உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • படைப்பா பரிணாமமா—பாகம் 1: கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்ப வேண்டும்?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
    • கடவுள் இருக்கிறார் என்ற தன்னுடைய நம்பிக்கைக்கான காரணத்தை சக மாணவனிடம் விளக்கும் ஓர் இளைஞர்

      இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

      படைப்பா பரிணாமமா?—பாகம் 1: கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்ப வேண்டும்?

      • படைப்பா பரிணாமமா?

      • கடவுள் இருக்கிறார் என்று நான் ஏன் நம்புகிறேன்?

      • என்னுடைய நம்பிக்கையை விளக்குவது

      படைப்பா பரிணாமமா?

      கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் மட்டுமல்ல உங்களைப் போலவே நிறைய இளைஞர்களும் (அதோடு, பெரியவர்களும்) கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நம்புகிறார்கள். ஆனால், இந்தப் பிரபஞ்சத்தையும் உயிரினங்களையும் ஏதோவொரு உன்னத சக்தி படைக்கவில்லை, இவையெல்லாம் தானாகவே வந்தன என்று மற்றவர்கள் நம்புகிறார்கள்.

      உங்களுக்குத் தெரியுமா? இதைப் பற்றி விவாதிக்கும் இரு தரப்பினருமே அவர்களுடைய நம்பிக்கை என்ன என்று சட்டென சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அதை ஏன் நம்புகிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை.

      • சர்ச் சொல்லிக் கொடுப்பதால் படைப்பில் சிலர் நம்பிக்கை வைக்கிறார்கள்.

      • ஸ்கூல் சொல்லிக் கொடுப்பதால் பரிணாமத்தில் பலர் நம்பிக்கை வைக்கிறார்கள்.

      படைப்பில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்கும் அதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்கும் இந்தத் தொடர் கட்டுரைகள் உங்களுக்கு உதவி செய்யும். ஆனால், முதலில், உங்களை நீங்களே இந்த அடிப்படைக் கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்:

      கடவுள் இருக்கிறார் என்று நான் ஏன் நம்புகிறேன்?

      இந்தக் கேள்வி ஏன் முக்கியம்? ஏனென்றால், உங்களுடைய “சிந்திக்கும் திறனை” பயன்படுத்தும்படி பைபிள் உங்களை உற்சாகப்படுத்துகிறது. (ரோமர் 12:1) அப்படியானால், நீங்கள் கடவுளை நம்புவதற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கக் கூடாது:

      • உணர்வு (எல்லா சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது)

      • மற்றவர்களுடைய தாக்கம் (மதப்பற்றுள்ள ஜனங்கள் வசிக்கிற பகுதியில் வசிக்கிறேன்)

      • அழுத்தம் (அப்பா அம்மா சொல்லிக் கொடுத்ததால்தான் கடவுளை நம்புகிறேன். இல்லையென்றால்...)

      அதற்குப் பதிலாக, கடவுள் இருக்கிறார் என்று நீங்களாகவே நம்ப வேண்டும்; அப்படி நம்புவதற்கு உங்களுக்கு நல்ல காரணங்கள் இருக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்? “கடவுள் இருக்கிறார் என்று நான் ஏன் நம்புகிறேன்?” என்ற ஒர்க் ஷீட் உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்த உதவும். இந்தக் கேள்விக்கு மற்ற இளைஞர்கள் சொல்கிற பதில்களும் உங்களுக்கு உதவும். “நம்ம உடம்பு எப்படிச் செயல்படுதுனு க்ளாஸ் டீச்சர் சொல்லிக் கொடுக்கும்போதெல்லாம் கடவுள் இருக்காருங்கற என்னோட நம்பிக்கை அதிகமாகிட்டே போகும். உதாரணத்துக்கு, நம்ம உடம்புல இருக்கற ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி வேலை இருக்கு, அதில சில வேலைகள் ரொம்ப ரொம்ப நுணுக்கமானது. இந்த வேலைங்க எல்லாம் நமக்கே தெரியாம உள்ளுக்குள்ள நடந்திட்டு இருக்கு. அதனாலதான் சொல்றேன், மனுஷங்க உடம்பு, அப்பப்பா ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!”​—டெரஸா.

      “பெரிய பெரிய கட்டடங்கள, இல்லன்னா ஒரு கப்பல, இல்ல... ஒரு காரைப் பாக்கும்போதெல்லாம், “இத யார் செஞ்சிருப்பாங்க”ன்னு எனக்கு நானே கேட்டுப்பேன். ஒரு காரை செய்யறதுக்கு புத்திசாலியான ஆட்கள் தேவை. ஏன்னா, அதில சின்னச்சின்னதா ஏகப்பட்ட பொருள்கள் இருக்கு, அத எல்லாத்தையும் கச்சிதமா பொருத்தினாத்தான் கார் ஒழுங்கா ஓடும். கார்களுக்கே ஒரு டிஸைனர் தேவைன்னா, மனுஷங்களுக்கும் கண்டிப்பா தேவைதானே?”​—ரிச்சர்டு.

      “நம்ம பிரபஞ்சத்தில இருக்கற ரொம்ப ரொம்பச் சின்னப் பாகத்த புரிஞ்சுக்கறதுக்கு மகா பெரிய புத்திசாலிகளுக்கே நூத்துக்கணக்கான வருஷம் பிடிச்சிருக்குன்னா... முழு பிரபஞ்சத்தையும் உண்டாக்கறதுக்குப் புத்திக்கூர்மையுள்ள எந்த நபரும் தேவைப்படலன்னு சொல்றது எந்த விதத்தில நியாயம்?”—கேரன்.

