அவர்களின் பலத்தை எங்கிருந்து பெறுகின்றனர்?
இந்தப் படத்தில் இருக்கும் வண்ணத்துப்பூச்சியைச் சற்று நீங்கள் உற்று கவனித்தால், அதன் நான்கு இறக்கைகளில் ஒன்று, முற்றிலும் பயனற்று கிடப்பதைப் பார்ப்பீர்கள். இருப்பினும், இந்த வண்ணத்துப்பூச்சி உண்பதையும் பறப்பதையும் தொடர்ந்து செய்கிறது. இது ஒன்றும் பிரத்தியேக சங்கதியல்ல. வண்ணத்துப்பூச்சிகள், அவற்றினுடைய இறக்கைகளின் மேற்பகுதியில் 70 சதவிகிதம் காணாமற்போனாலும், தங்கள் அன்றாடக செயல்களில் ஈடுபடுவது கண்டுணரப்பட்டிருக்கிறது.
அதேபோல், உறுதியான மனதிடத்தைப் பலர் காட்டியுள்ளனர். உடல்சம்பந்தமான அல்லது உணர்ச்சிப்பூர்வமான தீராத பிரச்சினைகள் மத்தியிலும் அவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.—2 கொரிந்தியர் 4:16-ஐ ஒப்பிடுக.
அப்போஸ்தலனாகிய பவுல், அவருடைய மிஷனரி வாழ்க்கைப் பயணத்தின்போது, தனிப்பட்டவிதத்தில் பெரும் கொடுமைகளைச் சகித்தார். அவர் சாட்டையால் விளாசப்பட்டார், அடிக்கப்பட்டார், கல்லெறியப்பட்டார், சிறையிலிடப்பட்டார். கூடுதலாக, அவர் ஏதோ ஒருவகை உடல் ஊனத்தினால், ஒருவேளை அவர் கண்ணிலிருந்த பிரச்சினையினால் துன்பப்பட்டார், ‘அது மாம்சத்திலே ஒரு முள்ளாக’ தொடர்ந்து இருந்தது.—2 கொரிந்தியர் 12:7-9; கலாத்தியர் 4:15.
டேவிட் என்னும் பெயரையுடைய ஒரு கிறிஸ்தவ மூப்பர், பல வருடங்களாகத் திடீர் என ஏற்படும் மனச்சோர்வை எதிர்த்து போராடினார், தான் குணமடைய யெகோவாவின் பலமே அதிமுக்கியமாக இருந்தது என்று நம்புகிறார். “கடினமாக முயன்று அடைந்த முன்னேற்றமானது, மீண்டும் மீண்டும் வழுவிச்செல்லும் ஒன்றைப்போல் தோன்றியது. அத்தகைய உற்சாகமிழத்தலை எதிர்ப்படுகையில், நான் யெகோவாவின்மீது முழுமையாகச் சார்ந்திருந்தேன், அவர் உண்மையில் என்னை நிலைநிறுத்தினார். ஒரே சமயத்தில், பல மணிநேரங்களாக நான் ஜெபித்த தருணங்களும் உண்டு. நான் யெகோவாவுடன் பேசியபோது, என்னுடைய தனிமையும் பயனற்று உணரும் தன்மையும் மறைந்துவிட்டது. மிகவும் பலவீனமான தருணங்களினூடே நான் போராடினேன், ஆனால் யெகோவாவின் உதவியால் போராட முடிந்தது. இந்தப் பலவீனத்திலிருந்து பலம் கிடைத்தது—மற்றவர்களுக்கும் உதவும்படியான பலம் கிடைத்தது” என்று அவர் விளக்குகிறார்.
யெகோவா தேவன் பவுலைப் பலப்படுத்தினார். எனவேதான், அவர் கூறுகிறார்: “பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 12:10) ஆம், பவுலின் பலவீனம், கடவுள் கொடுக்கும் பலத்தின்பேரில் சார்ந்திருக்க அவருக்குப் கற்பித்தது. “என்னைப் பலப்படுத்துகிறவருக்குள் எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு வல்லமையுண்டு” என்று அந்த அப்போஸ்தலன் கூறினார். (பிலிப்பியர் 4:13, தி.மொ.) யெகோவா தம்முடைய ஊழியர்களை நிச்சயமாகவே பலப்படுத்துகிறார்.