கடவுளுடைய சக்திக்கு ஏற்ப நடங்கள், அர்ப்பணிப்புக்கு இசைய வாழுங்கள்
“கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருங்கள், அப்போது எந்தவொரு பாவ இச்சையையும் நிறைவேற்ற மாட்டீர்கள்.”—கலா. 5:16.
1. பெந்தெகொஸ்தே தினத்தன்று எந்த இரண்டு வகையான ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது?
வருடம் கி.பி. 33. பெந்தெகொஸ்தே தினம். இயேசுவின் சீடர்கள் கடவுளுடைய சக்தியினால் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்போது, அவர்கள் வேற்று மொழிகளில் பேசினார்கள். இந்த அற்புத வரத்தை கடவுளுடைய சக்தியே அவர்களுக்கு அருளியது. (1 கொ. 12:4-10) இந்த வரத்தினாலும், அப்போஸ்தலன் பேதுரு ஆற்றிய சொற்பொழிவினாலும் கிடைத்த பலன் என்ன? அநேகருடைய ‘உள்ளம் துளைக்கப்பட்டது.’ பேதுரு அளித்த ஊக்கத்தினால், அவர்கள் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றார்கள். “அவர் சொன்னதை மனதார ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்; அன்று சுமார் மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்” என்று பைபிள் பதிவு காட்டுகிறது. (அப். 2:22, 36-41) இயேசு கற்றுக்கொடுத்ததற்கு இசைவாக, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலுமே தண்ணீர் ஞானஸ்நானத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.—மத். 28:19.
2, 3. (அ) கடவுளுடைய சக்தியினால் ஞானஸ்நானம் பெறுவதற்கும் கடவுளுடைய சக்தியின் “பெயரில்” ஞானஸ்நானம் பெறுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்கவும். (ஆ) இன்று உண்மைக் கிறிஸ்தவர்களாய் ஆகிற எல்லாரும் ஏன் தண்ணீர் ஞானஸ்நானம் பெற வேண்டும்?
2 கடவுளுடைய சக்தியினால் ஞானஸ்நானம் பெறுவதற்கும் கடவுளுடைய சக்தியின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவதற்கும் இடையே வித்தியாசம் உள்ளதா? ஆம். கடவுளுடைய சக்தியினால் ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் அந்தச் சக்தியினால் கடவுளுடைய மகன்களாக மறுபடியும் பிறக்கிறார்கள். (யோவா. 3:3) அதோடு, பரலோக அரசாங்கத்தில் இயேசுவுடன்கூட ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்வதற்கு நியமிக்கப்படுகிறார்கள்; கிறிஸ்துவுடைய ஆன்மீக உடலின் பாகமாக இருக்கிறார்கள். (1 கொ. 12:13; கலா. 3:27; வெளி. 20:6) பெந்தெகொஸ்தே தினத்தன்றும் சரி அதற்குப் பின்பும் சரி, கிறிஸ்துவின் சக வாரிசுகளாய் ஆகப்போகிற ஆட்களைத் தேர்ந்தெடுத்தபோது யெகோவா இந்த ஞானஸ்நானத்தையே அளித்தார். (ரோ. 8:15-17) ஆனால், கடவுளுடைய சக்தியின் பெயரில் கொடுக்கப்படுகிற ஞானஸ்நானத்தை, அதாவது, இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளில் கொடுக்கப்படுகிற ஞானஸ்நானத்தை, பற்றி என்ன சொல்லலாம்?
