உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யெகோவா ‘மறைபொருளை வெளிப்படுத்துகிறவர்’
    காவற்கோபுரம்—2012 | ஜூன் 15
    • யெகோவா ‘மறைபொருளை வெளிப்படுத்துகிறவர்’

      ‘மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாய் இருக்கிறார்.’—தானி. 2:47.

      எப்படிப் பதிலளிப்பீர்கள்?

      எதிர்காலத்தைப் பற்றி என்ன விஷயங்களை யெகோவா வெளிப்படுத்தியிருக்கிறார்?

      மூர்க்க மிருகத்தின் முதல் ஆறு தலைகள் எதைக் குறிக்கின்றன?

      மூர்க்க மிருகத்துக்கும் நேபுகாத்நேச்சார் கண்ட சிலைக்கும் உள்ள பொருத்தம் என்ன?

      1, 2. யெகோவா எதை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், ஏன்?

      கடவுளுடைய அரசாங்கம் மனித ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமயத்தில் பூமியில் எந்த ராஜ்யங்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்? இந்தக் கேள்விக்கான பதிலை ‘மறைபொருளை வெளிப்படுத்துகிறவரான’ யெகோவா நமக்குச் சொல்கிறார். தீர்க்கதரிசி தானியேலும் அப்போஸ்தலன் யோவானும் எழுதிய புத்தகங்களிலிருந்து அந்த ராஜ்யங்களை அடையாளம் கண்டுகொள்ள அவர் நமக்கு உதவுகிறார்.

      2 ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து வரும் மிருகங்களை யெகோவா அவர்களுக்குத் தரிசனங்களில் காட்டினார். நேபுகாத்நேச்சார் கனவில் கண்ட மாபெரும் உலோகச் சிலையைப் பற்றிய விளக்கத்தையும் தானியேலுக்குத் தெரிவித்தார். நம்முடைய நன்மைக்காக பைபிளில் இந்தத் தரிசனங்கள் எழுதிவைக்கப்படும்படி செய்திருக்கிறார். (ரோ. 15:4) சீக்கிரத்தில் அவருடைய அரசாங்கம் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கிப் போடப்போகிறது என்பதில் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்காகவே அப்படிச் செய்திருக்கிறார்.—தானி. 2:44.

      3. பைபிளிலுள்ள தீர்க்கதரிசனங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முதலாவது நாம் எதைப் புரிந்துகொள்ள வேண்டும், ஏன்?

      3 தானியேல் புத்தகமும் வெளிப்படுத்துதல் புத்தகமும்... எட்டு ராஜாக்களை, அதாவது ராஜ்யங்களை, பற்றிச் சொல்கின்றன. அதோடு, அந்த ராஜ்யங்கள் எந்த வரிசையில் தோன்றும் என்பதைப் பற்றியும் சொல்கின்றன. என்றாலும், பைபிளில் உள்ள முதல் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே இந்தத் தீர்க்கதரிசனங்களை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். ஏன்? ஏனென்றால், அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில்தான் பைபிளின் முக்கியப் பொருளே அடங்கியிருக்கிறது. சொல்லப்போனால், பைபிளிலுள்ள எல்லா தீர்க்கதரிசனங்களும் அந்த முதல் தீர்க்கதரிசனத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன.

      சாத்தானின் சந்ததியும் மூர்க்க மிருகமும்

      4. ஸ்திரீயினுடைய சந்ததி யார், அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

      4 ஏதேனில் கலகம் தலைதூக்கிய உடனேயே யெகோவா ஒரு வாக்குறுதி அளித்தார். “ஸ்திரீ” ஒரு ‘வித்துவை,’ அதாவது ஒரு சந்ததியை, பிறப்பிப்பாள் எனச் சொன்னார்.a (ஆதியாகமம் 3:15-ஐ வாசியுங்கள்.) அந்தச் சந்ததி சர்ப்பத்தின், அதாவது சாத்தானின், தலையை நசுக்குவார். அந்தச் சந்ததி ஆபிரகாமின் வம்சத்திலிருந்து... இஸ்ரவேல் தேசத்திலிருந்து... யூதா கோத்திரத்திலிருந்து... தாவீது ராஜாவின் குடும்பத்திலிருந்து... வருவார் என்பதை யெகோவா பின்னர் வெளிப்படுத்தினார். (ஆதி. 22:15-18; 49:10; சங். 89:3, 4; லூக். 1:30-33) அந்தச் சந்ததியின் முக்கியப் பாகம்: கிறிஸ்து இயேசு. (கலா. 3:16) அதன் இரண்டாவது பாகம்: பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள். (கலா. 3:26-29) இயேசுவும் பரலோக நம்பிக்கையுள்ள இந்தக் கிறிஸ்தவர்களும் சேர்ந்து கடவுளுடைய அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள். சாத்தானை அழிக்க யெகோவா இந்த அரசாங்கத்தையே பயன்படுத்தப்போகிறார்.—லூக். 12:32; ரோ. 16:20.

      5, 6. (அ) வலிமைமிக்க எத்தனை ராஜ்யங்களைப் பற்றி தானியேலும் யோவானும் குறிப்பிட்டார்கள்? (ஆ) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள மூர்க்க மிருகத்தின் தலைகள் எதைக் குறிக்கின்றன?

      5 ஏதேன் தோட்டத்தில் சொல்லப்பட்ட முதல் தீர்க்கதரிசனத்தில், சாத்தானுடைய ‘சந்ததியை’ பற்றியும் யெகோவா குறிப்பிட்டார். அவனுடைய சந்ததி, ஸ்திரீயினுடைய சந்ததியிடம் பகைமை பாராட்டும், வெறுப்பைக் கக்கும் என்று சொன்னார். அப்படியென்றால், சாத்தானின் அந்தச் சந்ததி யார்? அவனைப் போலவே கடவுளைப் பகைக்கிற... அவருடைய மக்களை எதிர்க்கிற... எல்லாருமே அவனுடைய சந்ததிதான். சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டினால், சாத்தான் தனது சந்ததியைப் பல்வேறு அரசியல் அமைப்புகளாக, அதாவது ராஜ்யங்களாக, ஒழுங்கமைத்திருப்பது தெரியும். (லூக். 4:5, 6) என்றாலும், அவற்றில் ஒருசில ராஜ்யங்கள் மட்டுமே கடவுளுடைய மக்களை—அவர்கள் பூர்வ இஸ்ரவேல் தேசத்தாராக இருந்தாலும் சரி பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி—நேரடியாகத் தாக்கியிருக்கின்றன. இதைத் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? தானியேலும் யோவானும் கண்ட தரிசனங்கள், வலிமைமிக்க எட்டு ராஜ்யங்களைப் பற்றி மட்டுமே ஏன் குறிப்பிட்டன என்பதை அப்போதுதான் புரிந்துகொள்ள முடியும்.

      6 கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு சிலிர்க்க வைக்கும் பல தரிசனங்களை அப்போஸ்தலன் யோவானுக்குத் தந்தார். (வெளி. 1:1) அந்தத் தரிசனங்கள் ஒன்றில், கடற்கரை மணலில் ஒரு ராட்சதப் பாம்பு நிற்பதை யோவான் பார்த்தார். அந்தப் பாம்பு பிசாசைக் குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 13:1, 2-ஐ வாசியுங்கள்.) அதோடு, விசித்திரமான ஒரு மூர்க்க மிருகம் கடலிலிருந்து ஏறி வந்து, பிசாசிடமிருந்து மிகுந்த அதிகாரத்தைப் பெறுவதை அவர் பார்த்தார். பின்னர், கருஞ்சிவப்பு நிறமுள்ள இன்னொரு மிருகத்தை யோவான் பார்த்தார், அதற்கும் ஏழு தலைகள் இருந்தன. வெளிப்படுத்துதல் 13:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள மிருகத்திற்கு ஒப்பான ஓர் உருவத்தை அது பெற்றிருந்தது. அதன் ஏழு தலைகள் “ஏழு ராஜாக்களை,” அதாவது ராஜ்யங்களை, குறிப்பதாக ஒரு தேவதூதன் பின்னர் யோவானுக்குத் தெரிவித்தார். (வெளி. 13:14, 15; 17:3, 9, 10) வெளிப்படுத்துதல் புத்தகத்தை யோவான் எழுதிய சமயத்தில், ஐந்து ராஜ்யங்கள் ஏற்கெனவே உலக அரங்கில் ஆட்சி செய்துவிட்டுப் போயிருந்தன, ஒன்று அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்தது, மற்றொன்று “இன்னும் வரவில்லை.” அந்த ராஜ்யங்கள், அதாவது உலக வல்லரசுகள் யாவை? இப்போது நாம், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூர்க்க மிருகத்தின் ஒவ்வொரு தலையையும் பற்றிப் பார்ப்போம். அதோடு, இந்த ராஜ்யங்கள் பலவற்றைக் குறித்து... அதிலும், ஒருசில ராஜ்யங்கள் தோன்றுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவற்றைக் குறித்து... தானியேல் சொல்லியிருந்த நுணுக்கமான விவரங்களைப் பற்றியும் பின்வரும் பத்திகளில் பார்ப்போம்.

