தலைசிறந்த மிஷனரியைப் பின்பற்றுங்கள்
“நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.” —1 கொ. 11:1.
1. நாம் ஏன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும்?
அப்போஸ்தலன் பவுல், தலைசிறந்த மிஷனரியான இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினார். “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று தன் சக கிறிஸ்தவர்களையும் உற்சாகப்படுத்தினார். (1 கொ. 11:1) மனத்தாழ்மை காட்டுவது எப்படி என்பதை இயேசு தம் அப்போஸ்தலருக்கு கற்பிப்பதற்காக அவர்களுடைய கால்களைக் கழுவினார். கழுவி முடித்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்: “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (யோவா. 13:12-15) நவீனகால கிறிஸ்தவர்களாகிய நாமும் நம்முடைய பேச்சிலும், செயல்களிலும், நாம் காட்டும் குணங்களிலும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறோம்.—1 பே. 2:21.
2. நீங்கள் ஆளும் குழுவால் மிஷனரியாக நியமிக்கப்படவில்லை என்றாலும், என்ன மனநிலையை உடையவராய் இருக்கலாம்?
2 மிஷனரி என்றால் சுவிசேஷகராக அனுப்பப்பட்டவர் அதாவது, மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டவர் என்று முந்தைய கட்டுரையில் சிந்தித்தோம். இது சம்பந்தமாக, ஆர்வத்தை தூண்டும் சில கேள்விகளை பவுல் எழுப்பினார். (ரோமர் 10:11-15-ஐ வாசிக்கவும்.) “பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” என்று அவர் கேட்டதைக் கவனியுங்கள். பிறகு ஏசாயா தீர்க்கதரிசனத்திலிருந்து மேற்கோள் காட்டி, “நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்” என்று கூறினார். (ஏசா. 52:7) நீங்கள் ஒரு மிஷனரியாக நியமிக்கப்பட்டு எந்த நாட்டிற்கும் அனுப்பப்படாவிட்டாலும்கூட சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடும் மனநிலையை வளர்த்துக்கொள்ளலாம். நற்செய்தியைக் குறித்து சாட்சி கொடுப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்ட இயேசுவின் மாதிரியை நீங்கள் பின்பற்றலாம். கடந்த வருடம் 69,57,852 ராஜ்ய பிரஸ்தாபிகள் 236 நாடுகளில் ‘சுவிசேஷகர்களின் வேலையைச் செய்தார்கள்’.—2 தீ. 4:5.
“இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே”
3, 4. இயேசு எதையெல்லாம் பரலோகத்தில் விட்டு வந்தார்? அவரைப் பின்பற்ற வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
3 பூமியில் தமக்கு நியமிக்கப்பட்ட வேலையைச் செய்து முடிக்க இயேசு, தமது பரலோக வாழ்க்கையையும் மகிமையையும் விட்டு ‘தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்தார்.’ (பிலி. 2:7) கிறிஸ்துவைப் பின்பற்றி நாம் அநேக தியாகங்கள் செய்தாலும், இயேசு பூமிக்கு வருகையில் செய்தவற்றுடன் ஒப்பிட நாம் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை. இருந்தாலும், சாத்தானுடைய உலகில் நாம் விட்டுவந்த காரியங்களை நினைத்து ஏங்காமல், அவருடைய சீஷர்களாக நாம் உறுதியாய் நிலைத்திருக்கலாம்.—1 யோ. 5:19.
4 ஒரு சந்தர்ப்பத்தில் அப்போஸ்தலன் பேதுரு, “இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே” என்று இயேசுவிடம் கூறினார். (மத். 19:27) தம்மைப் பின்பற்றுமாறு பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு அழைத்தபோது அவர்கள் உடனடியாக தங்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள். தங்களுடைய மீன்பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு ஊழியத்தை முக்கிய வேலையாக எடுத்துக்கொண்டார்கள். நம்மில் அநேகருக்கு, இயேசுவைப் பின்பற்றுவதற்காக ‘எல்லாவற்றையும்’ விட்டுவரவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. என்றாலும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக அல்லது யெகோவாவுக்கு முழு இருதயத்துடன் சேவை செய்யும் ஊழியர்களாக ஆவதற்கு ‘நம்மை நாமே வெறுக்க’ வேண்டியிருந்தது. (மத். 16:24) இப்படிச் செய்தது அளவிலா ஆசீர்வாதங்களைத் தேடித் தந்திருக்கிறது. (மத்தேயு 19:29-ஐ வாசிக்கவும்.) இயேசுவைப் பின்பற்றி நாமும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் ஆர்வத்தைக் காட்டினால் அது நமக்கு சந்தோஷத்தை வாரி இறைக்கும். முக்கியமாக, கடவுளிடமும் அவரது நேச குமாரனிடமும் நெருங்கிவர யாருக்காவது நாம் சிறிதளவு உதவியிருந்தாலும் அது நமக்கு சந்தோஷத்தை அளிக்கும்.
