உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• மேசியா ஏன் சாக வேண்டியிருந்தது?
கடும் சோதனைகளுக்கு ஆளானாலும் பரிபூரண மனிதனால் தொடர்ந்து ‘தேவபக்தியை’ வெளிக்காட்ட முடியும் என்பதை இயேசுவின் மரணம் நிரூபித்தது. அதோடு, ஆதாமினால் வந்த பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்களை விடுவிப்பதற்குச் செலுத்தப்பட்ட விலையாய் அது இருந்தது, எல்லாரையும் முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்தியது.—12/15, பக்கங்கள் 22-23.
• பிள்ளைகளோடு அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்பு கொள்வதில் என்ன உட்பட்டிருக்கிறது?
பிள்ளைகளிடம் பேசுவது மட்டுமே நல்ல பேச்சுத்தொடர்பு என்று சொல்லிவிட முடியாது. கேள்விகள் கேட்பதும், அவர்கள் சொல்கிற பதில்களைக் காதுகொடுத்துக் கேட்பதும்கூட அவசியம். அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்புக்கு, சாப்பாட்டு நேரம் மிகச் சிறந்த நேரம் என்பதை அநேக குடும்பங்கள் அனுபவத்தில் கண்டிருக்கின்றன.—1/15, பக்கங்கள் 18-19.
• ஞானஸ்நானம் பெற்ற ஒருவர் எந்தச் சமயங்களில் மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்கலாம்?
ஞானஸ்நானம் பெற்ற சமயத்தில், ஒரு நபர் ரகசியமாக ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கலாம் அல்லது ஏதாவது கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு வந்திருக்கலாம். (ஒருவேளை ஞானஸ்நானம் பெற்ற பிறகு அவர் அப்படி நடந்திருந்தால் நிச்சயம் சபைநீக்கம் செய்யப்பட்டிருப்பார்.) எனவே, அவர் மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்கலாம்.—2/15, பக்கம் 22.
• கோதுமை, களைகள் பற்றிய இயேசுவின் உவமையில், நல்ல விதை விதைக்கப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது?
மனிதகுமாரனாகிய இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது தம் வயலைப் பண்படுத்தினார். கி.பி. 33-ஆம் ஆண்டு, பெந்தெகொஸ்தே தினத்திலிருந்து கிறிஸ்தவர்களைக் கடவுளுடைய பிள்ளைகளாக அபிஷேகம் செய்தபோது அவர் நல்ல விதையை விதைக்க ஆரம்பித்தார்.—3/15, பக்கம் 20.
• அடையாளப்பூர்வ கோதுமை மணிகள் யெகோவாவின் களஞ்சியத்திற்குள் எப்படிக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன? (மத். 13:30)
அடையாளப்பூர்வ கோதுமை மணிகள் யெகோவாவின் களஞ்சியத்திற்குள் கொண்டுவரப்படுவது இந்தச் சகாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு நீடித்து வந்திருக்கிறது. அறுவடை செய்யப்பட்ட கோதுமை மணிகளாகிய பரலோக நம்பிக்கையுள்ளோர், ஒழுங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்குள் கொண்டுவரப்பட்டு, கடவுளுடைய தயவையும் பாதுகாப்பையும் அனுபவித்து வந்திருக்கிறார்கள்; இறந்துபோனவர்கள் பரலோக வாழ்க்கையைப் பரிசாகப் பெற்றுவந்திருக்கிறார்கள்.—3/15, பக்கம் 22.