்கள் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றினார்கள்; உயிர்த்தெழுதலைப் பற்றி மக்களிடம் சொல்வதற்கு சரியான நேரம் வரும்வரை காத்துக்கொண்டிருந்தார்கள். சுனாமி வந்து இரண்டரை வருஷங்களுக்குப் பிறகு, இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? என்ற துண்டுப்பிரதியை மக்களுக்கு கொடுத்தார்கள். நிறையப் பேர் அதை ஆர்வமாகப் படித்தார்கள்; அது அவர்களுக்கு ஆறுதலாகவும் இருந்தது. நாமும் ஊழியத்தில் சந்திக்கும் மக்களைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், அவர்களின் நம்பிக்கைகளுக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்ற மாதிரி சரியான நேரத்தில் பேச முடியும்.
9. வேறு எந்தச் சந்தர்ப்பங்களில் நாம் சரியான நேரம் பார்த்து பேச வேண்டும்?
9 வேறு சில சந்தர்ப்பங்களிலும் நாம் சரியான நேரம் பார்த்து பேசுவது நல்லது. உதாரணத்துக்கு, நம் மனதைக் காயப்படுத்தும் விதத்தில் யாராவது பேசினால், உடனே முட்டாள்தனமாக அவரிடம் எதையாவது சொல்வதற்குப் பதிலாக நாம் இப்படி யோசித்துப் பார்க்க வேண்டும்: ‘அவர் என்கிட்ட வேணும்னே அப்படி பேசுனாரா? ஏன் அப்படி பேசுனார்னு நான் அவர்கிட்ட கேட்டே ஆகணுமா?’ சிலநேரம் நாம் எதுவும் பேசாமல் இருந்துவிடுவதே நல்லது. ஆனால், அதைப் பற்றி நாம் பேச விரும்பினால், அவர்மீது இருக்கும் வருத்தமோ கோபமோ குறைந்த பிறகு பேசலாம். (நீதிமொழிகள் 15:28-ஐ வாசியுங்கள்.) இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள். நம் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு யெகோவாவைப் பற்றி சொல்ல நாம் ஆசைப்படலாம். ஆனால், நாம் அவரிடம் பொறுமையாக இருக்க வேண்டும்; அவரிடம் என்ன சொல்லலாம், எப்போது சொல்லலாம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
என்ன பேச வேண்டும்?
10. (அ) நாம் ஏன் கவனமாகப் பேச வேண்டும்? (ஆ) நாம் எப்படிப் பேசக் கூடாது?
10 நாம் பேசும் விஷயங்கள் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தவும் முடியும் கஷ்டப்படுத்தவும் முடியும். (நீதிமொழிகள் 12:18-ஐ வாசியுங்கள்.) சாத்தானுடைய உலகத்தில் இருக்கும் நிறையப் பேர் மற்றவர்களுடைய மனதை வேண்டுமென்றே காயப்படுத்துகிறார்கள். ‘பட்டயத்தைப்போல் கூர்மையான’ வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துகிறார்கள். (சங். 64:3, 4) இப்படிப் பேச அவர்கள் டிவியில் இருந்தும் திரைப்படங்களில் இருந்தும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் அப்படிப் பேசக் கூடாது. காமெடியாகப் பேசுவதை நிறையப் பேர் ரசிக்கலாம். ஆனால், மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை கேலி செய்து காமெடியடிக்க கூடாது. கிறிஸ்தவர்கள் “பழிப்பேச்சை” தவிர்க்க வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. அதோடு, “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்; கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுங்கள்” என்றும் சொல்கிறது.—எபே. 4:29, 31.
11. சரியான வார்த்தைகளைப் பேச எது நமக்கு உதவும்?
11 “இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என்று இயேசு சொன்னார். (மத். 12:34) அப்படியென்றால், நாம் பேசுவதை வைத்தே நம் மனதில் என்ன யோசிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நமக்கு மற்றவர்கள்மீது உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கிறது என்றால் நாம் அவர்களிடம் சரியான வார்த்தைகளைப் பேசுவோம். எப்போதும் நல்ல விஷயங்களை, உற்சாகப்படுத்தும் விஷயங்களை பேசுவோம்.
12. சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க நாம் வேறு என்ன செய்யலாம்?