5. வேறு நாட்டிற்கு குடிமாறி வந்திருக்கும் ஒருவர் பைபிள் சத்தியத்தைக் கற்ற பிறகு என்ன செய்ய தீர்மானிக்கலாம் என்பதை விவரிக்கும் ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.
5 சூரினாம் நாட்டின் ஒதுக்குப்புற பகுதியில் வசிக்கும், பிரேசில் நாட்டைச் சேர்ந்த வால்மீர் என்பவர் ஒரு தங்க சுரங்கத்தில் வேலை பார்த்து வந்தார். ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை வாழ்ந்ததோடு ஒரு குடிகாரராகவும் இருந்தார். ஒருசமயம், அவர் நகர்ப்புறத்தில் இருந்தபோது, யெகோவாவின் சாட்சிகள் அவருடன் பைபிள் படிப்பை ஆரம்பித்தார்கள். தினமும் அவருக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட்டது, அநேக மாற்றங்களைச் செய்தார், சீக்கிரத்தில் முழுக்காட்டுதலும் எடுத்தார். அவர் செய்துவந்த வேலை, பைபிளின்படி நடப்பதற்கு தடையாக இருந்ததை உணர்ந்தார். எனவே, லாபகரமான தன்னுடைய தொழிலை விட்டுவிட்டு தன் குடும்பம் ஆன்மீகப் பொக்கிஷங்களை கண்டடைய உதவுவதற்காக பிரேசிலுக்கே திரும்பினார். பணக்கார நாடுகளுக்குக் குடிமாறிச் செல்கிற அநேகர், பைபிள் சத்தியத்தைக் கற்ற பிறகு தங்கள் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆன்மீக ரீதியில் உதவுவதற்காக தங்கள் வேலையை மனமுவந்து விட்டுவிட்டு தாய்நாட்டிற்குத் திரும்பிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் உண்மையிலேயே ஆர்வத்தைக் காட்டுகிறார்கள்.
6. ராஜ்ய பிரசங்கிப்பாளர் அதிகம் தேவைப்படுகிற இடங்களுக்கு நம்மால் செல்ல முடியவில்லை என்றாலும் நாம் என்ன செய்யலாம்?
6 ராஜ்ய பிரசங்கிப்பாளர் அதிகம் தேவைப்படுகிற இடங்களுக்கு அநேக சாட்சிகள் குடிமாறிச் சென்றிருக்கிறார்கள். சிலர், பிரசங்கிப்பதற்காக வேறு நாட்டிற்கே குடிமாறிச் சென்றிருக்கிறார்கள். தனிப்பட்ட விதமாக நம்மால் ஒருவேளை அவ்வாறு செல்ல முடியாமல் இருக்கலாம். ஆனாலும், ஊழியத்தில் நம்மாலான சிறந்ததைச் செய்வதன்மூலம் இயேசுவை நாம் பின்பற்ற முடியும்.
தேவையான பயிற்சியை யெகோவா அளிக்கிறார்
7. ராஜ்ய பிரசங்கிப்பாளராக தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்குப் பயிற்சியளிக்க என்னென்ன பள்ளிகள் இருக்கின்றன?
