தேவனுக்கு என் குடும்பத்தார் காட்டிய உண்மைத்தன்மையே எனக்கு தூண்டுகோல்
ஹார்ஸ்ட் ஹென்ஷல் என்பவரால் கூறப்பட்டது
“இந்தக் கடிதம் உன் கைக்குக் கிடைத்தால் சந்தோஷப்படு, ஏனென்றால் நான் கடைசி வரை சகித்துவிட்டேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் என்னைக் கொல்லப்போகிறார்கள்.” இவைதான் என் அப்பா எழுதிய கடைசிக் கடிதத்தின் ஆரம்ப வார்த்தைகள். அவர், ஹிட்லரின் ராணுவத்தில் பணி செய்ய மறுத்ததன் காரணமாக மே 10, 1944-ல் கொல்லப்பட்டார். அவரும் அதேவிதமாக என் அம்மாவும் அக்காள் எல்ஃபிரிடியும் தேவனுக்கு உண்மையாக இருந்தது என் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை 1932-ஆம் வருடம், அதாவது நான் பிறந்த சமயம் என் அப்பா வாசிக்க ஆரம்பித்தார். மற்ற விஷயங்களோடுகூட சர்ச்சுகளில் இருந்த பாதிரியார்களின் போலித்தனத்தை அவர் கவனித்தார். அதன் காரணமாக சர்ச்சுகளில் அவர் பற்றுதலை இழந்தார்.
1939-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் அப்பா ஜெர்மானிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். “பைபிளின்படி கொலை செய்வது தவறு, நான் போவது சரியில்லை” என்று அம்மாவிடம் சொன்னார்.
“நீங்க போகலைன்னா அவங்க உங்கள கொன்னுபோடுவாங்க. அப்பறம் உங்க குடும்பத்துடைய கதி என்னவாகும்?” என்பதாக அம்மா பதில் சொன்னார்கள். ஆகவே அப்பா ஒரு சிப்பாய் ஆனார்.
இதற்கு பின், இதுநாள்வரை பைபிளைப் படிக்காத என் அம்மா யெகோவாவின் சாட்சிகளை தொடர்பு கொள்ள முயன்றார்கள், அந்த நேரத்தில் அது மிக ஆபத்தான ஒரு செயல். அம்மா, டோரா என்ற பெண்ணை சந்தித்தார்கள்; அச்சமயம், அவருடைய கணவன் தன் விசுவாசத்தின் நிமித்தம் கான்சன்ட்ரேசன் முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். அம்மாவிடம் காவற்கோபுர பத்திரிகையைக் கொடுத்து டோரா இவ்விதம் எச்சரித்தார்: “இந்தப் பத்திரிகையை நான்தான் உங்களுக்கு குடுத்தேன்னு கெஸ்டெபோவிற்கு (ரகசிய போலீஸ்) தெரிஞ்சா என்னைக் கொன்னுடுவாங்க என்பதை நல்லா ஞாபகத்தில வைச்சுக்குங்க.”
அதன்பின் அம்மா யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை அதிகமாக ஏற்றுக்கொண்டார்கள், அவற்றில் இருக்கும் பைபிள் சத்தியங்களை போற்ற ஆரம்பித்தார்கள். அப்பொழுது அருகில் இருக்கும் டரெஸ்டன் என்ற ஊரிலிருந்து மேக்ஸ் ரூப்ஸம் என்பவர் மீசன் என்ற இடத்திலிருந்த எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை சந்திக்க ஆரம்பித்தார். தன் உயிரைப் பணயம் வைத்து அவர் எங்களுக்கு பைபிளிலிருந்து சொல்லிக்கொடுத்தார். நடந்தது என்னவென்றால் வெகு சீக்கிரத்திலேயே கைது செய்யப்பட்டார்.
