அதிகாரம் 10
உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள்
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காக இயேசு தன் சீஷர்களை அனுப்ப வேண்டிய சமயம் வந்தபோது, “அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று சொன்னார். (மத். 9:37, 38) ஊழியத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவர் தன் சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். “மனிதகுமாரன் வருவதற்குள் இஸ்ரவேலில் உள்ள எல்லா நகரங்களிலும் பிரசங்கித்து முடித்திருக்கவே மாட்டீர்கள்” என்று அவர் சொன்னார். (மத். 10:23) அது எவ்வளவு அவசரமாகச் செய்ய வேண்டிய வேலை என்பதை இந்த வார்த்தைகள் காட்டின.
2 இன்றும், நாம் நிறைய ஊழியம் செய்ய வேண்டியிருக்கிறது. முடிவு வருவதற்குமுன் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை நாம் பிரசங்கிக்க வேண்டும். நேரமும் குறைந்துகொண்டே வருகிறது! (மாற். 13:10) இயேசுவும் அவருடைய சீஷர்களும் இருந்த அதே நிலைமையில்தான் நாமும் இருக்கிறோம்; சொல்லப்போனால், நம் காலத்தில் இன்னும் பெரிய அளவில் ஊழியம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள், ஆனால் நாம் சில லட்சம் பேர்தான் இருக்கிறோம். இருந்தாலும், இந்த வேலையைச் செய்ய யெகோவா நமக்கு உதவி செய்வார் என்பதில் சந்தேகமே இல்லை! அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி உலகம் முழுவதும் கண்டிப்பாகப் பிரசங்கிக்கப்படும்; யெகோவா குறித்திருக்கும் நேரத்தில் முடிவு கண்டிப்பாக வரும். அப்படியென்றால், நம் வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் தந்து, ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிப்போமா? அப்படிச் செய்து முடிப்பதற்காக இப்போது நாம் என்னென்ன குறிக்கோள்களை வைக்க வேண்டும்?
3 யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றி இயேசு சொன்னார். அவர்கள் “யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று சொன்னார். (மாற். 12:30) அப்படியென்றால், நாம் முழு மூச்சோடு கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டும். அதாவது, முழு ஈடுபாட்டுடன் யெகோவாவுக்குச் சேவை செய்வதன் மூலம் அவர்மேல் நமக்கு எந்தளவு பக்தி இருக்கிறது என்பதையும், எந்தளவு மனப்பூர்வமாக நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறோம் என்பதையும் காட்ட வேண்டும். (2 தீ. 2:15) அவரவர் சூழ்நிலைக்கும் திறமைக்கும் ஏற்றபடி, ஊழியத்தை விரிவாக்க நம் எல்லாருக்குமே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது கவனியுங்கள். பிறகு, உங்கள் ஊழியத்தை விரிவாக்க என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம் என்று முடிவு செய்யுங்கள்.
பிரஸ்தாபியாகச் சேவை செய்வது
4 சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் எல்லாருமே, நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். இயேசு தன் சீஷர்களுக்குக் கொடுத்த முக்கிய வேலையே இதுதான். (மத். 24:14; 28:19, 20) பொதுவாக, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்கள் நல்ல செய்தியைக் கேட்டதுமே மற்றவர்களிடம் அதைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்கள். அந்திரேயாவும், பிலிப்புவும், கொர்நேலியுவும் மற்றவர்களும் அப்படித்தான் செய்தார்கள். (யோவா. 1:40, 41, 43-45; அப். 10:1, 2, 24; 16:14, 15, 25-34) அப்படியென்றால், ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே நல்ல செய்தியை மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பிக்கலாமா? கண்டிப்பாக! ஒருவர் ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆனதுமே, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய ஆரம்பிக்கலாம். அவருடைய திறமையையும் சூழ்நிலையையும் பொறுத்து, ஊழியத்தின் மற்ற அம்சங்களிலும் கலந்துகொள்ளலாம்.