7 இயேசு தம் தந்தையிடமிருந்து பயிற்சி பெற்றதுபோலவே நாமும் இப்போது யெகோவா தரும் கல்வியிலிருந்து பயனடையலாம். “எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே” என்று இயேசுதாமே கூறினார். (யோவா. 6:45; ஏசா. 54:13) இன்று, நம்மை ராஜ்ய பிரசங்கிப்பாளர்களாக பயிற்றுவிப்பதற்கென்றே பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாம் எல்லாருமே நம்முடைய சபைகளில் நடைபெறும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து ஏதாவதொரு விதத்தில் பயனடைந்திருக்கிறோம். பயனியர் ஊழியப் பள்ளிக்கு செல்லும் பாக்கியத்தை பயனியர்கள் பெற்றிருக்கிறார்கள். நீண்டகாலமாக பயனியர் ஊழியம் செய்து வருகிற பலர் இரண்டாம் முறையாக அந்தப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள். மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். தங்களுடைய கற்பிக்கும் திறனை வளர்த்துக்கொள்வதற்கும் சக விசுவாசிகளுக்கு இன்னும் சிறந்த முறையில் உதவுவதற்கும் இது அவர்களுக்குத் துணைபுரிகிறது. திருமணமாகாத அநேக மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ஊழிய பயிற்சி பள்ளியிலிருந்து பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பிரசங்க வேலையில் மற்றவர்களுக்கு உதவ இந்தப் பள்ளி அவர்களைப் பயிற்றுவிக்கிறது. வேறு நாடுகளில் மிஷனரிகளாக நியமிக்கப்பட்ட அநேக சகோதர சகோதரிகள் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
8. யெகோவா தங்களுக்குக் கொடுக்கும் பயிற்சியை சகோதரர்கள் சிலர் எந்தளவு உயர்வாய் கருதுகிறார்கள்?
8 இதுபோன்ற பள்ளிகளில் கலந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளில் அநேகர், தங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். யூகூ என்பவர் கனடாவில் நடைபெற்ற ஊழியப் பயிற்சி பள்ளியில் கலந்துகொள்வதற்காக தன் முதலாளியிடம் விடுப்பு கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துவிட்டார். அதனால், இவர் தனது வேலையை ராஜினாமா செய்தார். “அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஒருவேளை அவர்கள் எனக்கு விசேஷ விடுப்பு அளித்திருந்தால் அதற்கு நன்றிக்கடனாக அந்தக் கம்பெனியிலேயே நான் என்றைக்கும் வேலை பார்க்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், இப்போது யெகோவா எனக்கு எந்த நியமிப்பை கொடுத்தாலும் அதை ஏற்று செய்வதற்கு எந்தத் தடங்கலும் இல்லை” என்கிறார் யூகூ. கடவுள் அளிக்கும் பயிற்சியைப் பெற அநேகர், ஒருகாலத்தில் உயர்வாய் நினைத்தவற்றை மனமுவந்து தியாகம் செய்திருக்கிறார்கள்.—லூக். 5:28.
9. பைபிள் போதனை மற்றும் அயராத முயற்சியின் பலன்களை சித்தரிக்கும் ஓர் உதாரணத்தைக் கூறுங்கள்.
9 பைபிள் போதனைகளும் அயராத முயற்சியும் சேர்ந்து சிறந்த பலன்களைத் தரமுடியும். (2 தீ. 3:16, 17) குவாதமாலாவிலுள்ள சாலோ என்ற சிறுவனின் விஷயத்தில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். பிறக்கும்போதே அவனுக்கு மனவளர்ச்சி சற்று பாதிக்கப்பட்டிருந்தது. எனவே, வாசிக்க கற்றுக்கொள்ளும்படி அவனை வற்புறுத்த வேண்டாமென்று சாலோவின் ஆசிரியை ஒருவர் அவனுடைய தாயிடம் கூறினார். அப்படி வற்புறுத்தினால், அது அவனுக்கு எரிச்சலைத்தான் மூட்டும் என்றும் கூறினார். அதனால், வாசிக்க கற்றுக்கொள்ளாமலேயே சாலோ பள்ளியிலிருந்து நின்றுவிட்டான். இருந்தாலும், எழுதப் படிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி ஒரு சாட்சி, சாலோவுக்கு வாசிக்க கற்றுக்கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக சாலோ முன்னேறி, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு கொடுக்குமளவுக்கு தேறினான். சாலோவின் தாய் ஒருமுறை அவனுடைய ஆசிரியையை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தித்தார். சாலோ வாசிக்க கற்றுக்கொண்டான் என்பதைக் கேட்ட ஆசிரியை அடுத்த வாரம் அவனை அழைத்து வரும்படி கூறினார். அடுத்த வாரம் சாலோ அங்குச் சென்றபோது அந்த ஆசிரியை, “நீ எனக்கு என்ன கற்றுத்தர போகிறாய்” என்று அவனிடம் கேட்டார். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்ற புத்தகத்திலிருந்து சாலோ ஒரு பாராவை படிக்க ஆரம்பித்தான். “இப்போது நீ எனக்கு கற்றுத்தருவதைப் பார்க்கும்போது என்னால் நம்பவே முடியவில்லை” என்று ஆசிரியை கூறி, கண்களில் நீர் மல்க, சாலோவைக் கட்டித் தழுவினார்.