12 மற்றவர்களிடம் சரியான வார்த்தைகளைப் பேச நாம் முயற்சி செய்ய வேண்டும். சாலொமோன் ராஜாவுக்கு அதிக ஞானம் இருந்தாலும் ‘இதமான வார்த்தைகளைக் கண்டுபிடித்து’ எழுத அவர் ‘கவனமாகக் கேட்டு ஆராய்ந்தார்.’ (பிர. 12:9, 10) “இதமான வார்த்தைகளை” எப்படித் தேடி கண்டுபிடிப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? அப்படியென்றால், பைபிளிலிருந்தும் அமைப்பு வெளியிடும் புத்தகங்களிலிருந்தும் அதைத் தெரிந்துகொள்ளுங்கள். தெரியாத வார்த்தைகளுடைய அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேச இயேசுவின் உதாரணத்தைப் படியுங்கள். எப்படி பேசுவது என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், சோர்ந்துபோய் இருப்பவர்களுக்கு ‘சமயத்திற்கேற்ற வார்த்தைகளை சொல்ல’ யெகோவா இயேசுவுக்கு சொல்லிக்கொடுத்தார். (ஏசா. 50:4) நாம் சொல்லும் வார்த்தைகள் கேட்பவர்களுக்கு எப்படியிருக்கும் என்றும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். (யாக். 1:19) அதற்கு நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: “இப்படி பேசுனா, நான் என்ன சொல்ல நினைக்கிறேன்னு அவங்க புரிஞ்சுக்குவாங்களா? நான் சொல்றதை கேட்டா அவங்களுக்கு எப்படி இருக்கும்?”
13. நாம் பேசும் வார்த்தைகள் தெளிவாக இருப்பது ஏன் முக்கியம்?
13 இஸ்ரவேலர்கள் ஒன்றுகூடி வருவதற்கு... கூடாரங்களுக்கு திரும்பிப் போவதற்கு... போருக்குத் தயாராவதற்கு... என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான எக்காள சத்தம் கொடுக்கப்பட்டது. ஒருவேளை எக்காள சத்தம் தெளிவாக இல்லையென்றால் என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்குப் புரிந்திருக்காது. இந்த எக்காள சத்தத்தை, நாம் பேசுகிற வார்த்தைகளுக்கு பைபிள் ஒப்பிடுகிறது. நாம் சொல்லும் வார்த்தைகள் தெளிவாக இல்லையென்றால் கேட்பவர்கள் குழம்பிப் போய்விடுவார்கள்; பொய்யைக்கூட உண்மையென்று நம்பிவிடுவார்கள். ஒரு விஷயத்தை நாம் தெளிவாகச் சொல்வது முக்கியம்தான், அதற்காக அதை கோபமாகவோ மரியாதை குறைவாகவோ சொல்லிவிடக் கூடாது.—1 கொரிந்தியர் 14:8, 9-ஐ வாசியுங்கள்.
14. மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் இயேசு பேசினார் என்பதற்கு உதாரணம் கொடுங்கள்.
14 மற்றவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் இயேசு பேசினார். மத்தேயு 5-7 அதிகாரங்களில் அவர் சொன்ன வார்த்தைகள் அதற்கு சிறந்த உதாரணம். புரியாத வார்த்தைகளையும் தேவையில்லாத வார்த்தைகளையும் சொல்லி மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்ப வேண்டுமென்று இயேசு நினைக்கவில்லை. அதேசமயத்தில், மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்திலும் அவர் பேசவில்லை. ரொம்ப முக்கியமான விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர் சொல்லிக்கொடுத்தார். உதாரணத்துக்கு, தினமும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று நினைத்து சீடர்கள் கவலைப்படாமல் இருக்க இயேசு பறவைகளைப் பற்றி சொன்னார். யெகோவா பறவைகளுக்கே தினமும் உணவு கொடுக்கிறார் என்றால் “அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா?” என்று சொன்னார். (மத். 6:26) இந்த உதாரணம் சீடர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தியிருக்கும். எளிமையான வார்த்தைகளை வைத்து சீடர்களுக்கு எவ்வளவு முக்கியமான விஷயத்தை இயேசு புரியவைத்தார்!
எப்படிப் பேச வேண்டும்?
15. நாம் ஏன் அன்பாகப் பேச வேண்டும்?
15 நாம் மற்றவர்களிடம் என்ன சொல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதை எப்படி சொல்கிறோம் என்பதும் முக்கியம். இயேசு ‘பேசிய மனங்கவரும் வார்த்தைகள்,’ அதாவது அன்பான, கனிவான வார்த்தைகள் மக்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. (லூக். 4:22) நாமும் அன்பாகப் பேசினால் மற்றவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்; நாம் சொல்வதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். (நீதி. 25:15) நாம் மற்றவர்களிடம் அன்பாகப் பேச வேண்டும் என்றால் அவர்களை மதிக்க வேண்டும், அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதைத்தான் இயேசுவும் செய்தார். உதாரணத்துக்கு, அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் எடுத்த முயற்சிகளை பார்த்தபோது ‘அவர்கள்மேல் மனதுருகினார்.’ அவர்களுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். (மாற். 6:34) சிலசமயம் மக்கள் அவரை அவமானப்படுத்தியபோது அவர் பதிலுக்கு அவர்களை அவமானப்படுத்தவில்லை.—1 பே. 2:23.
