விசுவாசத்துக்காக சிறைவாசம்—ரஷ்யா
நவீனகால ரஷ்யாவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரம் முழுவதும் அடக்குமுறையாலும் துன்புறுத்துதலாலும் நிறைந்திருக்கிறது. என்னதான் யெகோவாவின் சாட்சிகள் சட்டத்தை மதிக்கும் அமைதியான குடிமக்கள் என்று பெயர் எடுத்திருந்தாலும் 20-வது நூற்றாண்டில் ரஷ்ய அதிகாரிகள் பெரும்பாலும் அவர்களை மோசமாகவும் கொடூரமாகவும்தான் நடத்தியிருக்கிறார்கள். சோவியத் அரசின் முக்கியமான திட்டமே, அதன் கோட்பாடுகளைச் சாட்சிகள்மேல் வற்புறுத்தி திணிப்பதுதான். அவர்கள் பைபிளையோ மத பிரசுரங்களையோ வைத்திருப்பதைத் தடை செய்தது. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததால், கூட்டங்களை ரகசியமாக நடத்த வேண்டியிருந்தது. அதிகாரிகள் அவர்களைக் கண்டுபிடித்துப் பயங்கரமாக அடித்தார்கள், நீண்ட கால சிறைத்தண்டனையும் கொடுத்தார்கள். ஆயிரக்கணக்கானவர்களை சைபீரியாவுக்கு நாடுகடத்தினார்கள்.
ஆனால், 1991-ல் சூழ்நிலைமை மாற ஆரம்பித்தது. ரஷ்ய அரசு யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தைக் கொடுத்தது. அதனால், அதிகாரிகளுடைய எந்தத் தொந்தரவும் இல்லாமல் அவர்களால் கடவுளைச் சுதந்திரமாக வணங்க முடிந்தது. ஆனால், இது ரொம்ப காலம் நீடிக்கவில்லை.
2009-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சபையை “தீவிரவாத” அமைப்பு என்று ஒரு கீழ்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ரஷ்ய உச்ச நீதிமன்றம் ஆதரித்தது. அதுமுதல், துன்புறுத்துதலும் தடைகளும் ரொம்பவே அதிகமாக ஆரம்பித்தன. இதற்கு எதிராக சாட்சிகள் பல வருஷங்களாக நீதிமன்றத்தில் போராடியும், சாட்சிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஏப்ரல் 2017-ல் ரஷ்ய உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியது. அவர்களுடைய சட்டப்பூர்வ நிறுவனங்கள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்யும்படியும் உத்தரவு போட்டது. உடனே, ரஷ்ய அதிகாரிகள் சாட்சிகளுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்தார்கள்... வணக்கத்துக்காக அவர்கள் கூடிவரும் இடங்களை இழுத்து மூடினார்கள்... அவர்களுடைய பிரசுரங்கள் “மத வெறியைத் தூண்டும் பிரசுரங்கள்” என்று முத்திரை குத்தினார்கள்.
ரஷ்ய அதிகாரிகள் சாட்சிகளுடைய சட்டப்பூர்வ நிறுவனங்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், தனித்தனி சாட்சிகளையும் குறிவைத்துத் தாக்கியிருக்கிறார்கள். சாட்சிகளுடைய அமைப்பு தடை செய்யப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, தனிப்பட்ட விதமாகக்கூட அவர்கள் கடவுளை வணங்குவதை அந்த அதிகாரிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். போலீசார் சாட்சிகளுடைய வீடுகளைச் சோதனை செய்யும்போது அவர்களை ரொம்ப மோசமாக நடத்துகிறார்கள், கடுமையாக விசாரிக்கிறார்கள். சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லா சாட்சிகளையும் கைது செய்கிறார்கள், குற்றம் சுமத்தி சிறையில் அடைகிறார்கள், வீட்டுக்காவலில் வைக்கிறார்கள் அல்லது விசாரணைக்கு முன் காவலில் வைக்கிறார்கள்.