5 ஒரு பிரஸ்தாபி ஞானஸ்நானம் எடுத்த பிறகு, நல்ல செய்தியைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லித்தர இன்னும் அதிக முயற்சி எடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆண்களும் சரி, பெண்களும் சரி, பிரசங்க வேலையில் கலந்துகொள்ளும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலையில் நமக்கு ஒரு சின்ன பங்கு கிடைத்தாலும் அது ஒரு பெரிய ஆசீர்வாதம்தான். அப்படியிருக்கும்போது, ஊழியத்தின் மற்ற அம்சங்களிலும் கலந்துகொண்டு அதை விரிவாக்குபவர்களுக்கு இன்னும் எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் காத்திருக்கிறது!
தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வது
6 உங்களுடைய சபைப் பிராந்தியத்தில் ஏற்கெனவே நிறைய தடவை ஊழியம் செய்யப்பட்டிருக்கலாம், தொடர்ந்து செய்யப்பட்டும் வரலாம். அதனால், தேவை அதிகமுள்ள வேறொரு இடத்துக்குக் குடிமாறிப்போய் ஊழியம் செய்ய நீங்கள் நினைக்கலாம். (அப். 16:9) நீங்கள் ஒரு மூப்பராக அல்லது உதவி ஊழியராக இருந்தால், வேறொரு சபைக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். உங்கள் வட்டாரத்தில் உள்ள வேறொரு சபைக்கு நீங்கள் எப்படி உதவலாம் என்று உங்கள் வட்டாரக் கண்காணியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நாட்டிலுள்ள வேறொரு பகுதிக்குக் குடிமாறிப்போய் ஊழியம் செய்ய விரும்பினால், அது சம்பந்தமான தகவல்களைக் கிளை அலுவலகம் உங்களுக்குக் கொடுக்கும்.
7 நீங்கள் வெளிநாட்டில் சேவை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால், எல்லாவற்றையும் நன்றாக யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள். உங்கள் சபையிலுள்ள மூப்பர்களிடம் இதைப் பற்றிப் பேசுங்கள். ஏனென்றால், வெளிநாட்டுக்குக் குடிமாறிப்போவது உங்களை மட்டுமல்ல, உங்களோடு வரப்போகிறவர்களையும் பாதிக்கும். (லூக். 14:28) ஒருவேளை, கொஞ்சக் காலத்துக்கு மட்டும் வெளிநாட்டில் சேவை செய்ய நீங்கள் நினைக்கலாம். அப்படிக் கொஞ்சக் காலத்துக்கு வெளிநாடு போவதற்குப் பதிலாக உள்நாட்டிலேயே வேறொரு பகுதியில் சேவை செய்வது நல்லது.
8 சில நாடுகளில், கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் சகோதரர்கள் ஓரளவு புதியவர்களாக இருக்கிறார்கள். மனத்தாழ்மையுள்ள அந்தச் சகோதரர்கள், தங்கள் சபைக்குக் குடிமாறி வரும் அனுபவமுள்ள மூப்பர்கள் எல்லா பொறுப்புகளையும் செய்வதற்கு மனதார விட்டுவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நாட்டுக்குக் குடிமாறிப்போக நினைக்கும் ஒரு மூப்பராக நீங்கள் இருந்தால், அங்கிருக்கும் சகோதரர்களுக்குப் பதிலாக நீங்களே பொறுப்புகளை எடுத்துச் செய்ய நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, அவர்களோடு சேர்ந்து பொறுப்புகளைச் செய்யுங்கள். சபைப் பொறுப்புகளை எடுத்துச் செய்வதற்கு அவர்களுக்கு உதவி செய்யுங்கள். (1 தீ. 3:1) சில விஷயங்கள் உங்கள் நாட்டில் செய்யப்படுவதுபோல் இங்கே செய்யப்படவில்லை என்றால், பொறுமையை இழந்துவிடாதீர்கள். ஒரு மூப்பராக உங்களுக்கு இருக்கும் அனுபவத்தைப் பயன்படுத்தி இங்கே இருக்கிற சகோதரர்களுக்கு மனப்பூர்வமாக உதவி செய்யுங்கள். அப்போதுதான், நீங்கள் ஒருவேளை உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போக வேண்டியிருந்தாலும், இந்தச் சகோதரர்களால் தாங்களாகவே சபைப் பொறுப்புகளை நன்றாகக் கவனித்துக்கொள்ள முடியும்.
