-
இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
-
-
அதிகாரம் 6
இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
1-3. மரணத்தைப் பற்றி மக்கள் பொதுவாகக் கேட்கும் சில கேள்விகள் என்ன? அதற்கு மதங்கள் கொடுக்கும் பதில்கள் என்ன?
‘மரணம் இல்லாத’ ஒரு காலம் வரும் என்று பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) மீட்புவிலையினால் நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று போன அதிகாரத்தில் நாம் கற்றுக்கொண்டோம். ஆனால், மக்கள் இன்னும் செத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். (பிரசங்கி 9:5) அதனால், இறந்த பிறகு நமக்கு என்ன ஆகிறது என்ற கேள்வி நிறைய பேருடைய மனதைக் குடைகிறது.
2 முக்கியமாக, நாம் நேசிக்கும் ஒருவர் சாகும்போது இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள நாம் ரொம்ப ஆர்வமாக இருக்கலாம். ‘அவர் இப்போது வேறு எங்கேயாவது வாழ்ந்துகொண்டு இருக்கிறாரா? நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாரா? நமக்கு அவரால் உதவி செய்ய முடியுமா? நம்மால் அவரை மறுபடியும் பார்க்க முடியுமா?’ போன்ற கேள்விகள் நம் மனதில் வரலாம்.
3 இந்தக் கேள்விகளுக்கு மதங்கள் வித்தியாசமான பதில்களைக் கொடுக்கின்றன. ஒருவர் நல்லது செய்தால் சொர்க்கத்துக்குப் போவார், கெட்டது செய்தால் நரகத்தில் வதைக்கப்படுவார் என்று சில மதங்கள் சொல்லித் தருகின்றன. இன்னும் சில மதங்கள், ஒருவர் இறந்த பிறகு அவர் ஆவியாக மாறி, ஏற்கெனவே செத்துப்போன தன் குடும்பத்தாரோடு வாழ்வார் என்று சொல்லித் தருகின்றன. வேறு சில மதங்கள், ஒருவர் இறந்த பிறகு அவருக்குத் தீர்ப்பு கொடுக்கப்படும் என்றும், அவர் வேறொரு நபராக அல்லது மிருகமாக ஒரு புதிய உடலோடு மறுபடியும் பிறப்பார் என்றும் சொல்லித் தருகின்றன.
4. இறந்தவர்களைப் பற்றி மதங்கள் சொல்லித் தருகிற ஒரு பொதுவான விஷயம் என்ன?
4 மதங்கள் வித்தியாசமான பதில்களைக் கொடுத்தாலும் எல்லா மதங்களும் பொதுவான ஒரு விஷயத்தையே சொல்லித் தருகின்றன. அதாவது, ஒருவர் இறந்த பிறகு அவருக்குள் இருக்கும் ஏதோவொன்று தொடர்ந்து உயிர்வாழ்வதாகச் சொல்லித் தருகின்றன. இது உண்மையா?
இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
5, 6. இறந்த பிறகு நமக்கு என்ன ஆகிறது?
5 இறந்த பிறகு நமக்கு என்ன ஆகிறது என்று யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். ஒருவர் இறக்கும்போது அவருடைய வாழ்க்கை முடிந்துவிடுகிறது என்று யெகோவா பைபிளில் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், ஒருவர் இறந்த பிறகு அவர் வேறு எங்கும் வாழ்வது இல்லை.a அவருக்கு எந்த உணர்ச்சிகளும் நினைவுகளும் இல்லை. அவரால் பார்க்கவோ கேட்கவோ யோசிக்கவோ முடியாது.
6 “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று பைபிள் சொல்கிறது. இறந்தவர்களால் அன்பையோ வெறுப்பையோ காட்ட முடியாது. அவர்கள் “போய்ச்சேரும் கல்லறையில் வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.” (பிரசங்கி 9:5, 6, 10-ஐ வாசியுங்கள்.) சங்கீதம் 146:4 சொல்கிறபடி, இறந்தவர்களுடைய “யோசனைகள் அழிந்துபோகின்றன.”
மரணத்தைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?
பூமியில் என்றென்றும் வாழ்வதற்காகத்தான் மனிதர்களை யெகோவா படைத்தார்
7. மரணத்தைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?
7 இயேசுவின் நெருங்கிய நண்பன் லாசரு இறந்தபோது, “லாசரு தூங்குகிறான்” என்று அவர் தன் சீஷர்களிடம் சொன்னார். ஆனால், லாசரு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்ததாக இயேசு அர்த்தப்படுத்தவில்லை. ஏனென்றால், “லாசரு இறந்துவிட்டான்” என்று அதற்குப் பிறகு அவரே சொன்னார். (யோவான் 11:11-14) இயேசு மரணத்தைத் தூக்கத்துக்கு ஒப்பிட்டார். லாசரு நரகத்தில் அல்லது பரலோகத்தில் இருப்பதாகவோ, ஏற்கெனவே இறந்துபோன தன் குடும்பத்தாரோடு இருப்பதாகவோ, வேறு ஒரு மனிதனாக அல்லது மிருகமாக மறுபிறவி எடுத்திருப்பதாகவோ இயேசு சொல்லவில்லை. ஆழ்ந்து தூங்குகிற ஒருவரைப் போலத்தான் லாசரு இருந்தார். இன்னும் சில வசனங்கள் மரணத்தை ஆழ்ந்த தூக்கத்துக்கு ஒப்பிடுகின்றன. ஸ்தேவானின் மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது, அவர் “தூங்கிவிட்டார்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 7:60, அடிக்குறிப்பு) இறந்துபோன சில கிறிஸ்தவர்களைப் பற்றிச் சொல்லும்போது, அவர்கள் “தூங்கிவிட்டார்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார்.—1 கொரிந்தியர் 15:6, அடிக்குறிப்பு.