ஏப்ரல் 2017-ல் தடை செய்யப்பட்டதிலிருந்து, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் குற்றம் சுமத்தப்பட்டார்கள், விசாரணைக்கு முன் காவலில் வைக்கப்பட்டார்கள், அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள். மே 19, 2025 தேதியின்படி, மொத்தம் 158 சாட்சிகள் சிறையில் இருக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளைக் கொடுமைப்படுத்தும் ரஷ்யாவுக்கு எதிரான கண்டனக் குரல்கள்
யெகோவாவின் சாட்சிகளைக் கடுமையாகத் துன்புறுத்துவதை நிறுத்தச் சொல்லி உலகம் முழுவதுமிருந்து நிறைய கண்டனக் குரல்கள் எழும்பினாலும் ரஷ்ய அதிகாரிகள் மசிவதாகவே தெரியவில்லை. சாட்சிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக சொல்லித் தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளை ரஷ்யா விடாமல் ஒடுக்குவதை மற்ற நாடுகளிலிருந்து கவனிக்கும் சில ஆட்களும் நீதிமன்றங்களும் ரஷ்ய அரசாங்கத்தைக் கண்டனம் செய்திருக்கிறார்கள்.
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம்: ஜூன் 7, 2022 அன்று, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் ரஷ்யாவுக்கு எதிராகச் சரித்திரத்திலேயே முக்கியமான ஒரு தீர்ப்பை அளித்தது. யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்துவதற்காக ரஷ்யாவை அது கண்டனம் செய்தது (டாகன்ராக் LRO-வும் மற்றவர்களும் v. ரஷ்யா, எண். 32401/10 மற்றும் இன்னும் 19). 2017-ல் யெகோவாவின் சாட்சிகளை ரஷ்யா தடை செய்தது சட்டவிரோதமானது என்று அந்த நீதிமன்றம் அறிவித்தது. “யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் . . . [சிறையில் இருக்கும்] யெகோவாவின் சாட்சிகளை . . . விடுதலை செய்ய வேண்டும்” என்று அது ரஷ்யாவுக்கு உத்தரவு போட்டது. அதுமட்டுமல்ல, பறிமுதல் செய்த எல்லா சொத்துகளையும் திருப்பிக்கொடுக்க வேண்டும் அல்லது நஷ்ட ஈடாக ஆறு கோடிக்கும் அதிகமான டாலர்களையும் பணம் சம்பந்தப்படாத இழப்புகளுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான டாலர்களையும் மனுதாரருக்குச் செலுத்த வேண்டும் என்றும் ரஷ்யாவுக்கு உத்தரவு போட்டது.
ஐரோப்பிய கவுன்சிலின் பொதுச் செயலாளரின் கடிதம்: மரிஜா பெஸ்ஸினோவிக் பூரிக், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அனுப்பிய டிசம்பர் 9, 2022 தேதியிடப்பட்ட கடிதத்தில் இப்படி எழுதினார்: “மாஸ்கோவில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் மற்றும் பிறர் மற்றும் க்ருப்கோ மற்றும் பிறர் ஆகிய வழக்குகளில், விண்ணப்பதாரரின் மத சமூகத்தைக் கலைப்பது, அதன் செயல்பாடுகளுக்கு தடை விதிப்பது, அமைதியான முறையில் நடக்கிற மத நிகழ்ச்சிகளைக் கலைப்பது மற்றும் அதில் கலந்துகொள்கிற சிலருடைய சுதந்திரத்தைப் பறிப்பது போன்ற விஷயங்களில், யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்புகளின் செயல்பாடுகள் மீது விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறவும், அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளை நிறுத்தவும் அந்தக் குழு அதிகாரிகளை உறுதியாக வலியுறுத்தியது.”