9 எந்தெந்த சபைகளுக்கு உங்கள் உதவி தேவைப்படலாம் என்று நீங்கள் சேவை செய்ய விரும்பும் நாட்டின் கிளை அலுவலகம் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்றால், அதற்குமுன் உங்கள் சபை ஊழியக் குழு உங்களுக்காக ஒரு சிபாரிசுக் கடிதத்தை அனுப்ப வேண்டும். நீங்கள் ஒரு மூப்பரோ உதவி ஊழியரோ பயனியரோ பிரஸ்தாபியோ, யாராக இருந்தாலும் சரி, அந்த சிபாரிசுக் கடிதத்தை அந்தக் குழு அனுப்ப வேண்டும். நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் விவரங்களையும் அந்தக் கிளை அலுவலகத்துக்குக் கேட்டு எழுத வேண்டும்.
வேறொரு மொழியில் ஊழியம் செய்வது
10 உங்கள் ஊழியத்தை விரிவாக்குவதற்கு, சைகை மொழி போன்ற வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பலாம். இதைப் பற்றி உங்கள் மூப்பர்களிடமும் வட்டாரக் கண்காணியிடமும் நீங்கள் பேசலாம். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உற்சாகத்தையும் அவர்கள் தருவார்கள். வேறொரு மொழியில் ஊழியம் செய்ய பிரஸ்தாபிகளுக்கும் பயனியர்களுக்கும் பயிற்சி தருவதற்காக, கிளை அலுவலகத்தின் உதவியோடு சில வட்டாரங்களில் மொழி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
பயனியர் சேவை செய்வது
11 துணைப் பயனியர் சேவை, ஒழுங்கான பயனியர் சேவை, விசேஷப் பயனியர் சேவை போன்ற முழுநேர சேவைகளுக்கான தகுதிகளைப் பற்றி எல்லா பிரஸ்தாபிகளும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பயனியர் சேவை செய்பவர் ஞானஸ்நானம் எடுத்த நல்ல முன்மாதிரியான கிறிஸ்தவராக இருக்க வேண்டும். எதிர்பார்க்கப்படும் மணிநேரத்தை எட்ட முடிந்தவராக இருக்க வேண்டும். துணைப் பயனியர்களையும் ஒழுங்கான பயனியர்களையும் சபை ஊழியக் குழு நியமிக்கிறது, ஆனால் விசேஷப் பயனியர்களைக் கிளை அலுவலகம்தான் நியமிக்கிறது.
12 துணைப் பயனியர்கள் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றபடி குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கோ தொடர்ந்து பல மாதங்களுக்கோ, வரையறை இல்லாத காலத்துக்கோ சேவை செய்யலாம். நிறைய பிரஸ்தாபிகள் நினைவுநாள் சமயத்திலோ வட்டாரக் கண்காணியின் சந்திப்பு சமயத்திலோ துணைப் பயனியர் சேவை செய்கிறார்கள். சிலர் விடுமுறை மாதங்களில் செய்கிறார்கள். பள்ளிக்குப் போகும் ஞானஸ்நானம் எடுத்த பிரஸ்தாபிகள், பள்ளி விடுமுறையின்போது செய்கிறார்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் வட்டாரக் கண்காணி சந்திக்கும் மாதத்திலும் துணைப் பயனியர் சேவை செய்கிறவர்கள் வழக்கத்தைவிட குறைந்த மணிநேரம் செய்தாலே போதும். உங்கள் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் நல்ல ஒழுக்கமும் பழக்கவழக்கங்களும் உள்ளவராக இருந்தால்... எதிர்பார்க்கப்படும் மணிநேரத்தை எட்ட முடிந்தவராக இருந்தால்... ஒரு மாதமோ பல மாதங்களோ துணைப் பயனியராகச் சேவை செய்யும் நிலையில் இருந்தால்... மூப்பர்கள் உங்களை இந்தச் சேவைக்காக நியமிப்பார்கள்.
