உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w19 ஆகஸ்ட் பக். 26-28
  • விசுவாசம்​—பலப்படுத்துகிற ஒரு குணம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விசுவாசம்​—பலப்படுத்துகிற ஒரு குணம்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விசுவாசம்—அதன் அர்த்தம்
  • பைபிளில் இருக்கிற உண்மைகளை மதியுங்கள்
  • தன்னுடைய விசுவாசத்தை தாவீது பலப்படுத்துகிறார்
  • உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்
  • இயேசுவின்மீது விசுவாசம் வையுங்கள்
  • “மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாக வைத்து உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்”
  • யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • நற்செய்தியில் உங்களுக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • “விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
w19 ஆகஸ்ட் பக். 26-28

விசுவாசம்​—பலப்படுத்துகிற ஒரு குணம்!

  • அன்பு

  • சந்தோஷம்

  • சமாதானம்

  • பொறுமை

  • கருணை

  • நல்மனம்

  • விசுவாசம்

  • சாந்தம்

  • சுயக்கட்டுப்பாடு

யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தை நாசமாக்க சாத்தான் முயற்சி செய்கிறான். ஆனால், ‘பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம் அணைப்பதற்கு’ விசுவாசம் உதவுகிறது. (எபே. 6:16) அப்படியென்றால், விசுவாசம் என்பது சக்திவாய்ந்த ஒரு குணம்! விசுவாசம் இருந்தால், மலைபோன்ற பிரச்சினைகளும் ஒன்றும் இல்லாமல் போய்விடும். “உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து அங்கே போ’ என்று சொன்னால், அது பெயர்ந்துபோகும்” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (மத். 17:20) யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்துகிற சக்தி விசுவாசத்துக்கு இருப்பதால், இந்தக் கேள்விகளை கேட்டுக்கொள்வது நல்லது: (1) விசுவாசம் என்றால் என்ன? (2) பைபிளில் இருக்கிற உண்மைகளை மதிப்பது ஏன் முக்கியம்? (3) விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்? (4) யார்மீது நாம் விசுவாசம் வைக்க வேண்டும்?—ரோ. 4:3.

விசுவாசம்—அதன் அர்த்தம்

பைபிளில் இருக்கிற உண்மைகளை நம்புவது அல்லது அதை ஏற்றுக்கொள்வது மட்டுமே விசுவாசம் கிடையாது. ஏனென்றால், “பேய்களும்கூட . . . [கடவுள் இருக்கிறார் என்று] நம்பி, பயந்து நடுங்குகின்றன.” (யாக். 2:19) அப்படியென்றால், உண்மையிலேயே விசுவாசம் என்றால் என்ன?

பூமியின் விண்வெளி தோற்றம்

பகலும் இரவும் கண்டிப்பாக வரும் என்று நம்புவதுபோல் கடவுளுடைய வார்த்தையும் கண்டிப்பாக நிறைவேறும் என்று நாம் நம்புகிறோம்

விசுவாசத்துக்கு இரண்டு அம்சங்கள் இருப்பதாக பைபிள் சொல்கிறது. ஒன்று, ‘எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயம் நடக்கும் என்று உறுதியாக நம்புவது.’ (எபி. 11:1அ) விசுவாசம் இருந்தால், யெகோவா சொல்லும் எல்லா விஷயங்களும் உண்மை என்றும் அது நிச்சயமாக நடக்கும் என்றும் நீங்கள் உறுதியாக நம்புவீர்கள். ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். யெகோவா இஸ்ரவேலர்களிடம், “ராத்திரியும் பகலும் அதனதன் நேரத்தில் வருவதற்காக நான் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்களை எப்படி மாற்ற முடியாதோ, அப்படியே தாவீதின் வாரிசை ராஜாவாக்குவதற்கு நான் செய்த ஒப்பந்தத்தையும் . . . மாற்ற முடியாது” என்று சொன்னார். (எரே. 33:20, 21) சூரிய உதயமும் அஸ்தமனமும் நடக்காமல் போய்விடும் என்றோ, பகலும் இரவும் வராமல் போய்விடும் என்றோ நீங்கள் எப்போதாவது பயந்திருக்கிறீர்களா? பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிவருவதைக் கட்டுப்படுத்துகிற இயற்கைச் சட்டங்கள்மீது உங்களுக்குச் சந்தேகம் வருமா? நிச்சயம் வராது! அப்படியிருக்கும்போது, இந்தச் சட்டங்களை உருவாக்கியவர் தன்னுடைய வார்த்தையை நிறைவேற்றுவாரா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாமா?—ஏசா. 55:10, 11; மத். 5:18.