3 தண்ணீர் ஞானஸ்நானம் என்பது உண்மைக் கிறிஸ்தவர்கள் யெகோவா தேவனுக்குத் தங்களை மனப்பூர்வமாய் அர்ப்பணித்திருப்பதை அடையாளமாகக் காட்டுகிற ஒரு படியாகும். இந்தப் படியை பரலோக அழைப்பைப் பெற்றவர்கள் எடுத்திருக்கிறார்கள். ஆனால், பூமியில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையுள்ள லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும்கூட இந்தப் படியை எடுப்பது அவசியம். ஒருவர் பரலோக நம்பிக்கையுள்ளவராக இருந்தாலும் சரி பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவராக இருந்தாலும் சரி, கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவது அவசியம். இப்படி ஞானஸ்நானம் பெறுகிறவர்கள், ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருக்க’ வேண்டும். (கலாத்தியர் 5:16-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடப்பதன் மூலம் உங்கள் அர்ப்பணிப்புக்கு இசைய வாழ்கிறீர்களா?
‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருப்பது’ என்றால். . .
4. ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருப்பது’ என்றால் என்ன?
4 ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருப்பது’ என்றால், கடவுளுடைய சக்தி உங்கள்மீது செயல்படுவதற்கும், உங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவதற்கும் அனுமதிப்பதாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அன்றாடக் காரியங்களில் கடவுளுடைய சக்திக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகும். கடவுளுடைய சக்தியின் செல்வாக்கின்கீழ் இருப்பதற்கும் பாவ இச்சையின் செல்வாக்கின்கீழ் இருப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கலாத்தியர் 5-ஆம் அதிகாரம் காட்டுகிறது.—கலாத்தியர் 5:17, 18-ஐ வாசியுங்கள்.
5. கடவுளுடைய சக்தியின் செல்வாக்கின்கீழ் இருப்பது, எப்படிப்பட்ட செயல்களைத் தவிர்க்க உதவும்?
5 “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை, உருவ வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு, பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோபாவேசம், வாக்குவாதம், பிரிவினை, மதப்பிரிவு, பிறரைக் கண்டு வயிறெரிதல், வெறிக்கவெறிக்கக் குடித்தல், குடித்துக் கும்மாளம் போடுதல்” போன்றவை பாவ இச்சைக்குரிய செயல்களில் அடங்கும். (கலா. 5:19-21) நீங்கள் கடவுளுடைய சக்தியின் செல்வாக்கின்கீழ் இருந்தால், பாவ இச்சைக்குரிய அந்தச் செயல்களைச் செய்ய மாட்டீர்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘கடவுளுடைய சக்தியின் உதவியோடு தீய செயல்களையெல்லாம் விட்டொழித்துவிடுவீர்கள்.’ (ரோ. 8:5, 13) அப்படிச் செய்வது, கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களிலேயே சிந்தையாக இருப்பதற்கும், அதன் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது. அதோடு, பாவ இச்சைகளின் பிடியில் சிக்கிக்கொள்ளாதபடி உங்களைக் காக்கிறது.
6. கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படுகிற குணங்களை வெளிக்காட்ட எது அவசியம் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.
6 கடவுளுடைய சக்தி உங்களுக்குள் செயல்படும்போது தெய்வீகக் குணங்களை, ‘கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்களை’ வெளிக்காட்டுவீர்கள். (கலா. 5:22, 23) என்றாலும், இதற்கு உங்கள் பங்கில் முயற்சி அவசியம். உதாரணமாக, ஒரு விவசாயி நிலத்தைப் பண்படுத்தி, விதை விதைக்கிறார். விதை வளருவதற்குத் தண்ணீரும் சூரிய ஒளியும் அவசியம். அவை இல்லையென்றால், விளைச்சலே கிடைக்காது. கடவுளுடைய சக்தியைச் சூரிய ஒளிக்கு ஒப்பிடலாம். அந்தச் சக்தி இருந்தால்தான், தெய்வீகக் குணங்களை நம்மால் வெளிக்காட்ட முடியும். அதேசமயம், அந்த விவசாயி கடினமாக உழைக்காவிட்டாலும்கூட விளைச்சலே கிடைக்காது. (நீதி. 10:4) ஆகவே, உங்கள் இருதயத்தைப் பண்படுத்த எந்தளவு உழைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களால் அந்தத் தெய்வீகக் குணங்களை அதிகமாகவும் சிறப்பாகவும் வெளிக்காட்ட முடியும். ஆகையால், ‘கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு இசைய நடந்து, அது பிறப்பிக்கிற நல்ல குணங்களை வெளிக்காட்டுகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
7. கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்களை வளர்த்துக்கொள்ள படிப்பும் தியானமும் ஏன் மிக முக்கியம்?