      எகிப்து, அசீரியா—முதல் இரண்டு தலைகள்

      7. முதல் தலை எதைக் குறிக்கிறது, ஏன்?

      7 மூர்க்க மிருகத்தின் முதலாம் தலை எகிப்தைக் குறிக்கிறது. ஏன்? ஏனென்றால், கடவுளுடைய மக்களிடம் பகைமை பாராட்டிய முதல் வல்லரசு எகிப்துதான். ஸ்திரீயின் சந்ததி ஆபிரகாமின் வம்சத்தில் வருவாரென யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். ஆபிரகாமின் வம்சத்தார் எகிப்தில் எக்கச்சக்கமாகப் பெருகியபோது எகிப்தியர் அவர்களை அடக்கி ஒடுக்க ஆரம்பித்தார்கள். வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி வருவதற்கு முன்னரே கடவுளுடைய மக்களைப் பூண்டோடு அழிக்க சாத்தான் சதி செய்தான். எப்படி? இஸ்ரவேலில் பிறந்த எல்லா ஆண் பிள்ளைகளையும் அழிப்பதற்கு பார்வோனைத் தூண்டிவிட்டான். ஆனால், யெகோவா அவனுடைய திட்டத்தைத் தவிடுபொடியாக்கினார், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தம் மக்களை விடுதலை செய்தார். (யாத். 1:15-20; 14:13) பின்னர், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் இஸ்ரவேலரைக் குடியேற்றினார்.

      8. இரண்டாம் தலை எதைக் குறிக்கிறது, அது என்ன செய்ய முயற்சி செய்தது?

      8 மூர்க்க மிருகத்தின் இரண்டாம் தலை அசீரியாவைக் குறிக்கிறது. பலம்படைத்த இந்த ராஜ்யமும் கடவுளுடைய மக்களைத் துடைத்தழிக்க முயற்சி செய்தது. பத்துக் கோத்திர ராஜ்யத்தில் இருந்தவர்கள் சிலை வழிபாட்டில் ஈடுபட்டு, யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது அவர்களைத் தண்டிப்பதற்கு அவர் அசீரியாவைப் பயன்படுத்தினார் என்பது உண்மைதான். ஆனால், அந்த அசீரியர்கள் பின்பு எருசலேமையும் அழிக்க முயற்சி செய்தார்கள். இயேசு ராஜவம்சத்தில் பிறக்கவிருந்ததால் எருசலேமிலிருந்த ராஜ குடும்பத்தை அழிக்க சாத்தான் ஒருவேளை திட்டம் தீட்டியிருக்கலாம். எருசலேமை அழிப்பது யெகோவாவின் நோக்கமாக இருக்கவில்லை. எனவே, படையெடுத்து வந்த அசீரியர்களை அழித்து தம்முடைய மக்களை அவர் அற்புதமாய்க் காப்பாற்றினார்.—2 இரா. 19:32-35; ஏசா. 10:5, 6, 12-15.

      பாபிலோன்—மூன்றாம் தலை

      9, 10. (அ) பாபிலோனியர் என்ன செய்ய யெகோவா அனுமதித்தார்? (ஆ) தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கு என்னவெல்லாம் நடக்க வேண்டியிருந்தன?

      9 யோவான் பார்த்த மூர்க்க மிருகத்தின் மூன்றாம் தலை பாபிலோனைத் தலைநகரமாகக் கொண்ட ஒரு சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. எருசலேமை அழிக்கவும் தமது மக்களைச் சிறைபிடித்துச் செல்லவும் பாபிலோனியர்களை யெகோவா அனுமதித்தார். ஆனால், இப்படி நடக்குமென்று கீழ்ப்படியாத தமது மக்களிடம் முன்னரே அவர் தெரிவித்திருந்தார். (2 இரா. 20:16-18) எருசலேமில் அவருடைய ‘சிங்காசனத்திலிருந்து’ ஆட்சி செய்ய ராஜாக்களே இல்லாதபடி செய்யப்போவதாகவும் சொல்லியிருந்தார். (1 நா. 29:23) என்றாலும், மீண்டும் அந்தச் சிங்காசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வதற்கான “உரிமை” உடையவர் தாவீது ராஜாவின் வம்சத்தில் வருவார் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.—எசே. 21:25-27.

      10 வாக்குப்பண்ணப்பட்ட மேசியா, அதாவது அபிஷேகம் பண்ணப்பட்டவர், வரும் சமயத்திலும் யூதர்கள் எருசலேமிலுள்ள ஆலயத்தில் யெகோவாவை வழிபட்டுக்கொண்டிருப்பார்கள் என்று மற்றொரு தீர்க்கதரிசனம் குறிப்பிட்டது. (தானி. 9:24-27) இஸ்ரவேலர் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சொல்லப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தில் மேசியா பெத்லகேமில் பிறப்பார் என்று சொல்லப்பட்டது. (மீ. 5:2) இந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற வேண்டுமென்றால்... சிறையிருப்பிலிருந்து யூதர்கள் விடுவிக்கப்பட வேண்டும், அவர்கள் தாயகம் திரும்ப வேண்டும், ஆலயம் திரும்பக் கட்டப்பட வேண்டும். ஆனால்... சிறைபிடித்துச் சென்றவர்களை விடுவிப்பது என்பது பாபிலோனியர்களின் அகராதியிலேயே இல்லை. அப்படியென்றால், கடவுளுடைய மக்கள் எப்படித் தாயகம் திரும்புவார்கள்? யெகோவா தமது தீர்க்கதரிசிகளின் மூலம் அதற்குப் பதிலளித்தார்.—ஆமோ. 3:7.

      11. எந்தெந்த விதங்களில் பாபிலோனியப் பேரரசு சித்தரிக்கப்படுகிறது? (அடிக்குறிப்பைக் காண்க.)

      11 பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்களில் தானியேல் தீர்க்கதரிசியும் இருந்தார். (தானி. 1:1-6) பாபிலோனுக்குப் பிறகு அடுத்தடுத்து வரவிருந்த உலக வல்லரசுகளைப் பல்வேறு அடையாளங்கள் மூலம் தானியேலுக்கு யெகோவா வெளிப்படுத்தினார். உதாரணத்திற்கு ஒரு கனவில், வெவ்வேறு உலோகத்தாலான பிரமாண்டமான ஒரு சிலையை பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்குக் காட்டினார். (தானியேல் 2:1, 19, 31-38-ஐ வாசியுங்கள்.) அந்தச் சிலையின் பொன்னாலான தலை பாபிலோனியப் பேரரசைக் குறிப்பதாக தானியேல் மூலம் யெகோவா வெளிப்படுத்தினார்.b வெள்ளியாலான மார்பும் புயங்களும், பாபிலோனுக்குப் பின்வந்த உலக வல்லரசைக் குறிக்கிறது. அது எந்த வல்லரசு, அது கடவுளுடைய மக்களை எப்படி நடத்தியது?

      மேதிய-பெர்சியா—நான்காம் தலை

      12, 13. (அ) பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றி யெகோவா என்ன வெளிப்படுத்தியிருந்தார்? (ஆ) மூர்க்க மிருகத்தின் நான்காம் தலையாக மேதிய-பெர்சியா சித்தரிக்கப்பட்டிருப்பது ஏன் மிகப் பொருத்தமாய் இருக்கிறது?

