உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w17 ஜூன் பக். 22-26
  • மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே யோசியுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே யோசியுங்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் முக்கியம்?
  • மீட்பைவிட முக்கியம்!
  • ஏன் சரியான கண்ணோட்டம் இருக்க வேண்டும்?
  • தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்!
  • யோபு உத்தமமாய் நடக்கிறார்
    பைபிள் ஒரு கண்ணோட்டம்
  • யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்த்த யோபு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • ‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
w17 ஜூன் பக். 22-26
கடவுளிடம் சொன்ன பொய் குற்றச்சாட்டுகளை உண்மை என்று நிரூபிப்பதற்காக, சாத்தான் யோபுவுக்கு மோசமான வியாதி மற்றும் போலி நண்பர்களின் துன்புறுத்தல் உட்பட கடுமையான வேதனைகளைக் கொண்டுவருகிறான்

மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே யோசியுங்கள்!

“யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.”—சங். 83:18.

பாடல்கள்: 46, 136

உங்கள் பதில் என்ன?

  • யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்பதை நிரூபிப்பதுதான் மனிதர்களுக்கு மிக முக்கியமானது என்று ஏன் சொல்லலாம்?

  • யெகோவாவின் உன்னத அரசாட்சியை யோபு எப்படி ஆதரித்தார்? ஆனாலும், யோபு ஏன் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டியிருந்தது?

  • யெகோவாவின் உன்னத அரசாட்சியை நாம் ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான சில முக்கியமான வழிகள் என்ன?

1, 2. (அ) எந்த விஷயம் மனிதர்களுக்கு முக்கியமாக இருக்க வேண்டும்? (ஆ) நாம் அதற்கு ஆதரவு காட்டுவது ஏன் முக்கியம்?

இன்று நிறைய பேருக்கு பணம்தான் மிக முக்கியமாக இருக்கிறது. அவர்கள் பணத்தைப் பற்றியே யோசிக்கிறார்கள், அதைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். கை நிறைய பணம் சம்பாதிக்க அல்லது சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க நிறைய நேரம் செலவு செய்கிறார்கள். வேறு சிலருக்கு, தங்கள் குடும்பம், ஆரோக்கியம், தாங்கள் சாதிக்க நினைக்கிற விஷயங்கள் ஆகியவைதான் முக்கியமாக இருக்கின்றன.

2 ஆனால், இவை எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்பதை நிரூபிப்பதுதான் அது! இதன்மேல் கவனம் செலுத்துவதை விட்டுவிடாமல் இருப்பது மிக முக்கியம். ஒருவேளை நாம் கவனமாக இல்லை என்றால், அன்றாட வாழ்க்கையில் அல்லது சொந்த பிரச்சினைகளில் நாம் மூழ்கிவிடலாம்; யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்பதை நிரூபிப்பது எந்தளவு முக்கியமானது என்பதை மறந்துவிடலாம். யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரித்தால், அன்றாட பிரச்சினைகளை நம்மால் நன்றாகச் சமாளிக்க முடியும். அதோடு, யெகோவாவிடம் நெருங்கியிருக்கவும் முடியும்.

ஏன் முக்கியம்?

3. கடவுளுடைய ஆட்சியைப் பற்றி சாத்தான் என்ன சொன்னான்?

3 ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு இருக்கிறதா என்று பிசாசாகிய சாத்தான் கேள்வி எழுப்பியிருக்கிறான். யெகோவா ஒரு கெட்ட ஆட்சியாளர் என்று மக்களை நம்பவைக்க அவன் தீவிரமாக முயற்சி செய்கிறான். அதுமட்டுமல்ல, கடவுள் தங்களுக்கு எந்த நல்லதும் செய்வதில்லை என்று மக்கள் நம்ப வேண்டும் என்றும் அவன் விரும்புகிறான். மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொண்டால் ரொம்பவே சந்தோஷமாக இருப்பார்கள் என்று மறைமுகமாகச் சொன்னான். (ஆதி. 3:1-5) மனிதர்கள் யாருமே கடவுளுக்கு உண்மையோடு இருப்பதில்லை என்றும், பயங்கர கஷ்டங்கள் வரும்போது அவர்கள் யெகோவாவின் ஆட்சியை ஒதுக்கித்தள்ளிவிடுவார்கள் என்றும் அவன் மறைமுகமாகச் சொன்னான். (யோபு 2:4, 5) அதனால்தான், கடவுளுடைய ஆட்சி இல்லாத ஒரு வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதைக் காட்ட யெகோவா காலத்தை அனுமதிக்கிறார்.

4. யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்று ஏன் நிரூபிக்கப்பட வேண்டும்?

4 பிசாசின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது யெகோவாவுக்குத் தெரியும். அப்படியென்றால், அவன் சொன்னதை நிரூபிப்பதற்காக அவனுக்கு ஏன் காலத்தை அனுமதித்திருக்கிறார்? இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதில் தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. (சங்கீதம் 83:18-ஐ வாசியுங்கள்.) ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் அரசாட்சியை ஒதுக்கித்தள்ளினார்கள்; அந்தச் சமயத்திலிருந்து இன்னும் நிறைய பேர் அதை ஒதுக்கித்தள்ளியிருக்கிறார்கள். அதனால், பிசாசு சொன்னது சரியாக இருக்குமோ என்று சிலர் நினைக்கலாம். யெகோவாவின் உன்னத அரசாட்சி சம்பந்தமாக பிசாசு எழுப்பிய கேள்விக்கு, தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் பதில் கிடைக்காதவரை சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் வாய்ப்பே இல்லை. ஆனால் யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, எல்லாரும் அவருடைய ஆட்சியின்கீழ் என்றென்றும் வாழ்வார்கள். இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் சமாதானம் இருக்கும்.—எபே. 1:9, 10.

5. யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிக்கும் விஷயத்தில் நமக்கு என்ன பங்கு இருக்கிறது?

5 கடவுளுடைய உன்னத அரசாட்சியே சரியானது என்று நிரூபிக்கப்படும். சாத்தான் மற்றும் மனிதர்களின் ஆட்சி முழுவதுமாக தோல்வியடையும். பிறகு, அது முழுவதுமாக ஒழிக்கப்படும். தன் மேசியானிய அரசாங்கத்தின் மூலம் கடவுள் ஆட்சி செய்வார்; அந்த ஆட்சி முழு வெற்றியடையும். மனிதர்களால் கடவுளுக்கு உத்தமத்தோடு இருக்க முடியும் என்றும், கடவுளுடைய அரசாட்சிக்கு உண்மையான ஆதரவைத் தர முடியும் என்றும் உண்மையுள்ளவர்கள் நிரூபித்திருப்பார்கள். (ஏசா. 45:23, 24) அந்த உண்மையுள்ளவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நிச்சயம் விரும்புவீர்கள்! அப்படியென்றால், உன்னத அரசாட்சி சம்பந்தப்பட்ட விஷயம் உண்மையிலேயே எந்தளவு முக்கியமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மீட்பைவிட முக்கியம்!

6. யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்று நிரூபிக்கப்படுவது எந்தளவு முக்கியம்?

6 நம் சந்தோஷத்தைவிட யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்று நிரூபிக்கப்படுவதுதான் மிக மிக முக்கியம். அதற்காக, நம் மீட்பைப் பற்றி யெகோவாவுக்குக் கவலை இல்லை என்றோ, நம்மேல் அவருக்கு அக்கறை இல்லை என்றோ அர்த்தம் கிடையாது. இதை எப்படிச் சொல்லலாம்?

7, 8. யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்று நிரூபிக்கப்படும்போது நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?