அம்மா பைபிளைக் கற்றுக்கொண்டதன் விளைவாக யெகோவாவின் பேரில் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டார்கள், தன்னை ஒப்புக்கொடுத்து, மே மாதம் 1943-ஆம் வருடம் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அதனை அடையாளப்படுத்தினார்கள். அப்பாவும் நானும் சில மாதங்களுக்குப் பிறகு முழுக்காட்டப்பட்டோம். அப்பொழுது 20 வயதாயிருந்த என் அக்காள் எல்ஃபிரிடி, டரெஸ்டனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார், அவரும் ஏறக்குறைய அதே சமயத்தில் முழுக்காட்டுதல் பெற்றார். இப்படியாக, இரண்டாம் உலகயுத்தம் தீவிரமாக நடக்கும் நேரத்தில் நாங்கள் நான்கு பேரும் எங்களை யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்தோம். 1943-ஆம் ஆண்டு அம்மா எங்கள் தங்கச்சிப் பாப்பா ரெனட்டைப் பெற்றெடுத்தார்கள்.
எங்கள் விசுவாசத்திற்காக துன்புறுத்தப்படுதல்
முழுக்காட்டப்படுவதற்கு முன்பாக நான் ஹிட்லர் இளைஞர் இயக்கத்திலிருந்து விலகினேன். ஒவ்வொருநாளும், பள்ளியில் கட்டாயம் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிட்லர் வாழ்த்துதலை சொல்லாததால், என் பள்ளி ஆசிரியர்களிடம் அடி வாங்கினேன். ஆனால் என் பெற்றோர் என்னை தைரியப்படுத்தினார்கள்; நான் உண்மையாக இருந்தேன் என்பதை நினைத்து சந்தோஷப்பட்டேன்.
ஆனால் சில சந்தர்ப்பங்களில் அடிக்கப்பட்டதாலோ பயத்தாலோ “ஹெயில் ஹிட்லர்!” என்று சொல்லி விடுவேன். வீட்டிற்கு செல்லும்போது என் கண்கள் குளமாகியிருக்கும்; என் பெற்றோர் அந்த நேரத்தில், நான் தைரியம்பெற்று எதிரியின் தாக்குதலை அடுத்தமுறை சமாளிக்க வேண்டும் என்று என்னோடு ஜெபம் செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில் பயத்தினால் சரியானதைச் செய்வதிலிருந்து பின்வாங்கியிருக்கிறேன், ஆனால் யெகோவா என்னை ஒருபோதும் கைவிடவில்லை.
ஒரு நாள் கெஸ்டெபோ ஆட்கள் வந்து எங்கள் வீட்டை சோதனை போட்டார்கள். “நீங்க யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரா?” என்பதாக கெஸ்டெபோ ஏஜென்ட் அம்மாவைக் கேட்டார். கதவின் மேல் சாய்ந்துகொண்டு உறுதியாக “ஆம்” என்று அம்மா சொன்னது, இன்னும் என் கண்களைவிட்டு நீங்கவில்லை; இதனால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதை அறிந்திருந்தும் அவ்விதம் சொன்னார்கள்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள், அம்மா ஒருவயதுகூட நிரம்பாத ரெனட்டை கவனிப்பதில் பிஸியாக இருந்த வேளையில் கெஸ்டெபோ ஆட்கள் கைது செய்வதற்காக வந்தார்கள். “நான் என் குழந்தைக்கு பாலூட்டிக்கிட்டு இருக்கேன்!” என்று அம்மா எதிர்த்தார்கள். ஆனால், போலீசாரோடு வந்த பெண், அம்மாவின் கையிலிருந்து குழந்தையை பிடுங்கிக்கொண்டு: “உடனே ரெடியாகு! நீ கிளம்பியாகணும்” என்றாள். இதை அம்மாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அப்பா அப்பொழுது கைது செய்யப்படாததால், நானும் என் தங்கச்சிப் பாப்பாவும் அப்பாவின் பாதுகாப்பில் இருந்தோம். அம்மா கைது செய்யப்பட்டு இரு வாரங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலை பள்ளிக்குச் செல்லும்முன் நான் அப்பாவை இறுக்கமாக அணைத்துவிட்டுப் பள்ளிக்கு சென்றேன். ராணுவத்திற்கு திரும்ப மறுத்ததின் நிமித்தம் அதே நாளில் என் அப்பா கைது செய்யப்பட்டார். அன்று மதியம் வீட்டிற்கு வந்தபோது அவரைக் காணவில்லை, அதன்பின் நான் அவரைப் பார்க்கவேயில்லை.
