மணவாழ்வில் ‘முப்புரி நூலை’ பிரிக்காதீர்கள்
“முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.”—பிர. 4:12.
1. முதல் ஆணையும் பெண்ணையும் இணைத்துத் திருமணம் செய்துவைத்தது யார்?
தாவரங்களையும் உயிரினங்களையும் படைத்த பிறகு யெகோவா தேவன் முதல் மனிதனாகிய ஆதாமை உருவாக்கினார். பின்பு ஒருநாள் யெகோவா ஆதாமை ஆழ்ந்து தூங்கும்படிச் செய்தார்; அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அவனுக்குக் கச்சிதமான ஒரு துணையை உருவாக்கினார். அவளைக் கண்டதும் ஆதாம் சொன்னது இதுவே: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்.” (ஆதி. 1:27; 2:18, 21–23) முதல் பெண்ணை உருவாக்கியதைக் குறித்து யெகோவா சந்தோஷப்பட்டார்; அந்த முதல் மனித ஜோடியை ஒன்றாக இணைத்து அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து ஆசி வழங்கினார்.—ஆதி. 1:28; 2:24.
2. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மத்தியில் சாத்தான் விரிசலை ஏற்படுத்தியது எவ்வாறு?
2 ஆனால், சீக்கிரத்திலேயே கடவுள் ஆரம்பித்து வைத்த அந்த முதல் திருமணத்திற்குப் பங்கம் ஏற்பட்டது. எப்படி? சாத்தான் எனப் பின்னர் அழைக்கப்பட்ட ஒரு பொல்லாத தூதன், ஏவாளை ஏமாற்றிவிட்டான். எவ்வாறெனில், ஒரேவொரு மரத்தின் பழங்களை மட்டும் சாப்பிடக் கூடாதென்று அந்தத் தம்பதியருக்கு யெகோவா தடை விதித்திருந்தார்; அதை ஏவாள் சாப்பிடும்படி செய்துவிட்டான். அவளுடைய பேச்சைக் கேட்டு ஆதாமும் அதைச் சாப்பிட்டான். அது, உண்மையில் கடவுளின் ஆட்சியுரிமையையும் நல்வழியையும் எதிர்த்துக் கலகம் செய்வதாய் இருந்தது. (ஆதி. 3:1–7) அந்தத் தம்பதியரை அழைத்து யெகோவா விசாரித்தபோது அவர்கள் மத்தியில் ஏற்கெனவே விரிசல் இருந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆதாம் தன் மனைவிமீது பழிபோட்டு, “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்” என்றான்.—ஆதி. 3:11–13.
3. யூதர்கள் சிலர் என்ன தவறான கருத்தைப் பரப்பினார்கள்?
3 அதுமுதற்கொண்டு பல நூற்றாண்டுகளாக, தம்பதியரிடையே பிரச்சினைகள் தலைதூக்கப் பல்வேறு சூழ்ச்சி முறைகளைச் சாத்தான் பயன்படுத்தியிருக்கிறான். உதாரணமாக, சில சமயங்களில் மதத் தலைவர்கள் திருமணத்தைக் குறித்து பைபிளுக்கு முரணான கருத்துகளைப் பரப்பும்படிச் செய்திருக்கிறான். யூத மதத் தலைவர்கள் சிலர், கடவுளுடைய நெறிமுறைகளுக்குத் தகுந்த முக்கியத்துவம் கொடுக்கவில்லை; அதனால், சாப்பாட்டில் உப்பு அதிகமாகிவிட்ட குற்றத்துக்கெல்லாம் தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்துகொள்ளக் கணவர்களுக்கு அனுமதி அளித்தார்கள். ஆனால் இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: “எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.”—மத். 19:9.
4. இன்று திருமண பந்தத்திற்குப் பங்கம் ஏற்பட்டு வருவது எவ்வாறு?