இரண்டு, ‘பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைப் பார்ப்பது.’ கண்களால் பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்று நம்புவதற்கு “தெளிவான அத்தாட்சியை” அல்லது “நம்பகமான ஆதாரத்தை” பார்ப்பதுதான் விசுவாசம். (எபி. 11:1ஆ, அடிக்குறிப்பு) எப்படி? ‘காத்து இருக்குனு உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று ஒரு பிள்ளை உங்களிடம் கேட்பதாக வைத்துக்கொள்ளுங்கள். கண்களால் காற்றைப் பார்க்க முடியாது என்றாலும், காற்று இருக்கிறது என்று அந்தப் பிள்ளை நம்புவதற்கு ஏதாவது ஓர் அத்தாட்சியைச் சொல்வீர்கள் இல்லையா? ஒருவேளை, நாம் மூச்சு விடுவதைப் பற்றி... காற்றடிப்பதால் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி... அல்லது வேறு ஏதாவது அத்தாட்சியைப் பற்றி நீங்கள் சொல்வீர்கள். அந்த அத்தாட்சியை அந்தப் பிள்ளை நம்பும்போது, ஒரு விஷயத்தை கண்களால் பார்க்க முடியவில்லை என்றாலும் அது நிஜமாகவே இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதையும் நம்பும். விசுவாசமும் அப்படித்தான்! உறுதியான அத்தாட்சிகளின் அடிப்படையில் அது உண்டாகிறது.—ரோ. 1:20.

பைபிளில் இருக்கிற உண்மைகளை மதியுங்கள்

அத்தாட்சிகளின் அடிப்படையில்தான் விசுவாசம் உண்டாகிறது என்றால், அதை வளர்த்துக்கொள்ள “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை” முதலில் பெற்றுக்கொள்ள வேண்டும். (1 தீ. 2:4) ஆனால், அதுமட்டுமே போதுமா? இல்லை! ஒருவர் ‘இதயத்தில் விசுவாசிக்க’ வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 10:10) அப்படியென்றால், பைபிளில் இருக்கிற உண்மைகளை நம்புவதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது; அதை மதிக்கவும் வேண்டும். அப்படிச் செய்தால்தான், விசுவாசத்தை செயலில் காட்ட வேண்டும் என்ற ஆசை வரும். அதாவது, கடவுளுக்குப் பிடித்த விதத்தில் வாழ வேண்டும் என்ற ஆசை வரும். (யாக். 2:20) பைபிளில் இருக்கிற உண்மைகளை ஒருவர் மதிக்கவில்லை என்றால், நம்பகமான ஆதாரம் இருந்தும் அவர் அதை ஒதுக்கித்தள்ளிவிடுவார். தன்னுடைய பழைய நம்பிக்கைகளையே விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பார். அல்லது தன்னுடைய ஆசைப்படி செய்வதற்கு சாக்குப்போக்குகளைச் சொல்வார். (2 பே. 3:3, 4; யூ. 18) அதனால்தான், பைபிள் காலங்களில் வாழ்ந்த நிறைய பேர், அற்புதங்களை கண்ணாரப் பார்த்திருந்தும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவில்லை. (எண். 14:11; யோவா. 12:37) விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள கடவுளுடைய சக்தி உதவும்; ஆனால், உண்மையை யார் நெஞ்சார நேசிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் அது உதவும்.—கலா. 5:22; 2 தெ. 2:10, 11.

தன்னுடைய விசுவாசத்தை தாவீது பலப்படுத்துகிறார்

பலமான விசுவாசத்தைக் காட்டியவர்களில் தாவீதும் ஒருவர்! (எபி. 11:32, 33) ஆனாலும், தாவீதுக்கு இருந்த விசுவாசம் அவருடைய குடும்பத்தில் இருந்த எல்லாருக்கும் இருக்கவில்லை. உதாரணத்துக்கு, தாவீதின் மூத்த அண்ணன் எலியாப் ஒரு தடவை எப்படி நடந்துகொண்டான் என்று கவனியுங்கள். கோலியாத் எப்படி யெகோவாவின் படைக்குச் சவால்விடலாம் என்று தாவீது கேட்டபோது, எலியாப் தாவீதைத் திட்டினான். இப்படி, தனக்கு விசுவாசம் இல்லாததைக் காட்டினான். (1 சா. 17:26-28) யாரும் விசுவாசத்தோடு பிறப்பதுமில்லை, அப்பா அம்மாவிடமிருந்து அது தானாக வந்துவிடுவதும் இல்லை. அப்படியிருக்கும்போது, தாவீதால் எப்படி அந்தளவு விசுவாசத்தைக் காட்ட முடிந்தது? யெகோவாவோடு அவர் வைத்திருந்த பந்தம்தான் அதற்குக் காரணம்!