      “அறிவியலுக்குள்ள நான் ஆழமா நுழைய நுழைய, பரிணாமக் கொள்கை மேல இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிடுச்சு. உதாரணத்துக்கு, இயற்கையில இருக்கற கணித நுணுக்கத்த பத்தியும், மனுஷங்ககிட்ட இருக்கற தனித்தன்மைய பத்தியும் யோசிச்சுப் பாத்தேன். முக்கியமா, நாம யாரு, எங்கிருந்து வந்தோம், எங்க போறோம்ங்கற கேள்விக்கெல்லாம் பதில் தெரிஞ்சுக்கறதுக்கான தேவை நமக்கு இருக்கறத பத்தி யோசிச்சுப் பாத்தேன். இத எல்லாத்தையும் மிருகங்களோட சம்பந்தப்படுத்தி பரிமாணமக் கொள்கை பேசுது... ஆனா மனுஷங்க ஏன் தனித்தன்மை வாய்ந்தவங்களா இருக்காங்கன்னு மட்டும் இதுவரைக்கும் சொன்னதே இல்ல. என்னைப் பொறுத்தவரை, ஒரு படைப்பாளர் இருக்காருங்கறதகூட நம்பிடலாம், ஆனா பரிணாமக் கொள்கைய நம்பறதுக்குத்தான் அதிகமா ‘விசுவாசம்’ தேவைப்படுது.”​—ஆந்தொனி.

      என்னுடைய நம்பிக்கையை விளக்குவது

      பார்க்க முடியாத ஒரு விஷயத்தை நம்புகிறீர்கள் என்பதற்காக, உங்கள் வகுப்பு மாணவர்கள் உங்களைக் கிண்டல் செய்தால் என்ன செய்வது? பரிணாமக் கொள்கைதான் உண்மை என்று அறிவியல் நிரூபித்துவிட்டது என்று சொன்னால் என்ன செய்வது?

      முதலாவது, நீங்கள் நம்புகிற விஷயத்தில் உறுதியாக இருங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றிப் பேச பயப்படாதீர்கள், வெட்கப்படாதீர்கள். (ரோமர் 1:16) பின்வரும் விஷயங்களை ஞாபகத்தில் வையுங்கள்:

      1. கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் மட்டுமே நம்புவதில்லை, ஏராளமானோரும் நம்புகிறார்கள். ஆம், பெரிய பெரிய புத்திசாலிகளும், தொழில்துறை வல்லுநர்களும் நம்புகிறார்கள். உதாரணத்திற்கு, கடவுள் இருக்கிறார் என விஞ்ஞானிகள்கூட நம்புகிறார்கள்.

      2. சிலர் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும்போது உண்மையில் கடவுளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையே சிலசமயம் அர்த்தப்படுத்துகிறார்கள். தங்களுடைய கருத்துக்கு அத்தாட்சி அளிப்பதற்குப் பதிலாக, “கடவுள் இருக்கிறார் என்றால், துன்பங்களை ஏன் அனுமதிக்கிறார்?” போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள். அறிவுப்பூர்வமாக விவாதிக்க வேண்டிய விஷயத்தை உணர்ச்சிப்பூர்வமாக விவாதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

      3. மனிதர்களுக்கு “ஆன்மீகத் தேவை” இருக்கிறது. (மத்தேயு 5:3) கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கான தேவையும் இதில் உட்பட்டிருக்கிறது. அதனால், கடவுள் இல்லையென்று சொல்கிற நபர்தான் தன்னுடைய நம்பிக்கையைப் பற்றி விளக்கமளிக்க வேண்டும், நீங்கள் அல்ல!​—ரோமர் 1:18-20.

      4. கடவுள் இருக்கிறார் என்று நம்புவது நியாயமானதுதான். உயிர் தானாகவே வராது என்ற உண்மையை இது உறுதிப்படுத்துகிறது. உயிரற்ற பொருளிலிருந்து உயிர் வரக்கூடும் என்ற கருத்தை ஆதரிப்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை.

      கடவுள் இருக்கிறார் என்ற உங்கள் நம்பிக்கையைப் பற்றி யாராவது உங்களிடம் கேள்வி எழுப்பினால் என்ன செய்வது? இப்படிச் செய்து பாருங்கள்.

      யாராவது இப்படிச் சொன்னால்: “படிப்பறிவு இல்லாதவங்கதான் கடவுள் இருக்கிறாருனு நம்புவாங்க.”

      நீங்கள் இப்படிப் பதில் சொல்லலாம்: “நிறைய பேர் இப்படிச் சொல்றாங்க, நீங்களுமா இத நம்பறீங்க? நான் நம்பல. ஒருசமயம், 1,600 விஞ்ஞானப் பேராசிரியர்கள வெச்சு ஒரு ஆய்வு நடத்தினாங்க; அந்தப் பேராசிரியர்கள்ல மூனுல ஒரு பகுதியினர் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லைன்னும் சொல்லல, கடவுள்னு ஒருத்தர் இருக்கறத சந்தேகிக்கறதாவும் சொல்லல.a அப்படீன்னா... அவங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு... அந்த நம்பிக்கை இருந்துச்சுங்கறதுக்காக, அவங்க எல்லாரையும் அறிவில்லாதவங்கன்னு சொல்வீங்களா?”

