விசுவாசத்துக்காக சிறைவாசம்—எரிட்ரியா
பல வருஷங்களாக எந்தவொரு குற்றமும் சுமத்தப்படாமல், விசாரணையும் செய்யாப்படாமல் எரிட்ரிய அரசாங்கம் அங்கிருக்கிற யெகோவாவின் சாட்சிகளைக் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அவர்களில் பெண்களும் வயதானவர்களும்கூட இருக்கிறார்கள். 1993-ல் நடந்த சுதந்திர வாக்கெடுப்பில் யெகோவாவின் சாட்சிகள் கலந்துகொள்ளாததாலும், மனசாட்சியின் காரணமாக ராணுவத்தில் சேர மறுத்ததாலும் அவர்களுடைய குடியுரிமையை ரத்து செய்வதாக அக்டோபர் 25, 1994-ல் ஜனாதிபதி அஃப்வர்கி உத்தரவு போட்டார். கட்டாய ராணுவ சேவையை அமல்படுத்துவதற்கு முன்பு, எரிட்ரியாவில் இருக்கிற அதிகாரிகள், அதற்குப் பதிலாக மற்ற பொது சேவைகளைச் செய்ய அனுமதி கொடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில், அரசாங்கத்துடைய வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் நிறைய சாட்சிகள் பொது சேவைகளைச் செய்தார்கள். ‘தேசிய நலப்பணி சேவையை நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை’ எரிட்ரிய அதிகாரிகள் முறைப்படி வழங்கினார்கள். அந்தச் சேவை செய்தவர்களை அடிக்கடி பாராட்டவும் செய்தார்கள். ஆனால், ஜனாதிபதியின் உத்தரவு வந்த பிறகு, பாதுகாப்பு அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளைச் சிறையில் போட்டு, சித்திரவதை செய்து, கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது விசுவாசத்தைவிட்டு விலக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்கள்.
இப்போது 64 யெகோவாவின் சாட்சிகள் சிறையில் இருக்கிறார்கள் (37 ஆண்கள், 27 பெண்கள்). செப்டம்பர் 2024-ல் பாதுகாப்பு அதிகாரிகள் ஒருவருடைய வீட்டில் அமைதியான முறையில் நடந்த ஒரு மத கூட்டத்துக்குள்ளே அத்துமீறி நுழைந்து 24 பேரை கைது செய்தபோது இந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. பிற்பாடு இரண்டு மைனர் பிள்ளைகள் விடுவிக்கப்பட்டார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து, யெகோவாவின் சாட்சியாக இருக்கிற 85 வயதான ஒரு பெண்மணியும்கூட கைது செய்யப்பட்டார். இந்த 23 சாட்சிகளும் மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்டார்கள். டிசம்பர் 7, 2024-ல் நிறை மாத கர்ப்பிணியான செரோன் ஜெப்ரு என்ற சகோதரி விடுதலை செய்யப்பட்டார். இது அவருக்கு முதல் பிரசவம். ஜனவரி 15, 2025-ல் 82 வயதான மிசான் ஜெப்ரியெசஸ் விடுதலை செய்யப்பட்டார்.
