இஸ்ரவேலரின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்ததும் அவர்களிடம் யெகோவா என்ன எதிர்பார்த்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். மோசேயின் மூலமாக கடவுள் அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: ‘அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்க வேண்டும்.’—எண். 33:52.
அவர்கள் குடியேறிய தேசத்து மக்களுடன் இஸ்ரவேலர் எந்த ஒப்பந்தங்களையும் செய்யக் கூடாது; அவர்களுடன் திருமண சம்பந்தங்களையும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என கட்டளையிடப்பட்டிருந்தார்கள். (உபா. 7:2, 3) இன்னும் சொல்லப்போனால், “நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை பண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்” என்றுகூட கடவுள் தாம் தேர்ந்தெடுத்த ஜனத்தை எச்சரித்தார். (யாத். 34:12) அப்படியிருந்தும், இஸ்ரவேலர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் அந்தக் கண்ணியில் மாட்டிக்கொண்டார்கள். அவர்களுடைய அழிவுக்கு காரணமாக இருந்தது எது? அவர்களுடைய அனுபவத்திலிருந்து நம்மை எச்சரிக்கும் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?—1 கொ. 10:11.
நெருங்கிப் பழகுவதில் துவங்கி சிலை வழிபாடுவரை
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை இஸ்ரவேலர் தங்களுக்குச் சொந்தமாக்கி கொள்கையில், அங்கு குடியிருந்த மக்களுக்கு எதிராகப் போரிட்டு வென்றார்கள். ஆனாலும், கடவுளுடைய கட்டளைகளுக்கு அவர்கள் முழுவதுமாக கீழ்ப்படியத் தவறினார்கள். விரோதிகளை அவர்கள் அங்கிருந்து துரத்திவிடவில்லை. (நியா. 1:1–2:10) மாறாக, அந்தத் தேசத்திலிருந்த ‘ஏழு ஜாதிகளுக்கு’ மத்தியில் இஸ்ரவேலர் குடியிருந்தார்கள். அந்த மக்களை அடிக்கடி பார்த்து பழகவேண்டியிருந்ததால் அவர்களுடன் நட்பும் வளர்ந்தது. (உபா. 7:1) இது இஸ்ரவேலரை எப்படிப் பாதித்தது? ‘அவர்களுடைய குமாரத்திகளை விவாகம்பண்ணி, தங்களுடைய குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுத்து, அவர்கள் தேவர்களைச் சேவித்தார்கள். இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவித்தார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (நியா. 3:5-7) இஸ்ரவேல் மக்கள் அந்த தேசத்து மக்களுடன் நெருங்கி உறவாடியதால், கலப்பு திருமணம் செய்வதிலும், சிலை வழிபாட்டிலும் ஈடுபட்டார்கள். திருமண பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்ததால், புற மதத்தினராகிய அவர்களை அந்தத் தேசத்திலிருந்து விரட்டிவிடுவதற்கான வாய்ப்பும் குறைந்துவிட்டது. உண்மை வணக்கம் கறைபட்டது, இஸ்ரவேலரும் பொய் கடவுட்களை வணங்க ஆரம்பித்தார்கள்.
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்த குடிகள் விரோதிகளாய் இருந்ததைவிடவும், இப்போது நெருங்கிப் பழகும் கூட்டாளிகளானபோது இஸ்ரவேலருக்கு ஆன்மீக ரீதியில் ஆபத்து ரொம்பவே அதிகரித்தது. அவர்களை மத சம்பந்தமாக கறைபடுத்திய மற்றொரு வழியையும் கவனியுங்கள்.
விவசாயமும் பாகால் வணக்கமும்
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அடியெடுத்து வைத்த சமயத்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் நாடோடிகளாய் இருக்கவில்லை; அவர்களில் அநேகர் விவசாயிகளாய் மாறிவிட்டார்கள். அந்தத் தேசத்தில் விவசாயம் பண்ணுவதற்கு கானானியர்கள் பயன்படுத்திய வழிமுறைகளையே இவர்களும் அநேகமாக பின்பற்றியிருப்பார்கள். ஆனாலும், அவர்களுடைய விவசாய முறைகளைக் கடைப்பிடித்ததோடு மட்டும் இவர்கள் நிறுத்தியதாக தெரியவில்லை. அந்தத் தேசத்தாருடன் பழகி வந்ததால், விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட அவர்களுடைய மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கும் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்.