7 யெகோவா மனிதர்களை மிகவும் நேசிக்கிறார்; உயர்வாக மதிக்கிறார். நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்காக தன் அருமை மகனையே கொடுத்திருக்கிறார். (யோவா. 3:16; 1 யோ. 4:9) நம் எதிர்காலத்தைப் பற்றிய வாக்குறுதிகளை யெகோவா காப்பாற்றாமல் போனால், சாத்தானும் யெகோவாவின் விரோதிகளும் சொன்னது சரியென்று ஆகிவிடும். யெகோவா பொய் சொல்கிறவர் என்றும், மனிதர்களுக்கு அவர் நல்லது செய்வதில்லை என்றும், அவர் நியாயமற்ற விதத்தில் ஆட்சி செய்கிறார் என்றும் சாத்தான் சொல்கிறான். “அவர் வருவதாக வாக்குக் கொடுத்தாரே, அவர் எங்கே? நம் முன்னோர்களும் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். உலகம் உண்டான காலத்திலிருந்தே எல்லாம் அப்படியேதான் இருக்கிறது” என்று யெகோவாவை எதிர்ப்பவர்கள் அவருடைய வாக்குறுதிகளைப் பற்றி கேலி செய்கிறார்கள். (2 பே. 3:3, 4) ஆனால், தான் கொடுத்த வாக்குறுதிகளை யெகோவா காப்பாற்றுவார். தன் உன்னத அரசாட்சியே சரியானது என்பதை நிரூபிக்கும்போது, கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு மீட்பு கிடைக்கும்படி பார்த்துக்கொள்வார். (ஏசாயா 55:10, 11-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் உன்னத அரசாட்சி அன்பை அடிப்படையாகக் கொண்டது! அதனால், தன் ஊழியர்களை அவர் எப்போதுமே நேசிப்பார், உயர்வாக மதிப்பார் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்!—யாத். 34:6.

8 யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்று நிரூபிக்கப்படுவது முக்கியம் என்பதற்காக, நம் மீட்பைப் பற்றி யெகோவாவுக்குக் கவலை இல்லை என்று அர்த்தம் கிடையாது. யெகோவாவுக்கு நம்மேல் அதிக அக்கறை இருக்கிறது. எது மிக முக்கியம் என்பதை மனதில் வைத்து, யெகோவாவின் ஆட்சியை உண்மையோடு ஆதரிக்க வேண்டும்.

ஏன் சரியான கண்ணோட்டம் இருக்க வேண்டும்?

9. யோபுவைப் பற்றி சாத்தான் என்ன சொன்னான்? (ஆரம்பப் படம்)

9 யெகோவாவின் உன்னத அரசாட்சியைப் பற்றிய சரியான கண்ணோட்டம் நமக்கு ஏன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி, முதல் முதலில் எழுதப்பட்ட பைபிள் புத்தகங்களில் ஒன்றான யோபு புத்தகம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. பயங்கரமான சோதனைகளை அனுபவித்தால், யோபு கடவுளை ஒதுக்கித்தள்ளிவிடுவார் என்று சாத்தான் சொன்னதாக அந்தப் புத்தகத்தில் வாசிக்கிறோம். அதுமட்டுமல்ல, யோபுவுக்கு சோதனைகளைக் கொடுக்கும்படி அவன் கடவுளிடமே கேட்டதாக அந்தப் புத்தகம் சொல்கிறது. ஆனால், கடவுள் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, சாத்தானே யோபுவைச் சோதிக்கும்படி விட்டுவிட்டார். “யோபுவிடம் இருக்கிற எல்லாவற்றையும் உன் கையில் விட்டுவிடுகிறேன்” என்று அவனிடம் சொன்னார். (யோபு 1:7-12-ஐ வாசியுங்கள்.) சீக்கிரத்திலேயே தன் ஊழியர்களையும் சொத்துசுகங்களையும் யோபு இழந்தார். தன் 10 பிள்ளைகளையும் மரணத்தில் பறிகொடுத்தார். இந்த எல்லா சோக சம்பவங்களுக்கும் கடவுள்தான் காரணம் என்பது போல சாத்தான் காட்டினான். (யோபு 1:13-19) அடுத்ததாக, தாங்க முடியாத, அருவருப்பான ஒரு நோயை யோபுவுக்கு வரவைத்தான். (யோபு 2:7) யோபுவின் மனைவியும் போலி நண்பர்கள் மூன்று பேரும் யோபுவின் மனதை நோகடிக்கும் விதத்தில் பேசியது எல்லாவற்றையும்விட பெரிய கொடுமை!—யோபு 2:9; 3:11; 16:2.

10. (அ) யோபு தன் உத்தமத்தை எப்படிக் காட்டினார்? (ஆ) யோபு ஏன் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டியிருந்தது?