      12 தானியேல் பிறப்பதற்கு நூற்றுக்கும் அதிக வருடங்களுக்கு முன்பு... பாபிலோனை வீழ்த்தவிருந்த உலக வல்லரசைப் பற்றிச் சில நுணுக்கமான தகவல்களை ஏசாயா தீர்க்கதரிசிக்கு யெகோவா வெளிப்படுத்தினார். பாபிலோன் நகரம் எப்படிக் கைப்பற்றப்படும் என்பதையும், அதைக் கைப்பற்றவிருந்த ராஜாவின் பெயரையும் யெகோவா வெளிப்படுத்தினார். அவருடைய பெயர் கோரேசு, அவர் பெர்சிய நாட்டவர். (ஏசா. 44:28–45:2) மேதிய-பெர்சிய உலக வல்லரசைக் குறித்து இன்னும் இரண்டு தரிசனங்களையும் தானியேல் கண்டார். முதலாம் தரிசனத்தில்... இந்த ராஜ்யம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நின்ற ஒரு கரடியாகச் சித்தரிக்கப்பட்டது. அதனிடம், “ஏராளமான இறைச்சியை விழுங்கு” என்று சொல்லப்பட்டது. (தானி. 7:5, பொது மொழிபெயர்ப்பு) இரண்டாம் தரிசனத்தில்... இந்த இரட்டை உலக வல்லரசு இரண்டு கொம்புகளுள்ள ஓர் ஆட்டுக்கடாவாகச் சித்தரிக்கப்பட்டது.—தானி. 8:3, 20.

      13 பாபிலோனிய வல்லரசு கவிழ்க்கப்படும்... இஸ்ரவேலர் மீண்டும் தாயகம் திரும்புவார்கள்... என்ற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற மேதிய-பெர்சியா வல்லரசை யெகோவா பயன்படுத்தினார். (2 நா. 36:22, 23) ஆனால், இந்த வல்லரசு பின்னர் கடவுளுடைய மக்களை முற்றிலும் அழித்துப்போடும் அளவுக்குச் சென்றது. பெர்சியாவின் பிரதான மந்திரி ஆமான் போட்ட சதித்திட்டத்தைப் பற்றி எஸ்தர் புத்தகம் சொல்கிறது. பரந்து விரிந்த பெர்சிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்து வந்த யூதர்களைப் பூண்டோடு அழிக்க அவன் ஏற்பாடு செய்திருந்தான். அதற்காக ஒரு நாளையும் குறித்திருந்தான். இந்தச் சந்தர்ப்பத்திலும் யெகோவா தலையிட்டதால்தான் சாத்தானுடைய சந்ததியின் கடுங்கோபத்துக்கு இரையாகாமல் அவருடைய மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். (எஸ்தர் 1:1-3; 3:8, 9; 8:3, 9-14) எனவே, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட மிருகத்தின் நான்காம் தலையாக மேதிய-பெர்சியா சித்தரிக்கப்பட்டிருப்பது மிகப் பொருத்தமாய் இருக்கிறது.

      கிரீஸ்—ஐந்தாம் தலை

      14, 15. கிரீஸ் வல்லரசு சம்பந்தமாக என்ன விவரங்களை யெகோவா வெளிப்படுத்தினார்?

      14 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூர்க்க மிருகத்தின் ஐந்தாம் தலை கிரேக்க வல்லரசாகும். நேபுகாத்நேச்சார் கனவில் கண்ட சிலைக்கு தானியேல் கொடுத்த விளக்கத்தில், இந்த வல்லரசு செம்பாலான வயிற்றுக்கும் தொடைகளுக்கும் ஒப்பிடப்பட்டது. இந்தப் பேரரசையும் அதன் புகழ்பெற்ற அரசரையும் பற்றிய முக்கிய விவரங்களை இன்னும் இரண்டு தரிசனங்களில் தானியேலுக்கு யெகோவா வெளிப்படுத்தினார்.

      15 முதலாம் தரிசனத்தில்... கிரேக்க வல்லரசு நான்கு இறக்கைகள் உடைய சிவிங்கியாக, அதாவது வேங்கை புலியாக, சித்தரிக்கப்பட்டதை தானியேல் பார்த்தார். இந்த வல்லரசு படுவேகமாக மற்ற ராஜ்யங்களைக் கைப்பற்றி தன் எல்லைகளை விரிவுபடுத்தும் என்பதையே இந்தத் தரிசனம் சுட்டிக்காட்டியது. (தானி. 7:6) இரண்டாம் தரிசனத்தில்... பெரிய கொம்புள்ள ஒரு வெள்ளாட்டுக்கடா இரண்டு கொம்புகளுள்ள ஓர் ஆட்டுக்கடாவை, அதாவது மேதிய-பெர்சியாவை, சடுதியில் கொன்றுபோட்டதை தானியேல் பார்த்தார். வெள்ளாட்டுக்கடா கிரேக்க பேரரசையும் அதன் பெரிய கொம்பு அதன் அரசர்களில் ஒருவரையும் குறிப்பதாக தானியேலுக்கு யெகோவா தெரிவித்தார். அந்தப் பெரிய கொம்பு உடைந்துபோகும் என்றும் அதன் இடத்தில் நான்கு சிறிய கொம்புகள் முளைத்தெழும் என்றும் தானியேல் எழுதினார். கிரீஸ் ஓர் உலக வல்லரசாகக் கொடிகட்டி பறப்பதற்குச் சுமார் 200 வருடங்களுக்கு முன்னமே இந்தத் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டிருந்தபோதிலும் முன்னுரைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயமும் அச்சுப்பிசகாமல் நிறைவேறின. கிரீஸின் புகழ்பெற்ற அரசரான மகா அலெக்ஸாண்டர் மேதிய-பெர்சிய படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றிபெற்றார். இந்தக் கொம்பு சீக்கிரத்திலேயே உடைந்து போனது. ஆம், புகழின் உச்சியிலிருந்த இந்த மாவீரர் முப்பத்தி இரண்டே வயதில் இறந்துபோனார். பின்பு, அவரது பேரரசை அவருடைய நான்கு தளபதிகள் பங்குபோட்டுக்கொண்டார்கள்.—தானியேல் 8:20-22-ஐ வாசியுங்கள்.

      16. நான்காம் ஆண்டியோகஸ் என்ன செய்தான்?

      16 பெர்சியாவை கிரீஸ் கைப்பற்றிய பிறகு கடவுளுடைய மக்கள் வாழ்ந்த தேசத்தின் மீது அது ஆட்சி செய்தது. இந்தச் சமயத்தில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் யூதர்கள் மீண்டும் குடியேறியிருந்தார்கள், எருசலேமின் ஆலயத்தையும் திரும்பக் கட்டி முடித்திருந்தார்கள். அவர்கள் இன்னும் கடவுளுடைய மக்களாக இருந்தார்கள், திரும்பக் கட்டப்பட்ட அந்த ஆலயம் இன்னமும் உண்மை வழிபாட்டின் மையமாகத் திகழ்ந்தது. என்றாலும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில், மூர்க்க மிருகத்தின் ஐந்தாம் தலையான கிரேக்க வல்லரசு கடவுளுடைய மக்களைத் தாக்கியது. நான்காகப் பிரிக்கப்பட்ட அலெக்ஸாண்டருடைய பேரரசின் ஒரு பகுதியை ஆண்டுவந்த நான்காம் ஆண்டியோகஸ் எருசலேம் ஆலயத்தில் புறமத தெய்வத்திற்குப் பலிபீடத்தைக் கட்டினான், யூத மதத்தைப் பின்பற்றியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என அறிவித்தான். சாத்தானுடைய சந்ததி எப்படியெல்லாம் கடவுளுடைய மக்களிடம் கசப்பை வெளிப்படுத்தியிருக்கிறது! என்றாலும், சீக்கிரத்தில் உலக வல்லரசு என்ற புகழ் ஏணியிலிருந்து கிரீஸ் தள்ளப்பட்டது. அப்படியானால், அந்த மூர்க்க மிருகத்தின் ஆறாம் தலை எது?

      ரோம்—‘கெடிதான, பயங்கரமான’ ஆறாம் தலை

      17. ஆதியாகமம் 3:15-ன் நிறைவேற்றத்தில் ஆறாம் தலை என்ன முக்கியப் பங்கு வகித்தது?