கானானியர்கள் ஏகப்பட்ட பாகால்களை வணங்கினார்கள். பாகால்கள் மண் வளத்தை அதிகரிக்கும் தேவர்களாக கருதப்பட்டன. நிலத்தைப் பயிரிட்டு, விளைச்சலை அறுவடை செய்ததோடு, பன்மடங்கு விளைச்சலையும் செழிப்பையும் கானானிய தேவர்கள் தருவதாகச் சொல்லி இஸ்ரவேலரும் காலப்போக்கில் அந்தத் தேவர்களை வழிபடத் தொடங்கினார்கள். இவ்வாறு அநேக இஸ்ரவேலர் யெகோவாவை வழிபடுவதுபோல் பாசாங்கு செய்தார்கள்; ஆனால் உண்மையில், முழுவதுமாக விசுவாச துரோகத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
இன்று நமக்கு பலமான எச்சரிக்கை
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்து மக்களுடன் இஸ்ரவேலர் முதன்முதலில் தொடர்புகொண்டபோது பாகால் வழிபாட்டிலும் அதோடு சம்பந்தப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டுமென்று அவர்கள் கொஞ்சம்கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆனாலும், அவர்களுடன் தொடர்ந்து பழகியது இதற்குத்தான் வழிநடத்தியது. கிறிஸ்தவ நம்பிக்கைகளையும், மதிப்பீடுகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றாதவர்கள் நம்மிடம் சிநேகமாக இருந்தாலும் அவர்களுடன் நாம் நெருங்கிப் பழகி வந்தால் அதேபோன்ற மோசமான விளைவுகளைத்தானே நாமும் சந்திப்போம்! பணியிடத்திலோ பள்ளியிலோ ஒருவேளை வீட்டிலோகூட அவிசுவாசிகளுடன் ஓரளவு தொடர்பு வைக்க வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். இருந்தாலும், அப்படிப்பட்டவர்களிடம் நெருங்கி உறவாட முயலுவது வம்பை விலைக்கு வாங்குவதாகவே இருக்கும். பைபிள் பின்வருமாறு சொல்லும் கூற்று நூற்றுக்குநூறு உண்மையாகவே இருக்கிறது: “தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.”—1 கொ. 15:33 (பொது மொழிபெயர்ப்பு).
இஸ்ரவேலர் எதிர்ப்பட்டதுபோன்ற பல சவால்களை இன்று நாமும் எதிர்ப்படுகிறோம். இன்றைய சமுதாயத்திலும், மக்கள் அநேக விஷயங்களையும் தனிநபர்களையும் தெய்வங்களைப் போல் கருதுகிறார்கள். சிலர், பணத்தையும் அரசியல் அமைப்புமுறைகளையும் தெய்வமாகக் கருதுகிறார்கள். இன்னும் சிலர், பொழுதுபோக்கு துறையிலுள்ள நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், குறிப்பிட்ட மதத் தலைவர்கள் ஆகியோரையும், ஏன், குடும்ப அங்கத்தினர்களையும்கூட தெய்வமாகக் கருதுகிறார்கள். மேற்சொன்னவற்றில் ஏதாவது ஓர் அம்சம் நம் வாழ்க்கையில் முக்கியமானதாக ஆகிவிடக்கூடும். யெகோவாவை நேசிக்காதவர்களோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வது கடவுளோடு நாம் அனுபவிக்கும் உறவைப் பாதிக்கக்கூடும்.
தவறான பாலுறவு, பாகால் வணக்கத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. அநேக இஸ்ரவேலரை மயக்கி தன் வலையில் சிக்க வைத்ததும் இதுவே. இன்றும் கடவுளுடைய மக்கள் பலர் இதுபோன்ற கண்ணிகளில் சிக்கிவிடுகிறார்கள். உதாரணமாக, ஒருவர் தன் வீட்டில், தனிமையில் இருக்கும்போது கம்ப்யூட்டரின் ‘மவுஸை’ தட்டினால் போதும். விஷயங்களை அறியும் ஆர்வ துடிப்புள்ள ஒருவர் அல்லது ஏமாளியான ஒருவர், தன் நல்ல மனசாட்சியை கெடுக்கும் காரியங்களைப் பார்ப்பதற்கு அது வழிநடத்திவிடும். இன்டர்நெட்டின் ஆபாச வலையில் ஒரு கிறிஸ்தவர் சிக்கிக்கொண்டால் அது எவ்வளவு வருத்தமான விஷயமாக இருக்கும்!
‘அவருடைய நினைப்பூட்டுதல்களைக் கடைப்பிடிப்பவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்’
நாம் யாரோடு பழக வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதும் கீழ்ப்படியாமலிருப்பதும் நம் தனிப்பட்ட தீர்மானம். (உபா. 30:19, 20) எனவே, நம்மை நாமே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது நான் யாரோடு இருக்கிறேன்? அவர்களுடைய மதிப்பீடுகளும் நெறிகளும் எப்படிப்பட்டவை? அவர்கள் யெகோவாவை வழிபடுகிறார்களா? அவர்களுடன் சேர்ந்திருப்பது என்னை இன்னும் சிறந்த கிறிஸ்தவராக்குமா?’
“கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு [‘நினைப்பூட்டுதல்களைக் கடைப்பிடித்து,’ NW] அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் [‘சந்தோஷமுள்ளவர்கள்,’ NW].” (சங். 119:1, 2) சொல்லப்போனால், “கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.” (சங். 128:1) நம்முடைய கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், இஸ்ரவேலருடைய தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொண்டு, யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிவோமாக.—நீதி. 13:20.
[பக்கம் 26-ன் படம்]
யெகோவாவை நேசிக்காதவர்களுடன் நெருங்கிப் பழகுவது நம்மைச் சிலை வழிபாட்டிற்கு வழிநடத்தலாம்