13 நீங்கள் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய விரும்பினால், ஒரு வருஷத்துக்கு எதிர்பார்க்கப்படும் மணிநேரத்தை எட்ட முடிந்தவராக இருக்க வேண்டும். ஒழுங்கான பயனியராக உங்கள் சபையோடு நீங்கள் நன்றாக ஒத்துழைக்க வேண்டும். பக்திவைராக்கியத்தோடு சேவை செய்யும் பயனியர்கள் சபைக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஆர்வத்தைப் பார்த்து மற்றவர்களும் ஊழியத்தில் அதிகமாகக் கலந்துகொள்ளவோ பயனியர் சேவையை ஆரம்பிக்கவோ தூண்டப்படுகிறார்கள். ஒழுங்கான பயனியராக நியமிக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் ஞானஸ்நானம் எடுத்து குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகியிருக்க வேண்டும்; அதோடு, நீங்கள் நல்ல முன்மாதிரியான பிரஸ்தாபியாக இருக்க வேண்டும்.
14 விசேஷப் பயனியர்கள் திறமையாக ஊழியம் செய்யும் ஒழுங்கான பயனியர்கள் மத்தியிலிருந்து பொதுவாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கிளை அலுவலகம் நியமிக்கும் பகுதிக்குப் போய் அவர்கள் ஊழியம் செய்ய வேண்டும். பெரும்பாலும், அந்தப் பகுதி நிறைய பேர் ஆர்வம் காட்டும் ஒதுக்குப்புறமான பகுதியாக இருக்கும். அங்கே அவர்கள் புதிய சபைகளை உருவாக்க வேண்டியிருக்கும். சில சபைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பிராந்தியங்கள் முழுமையாக ஊழியம் செய்யப்படாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சபைகளுக்கும் விசேஷப் பயனியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சில சிறிய சபைகளைப் பொறுத்தவரை, ஊழியம் செய்ய போதுமான பேர் இருப்பார்கள், ஆனால் போதுமான மூப்பர்கள் இருக்க மாட்டார்கள். அதனால், மூப்பர்களாக இருக்கும் விசேஷப் பயனியர்கள் அந்தச் சபைகளுக்கு உதவி செய்ய நியமிக்கப்படுகிறார்கள். அடிப்படைத் தேவைகளுக்காக விசேஷப் பயனியர்களுக்கு ஒரு சிறிய தொகை கொடுக்கப்படுகிறது. சிலர் தற்காலிக விசேஷப் பயனியர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
மிஷனரிகளாகச் சேவை செய்வது
15 ஆளும் குழுவின் ஊழியக் குழு மிஷனரிகளை நியமிக்கிறது. அவர்கள் நியமிக்கப்படும் நாட்டின் கிளை அலுவலகக் குழு அவர்களை மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளுக்கு நியமிக்கிறது. பிரசங்க வேலையையும் சபை வேலைகளையும் இன்னும் நன்றாகச் செய்வதற்கு அவர்கள் அதிக உதவியாக இருப்பார்கள். மிஷனரிகளாக நியமிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அடிப்படைத் தேவைகளுக்காக அவர்களுக்கு ஒரு சிறிய தொகை கொடுக்கப்படுகிறது, தங்குவதற்கான வசதியும் செய்து தரப்படுகிறது.
வட்டார ஊழியம் செய்வது
16 ஆளும் குழுவினால் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்படும் ஒருவர், முதலில் துணை வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்ய பயிற்சி பெறுவார். அவர் ஊழியத்தையும் சகோதரர்களையும் நேசிப்பவராக இருக்க வேண்டும். பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்யும் பயனியராகவும், பைபிளை நன்றாக ஆராய்ச்சி செய்து படிக்கிறவராகவும், திறமையாகப் பேச்சுக் கொடுக்கிறவராகவும், நன்றாகக் கற்றுக்கொடுக்கிறவராகவும் இருக்க வேண்டும். அதோடு, கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை வெளிக்காட்ட வேண்டும்; முக்கியமாக, எல்லாவற்றிலும் சமநிலையையும் நியாயத்தன்மையையும் விவேகத்தையும் காட்ட வேண்டும். அவர் திருமணமானவராக இருந்தால், பயனியராக இருக்கும் அவருடைய மனைவி, தான் நடந்துகொள்ளும் விதத்திலும் மற்றவர்களோடு பழகும் விதத்திலும் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவர் திறமையாக ஊழியம் செய்கிறவராக இருக்க வேண்டும். அதோடு, கிறிஸ்தவ மனைவியாகத் தன் கணவருக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். தன்னுடைய கணவருக்குப் பதிலாகப் பேசுகிறவராக இருக்கக் கூடாது. மற்றவர்களிடம் பேசும்போது தான் சொல்வதுதான் சரி என்பதுபோல் பேசவும் கூடாது. வட்டாரக் கண்காணிக்கும் அவருடைய மனைவிக்கும் நிறைய வேலைகள் இருக்கும். அதனால், இந்தச் சேவையைச் செய்ய நினைக்கிறவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வட்டார ஊழியத்துக்கு பயனியர்கள் எந்த விண்ணப்பத்தையும் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக, வட்டார ஊழியம் செய்ய தங்களுக்கு விருப்பம் இருப்பதைப் பற்றித் தங்கள் வட்டாரக் கண்காணிக்குத் தெரிவிக்கிறார்கள். அவர் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைத் தருகிறார்.