8. கொஞ்சக் காலம் வாழ்ந்துவிட்டு இறந்துபோவதற்காக மனிதர்களைக் கடவுள் படைக்கவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?
8 கொஞ்சக் காலம் வாழ்ந்துவிட்டு இறந்துபோவதற்காகத்தான் ஆதாமையும் ஏவாளையும் கடவுள் படைத்தாரா? இல்லை. பரிபூரண ஆரோக்கியத்தோடு என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களைப் படைத்தார். யெகோவா அவர்களைப் படைத்தபோது, என்றென்றும் வாழ வேண்டும் என்ற ஆசையை அவர்களுக்குக் கொடுத்தார். (பிரசங்கி 3:11) எந்த அப்பா அம்மாவும் தங்களுடைய பிள்ளைகள் வயதாகி சாக வேண்டுமென்று விரும்ப மாட்டார்கள். அதேபோல், யெகோவாவும் நாம் சாக வேண்டுமென்று விரும்புவதில்லை. ஆனால், நாம் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர் நம்மைப் படைத்தார் என்றால், நாம் ஏன் சாகிறோம்?
நாம் ஏன் சாகிறோம்?
9. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் யெகோவா கொடுத்த கட்டளை நியாயமானது என்று நாம் எப்படிச் சொல்லலாம்?
9 ஏதேன் தோட்டத்தில் யெகோவா ஆதாமிடம், “இந்தத் தோட்டத்தில் இருக்கிற எல்லா மரங்களின் பழங்களையும் நீ திருப்தியாகச் சாப்பிடலாம். ஆனால், நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்” என்று தெளிவாகச் சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 2:9, 16, 17) கீழ்ப்படிவதற்கு அது ஒன்றும் கஷ்டமான கட்டளை கிடையாது. அதுமட்டுமல்லாமல், நல்லது எது, கெட்டது எது என்று ஆதாமிடமும் ஏவாளிடமும் சொல்லும் உரிமை யெகோவாவுக்கு இருந்தது. யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவருடைய அதிகாரத்துக்கு அவர்கள் மதிப்பு காட்டியிருக்க முடியும். அவர் கொடுத்திருந்த எல்லாவற்றுக்காகவும் அவர்கள் நன்றியும் காட்டியிருக்க முடியும்.
10, 11. (அ) ஆதாமையும் ஏவாளையும் சாத்தான் எப்படி ஏமாற்றினான்? (ஆ) ஆதாமும் ஏவாளும் செய்தது ஏன் மன்னிக்க முடியாத குற்றம்?
10 ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். சாத்தான் ஏவாளிடம், “தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கடவுள் நிஜமாகவே சொன்னாரா?” என்று கேட்டான். அதற்கு ஏவாள், “தோட்டத்தில் இருக்கிற மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம். ஆனால், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தை நாங்கள் சாப்பிடக் கூடாது என்றும், தொடக் கூடாது என்றும் கடவுள் சொல்லியிருக்கிறார். மீறினால் நாங்கள் செத்துப்போவோம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்” என்றாள்.—ஆதியாகமம் 3:1-3.
11 அப்போது சாத்தான், “நீங்கள் சாகவே சாக மாட்டீர்கள். நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள் என்றும் கடவுளுக்குத் தெரியும்” என்று சொன்னான். (ஆதியாகமம் 3:4-6) நல்லது கெட்டதைச் சொந்தமாகவே தீர்மானிக்க முடியுமென்று ஏவாளை நினைக்க வைக்க சாத்தான் விரும்பினான். அதோடு, கடவுளுடைய பேச்சை மீறினால் ஏவாள் சாக மாட்டாள் என்ற பொய்யையும் சாத்தான் அவளிடம் சொன்னான். அதனால், ஏவாள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டாள், அதை ஆதாமுக்கும் கொடுத்தாள். அந்தப் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று யெகோவா சொன்னது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. அந்தப் பழத்தைச் சாப்பிட்டபோது கடவுள் கொடுத்த தெளிவான, நியாயமான கட்டளைக்கு அவர்கள் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனார்கள். அதோடு, அவர்கள் தங்களுடைய அன்பான பரலோகத் தகப்பனைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை என்பதையும் காட்டினார்கள். அவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்!
12. ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாதது ஏன் வருத்தமான விஷயம்?
12 நம் முதல் பெற்றோர் தங்களைப் படைத்த கடவுளை இப்படி அவமதித்தது எவ்வளவு வருத்தமான விஷயம்! இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நீங்கள் கண்ணும்கருத்துமாக வளர்த்த உங்களுடைய மகனோ மகளோ உங்கள் பேச்சை மீறினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்கள் மனம் சுக்குநூறாகிவிடாதா?