என் தாத்தா பாட்டி மற்றும் உறவினர் அனைவரும் யெகோவாவின் சாட்சிகளை எதிர்ப்பவர்கள், அவர்களில் சிலர் நாஜி கட்சியின் அங்கத்தினர்கள்; அவர்கள் என்னையும் என் தங்கச்சிப் பாப்பாவையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். பைபிளைப் படிப்பதற்கு அவர்கள் என்னை அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், பக்கத்துவீட்டுப் பெண்ணிடமிருந்து ஒரு பைபிளை வாங்கி யாருக்கும் தெரியாமல் வாசிக்க ஆரம்பித்தேன். என் தங்கச்சிப் பாப்பாவின் கட்டிலுக்கு அருகே முழங்கால்படியிட்டு ஜெபம் செய்வேன்.
இந்த நேரத்தில் என் அக்காள் எல்ஃபிரிடி தன் விசுவாசத்தின் சோதனைகளை சகித்தார். அவர் டரெஸ்டனிலுள்ள குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி செய்ய மறுத்தார், ஆனால், எப்படியோ மீசனில் பார்க்குகளையும் தோட்டங்களையும் பராமரிக்கும் வேலை அவருக்குக் கிடைத்தது. தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று சம்பளம் பெறும்போது “ஹெயில் ஹிட்லர்!” என்ற வாழ்த்துதலை சொல்ல மறுத்தார். சீக்கிரத்திலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விசனகரமாக, தொண்டை அழற்சி நோயாலும் ஸ்கார்லெட் காய்ச்சலாலும் (scarlet fever) பாதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட சில வாரங்களிலேயே எல்ஃபிரிடி இறந்து போனார். அப்பொழுது அவருக்கு வயது 21 மட்டுமே. கடைசியாக அவர் எழுதிய கடிதங்கள் ஒன்றில் லூக்கா 17:10-ஐ மேற்கோள் காட்டியிருந்தார், ‘நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்ய வேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்.’ அவர் தேவனிடத்தில் வைத்திருந்த உண்மைத்தன்மை நான் பலப்பட்டிருக்க எனக்கு தொடர்ந்து உதவியிருக்கிறது.—கொலோசெயர் 4:11.
அப்பாவுக்கு ஏற்பட்ட சோதனை
அப்பா ஜெயிலில் இருந்த சமயத்தில் என் தாத்தா—அம்மாவின் அப்பா—அவரது மனதை மாற்றும் முயற்சியில், சிறைக்குச் சென்று சந்தித்தார். கையும் காலும் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அப்பா அவர் முன்பு கொண்டுவரப்பட்டார். குழந்தைகளுக்காகவாவது ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று தாத்தா சொன்னார்; ஆனால் அப்பா அசையவேயில்லை. சிறைக்காவலரில் ஒருவர் தாத்தாவிடம் இவ்வாறு சொன்னார்: “இந்த ஆளுக்கு பத்து புள்ளக்குட்டிங்க இருந்தாக்கூட மனச மாத்திக்க மாட்டான்ங்க.”
தாத்தா செமகோபத்தில் வீட்டிற்கு திரும்பினார். “உருப்படாதவன்! ஒன்னுக்கும் பிரயோஜன மில்லாதவன்! பெத்த பிள்ளைங்கள இப்படியா தவிக்க விடுவான்?” என்பதாகக் கத்தினார். தாத்தா மன அமைதியை இழந்திருந்தாலும், அப்பா உறுதியாக இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டதில் சந்தோஷப்பட்டேன்.