      யாராவது இப்படிச் சொன்னால்: “கடவுள்னு ஒருத்தர் இருந்தா, ஏன் இந்த உலகத்தில இத்தனை கஷ்டம் இருக்கு?”

      நீங்கள் இப்படிப் பதில் சொல்லலாம்: “கடவுள் எப்படிச் செயல்படறாருன்னு புரியலன்னு சொல்ல வர்றீங்களா? இல்ல... அவரு எதுவும் செய்யற மாதிரி தெரியலைன்னு சொல்ல வர்றீங்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] ஏன் இன்னைக்கு இவ்வளவு கஷ்டம் இருக்குங்கற கேள்விக்குத் திருப்தியான பதில் எனக்குக் கிடைச்சுது. அத நீங்க புரிஞ்சுக்கணும்னா நிறைய பைபிள் விஷயங்கள நான் சொல்ல வேண்டியிருக்கும். அதையெல்லாம் தெரிஞ்சுக்க உங்களுக்கு ஆர்வம் இருக்கா?”

      மனிதர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பதற்கான திருப்தியளிக்கும் விளக்கத்தை பரிணாமக் கொள்கை ஏன் தருவதில்லை என்று இந்தத் தொடர்க் கட்டுரையின் அடுத்த பாகம் சொல்லும்.

      a ஆதாரம்: சமூக அறிவியல் ஆய்வுக் குழு, பிப்ரவரி 5, 2007-ல் ஈலைன் ஹௌவார்ட் எக்லன்டு எழுதிய “பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் மதமும் ஆன்மீகமும்” என்ற புத்தகம்.

  • படைப்பா பரிணாமமா?​—பாகம் 2: பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
    • உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிணாமக் கொள்கை கற்றுக்கொள்ளப்படுகிறது

      இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

      படைப்பா பரிணாமமா?​—பாகம் 2: பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?

      அலெக்ஸுக்கு ஒரே குழப்பம். கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று இத்தனை நாட்களாக அவன் நம்பிக்கொண்டு இருந்தான். ஆனால், இன்று அவனுடைய உயிரியல் ஆசிரியர் பரிணாமம்தான் உண்மை என்றும், அதை அறிவியல் நிரூபித்துவிட்டது என்றும் அடித்துச் சொல்கிறார். அலெக்ஸ் தன்னை ஒரு முட்டாளாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதனால், “பரிணாமம் உண்மைன்னு விஞ்ஞானிகள் நிரூபிச்சிருக்காங்கன்னா, அவங்கள கேள்வி கேட்கறதுக்கு நான் யாரு?” என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு சும்மா இருந்துவிடுகிறான்.

      இதேபோன்ற சூழ்நிலைமையை நீங்களும் எதிர்ப்பட்டிருக்கிறீர்களா? நினைவு தெரிந்த நாளிலிருந்தே, ‘கடவுள்தான் வானத்தையும் பூமியையும் படைத்தார்’ என்று பைபிள் சொல்வதை நீங்கள் ஒருவேளை நம்பியிருக்கலாம். (ஆதியாகமம் 1:1) ஆனால், படைப்பு வெறும் கட்டுக்கதை, பரிணாமம்தான் உண்மை என்று உங்களை நம்ப வைக்க நிறைய பேர் சமீப காலமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் நம்ப வேண்டுமா? பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?

      • பரிணாமத்தைப் பற்றிக் கேள்வி எழுப்ப இரண்டு காரணங்கள்

      • சிந்திக்க சில கேள்விகள்

      • உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...

      பரிணாமத்தைப் பற்றிக் கேள்வி எழுப்ப இரண்டு காரணங்கள்

      1. பரிணாமத்தைப் பற்றி விஞ்ஞானிகளுக்குள் கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. பரிணாமத்தைப் பற்றி பல பத்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்த பிறகும்கூட, விஞ்ஞானிகளால் ஏக மனதுடன் அதற்கான விளக்கத்தைத் தர முடியவில்லை.

        சிந்தித்துப் பாருங்கள்: பரிணாமத்தைப் பற்றிய சில விஷயங்களில் விஞ்ஞானிகளே—நிபுணர்களாக இருக்கும் அவர்களே—ஒத்துப்போகவில்லை என்றால், அந்தக் கொள்கையைப் பற்றி நீங்கள் கேள்வி எழுப்புவதில் தவறு ஏதாவது இருக்கிறதா?​—சங்கீதம் 10:4.

      2. நீங்கள் என்ன நம்புகிறீர்கள் என்பது முக்கியம். “உயிர் எதேச்சையாதான் வந்துச்சுன்னா, நம்ம வாழ்க்கைக்கே, ஏன் இந்தப் பிரபஞ்சத்தில இருக்கற எதுக்குமே அர்த்தமில்லாம போயிடும்” என்கிறான் ஸக்கரி என்ற பையன். அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. பரிணாமம்தான் உண்மை என்றால், வாழ்க்கைக்கு எந்தவொரு நிரந்தர நோக்கமும் இருக்காது. (1 கொரிந்தியர் 15:32) படைப்பு உண்மையாக இருந்தால், வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய கேள்விகளுக்கும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய கேள்விகளுக்கும் திருப்தியான பதில்களை நாம் கண்டுபிடிக்க முடியும்.​—எரேமியா 29:11.

        சிந்தித்துப் பாருங்கள்: பரிணாமத்தையும் படைப்பையும் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது உங்கள் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும்?​—எபிரெயர் 11:1.

      சிந்திக்க சில கேள்விகள்

      சிலரது கருத்து: ‘விண்வெளி திடீரென்று வெடித்துச் சிதறியதில் இந்த முழு பிரபஞ்சமே உருவானது.’