ஆதாம் மண்ணிலிருந்து வந்தான், மண்ணுக்கே திரும்பினான்
13. “மண்ணுக்கே திரும்புவாய்” என்று யெகோவா சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்?
13 ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது என்றென்றும் வாழும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள். யெகோவா ஆதாமிடம், “நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்று சொன்னார். (ஆதியாகமம் 3:19-ஐ வாசியுங்கள்.) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? மண்ணிலிருந்து படைக்கப்பட்ட ஆதாம் மறுபடியும் மண்ணைப் போல உயிரற்றவனாக ஆகிவிடுவான் என்று அர்த்தப்படுத்தினார். (ஆதியாகமம் 2:7) ஆதாம் படைக்கப்படுவதற்கு முன்பு எப்படி எங்குமே இல்லையோ அப்படியே அவன் பாவம் செய்து செத்த பிறகும் எங்குமே இல்லாமல் போய்விட்டான்.
14. நாம் ஏன் சாகிறோம்?
14 ஆதாம் ஏவாள் மட்டும் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், இன்றுவரை உயிரோடு இருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், பாவம் செய்து, கடைசியில் செத்துப்போனார்கள். பாவம் என்பது நம் முதல் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிற ஒரு கொடிய நோய் என்று சொல்லலாம். நாம் எல்லாரும் பாவிகளாகப் பிறக்கிறோம்; அதனால்தான் சாகிறோம். (ரோமர் 5:12) ஆனால், மனிதர்கள் சாக வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கம் இல்லை. அதை அவர் ஒருபோதும் விரும்பியது இல்லை. சொல்லப்போனால், மரணத்தை “எதிரி” என்று பைபிள் குறிப்பிடுகிறது.—1 கொரிந்தியர் 15:26.
சத்தியம் நமக்கு விடுதலை தருகிறது
15. இறந்தவர்களைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது நமக்கு விடுதலை தருகிறது என்று எப்படிச் சொல்லலாம்?
15 இறந்தவர்களைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது தவறான பல நம்பிக்கைகளிலிருந்து நமக்கு விடுதலை தருகிறது. இறந்தவர்களால் எந்த வலியையும் வேதனையையும் உணர முடியாது என்று பைபிள் சொல்கிறது. நாம் அவர்களிடம் பேச முடியாது, அவர்களாலும் நம்மிடம் பேச முடியாது. நாம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது, அவர்களாலும் நமக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. அவர்களால் நமக்கு எந்தக் கெடுதலும் செய்ய முடியாது, அதனால் நாம் அவர்களுக்குப் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், இறந்தவர்கள் எங்கேயோ தொடர்ந்து உயிர்வாழ்கிறார்கள் என்றும், பாதிரிகளுக்கு அல்லது பூசாரிகளுக்கு நாம் பணம் கொடுத்தால் இறந்தவர்களுக்கு உதவ முடியும் என்றும் நிறைய மதங்கள் சொல்கின்றன. இறந்தவர்களைப் பற்றிய உண்மையை நாம் இப்போது தெரிந்துகொண்டதால், இனி அந்தப் பொய்களை நம்பி ஏமாற வேண்டியதில்லை.
16. இறந்தவர்களைப் பற்றிய என்ன பொய்யை நிறைய மதங்கள் சொல்லித் தருகின்றன?
16 இறந்தவர்கள் தொடர்ந்து உயிரோடு இருக்கிறார்கள் என்ற பொய்யைப் பரப்புவதற்காக சாத்தான் பொய் மதங்களைப் பயன்படுத்துகிறான். உதாரணத்துக்கு, நாம் இறந்துவிட்டாலும் நமக்குள் இருக்கும் ஏதோவொன்று எங்கேயோ தொடர்ந்து வாழ்வதாகச் சில மதங்கள் சொல்லித் தருகின்றன. உங்களுடைய மதமும் அப்படித்தான் சொல்லித் தருகிறதா அல்லது இறந்தவர்களைப் பற்றி பைபிள் சொல்லும் உண்மையைச் சொல்லித் தருகிறதா? மக்களை யெகோவாவிடமிருந்து பிரிப்பதற்காக சாத்தான் பல பொய்களைப் பரப்புகிறான்.
17. மனிதர்கள் நரகத்தில் வதைக்கப்படுவார்கள் என்ற போதனை யெகோவாவை எப்படி அவமதிக்கிறது?
17 இறந்தவர்களைப் பற்றி மதங்கள் சொல்லித் தரும் சில விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. உதாரணத்துக்கு, கெட்டவர்கள் நரகத்தில் என்றென்றும் வதைக்கப்படுவார்கள் என்று சில மதங்கள் சொல்கின்றன. இந்தப் பொய் யெகோவாவை அவமதிக்கிறது. ஏனென்றால், அவர் ஒருபோதும் மக்களை வதைக்க மாட்டார்! (1 யோவான் 4:8-ஐ வாசியுங்கள்.) தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகப் பிள்ளையின் கையை நெருப்பில் காட்டும் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவர் ரொம்பக் கொடூரமானவர் என்றும், அவருடைய சகவாசமே வேண்டாம் என்றும்தானே நினைப்பீர்கள்? யெகோவாவைப் பற்றியும் நீங்கள் அப்படி நினைக்க வேண்டும் என்றுதான் சாத்தான் விரும்புகிறான்.
18. இறந்தவர்களை நினைத்து நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை?