      17 யோவானுக்கு மூர்க்க மிருகத்தைப் பற்றிய தரிசனம் கிடைத்தபோது ரோம் ஒரு வல்லரசாக இருந்தது. (வெளி. 17:10) ஆதியாகமம் 3:15-ல் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் இந்த ஆறாம் தலை ஒரு முக்கியப் பங்கு வகித்தது. ரோம அதிகாரிகளைப் பயன்படுத்தி ஸ்திரீயினுடைய சந்ததியின் “குதிங்காலை” சாத்தான் நசுக்கிப்போட்டான். அதாவது, அந்தச் சந்ததியைத் தற்காலிகமாக முடக்கிப்போட்டான். எப்படி? இயேசு கலகம் செய்ததாக அந்த ரோம அதிகாரிகள் பொய்க் குற்றம்சாட்டி, அவரை நியாய விசாரணைக்கு உட்படுத்தி, கொன்று போட்டார்கள். (மத். 27:26) ஆனால், அந்தக் குதிங்கால் காயம் சீக்கிரத்தில் குணமானது. எப்படியெனில், இயேசுவை யெகோவா உயிர்த்தெழுப்பினார்.

      18. (அ) எந்தப் புதிய தேசத்தாரை யெகோவா தேர்ந்தெடுத்தார், ஏன்? (ஆ) ஸ்திரீயினுடைய சந்ததியிடம் சாத்தானுடைய சந்ததி எப்படித் தொடர்ந்து பகைமை பாராட்டியது?

      18 இஸ்ரவேலின் மதத் தலைவர்கள் இயேசுவுக்கு எதிரான சதியில் ரோமப் பேரரசுடன் கூட்டுச்சேர்ந்தார்கள். அதோடு, இஸ்ரவேலரில் பெரும்பாலோரும் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தமது சொந்த ஜனமாய் இருப்பதற்காகத் தேர்ந்தெடுத்த இஸ்ரவேலரை யெகோவா நிராகரித்தார். (மத். 23:38; அப். 2:22, 23) அதற்குப் பதிலாக ஒரு புதிய தேசத்தாரைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள்தான், “கடவுளுடைய இஸ்ரவேலர்.” (கலா. 3:26-29; 6:16) யூதர்களும் புறதேசத்தாரும் அடங்கிய பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்கள்தான் அந்தப் புதிய தேசத்தின் அங்கத்தினர்கள். (எபே. 2:11-18) இயேசு இறந்து உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பும், சாத்தானுடைய சந்ததி ஸ்திரீயினுடைய சந்ததியிடம் தொடர்ந்து பகைமை பாராட்டியது. ஆம், ஸ்திரீயினுடைய சந்ததியின் இரண்டாவது பாகமான பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களைத் துடைத்தழிக்க ரோம் பல முறை முயற்சி செய்தது.c

      19. (அ) ஆறாம் உலக வல்லரசை தானியேல் எப்படி விவரிக்கிறார்? (ஆ) அடுத்த படிப்புக் கட்டுரை எதற்குப் பதில் அளிக்கும்?

      19 நேபுகாத்நேச்சார் கண்ட கனவுக்கு தானியேல் அளித்த விளக்கத்தில் இரும்பாலான கால்கள் ரோமைக் குறித்தன. (தானி. 2:33) தானியேலுக்குக் காட்டப்பட்ட ஒரு தரிசனத்தில் ரோமப் பேரரசையும் அதிலிருந்து தோன்றவிருந்த அடுத்த உலக வல்லரசையும் அவர் பார்த்தார். (தானியேல் 7:7, 8-ஐ வாசியுங்கள்.) பல நூற்றாண்டுகளுக்கு, ரோம் ‘கெடிதான, பயங்கரமான, மகா பலம் படைத்த’ வல்லரசாக அதன் எதிரிகளுக்குத் தென்பட்டது. என்றாலும், இந்தப் பேரரசிலிருந்து “பத்துக் கொம்புகள்” முளைக்கும் என்றும் அவற்றின் நடுவே வேறொரு சின்ன கொம்பு தோன்றி மற்றவற்றைவிட அதிக வலிமைமிக்கதாய்த் திகழும் என்றும் தீர்க்கதரிசனம் முன்னுரைத்தது. இந்தப் பத்துக் கொம்புகள் எதைக் குறிக்கின்றன, அந்தச் சின்ன கொம்பு எதைக் குறிக்கிறது? நேபுகாத்நேச்சார் கண்ட மாபெரும் சிலையின் எந்தப் பாகம் இந்தச் சின்ன கொம்புக்கு இணையாய் இருக்கிறது? பதில் அடுத்த படிப்புக் கட்டுரையில்.

      [அடிக்குறிப்புகள்]

      a இந்த ஸ்திரீ பரலோகத்தில் உள்ள கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்கும் படமாக இருக்கிறாள். இவள் யெகோவாவின் மனைவி என்று பைபிளில் அழைக்கப்படுகிறாள்.—ஏசா. 54:1; கலா. 4:26; வெளி. 12:1, 2.

      b தானியேல் புத்தகத்தில் குறிப்பிடப்படும் உருவச் சிலையின் தலையும்... வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்படும் மூர்க்க மிருகத்தின் மூன்றாம் தலையும்... பாபிலோனுக்குப் படமாக இருக்கின்றன. பக்கங்கள் 12-13-லுள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும்.

      c கி.பி. 70-ல் ரோமர்கள் எருசலேமை அழித்தபோதிலும், அவர்களுடைய வெறிச் செயல் ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் அல்ல. அந்தச் சமயத்தில், பூர்வ இஸ்ரவேலர் கடவுளுடைய விசேஷ ஜனமாக இருக்கவில்லை.

  • “சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களை” யெகோவா வெளிப்படுத்துகிறார்
    காவற்கோபுரம்—2012 | ஜூன் 15
    • “சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களை” யெகோவா வெளிப்படுத்துகிறார்

      “சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களைக் கடவுள் தம்முடைய அடிமைகளுக்குத் தெரியப்படுத்தும் பொருட்டு இயேசு கிறிஸ்துவுக்கு வெளிப்படுத்திய . . . விஷயங்கள்.”—வெளி. 1:1.

      எப்படிப் பதிலளிப்பீர்கள்?

      மாபெரும் சிலையின் எந்தப் பாகம் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைக் குறிக்கிறது?

      ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுக்கும் ஐக்கிய நாட்டுச் சங்கத்திற்கும் உள்ள தொடர்பை யோவான் எப்படி விளக்குகிறார்?

      மனித ஆட்சிக்கு வரும் முடிவை தானியேலும் யோவானும் எப்படி விவரிக்கிறார்கள்?

      1, 2. (அ) தானியேல் மற்றும் யோவானுடைய தீர்க்கதரிசனங்களை ஒப்பிடும்போது நாம் எதைப் புரிந்துகொள்ள முடிகிறது? (ஆ) மூர்க்க மிருகத்தின் முதல் ஆறு தலைகள் எதைக் குறிக்கின்றன?

      தா னியேல் மற்றும் யோவான் எழுதிய தீர்க்கதரிசனங்களை ஒப்பிடும்போது இன்று நடக்கிற, எதிர்காலத்தில் நடக்கப்போகிற பல விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. யோவான் கண்ட மூர்க்க மிருகத்தையும்... தானியேல் கண்ட பத்துக் கொம்புகளுள்ள கெடிதான மிருகத்தையும்... மாபெரும் சிலையைப் பற்றி தானியேல் தந்த விளக்கத்தையும்... ஒப்பிட்டுப் பார்த்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்தத் தீர்க்கதரிசனங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் நாம் என்ன செய்யத் தூண்டப்படுவோம்?

      2 முதலாவது, யோவான் கண்ட மூர்க்க மிருகத்தைப் பற்றிப் பார்ப்போம். (வெளி., அதி. 13) முந்தின கட்டுரையில் நாம் பார்த்தபடி, மிருகத்தின் முதல் ஆறு தலைகள் எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம் ஆகிய வல்லரசுகளைக் குறிக்கின்றன. இவை அனைத்துமே ஸ்திரீயினுடைய வித்துவிடம், அதாவது சந்ததியிடம், பகைமை பாராட்டின. (ஆதி. 3:15) யோவான், தான் கண்ட தரிசனத்தை எழுதி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும்கூட ஆறாம் தலையான ரோம் உலக வல்லரசாகத் திகழ்ந்தது. பிற்பாடு, அதன் இடத்தை ஏழாம் தலை ஏற்கவிருந்தது. அது எந்த உலக வல்லரசு, ஸ்திரீயினுடைய சந்ததியை அது எப்படி நடத்தியது?

      பிரிட்டனும் அமெரிக்காவும் உலக வல்லரசாக உயர்ந்தன

      3. பத்துக் கொம்புகள் உள்ள கெடிதான மிருகம் எதைக் குறிக்கிறது, பத்துக் கொம்புகள் எதைக் குறிக்கின்றன?