16, 17. (அ) குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பேசும்போது நாம் எப்படி இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றலாம்? (ஆரம்பப் படம்) (ஆ) அன்பாக, பாசமாக பேசுவது நல்லது என்பதற்கு உதாரணம் கொடுங்கள்.
16 குடும்பத்தில் இருப்பவர்கள்மீதும் நண்பர்கள்மீதும் நமக்கு அன்பும் பாசமும் இருப்பதால் அவர்களிடம் ரொம்ப உரிமையாக பேசலாம். மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிடலாம். சிலசமயம் அவர்களிடம் கோபமாகவும் பேசிவிடலாம். ஆனால், இயேசு அப்படி செய்யவில்லை அவருடைய நண்பர்களிடம்கூட ரொம்ப அன்பாகப் பேசினார். யார் பெரியவன் என்று சீடர்கள் சண்டைபோட்டபோது அவர்களை ரொம்ப அன்பாகத் திருத்தினார். ஒரு சின்ன குழந்தையின் உதாரணத்தை சொல்லி சீடர்களை யோசிக்க வைத்தார். (மாற். 9:33-37) மூப்பர்களும் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றி மற்றவர்களுக்கு அன்பாக ஆலோசனை கொடுக்க வேண்டும்.—கலா. 6:1.
17 நம்மை புண்படுத்தும் விதத்தில் பேசுகிறவரிடம்கூட நாம் அன்பாகப் பேசினால் நிறைய நன்மைகள் கிடைக்கும். (நீதி. 15:1) கணவன் இல்லாமல் மகனைத் தனியாக வளர்த்த ஒரு அம்மாவின் உதாரணத்தைப் பாருங்கள். அவருடைய மகன் யெகோவாவை வணங்குவதாக சொல்லிக்கொண்டு தவறான விஷயங்களையும் செய்துகொண்டிருந்தான். அந்த அம்மாவைப் பார்த்து பரிதாபப்பட்ட ஒரு சகோதரி அவரிடம், “உங்க பையனை ஒழுங்கா வளர்க்காம போயிட்டீங்க” என்று சொன்னார். அதற்கு அந்த அம்மா ஒரு நிமிடம் யோசித்துவிட்டு இப்படிச் சொன்னார்: “என் மகன் இப்போ சரியில்லதான். ஆனா, அவன் கொஞ்சம் கொஞ்சமா மாறுவான். நான் அவனை சரியா வளர்த்திருக்கேனா இல்லையானு அர்மகெதோன்னுக்கு அப்புறம்தான் தெரியும்.” இப்படி அன்பாக, பொறுமையாக பேசியதால் அந்த சகோதரியோடு அவரால் தொடர்ந்து நல்ல நண்பராக இருக்க முடிந்தது. அம்மா சொன்னதை எல்லாம் மகன் கேட்டுக்கொண்டு இருந்தான். தன்மீது அம்மாவுக்கு இருக்கும் நம்பிக்கையை புரிந்துகொண்டு தன்னை திருத்திக்கொண்டான். கெட்ட நண்பர்களோடு பழகுவதை நிறுத்தினான், ஞானஸ்நானம் எடுத்தான், பிறகு பெத்தேலில் சேவை செய்தான். சகோதர சகோதரிகள், குடும்பத்தில் இருப்பவர்கள், முன்பின் தெரியாதவர்கள் என்று யாரிடம் நாம் பேசினாலும் சரி, நம் “பேச்சு எப்போதும் இனிமையாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்.”—கொலோ. 4:6.
18. பேசும் விதத்தில் இயேசுவின் உதாரணத்தை எப்படிப் பின்பற்றலாம்?
18 நாம் என்ன யோசிக்கிறோம், எப்படி உணர்கிறோம் என்பதை மற்றவர்களிடம் நம்மால் சொல்ல முடிகிறது. இது யெகோவா நமக்குக் கொடுத்த அருமையான பரிசு. இயேசுவின் உதாரணத்தை நாம் பின்பற்றினால் சரியான நேரம் பார்த்து பேசுவோம், கவனமாகப் பேசுவோம், அன்பாகப் பேசுவோம். அப்படியென்றால், மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில்... யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில்... பேச நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்.