18 மனிதர்கள் இறந்த பிறகு ஆவியாக மாறிவிடுகிறார்கள் என்று சில மதங்கள் சொல்கின்றன. இறந்தவர்களுக்கு மதிப்புமரியாதை செலுத்த வேண்டுமென்றும், அவர்களுக்குப் பயப்பட வேண்டுமென்றும்கூட அவை சொல்கின்றன. ஏனென்றால், அவர்கள் சக்திவாய்ந்த நண்பர்களாக அல்லது பயங்கரமான எதிரிகளாக ஆகிவிடலாம் என்று சொல்கின்றன. இந்தப் பொய்யை நிறைய பேர் நம்புகிறார்கள். இறந்தவர்களை நினைத்துப் பயப்படுவதால், யெகோவாவை வணங்குவதற்குப் பதிலாக இறந்தவர்களை வணங்குகிறார்கள். ஆனால், நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இறந்தவர்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. அதனால், நாம் அவர்களை நினைத்துப் பயப்பட வேண்டியதில்லை. நம் படைப்பாளரான யெகோவாதான் உண்மையான கடவுள். அவரை மட்டும்தான் நாம் வணங்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 4:11.
19. இறந்தவர்களைப் பற்றிய உண்மை நமக்கு எப்படி உதவுகிறது?
19 இறந்தவர்களைப் பற்றிய உண்மை, மதங்கள் சொல்லித் தருகிற எல்லா பொய்களிலிருந்தும் நமக்கு விடுதலை தருகிறது. நம் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் அருமையான வாக்குறுதிகளைப் புரிந்துகொள்ளவும் அது உதவுகிறது.
20. அடுத்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்?
20 “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?” என்று கடவுளுடைய ஊழியரான யோபு பல வருஷங்களுக்கு முன்பு கேட்டார். (யோபு 14:14) இறந்துபோன ஒருவரால் உண்மையிலேயே உயிரோடு வர முடியுமா? இதற்கான பதிலைக் கடவுள் பைபிளில் தந்திருக்கிறார். புல்லரிக்க வைக்கும் இந்த விஷயத்தைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.
a ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆத்துமாவோ ஆவியோ தொடர்ந்து வாழ்கிறது என்று சிலர் நம்புகிறார்கள். கூடுதலான தகவலுக்குப் பின்குறிப்பு 17-ஐயும் 18-ஐயும் பாருங்கள்.
-
-
இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்!பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
-
-
அதிகாரம் 7
இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்!
1-3. நாம் எல்லாரும் எந்தச் சிறையில் கைதிகளாக இருக்கிறோம்? யெகோவா எப்படி நம்மை விடுதலை செய்வார்?
இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: நீங்கள் செய்யாத ஒரு குற்றத்துக்காக உங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது. சிறையிலிருந்து விடுதலை கிடைக்க வாய்ப்பே இல்லாததுபோல் தெரிகிறது. உங்கள் நம்பிக்கையெல்லாம் போய்விடுகிறது, நிலைமை உங்கள் கைமீறிப் போய்விட்டதாக நினைக்கிறீர்கள். அந்தச் சமயம் பார்த்து, உங்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் ஒருவருக்கு இருப்பதைக் கேள்விப்படுகிறீர்கள். அவர் உங்களை விடுதலை செய்யப்போவதாக வாக்குக் கொடுத்திருப்பதையும் கேள்விப்படுகிறீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
2 நாம் எல்லாருமே மரணம் என்ற சிறையில் கைதிகளாக இருக்கிறோம். என்ன செய்தாலும் நம்மால் தப்பிக்கவே முடியாது. ஆனால், மரணத்திலிருந்து நம்மை விடுதலை செய்யும் அதிகாரம் யெகோவாவுக்கு இருக்கிறது. ‘கடைசி எதிரியான மரணம் ஒழிக்கப்படும்’ என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.—1 கொரிந்தியர் 15:26.
3 மரணமே இல்லாத காலம் வந்தால் உங்களுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! யெகோவா மரணத்துக்கு முடிவுகட்டப்போவதோடு, இறந்தவர்களை உயிரோடு கொண்டுவரவும் போகிறார். அது உங்களுக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ‘செத்துக் கிடப்பவர்கள்’ மறுபடியும் உயிர் பெறுவார்கள் என்று கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 26:19) இதைத்தான் உயிர்த்தெழுதல் என்று பைபிள் சொல்கிறது.
அன்பானவரை மரணத்தில் பறிகொடுக்கும்போது
4. (அ) குடும்பத்தில் உள்ள ஒருவரோ நெருங்கிய நண்பர் ஒருவரோ இறந்துவிடும்போது நமக்கு எது ஆறுதல் தருகிறது? (ஆ) இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் சிலர் யார்?
4 குடும்பத்தில் உள்ள ஒருவரோ நெருங்கிய நண்பர் ஒருவரோ இறந்துவிடும்போது தாங்க முடியாத துக்கத்தில் நாம் தவிக்கிறோம். மறுபடியும் அவரை உயிரோடு கொண்டுவர நம்மால் எதுவுமே செய்ய முடியாது. ஆனால், பைபிள் நமக்கு உண்மையான ஆறுதலைத் தருகிறது. (2 கொரிந்தியர் 1:3, 4-ஐ வாசியுங்கள்.) இறந்துபோன நம்முடைய அன்பானவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவர யெகோவாவும் இயேசுவும் எந்தளவு விரும்புகிறார்கள்? இதைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது லாசருவையும் அவருடைய சகோதரிகளான மார்த்தாளையும் மரியாளையும் அடிக்கடி சந்தித்தார். அவர்கள் மூன்று பேரும் இயேசுவின் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். “மார்த்தாளையும் அவளுடைய சகோதரியையும் லாசருவையும் இயேசு நேசித்தார்” என்று பைபிள் சொல்கிறது. ஒருநாள், லாசரு இறந்துவிட்டார்.—யோவான் 11:3-5.