இருதயத்தைத் தொடும் போதனை
10. பைபிள் சத்தியத்தைக் கற்பிக்க என்ன சிறந்த புத்தகம் நம்மிடம் இருக்கிறது?
10 யெகோவா நேரடியாகவும், எழுதப்பட்ட அவருடைய வார்த்தை மூலமாகவும் போதித்தவற்றை அடிப்படையாக வைத்தே இயேசு கற்பித்தார். (லூக். 4:16-21; யோவா. 8:28) இயேசுவின் அறிவுரையையும் பைபிளின் போதனைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம். இப்படியாக நாம் அனைவரும் பேசுகிற விஷயங்களும் யோசிக்கிற விஷயங்களும் ஒத்திசைவாக உள்ளன. இது நம்முடைய ஒற்றுமைக்கு வழிநடத்துகிறது. (1 கொ. 1:10) நாம் அனைவரும் ஒத்திசைவுடன் போதித்து சுவிசேஷகர்களாக நம் வேலையைச் செய்து முடிப்பதற்கு உதவியாக “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார” வகுப்பார் பைபிள் சார்ந்த பிரசுரங்களை அளிக்கிறார்கள். இதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! (மத். 24:45; 28:19, 20) அப்படிப்பட்ட பிரசுரங்களில் ஒன்றுதான் பைபிள் கற்பிக்கிறது புத்தகம், இது இப்போது 179 மொழிகளில் கிடைக்கிறது.
11. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தி, எத்தியோப்பியாவில் உள்ள ஒரு சகோதரி எப்படி எதிர்ப்பை மேற்கொண்டார்?
11 பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிளைப் படிப்பது, சத்தியத்தை எதிர்ப்பவர்களின் மனதைக்கூட மாற்றலாம். எத்தியோப்பியாவிலுள்ள லூலா என்ற பயனியர் சகோதரி, ஒருமுறை பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பைபிள் மாணாக்கரின் உறவினர் திடீரென்று உள்ளே வந்து பைபிள் படிப்பதை நிறுத்தும்படி கத்தி கூச்சல்போட்டார். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் 15-ஆம் அதிகாரத்தில் உள்ள கள்ளநோட்டு பற்றிய உதாரணத்தைப் பயன்படுத்தி லூலா பொறுமையாக அந்த உறவினருக்கு விளக்கினார். அவருடைய கோபம் தணிந்து, சமாதானமானார். பைபிள் படிப்பைத் தொடரவும் அனுமதித்தார். சொல்லப்போனால், அடுத்த வாரம் அவரும் பைபிள் படிப்பில் கலந்துகொண்டார். தனக்கும் படிப்பு நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். படிப்புக்காக பணம் கட்டவும் தான் தயாராக இருப்பதாக கூறினார்! சீக்கிரத்திலேயே அவருக்கு வாரத்தில் மூன்று முறை பைபிள் படிப்பு நடத்தப்பட்டது, ஆன்மீக ரீதியில் அவர் நல்ல முன்னேற்றங்களைச் செய்தார்.
12. இளம் பிள்ளைகள் பைபிள் சத்தியங்களை திறம்பட்ட விதத்தில் கற்பிக்க முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
12 பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தி இளம் பிள்ளைகளும் மற்றவர்களுக்கு உதவ முடியும். ஹவாயில், 11 வயது கீயானூ இந்தப் புத்தகத்தைப் பள்ளியில் வாசித்துக்கொண்டிருந்தான். அப்போது அவனுடைய வகுப்பில் இருந்த ஒரு பையன், “நீ ஏன் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை?” என்று கீயானூவிடம் கேட்டான். கீயானூ, பிற்சேர்க்கையில் “பண்டிகைகளை நாம் கொண்டாட வேண்டுமா?” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை அவனுக்கு வாசித்துக்காட்டினான். பிறகு அந்தப் புத்தகத்தின் பொருளடக்கத்திற்குத் திருப்பி அவனுக்கு எந்தத் தலைப்பைப்பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் என்று கேட்டான். அவனிடம் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தான். யெகோவாவின் சாட்சிகள் கடந்த வருடம் 65,61,426 பைபிள் படிப்புகளை நடத்தியிருக்கிறார்கள். அவர்களில் அநேகர் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு நீங்கள் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்துகிறீர்களா?