4 திருமண பந்தத்தைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் முயற்சியில் சாத்தான் இன்னமும் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறான். ஒரே பாலினத்தவர் தம்பதியராக இணைந்து வாழ்வது, திருமணம் செய்யாமலேயே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது, விவாகரத்துகள் எளிதில் கிடைப்பது—இவை யாவும் திருமணத்தின் மதிப்பைக் கெடுத்துப்போடுவதில் சாத்தான் வெற்றியடைந்து வருவதைக் காட்டுகின்றன. (எபிரெயர் 13:4-ஐ வாசியுங்கள்.) திருமணத்தைப் பற்றி பரவலாக இருக்கிற திரிக்கப்பட்ட கருத்தால் பாதிக்கப்படாதிருக்க கிறிஸ்தவர்களாகிய நாம் என்ன செய்யலாம்? இலட்சியத் திருமணங்களுக்கான இலட்சணங்கள் சிலவற்றை இப்போது நாம் சிந்திப்போம்.
மணவாழ்வில் யெகோவாவுக்குரிய இடம்
5. திருமண பந்தத்தைப் பொறுத்ததில் “முப்புரிநூல்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
5 மண வாழ்க்கை வெற்றிபெற, யெகோவாவுக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும். “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” என பைபிள் சொல்கிறது. (பிர. 4:12) “முப்புரிநூல்” என்பது அடையாள அர்த்தமுடைய வார்த்தையாகும். இந்த வார்த்தையை திருமண பந்தத்திற்கு பொருத்துகையில், கணவன், மனைவி ஆகிய இருவரும் இந்நூலின் இரண்டு இழைகள்; இவர்கள் இருவரும் மைய இழையான யெகோவா தேவனோடு பின்னிப் பிணைந்துள்ளனர். கடவுளோடு இணைந்திருந்தால்தான் மணவாழ்வில் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான ஆன்மீகப் பலத்தைத் தம்பதியர் பெறுவர்; அப்படி இணைந்திருப்பதே திருமண பந்தத்தில் ஆனந்தத்தை அனுபவிக்க மிகவும் முக்கியமானது.
6, 7. (அ) மணவாழ்வில் கடவுளுக்கு முக்கிய இடம் இருப்பதைக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்? (ஆ) ஒரு சகோதரி தன் கணவரைப் பற்றி எப்படி உயர்வாகச் சொல்கிறார்?
6 தங்கள் மணவாழ்க்கை முப்புரிநூலைப் போல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தம்பதியர் என்ன செய்யலாம்? சங்கீதக்காரனாகிய தாவீது பாடினதாவது: “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது.” (சங். 40:8) அவ்வாறே நாமும் கடவுள்மீது அன்பு வைத்திருக்கும்போது, முழு இருதயத்தோடு அவருக்குச் சேவை செய்வோம். எனவே, கணவன் மனைவி ஆகிய இருவருமே யெகோவா தேவனோடு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும், அவருடைய சித்தத்தைச் செய்வதில் இன்பம் காண வேண்டும். அதோடு, கடவுள்மீது வைத்திருக்கும் அன்பைப் பலப்படுத்த ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்.—நீதி. 27:17.
7 உண்மையிலேயே கடவுளுடைய பிரமாணம் நம் உள்ளத்தில் இருக்குமானால் விசுவாசம், நம்பிக்கை, அன்பு போன்ற குணங்களை வெளிக்காட்டுவோம், திருமண பந்தத்தைப் பலப்படுத்த உதவுவோம். (1 கொ. 13:13) சகோதரி சான்ட்ராவுக்குத் திருமணமாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் சொல்கிறார்: “என் கணவரிடம் எனக்குப் பிடித்த குணங்கள் எவையென்றால், பைபிளிலிருந்து அவர் எனக்கு தரும் அறிவுரையும் ஆலோசனையும், யெகோவா மீதான அவருடைய அன்புமே; இந்த அன்பு என்மீது அவர் வைத்திருக்கும் அன்பைக் காட்டிலும் பலமானது.” கணவர்களே, உங்கள் மனைவிகளும் உங்களைப் பற்றி இதுபோல சொல்வார்களா?