5, 6. (அ) லாசருவின் குடும்பத்தாரும் நண்பர்களும் துக்கத்தில் அழுவதைப் பார்த்தபோது இயேசு என்ன செய்தார்? (ஆ) ஒருவரை மரணத்தில் பறிகொடுக்கும்போது இயேசு எப்படி உணருகிறார் என்பதைத் தெரிந்துகொள்வது ஏன் ஆறுதலாக இருக்கிறது?
5 மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்ல இயேசு புறப்பட்டுப் போனார். அவர் வருகிற செய்தியை மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைப் பார்ப்பதற்காக நகரத்துக்கு வெளியே போனாள். அவரைப் பார்த்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தாலும், “நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று அவரிடம் சொன்னாள். நிலைமை கைமீறிப்போய்விட்டதாக அவள் நினைத்தாள். அவளுடைய சகோதரியான மரியாள் அழுவதையும் இயேசு பார்த்தார். அங்கு இருந்தவர்களுடைய துக்கத்தைப் பார்த்து அவரும் வேதனையில் கண்ணீர்விட்டார். (யோவான் 11:21, 33, 35) அன்பானவரைப் பறிகொடுக்கும்போது ஏற்படுகிற கடும் வேதனையை அவர் உணர்ந்தார்.
6 நமக்கு இருக்கும் அதே உணர்ச்சிகள் இயேசுவுக்கும் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது ஆறுதலாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இயேசு எல்லா விஷயங்களிலும் அவருடைய தகப்பனைப் போலவே இருக்கிறார். அப்படியென்றால், நம்முடைய வேதனையை யெகோவாவும் உணருகிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (யோவான் 14:9) மரணத்தை ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் சக்தி யெகோவாவுக்கு இருக்கிறது. அதைத்தான் அவர் சீக்கிரத்தில் செய்யப்போகிறார்.
“லாசருவே, வெளியே வா!”
7, 8. லாசருவின் கல்லறையை மூடியிருந்த கல்லை எடுத்துப் போடுவதில் மார்த்தாளுக்கு ஏன் விருப்பமில்லை? ஆனால், இயேசு என்ன செய்தார்?
7 லாசருவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு இயேசு போனார். அது ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது. “கல்லை எடுத்துப் போடுங்கள்” என்று இயேசு சொன்னார். ஆனால், மார்த்தாளுக்கு அதில் விருப்பமில்லை. ஏனென்றால், லாசருவை அடக்கம் செய்து நான்கு நாட்களாகியிருந்தன. (யோவான் 11:39) இயேசு அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று அவளுக்குத் தெரியவில்லை.
லாசரு உயிர்த்தெழுந்தபோது அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்!—யோவான் 11:38-44
8 இயேசு சத்தமாக, “லாசருவே, வெளியே வா!” என்று சொன்னார். அப்போது நடந்த அற்புதத்தைப் பார்த்து மார்த்தாளும் மரியாளும் பிரமித்துப்போனார்கள்! ஏனென்றால், “இறந்தவன் உயிரோடு வெளியே வந்தான்; அவனுடைய கால்களும் கைகளும் துணிகளால் சுற்றப்பட்டிருந்தன.” (யோவான் 11:43, 44) லாசரு உயிரோடு எழுப்பப்பட்டிருந்தார்! தன்னுடைய குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் மறுபடியும் ஒன்றுசேர்ந்தார். அவர்கள் அவரைத் தொட்டுப் பார்த்தார்கள், கட்டிப்பிடித்தார்கள், அவரோடு பேசினார்கள். இயேசு லாசருவை உயிரோடு எழுப்பியது எவ்வளவு பெரிய அதிசயம்!
“சிறுமியே, எழுந்திரு!”
9, 10. (அ) இறந்தவர்களை உயிரோடு எழுப்பும் சக்தியை இயேசுவுக்கு யார் கொடுத்தது? (ஆ) உயிர்த்தெழுதல் பற்றிய பதிவுகள் நமக்கு ஏன் பிரயோஜனமாக இருக்கின்றன?