10 யோபுவைப் பற்றி சாத்தான் சொன்னது உண்மைதானா? இல்லை. பயங்கரமான சோதனைகளை அனுபவித்தபோதும், யோபு கடவுளை ஒதுக்கித்தள்ளவில்லை. (யோபு 27:5) ஆனால், உண்மையிலேயே எது முக்கியம் என்பதை யோபு கொஞ்ச நேரத்துக்கு மறந்துவிட்டார்; தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று திரும்பத் திரும்பச் சொன்னார். தன் கஷ்டங்களுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள தனக்கு உரிமை இருப்பதாகவும் நினைத்தார். (யோபு 7:20; 13:24) யோபு அனுபவித்த கஷ்டங்களைப் பார்க்கும்போது, நாம் ஒருவேளை அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளலாம். இருந்தாலும், யோபுவின் எண்ணம் தவறாக இருந்ததால் யெகோவா அவரைத் திருத்தினார். ஆனால், அவர் அதை எப்படிச் செய்தார்?

11, 12. யெகோவா யோபுவுக்கு எதைப் புரியவைத்தார், அதற்கு யோபு எப்படிப் பிரதிபலித்தார்?

11 யெகோவா யோபுவிடம் சொன்ன விஷயங்கள், யோபு புத்தகத்தின் 38 முதல் 41 வரையுள்ள அதிகாரங்களில் இருக்கின்றன. ஆனால், யோபு ஏன் கஷ்டப்படுகிறார் என்பதற்கான காரணத்தை இந்த 4 அதிகாரங்களில் ஒரு இடத்தில்கூட யெகோவா சொல்லவில்லை. தன்னோடு ஒப்பிடும்போது யோபு எவ்வளவு சிறியவர் என்பதைப் புரியவைக்க வேண்டும் என்று யெகோவா நினைத்தார். அதோடு, யோபுவின் பிரச்சினைகளைவிட வேறு முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் அவருக்குப் புரியவைத்தார். (யோபு 38:18-21-ஐ வாசியுங்கள்.) தன் எண்ணம் தவறு என்பதைப் புரிந்துகொள்ள யோபுவுக்கு இது உதவியது.

12 கஷ்டங்களை அனுபவித்த யோபுவிடம் யெகோவா கரிசனை இல்லாமல் பேசிவிட்டார் என்று சொல்லலாமா? இல்லை. யோபுகூட அப்படி நினைக்கவில்லை. யெகோவாவின் அறிவுரை எவ்வளவு மதிப்பானவை என்பதை யோபு புரிந்துகொண்டார். அதனால்தான், “நான் சொன்னதையெல்லாம் திரும்ப வாங்கிக்கொள்கிறேன். மண்ணிலும் சாம்பலிலும் உட்கார்ந்து வருத்தப்படுகிறேன்” என்று சொன்னார். (யோபு 42:1-6) அதற்கு முன்பே, யோபு தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள எலிகூ என்ற ஒரு இளம் மனிதர் உதவினார். (யோபு 32:5-10) யெகோவாவின் அன்பான அறிவுரைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, யோபு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அதனால், யோபுவின் உண்மைத்தன்மையை நினைத்து தான் சந்தோஷப்படுவதாக யெகோவா மற்றவர்களிடம் சொன்னார்.—யோபு 42:7, 8.

13. யோபுவின் சோதனைகள் முடிவுக்கு வந்த பிறகும், யெகோவாவின் அறிவுரைகள் அவருக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தன?

13 யோபுவின் சோதனைகள் முடிவுக்கு வந்த பிறகும், யெகோவாவின் அறிவுரைகள் அவருக்குப் பிரயோஜனமாக இருந்தன. “யெகோவா முன்பைவிட அதிகமாக யோபுவை ஆசீர்வதித்தார்.” காலப்போக்கில், யோபுவுக்கு “ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள்.” (யோபு 42:12-14) யோபு இந்தப் பிள்ளைகளை நேசித்தாலும், இறந்துபோன பிள்ளைகளைப் பற்றிய வருத்தம் அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும். தனக்கும் தன் குடும்பத்துக்கும் நடந்த மிக மோசமான சம்பவங்களை யோபு மறந்திருக்கவே மாட்டார். தான் பட்ட கஷ்டங்களுக்கான காரணம் கடைசியில் யோபுவுக்குத் தெரிய வந்திருந்தாலும், யெகோவா ஏன் தனக்கு இந்தளவு கஷ்டத்தை அனுமதித்தார் என்ற கேள்வி அவருக்கு வந்திருக்கலாம். இது போன்ற யோசனைகள் யோபுவுக்கு வந்திருந்தால், யெகோவா கொடுத்த ஆலோசனைகளை அவர் ஞாபகப்படுத்திப் பார்த்திருப்பார். அது அவருக்கு ஆறுதலைத் தந்திருக்கும். சரியான எண்ணத்தை காத்துக்கொள்ளவும் உதவியிருக்கும்.—சங். 94:19, அடிக்குறிப்பு.