8. மணவாழ்வில் ‘நல்ல பலனை’ பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
8 தம்பதியரான நீங்கள், யெகோவாவோடு உள்ள பந்தத்தையும் ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களையும் முதலிடத்தில் வைக்கிறீர்களா? அதோடு உங்கள் மணத் துணை, யெகோவாவுக்குச் சேவை செய்வதிலும் உங்களுக்குத் துணையாய் இருப்பதாக நினைக்கிறீர்களா? (ஆதி. 2:24) ஞானியாகிய சாலொமோன் இவ்வாறு எழுதினார்: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.” (பிர. 4:9) சொல்லப்போனால், ‘நல்ல பலனை’ பெறுவதற்கு, அதாவது கடவுளுடைய ஆசியால் அன்பான, நிலையான திருமண பந்தத்தை அனுபவிப்பதற்கு கணவனும் மனைவியும் கடினமாய் உழைக்க வேண்டும்.
9. (அ) கணவர்களுக்கு என்ன பொறுப்புகள் உள்ளன? (ஆ) கொலோசெயர் 3:19-க்கு இசைய, கணவர் தன் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும்?
9 கடவுளுடைய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்காக கணவன் மனைவி ஆகிய இருவரும் கடினமாக முயற்சி செய்வதே அவர்கள் தங்களது மணவாழ்வில் கடவுளை மையமாக வைத்திருப்பதற்கான அறிகுறி ஆகும். பொருள் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் தன் குடும்பத்தாருக்குத் தேவையான உதவியை அளிக்கும் தலையாய கடமை கணவர்களுக்கு இருக்கிறது. (1 தீ. 5:8) உணர்ச்சி ரீதியில் மனைவிக்குத் தேவைப்படும் உதவிகளைக் கரிசனையோடு செய்யும்படியும் கணவர்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. கொலோசெயர் 3:19-ல் கூறப்பட்டுள்ள அறிவுரையாவது: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.” “கசந்து கொள்” என்பது “கோபமாகத் திட்டுவது அல்லது அடிப்பது, அவர்களுக்குச் சேர வேண்டிய பாசத்தையும் பராமரிப்பையும் பொருள்களையும் பாதுகாப்பையும் உதவியையும் அளிக்க மறுப்பது ஆகியவற்றை உள்ளடக்குகிறது” என பைபிள் அறிஞர் ஒருவர் விளக்கினார். ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் இப்படியெல்லாம் நடப்பது சரியல்ல என்பது இதிலிருந்து தெளிவாகிறது. கணவர் அன்பாகத் தலைமை வகிக்கும்போது மனைவி அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தயாராய் இருப்பார்.
10. கிறிஸ்தவ மனைவிகள் எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிக்காட்ட வேண்டும்?
10 யெகோவாவைத் தங்கள் மணவாழ்வில் முக்கிய நபராக வைக்க விரும்புகிற மனைவியும் கடவுளுடைய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையாவது: “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல், உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.” (எபே. 5:22, 23) கடவுளை விட்டுப் பிரிந்து இஷ்டம்போல் வாழ்வது நிரந்தர மகிழ்ச்சி தருமென்ற பொய்யைச் சொல்லி சாத்தான் ஏவாளை ஏமாற்றினான். எனவேதான் இஷ்டம்போல் வாழத் துடிக்கும் மனப்பான்மையை அநேகருடைய மணவாழ்வில் காண முடிகிறது. என்றாலும், மணவாழ்வில் கடவுளின் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும் பெண்கள், அன்போடு தலைமை வகிக்கும் கணவருக்குக் கீழ்ப்பட்டு இருப்பதைக் கடினமாய்க் கருத மாட்டார்கள். ஏனெனில், ஏவாளை ஆதாமுக்கு ‘ஏற்ற துணையாக’ யெகோவா நியமித்தார் என்பதையும், அவருடைய கண்ணோட்டத்தில் அது கௌரவமிக்க ஒரு ஸ்தானம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (ஆதி. 2:18) அந்த ஸ்தானத்தை மனப்பூர்வமாக ஏற்று, கணவனோடு ஒத்துழைக்கும் கிறிஸ்தவ மனைவி உண்மையில் அவளுடைய கணவருக்கு “கிரீடமாயிருக்கிறாள்.”—நீதி. 12:4.