நவம்பர் 1, 2024-ல், போலீஸ் அதிகாரிகள் மீண்டும் சாட்சிகளை குறிவைத்தார்கள். இந்த முறை படித்துக்கொண்டிருக்கும் 16 முதல் 18 வயதுடைய நான்கு சாட்சிகளை கைது செய்தார்கள். அவர்கள் விசாரணை செய்யப்பட்டு உடனடியாக மாய் சேர்வா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். நவம்பர் 22-ல், அதிகாரிகள் அல்மாஸ் கெப்ரெஹிவோட்டின் இளம் மகளை அவளுடைய பள்ளியிலிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அல்மாஸ் தனது மகளை அழைத்துவர காவல் நிலையத்துக்கு சென்றபோது, அதிகாரிகள் அவருடைய மகளை விடுதலை செய்து அவளுக்கு பதிலாக அல்மாஸை பிடித்து வைத்தார்கள். அல்மாஸ் இப்போது அஸ்மாராவில் உள்ள 5-வது காவல் நிலையத்தில் இருக்கிறார். சந்தோஷமான விஷயம் என்னவென்றால், கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு பெண் கைதிகள் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள். மிக்கல் டாடிசே பிப்ரவரி 25, 2025-ல் மாய் சேர்வா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பெரெக்டி கெப்ரெடாடியோஸ் மார்ச் 12, 2025-ல் அடி அபெட்டோ சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருக்கும் படுமோசமான நிலைமைகள்
மாய் சேர்வாவிலும் மற்ற சிறைகளிலும் இருக்கிற படுமோசமான நிலைமைகளால் யெகோவாவின் சாட்சிகள் கஷ்டப்படுகிறார்கள். கைதிகள் சிறிய அறைகளில் நெருக்கமாக அடைக்கப்படுவதால் அவர்களுக்கு நிமிர்ந்து படுக்க போதுமான இடம் இல்லை, ஒருவருக்கொருவர் நெருக்கியபடி ஒரு பக்கமாக தூங்க வேண்டியிருக்கிறது. அங்கே சுகாதார வசதிகளும் இல்லை. குறிப்பிட்ட நேரங்களில், அதாவது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே ஆண்களும் பெண்களும் மலஜலம் கழிக்க அனுமதிக்கப்படுகிறார்கள், அதுவும் ராணுவ வீரர்களின் கண்காணிப்பின்கீழ். அதோடு, அவர்களுக்கு போதுமான மருத்துவ வசதிகளும் இல்லை, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் இருக்கிறது.
இப்படிப்பட்ட படுமோசமான நிலைமைகளால் எரிட்ரியா சிறையில் நான்கு சாட்சிகள் அங்கு இருக்கும்போதே இறந்துவிட்டார்கள், வயதான மூன்று சாட்சிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு இறந்துவிட்டார்கள்.
2011-லும் 2012-லும் இரண்டு சாட்சிகள் மெய்டிர் சிறைச்சாலை முகாமில் கொடூரமாக நடத்தப்பட்டதால் இறந்துபோனார்கள். ஜூலை 2011-ல் 62 வயதான மிஸ்கினா கெப்ரிடின்சே இறந்துபோனார். தண்டிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ‘பாதாளத்தில்’ இருந்த தாங்க முடியாத சூட்டினால் அவர் இறந்துபோனார். அதே மாதிரியான சூழ்நிலையில் கிட்டத்தட்ட நான்கு வருஷங்கள் அடைக்கப்பட்டிருந்த 68 வயதான யோஹனஸ் ஹய்லி ஆகஸ்ட் 16, 2012-ல் இறந்துபோனார்.
மெய்டிர் முகாமில் அதே மோசமான நிலைமையில் காவலில் வைக்கப்பட்டிருந்த வயதான மூன்று சாட்சிகளான கசாய் மேக்கோனன், கொய்டோம் கெப்ரிகிறிஸ்டோஸ் மற்றும் டேஸ்சிஹேயீ டேஸ்ஃபாமரியம், விடுதலை செய்யப்பட்ட பிறகு இறந்துபோனார்கள்.
2018-ல், இரண்டு சாட்சிகள் மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு இறந்துவிட்டார்கள். 76 வயதான ஹப்டிமைக்கேல் டெஸ்ஃப்பாமரியம் ஜனவரி 3-ம் தேதி இறந்தார். 77 வயதான ஹப்டிமைக்கேல் மெக்கோன்னேன் மார்ச் 6-ம் தேதி இறந்தார். 2008-ல், எரிட்ரிய அதிகாரிகள் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் இந்த இரண்டு ஆண்களையும் சிறையில் அடைத்தார்கள்.
காலவரையற்ற சிறைத்தண்டனைகள்
சிறையில் அடைக்கப்பட்ட சாட்சிகளில் நிறைய பேர் காலவரையின்றி சிறையில் இருக்க வேண்டியிருக்கிறது, இறந்துவிட்டாலோ அல்லது மரணத்தை நெருங்கினாலோதான் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அவர்களுடைய நாட்டில் திறமையான சட்ட நடைமுறைகளோ தீர்வுகளோ அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் அவர்களுடைய சிறைத்தண்டனை ஆயுள் தண்டனைக்கு சமம் என்றே சொல்லலாம்.