      3 யோவான் கண்ட தரிசனத்தையும்... பத்துக் கொம்புகளுள்ள கெடிதான மிருகத்தைப் பற்றிய தானியேலின் தரிசனத்தையும்... ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் வெளிப்படுத்துதல் 13-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலையை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.a (தானியேல் 7:7, 8, 23, 24-ஐ வாசியுங்கள்.) தானியேல் கண்ட மிருகம் ரோம உலக வல்லரசைக் குறிக்கிறது. (பக்கங்கள் 12-13-ல் உள்ள விளக்கப்படத்தைப் பாருங்கள்.) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு பிளவுபட ஆரம்பித்தது. கெடிதான அந்த மிருகத்தின் தலையிலிருந்து எழும்பிய பத்துக் கொம்புகள் ரோமப் பேரரசிலிருந்து தோன்றிய ராஜ்யங்களைக் குறிக்கின்றன.

      4, 5. (அ) சின்ன கொம்பு என்ன செய்தது? (ஆ) மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலை எதைக் குறிக்கிறது?

      4 கெடிதான மிருகத்தின் தலையிலிருக்கும் பத்துக் கொம்புகளில் நான்கு கொம்புகள், அதாவது ராஜ்யங்கள், விசேஷக் கவனத்தைப் பெறுகின்றன. ஒரு “சின்ன கொம்பு” எழும்பி அந்தப் பத்துக் கொம்புகளில் மூன்றைப் பிடுங்கிப்போட்டது. ஒருகாலத்தில் ரோமப் பேரரசின் பாகமாக இருந்த பிரிட்டன் பேரும் புகழும் பெற்று ஜொலித்த சமயத்தில் இது நிறைவேறியது. 17-ஆம் நூற்றாண்டுவரை பிரிட்டன் ஒரு சாதாரண நாடாகவே திகழ்ந்தது. ரோமப் பேரரசின் பாகமாக இருந்த ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்சு ஆகிய மூன்று நாடுகளும் பிரிட்டனைவிட பலம்படைத்தவையாய் இருந்தன. பெரும் செல்வாக்கு படைத்த அந்த நாடுகளை பிரிட்டன் ஒன்றன்பின் ஒன்றாகத் தோற்கடித்து பலமிழக்கச் செய்தது. 18-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில் பிரிட்டன் உலக அரங்கில் பலமிக்க நாடாக முன்னேறி வந்துகொண்டிருந்தது. ஆனாலும் இன்னும் அது மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலையாக ஆகவில்லை.

      5 பலமிக்க நாடாக பிரிட்டன் உருவெடுத்தபோதிலும் வட அமெரிக்காவிலிருந்த அதன் குடியேற்ற நாடுகள் அதிலிருந்து பிரிந்து சென்றுவிட்டன. என்றாலும், அமெரிக்கா வலிமைமிக்க நாடாக உருவாவதை பிரிட்டன் தடுத்து நிறுத்தவில்லை. சொல்லப்போனால், பிரிட்டன் தன் கடற்படையை அனுப்பி அமெரிக்காவைப் பாதுகாத்தது. 1914-ல் எஜமானருடைய நாள் ஆரம்பித்தபோது பிரிட்டன்... மிகப் பிரமாண்டமான பேரரசாக உருவெடுத்து சரித்திரத்தில் முத்திரை பதித்திருந்தது, அமெரிக்கா... உலகிலேயே மாபெரும் வர்த்தக வல்லரசாக வளர்ந்திருந்தது.b முதல் உலகப் போரின்போது, அமெரிக்காவை பிரிட்டன் தன் நெருங்கிய கூட்டாளி ஆக்கிக்கொண்டது. இவ்வாறு, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு உருவானது. இதுதான் மிருகத்தின் ஏழாம் தலை. இந்தத் தலை ஸ்திரீயினுடைய சந்ததியை எப்படி நடத்தியது?

      6. ஏழாம் தலை கடவுளுடைய மக்களை எப்படி நடத்தியிருக்கிறது?

      6 எஜமானருடைய நாள் ஆரம்பமான கொஞ்ச நாட்களிலேயே கடவுளுடைய மக்களை, அதாவது இன்னும் பூமியில் இருந்த கிறிஸ்துவின் சகோதரர்களை, ஏழாம் தலை தாக்கியது. (மத். 25:40) தம்முடைய பிரசன்னத்தின்போது ஸ்திரீயினுடைய சந்ததியில் மீந்திருப்பவர்கள் பூமியில் மும்முரமாய் ஊழியம் செய்து வருவார்கள் என இயேசு சொல்லியிருந்தார். (மத். 24:45-47; கலா. 3:26-29) இந்தப் பரிசுத்தவான்களோடு, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு போர் செய்தது. (வெளி. 13:3, 7) முதல் உலகப் போரின்போது, அது கடவுளுடைய மக்களை எதிர்த்தது... அவர்களுடைய பிரசுரங்கள் சிலவற்றுக்குத் தடைவிதித்தது... உண்மையுள்ள அடிமை வகுப்பாரின் பிரதிநிதிகளைச் சிறையில் தள்ளியது. மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலை ஊழியத்தைக் கிட்டத்தட்ட நிறுத்தியே விட்டது அல்லது ‘கொன்றே விட்டது.’ இப்படியெல்லாம் நடக்குமென யோவானுக்கு யெகோவா தரிசனத்தில் வெளிப்படுத்தியிருந்தார். ஸ்திரீயின் இரண்டாவது பாகமான அந்தப் பரிசுத்தவான்கள் ‘உயிர்ப் பெற்று’ மீண்டும் ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபடுவார்கள் என்றும் யோவானிடம் கடவுள் சொல்லியிருந்தார். (வெளி. 11:3, 7-11) இந்தச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நடந்தேறின என்பதற்கு நவீன நாளைய யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரம் சான்றளிக்கிறது.

      ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசும் இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களும்

      7. மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலைக்கும் மாபெரும் சிலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

      7 மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலைக்கும் மாபெரும் சிலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? பிரிட்டனும், சொல்லப்போனால் அமெரிக்காவும்கூட ரோமப் பேரரசிலிருந்துதான் தோன்றின. அப்படியென்றால், அந்தச் சிலையின் பாதங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவற்றில் இரும்பும் களிமண்ணும் கலந்திருப்பதாக விவரிக்கப்படுகிறது. (தானியேல் 2:41-43-ஐ வாசியுங்கள்.) பாதங்களைப் பற்றிய இந்த விவரிப்பு மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலையான ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு தோன்றிய சமயத்தைக் குறிக்கிறது. பொதுவாக இரும்பாலான பொருள் வலுவாக இருக்கும். ஆனால், இரும்பையும் களிமண்ணையும் கலந்து உருவாக்கப்பட்ட பொருள் அந்தளவு வலுவாய் இருக்காது. அதுபோல்தான், ரோமுக்கு இருந்த வலிமை அதிலிருந்து உருவான ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுக்கு இருக்கவில்லை. அது எப்போது வலுவிழந்தது?

      8, 9. (அ) ஏழாம் உலக வல்லரசு எப்படி இரும்புபோன்ற வலிமையை வெளிக்காட்டியது? (ஆ) சிலையின் பாதங்களிலுள்ள களிமண் எதைக் குறிக்கிறது?

      8 சில சமயங்களில், மிருகத்தின் ஏழாம் தலை இரும்பைப் போன்ற வலிமையை வெளிக்காட்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, முதல் உலகப் போரில் வெற்றி பெற்றபோது அது தன்னை வலிமைமிக்கதாய் நிரூபித்தது. இரண்டாம் உலகப் போரின்போதும் இரும்பைப்போல் அது வலிமைமிக்கதாய் இருந்தது.c அதற்குப் பிறகும், அந்த ஏழாம் தலை அவ்வப்போது இரும்பைப் போன்ற வலிமையைக் காட்டி வந்தது. என்றாலும், ஆரம்பத்திலிருந்தே அந்த இரும்பில் களிமண்ணும் கலந்திருக்கிறது.