11. மணவாழ்வில் தனக்கு எது உதவியிருப்பதாக ஒரு சகோதரர் சொல்கிறார்?
11 தம்பதியர் தங்களுடைய மணவாழ்வில் கடவுளை மையமாக வைப்பதற்கு உதவும் இன்னொரு வழி, கடவுளுடைய வார்த்தையை இருவருமாய்ச் சேர்ந்து படிப்பதாகும். ஜெரல்ட் என்ற சகோதரர் மணவாழ்வில் 55 வருடங்களை இனிதாகக் கழித்திருப்பவர். அவர் சொல்வதாவது: “பைபிளைச் சேர்ந்து வாசிப்பதும் படிப்பதுமே வெற்றிகரமான மணவாழ்வுக்கு உதவும் மிக முக்கியமான அம்சமாகும்.” “எதையும் சேர்ந்து செய்வது, முக்கியமாக ஆன்மீக காரியங்களைச் சேர்ந்து செய்வது, தம்பதியர் ஒருவருக்கொருவர் நெருங்கி வருவதோடு யெகோவாவுடன் நெருங்கி வரவும் உதவுகிறது” என்றும் அவர் சொல்கிறார். குடும்பமாக பைபிளைச் சேர்ந்து படிப்பது, யெகோவாவின் நெறிமுறைகளைப் பசுமரத்தாணிபோல் மனதில் பதியவைக்கவும், அவரோடு வைத்திருக்கும் உறவைப் பலப்படுத்தவும், தொடர்ந்து முன்னேற்றம் செய்யவும் உதவுகிறது.
12, 13. (அ) கணவனும் மனைவியும் சேர்ந்து ஜெபிப்பது ஏன் முக்கியம்? (ஆ) வேறென்ன காரியங்களைச் செய்வது திருமண பந்தத்தைப் பலப்படுத்தும்?
12 மகிழ்ச்சியான மணவாழ்வை அனுபவிக்கும் தம்பதியர் சேர்ந்து ஜெபமும் செய்கிறார்கள். குடும்பச் சூழ்நிலைக்குத் தக்கவாறு குறிப்பிட்ட காரியங்களின் பேரில் கணவர் தன் ‘இருதயத்தை ஊற்றி’ விண்ணப்பம் செய்கையில், அவர்கள் இருவருக்கிடையே உள்ள பந்தம் பலப்படுவது உறுதி. (சங். 62:8) உதாரணத்திற்கு, இருவருமாய்ச் சேர்ந்து சர்வ வல்லவரிடம் அறிவுரைக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் கெஞ்சி மன்றாடிய பிறகு உங்களுக்கிடையே இருந்த மனஸ்தாபங்களை மறப்பது எத்தனை எளிது! (மத். 6:14, 15) ஜெபம் செய்ததற்கு இசைவாக, ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் எப்போதுமே, ‘ஒருவரையொருவர் தாங்கி, . . . ஒருவருக்கொருவர் மன்னிக்கவும்’ தீர்மானமாய் இருப்பது மிகவும் பொருத்தமானது. (கொலோ. 3:13) ஜெபிப்பது, நாம் கடவுளை சார்ந்திருப்பதைக் காட்டுகிறது என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். தாவீது ராஜா சொன்னார்: ‘எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை [நம்பிக்கையோடு] நோக்கிக்கொண்டிருக்கிறது.’ (சங். 145:15) கடவுள்மீது நம்பிக்கை வைத்து நாம் ஜெபிக்கும்போது, அவர் நம்மை ‘விசாரிக்கிறவர்’ என்பதை அறிந்திருப்பதால் நம் கவலைகள் கணிசமாகக் குறைந்துவிடும்.—1 பே. 5:7.