7 நல்ல விளைச்சல் பெற, அந்த விவசாயி பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சவும் வேண்டும். கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்களை வளர்த்துக்கொள்ள பைபிள் சத்தியங்களின் தண்ணீர் உங்களுக்குத் தேவை; இந்தத் தண்ணீர் இன்று கிறிஸ்தவ சபைகளில் கிடைக்கிறது. (ஏசா. 55:1) கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் அவருடைய சக்தியினால் அருளப்பட்ட புத்தகம் என்பதை நீங்கள் பலரிடம் சுட்டிக்காட்டி இருப்பீர்கள். (2 தீ. 3:16) பைபிள் சத்தியங்களின் சுத்தமான தண்ணீரை உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் நமக்கு ஏராளமாக அளித்து வருகிறார்கள். (மத். 24:45-47) எனவே, குறிப்பு இதுதான்: நாம் கடவுளுடைய சக்தியின் செல்வாக்கின்கீழ் வர வேண்டுமானால், பைபிளைப் படித்து, தியானிக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், தீர்க்கதரிசிகளின் நல்ல முன்மாதிரியைப் பின்பற்றுகிறீர்கள் என்று அர்த்தம்; அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தகவல்களை “ஊக்கமாகவும் கவனமாகவும் அலசி ஆராய்ந்தார்கள்.” அவர்கள் மட்டுமல்ல, வாக்குறுதி அளிக்கப்பட்ட சந்ததியையும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவ சபையையும் பற்றிய சத்தியங்களைத் தெரிந்துகொள்ள தேவதூதர்களும்கூட மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.—1 பேதுரு 1:10-12-ஐ வாசியுங்கள்.
கடவுளுடைய சக்தி உங்கள்மீது செல்வாக்கு செலுத்துவது எப்படி?
8. யெகோவாவிடம் அவருடைய சக்தியைத் தரும்படி கேட்பது ஏன் முக்கியம்?
8 கடவுளுடைய சக்தியினால் செல்வாக்கு செலுத்தப்படுவதற்கு வெறுமனே பைபிளைப் படித்துத் தியானித்தால் மட்டும் போதாது. யெகோவாவின் உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ‘நாம் கேட்பதையும் நினைப்பதையும்விடப் பல மடங்கு அதிகமாய் எல்லாவற்றையும் செய்ய அவர் வல்லவராயிருக்கிறார்.’ (எபே. 3:20; லூக். 11:13) ஆனால், “‘நான் கேட்பதற்கு முன்னரே எனக்கு என்ன தேவை’ என்பது கடவுளுக்குத் தெரியுமென்றால், நான் ஏன் அவரிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்?” என யாராவது உங்களிடம் கேட்டால் எப்படிப் பதிலளிப்பீர்கள்? (மத். 6:8) அப்படிச் செய்வதன் மூலம் அவர்மீது சார்ந்திருப்பதைக் காட்டுகிறோம் என நீங்கள் சொல்லலாம். உதாரணத்திற்கு, யாராவது உங்களிடம் வந்து உதவி கேட்டால், சந்தோஷமாக அவருக்கு உதவி செய்வீர்கள். ஏன்? உங்கள்மீது நம்பிக்கை வைத்து உங்களிடம் உதவி கேட்டிருக்கிறார் என்பதற்காக அப்படிச் செய்வீர்கள். (நீதிமொழிகள் 3:27-ஐ ஒப்பிடுங்கள்.) அதேபோல், நீங்கள் யெகோவாவிடம் அவருடைய சக்தியைத் தரும்படி கேட்டால் அவர் அதைச் சந்தோஷமாக உங்களுக்குத் தருவார்.—நீதி. 15:8.
9. சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது கடவுளுடைய சக்தியின் செல்வாக்கின்கீழ் வர உங்களுக்கு எப்படி உதவும்?
9 கடவுளுடைய சக்தியின் செல்வாக்கின்கீழ் வருவதற்கு மற்றொரு வழி, சபைக் கூட்டங்களையும் மாநாடுகளையும் உட்படுத்துகிறது. அவற்றில் கலந்துகொண்டு, கூர்ந்து கவனிப்பது மிகவும் முக்கியம். அப்படிச் செய்வது, “கடவுளுடைய ஆழமான காரியங்களை” புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். (1 கொ. 2:10) கூட்டங்களில் தவறாமல் பதில் சொல்வதும் உங்களுக்கு நன்மை அளிக்கும். கடந்த நான்கு வாரங்களாக நீங்கள் கலந்துகொண்ட கூட்டங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். எத்தனை முறை கையை உயர்த்தி, விசுவாசத்தை வெளிக்காட்டும் பதில்களைச் சொன்னீர்கள்? இந்த விஷயத்தில் நீங்கள் முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிறதா? அப்படியென்றால், வரவிருக்கும் வாரங்களில் என்ன செய்யப் போகிறீர்களென இப்போதே தீர்மானியுங்கள். கூட்டங்களில் பங்குகொள்வதற்கு நீங்கள் காட்டும் ஆர்வத்தை யெகோவா பார்ப்பார், அவருடைய சக்தியை உங்களுக்குத் தருவார்; கூட்டங்களிலிருந்து நன்கு பயனடைய அது உங்களுக்கு உதவும்.
10. கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருக்க நாம் எந்த அழைப்பை மற்றவர்களிடம் விடுக்க வேண்டும்?
10 கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருப்பதில் வெளிப்படுத்துதல் 22:17-லுள்ள அழைப்பை ஏற்றுக்கொள்வதும் உட்படுகிறது. அங்கே நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “‘வருக, வருக!’ என்று கடவுளுடைய சக்தி அழைத்துக்கொண்டே இருக்கிறது, மணமகளும் அவ்வாறே அழைக்கிறாள். கேட்கிற எவனும் ‘வருக, வருக!’ என்று அழைக்கட்டும்; தாகமாயிருக்கிற எவனும் வரட்டும்; விருப்பமுள்ள எவனும் வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளட்டும்.” பரலோக நம்பிக்கையுள்ள மணமகள் வகுப்பார் வாயிலாகச் செயல்படும் கடவுளுடைய சக்தி, வாழ்வளிக்கும் தண்ணீரை வாங்கிக்கொள்ளும்படி அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறது. “வருக, வருக!” என்ற அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தால், மற்றவர்களிடம் அந்த அழைப்பை விடுப்பதற்குத் தீர்மானமாய் இருக்கிறீர்களா? உயிர்காக்கும் இந்த வேலையில் பங்குகொள்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
11, 12. கடவுளுடைய சக்தி பிரசங்க வேலையை எவ்வாறு வழிநடத்துகிறது?