தன்னுடைய படுக்கையிலிருந்து ஒரு சகோதரி சாட்சி கொடுக்கிறார்; சகோதரர் ஒருவர் கையில் புகைப்படத்தை வைத்திருக்கிறார்; பேரழிவு நடந்த இடத்தில் ஒரு அம்மா தன்னுடைய மகளைத் தூக்கிக்கொண்டிருக்கிறார்

நம் சொந்தப் பிரச்சினைகளைப் பற்றி யோசிக்காமல் யெகோவாவின் உன்னத அரசாட்சியைப் பற்றி யோசிக்கிறோமா? (பாரா 14)

14. யோபு புத்தகத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

14 நம் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும், நாம் ஆறுதலடையவும் யோபு புத்தகம் நமக்கு உதவுகிறது. இந்தப் புத்தகம், ‘நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டிருக்கிறது; அது நமக்கு நம்பிக்கை தருகிறது. நம்மை ஆறுதல்படுத்துகிறது, சகித்திருக்க நமக்குப் பலம் தருகிறது.’ (ரோ. 15:4) இந்தப் புத்தகத்திலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? நம் பிரச்சினைகளிலேயே நாம் மூழ்கிவிடக் கூடாது. அப்படி மூழ்கிவிட்டால், யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்று நிரூபிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடுவோம்! கஷ்டங்கள் மத்தியிலும் தொடர்ந்து உண்மையோடு இருப்பதன் மூலம், யோபுவைப் போலவே நாமும் யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டலாம்.

15. சோதனைகள் மத்தியிலும் உண்மையோடு சகித்திருக்கும்போது நம்மால் என்ன செய்ய முடியும்?

15 உண்மையோடு இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி யோசித்துப் பார்ப்பது நமக்கு ஆறுதலைத் தருகிறது. ஏனென்றால், சோதனைகள் மத்தியிலும் உண்மையோடு இருப்பது, யெகோவாவின் உன்னத அரசாட்சியை நாம் ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. (நீதி. 27:11) யெகோவா நம்மேல் கோபமாக இருப்பதால் நமக்குச் சோதனைகள் வருவதில்லை என்பதை யோபு புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொண்டோம். சோதனைகள் மத்தியிலும் உண்மையோடு சகித்திருக்கும்போது, நம்மால் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த முடியும். அதோடு, நம் எதிர்கால நம்பிக்கையும் பலப்படும். (ரோமர் 5:3-5-ஐ வாசியுங்கள்.) “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்” என்பதை யோபுவின் அனுபவம் நமக்குக் காட்டுகிறது. (யாக். 5:11) அதனால், தன் உன்னத அரசாட்சியை ஆதரிக்கும் எல்லாருக்கும் யெகோவா பலன் கொடுப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். இதைத் தெரிந்துவைத்திருக்கும்போது, எல்லாவற்றையும் ‘பொறுமையோடும் சந்தோஷத்தோடும் சகிப்போம்.’—கொலோ. 1:11.

தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்!

16. யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் ஏன் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்?

16 யெகோவாவின் உன்னத அரசாட்சியே சரியானது என்பதை நிரூபிப்பது ரொம்பவே முக்கியம்; ஆனால், எப்போதும் இதன்மீது நம் கவனத்தைச் செலுத்துவது நமக்கு ஒருவேளை கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், சில சமயங்களில் நம் பிரச்சினைகளிலேயே நாம் மூழ்கிவிடலாம். பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், சின்ன சின்னப் பிரச்சினைகள்கூட நமக்குப் பெரிதாகத் தெரியலாம். அதனால், நமக்கு என்ன பிரச்சினைகள் வந்தாலும் சரி, யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

17. யெகோவாவின் சேவையை மும்முரமாகச் செய்வது, மிக முக்கியமான விஷயத்தை மறந்துவிடாமல் இருக்க எப்படி உதவும்?