13 மணவாழ்வில் யெகோவாவை மையமாக வைப்பதற்கு இன்னொரு முக்கிய வழி, சபைக் கூட்டங்களுக்குச் செல்வதும் ஊழியத்தில் சேர்ந்து ஈடுபடுவதுமாகும். குடும்பங்களில் குழப்பத்தை உண்டாக்க சாத்தான் உபயோகிக்கிற ‘தந்திரங்களை’ சமாளிக்கும் வழிகளை மணத்துணைகள் கூட்டங்கள் வாயிலாகக் கற்றுக்கொள்கிறார்கள். (எபே. 6:11) அவ்வாறே, வழக்கமாக ஊழியத்தில் சேர்ந்து ஈடுபடும் தம்பதியர் “உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும்” இருக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.—1 கொ. 15:58.
பிரச்சினைகள் வந்தால்
14. மணவாழ்வில் பிரச்சினைகள் வருவதற்கான காரணங்கள் என்னென்ன?
14 மேற்கண்ட ஆலோசனைகள் எல்லாம் நீங்கள் ஏற்கெனவே அறிந்தவைதான். ஆனாலும், இவற்றை ஒளிவுமறைவின்றி நீங்கள் இருவருமாய் கலந்தாலோசிக்கலாம், அல்லவா? இவற்றில் எந்த அம்சத்திற்கு நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் குறித்து யோசியுங்கள். என்றாலும், தங்கள் மணவாழ்வில் கடவுளை மையமாக வைத்துச் செயல்படுபவர்கள்கூட “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” என்ற உண்மையை பைபிள் ஒப்புக்கொள்கிறது. (1 கொ. 7:28) மனித குறைபாடுகளாலும், இந்தப் பொல்லாத உலகின் செல்வாக்காலும், பிசாசின் தந்திரங்களாலும் கடவுளுக்கு உண்மையாய் உழைக்கும் தம்பதியரின் வாழ்க்கையில்கூட பெரும் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன. (2 கொ. 2:11) ஆனால், அவற்றையெல்லாம் சமாளிக்க யெகோவா நமக்கு உதவுகிறார். ஆம், நம்மால் சமாளிக்க முடியும். உத்தமராய்த் திகழ்ந்த யோபு, தன்னுடைய கால்நடைகளையும் வேலையாட்களையும் பிள்ளைகளையும் இழந்தார். இருந்தாலும், “இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை” என பைபிள் கூறுகிறது.—யோபு 1:13–22.
15. பிரச்சினை வந்தால் மக்கள் எப்படி நடந்துகொள்வார்கள், அதைத் தம்பதியர் எப்படிச் சமாளிக்கலாம்?
15 மறுபட்சத்தில், யோபுவின் மனைவி அவரிடம், “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்” என்றாள். (யோபு 2:9) துயர சம்பவங்களோ வேறு ஏதாவது விபரீதமான சூழ்நிலைகளோ ஏற்படும்போது, உணர்ச்சி ரீதியில் குழப்பமடைவதன் காரணமாக ஒருவர் சிந்திக்காமல் எதையாவது செய்துவிடலாம். “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்” என்றார் ஞானியாகிய சாலொமோன். (பிர. 7:7) கஷ்டம் அல்லது ‘இடுக்கண்’ காரணமாக உங்கள் துணை சரமாரியாக வார்த்தை அம்புகளை எய்தாரென்றால், மௌனமாக இருங்கள். சரிக்குச் சரி செய்ய நினைத்தால் உங்களில் ஒருவர் அல்லது இருவருமே, நிலைமையை இன்னும் மோசமாக்குகிற ஏதாவதொன்றை பேசிவிடலாம். (சங்கீதம் 37:8-ஐ வாசியுங்கள்.) ஆகவே, உங்கள் துணை விரக்தியாலோ விசனத்தாலோ ‘பதறிப் பேசினாலும்’ அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள்.—சங். 106:33.
16. (அ) மத்தேயு 7:1-5-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் மணவாழ்விற்கு எவ்வாறு பொருந்துகின்றன? (ஆ) மணவாழ்வில் சமநிலை காப்பது ஏன் அவசியம்?