      • அந்த வெடிப்பை யார் அல்லது எது உண்டாக்கியது?

      • எதை ஒத்துக்கொள்ள முடிகிறது—ஒன்றுமே இல்லாததிலிருந்து எல்லாமே உருவானது என்பதையா? ஏதோ ஒன்றிலிருந்து அல்லது யாரோ ஒருவரிடமிருந்து எல்லாமே உருவானது என்பதையா?

      சிலரது கருத்து: ‘மிருகங்களிலிருந்து மனிதன் தோன்றினான்.’

      • மிருகங்களிலிருந்து, உதாரணத்துக்கு குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால், மனிதர்களுடைய அறிவுத்திறனுக்கும் குரங்குகளின் அறிவுத்திறனுக்கும் இடையே ஏன் இவ்வளவு வித்தியாசம்?a

      • மிகமிக “சாதாரணமான” உயிர்களும்கூட, ஏன் இந்தளவு சிக்கலான வடிவமைப்புடன் இருக்கின்றன?b

      சிலரது கருத்து: ‘பரிணாமம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.’

      • இப்படிச் சொல்கிற நபர், அது உண்மைதானா என்று தனிப்பட்ட விதத்தில் ஆராய்ந்து பார்த்தாரா?

      • புத்திசாலிகள் எல்லாரும் பரிணாமத்தை நம்புகிறார்கள் என்று தங்களிடம் சொல்லப்பட்ட ஒரே காரணத்திற்காக, அதில் எத்தனை பேர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்?

      உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...

      க்வென்

      க்வென்

      “அச்சகம் ஒண்ணு வெடிச்சு சிதறினப்போ, இங்க் எல்லாம் சுவர்லயும் கூரைலயும் தெளிச்சு ஒரு முழு டிக்ஷனரியா உருவாகிடுச்சுன்னு யாராவது சொன்னா நீங்க நம்புவீங்களா? கண்டிப்பா மாட்டீங்க. அப்படியிருக்கும்போது, விண்வெளி வெடிச்சு சிதறினாலதான், இந்த அழகான பிரபஞ்சத்தில இருக்கற எல்லாமே உருவாச்சுன்னு சொன்னா எப்படி நம்பறது?”

      ஜெஸிக்கா

      ஜெஸிக்கா

      “நல்ல குணங்கள் இருந்தாதான் மனுஷங்களால உயிர் வாழ முடியுங்கறது கிடையாது. இருந்தாலும் நம்மகிட்ட நல்ல நல்ல குணங்கள் இருக்கு. உதாரணத்துக்கு, வியாதியால கஷ்டப்படறவங்கள நாம கவனிச்சிக்குறோம், ஏழைங்களுக்கு உதவி செய்யறோம். ‘வலிமையானவைதான் உயிர்பிழைக்கும்’ங்கிற (‘survival of the fittest’) பரிணாமக் கொள்கை உண்மைன்னா நாம அந்த நல்ல குணங்களயெல்லாம் காட்ட வேண்டிய அவசியமே இல்லையே.”

      ஜூலியா

      ஜூலியா

      “நீங்க ஒரு காட்டுல நடந்துபோயிட்டு இருக்கும்போது, ஒரு அழகான மர வீடு கண்ல படுதுன்னு வெச்சுக்கங்க, அப்போ... ‘அட! எவ்ளோ சூப்பரா இருக்கு! இங்க இருக்கற மரமெல்லாம் அந்தந்த இடத்தில கச்சிதமா கீழே விழுந்து இந்த வீடு உருவாயிடுச்சு’னு யோசிப்பீங்களா? நிச்சயமா மாட்டீங்க! அப்படியிருக்கும்போது, இந்தப் பிரபஞ்சத்தில இருக்கற எல்லாமே தானா உருவாயிடுச்சுன்னு சொல்லறத மட்டும் ஏன் நம்பணும்?”

      a குரங்குகளுடைய மூளையைவிட மனிதர்களுடைய மூளை பெரியதாக இருப்பதால்தான், மனிதர்கள் அதிக அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று சிலர் சொல்லலாம். ஆனால், அப்படிச் சொல்வது ஏன் சரியல்ல என்பதைத் தெரிந்துகொள்ள உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேட்டில் பக்கம் 28-ஐப் பாருங்கள்.

      b உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 8-12-ஐப் பாருங்கள்.

  • படைப்பா பரிணாமமா?—பாகம் 3: கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஏன் நம்பலாம்?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
    • மியூஸியத்தில் உள்ள டைனாஸர் மிருகத்தின் புதைபடிவங்களைப் பார்வையிடும் மாணவர்கள்

      இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

      படைப்பா பரிணாமமா?​—பாகம் 3: கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஏன் நம்பலாம்?

      “எல்லாத்தையும் கடவுள்தான் படைச்சார்னு நம்பினீங்கன்னா, மத்தவங்க உங்கள அறிவில்லாதவங்கன்னும், அப்பா அம்மா சொல்லிக் கொடுத்தத குழந்தைத்தனமா நம்பிகிட்டு இருக்கீங்கன்னும் நெனப்பாங்க, இல்லன்னா... மதம் உங்கள பிரெய்ன் வாஷ் செஞ்சிடுச்சுன்னு நெனப்பாங்க.”—ஜீனெட்.