9 இறந்தவர்களை இயேசு தன் சொந்த சக்தியால் உயிரோடு எழுப்பினாரா? இல்லை. லாசருவை உயிரோடு எழுப்புவதற்கு முன்னால் அவர் யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்போது, லாசருவை உயிரோடு எழுப்ப யெகோவா இயேசுவுக்கு சக்தி கொடுத்தார். (யோவான் 11:41, 42-ஐ வாசியுங்கள்.) இயேசு லாசருவை மட்டுமே உயிரோடு எழுப்பவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில், 12 வயது சிறுமியையும் அவர் உயிரோடு எழுப்பியதாக பைபிள் சொல்கிறது. அவள் படுத்த படுக்கையாக இருந்தாள். அவளை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி அவளுடைய அப்பா யவீரு இயேசுவைக் கெஞ்சினார். அவள்தான் அவருக்கு ஒரே பிள்ளை. அவர் இயேசுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சிலர் அவரிடம் வந்து, “உங்கள் மகள் இறந்துவிட்டாள்! இனி எதற்காகப் போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டும்?” என்றார்கள். அப்போது இயேசு யவீருவிடம், “பயப்படாதே, விசுவாசம் வை; அவள் பிழைப்பாள்” என்று சொன்னார். பின்பு யவீருவுடைய வீட்டுக்குப் புறப்பட்டார். அந்த வீட்டுக்குப் பக்கத்தில் போனபோது, அங்கே ஆட்கள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அதனால் அவர்களிடம், “அழாதீர்கள். அவள் சாகவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள்” என்று சொன்னார். இயேசு ஏன் அப்படிச் சொன்னார் என்று அந்தச் சிறுமியின் அப்பா அம்மா யோசித்திருக்கலாம். இயேசு அங்கிருந்த எல்லாரையும் வெளியே போகச் சொன்னார். பின்பு, அந்தச் சிறுமி இருந்த அறைக்குள் அவளுடைய அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக்கொண்டு போனார். அவளுடைய கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்திரு!” என்று சொன்னார். அவள் உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அதைப் பார்த்தபோது அவளுடைய அப்பாவும் அம்மாவும் எந்தளவுக்கு சந்தோஷப்பட்டிருப்பார்கள்! இயேசு அவர்களுடைய மகளை உயிரோடு எழுப்பியிருந்தார்! (மாற்கு 5:22-24, 35-42; லூக்கா 8:49-56) அதுமுதல், தங்கள் மகளைப் பார்த்தபோதெல்லாம், இயேசு மூலமாக யெகோவா தங்களுக்குச் செய்த அற்புதம்தான் அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்திருக்கும்.a
10 இயேசு யாரையெல்லாம் உயிரோடு எழுப்பினாரோ அவர்கள் எல்லாரும் கொஞ்சக் காலத்துக்குப் பின்பு மறுபடியும் இறந்துபோனார்கள். ஆனால், அவர்களுடைய உயிர்த்தெழுதலைப் பற்றிய பதிவுகள் நமக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன; ஏனென்றால், அவை நமக்கு உறுதியான நம்பிக்கை தருகின்றன. உண்மையிலேயே, யெகோவா இறந்தவர்களை உயிரோடு எழுப்ப விரும்புகிறார், அதை அவர் கண்டிப்பாகச் செய்வார்.
உயிர்த்தெழுதல் பற்றிய பதிவுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்
தொற்காள் என்ற கிறிஸ்தவப் பெண்ணை அப்போஸ்தலன் பேதுரு உயிரோடு எழுப்பினார்.—அப்போஸ்தலர் 9:36-42
ஒரு விதவையின் மகனை எலியா உயிரோடு எழுப்பினார்.—1 ராஜாக்கள் 17:17-24
11. பிரசங்கி 9:5-ன்படி லாசரு என்ன நிலைமையில் இருந்தார்?
11 “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (பிரசங்கி 9:5) லாசருவும் அந்த நிலைமையில்தான் இருந்தார். இயேசு சொன்னபடியே, தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவரைப் போல லாசரு இருந்தார். (யோவான் 11:11) அவர் கல்லறையில் இருந்தபோது அவருக்கு ‘எதுவுமே தெரியவில்லை.’
12. லாசரு உயிரோடு எழுப்பப்பட்டது நிஜம் என்று எப்படிச் சொல்லலாம்?
12 இயேசு லாசருவை உயிரோடு எழுப்பியதை நிறைய பேர் பார்த்தார்கள். இயேசு இந்த அற்புதத்தைச் செய்தார் என்பதில் அவருடைய எதிரிகளுக்குக்கூட சந்தேகம் இருக்கவில்லை. லாசரு உயிரோடு இருந்ததே, இயேசு அவரை உயிரோடு எழுப்பியதற்கு அத்தாட்சியாக இருந்தது. (யோவான் 11:47) அதோடு, நிறைய பேர் லாசருவை நேரில் போய்ப் பார்த்தார்கள். அதனால், கடவுள்தான் இயேசுவை அனுப்பினார் என்பதை நம்ப ஆரம்பித்தார்கள். இயேசுவின் எதிரிகளுக்கு அது பிடிக்காததால், இயேசுவை மட்டுமல்லாமல் லாசருவையும் கொலை செய்ய திட்டம்போட்டார்கள்.—யோவான் 11:53; 12:9-11.
13. இறந்தவர்களை யெகோவாவினால் நிச்சயம் உயிரோடு எழுப்ப முடியும் என்று நாம் ஏன் நம்பலாம்?