11 அதிமுக்கியமான இந்த வேலை கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலில் இன்று செய்யப்பட்டு வருகிறது. புதிய பிராந்தியங்களில் ஊழியம் செய்ய முதல் நூற்றாண்டு மிஷனரிகளைக் கடவுளுடைய சக்தி எப்படி வழிநடத்தியதென்று வாசித்திருப்பீர்கள். அப்போஸ்தலன் பவுலும் அவருடைய தோழர்களும், ‘ஆசிய மாகாணத்தில் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்காதபடி கடவுளுடைய சக்தியினால் தடுக்கப்பட்டார்கள்.’ அதன்பின், பித்தினியாவுக்குள்ளும் அவர்களால் போக முடியவில்லை. இந்த இடங்களுக்குப் போகாதபடி கடவுளுடைய சக்தி எப்படி அவர்களைத் தடுத்தது என்று நமக்குச் சரியாகத் தெரியாது; என்றாலும், பரந்துவிரிந்த ஐரோப்பாவுக்குச் செல்லும்படி கடவுளுடைய சக்தி பவுலை வழிநடத்தியது. மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒருவன் வந்து உதவிகேட்டுக் கெஞ்சுவதாக அவர் தரிசனம் கண்டார்.—அப். 16:6-10.
12 இன்றும்கூட, உலகம் முழுவதும் நடைபெறுகிற பிரசங்க வேலையைக் கடவுளுடைய சக்தி வழிநடத்திவருகிறது. யெகோவா இன்று அற்புத தரிசனங்களைக் கொடுக்காவிட்டாலும், பரலோக நம்பிக்கையுள்ளோரைத் தம்முடைய சக்தியினால் வழிநடத்துகிறார். பிரசங்கிக்கும் வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் முழுமூச்சாக ஈடுபட அந்தச் சக்தியே நம் சகோதர சகோதரிகளைத் தூண்டுகிறது. இந்த அதிமுக்கியமான வேலையில் நீங்களும் பங்குகொள்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்படியானால், உற்சாகமூட்டும் இந்த வேலையில் உங்களால் இன்னுமதிக சந்தோஷத்தைக் காண முடியுமா?
13. கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு நீங்கள் எப்படிக் கட்டுப்பட்டு நடக்கலாம்? உதாரணம் தருக.
13 கடவுளுடைய அமைப்பு தருகிற ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்குக் கட்டுப்பட்டு நடக்க முடியும். ஜப்பானிலுள்ள இளம் பெண் மிஹாகோவின் அனுபவத்தைக் கவனியுங்கள். பயனியர் ஊழியத்தை அவள் அப்போதுதான் தொடங்கியிருந்தாள்; அதனால், மறுசந்திப்பு செய்யத் தனக்கு அந்தளவு திறமையில்லை என நினைத்தாள். வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் தனக்குப் பேசத் தெரியவில்லை எனக் கவலைப்பட்டாள். அந்தச் சமயத்தில் வெளிவந்த நம் ராஜ்ய ஊழியத்தில் சுருக்கமான மறுசந்திப்புகளை எப்படிச் செய்வது என்பதற்கான நடைமுறை ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருந்தன. திருப்தியான வாழ்க்கைக்கு வழி என்ற சிற்றேடும் பின்பு வெளிவந்தது. ஜப்பானிய பிராந்தியத்தில் இது மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. இந்தச் சிற்றேட்டை எப்படிப் பயன்படுத்துவதென்று, முக்கியமாக, அதை வைத்து எப்படிச் சுருக்கமான மறுசந்திப்பு செய்வதென்று நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை அவள் பின்பற்றினாள். முன்பு தன்னால் பைபிள் படிப்பைத் தொடங்க முடியாத ஆட்களிடம் சீக்கிரத்திலேயே பைபிள் படிப்பைத் தொடங்கினாள். “எனக்கு எக்கச்சக்கமான பைபிள் படிப்புகள் இருந்தன, ஒரே சமயத்தில் 12-க்கும் அதிகமாக இருந்தன; தங்களுக்கு பைபிள் படிப்பை நடத்துமாறு கேட்ட சிலரிடம் காத்திருக்கும்படி சொல்ல வேண்டியிருந்தது” என்று அவள் கூறுகிறாள். எனவே, நீங்கள் யெகோவாவுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு ஏற்ப நடந்து, அவருடைய அமைப்பு கொடுக்கிற ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால், ஏராளமாக அறுவடை செய்வீர்கள்.