      நீங்களும் ஜீனெட் மாதிரியே நினைக்கிறீர்களா? ஆம் என்றால், படைப்பைப் பற்றிய உங்கள் நம்பிக்கையைக் குறித்து உங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது என்று சொல்லலாம். உண்மைதான், மற்றவர்கள் தங்களை ஞானசூனியம் என்று நினைப்பதை யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படியானால், எது உங்களுக்கு உதவலாம்?

      • நம்பிக்கைக்கு எதிர்ப்புகள்

      • உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்

      • அத்தாட்சிகளை ஆராய உதவும் கருவிகள்

      • உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...

      நம்பிக்கைக்கு எதிர்ப்புகள்

      1. படைப்பில் நம்பிக்கை வைத்தீர்கள் என்றால், நீங்கள் அறிவியலை எதிர்க்கிறீர்கள் என்று மற்றவர்கள் நினைப்பார்கள்.

      “இந்த உலகம் எப்படிச் செயல்படுதுங்கற விளக்கத்த கண்டுபிடிச்சு சொல்றதுக்கு சோம்பேறியா இருக்கறவங்கதான் படைப்பில நம்பிக்கை வெப்பாங்கன்னு எங்க டீச்சர் சொன்னாங்க.”​—மரியா.

      நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: அப்படிச் சொல்கிறவர்களுக்குச் சில உண்மைகள் தெரிவதில்லை. கலிலீயோ, ஐசாக் நியூட்டன் போன்ற பிரபல விஞ்ஞானிகள்கூட ஒரு படைப்பாளர் இருப்பதாக நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கையும் அறிவியல்மேல் அவர்களுக்கு இருந்த பற்றும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. இன்றைய விஞ்ஞானிகளில் சிலரும்கூட, அறிவியலுக்கும் படைப்பை நம்புவதற்கும் இடையே எந்தவொரு முரண்பாட்டையும் பார்ப்பதில்லை.

      இப்படிச் செய்து பாருங்கள்: “தன் மதநம்பிக்கையைப் பற்றி” என்ற வார்த்தைகளை (மேற்கோள் குறியுடன் சேர்த்து) உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி-யிலுள்ள “தேடவும்” பெட்டியில் டைப் செய்யுங்கள்; பின்பு, படைப்பில் நம்பிக்கை வைத்திருக்கிற மருத்துவ மற்றும் அறிவியல் துறையினரின் அனுபவங்களை அங்கே கவனியுங்கள்; அந்த நம்பிக்கைக்கு வர எது அவர்களுக்கு உதவியது என்பதை வாசித்துப் பாருங்கள்.

      முக்கிய விஷயம்: படைப்பில் நம்பிக்கை வைப்பது உங்களை அறிவியல் எதிரியாக்கிவிடாது. சொல்லப்போனால், இயற்கையைப் பற்றி அதிகமதிகமாகத் தெரிந்துகொள்வது படைப்பில் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கையைப் பலப்படுத்தவே செய்யும்.​—ரோமர் 1:20.

      2. படைப்பு பற்றிய பைபிள் பதிவை நம்பினீர்கள் என்றால், மற்றவர்கள் உங்களை மதவாதி என்று சொல்வார்கள்.

      “கடவுள்தான் எல்லாத்தையும் படைச்சாருங்கற விஷயத்த நிறைய பேர் ஜோக்கா எடுத்துக்கறாங்க. ஆதியாகமப் பதிவு வெறும் கட்டுக்கதைன்னு நெனக்கறாங்க.”​—ஜாஸ்மின்.

      நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: படைப்பைப் பற்றிய பைபிள் பதிவை மக்கள் பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். உதாரணத்திற்கு, பூமி சமீபத்தில்தான் படைக்கப்பட்டது என்றும், 24 மணிநேரங்களைக் கொண்ட ஆறே நாட்களில் உயிர் படைக்கப்பட்டது என்றும் சில படைப்புவாதிகள் சொல்கிறார்கள். ஆனால், இந்த இரண்டு கருத்தையுமே பைபிள் ஆதரிப்பதில்லை.

      • “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்றுதான் ஆதியாகமம் 1:1 சொல்கிறது. பூமி பல கோடி ஆண்டுகளாக இருக்கிறது என்ற அறிவியல் கருத்தோடு இது முரண்படுவதில்லை.

      • ஆதியாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘நாள்’ என்ற வார்த்தை, நீண்ட காலப்பகுதியைக் குறிக்கலாம். சொல்லப்போனால், ஆதியாகமம் 2:4-ல் உள்ள ‘நாள்’ என்ற வார்த்தை, படைப்பின் ஆறு நாட்களையுமே விவரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

      முக்கிய விஷயம்: பைபிளிலுள்ள படைப்பு பற்றிய பதிவு அறிவியல் உண்மைகளோடு ஒத்துப்போகிறது.

      உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்

      கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நம்புவது “குருட்டு நம்பிக்கை” இல்லை. அப்படி நம்புவதற்கு, நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இதைக் கொஞ்சம் கவனியுங்கள்:

      வாழ்க்கையில் நீங்கள் பார்க்கிற ஒவ்வொன்றுமே ஒரு விஷயத்தை உங்களுக்குக் கற்றுத்தருகிறது, அதாவது வடிவம் எங்கே இருக்கிறதோ அங்கே ஒரு வடிவமைப்பாளர் இருக்கிறார் என்று கற்றுத்தருகிறது. ஒரு காமெராவை, ஒரு விமானத்தை, அல்லது ஒரு வீட்டைப் பார்க்கும்போது, கண்டிப்பாக யாரோ ஒருவர் அதை வடிவமைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள். அப்படியானால், மனிதர்களுடைய கண், வானத்துப் பறவை, பூமி போன்றவற்றைப் பார்க்கும்போது மட்டும் நீங்கள் ஏன் அந்த முடிவுக்கு வர மறுக்கிறீர்கள்?

