“இதுவே கடவுளின் மிகவும் பரிசுத்தமான, மகத்தான பெயர்”
கூசாவின் நிக்கலஸ் என்பவர், 1430-ஆம் வருடத்தில் கொடுத்த சொற்பொழிவு ஒன்றில் கூறிய வார்த்தைகளே இவை.a அவரை, ‘பலதுறை மன்னன்’ என்று அழைத்தால் அது மிகையாகாது; ஏனெனில், கிரேக்கு, எபிரெயு, தத்துவம், இறையியல், கணிதம், வானவியல் போன்ற பல துறைகளில் அவர் வல்லவராகத் திகழ்ந்தார். அவர், 22 வயதிலேயே ரோமன் கத்தோலிக்க திருமறைச் சட்டத்தின் முனைவர் ஆனார். 1448-ல் கார்டினலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூசாவின் நிக்கலஸ், சுமார் 550 வருடங்களுக்கு முன்பு கூஸ் நகரில் முதியோர் இல்லம் ஒன்றை ஆரம்பித்தார். இப்போது பெர்ன்காஸ்டெல்-கூஸ் என்றழைக்கப்படும் அந்நகரம், ஜெர்மனியிலுள்ள பான் நகரிலிருந்து ஏறக்குறைய 130 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ளது. தற்போது இந்தக் கட்டடத்தில்தான் கூசாவின் நூலகம் உள்ளது. அங்கு 310-க்கும் அதிகமான கையெழுத்துப்பிரதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கோடெக்ஸ் கூசானஸ்-220; நிக்கலஸ் 1430-ல் கொடுத்த சொற்பொழிவு அதில் காணப்படுகிறது. இன் பிரின்சிபியோ இராட் வியெர்பும் (ஆதியிலே வார்த்தை இருந்தது) என்ற அந்தச் சொற்பொழிவில் கூசாவின் நிக்கலஸ், யெகோவா என்ற பெயரின் லத்தீன் வடிவமான ஈயோவா என்பதை உபயோகித்தார்.b கடவுளுடைய பெயரைப் பற்றி 56-ஆம் பக்கம் சொல்வதாவது: “அது கடவுள் தமக்கே சூட்டிக்கொண்ட பெயர். அதுதான் திருநான்கெழுத்து; அதாவது நான்கு எழுத்துக்கள் உள்ள பெயர். . . . இதுவே, கடவுளின் மிகவும் பரிசுத்தமான, மகத்தான பெயர்.” கூசாவின் நிக்கலஸ் சொன்ன இந்தக் கூற்றுகள், எபிரெய வேதாகமத்தின் மூலப் பிரதிகளில் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது என்ற உண்மையை ஆதரிக்கின்றன.—யாத்திராகமம் 6:3.
திருநான்கெழுத்துக்களை “ஈயோவா” என மொழிபெயர்த்திருக்கும் இன்றுள்ள மிகப் பழமையான கையெழுத்துப்பிரதிகளுள், 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இந்த கோடெக்ஸும் ஒன்றாகும். கடவுளுடைய பெயர் பல நூற்றாண்டுகளாகவே, “யெகோவா” என்ற உச்சரிப்பிற்கு இணையாகப் பல்வேறு விதங்களில் மொழிபெயர்க்கப்பட்டது என்பதற்கு இந்தக் கையெழுத்துப்பிரதி கூடுதலான அத்தாட்சி அளிக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a கூசாவின் நிக்கலஸ் பல்வேறு பெயர்களால் அறியப்பட்டார்; அவையாவன: நிக்கலஸ் கிரேஃப்ட்ஸ் (கிரேப்ஸ்), நீகோலாவுஸ் கூசானூஸ், நிக்கலஸ் வான் கூஸ். ஜெர்மனியில் அவர் பிறந்த நகரின் பெயர் கூஸ்.
b இது திரித்துவத்தை ஆதரித்துக் கொடுக்கப்பட்ட சொற்பொழிவாகும்.
[பக்கம் 16-ன் படம்]
கூசாவின் நூலகம்