      9 சிலையினுடைய பாதங்கள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் நீண்ட காலமாகவே முயன்று வந்திருக்கிறார்கள். இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்கள் பல ராஜ்யங்களை அல்ல, ஒரு ‘ராஜ்யத்தை,’ அதாவது ஓர் அரசாங்கத்தை, மட்டுமே குறிப்பதாக தானியேல் 2:41 சொல்கிறது. எனவே, களிமண் என்பது ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் பாகமாக உள்ள சில அமைப்புகளுக்குப் படமாக இருக்கிறது. இரும்பின் வலிமையுடன் செயல்பட்ட ரோமப் பேரரசைப் போல் செயல்படவிடாமல் இந்த அமைப்புகள் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் வலிமையைக் குறைத்துப்போடுகின்றன. களிமண் ‘மற்ற மனுஷரை,’ சாமானியர்களைக் குறிக்கிறது. (தானி. 2:43) ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசிலுள்ள சாமானியர்கள் சமூக உரிமை இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், சுதந்திரப் போராட்டங்கள் மூலமாகத் தங்கள் உரிமையை நிலைநாட்ட முயன்றிருக்கிறார்கள். ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு இரும்புபோன்ற வலிமையுடன் திறமையாகச் செயல்படாதபடி இவர்கள் அதன் வலிமையைக் குறைத்திருக்கிறார்கள். அதோடு, தெளிவற்ற தேர்தல் முடிவுகள், எதிரும் புதிருமான கருத்துகள் காரணமாகப் பிரபலமான தலைவர்கள்கூட தங்கள் கொள்கைகளைச் செயல்படுத்த முடியாமல் திணறுகிறார்கள். ‘அந்த அரசு ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும்’ என்று தானியேல் அன்றைக்கே சொன்னார்.—தானி. 2:42, பொது மொழிபெயர்ப்பு; 2 தீ. 3:1-3.

      10, 11. (அ) ‘பாதங்களுக்கு’ என்ன சம்பவிக்கப் போகிறது? (ஆ) பாதத்திலுள்ள விரல்களின் எண்ணிக்கைக்கு எந்த விசேஷ அர்த்தமும் இல்லை என்று எப்படிச் சொல்கிறோம்?

      10 இந்த 21-ஆம் நூற்றாண்டிலும்கூட பிரிட்டனும் அமெரிக்காவும் உலக விவகாரங்களில் ஒன்றுசேர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுக்கு அடுத்து இன்னொரு உலக வல்லரசு தோன்றாது என்பதை மாபெரும் சிலை மற்றும் மூர்க்க மிருகத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கடைசி உலக வல்லரசு, இரும்புக் கால்களுக்குப் படமாக இருக்கும் ரோம வல்லரசைவிட வலிமை குறைந்ததாக இருந்தாலும் தானாகவே அழிந்துபோகாது.

      11 சிலையின் கால் விரல்களுக்கு ஏதாவது விசேஷ அர்த்தம் இருக்கிறதா? இதைச் சற்றுக் கவனியுங்கள்: மற்ற தரிசனங்களில் தானியேல் திட்டவட்டமான சில எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டார். உதாரணத்திற்கு, பல்வேறு மிருகங்களைப் பற்றிப் பேசுகையில் அவற்றிற்கு எத்தனை கொம்புகள் இருந்தன எனக் குறிப்பாகச் சொன்னார். அந்த எண்ணிக்கைகள் முக்கியமானவை. ஆனால், இந்தச் சிலையை விவரிக்கையில் அதன் பாதத்திலுள்ள விரல்களின் எண்ணிக்கையைப் பற்றி தானியேல் எதுவும் குறிப்பிடவில்லை. சிலையின் புயங்கள், கைகள், கைவிரல்கள், கால்கள், பாதங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கு எந்த விசேஷ அர்த்தமும் இல்லாததால் பாதத்திலுள்ள விரல்களின் எண்ணிக்கைக்கும் எந்த விசேஷ அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அந்த விரல்களில் இரும்பும் களிமண்ணும் கலந்திருக்கும் என்று தானியேல் குறிப்பாகச் சொன்னார். கடவுளுடைய அரசாங்கத்திற்குப் படமாக இருக்கிற “கல்,” இந்தச் சிலையின் பாதங்களில் மோதும் சமயத்தில் இந்த ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் என்பதை இந்த விவரிப்பிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.—தானி. 2:44.

      ஆங்கிலோ-அமெரிக்காவும் இரண்டு கொம்புகளுள்ள மூர்க்க மிருகமும்

      12, 13. இரண்டு கொம்புகளுள்ள மூர்க்க மிருகம் எதைக் குறிக்கிறது, அது என்ன செய்கிறது?

      12 ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு இரும்பும் களிமண்ணும் கலந்த கலவையாக இருந்தாலும், இந்தக் கடைசி நாட்களில் அது முக்கியப் பங்காற்றும் என்பதை யோவானுக்கு இயேசு காண்பித்த தரிசனங்கள் தெரிவிக்கின்றன. எப்படி? ராட்சதப் பாம்பைப் போல் பேசிய இரண்டு கொம்புகளுள்ள மூர்க்க மிருகத்தை யோவான் பார்த்தார். இந்த விசித்திர மிருகம் எதைக் குறிக்கிறது? அதற்கு இரண்டு கொம்புகள் இருப்பதால் அது இரட்டை ஆட்சியைக் குறிக்கிறது. ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுக்குப் படமாக இருக்கும் இந்த மூர்க்க மிருகத்தை யோவான் மீண்டும் பார்க்கிறார். ஆனால், இப்போது அது விசேஷமான விதத்தில் செயல்படுவதைப் பார்க்கிறார்.—வெளிப்படுத்துதல் 13:11-15-ஐ வாசியுங்கள்.

      13 இரண்டு கொம்புகளுள்ள இந்த மூர்க்க மிருகம், ஏழு தலைகளை உடைய மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவத்தை உண்டாக்கும்படி மக்களிடம் சொல்கிறது. மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான இந்த உருவம் தோன்றும், பின்பு இல்லாமல் போகும், ஆனால் மறுபடியும் தோன்றும் என்று யோவான் எழுதினார். அவர் சொன்னபடியே நடந்தது. தேசங்களை ஒன்றுபடுத்துவதற்கும்... உலக அரசாங்கங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும்... பிரிட்டனும் அமெரிக்காவும் சேர்ந்து ஓர் அமைப்பை ஏற்படுத்தின.d அந்த அமைப்பு முதல் உலகப் போருக்குப் பிறகு தோன்றியது, அது சர்வதேச சங்கம் என்று அழைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் துவங்கியதும் அது இல்லாமல் போனது. வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனத்திற்கு இசைய, அது மறுபடியும் தோன்றும் என்று அந்தப் போரின்போது கடவுளுடைய மக்கள் அறிவித்தார்கள். அவர்கள் சொன்னபடியே அது மறுபடியும் தோன்றியது, ஆனால் ஐக்கிய நாட்டுச் சங்கம் என்ற பெயரில்.—வெளி. 17:8.

      14. என்ன காரணத்தினால் மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவத்தை “எட்டாவது ராஜா” என்று யோவான் அழைக்கிறார்?

      14 மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான ஓர் உருவமே “எட்டாவது ராஜா” என்று யோவான் குறிப்பிட்டார். எந்த அர்த்தத்தில்? அது, முதலாவதாகத் தோன்றிய மூர்க்க மிருகத்தின் எட்டாவது தலையாகத் தரிசனத்தில் காட்டப்படவில்லை. அது மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான ஓர் உருவம் மட்டுமே. அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுடைய ஆதரவால்தான், முக்கியமாக ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசு தரும் ஆதரவால்தான் அது வலிமைமிக்கதாக இருக்கிறது. (வெளி. 17:10, 11) என்றாலும், உலக சரித்திரத்தையே மாற்றிப்போடும் ஒரு காரியத்தை அது செய்யப்போவதால் யோவான் அதை எட்டாவது ராஜா என்று அழைக்கிறார்.

      மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவம் விலைமகளை அழிக்கிறது

      15, 16. விலைமகள் எதற்கு அடையாளமாக இருக்கிறாள், அவளுக்கு இப்போது எந்தளவு ஆதரவு கிடைக்கிறது?

      15 கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தின் மீது [மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவத்தின் மீது] அடையாள அர்த்தமுள்ள விலைமகள் சவாரி செய்கிறாள், அதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாள் என்று யோவான் எழுதினார். அவள் “மகா பாபிலோன்” என்று அழைக்கப்படுகிறாள். (வெளி. 17:1-6) இந்த விலைமகள் எல்லா பொய் மதங்களையும், முக்கியமாக கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறாள். மத அமைப்புகள் தங்கள் ஆதரவை மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவத்திற்குக் கொடுத்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, அதன்மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்திருக்கின்றன.