பலமான விசுவாசத்தைத் தன்னால் எப்படி வளர்த்துக்கொள்ள முடிந்தது என்பதைப் பற்றி 27-ம் சங்கீதத்தில் தாவீது சொல்லியிருக்கிறார். (வசனம் 1) யெகோவா தனக்கு எப்படிப் பக்கபலமாக இருந்தார் என்பதைப் பற்றியும், தன்னுடைய எதிரிகளை அவர் எப்படித் தவிடுபொடியாக்கினார் என்பதைப் பற்றியும் அவர் ஆழமாக யோசித்துப்பார்த்தார். (வசனங்கள் 2, 3) தன்னை வணங்குவதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளுக்காக ரொம்பவே நன்றியோடு இருந்தார். (வசனம் 4) வழிபாட்டுக் கூடாரத்தில் மற்ற இஸ்ரவேலர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்கினார். (வசனம் 6) உருக்கமாக ஜெபம் செய்தார். (வசனங்கள் 7, 8) கடவுள் தனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார். (வசனம் 11) “விசுவாசம் மட்டும் இல்லையென்றால், என் கதி என்ன ஆகியிருக்குமோ?” என்று கேட்கும் அளவுக்கு இந்தக் குணத்தை அவர் முக்கியமாக நினைத்தார்.—வசனம் 13.

உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

சங்கீதம் 27-ல் சொல்லப்பட்டிருக்கிற மனப்பான்மையையும் பழக்கவழக்கங்களையும் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது, தாவீது காட்டியதைப் போன்ற விசுவாசத்தை நம்மாலும் காட்ட முடியும். திருத்தமான அறிவின் அடிப்படையில்தான் விசுவாசம் வளருகிறது! அதனால், பைபிளையும் பைபிள் அடிப்படையிலான நம்முடைய பிரசுரங்களையும் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறீர்களோ அவ்வளவு சுலபமாக உங்களால் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும். (சங். 1:2, 3) படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப்பார்க்க நேரம் ஒதுக்குங்கள். ஆழமாக யோசிப்பதை நல்ல நிலத்துக்கு ஒப்பிடலாம். நன்றியுணர்வை அதில் வளரும் செடிக்கு ஒப்பிடலாம். யெகோவாமீது இருக்கும் நன்றியுணர்வு அதிகமாகும்போது, அவர்மீது விசுவாசம் காட்ட வேண்டும் என்ற ஆசை அதிகமாகும். விசுவாசத்தை எப்படிக் காட்டலாம்? கூட்டங்களுக்கு வருவதன் மூலமும் உங்கள் நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதன் மூலமும் காட்டலாம். (எபி. 10:23-25) அதோடு, ‘மனம் தளராமல் எப்போதும் ஜெபம் செய்வதன்’ மூலமும் அதைக் காட்டலாம். (லூக். 18:1-8) அதனால், கடவுள் “உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்” என்ற நம்பிக்கையோடு “எப்போதும் ஜெபம் செய்யுங்கள்.” (1 பே. 5:7; 1 தெ. 5:17) விசுவாசம் செயல்படத் தூண்டுகிறது, அப்படிச் செயல்படும்போது விசுவாசம் பலப்படுகிறது.—யாக். 2:22.

இயேசுவின்மீது விசுவாசம் வையுங்கள்

தான் இறப்பதற்கு முந்தின இரவு, “கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள், என்மேலும் விசுவாசம் வையுங்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 14:1) அப்படியென்றால், யெகோவாவின் மீது மட்டுமல்ல இயேசுவின் மீதும் நாம் விசுவாசம் வைக்க வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? மூன்று வழிகளை இப்போது பார்க்கலாம்.

இயேசு தன்னுடைய உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களோடு இருக்கிறார்

இயேசுவின் மீது விசுவாசம் வைப்பது என்றால் என்ன?