      சிந்தித்துப் பாருங்கள்: பெரும்பாலும், பொறியியலாளர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக இயற்கையில் தாங்கள் கவனிக்கிற விஷயங்களை காப்பியடிக்கிறார்கள்; அந்தக் கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள். அப்படியானால், அந்தப் பொறியியலாளர்களையும் அவர்களுடைய கண்டுபிடிப்புகளையும் ஏற்றுக்கொண்டு, படைப்பாளரையும் அவருடைய மிகமிக அற்புதமான வடிவமைப்புகளையும் ஏற்றுக்கொள்ள மறுப்பது எந்த விதத்தில் நியாயம்?

      பறக்கிற ஒரு விமானமும் பறவையும்

      விமானத்திற்கு ஒரு வடிவமைப்பாளர் இருக்கிறார், ஆனால் பறவைக்கு இல்லை என்று நினைப்பது நியாயமா?

      அத்தாட்சிகளை ஆராய உதவும் கருவிகள்

      இயற்கையில் காணப்படுகிற அத்தாட்சிகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம் படைப்பில் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ளலாம்.

      இப்படிச் செய்து பாருங்கள்: உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி-யில் “தேடவும்” பெட்டியில், “யாருடைய கைவண்ணம்” என்று (மேற்கோள் குறிகளுடன் சேர்த்து) டைப் செய்யுங்கள். பின்பு, விழித்தெழு! கட்டுரைகளை க்ளிக் செய்து வாசித்துப் பாருங்கள். இயற்கையில் காணப்படுகிற எந்த அருமையான அம்சத்தைப் பற்றி ஒவ்வொரு கட்டுரையும் விளக்குகிறது என்று கண்டுபிடியுங்கள். வடிவமைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்று அந்தக் கட்டுரைகள் உங்களை எப்படி ஆணித்தரமாக நம்ப வைக்கின்றன?

      ஆழமாக ஆராய்ச்சி செய்யுங்கள்: பின்வரும் சிற்றேடுகளை வாசித்து, படைப்புக்கான அத்தாட்சிகளைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

      • உயிர் படைக்கப்பட்டதா? (ஆங்கிலம்)

        • பூமி கச்சிதமான இடத்தில் இருக்கிறது, உயிர் வாழ்வதற்குத் தேவையான எல்லாமே அதில் இருக்கின்றன.—பக்கங்கள் 4-10-ஐப் பாருங்கள்.

        • இயற்கையில் நிறைய வடிவமைப்புகளைப் பார்க்க முடிகிறது.—பக்கங்கள் 11-17-ஐப் பாருங்கள்.

        • ஆதியாகமத்தில் உள்ள படைப்பைப் பற்றிய பைபிள் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது.—பக்கங்கள் 24-28-ஐப் பாருங்கள்.

      • உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள்

        • உயிரற்ற பொருளிலிருந்து உயிர் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை.—பக்கங்கள் 4-7-ஐப் பாருங்கள்.

        • உயிரினங்களின் வடிவமைப்பு படு சிக்கலாக இருப்பதால், அவை திடீரென்று தோன்றியிருக்க முடியாது.—பக்கங்கள் 8-12-ஐப் பாருங்கள்.

        • ஜீன்களில் உள்ள DNA விவரம் அதிநவீன தொழில்நுட்பத்தையே விஞ்சிவிடுகிறது.—பக்கங்கள் 13-21-ஐப் பாருங்கள்.

        • எல்லா உயிரினங்களும் ஒரே மூலத்திலிருந்து தோன்றவில்லை. பெரிய பெரிய மிருக வகைகள் திடீரென தோன்றியதற்குத்தான் புதைபடிவப் பதிவுகள் (Fossil records) அத்தாட்சி அளிக்கின்றன, படிப்படியாகத் தோன்றியதற்கு அல்ல.—பக்கங்கள் 22-20-ஐப் பாருங்கள்.

      “பூமியில இருக்கற மிருகங்க தொடங்கி பிரபஞ்சம்வரை தெரியற இயற்கையும், அதில இருக்கற ஒழுங்கும்தான் கடவுள் இருக்காருங்கறத என் மனசில ஆழமா பதிய வெக்குது.”—தாமஸ்.

      உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...

      ஹேனா

      “செடிகொடிங்க, மிருகங்க, மனுஷ உடம்பு, இதில எல்லாம் இருக்கற நுணுக்கமான விவரங்களைப் பத்தி அறிவியல் வகுப்புல படிச்சப்போ, அப்படியே வாயடைச்சுப்போயிட்டேன்! சந்தேகமே இல்ல... கடவுள்தான் இத எல்லாத்தையும் படைச்சிருக்கணும். என்னைக் கேட்டா... பரிணாமத்த நம்பறதுதான் “குருட்டு நம்பிக்கை,” படைப்ப நம்பறது இல்ல.”​—ஹேனா.

      டாலியா

      “‘விழித்தெழு!’ பத்திரிகைல வர்ற “யாருடைய கைவண்ணம்?”-ங்கற கட்டுரைய படிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பரிணாமம் உண்மையானதா இருக்க முடியாதுங்கறத அது எனக்கு நல்லா புரிய வெக்குது. ரொம்ப அழகான ஒரு பட்டாம்பூச்சி... இல்லன்னா ஒரு தேன்சிட்டு தானாவே உருவாயிடுச்சுன்னு சொல்றது சுத்த பைத்தியக்காரத்தனம்.”​—டாலியா.