13 “நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும்” உயிரோடு வருவார்கள் என்று இயேசு சொன்னார். (யோவான் 5:28) அதாவது, யெகோவாவின் நினைவில் அல்லது ஞாபகத்தில் இருக்கிற எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள். ஆனால், ஒருவரை யெகோவா மறுபடியும் உயிரோடு கொண்டுவர வேண்டுமென்றால், அவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். அவரால் அதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்க முடியுமா? வானத்தில் எத்தனை கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரும் யெகோவாவுக்குத் தெரியும் என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 40:26-ஐ வாசியுங்கள்.) அவ்வளவு நட்சத்திரங்களின் பெயர்களையும் யெகோவாவினால் ஞாபகம் வைக்க முடியுமென்றால், அவர் உயிரோடு எழுப்பப்போகிற நபர்களைப் பற்றிய விவரங்களை ஞாபகம் வைக்க முடியாதா? அதைவிட முக்கியமாக, எல்லாருக்குமே உயிர் கொடுத்தது யெகோவாதான். அப்படியிருக்கும்போது, இறந்தவர்களுக்கு மறுபடியும் உயிர் கொடுக்க அவருக்கு சக்தி இருக்காதா?
14, 15. யோபுவின் வார்த்தைகளிலிருந்து உயிர்த்தெழுதலைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?
14 கடவுள்பக்தியுள்ள மனிதராக இருந்த யோபு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்திருந்தார். “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?” என்று அவர் கேட்டார்; பின்பு யெகோவாவிடம், “நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள், நான் பதில் சொல்வேன். உங்கள் கைகளால் உருவாக்கிய என்னைப் பார்க்க நீங்கள் ஏக்கமாக இருப்பீர்கள்” என்று சொன்னார். இறந்தவர்களை உயிரோடு கொண்டுவரப்போகும் காலத்துக்காக யெகோவா ஆசையோடு காத்திருக்கிறார் என்பது யோபுவுக்குத் தெரிந்திருந்தது.—யோபு 14:13-15.
15 உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? ‘இறந்துபோன என் குடும்பத்தாரும் நண்பர்களும்கூட மறுபடியும் உயிரோடு வருவார்களா?’ என்று நீங்கள் யோசிக்கலாம். இறந்தவர்களை உயிரோடு எழுப்ப யெகோவா உண்மையிலேயே விரும்புகிறார். இதைத் தெரிந்துகொள்வது நமக்கு ரொம்பவும் ஆறுதலாக இருக்கிறது. யாரெல்லாம் உயிரோடு எழுப்பப்படுவார்கள்? அவர்கள் எங்கே வாழ்வார்கள்? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம்.
“அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்”
16. பூமியில் உயிரோடு எழுப்பப்படுகிறவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை அனுபவிப்பார்கள்?
16 முன்பு உயிரோடு எழுப்பப்பட்டவர்கள் இதே பூமியில் தங்களுடைய குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் மறுபடியும் வாழ்ந்தார்கள். எதிர்காலத்திலும் அதுதான் நடக்கும், ஆனால் வாழ்க்கை அதைவிட சிறந்ததாக இருக்கும். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், பூமியில் உயிரோடு எழுப்பப்படுகிறவர்கள் சாவே இல்லாமல் என்றென்றும் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதோடு, இன்று இருக்கும் போர், குற்றச்செயல், வியாதி போன்ற பிரச்சினைகள் இல்லாத ஒரு புதிய உலகத்தில் அவர்கள் வாழ்வார்கள்.
17. யார் உயிரோடு எழுப்பப்படுவார்கள்?
17 யார் உயிரோடு எழுப்பப்படுவார்கள்? “நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவான் 5:28, 29) அதோடு, “கடல் தன்னிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தது; அதேபோல், மரணமும் கல்லறையும் தங்களிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தன” என்று வெளிப்படுத்துதல் 20:13 சொல்கிறது. அப்படியென்றால், கோடிக்கணக்கான ஆட்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள். “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று அப்போஸ்தலன் பவுலும் சொன்னார். (அப்போஸ்தலர் 24:15-ஐ வாசியுங்கள்.) அதன் அர்த்தம் என்ன?
நிறைய பேர் பூஞ்சோலை பூமியில் உயிரோடு வந்து, தங்களுடைய அன்பானவர்களோடு மறுபடியும் வாழ்வார்கள்
18. மறுபடியும் உயிரோடு எழுப்பப்படப்போகிற ‘நீதிமான்கள்’ யார்?
18 முதலில் ‘நீதிமான்களில்’ யாரெல்லாம் உட்பட்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். யெகோவாவுக்கு உண்மையாக வாழ்ந்து இறந்துபோன எல்லாருமே ‘நீதிமான்களில்’ உட்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு வாழ்ந்த நோவா, ஆபிரகாம், சாராள், மோசே, ரூத், எஸ்தர் போன்றவர்கள் மறுபடியும் இந்தப் பூமியில் உயிரோடு எழுப்பப்படுவார்கள். அவர்களில் சிலரைப் பற்றி நீங்கள் எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம். நம்முடைய காலத்தில் யெகோவாவுக்கு உண்மையாக வாழ்ந்து இறந்துபோனவர்களும் ‘நீதிமான்கள்’ என்பதால், அவர்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.
19. ‘அநீதிமான்கள்’ யார்? யெகோவா அவர்களுக்கு என்ன வாய்ப்பைக் கொடுப்பார்?
19 இப்போது, ‘அநீதிமான்களில்’ யாரெல்லாம் உட்பட்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்காமல் இறந்துபோன கோடிக்கணக்கான ஆட்கள் ‘அநீதிமான்களில்’ உட்பட்டிருக்கிறார்கள். அவர்களையும் யெகோவா மறப்பதில்லை. அவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார். தன்னைப் பற்றிக் கற்றுக்கொண்டு தனக்குச் சேவை செய்யும் வாய்ப்பை அவர்களுக்குக் கொடுப்பார்.