      16 என்றாலும், எஜமானருடைய நாளில் தான் உட்கார்ந்திருக்கும் தண்ணீர் வற்றிப் போயிருப்பதை, அதாவது தனக்கிருக்கும் மக்கள் ஆதரவு மளமளவென குறைந்து போயிருப்பதை, மகா பாபிலோன் பார்த்திருக்கிறது. (வெளி. 16:12; 17:15) உதாரணத்திற்கு, மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவம் முதன்முறையாகத் தோன்றியபோது மகா பாபிலோனின் முக்கிய அங்கமான கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் மேற்கத்திய உலகை ஆட்டிப்படைத்தன. ஆனால், சர்ச்சுகளையும் சரி அவற்றின் மத குருமார்களையும் சரி, அநேகர் இன்று மதிப்பதே இல்லை. உலகிலுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் மதமே காரணம் என்றும் அநேகர் நினைக்கிறார்கள். எல்லா மதங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென சிலர் வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.

      17. பொய் மதத்திற்குச் சீக்கிரத்தில் என்ன ஏற்படும், ஏன்?

      17 என்றாலும், பொய் மதம் தானாகவே சுவடு தெரியாமல் அழிந்துவிடாது. விலைமகளை அழிக்கும் எண்ணத்தை ராஜாக்களின் மனதில் கடவுள் விதைக்கும்வரை அவள் தொடர்ந்து அவர்களைத் தன் ஆசைக்கு அடிபணிய வைப்பாள். (வெளிப்படுத்துதல் 17:16, 17-ஐ வாசியுங்கள்.) சீக்கிரத்தில், சாத்தானுடைய உலகிலுள்ள அரசியல் அமைப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய நாட்டுச் சங்கத்தைப் பயன்படுத்தி பொய் மதங்களை யெகோவா அழித்துவிடுவார். அது அவளுடைய செல்வாக்கையும் செல்வச்செழிப்பையும் பறித்துவிடும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட சம்பவம் நடக்குமென யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இன்று, கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மீது உட்கார்ந்திருக்கும் விலைமகள் தள்ளாடிக்கொண்டிருக்கிறாள். என்றாலும், அதிலிருந்து மெல்ல மெல்ல சரிந்து அவளாகவே விழுந்துவிடமாட்டாள். திடீரென, வெறித்தனமாக அதிலிருந்து தள்ளிவிடப்படுவாள்.—வெளி. 18:7, 8, 15-19.

      மிருகங்கள் அழிந்துவிட்டன

      18. (அ) மூர்க்க மிருகம் என்ன செய்யும், அதன் விளைவு என்னவாக இருக்கும்? (ஆ) எந்த ராஜ்யங்களைக் கடவுளுடைய அரசாங்கம் அழிக்குமென தானியேல் 2:44 குறிப்பிடுகிறது? (பக்கம் 17-ல் உள்ள பெட்டியைப் பாருங்கள்.)

      18 பொய் மதம் அழிக்கப்பட்ட பிறகு, கடவுளுடைய அரசாங்கத்தைத் தாக்கும்படி மூர்க்க மிருகம், அதாவது சாத்தானின் பூமிக்குரிய அரசியல் அமைப்புகள், தூண்டிவிடப்படும். பூமியிலுள்ள ராஜாக்கள் பரலோகத்திலிருக்கும் கடவுளுடைய அரசாங்கத்தைத் தாக்க முடியாததால் பூமியிலுள்ள அதன் ஆதரவாளர்களிடம் தங்கள் கோபத்தைக் காட்டுவார்கள். விளைவு? போர். கடவுளுக்கு எதிராக அவர்கள் செய்யப் போகும் கடைசிப் போர் அதுவாகத்தான் இருக்கும். (வெளி. 16:13-16; 17:12-14) அந்தப் போர் சம்பந்தமாக தானியேல் ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்துகிறார். (தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்.) வெளிப்படுத்துதல் 13:1-ல் குறிப்பிடப்படும் மூர்க்க மிருகம், அதற்கு ஒப்பான உருவம், இரண்டு கொம்புகள் உள்ள மூர்க்க மிருகம் ஆகிய எல்லாமே அழிக்கப்படும்.

      19. என்ன நடக்குமென்று நாம் உறுதியாய் நம்பலாம், இது எதற்கான சமயம்?

      19 மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலை ஆட்சி செய்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். சீக்கிரத்தில் அழிக்கப்படவிருக்கும் இந்த மிருகத்தில் புதிதாக இனி எந்தத் தலையும் தோன்றாது. பொய் மதம் பூண்டோடு அழிக்கப்படும் சமயத்தில் ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசே உலகை ஆட்சி செய்துகொண்டிருக்கும். தானியேலும் யோவானும் உரைத்த தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் நுணுக்க விவரங்கள்வரை துல்லியமாய் நிறைவேறியிருக்கின்றன. எனவே, பொய் மதம் அழிக்கப்படும்... அர்மகெதோன் போர் சீக்கிரத்தில் ஆரம்பிக்கும்... என்று நாம் உறுதியாய் நம்பலாம். இந்த விவரங்களையெல்லாம் யெகோவா ஏற்கெனவே வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தத் தீர்க்கதரிசனங்களில் உள்ள எச்சரிக்கைகளுக்கு நாம் கீழ்ப்படிவோமா? (2 பே. 1:19) இதுவே யெகோவாவையும் அவரது அரசாங்கத்தையும் ஆதரிப்பதற்கான சமயம்.—வெளி. 14:6, 7.

      [அடிக்குறிப்புகள்]

      a பைபிளில், பத்து என்ற எண் பொதுவாக முழுமையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில், ரோமப் பேரரசிலிருந்து எழும்பிய எல்லா ராஜ்யங்களையும் அது குறிக்கிறது.

      b 18-ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே பிரிட்டனும் அமெரிக்காவும் தனித்தனி நாடுகளாக இருந்து வந்தபோதிலும், எஜமானருடைய நாளின் ஆரம்பத்தில்தான் அவை இரண்டும் சேர்ந்து ஒரே உலக வல்லரசாகத் தோன்றும் என்று யோவான் விவரிக்கிறார். சொல்லப்போனால், வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தரிசனங்கள் ‘எஜமானருடைய நாளில்’ நிறைவேறி வருகின்றன. (வெளி. 1:10) முதல் உலகப் போரின்போதுதான் அந்த ஏழாம் தலை, ஓர் உலக வல்லரசாகக் கைகோர்த்துச் செயல்பட ஆரம்பித்தது.

      c போரில் இந்த ராஜா பயங்கரமான அழிவை ஏற்படுத்துவார் என்பதை தானியேல் அறிந்திருந்தார். அதனால்தான், ‘அவன் அதிசயமான [அஞ்சத்தக்க] விதமாக அழிம்புண்டாக்குவான்’ என்று எழுதினார். (தானி. 8:24) உதாரணத்திற்கு, இரட்டை உலக வல்லரசின் எதிரியாக இருந்த ஒரு நாட்டின் மீது அமெரிக்க இரண்டு அணுகுண்டுகளைப் போட்டு சரித்திரம் காணாத படுபயங்கரமான பேரழிவை ஏற்படுத்தியது.

      d வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் பக்கங்கள் 240, 241, 252, 253 ஆகியவற்றைப் பாருங்கள்.

      [பக்கம் 17-ன் பெட்டி]

      ‘அந்த ராஜ்யங்களெல்லாம்’—எதைக் குறிக்கிறது?

      கடவுளுடைய அரசாங்கம் ‘அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கும்’ என்று தானியேல் 2:44-ல் உள்ள தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. சிலையின் பல்வேறு பாகங்களுக்குப் படமாக இருக்கும் ராஜ்யங்களைப் பற்றி மட்டுமே அந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.

      மற்ற ராஜ்யங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? இதே விஷயத்தைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனம் விரிவான விளக்கத்தை அளிக்கிறது. “சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில்,” ‘பூமியெங்கும் உள்ள ராஜாக்கள்’ யெகோவாவுக்கு எதிராகக் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் என்று அது சொல்கிறது. (வெளி. 16:14; 19:19-21) எனவே, தானியேல் கண்ட சிலை குறிப்பிடும் ராஜ்யங்கள் மட்டுமல்ல, மற்றெல்லா ராஜ்யங்களும் அர்மகெதோன் போரில் அழிக்கப்படும்.