  • படைப்பா பரிணாமமா?—பாகம் 4: படைப்பைப் பற்றிய என்னுடைய நம்பிக்கையை எப்படி விளக்குவது?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
    • படைப்பைப் பற்றி சக மாணவ மாணவிகளிடம் விளக்குகிற ஒரு யெகோவாவின் சாட்சி

      இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

      படைப்பா பரிணாமமா?​—பாகம் 4: படைப்பைப் பற்றிய என்னுடைய நம்பிக்கையை எப்படி விளக்குவது?

      கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நீங்கள் நம்புகிறீர்கள், ஆனால் ஸ்கூலில் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்குகிறீர்கள். ‘பாடப் புத்தகங்கள் பரிணாமத்த பத்தி சொல்லுதே... டீச்சர்களும் கூடப் படிக்கிறவங்களும் கிண்டலடிப்பாங்களே...’ என்றெல்லாம் நினைத்து ஒருவேளை நீங்கள் கவலைப்படலாம். அப்படியானால், படைப்பைப் பற்றிய உங்களுடைய நம்பிக்கையைக் குறித்து எப்படி மற்றவர்களிடம் தைரியமாகப் பேசலாம்?

      • உங்களால் முடியும்!

      • தயாராக இருங்கள்

      • உங்கள் நம்பிக்கையை விளக்க உதவும் கருவிகள்

      • உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...

      உங்களால் முடியும்!

      நீங்கள் இப்படி யோசிக்கலாம்: ‘அறிவியல பத்தியும் பரிணாமத்த பத்தியும் பேசற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய புத்திசாலி இல்ல.’ ஒரு காலத்தில் டான்யெல்லா இப்படித்தான் யோசித்தாள். “என் டீச்சரையும் க்ளாஸ்ல இருக்கறவங்களையும் எதிர்த்து, அவங்களோட கருத்துக்கு நேர்மாறா பேசணும்னு நினைக்கும்போதே வெறுப்பா இருந்துச்சு” என்கிறாள் அவள். “அறிவியல் வார்த்தைகள சொல்லி அவங்க வாதாடுனப்போ, நான் குழம்பிப்போயிட்டேன்” என்று ஒத்துக்கொள்கிறாள் டையானா.

      ஆனால், ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்: விவாதங்களில் ஜெயிப்பது உங்கள் குறிக்கோள் அல்ல. நல்ல செய்தி என்னவென்றால், படைப்பை நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் என்று விளக்குவதற்கு நீங்கள் ஒரு அறிவியல் மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

      டிப்ஸ்: “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே” என்று எபிரெயர் 3:4-ல் உள்ள எளிமையான நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கள்.

      அந்த வசனத்திலுள்ள நியமத்தைப் பயன்படுத்தி கரோல் என்ற இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “ஒரு பெரிய காட்டுக்குள்ள நடந்து போயிட்டு இருக்கறதா கற்பனை செஞ்சுக்கங்க. பல மைல் தூரத்துக்கு அங்க ஆள் நடமாட்டமே இல்ல. அப்போ நீங்க கீழ பார்க்கறீங்க... பல்லு குத்துற குச்சி ஒண்ணு அங்க கிடக்குது. என்ன முடிவுக்கு வருவீங்க? ‘யாரோ அந்த இடத்துக்கு வந்திட்டுப் போயிருக்காங்க’ன்னுதான் நிறைய பேர் சொல்வாங்க. பல்குச்சி மாதிரி ரொம்ப ரொம்பச் சின்னப் பொருள்கூட புத்திக்கூர்மையுள்ள ஒருத்தர் இருந்திருக்கணும்-ங்கறதுக்கு அத்தாட்சி அளிக்கும்போது, இந்தப் பிரபஞ்சமும் அதில இருக்கற எல்லா விஷயங்களும் புத்திக்கூர்மையுள்ள ஒருத்தர் இருக்கணும்ங்கிறதுக்கு இன்னும் எந்தளவு அத்தாட்சி அளிக்குது!”

      யாராவது இப்படிச் சொன்னால்: “படைப்புதான் உண்மைன்னா, படைப்பாளர படைச்சது யாரு?”

      நீங்கள் இப்படிப் பதில் சொல்லலாம்: “படைப்பாளர பத்தின எல்லா விஷயங்களையும் நாம புரிஞ்சுக்க முடியாதுங்கறதுக்காக அப்படி ஒருத்தரு இல்லவே இல்லன்னு ஆகிடாது. உதாரணத்துக்கு, உங்க செல்ஃபோனை டிஸைன் செஞ்ச நபர பத்தின எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரியாம இருக்கலாம், ஆனாலும் அத யாரோ ஒருத்தர் டிஸைன் செஞ்சிருக்காருன்னு கண்டிப்பா நம்புவீங்கதான? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] படைப்பாளர பத்தி நிறைய விஷயங்கள நம்மளால தெரிஞ்சுக்க முடியும். உங்களுக்கு ஆர்வம் இருந்துச்சுன்னா, அவர பத்தி கத்துக்கிட்ட விஷயங்கள நான் உங்ககிட்ட சொல்றேன்.”

      தயாராக இருங்கள்

      “உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராக இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:15) அதனால், என்ன சொல்கிறீர்கள், அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்ற இரண்டு விஷயங்களுக்குக் கவனம் செலுத்துங்கள்.