கொஞ்ச நாட்களுக்குப்பின் அப்பாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டார். அதன் பிறகு எனக்கு அந்தக் கடைசி கடிதம் கிடைத்தது. அம்மாவை எங்கே சிறை வைத்திருந்தார்கள் என்பது அவருக்கு தெரியாததால் எனக்கு அந்தக் கடிதத்தை எழுதினார். நான் மேல் மாடியில் இருந்த என்னுடைய படுக்கை அறைக்குச் சென்று இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை வாசித்தேன். எனக்கு வருத்தமாக இருந்தது, அழுதேன், ஆனால் அவர் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார் என்பதைக் குறித்து மகிழ்ந்தேன்.
அம்மாவின் துக்கம்
நீதி மன்றத்தில் தன் வழக்கு விசாரணைக்கு வரும்வரை, தெற்கு ஜெர்மனியில் இருந்த ஒரு சிறைச்சாலைக்கு அம்மா அனுப்பப்பட்டார்கள். ஒரு நாள் ஒரு காவலாளி ஜெயில் அறைக்குள் வந்து, அம்மாவிடம் தான் சொல்லப்போவதை உட்கார்ந்துகொண்டே கேட்கலாம் என்று சிநேக பாணியில் சொன்னார். ஆனால் அம்மா எழுந்து நின்று, “எனக்குத் தெரியும், என் கணவர் கொலை செய்யப்பட்டார்” என்றார்கள். பிறகு அவருடைய இரத்தக்கறைப் படிந்த துணிகளை அம்மாவுக்கு அனுப்பி வைத்தனர், அவை, சாவதற்குமுன் அவர் அனுபவித்த சித்திரவதையை மௌனமாக பறைசாற்றின.
இன்னொரு சந்தர்ப்பத்தில் அம்மாவை சிறை அலுவலகத்திற்கு திடீரென்று அழைத்து: “உன் மகள் ஜெயிலில் செத்துப்போயிட்டா. அவளை எப்படி அடக்கம் செய்யணும்னு விரும்புரே?” என்று கேட்டனர். அந்த செய்தி திடீரென்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்திலும் வந்ததால் அம்மா அதிர்ச்சியில் சிலைபோல நின்றார்கள். ஆனால் யெகோவாவிடம் அவர்களுக்கு இருந்த உறுதியான விசுவாசம் தாங்கிக்கொள்ள உதவியது.
என்னுடைய சொந்தக்காரர்கள் என்னையும் என் தங்கையையும் நன்றாக கவனித்துக் கொண்டார்கள். எங்களிடம் அன்பாக இருந்தார்கள். சொல்லப்போனால் அவர்களில் ஒருவர் என் பள்ளி ஆசிரியர்களை சந்தித்து என்னிடம் கனிவோடு நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஆகவே ஆசிரியர்கள்கூட நட்புறவுடன் பழக ஆரம்பித்தனர்; நான் “ஹெயில் ஹிட்லர்!” என்று அவர்களைப் பார்த்து வாழ்த்துதல் சொல்லாத சந்தர்ப்பத்திலும் என்னை தண்டிப்பது கிடையாது. இப்படிப்பட்ட அன்பு காட்டப்பட்டதன் நோக்கம் என்னுடைய பைபிள் நம்பிக்கைகளில் இருந்து என்னை திசைதிருப்பவே. விசனகரமாக, இதற்கு கொஞ்சம் வெற்றியும் கிடைத்தது.
மே 1945-ல் போர் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக நானே விருப்பப்பட்டு ஹிட்லர் இளைஞர் அமைப்பின் சேவைகளில் பங்கு கொண்டேன். இதைப்பற்றி அம்மாவுக்கு கடிதம் எழுதினேன்; இக்கடிதங்களிலிருந்து நான் யெகோவாவை சேவிக்கும் என் இலக்கைப் புறக்கணித்து விட்டேன் என்பதாக அம்மா நினைத்தார்கள். அப்பா, எல்ஃபிரிடி ஆகியோரின் மரண செய்திகளை கேட்டதைவிட, அந்தக் கடிதங்கள் தன்னை நிலைகுலையச் செய்தன என்று, பின்பு அவற்றைப்பற்றி அம்மா குறிப்பிட்டார்கள்.