ஐரோப்பிய கவுன்சிலின் அமைச்சர்கள் குழுவின் முடிவு: அவர்களுடைய செப்டம்பர் 2023 கூட்டத்தில், அமைச்சர்கள் குழு [CoM] “[ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்ற] பேரவையின் 46-வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட தெளிவான சுட்டிக்காட்டல்கள் மற்றும் தாகன்ரோக் எல்ஆர்ஓ மற்றும் பிறர் உட்பட்ட தீர்ப்பின் செயல்பாட்டுப் பகுதிகளை ரஷ்ய அதிகாரிகள் முழுமையாகவும் வேண்டுமென்றும் புறக்கணித்துள்ளனர், குறிப்பாக . . . சிறையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளை விடுதலை செய்யும் விஷயத்தில் என்பதை மிகுந்த கவலையுடன் குறிப்பிட்டது.” ரஷ்யாவின் இணக்கமின்மையைக் கருத்தில் கொண்டு, “இந்த வழக்குகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தன்னிச்சையான காவலில் வைப்பதற்கான பணிக்குழு மற்றும் ரஷ்ய கூட்டமைப்பில் யெகோவாவின் சாட்சிகளை துன்புறுத்துதல்களை கையாளுகிற பிற தொடர்புடைய சர்வதேச அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வர“ CoM முடிவு செய்தது, “சம்பந்தப்பட்ட தீர்ப்புகளின் தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் அப்படி செய்யத் தீர்மானித்தது.”
சமீபத்திய கடுமையான தீர்ப்புகளுக்கு உதாரணம்
மார்ச் 27, 2025-ல் ட்வேர் பகுதியில் இருக்கும் கொனாக்கோவோ நகர நீதிமன்றம் நான்கு சாட்சிகளை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. அவர்களுடைய பெயர்கள்: ஓலெக் காட்டமோவ், அலெக்சே குச்நெட்சோவ், அலெக்சாண்டர் ஷ்ச்செட்டினின், அலைக்சாண்டர் ஸ்டாரிகோவ். தங்கள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் பைபிள் பற்றி பேசியதற்காகவும் அமைதியான முறையில் மத கூட்டங்களை நடத்தியதற்காகவும் இப்படி தீர்ப்பளிக்கப்பட்டார்கள். இந்த நான்கு பேருக்கும் ஆறு வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்திலிருந்து நேரடியாக சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
ஏப்ரல் 3, 2025-ல், செலியாபின்ஸ்க் நகரத்தில் உள்ள சொவெட்ஸ்கி மாவட்ட நீதிமன்றம் மாக்ஸிம் கமாட்ஷினுக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. அவர் மதக் கூட்டங்களை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டார். தீர்ப்பளிக்கப்பட்டதும் நீதிமன்றத்திலிருந்து அவர் நேரடியாக சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஏப்ரல் 29, 2025-ல், ரஷ்யாவில் கிராஸ்னோயார்ஸ்க் மாகாணத்தில் உள்ள லெசோசிபிர்ஸ்க் நகர நீதிமன்றம், 55 வயதான ஆண்ட்ரே ஷியன், தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளை ஏற்பாடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அவருக்கு ஆறு ஆண்டுகள் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆண்ட்ரே, மோசமான பல உடல் நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு வகை 2 நீரிழிவு நோய் உள்ளது.
அநியாயமான சிறை தண்டனைகளுக்கு முடிவுகட்ட தொடரும் முயற்சிகள்
உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் ரஷ்யாவில் இருக்கிற அவர்களுடைய சக வணக்கத்தார் அனுபவிக்கிற கொடுமைகளை நினைத்து ரொம்ப கவலைப்படுகிறார்கள். ரஷ்யாவில் இருக்கிற அரசு அதிகாரிகளுக்கு உலகம் முழுவதும் இருக்கிற லட்சக்கணக்கான சாட்சிகள் கடிதங்களை அனுப்பினார்கள். அதில், சிறையிலிருக்கிற தங்களுடைய சகோதர சகோதரிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். சாட்சிகளுக்காக வாதாடும் வக்கீல்கள், ரஷ்யாவின் வெவ்வேறு நீதிமன்றங்களிலும் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் கணக்குவழக்கில்லாத மனுக்களைப் போட்டிருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஐ.நா. மனித உரிமை குழுவுக்கும் விதிமுறைகளை மீறிய சிறைத்தண்டனை சம்பந்தப்பட்ட ஐ.நா. பணிக் குழுவுக்கும் புகார் அளித்திருக்கிறார்கள். மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கிற சர்வதேச அமைப்புகளுக்கு அறிக்கைகளை அளித்திருக்கிறார்கள். ரஷ்யாவில் தங்களுடைய சக வணக்கத்தார் அனுபவிக்கிற கொடூரமான துன்புறுத்தலுக்கு முடிவுகட்டுவதற்காக யெகோவாவின் சாட்சிகள் எல்லா விதத்திலும் முயற்சி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். ரஷ்யா செய்யும் அநியாயத்தை அவர்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார்கள்.