16 தம்பதியர் நியாயமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். மணத் துணைகளில் ஒருவரது வினோதமான குணங்கள் மற்றவருக்கு வெறுப்பேற்றலாம். அப்போது, ‘நான் அவரை/அவளை மாற்றிவிடுவேன்’ என்று நினைக்கலாம். அன்போடும் பொறுமையோடும் இருந்தால், உங்கள் துணை படிப்படியாக மாறுவதற்கு நீங்கள் உதவலாம். என்றாலும், மற்றவர்கள் செய்கிற சிறுசிறு தவறுகளையெல்லாம் மலைபோலப் பெரிதாகப் பார்க்கிறவர்களை, தன் கண்களில் இருக்கும் ‘உத்திரத்தை’ கவனிக்காமல் மற்றவரது கண்களில் இருக்கிற ‘துரும்பை’ பார்க்கிறவர்களுக்கு இயேசு ஒப்பிட்டதை மறந்துவிடாதீர்கள். “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்றும் இயேசு சொன்னார். (மத்தேயு 7:1–5-ஐ வாசியுங்கள்.) அதற்கென்று, பெரிய தவறுகளைப் புறக்கணித்துவிடக் கூடாது. மணமாகி கிட்டத்தட்ட 40 வருடங்களான ராபர்ட் சொல்கிறார்: “ஒளிவுமறைவின்றி ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவதற்கும், தவறுகளை நியாயமாகச் சுட்டிக்காட்டினால் அவற்றை ஒத்துக்கொள்வதற்கும், தம்பதியர் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்.” ஆகவே, சமநிலையோடிருங்கள். நீங்கள் எதிர்பார்த்த பண்புகளை உங்கள் துணையிடம் காணாத சோகத்தில் சோர்ந்துவிடுவதற்குப் பதிலாக, தற்போது அவரிடம்/அவளிடம் காண்கிற நல்ல பண்புகளைப் பாராட்டவும் ரசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.—பிர. 9:9.
17, 18. கஷ்டங்கள் அதிகரிக்கும்போது யாரிடம் உதவி கேட்கலாம்?
17 வாழ்க்கையில் சூழ்நிலைகள் மாறும்போது சோதனைகள் வரலாம். தம்பதியருக்குப் பிள்ளைகள் பிறந்தால் அவர்கள் பல்வேறு சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். மணத் துணைக்கோ, பிள்ளைக்கோ உடல்நிலை மிகவும் பாதிக்கப்படலாம். வயதான பெற்றோருக்கு விசேஷ கவனிப்பு தேவைப்படலாம். வளர்ந்த பிள்ளைகள் வீட்டைவிட்டு வெகு தொலைவுக்குச் சென்றிருக்கலாம். தேவராஜ்ய பொறுப்புகள் காரணமாக இன்னும் பிற மாற்றங்கள் வரலாம். இப்படிப்பட்ட மாற்றங்களால் திருமண பந்தத்தில் பிரச்சினையும் கவலையும் தலைதூக்கலாம்.
18 உங்கள் மணவாழ்வில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை காரணமாக உங்களால் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று தோன்றினால் நீங்கள் என்ன செய்யலாம்? (நீதி. 24:10) சோர்ந்துவிடாதீர்கள்! கடவுளின் ஊழியர்களில் ஒருவர் மெய் வணக்கத்தைவிட்டுப் போய்விட்டாலே சாத்தானுக்குச் சந்தோஷம்தான்; அப்படியிருக்க தம்பதியர் இருவர் போய்விட்டால் அவனுக்கு இன்னும் கொண்டாட்டம்தான்! ஆகவே, உங்கள் மணவாழ்வு முப்புரிநூலைப் போலிருக்க உங்களாலான எல்லாவற்றையும் செய்யுங்கள். கடும் சோதனைகளின் மத்தியிலும் உண்மையோடு நிலைத்துநின்ற ஊழியர்கள் அநேகரைப் பற்றி பைபிள் சொல்கிறது. உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில் தாவீது யெகோவாவிடம் தன் இருதயத்தை ஊற்றி இவ்வாறு சொன்னார்: “தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் . . . என்னை ஒடுக்குகிறான்.” (சங். 56:1) நீங்கள் எப்போதாவது ‘மனிதனால்’ ஒடுக்கப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? அந்தக் கஷ்டம் தூரத்திலிருந்து வந்தாலும் சரி உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து வந்தாலும் சரி, இதை ஞாபகத்தில் வைத்திருங்கள்: தாங்கும் சக்தியை தாவீது பெற்றார், ஆகவே நீங்களும் பெற முடியும். அவர் இவ்வாறு சொன்னார்: “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.”—சங். 34:4.