சீக்கிரத்திலேயே போர் முடிவுக்கு வந்தது, அம்மா சிறையிலிருந்து திரும்பினார்கள். அவருடைய உதவியினால் நான் ஆவிக்குரிய சமநிலையைத் திரும்பப் பெற்றேன்.
முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தல்
1949-ம் ஆண்டின் பிற்பகுதியில், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வட்டாரக் கண்காணி மல்கியா 3:10-ஐக் கலந்தாலோசித்தார்; அவ்வசனம் சொல்வதாவது: “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டு வாருங்கள்; . . . அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” முழுநேர பிரசங்க வேலை செய்வதற்கு உந்துவிக்கப்பட்டு அப்ளிகேஷனை கொடுத்தேன். ஆகவே ஜனவரி 1, 1950-ல் ஒரு பயனியர் ஆனேன்; முழுநேரப் பிரசங்கிகள் அவ்வாறே அழைக்கப்படுகிறார்கள். பிறகு, பயனியர்களின் தேவை அதிகம் இருந்த ஸ்பெர்ம்பர்க் என்ற இடத்திற்கு சென்றேன்.
அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கிழக்கு ஜெர்மனியில் மாக்டிபர்க் என்ற நகரில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் பணிபுரிய அழைக்கப்பட்டேன். ஆனால், நான் போய்ச்சேர்ந்த இரண்டாவது நாளே, அதாவது ஆகஸ்ட் 31-ஆம் தேதி, குற்றவாளிகள் மறைந்திருக்கிறார்கள் என்பதாக சொல்லிக்கொண்டு எங்கள் அலுவலகத்திற்குள் போலீஸ்காரர்கள் ஓடி வந்தார்கள். அநேக சாட்சிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர், ஆனால் நான் அங்கிருந்து எப்படியோ தப்பி, மேற்கு பெர்லினில் உள்ள உவாட்ச்டவர் அலுவலகத்திற்கு போய்ச்சேர்ந்தேன். மாக்டிபர்கில் என்ன நடந்தது என்பதை அங்கே விவரித்தேன். அதேநேரத்தில் கிழக்கு ஜெர்மனி முழுவதும் அநேக சாட்சிகள் கைது செய்யப்படுவதாக கேள்விப்பட்டேன். போலீஸ் என்னை ஸ்பெர்ம்பர்கில் தேடிக்கொண்டிருப்பதும் எனக்கு தெரியவந்தது!
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுதல்
கிழக்கு பெர்லினில் பயனியர் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன். சில மாதங்களுக்குப்பின் பைபிள் பிரசுரங்களை மேற்கு பெர்லினிலிருந்து கிழக்கு ஜெர்மனிக்கு கூரியராக எடுத்துச் செல்லும்போது கைது செய்யப்பட்டு, காட்பஸ் என்ற நகரத்துக்கு கொண்டு போகப்பட்டு வழக்கு விசாரணை செய்யப்பட்டு 12 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டேன்.
மற்ற விஷயங்களோடு, யுத்தத்தை தூண்டிவிடுபவன் என்பதாகவும் என்மேல் குற்றஞ்சுமத்தினார்கள். வழக்கு விசாரணையின்போது, கடைசியாக இப்படிச் சொன்னேன்: “என் தந்தை யெகோவாவின் சாட்சியாக இருந்ததால் யுத்தத்தில் பங்கேற்க மறுத்ததற்காக சிரச்சேதம் செய்யப்பட்டார், அப்படியிருக்கும்போது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாகிய என்னை எப்படி யுத்தத்தை தூண்டிவிடுபவன் என்று கண்டனப்படுத்தலாம்?” ஆனால் அவர்களுக்கோ சத்தியத்தில் ஆர்வம் இல்லை.
என் 19-வது வயதிலே, 12 வருடங்கள் சிறையிலே அடைபட்டுகிடக்கவேண்டும் என்பதை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருந்தது. ஆனால் அநேகர் அதே விதமாக தண்டனை வழங்கப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். சில நேரங்களில் அதிகாரிகள் சாட்சிகளை ஒன்றாக சேராதபடி பிரித்து வைத்தனர்; அப்பொழுது நாங்கள் பைபிள் சத்தியங்களை மற்ற ஆட்களோடு கலந்தாலோசிப்போம், அவர்களில் சிலர் சாட்சிகளானார்கள்.