      1. என்ன சொல்கிறீர்கள். கடவுள்மேல் நீங்கள் அன்பு வைத்திருப்பது முக்கியம், மற்றவர்களிடம் தைரியமாகப் பேச அது உங்களைத் தூண்டும். ஆனால், படைப்பை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்றால் கடவுள்மேல் நீங்கள் எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் மட்டும் போதாது. இயற்கையில் இருக்கும் உதாரணங்களையும் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.

      2. அதை எப்படிச் சொல்கிறீர்கள். தன்னம்பிக்கையோடு பேசுங்கள், ஆனால் கடுகடுப்பாகவோ மட்டம் தட்டியோ பேசிவிடாதீர்கள். மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி மரியாதையோடு பேசினால்... சொந்தமாக முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்று ஒத்துக்கொண்டால்... நீங்கள் சொல்ல வருகிற கருத்துக்கு அவர்கள் கவனம் செலுத்தலாம்.

        “மத்தவங்ககிட்ட பேசும்போது அவமானப்படுத்தற மாதிரியோ... எல்லாம் தெரிஞ்ச மேதாவி மாதிரியோ பேசாம இருக்கறது ரொம்ப முக்கியம். மட்டம் தட்டற மாதிரி பேசினா, அவங்களுக்குக் கோபம்தான் வரும்.”—ஈலைன்.

      உங்கள் நம்பிக்கையை விளக்க உதவும் கருவிகள்

      மழையில் நனைந்துகொண்டே நடக்கும் ஒரு டீனேஜ் பெண்

      உங்கள் நம்பிக்கைகளைப் பற்றிப் பேசத் தயாராக இருப்பது, சீதோஷ்ண மாற்றத்துக்குத் தயாராக இருப்பது போன்றது

      “நாம தயாரா இல்லன்னா, எதுக்கு வீணா அசிங்கப்படணும்னு நெனச்சுகிட்டு வாயே திறக்காம இருந்துடுவோம்” என்கிறாள் அலிஸியா. இது உண்மைதான், வெற்றி வேண்டுமானால் தயாரிப்பது அவசியம். “ரொம்ப சிம்பிளான, அதேசமயம் பொருத்தமான ஒரு உதாரணத்த மனசில யோசிச்சு வெச்சிருந்தேன்னா, படைப்ப பத்தி எந்தப் பதட்டமும் இல்லாம என்னால பேச முடியும்” என்கிறாள் ஜென்னா.

      அதுபோன்ற உதாரணங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? பின்வரும் பிரசுரங்கள் நிறைய இளைஞர்களுக்கு உதவியிருக்கின்றன:

      • உயிர் படைக்கப்பட்டதா? (ஆங்கிலம்)

      • உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள்

      • அற்புதப் படைப்பு கடவுளின் மகிமையை வெளிப்படுத்துகிறது (ஆங்கில வீடியோ)

      • விழித்தெழு! பத்திரிகையில் வெளிவருகிற “யாருடைய கைவண்ணம்?” தொடர்க் கட்டுரைகள். (இந்தத் தலைப்பை [மேற்கோள் குறிகளுடன் சேர்த்து] உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி-யில் “தேடவும்” பெட்டியில் டைப் செய்யுங்கள்.)

      • கூடுதலான ஆராய்ச்சிக்கு உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி-யைப் பயன்படுத்துங்கள்.

      “படைப்பா பரிணாமமா?” என்ற இந்தத் தொடர்க் கட்டுரைகளின் முந்தைய கட்டுரைகளை வாசித்துப் பார்ப்பதும் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

      1. பாகம் 1: கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்ப வேண்டும்?

      2. பாகம் 2: பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?

      3. பாகம் 3: கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஏன் நம்ப வேண்டும்?

      டிப்ஸ்: படைப்பில், நீங்கள் நம்பிக்கை வைக்க உதவிய உதாரணங்களைத் தேர்ந்தெடுங்கள். அவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது சுலபம், உங்களால் தன்னம்பிக்கையோடும் பேச முடியும். உங்கள் நம்பிக்கையை மற்றவர்களிடம் எப்படி விளக்குவீர்கள் என்று ஒத்திகை பாருங்கள்.

      உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...

      ப்ரிட்டனி

      “பரிணாமம்தான் உண்மைன்னா... கரிசனை, அன்பு மாதிரியான குணங்கள் நமக்கு ஏன் இருக்கு? இந்தக் குணங்க எல்லாம் உங்கள பத்தி யோசிக்க வெக்கறதுக்குப் பதிலா, மத்தவங்கள பத்தி யோசிக்க வெக்குது. இந்தக் குணங்களும் பரிணாமத்தினாலதான் வந்துச்சுன்னு சொல்றது முட்டாள்தனம்.”—ப்ரிட்டனி.

      ப்ரெயன்னா

      “நம்ம உடல்ல இருக்கற செல்களோட உள்ளமைப்பை பத்தியும், அது செயல்படற விதத்த பத்தியும் உயிரியல் பாடத்தில தெரிஞ்சுகிட்டேன். அந்தப் பாடம் பரிணாமத்த ஆதரிச்சாலும், அதில படிச்ச விஷயங்க எல்லாம் ஒரு குறிப்பை எனக்கு நல்லா புரிய வெச்சுது: புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பாளர்தான் நம்மள வடிவமைச்சிருக்கணும்.”—ப்ரெயன்னா.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்