13. பைபிள் படிப்பு எவ்வாறு ஒருவர்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?
13 கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிறவர்களுடன் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிளைப் படிப்பது அவர்கள்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நார்வேயில் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்யும் ஒரு தம்பதி ஜாம்பியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்துடன் பைபிள் படிப்பை ஆரம்பித்தார்கள். இந்த ஜாம்பிய தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று பெண் பிள்ளைகள் இருந்ததால் இன்னொரு குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால், அந்தப் பெண்மணி மறுபடியும் கருவுற்றாள். எனவே, கருச்சிதைவு செய்துவிடலாம் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். டாக்டரை சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன், “உயிரைக் கடவுளுடைய கண்ணோட்டத்தில் பாருங்கள்” என்ற அதிகாரத்தைப் படித்தார்கள். அந்த அதிகாரத்தில் காணப்படும் பிறவாத குழந்தையின் படத்தை பார்த்து அந்தத் தம்பதியின் மனம் இளகியதால், கருச்சிதைவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தையே கைவிட்டார்கள். ஆன்மீக ரீதியில் அவர்கள் தொடர்ந்து நன்றாக முன்னேறினார்கள். பைபிள் படிப்பு நடத்தின அந்தச் சகோதரருடைய பெயரையே தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு வைத்தார்கள்.
14. நாம் கற்பிக்கும் விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது எப்படி நல்ல பலன்களை அளிக்கும் என்பதை விளக்குங்கள்.
14 இயேசு கற்பித்த விதத்தின் ஒரு முக்கியமான அம்சம், அவர் கற்பித்ததை தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தார். இந்த விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகள் இயேசுவைப் பின்பற்றுகிறார்கள். அவர்களுடைய நன்நடத்தையைப் பார்த்து அநேகர் கவரப்பட்டிருக்கிறார்கள். நியுஜிலாந்தில், ஒரு வியாபாரியின் காரை யாரோ உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த அவருடைய பெட்டியைத் திருடிச் சென்றுவிட்டார். அந்த வியாபாரி போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸ் அவரிடம் என்ன சொன்னார் என்றால், “காணாமல்போன உங்கள் பெட்டி திரும்பக் கிடைப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளில் யாராவது ஒருவர் அதை பார்த்திருந்தால் அது உங்கள் கையில் திரும்ப கிடைக்கும்.” செய்தித்தாள்களை வினியோகம் செய்துகொண்டிருந்த ஒரு சாட்சியின் கையில் அந்தப் பெட்டி, கிடைத்தது. இதைக் கேள்விப்பட்ட அந்த வியாபாரி சகோதரியின் வீட்டுக்கு வந்தார். அவருக்குத் தேவையான மிகவும் முக்கியமான ஒரு பத்திரம் அந்தப் பெட்டியில் இருந்ததை பார்த்தவுடன் அவர் நிம்மதியானார். அந்தச் சகோதரி அவரிடம், “நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் உங்களுடைய பொருளை உங்களிடமே ஒப்படைப்பதுதான் சரி” என்று கூறினார். அதைக் கேட்டு அந்த வியாபாரிக்கு ஒரே ஆச்சரியம். அன்று காலை, போலீஸ் அதிகாரி சொன்னது அவருடைய நினைவுக்கு வந்தது. ஆம், உண்மை கிறிஸ்தவர்கள் பைபிள் போதனைகளுக்கு இசைவாக வாழ்கிறார்கள், இயேசுவை பின்பற்றி வருகிறார்கள்.—எபி. 13:18.
மக்களை இயேசு கருதியது போலவே கருதுங்கள்
15, 16. நாம் பிரசங்கிக்கும் செய்தியிடம் மக்களை எவ்வாறு கவர்ந்திழுக்கலாம்?
15 மக்களை இயேசு கருதிய விதம், அவருடைய செய்தியைக் கேட்க அவர்களைத் தூண்டியது. உதாரணத்திற்கு அவர் காண்பித்த அன்பும் மனத்தாழ்மையும் ஏழ்மையானவர்களை அவரிடம் ஈர்த்தன. தம்மிடம் வந்தவர்களை அவர் இரக்கத்துடன் நடத்தினார். அன்பான வார்த்தைகளைப் பேசி அவர்களுக்கு ஆறுதல் அளித்தார். அநேகருடைய வியாதிகளைக் குணப்படுத்தினார். (மாற்கு 2:1-5-ஐ வாசிக்கவும்.) நம்மால் அற்புதங்களைச் செய்ய முடியாது என்றாலும், அன்பு, மனத்தாழ்மை, இரக்கம் ஆகிய குணங்களைக் காட்ட முடியும். இப்படிப்பட்ட குணங்கள் மக்களை சத்தியத்திடம் கவர்ந்திழுக்கும்.