தேவராஜ்யப் பள்ளிகள்
17 ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி: அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பிராந்தியங்களில் ஊழியம் செய்வதற்கும் சபைகளுக்கு உதவி செய்வதற்கும், இன்னும் நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். அதனால், திருமணமாகாத சகோதர சகோதரிகளும், திருமணமான தம்பதிகளும் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் விசேஷப் பயிற்சி பெற விண்ணப்பம் செய்கிறார்கள். இந்தப் பள்ளியில் பட்டம் பெற்றவர்கள், சொந்த நாட்டிலேயே தேவை அதிகமுள்ள இடங்களில் ஒழுங்கான பயனியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். சிலர் அவர்களுடைய நாட்டில் அல்லது வேறொரு நாட்டில் மற்ற நியமிப்புகளைப் பெறலாம். ஒருசிலர் தற்காலிக அல்லது விசேஷப் பயனியர்களாக நியமிக்கப்படலாம். இந்தப் பள்ளியில் கலந்துகொள்ள விரும்பும் பயனியர்கள், அதற்கான தகுதிகளைப் பற்றி மண்டல மாநாட்டில் நடக்கும் கூட்டத்தில் தெரிந்துகொள்ளலாம்.
18 உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி: இந்தப் பள்ளிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் திருமணமாகாத சகோதர சகோதரிகளும், திருமணமான தம்பதிகளும் ஆங்கில மொழி தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசேஷ முழுநேர ஊழியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஊழிய வேலைகளை அல்லது கிளை அலுவலக வேலைகளைத் திறம்படச் செய்யவும் மேம்படுத்தவும் உதவ முடிந்தவர்களாக இருக்கிறார்கள். அதோடு, சகோதரர்களுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்கிறவர்கள் என்றும், பைபிள் ஆலோசனைகளையும் அமைப்பின் ஆலோசனைகளையும் தெரிந்துகொண்டு அவற்றைக் கடைப்பிடிக்க மற்றவர்களுக்கு அன்போடு உதவி செய்கிறவர்கள் என்றும் பெயரெடுத்தவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பள்ளியில் கலந்துகொள்ளத் தகுதியுள்ளவர்களுக்குக் கிளை அலுவலகம் ஒரு விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைக்கிறது. இந்தப் பள்ளியில் பட்டம் பெறுகிறவர்கள் சொந்த நாட்டில் அல்லது வெளிநாட்டில் உள்ள கிளை அலுவலகத்தின் கீழ் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்கள்.
பெத்தேல் சேவை
19 பெத்தேலில் சேவை செய்வது ஒரு விசேஷ பாக்கியம். பெத்தேல் என்ற பெயருக்கு “கடவுளுடைய வீடு” என்று அர்த்தம். அங்கே கடவுளுடைய வேலைகள் நடப்பதால் அந்தப் பெயர் பொருத்தமாக இருக்கிறது. பெத்தேலில் சேவை செய்கிற சகோதர சகோதரிகள் பைபிள் பிரசுரங்களைத் தயாரிக்கவும், மொழிபெயர்க்கவும், வினியோகிக்கவும் தேவையான முக்கிய வேலையைச் செய்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள சபைகளைக் கண்காணித்து வழிநடத்தும் ஆளும் குழுவுக்கு இவர்களுடைய சேவை மிகவும் உதவியாக இருக்கிறது. மொழிபெயர்க்கும் வேலையைச் செய்யும் நிறைய பெத்தேல் ஊழியர்கள், அவர்களுடைய மொழி பேசப்படும் பகுதியில் தங்கி வேலை செய்கிறார்கள். அதனால், அன்றாட வாழ்க்கையில் அந்த மொழியை எல்லாரும் எப்படி இயல்பாகப் பேசுகிறார்கள் என்று அவர்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. அதோடு, தங்கள் மொழிபெயர்ப்பு மக்களுக்குப் புரிகிறதா என்பதையும் நேரடியாகவே தெரிந்துகொள்ள முடிகிறது.