வேறு சந்தர்ப்பங்களில் சாட்சிகளாகிய எங்களை ஒரே அறையில் அடைத்து வைத்தனர். அந்தச் சந்தர்ப்பங்களில் பைபிளை நன்றாக தெரிந்துகொள்ள முழு கவனம் செலுத்தினோம். நாங்கள் பைபிளின் முழு அதிகாரங்களையும் மனப்பாடம் செய்தோம்; ஏன், சில பைபிள் புத்தகங்களைக்கூட மனப்பாடம் செய்ய முயன்றோம். ஒரு நாளில் என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன கற்க வேண்டும் என்றும் சில குறிப்பிட்ட இலக்குகளை வைத்தோம். சில சந்தர்ப்பங்களில் இதில் நாங்கள் ரொம்ப பிஸியாக இருந்ததால், ஒருவருக்கொருவர் “எங்களுக்கு நேரமே இல்லை,” என்று சொல்வோம், ஆனால் உண்மையில் நாங்கள் சிறைகளில் முழு நாளையும் வேறு எந்த வேலை நியமிப்புமின்றி கழித்திருக்கிறோம்!
இரகசிய போலீஸ் விசாரணைகள் பயங்கர சோர்வுண்டாக்குபவை. அவை, தொடர்ந்து இரவு பகலாக அநேக பயமுறுத்துதல்களுடன் நீடிக்கும். ஒரு சமயம் நான் மிகவும் சோர்வடைந்து மனம் தளர்ந்துபோனேன், என்னால் ஜெபம்கூட செய்ய முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப்பின், ஜெயில் சட்டங்கள் எழுதப்பட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அட்டையை எந்தக் காரணமும் இல்லாமல் கழற்றினேன். அதை திருப்பியபோது ஏதோ எழுத்து தெரிந்தது. இருந்த கொஞ்ச வெளிச்சத்தில் தூக்கிப் பிடித்து பார்த்தபோது இந்த வார்த்தைகள் தெரிந்தன: “உடல் கொல்வோர்க்கஞ்சாதே,” “உண்மையுள்ளோரை நான் காப்பேன், என் கண்மணிபோல் பார்ப்பேன்.” இவை இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளுடைய பாடல் புத்தகத்தில் பாடல் எண் 27-ல் காணப்படுகின்றன!
இன்னொரு சகோதரன் இதேவிதமான சூழ்நிலையில் இந்த ஜெயில் அறையில் இருந்திருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது, யெகோவா அவரை பலப்படுத்தியிருக்கிறார். அந்த நொடியே எனக்குள் புதிய பலம் பிறந்தது; என்னை இப்படி உற்சாகப்படுத்தியதற்காக யெகோவாவிற்கு நன்றி சொன்னேன். நான் என்னுடைய சொந்த பலத்தில் வெற்றி பெற முடியாது என்றாலும், யெகோவாவின் உதவியால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று இந்த அனுபவம் எனக்கு கற்றுத்தந்தது. ஆகவே என் விருப்பமெல்லாம், இந்தப் பாடத்தை நான் ஒருகாலும் மறக்கக்கூடாது என்பதே.
அம்மா மேற்கு ஜெர்மனிக்குச் சென்று விட்டபடியால், அந்த நேரத்தில் என்னோடு அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் ஹானா, நான் சிறையில் இருந்த காலமெல்லாம் அங்கு வந்து என்னை சந்திப்பாள். நானும் அவளும் ஒரே சபையில் வளர்ந்தோம், எங்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவள். அவள் ஊக்கமூட்டும் கடிதங்களையும் அருமையான உணவுப் பொட்டலங்களையும் அனுப்புவாள். என் தண்டனைக்காலமான 12 வருடங்களில் 6 வருடங்களை கழித்தப்பின், 1957-ஆம் ஆண்டு விடுதலை கிடைத்தவுடன் அவளை திருமணம் செய்துகொண்டேன்.