காலவரிசை
மே 20, 2025
மொத்தம் 64 பேர் சிறையில் இருக்கிறார்கள்.
நவம்பர் 22, 2024
நாட்டின் அரசியல் கட்சியில் சேர மறுத்ததால் அல்மாஸ் கெப்ரெஹிவோட் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 1, 2024
யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்டார்கள்.
செப்டம்பர் 27, 2024
இருபத்து மூன்று சாட்சிகள் கைது செய்யப்பட்டு மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்டார்கள், அதில் இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
பிப்ரவரி 1, 2021
மூன்று சாட்சிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஜனவரி 29, 2021
ஒரு சாட்சி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
டிசம்பர் 4, 2020
28 சாட்சிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
மார்ச் 6, 2018
மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு 77 வயதான ஹப்டிமைக்கேல் மெக்கோன்னேன் இறந்துவிட்டார்.
ஜனவரி 3, 2018
மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு, 76 வயதான ஹப்டிமைக்கேல் டெஸ்ஃப்பாமரியம் இறந்துவிட்டார்.
ஜூலை 2017
மெய்டிர் முகாமில் இருந்த எல்லா சாட்சிகளும் அஸ்மாராவுக்கு வெளியே இருக்கிற மாய் சேர்வா சிறைக்கு மாற்றப்பட்டார்கள்.
ஜூலை 25, 2014
ஏப்ரல் 14 அன்று கைதான பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள், ஆனால் ஏப்ரல் 27 அன்று கைதான 20 பேர் விடுதலை செய்யப்படவில்லை.
ஏப்ரல் 27, 2014
பைபிள் படிப்பதற்காக ஒன்றுகூடி வந்த 31 சாட்சிகள் கைது செய்யப்பட்டார்கள்.
ஏப்ரல் 14, 2014
இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு நாளுக்காக ஒன்றுகூடி வந்த 90-க்கும் அதிகமான சாட்சிகள் கைது செய்யப்பட்டார்கள்.
ஆகஸ்ட் 16, 2012
68 வயதான யோஹனஸ் ஹய்லி, சிறைச்சாலையிலிருந்த படுமோசமான நிலைமைகளால் இறந்துபோனார்.
ஜூலை 2011
62 வயதான மிஸ்கினா கெப்ரிடின்சே, சிறைச்சாலையிலிருந்த படுமோசமான நிலைமைகளால் இறந்துபோனார்.
ஜூன் 28, 2009
வணக்கத்துக்காக சாட்சிகள் ஒன்றுகூடி வந்த ஒரு வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அங்கிருந்த 23 சாட்சிகளைக் கைது செய்தார்கள். அவர்கள் 2-லிருந்து 80 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஏப்ரல் 28, 2009
காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரைத் தவிர மற்ற எல்லாரையும் மெய்டிர் சிறைச்சாலை முகாமுக்கு அதிகாரிகள் மாற்றினார்கள்.
ஜூலை 8, 2008
24 சாட்சிகளை கைது செய்வதற்காக அதிகாரிகள் அவர்களுடைய வீடுகளையும் அவர்கள் வேலை பார்த்த இடங்களையும் சோதனை செய்ய ஆரம்பித்தார்கள். பெரும்பாலான அந்தச் சாட்சிகளுடைய சம்பாத்தியத்தை நம்பிதான் அவர்களுடைய குடும்பமே இருந்தது.
மே 2002
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு மதங்களின் கீழ் செயல்படாத அனைத்து மதப் பிரிவுகளையும் அரசாங்கம் தடை செய்தது.
அக்டோபர் 25, 1994
யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து குடியுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளைப் பறிக்க ஆணையிட்டார் ஜனாதிபதி.
செப்டம்பர் 17, 1994
எந்தவித குற்றப் பதிவோ விசாரணையோ இல்லாமல் பவ்லோஸ் இயாஸு, ஐசக் மொகோஸ் மற்றும் நேகேடி டேக்லிமரியம் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
1950-களில்
எரிட்ரியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய முதல் சில தொகுதிகள் ஆரம்பிக்கப்பட்டன.