20 பெத்தேலில் செய்யப்படும் பெரும்பாலான வேலைகளுக்கு உடல் உழைப்பு தேவை. அதனால், நல்ல ஆரோக்கியத்தோடும் உடல் பலத்தோடும் இருக்கிற ஞானஸ்நானம் எடுத்த இளம் சகோதரர்களே பொதுவாகப் பெத்தேலுக்கு அழைக்கப்படுகிறார்கள். உங்கள் நாட்டின் ஊழியத்தை மேற்பார்வை செய்யும் கிளை அலுவலகத்தில் தேவை இருந்தால், அங்கே சேவை செய்ய நீங்கள் விரும்பினால், அதற்கான தகுதிகளைப் பற்றி உங்கள் சபை மூப்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
கட்டுமான சேவை
21 சாலொமோனின் காலத்தில் செய்யப்பட்ட ஆலய கட்டுமான வேலையைப் போலவே இன்று அமைப்பில் செய்யப்படும் கட்டுமான வேலைகளும் ஒரு வகையான பரிசுத்த சேவைதான். (1 ரா. 8:13-18) பக்திவைராக்கியமுள்ள நிறைய சகோதர சகோதரிகள் கட்டுமான வேலைக்காகத் தங்கள் நேரத்தையும் சக்தியையும் திறமையையும் மனப்பூர்வமாகப் பயன்படுத்துகிறார்கள்.
22 உங்களாலும் உதவ முடியுமா? நீங்கள் இந்த வேலையில் கலந்துகொள்ள விரும்பும் ஞானஸ்நானம் எடுத்த ஒரு பிரஸ்தாபியா? அப்படியென்றால், உங்கள் பகுதியில் நடக்கும் கட்டுமான வேலையை மேற்பார்வை செய்யும் சகோதரர்கள் உங்கள் உதவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள். உங்களுக்கு அதிக திறமை இல்லாவிட்டாலும் உங்களுக்குப் பயிற்சி கொடுக்கத் தயாராக இருப்பார்கள். நீங்கள் கட்டுமான வேலை செய்ய விரும்புவதை உங்கள் சபை மூப்பர்களிடம் சொல்லுங்கள். ஞானஸ்நானம் பெற்ற தகுதியுள்ள சில பிரஸ்தாபிகள், வெளிநாடுகளில் நடக்கும் கட்டுமான வேலைகளில்கூட ஈடுபட்டிருக்கிறார்கள்.
23 கட்டுமான வேலையில் கலந்துகொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஓரளவு திறமையுள்ள, ஞானஸ்நானம் எடுத்த முன்மாதிரியான பிரஸ்தாபிகள், தங்கள் பகுதிக்குப் பக்கத்தில் நடக்கும் கட்டுமான வேலைகளில் கலந்துகொள்ளலாம். அதாவது, உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வாலண்டியர்களாக சேவை செய்யலாம். மற்றவர்கள் இன்னும் தூரத்தில் நடக்கும் கட்டுமான வேலைகளில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குக் கலந்துகொள்ளலாம். இவர்கள் இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு கட்டுமான வாலண்டியர்களாக சேவை செய்ய கிளை அலுவலகத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதிக காலத்துக்கு நியமிக்கப்படுகிறவர்கள் கட்டுமான ஊழியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வெளிநாட்டில் நியமிப்பைப் பெறும் கட்டுமான ஊழியர்கள் வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். கட்டுமான ஊழியர்களும் கட்டுமான வாலண்டியர்களும் சேர்ந்து கட்டுமானக் குழு என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் கட்டுமான வேலைகளை முன்நின்று செய்கிறார்கள். இவர்களுக்கு உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வாலண்டியர்களும், அந்தந்த சபைகளைச் சேர்ந்த வாலண்டியர்களும் உதவி செய்கிறார்கள். கட்டுமான குழுக்களைச் சேர்ந்தவர்கள், கிளை அலுவலகப் பிராந்தியத்தில் அடுத்தடுத்து நடக்கும் வெவ்வேறு கட்டுமான வேலைகளில் கலந்துகொள்கிறார்கள்.