என் அன்பான மனைவியாக, ஹானா எங்களுக்கு நியமிக்கப்பட்ட வித்தியாசமான வேலைகளில் என்னோடு உத்தமத்தன்மையுடன் சேவை செய்தாள். எல்லா சந்தர்ப்பங்களிலும் எனக்கு பெரும் பக்க பலமாக இருந்தாள். எங்களுடைய முழுநேர சேவை முழுவதிலும், எனக்காக அவள் செய்த யாவற்றிற்கும் யெகோவா தேவனே அவளுக்கு கைமாறு செலுத்த முடியும்.
ஜெயிலிலிருந்து வந்த பிறகு செய்த ஊழியம்
மேற்கு பெர்லினிலிருந்த உவாட்ச்டவர் அலுவலகத்தில் ஹானாவும் நானும் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தோம். அங்கே கட்டடம் கட்டும் பணியில் ஒரு தச்சனாக நியமிக்கப்பட்டேன். பிறகு நாங்கள் இருவரும் மேற்கு ஜெர்மனியில் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம்.
வில்லி போல் என்பவர் அந்தச் சமயத்தில் மேற்கு பெர்லினில் எங்கள் வேலையை மேற்பார்வையிட்டார்; அவர் என்னிடம் வந்து ஆங்கிலத்தை தொடர்ந்து கற்றுக்கொள்ளுமாறு உற்சாகப்படுத்தினார். “எனக்கு நேரமில்லை” என்று பதில் சொன்னேன். ஆனால் கீழ்ப்படிதலுடன் ஆங்கிலம் படித்ததற்காக எவ்வளவாய் சந்தோஷப்படுகிறேன்! இதன் விளைவாக, 1962-ஆம் வருடம் புரூக்லின் நியூ யார்க்கில் நடந்த கிலியட் பள்ளியின் 37-வது வகுப்புக்கு அழைக்கப்பட்டேன். டிசம்பர் 2, 1962-அன்று ஜெர்மனிக்கு திரும்பி வந்தபிறகு, ஹானாவும் நானும் 16 வருடங்கள் ஜெர்மனி முழுவதுமாக இருக்கும் சபைகளை பயண ஊழியத்தில் விஜயம் செய்தோம். 1978-ஆம் ஆண்டு வீஸ்படன் என்ற இடத்தில் இருந்த கிளை அலுவலகத்தில் சேவை செய்ய அழைக்கப்பட்டோம். 1980-களின் மத்திபத்தில் கிளை அலுவலக வேலைகள் செல்டர்ஸின் புதிய பெரும் வளாகத்திற்கு மாற்றப்பட்டது; நாங்கள் அந்த அழகான இடத்திலே அநேக ஆண்டுகள் சேவை செய்தோம்.
பொக்கிஷம் போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த ஊழியம்
1989-ஆம் ஆண்டு யாருமே எதிர்பார்க்காதது நடந்தது, பெர்லின் சுவர் வீழ்ந்தது. ஆகவே கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சாட்சிகள் வணக்க சுயாதீனத்தை அனுபவிக்க ஆரம்பித்தார்கள். 1992-ஆம் ஆண்டு நானும் ஹானாவும் உக்ரேனில் உள்ள லீவ்ஃப் என்ற பட்டணத்துக்கு வந்து அங்கு வேகமாக அதிகரித்து வரும் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களை ஆதரிக்க அழைக்கப்பட்டோம்.
அடுத்த ஆண்டு, ரஷ்யாவில் ராஜ்ய வேலையை ஒழுங்கமைக்க உதவுவதற்கு அனுப்பப்பட்டோம். அங்கே, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற நகரத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோல்னக்நொயி என்ற கிராமத்தில், ரஷ்யாவிலும் அதைச்சுற்றி இருக்கும் குடியரசுகளிலும் பிரசங்க வேலையை ஒழுங்கமைக்க ஒரு அலுவலகம் ஏற்பாடு செய்யப்பட்டது. நாங்கள் வந்தபோது குடியிருப்பு கட்டடங்களும், ஒரு பெரிய அலுவலக மற்றும் ஸ்டோரேஜ் கட்டடமும் ஏற்கெனவே கட்டப்பட்டு வந்தது.