கடவுளுடைய சக்தியின்மீது சார்ந்திருங்கள்
14, 15. (அ) அபூரண மனிதர்கள் தங்களுடைய அர்ப்பணிப்புக்கு இசைவாக வாழ என்ன செய்ய வேண்டும்? (ஆ) மிகச் சிறந்த நண்பர்களை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்?
14 யெகோவாவினால் நியமிக்கப்பட்ட ஊழியர்களான உங்களுக்கு, ஊழியம் செய்கிற பொறுப்பு இருக்கிறது. (ரோ. 10:14) இந்தப் பொறுப்பை நிறைவேற்ற ஒருவேளை நீங்கள் தகுதியற்றவராக உணரலாம். ஆனால், பரலோக நம்பிக்கையுள்ளோரைப் போலவே, உங்களையும் ஊழியத்திற்குத் தகுதியானவராக ஆக்குவது கடவுளே. (2 கொரிந்தியர் 3:5-ஐ வாசியுங்கள்.) உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்வதன் மூலமும், கடவுளுடைய சக்தியின்மீது சார்ந்திருப்பதன் மூலமும் உங்கள் அர்ப்பணிப்புக்கு இசைவாக நீங்கள் வாழ முடியும்.
15 நம் கடவுளாகிய யெகோவா பரிபூரணர், நாமோ அபூரணர்; எனவே, நம்முடைய அர்ப்பணிப்புக்கு இசைய வாழ்வது சுலபமில்லைதான். முன்பு உங்கள் நண்பர்களாயிருந்த சிலர் உங்களுடைய புதிய வாழ்க்கை முறையைப் பார்த்து திகைப்படைந்து, ‘உங்களைப் பழித்துப் பேசலாம்.’ (1 பே. 4:4) என்றாலும், இப்போது உங்களுக்குப் புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்; மிக முக்கியமாக, யெகோவாவும் இயேசுவும் உங்கள் நண்பர்களாய் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். (யாக்கோபு 2:21-23-ஐ வாசியுங்கள்.) உங்கள் சபையிலுள்ள சகோதர சகோதரிகளிடம் நன்கு பரிச்சயமாவது முக்கியம்; இவர்கள் உலகம் முழுவதுமுள்ள ‘சகோதர’ கூட்டத்தின் பாகமாக இருக்கிறார்கள். (1 பே. 2:17; நீதி. 17:17) உங்கள்மீது நல்ல செல்வாக்கு செலுத்துகிற நண்பர்கள் கிடைப்பதற்கு யெகோவா தமது சக்தியின் மூலம் உங்களுக்கு உதவுவார்.
16. பவுலைப் போல் நீங்களும் ஏன் ‘பலவீனங்களில் பெருமகிழ்ச்சி அடையலாம்’?
16 சபையில் உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தாலும்கூட, அன்றாடப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் நீங்கள் ஒருவேளை திணறலாம். அடுத்தடுத்து பிரச்சினைகள் வரும்போது நீங்கள் ரொம்பவே தளர்ந்துவிடலாம். அந்தச் சமயத்தில்தான் நீங்கள் முக்கியமாக யெகோவாவின் சக்தியைக் கேட்டு அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும். “நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 4:7-10; 12:10-ஐ வாசியுங்கள்.) மனிதர்களுடைய பலவீனங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் கடவுளுடைய சக்தி அதையெல்லாம் ஈடுகட்டிவிடும் என்பதை பவுல் அறிந்திருந்தார். எனவே, நீங்கள் பலவீனமாக உணரும்போதும், உதவி கிடைக்காதா என ஏங்கும்போதும் கடவுளுடைய சக்தி உங்களைப் பலப்படுத்தும். அதனால்தான், ‘எனக்கு ஏற்பட்டிருக்கிற பலவீனங்களில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பவுல் எழுதினார். பலவீனமாக இருந்த சமயத்தில் கடவுளுடைய சக்தி தனக்குள் செயல்படுவதை அவர் உணர்ந்தார். நீங்களும்கூட அதேபோல் உணரலாம்!—ரோ. 15:13.
17. நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய கடவுளுடைய சக்தி எப்படி வழிநடத்தும்?
17 கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்ததற்கு இசைவாக வாழ அவருடைய சக்தி நமக்குத் தேவை. ஒரு பாய்மரக் கப்பலின் தலைவனாக உங்களைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தைப் பத்திரமாய்ச் சென்றடைவதற்காக, காற்று எந்தத் திசையில் வீசுகிறதோ அந்தத் திசையிலேயே பயணம் செய்ய விரும்புகிறீர்கள். புயல்காற்றினால் இங்குமங்கும் அடித்துச் செல்லப்பட விரும்புவதில்லை. (1 கொ. 2:12) அப்படியானால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? காற்று எந்தத் திசையில் வீசுகிறதோ அந்தத் திசையை அடையாளம் கண்டுகொண்டு, அந்தத் திசையிலேயே பயணிக்க வேண்டும். அவ்வாறே, யெகோவாவுக்கு என்றென்றும் சேவை செய்வது வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்புகிற இலக்கு. அந்த இலக்கை அடைய வேண்டுமானால், சாத்தானுடைய உலகத்தின் சிந்தை எனும் புயல்காற்றினால் நாம் இங்குமங்கும் அடித்துச் செல்லப்படக் கூடாது. கடவுளுடைய சக்தி எனும் பூங்காற்றை அடையாளம் கண்டுகொண்டு, அது வழிநடத்துகிற திசையிலேயே போக வேண்டும். கடவுளுடைய வார்த்தையின் மூலமும், அவருடைய அமைப்பின் மூலமும் அந்தச் சக்தி நம்மைச் சரியான திசையில் வழிநடத்தும்.
18. என்ன செய்ய இப்போது தீர்மானமாயிருக்கிறீர்கள், ஏன்?
18 நீங்கள் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்துக்கொண்டு, ஆன்மீகத் தோழமையை அனுபவித்துக்கொண்டு இருந்தாலும், அர்ப்பணித்தல், ஞானஸ்நானம் போன்ற முக்கியமான படிகளை இன்னும் எடுக்காமல் இருந்தால், ‘நான் ஏன் தயங்குகிறேன்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இன்று யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுவதில் அவருடைய சக்தி வகிக்கும் பங்கை நீங்கள் புரிந்துகொண்டால், அது செயல்படும் விதத்தை மதித்துணர்ந்தால், அந்த முக்கியமான படிகளை உடனடியாக எடுங்கள். யெகோவா உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார். தம்முடைய சக்தியை உங்களுக்குத் தாராளமாகக் கொடுப்பார். நீங்கள் பல வருடங்களுக்கு முன்பே ஞானஸ்நானம் பெற்றிருந்தால், கடவுளுடைய சக்தி உங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்திவருவதை உணர்ந்திருப்பீர்கள். கடவுள் தம்முடைய சக்தியின் மூலம் உங்களை எப்படிப் பலப்படுத்துகிறார் என்பதைக் கண்டும் உணர்ந்தும் இருப்பீர்கள். இதே உணர்வு இன்றும் என்றும் உங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கலாம். எனவே, கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டே இருக்கத் தீர்மானமாயிருங்கள்.
நினைவிருக்கிறதா?
• ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருப்பது’ என்றால் என்ன?
• ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருக்க’ எது உங்களுக்கு உதவும்?
• உங்கள் அர்ப்பணிப்புக்கு இசைவாக நீங்கள் எப்படி வாழலாம்?
[பக்கம் 15-ன் படம்]
உங்கள் இருதயத்தைப் பண்படுத்த முயற்சி தேவை
[பக்கம் 17-ன் படங்கள்]
கடவுளுடைய சக்தி உங்கள்மீது செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறீர்களா?