16 தென் பசிபிக்கில் உள்ள கிரிபடி தீவுகளிலேயே ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்த ஒரு தீவில், பீரி என்ற வயதானவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டுக்கு டாரீயூயா என்ற விசேஷ பயனியர் சென்றிருந்தார். அந்த நபரிடம் இந்த பயனியர் காண்பித்த இரக்கத்தால் நல்ல பலன்கள் கிடைத்தன. அந்த வயதானவர் டாரீயூயா சொல்வதைக் கேட்பதற்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை டாரீயூயா கவனித்து அவர்மீது இரக்கப்பட்டார். “வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதியவர்களுக்கும் கடவுள் அளித்திருக்கும் வாக்குறுதியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று அவரிடம் கேட்டார். பின்பு, ஏசாயா தீர்க்கதரிசனத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்துக் காட்டினார். (ஏசாயா 35:5, 6-ஐ வாசிக்கவும்.) அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, அந்த வயதானவர் இவ்வாறு கூறினார்: “நான் பைபிளை பல வருடங்களாக வாசித்து வருகிறேன். என்னுடைய மதத்தைச் சேர்ந்த ஒரு மிஷனரி பல வருடங்களாக என்னை வந்து சந்தித்துவிட்டும் போகிறார்; ஆனால், இந்த விஷயத்தை நான் இதுவரை பைபிளில் படித்ததே இல்லை.” பீரியுடன் ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, ஆன்மீக ரீதியில் அவர் நன்றாக முன்னேறினார். மிக மோசமாக ஊனமுற்றிருந்த அவர் இப்போது முழுக்காட்டப்பட்டிருக்கிறார். ஒதுக்குப்புறத்திலுள்ள ஒரு தொகுதியை முன்னின்று வழிநடத்துகிறார். அந்தத் தீவு முழுவதும் நடந்து சென்று அவரால் நற்செய்தியைப் பிரசங்கிக்க முடிகிறது.
கிறிஸ்துவைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்
17, 18. (அ) நீங்கள் எப்படித் திறம்பட்ட சுவிசேஷகராய் ஆக முடியும்? (ஆ) ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறவர்கள் எதை அடைவார்கள்?
17 ஊழியத்தில் கிடைக்கும் இதுபோன்ற சுவையான அனுபவங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறபடி, இயேசு வெளிக்காட்டிய குணங்களை நாமும் வளர்த்துக்கொண்டு நம்முடைய வாழ்வில் வெளிக்காட்டினால் நாம் திறம்பட்ட சுவிசேஷகர்களாக இருப்போம். அப்படியென்றால், சுறுசுறுப்பான சுவிசேஷகர்களாக நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுவது எவ்வளவு தகுந்ததாய் இருக்கிறது!
18 முதல் நூற்றாண்டில் சிலர் இயேசுவின் சீஷர்களாக ஆனபோது, “எங்களுக்கு என்ன கிடைக்கும்” என்று பேதுரு கேட்டார். அதற்கு இயேசு இவ்வாறு பதிலளித்தார்: ‘என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்.’ (மத். 19:27-29) தலைசிறந்த மிஷனரியான இயேசு கிறிஸ்துவை நாம் தொடர்ந்து பின்பற்றினால் நிச்சயமாகவே இது நம்முடைய அனுபவமாகவும் இருக்கும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• சுவிசேஷகர்களாக இருப்பதற்கு யெகோவா நம்மை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்?
• பைபிள் கற்பிக்கிறது புத்தகம் எவ்வாறு நம் ஊழியத்தில் நல்ல பலன்களை அளிக்கிறது?
• மக்களைக் கருதும் விதத்தில் நாம் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம்?
[பக்கம் 17-ன் படம்]
தம்மைப் பின்பற்றும்படி பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு அழைத்தபோது அவர்கள் உடனடியாக அவரைப் பின்தொடர்ந்தார்கள்
[பக்கம் 19-ன் படம்]
நாம் அனைவரும் ஒத்திசைவாகப் போதிப்பதற்கு “பைபிள் கற்பிக்கிறது” போன்ற பிரசுரங்கள் உதவுகின்றன