எதிர்கால ஆசீர்வாதங்கள்
19. சாத்தானுடைய தாக்குதல்களிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
19 இந்த முடிவு காலத்தில், தம்பதியர் “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி” செய்ய வேண்டும். (1 தெ. 5:11) சாத்தானுடைய சவாலை மறந்துவிடாதீர்கள். சுயநலத்தோடுதான் நாம் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் நடந்துகொள்கிறோம் என்கிறான் அவன். கடவுளோடுள்ள நம் உத்தமத்தை முறிக்க என்னென்னவோ வழிகளை அவன் கையாளுகிறான். மணவாழ்வைச் சிதைக்க முயலுவதும் அவற்றில் ஒன்று. சாத்தானுடைய தாக்குதல்களிலிருந்து தப்பிக்க, நாம் யெகோவாமீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். (நீதி. 3:5, 6) பவுல் இவ்வாறு எழுதினார்: ‘என்னைப் பெலப்படுத்துகிறவராலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.’—பிலி. 4:13.
20. ஒருவரது மணவாழ்வில் கடவுளை மையமாக வைப்பதால் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
20 மணவாழ்வில் கடவுளை மையமாக வைப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் அநேகமாகும். மணமாகி 51 ஆண்டுகளை கழித்திருக்கும் ஜோயலும் அவருடைய மனைவியும் தங்கள் அனுபவத்தில் இதை உண்மையெனக் கண்டிருக்கிறார்கள். ஜோயல் கூறுகிறார்: “எனக்கு அருமையான மனைவியைத் தந்ததற்காகவும், நாங்கள் மணவாழ்வில் மகிழ்ச்சி காண்பதற்காகவும் யெகோவாவுக்கு எப்போதும் நன்றி தெரிவிக்கிறேன். அவள் எனக்கு ஏற்ற துணையாக இருந்திருக்கிறாள்.” அவர்களுடைய மணவாழ்வு வெற்றிசிறக்கக் காரணம் என்ன? “நாங்கள் எப்போதுமே ஒருவருக்கொருவர் தயவாகவும் பொறுமையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ளப் பிரயாசப்பட்டிருக்கிறோம்” என்று அவர் சொல்கிறார். இதை நாம் யாருமே இந்தப் பொல்லாத உலகில் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாதுதான். என்றாலும், நம் மணவாழ்வில் பைபிள் நெறிகளைக் கடைப்பிடிப்பதற்குக் கடினமாய் உழைப்போமாக, மணவாழ்வில் யெகோவாவை மையமாய் வைப்போமாக. அவ்வாறு செய்தால், நம் மண வாழ்க்கை ‘முப்புரிநூல் போல சீக்கிரமாய் அறாது.’—பிர. 4:12.
நினைவுபடுத்திப் பார்ப்போமா?
• மணவாழ்வில் யெகோவாவை மையமாக வைப்பதன் அர்த்தம் என்ன?
• பிரச்சினைகள் வரும்போது தம்பதியர் என்ன செய்ய வேண்டும்?
• மணவாழ்வில் கடவுளை மையமாக வைக்கிறோமா இல்லையா என்பதை எவ்வாறு உறுதிசெய்துகொள்ளலாம்?
[பக்கம் 18-ன் படங்கள்]
பிரச்சினைகள் வரும்போது தம்பதியர் சேர்ந்து ஜெபிப்பது உதவியாக இருக்கும்