  • எட்டு ராஜாக்கள் வெளிப்படுத்தப்படுகிறார்கள்
    காவற்கோபுரம்—2012 | ஜூன் 15
    • எட்டு ராஜாக்கள் வெளிப்படுத்தப்படுகிறார்கள்

      தானியேல் புத்தகமும் வெளிப்படுத்துதல் புத்தகமும்... எட்டு ராஜாக்களை, அதாவது ராஜ்யங்களை, பற்றிச் சொல்கின்றன. அதோடு, அந்த ராஜ்யங்கள் எந்த வரிசையில் தோன்றும் என்பதைப் பற்றியும் சொல்கின்றன. பைபிளில் உள்ள முதல் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொண்டால்தான் இந்த ராஜாக்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

      சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டினால் சாத்தான் தனது சந்ததியைப் பல்வேறு அரசியல் அமைப்புகளாக, அதாவது ராஜ்யங்களாக, ஒழுங்கமைத்திருப்பது தெரியும். (லூக். 4:5, 6) என்றாலும், ஒருசில ராஜ்யங்கள் மட்டுமே கடவுளுடைய மக்களை—அவர்கள் பூர்வ இஸ்ரவேல் தேசத்தாராக இருந்தாலும் சரி பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி—நேரடியாகத் தாக்கியிருக்கின்றன. அத்தகைய வலிமைமிக்க எட்டு ராஜ்யங்களைப் பற்றி மட்டுமே தானியேலும் யோவானும் கண்ட தரிசனங்கள் குறிப்பிடுகின்றன.

      [பக்கம் 12, 13-ன் அட்டவணை/படங்கள்]

      (முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

      தானியேல் புத்தகத்திலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள

      தீர்க்கதரிசனங்கள் தீர்க்கதரிசனங்கள்

      1. எகிப்து

      2. அசீரியா

      3. பாபிலோன்

      4. மேதிய- பெர்சியா

      5. கிரீஸ்

      6. ரோம்

      7. பிரிட்டன் & அமெரிக்காa

      8. சர்வதேச சங்கம் & ஐக்கிய நாட்டுச் சங்கம்b

      கடவுளுடைய மக்கள்

      கி.மு. 2000

      ஆபிரகாம்

      1500

      பூர்வ இஸ்ரவேலர்

      1000

      தானியேல் 500

      கி.மு./கி.பி.

      யோவான்

      கடவுளுடைய இஸ்ரவேலர் 500

      1000

      1500

      கி.பி. 2000

      [அடிக்குறிப்பு]

      a முடிவு காலத்தில் இரண்டு ராஜாக்களும் இருப்பார்கள். பக்கம் 19-ஐக் காண்க.

      b முடிவு காலத்தில் இரண்டு ராஜாக்களும் இருப்பார்கள். பக்கம் 19-ஐக் காண்க.

      [படங்கள்]

      மாபெரும் சிலை (தானி. 2:31-45)

      சமுத்திரத்திலிருந்து எழுந்து வரும் நான்கு பெரிய மிருகங்கள் (தானி. 7:3-8, 17, 25)

      ஆட்டுக்கடாவும் வெள்ளாட்டுக்கடாவும் (தானி., அதி. 8)

      ஏழு தலைகளை உடைய மூர்க்க மிருகம் (வெளி. 13:1-10, 16-18)

      மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான ஓர் உருவத்தை உண்டாக்கும்படி இரண்டு கொம்புகளுள்ள மிருகம் மக்களை ஊக்குவிக்கிறது (வெளி. 13:11-15)

      [படங்களுக்கான நன்றி]

      நன்றி: எகிப்து & ரோம்: Photograph taken by courtesy of the British Museum; மேதிய-பெர்சியா: Musée du Louvre, Paris

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—2012 | ஜூன் 15
    • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

      ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசு பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிற ஏழாவது உலக வல்லரசாக எப்போது ஆனது?

      ▪ நேபுகாத்நேச்சார் ராஜா கனவில் கண்ட மிகப் பெரிய உலோகச் சிலை எல்லா உலக வல்லரசுகளையும் குறிப்பதில்லை. (தானி. 2:31-45) தானியேல் வாழ்ந்த காலம் முதற்கொண்டு ஆட்சி செய்து வந்த... கடவுளுடைய மக்களை எதிர்த்து வந்த... ஐந்து உலக வல்லரசுகளை மட்டுமே அது குறிக்கிறது.

      ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு ரோமைத் தோற்கடித்து உலக வல்லரசாகவில்லை, மாறாக ரோமிலிருந்துதான் உருவானது என்று உலோகச் சிலை பற்றி தானியேல் கொடுத்த விளக்கத்திலிருந்து தெரிகிறது. இந்தச் சிலையின் கால்களில் இருந்த இரும்பு அதன் பாதங்கள் மற்றும் விரல்கள்வரை இருந்ததை தானியேல் பார்த்தார். (பாதங்கள் மற்றும் விரல்களில் இரும்பும் களிமண்ணும் கலந்திருந்தன.)a இந்த இரும்புக் கால்களிலிருந்தே ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு உருவாகும் என்பது தானியேல் கொடுத்த விளக்கத்திலிருந்து புரிகிறது. தானியேல் சொன்னபடியே நடந்ததாகச் சரித்திரம் சொல்கிறது. ரோம வல்லரசின் பாகமாக இருந்த பிரிட்டன் 1700-களின் பிற்பகுதியில் செல்வாக்குமிக்க நாடாக உருவெடுக்க ஆரம்பித்தது. பிற்பாடு, அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் திடீரென மிகப் பெரிய தேசமாக ஆனது. இருந்தாலும், அந்தச் சமயத்தில் பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிற ஏழாவது உலக வல்லரசு இன்னும் உருவாகவில்லை. ஏனென்றால், பிரிட்டனும், அமெரிக்காவும் ஒன்றுசேர்ந்து அதுவரை பெரிதாக எதையும் செய்யவில்லை. ஆனால், முதல் உலகப் போரில் இந்த இரு நாடுகளும் கைகோர்த்து செயல்பட்டன.

      அந்தச் சமயத்தில், “அரசாங்கத்தின் பிள்ளைகள்” அமெரிக்காவில் மிகச் சுறுசுறுப்பாக ஊழியம் செய்து வந்தார்கள். ஏனென்றால், அமெரிக்காவில் நியு யார்க், புருக்லினில் அவர்களுடைய தலைமை அலுவலகம் இருந்தது. (மத். 13:36-43) பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளிலும் பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்கள் மும்முரமாகப் பிரசங்கித்து வந்தார்கள். முதல் உலகப் போரின்போது பிரிட்டனும் அமெரிக்காவும் ஒரு விசேஷ ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு தங்கள் அரசியல் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டன. அது மட்டுமல்ல, போர்க் காலத்தில் தேசப்பற்று தீவிரமாய் இருந்ததால், ‘பெண்ணின்’ சந்ததியைச் சேர்ந்தவர்களை அவை எதிர்த்தன. அவர்கள் வெளியிட்ட பிரசுரங்களுக்குத் தடைவிதித்தன. பிரசங்க வேலையை முன்நின்று நடத்தியவர்களைச் சிறையில் அடைத்தன.—வெளி. 12:17.

      பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, 1700-களின் பிற்பகுதியில் பிரிட்டன் செல்வாக்குமிக்க நாடாக உருவாக ஆரம்பித்தபோது ஏழாவது உலக வல்லரசு தோன்றவில்லை. மாறாக, எஜமானருடைய நாளின் ஆரம்பத்தில்தான் ஏழாவது உலக வல்லரசு தோன்றியது.b

      [அடிக்குறிப்புகள்]

      a இரும்போடு கலந்திருந்த களிமண்... இரும்பைப் போன்ற உறுதி படைத்த ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் பாகமாக இருக்கும் சில அமைப்புகளைக் குறிக்கிறது. காலப்போக்கில் இந்தக் களிமண் அந்த வல்லரசை வலிமையோடு செயல்பட விடாமல் செய்து வந்திருக்கிறது.

      b தானியேல் தீர்க்கதரிசனம் புத்தகத்தில், பக்கம் 57, பாரா 24-லும், பக்கங்கள் 56 மற்றும் 139-ல் உள்ள அட்டவணைகளிலும் இருக்கும் விஷயங்களை இந்த விளக்கம் மாற்றீடு செய்கிறது.

      [பக்கம் 19-ன் படம்]

      உவாட்ச்டவர் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த எட்டுச் சகோதரர்கள் 1918, ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்கள்

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்