முதலாவது, மீட்புவிலையை உங்களுக்காகவே கொடுக்கப்பட்ட பரிசாக நினையுங்கள். “நான் வாழும் வாழ்க்கை கடவுளுடைய மகன் மீதுள்ள விசுவாசத்தால்தான். அவர்தான் என்மேல் அன்பு வைத்து எனக்காகத் தன்னையே தியாகம் செய்தார்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (கலா. 2:20) இயேசுவின் மீது விசுவாசம் வைத்தால், மீட்புவிலை உங்களுக்காகத்தான் கொடுக்கப்பட்டது என்பதை உறுதியாக நம்புவீர்கள். அதன் அடிப்படையில்தான் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றும், அதன் மூலம்தான் நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கப்போகிறது என்றும், கடவுள் நம்மேல் வைத்திருக்கும் அன்புக்கு அது மிகப்பெரிய ஓர் அத்தாட்சி என்றும் நம்புவீர்கள். (ரோ. 8:32, 38, 39; எபே. 1:7) அதோடு, குற்ற உணர்வால் தவிக்க மாட்டீர்கள். உங்களையே தாழ்வாக நினைக்க மாட்டீர்கள்.—2 தெ. 2:16, 17.

இரண்டாவது, இயேசுவின் பலியின் அடிப்படையில் ஜெபம் செய்வதன் மூலம் யெகோவாவிடம் நெருங்கிப்போங்கள். மீட்புவிலை கொடுக்கப்பட்டிருப்பதால், யெகோவாவிடம் நம்மால் “தயக்கமில்லாமல்” ஜெபம் செய்ய முடிகிறது. ‘அப்படிச் செய்தால், நமக்கு உதவி தேவைப்படுகிறபோது சரியான சமயத்தில் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும் பெற்றுக்கொள்வோம்.’ (எபி. 4:15, 16; 10:19-22) ஜெபம் செய்யும்போது, பாவம் செய்வதற்கான தூண்டுதலை எதிர்த்துப் போராடுவதற்குப் பலம் கிடைக்கிறது.—லூக். 22:40.

மூன்றாவது, இயேசுவுக்குக் கீழ்ப்படியுங்கள். “மகன்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்; ஆனால், மகனுக்குக் கீழ்ப்படியாதவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது, அவன் கடவுளுடைய கடும் கோபத்துக்கே ஆளாவான்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (யோவா. 3:36) விசுவாசம் வைப்பதற்கும் கீழ்ப்படிவதற்கும் இருக்கிற சம்பந்தத்தைப் பற்றி யோவான் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். இயேசுவுக்குக் கீழ்ப்படியும்போது, நாம் அவர்மீது விசுவாசம் வைக்கிறோம் என்று அர்த்தம். அப்படியென்றால், இயேசுவுக்குக் கீழ்ப்படிய நாம் என்ன செய்ய வேண்டும்? “கிறிஸ்துவின் சட்டத்தை,” அதாவது அவர் கற்றுக்கொடுத்தவற்றையும் அவருடைய கட்டளைகளையும், கடைப்பிடிக்க வேண்டும். (கலா. 6:2) அதோடு, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையின்’ மூலம் அவர் கொடுக்கும் வழிநடத்துதலின்படி நடக்க வேண்டும். (மத். 24:45) இப்படி இயேசுவுக்குக் கீழ்ப்படியும்போது, பிரச்சினைகள் நம்மைப் புயலாய்த் தாக்கினாலும், சகித்திருப்பதற்குத் தேவையான பலம் கிடைக்கும்.—லூக். 6:47, 48.

“மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாக வைத்து உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்”

“எனக்கு விசுவாசம் இருக்கிறது! என் விசுவாசம் இன்னும் பலமாவதற்கு உதவி செய்யுங்கள்!” என்று ஒருவர் இயேசுவிடம் கேட்டார். (மாற். 9:24) அவருக்கு ஓரளவு விசுவாசம் இருந்தது. ஆனாலும், தனக்கு இன்னும் அதிக விசுவாசம் தேவை என்பதை அவர் அடக்கத்தோடு ஒத்துக்கொண்டார். நம் வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில், அவரைப் போலவே நமக்கும் அதிகமான விசுவாசம் தேவைப்படும். பைபிளைப் படிப்பதன் மூலமும் படித்தவற்றை ஆழமாக யோசிப்பதன் மூலமும் இப்போது நம் விசுவாசத்தை பலப்படுத்திக்கொள்ளலாம். இப்படிச் செய்யும்போது, யெகோவாவின் மீது இருக்கும் நன்றி அதிகமாகும். அதோடு, வேறுசில விஷயங்களையும் செய்ய வேண்டும். நம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து யெகோவாவை வணங்க வேண்டும். நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். விடாமல் ஜெபம் செய்ய வேண்டும். இப்படி நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளும்போது, மிகப்பெரிய பரிசை நாம் பெற்றுக்கொள்வோம். பைபிள் இப்படிச் சொல்கிறது: “அன்புக் கண்மணிகளே, உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாக வைத்து உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்; . . . எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்.”—யூ. 20, 21.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்