ஜூன் 21, 1997-ல் புதிய கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது எங்களுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இந்த விசேஷ நிகழ்ச்சிக்காக 42 நாடுகளிலிருந்து 1,492 பேர் சோல்னக்நொயி வந்து சேர்ந்தார்கள். அதற்கு அடுத்த நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பெட்ரோவ்ஸ்கி ஸ்டேடியத்தில் 8,400-க்கும் அதிகமானோர், பிரதிஷ்டை நிகழ்ச்சியின் மறுபார்வையையும் வேறு நாடுகளிலிருந்து வந்த பார்வையாளர்களின் அறிக்கைகளையும் கேட்க கூடினார்கள்.
முந்தைய சோவியத் யூனியனுடைய 15 குடியரசுகளில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் வியக்கத்தக்க அதிகரிப்பினால் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம்! 1946-ஆம் ஆண்டு சுமார் 4,800 ராஜ்ய பிரசங்கிகள் இந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்தார்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து 1985-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 26,905-ஆக அதிகரித்தது. இன்று 1,25,000-க்கும் அதிகமான ராஜ்ய பிரசங்கிகள் முந்தைய சோவியத் யூனியனின் பத்து குடியரசுகளில் இருக்கிறார்கள், அவர்கள் சோல்னக்நொயியில் உள்ள அலுவலகத்தின் மேற்பார்வையின்கீழ் இருக்கிறார்கள்; மேலும் 1,00,000-க்கும் அதிகமானவர்கள் முந்தைய சோவியத் யூனியனின் மற்ற ஐந்து குடியரசுகளில் பிரசங்கிக்கிறார்கள்! முந்தைய சோவியத் யூனியனின் 15 குடியரசுகளில் 6,00,000-க்கும் அதிகமானவர்கள் கடந்த மார்ச் மாதம் கிறிஸ்துவின் மரண ஆசரிப்பிற்கு வந்தார்கள் என்பதைக் கேட்கும்போது நாங்கள் எவ்வளவாய் கிளர்ச்சியடைந்தோம்!
இந்தக் “கடைசிநாட்களில்” யெகோவா எவ்வளவு மகத்துவமாக தம் ஜனங்களை கூட்டிச்சேர்த்து, ஒழுங்குபடுத்தி வருகிறார் என்பதைக் கவனிக்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1) பைபிளின் சங்கீதக்காரர் சொல்வதுபோல், யெகோவா தம் ஊழியக்காரருக்கு உட்பார்வை அளிக்கிறார், அவர்கள் செல்லவேண்டிய வழியை போதிக்கிறார், தம் கண்களை அவர்கள் மேல் வைத்து புத்திமதி கொடுக்கிறார். (சங்கீதம் 32:8, NW) யெகோவாவின் சர்வதேச ஜனக்கூட்டத்தின் அங்கத்தினராக இருக்கும் சிறப்புரிமையை நான் மிகவும் போற்றுகிறேன்!
[பக்கம் 13-ன் படம்]
1943-ஆம் ஆண்டு என்னுடைய இரண்டு சகோதரிகளுடன்
[பக்கம் 14-ன் படம்]
அப்பா சிரச்சேதம் செய்யப்பட்டார்
[பக்கம் 14-ன் படம்]
ஆவிக்குரிய சமநிலையை திரும்பப்பெற அம்மா உதவி செய்தார்கள்
[பக்கம் 15-ன் படம்]
என் மனைவி ஹானாவுடன்
[பக்கம் 16-ன் படம்]
ரஷ்ய கிளையிலுள்ள ராஜ்ய மன்ற பிரதிஷ்டை பேச்சின்போது
[பக்கம் 17-ன் படம்]
ரஷ்யாவிலுள்ள எங்கள் புதிய கிளை அலுவலகத்தில் சாப்பாட்டு அறையின் முற்றமும் ஜன்னல்களும்