உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w10 5/15 பக். 6-7
  • முதியோர்—மதிப்புக்குரியோர்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முதியோர்—மதிப்புக்குரியோர்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • இதே தகவல்
  • முதியவர்களை எவ்வாறு நடத்த வேண்டும்?
    விழித்தெழு!—2004
  • கிறிஸ்தவக் குடும்பம் வயதானவர்களுக்கு உதவுகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • வயதான ஊழியர்களை யெகோவா அன்போடு கவனித்துக்கொள்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • வயதானவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
w10 5/15 பக். 6-7

முதியோர்—மதிப்புக்குரியோர்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம்.. கடற்கரை ஓரம்.. அடர்ந்த மரங்கள்.. ஒரு மரத்திற்கு மட்டும் தனி மரியாதை.. அதன் பெயர் லோன் சைப்ரஸ்.. அதற்கு வயது 250-க்கும் மேல்.. கணக்கிலடங்கா சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய காமிராக்களில் ‘க்ளிக்’ செய்கிற மரம் அது! வெயிலையும் புயலையும் மழையையும் தாக்குப்பிடித்து இத்தனை வருடங்களாக நிலைத்து நிற்கிற மரம் அது! அந்த அழகிய மரம், பல்வேறு வழிகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்குப் பக்கபலமாக இருக்கும்படி, அதன் அடிப்பாகம் கம்பிவைத்துக் கட்டப்பட்டு வலுவூட்டப்பட்டிருக்கிறது, அதைச் சுற்றிலும் கற்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. என்னே ஒரு பந்தோபஸ்து!

இந்த மரத்தைப் பார்க்கும்போது யாருடைய ஞாபகம் வருகிறது? பல்வேறு சவால்களைத் தாக்குப்பிடித்து, பல வருடங்கள் உறுதியாய் நிலைத்திருக்கிற கிறிஸ்தவ முதியோரின் ஞாபகம்தான் வருகிறது. நற்செய்தியை அறிவிக்கும் வேலையில் வருடக்கணக்காக அவர்கள் நிலைத்திருக்கிறார்கள். கடைசி நாட்களில், ‘முதியவர்கள்’ பைபிளிலுள்ள நற்செய்தியை அறிவிப்பார்கள் என யோவேல் தீர்க்கதரிசி முன்னுரைத்தார். (யோவே. 2:28-32; அப். 2:16-21) சற்று யோசித்துப் பாருங்கள்: ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ அறிவிப்பதில் அவர்கள் அதிகளவு நேரம் செலவிடுகிறார்கள்! (மத். 24:14) இவர்களில் சிலர் வருடக்கணக்காகத் துன்புறுத்தல்களையும் கஷ்டங்களையும் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறார்கள். பல வருடங்கள் தாக்குப்பிடித்து நிற்கிற சைப்ரஸ் மரம் உயர்வாய் மதிக்கப்பட்டு அதற்கு இந்தளவு பந்தோபஸ்து கொடுக்கப்படுகிறது என்றால், நமது முதியோர் இன்னும் எந்தளவு உயர்வாய் மதிக்கப்பட வேண்டும், ஆழ்ந்த மரியாதை காட்டப்பட வேண்டும்!

பூர்வ காலத்தில் வாழ்ந்த தம்முடைய மக்களிடம் யெகோவா கட்டளையிட்டதாவது: “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக.” (லேவி. 19:32) நவீனகால யெகோவாவின் ஊழியர்கள் மத்தியில், பல பத்தாண்டுகளாக ‘கடவுளோடு நடந்துவந்திருக்கிற’ உண்மையுள்ளோரின் மிகச் சிறந்த உதாரணங்களை நாம் காண்கிறோம். (மீ. 6:8) பைபிள் நியமங்களை அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால் அவர்களுடைய நரைமயிரானது ‘மகிமையான கிரீடமாக’ இருப்பது நிச்சயம்!—நீதி. 16:31.

இளம் தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவுரை கொடுத்தார்: ‘வயதான ஆண்களிடம் கடுமையாகப் பேசாதே. அவர்களைத் தகப்பன்கள் போலவும்,’ ‘வயதான பெண்களைத் தாய்கள் போலவும் கருதி அன்புடன் நடத்து.’ (1 தீ. 5:1, 2) ஆம், நரைத்தவனுக்கு முன்பாக தீமோத்தேயு ‘எழுந்து நிற்க’ வேண்டியிருந்தது. அப்படியானால், நாமும் முதியவர்களிடம் மதிப்பு மரியாதையோடு பேசும்படி யெகோவா எதிர்பார்க்கிறார் என்பது தெளிவு.

“ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்” என்று ரோமர் 12:10 சொல்கிறது. சபைக் கண்காணிகள் வயது முதிர்ந்த கிறிஸ்தவர்களுக்கு நிச்சயமாகவே மதிப்புக் கொடுக்கிறார்கள். என்றாலும், நாம் எல்லாருமே ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுக்க வேண்டியது அவசியம்.

பெற்றோரையும் தாத்தா-பாட்டிகளையும் கவனிக்க வேண்டிய விசேஷப் பொறுப்பு குடும்ப அங்கத்தினர்களுக்கு இருக்கிறது. லோன் சைப்ரஸ் மரத்தை மக்கள் பல்வேறு வழிகளில் காப்பாற்றிப் பராமரித்திருக்கிறார்கள், பராமரித்தும் வருகிறார்கள். அப்படியானால், வயதாகி வரும் பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டிகளின் மதிப்பு மரியாதையைப் பல்வேறு வழிகளில் காப்பாற்ற வேண்டியது எவ்வளவு அவசியம்! உதாரணமாக, அவர்களுடைய உணர்வுகளுக்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும்; எப்படி? நம்முடைய விருப்பப்படி நடக்க அவர்களைக் கட்டாயப்படுத்தாமல், அவர்களுடைய விருப்பம் எதுவென்று கேட்டு, அதன்படி செய்ய வேண்டும்.—நீதி. 23:22; 1 தீ. 5:4.

நம் மத்தியில் இருக்கிற முதியவர்கள் உண்மைக் கடவுளான யெகோவாவின் கண்களுக்கு மாணிக்கக் கற்கள். அவர்களை அவர் கைவிடவே மாட்டார். (சங். 71:18) சொல்லப்போனால், உண்மையோடு சேவை செய்ய அவர்களுக்கு வலுவூட்டுகிறார். நாமும்கூட முதியவர்களுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களுக்கு மதிப்புக் கொடுப்போமாக!

[பக்கம் 7-ன் படங்கள்]

லோன் சைப்ரஸ் மரத்திற்குப் பாதுகாப்பும் பராமரிப்பும் அவசியம்; முதியோருக்கு மதிப்பும் மரியாதையும் அவசியம்

[படத்திற்கான நன்றி]

American Spirit Images/age fotostock

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்