காலவரிசை
மே 19, 2025
மொத்தம் 158 சாட்சிகள் சிறையில் இருக்கிறார்கள்.
மார்ச் 6, 2025
ரஷ்யாவின் சுர்குட் நகரத்தில் பிப்ரவரி 15, 2019-ல், சாட்சிகளின் வீடுகள் சோதனை செய்யப்பட்டபோது ரஷ்யா மனித உரிமை ஒப்பந்த விதிகளை மீறி, ஒன்பது யெகோவாவின் சாட்சிகளை (ஆண்கள்) சட்டவிரோதமாக கைதுசெய்ததாக (ஏழு பேரை சித்திரவதை செய்யப்பட்டனர்) லாகினோவ் மற்றும் பிறர் v. ரஷ்யா வழக்கில் வழங்கிய தீர்ப்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் (ECHR) உறுதிப்படுத்தியது.
அக்டோபர் 24, 2023
UN மனித உரிமைகள் குழு (CCPR) எலிஸ்டா மற்றும் அபின்ஸ்க் உள்ளூர் மத அமைப்புகளை உள்ளடக்கிய இரண்டு கருத்துக்களை வெளியிட்டது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 18.1 (“சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமை”) மற்றும் 22.1 (“கூடிவரும் சுதந்திரத்திற்கான உரிமை”) ஆகியவற்றின் கீழ் சாட்சிகளின் உரிமைகளை ரஷ்யா மீறுவதாக CCPR முடிவு செய்தது. அவர்களின் மத புத்தகங்களில் வெறுப்பையோ வன்முறையையோ தூண்டும் எதுவும் இல்லை என்பதை இந்த தீர்ப்புகள் உறுதி செய்கின்றன
ஜூன் 7, 2022
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) யெகோவாவின் சாட்சிகளை ரஷ்யா தவறாக நடத்துவதைக் கண்டனம் செய்து தாகன்ரோக் எல்ஆர்ஓ மற்றும் பிறர் v. ரஷ்யா-ல் அதிரடி தீர்ப்பு வெளியிட்டது.
ஜனவரி 12, 2022
ரஷ்ய கூட்டமைப்பு நாட்டின் நீதித்துறை அமைச்சகம், JW லைப்ரரி அப்ளிகேஷனைத் தீவிரவாத பிரசுரங்களின் பட்டியலில் சேர்த்தது. தீவிரவாத அப்ளிகேஷன் என்று ரஷ்யாவில் முதன்முதலில் தடை செய்யப்பட்டிருக்கும் அப்ளிகேஷன் இதுதான், அப்படி தடை செய்யப்பட்டிருக்கும் ஒரே அப்ளிகேஷனும் இதுதான்.
செப்டம்பர் 27, 2021
மார்ச் 31, 2021 அன்று கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் நகர நீதிமன்றம் நிராகரித்தது. முன்பு கொடுக்கப்பட்ட தீர்ப்பின்படி, JW லைப்ரரி அப்ளிகேஷன் ஒரு தீவிரவாத அப்ளிகேஷன் என்று அறிவிக்கப்பட்டு, ரஷ்ய கூட்டமைப்பு நாட்டிலும் கிரிமியா முழுவதும் அதைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.
ஏப்ரல் 26, 2019
விதிமுறைகளை மீறிய சிறைத்தண்டனை சம்பந்தப்பட்ட ஐ.நா. பணிக் குழு, டிமீட்ரி மிஹைலெஃப் என்பவரின் உரிமைகள் மீறப்பட்டிருப்பதைத் தெரிந்துகொண்டு, யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்துவதற்காக ரஷ்யாவைக் கண்டனம் செய்தது.
ஏப்ரல் 20, 2017
ரஷ்ய கூட்டமைப்பு நாட்டின் உச்ச நீதிமன்றம், அந்நாட்டில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய தேசிய அலுவலகத்தையும் 395 உள்ளூர் மத அமைப்புகளையும் இழுத்து மூடும்படி தீர்ப்பு அளித்தது.