20. ஏன் எல்லாருமே உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள்?
20 அப்படியென்றால், இறந்துபோன எல்லாருமே உயிரோடு எழுப்பப்படுவார்களா? இல்லை. சிலர் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்று இயேசு சொன்னார். (லூக்கா 12:5) யாரெல்லாம் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப்போவது யார்? எல்லா அதிகாரமும் உள்ள நீதிபதி யெகோவா மட்டும்தான். ஆனாலும், ‘உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் நீதிபதியாக’ இருக்கும் அதிகாரத்தை அவர் இயேசுவுக்கும் கொடுத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 10:42) திருந்தும் எண்ணமே இல்லாத அக்கிரமக்காரர்கள் என்று நியாயந்தீர்க்கப்படுகிற யாரும் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள்.—பின்குறிப்பு 19-ஐப் பாருங்கள்.
பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுதல்
21, 22. (அ) சிலர் என்ன உடலில் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள்? (ஆ) பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்பட்ட முதல் நபர் யார்?
21 சிலர் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. ஆனால், அவர்கள் மனித உடலில் அல்ல, பரலோகத்துக்குரிய உடலில் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.
22 இப்படிப் பரலோகத்துக்குரிய உடலில் உயிரோடு எழுப்பப்பட்ட முதல் நபர் இயேசுதான். (யோவான் 3:13) இயேசு கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்து யெகோவா அவரை மறுபடியும் உயிரோடு எழுப்பினார். (சங்கீதம் 16:10; அப்போஸ்தலர் 13:34, 35) இயேசு மனித உடலில் உயிரோடு எழுப்பப்படவில்லை. “அவர் பூமிக்குரிய உடலில் கொல்லப்பட்டார், பரலோகத்துக்குரிய உடலில் உயிர்ப்பிக்கப்பட்டார்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 3:18) மனிதர்களைவிட சக்திபடைத்த நபராக இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார்! (1 கொரிந்தியர் 15:3-6) அதேபோல் இன்னும் நிறைய பேர் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று பைபிள் சொல்கிறது.
23, 24. இயேசு யாரை “சிறுமந்தை” என்று அழைத்தார்? அவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
23 இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு இயேசு தன்னுடைய உண்மையுள்ள சீஷர்களிடம், “உங்களுக்காக ஒரு இடத்தைத் தயார்படுத்துவதற்கு நான் போகிறேன்” என்று சொன்னார். (யோவான் 14:2) அப்படியென்றால், அவருடைய சீஷர்களில் சிலர் அவரோடு பரலோகத்தில் இருப்பதற்காக உயிரோடு எழுப்பப்படுவார்கள். அவர்கள் எத்தனை பேர்? அவர்கள் கொஞ்சம் பேராக இருப்பார்கள் என்பதால் அவர்களை “சிறுமந்தை” என்று இயேசு அழைத்தார். (லூக்கா 12:32) அவர்களுடைய மொத்த எண்ணிக்கையை அப்போஸ்தலன் யோவான் குறிப்பிட்டார்; பரலோக சீயோன் மலையில் இயேசுவோடு ‘1,44,000 பேர் நின்றுகொண்டிருந்ததை’ பார்த்ததாக அவர் எழுதினார்.—வெளிப்படுத்துதல் 14:1.
24 அந்த 1,44,000 பேர் எப்போது உயிரோடு எழுப்பப்படுவார்கள்? கிறிஸ்து பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகு உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று பைபிள் சொன்னது. (1 கொரிந்தியர் 15:23) அந்தக் காலத்தில்தான் நாம் இப்போது வாழ்கிறோம். அந்த 1,44,000 பேரில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே பரலோகத்துக்குப் போய்விட்டார்கள். அவர்களில் சிலர்தான் இந்தப் பூமியில் இருக்கிறார்கள். அவர்கள் இறக்கும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள். ஆனால் பெரும்பாலான மனிதர்கள், பூஞ்சோலையாக மாறப்போகும் இதே பூமியில்தான் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.
25. அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
25 சீக்கிரத்தில் யெகோவா எல்லா மனிதர்களையும் மரணத்திலிருந்து விடுதலை செய்வார்; அவர் மரணத்தை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவார்! (ஏசாயா 25:8-ஐ வாசியுங்கள்.) பரலோகத்துக்குப் போகிறவர்கள் அங்கே என்ன செய்வார்கள்? கடவுளுடைய அரசாங்கத்தில் அவர்கள் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. அந்த அரசாங்கத்தைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் விவரமாகப் பார்ப்போம்.
a சிறியவர், பெரியவர், ஆண், பெண், இஸ்ரவேலர், மற்ற தேசத்தார் என்று நிறைய பேர் உயிரோடு எழுப்பப்பட்டதாக பைபிள் சொல்கிறது. அந்தப் பதிவுகளை, 1 ராஜாக்கள் 17:17-24; 2 ராஜாக்கள் 4:32-37; 13:20, 21; மத்தேயு 28:5-7; லூக்கா 7:11-17; 8:40-56; அப்போஸ்தலர் 9:36-42; 20:7-12 வசனங்களில் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
-