உங்கள் குறிக்கோள் என்ன?
24 நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருந்தால், என்றென்றும் அவருக்குச் சேவை செய்ய விரும்புவீர்கள். ஆனால், அதற்காக என்ன குறிக்கோள்களை வைத்திருக்கிறீர்கள்? அப்படிக் குறிக்கோள்களை வைப்பது, உங்கள் சக்தியையும் மற்ற விஷயங்களையும் ஞானமாகப் பயன்படுத்த உதவி செய்யும். (1 கொ. 9:26) அதோடு, ஆன்மீக விதத்தில் முன்னேறவும், மிக முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்தவும் ஊழியத்தை விரிவாக்கவும் உதவி செய்யும்.—பிலி. 1:10; 1 தீ. 4:15, 16.
25 கடவுளுக்குச் சேவை செய்வதில் அப்போஸ்தலன் பவுல் நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரி. (1 கொ. 11:1) அவர் யெகோவாவின் சேவையைத் தீவிரமாகச் செய்தார். யெகோவா தனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்திருந்ததை அவர் புரிந்துகொண்டார். “ஊழியம் செய்வதற்கான வாய்ப்பு என்ற பெரிய கதவு எனக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது” என்று கொரிந்துவில் இருந்த சகோதரர்களுக்கு அவர் சொன்னார். அவர் சொன்னது நமக்கும் பொருந்துகிறது, இல்லையா? நம் சபையோடு சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய, முக்கியமாக அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க, நமக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் பவுலைப் போலவே நாமும் ‘நிறைய எதிரிகளை’ சமாளித்தால்தான் அந்த “பெரிய கதவு” வழியாகப் போக முடியும். (1 கொ. 16:9) சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட பவுல் மனமுள்ளவராக இருந்தார். சொல்லப்போனால், “என்னுடைய உடலை அடக்கியொடுக்கி அடிமைபோல் நடத்தி வருகிறேன்” என்று சொன்னார். (1 கொ. 9:24-27) நாமும் அதேபோல் செய்கிறோமா?
குறிக்கோள்களை வைப்பது, உங்கள் சக்தியையும் மற்ற விஷயங்களையும் ஞானமாகப் பயன்படுத்த உதவி செய்யும்
26 ஒவ்வொருவரும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ற குறிக்கோள்களை வைக்கவும் அவற்றை அடையவும் முயற்சி செய்ய வேண்டும். இன்று முழுநேர சேவையைச் செய்யும் நிறைய பேர் இளவயதிலேயே அதற்காகக் குறிக்கோள்களை வைத்தார்கள். அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோதே அவர்களுடைய பெற்றோரும் மற்றவர்களும் அவர்களை அப்படிச் செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் யெகோவாவின் சேவையில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள், முழுநேர சேவையைத் தேர்ந்தெடுத்ததற்காக அவர்கள் வருத்தப்படுவதே இல்லை. (நீதி. 10:22, அடிக்குறிப்பு) வேறு என்ன குறிக்கோள்களை நாம் வைக்கலாம்? ஒவ்வொரு வாரமும் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதையோ ஒரு பைபிள் படிப்பை நடத்த ஆரம்பிப்பதையோ கூட்டங்களுக்கு இன்னும் நன்றாகத் தயாரிப்பதையோ நம் குறிக்கோளாக வைக்கலாம். விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்பதும், நம் ஊழியத்தை முழுமையாகச் செய்து முடிப்பதும்தான் முக்கியம். அப்படிச் செய்தால், யெகோவாவுக்கு மகிமை சேர்ப்போம். எல்லாவற்றுக்கும் மேலாக, அவருக்கு என்றென்றும் சேவை செய்ய வேண்டுமென்ற மிக முக்கியமான குறிக்கோளை அடைவோம்.—லூக். 13:24; 1 தீ. 4:7ஆ, 8.