17 யெகோவாவின் சேவையை மும்முரமாகச் செய்துகொண்டிருந்தால், மிக முக்கியமான விஷயத்தை நாம் மறந்துவிட மாட்டோம். ரினீ என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், வலியில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவருக்குப் புற்றுநோயும் இருந்தது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது, அங்கிருந்த ஊழியர்களிடமும் நோயாளிகளிடமும் பார்வையாளர்களிடமும் பிரசங்கித்தார். ஒரு சமயம், அவர் இரண்டரை வாரங்களுக்கு மருத்துவமனையில் இருந்தார். அப்போது, மொத்தம் 80 மணிநேரங்கள் ஊழியம் செய்தார். சாகும் நிலைமையில்கூட, யெகோவாவின் உன்னத அரசாட்சியின் முக்கியத்துவத்தை அவர் மறந்துவிடவில்லை. யெகோவாவின் உன்னத அரசாட்சிக்கு ஆதரவு கொடுத்தது அவருக்குச் சமாதானத்தைத் தந்தது.

18. யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிப்பது சம்பந்தமாக ஜெனிஃபரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

18 ஒவ்வொரு நாளும் சின்ன சின்னப் பிரச்சினைகளைச் சமாளிப்பதன் மூலம், நாம் யெகோவாவின் அரசாட்சியை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டலாம். ஜெனிஃபர் என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். ஒரு சமயம், தன் ஊருக்குப் போக வேண்டிய விமானத்துக்காக 3 நாட்கள் அவர் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டியிருந்தது. வரிசையாக ஒவ்வொரு விமானமும் ரத்து செய்யப்பட்டதைப் பார்த்து அவர் ரொம்பவே நொந்துபோனார்; தனிமையில் விடப்பட்டது போல உணர்ந்தார். ஒருவேளை தன் நிலைமையை நினைத்து அவர் பரிதாபப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, அவரைப் போலவே காத்துக்கொண்டிருந்த மற்ற பயணிகளிடம் நல்ல செய்தியைப் பிரசங்கிக்க உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அதனால், அங்கே இருந்த நிறைய பேருக்கு அவர் பிரசங்கித்தார், ஏராளமான பிரசுரங்களையும் கொடுத்தார். “கஷ்டமான சூழ்நிலையிலயும் யெகோவா என்னை ஆசீர்வதிச்சத என்னால உணர முடிஞ்சது. பலன் தர்ற விதத்துல அவர பத்தி மத்தவங்ககிட்ட பேசுறதுக்கு அவர் என்னை பலப்படுத்தினார்” என்று அவர் சொல்கிறார்.

19. யெகோவாவின் உன்னத அரசாட்சி சம்பந்தமாக அவருடைய மக்கள் என்ன செய்கிறார்கள்?

19 யெகோவாவின் உன்னத அரசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷயத்தில் பொய் மதத்துக்கும் உண்மை மதத்துக்கும் இருக்கிற வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது. யெகோவாவின் உன்னத அரசாட்சியை உண்மை வணக்கத்தார் ரொம்ப காலமாகவே ஆதரித்திருக்கிறார்கள். உண்மை வணக்கத்தின் ஆதரவாளர்களாக, நாம் ஒவ்வொருவரும் யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிக்க வேண்டும்.

20. யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிப்பதற்காக நாம் எடுக்கிற முயற்சிகளைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார்?

20 யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்வதன் மூலமும், சோதனைகளைச் சகித்திருப்பதன் மூலமும் அவருடைய உன்னத அரசாட்சியை ஆதரிப்பதற்கு நாம் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் யெகோவா உயர்வாக மதிக்கிறார். (சங். 18:25) நம் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் தகுதி யெகோவாவின் உன்னத அரசாட்சிக்கு இருக்கிறது என்பதைப் பற்றியும், இன்னும் முழுமையான விதத்தில் நாம் எப்படி அதற்கு ஆதரவு காட்டலாம் என்பதைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்