கடவுளுடைய மக்கள் மத்தியில் பாதுகாப்பைக் கண்டடையுங்கள்
“மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்.”—சங். 35:18.
1-3. (அ) கிறிஸ்தவர்கள் சிலர் எப்படி ஆன்மீக ரீதியில் ஆபத்தான சூழ்நிலையில் அகப்பட்டுக்கொள்கிறார்கள்? (ஆ) கடவுளுடைய மக்கள் எங்கே பாதுகாப்பைக் கண்டடையலாம்?
ஜோவுக்கும் அவருடைய மனைவிக்கும் அது விடுமுறை சமயம். பவளப் பாறைகள் நிறைந்த இடம் பார்த்து நீருக்கடியில் நீந்திக்கொண்டிருந்தார்கள்; குட்டி குட்டி மீன்களும் பெரிய பெரிய மீன்களும் வண்ண வண்ண மீன்களும் வலம் வந்ததை ரசித்தபடியே நீந்தினார்கள். இன்னும் ஆழத்தில் பவளப் பாறைகளின் அழகைப் பருகுவதற்காகச் சற்றுத் தூரம் தள்ளிச் சென்றார்கள். அப்படியே நீந்தி நீந்தி, திடீரென்று ஆழ்கடலுக்குள் சென்றுவிட்டார்கள். ஜோவின் மனைவி அவரைப் பார்த்து, “ரொம்ப தூரம் வந்துவிட்டோமோ?” என்று கேட்டார். “ஏன் பயப்படுகிறாய்? ஒன்றும் ஆகாது!” என்று ஜோ பதிலளித்தார். அதற்குப் பின்பு கொஞ்ச நேரத்திற்குள், ‘எங்கே ஒரு மீனையும் காணவில்லை?’ என்று அவர் யோசிக்க யோசிக்கவே, ஆழ்கடலிலிருந்து ஒரு சுறா மீன் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு அவரை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது. அவர் அப்படியே ஆடிப்போய்விட்டார்! ‘அவ்வளவுதான், தீர்ந்தோம்’ என்று நினைத்தார். அவருக்கும் அந்தச் சுறா மீனுக்கும் இடையே சில அடி தூரமே இருந்தது; ஆனால், சட்டென்று அந்தச் சுறா மீன் வேறு பக்கம் திரும்பி நீருக்கடியில் மறைந்துவிட்டது.
2 சாத்தானுடைய இந்த உலகத்தின் கவர்ச்சிகளால், அதாவது பொழுதுபோக்கு, வேலை, உடமைகள் போன்ற கவர்ச்சிகளால், ஒரு கிறிஸ்தவர் மயங்கிவிடும்போது அவரை அறியாமலேயே ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறார். மூப்பராகச் சேவை செய்யும் ஜோ இப்படிச் சொல்கிறார்: “சகவாசத்தைப் பற்றி யோசித்துப் பார்க்க இந்த அனுபவம் என்னைத் தூண்டியது. பாதுகாப்பான, ரம்மியமான இடத்தில் ‘நீந்துங்கள்’; சபைக்குள்ளேயே இருங்கள்!” ஆம், ஆழ்கடலுக்குள் சென்றுவிடாதீர்கள்; அப்படிச் சென்றால், சபையைவிட்டே தொலைதூரம் போய்விடுவீர்கள், ஆபத்தில் அகப்பட்டுக்கொள்வீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருப்பதாகத் தெரிந்தால் பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக வந்துவிடுங்கள். இல்லையென்றால், ஆன்மீக ரீதியில் நீங்கள் ‘விழுங்கப்பட்டுவிடலாம்.’
3 இன்றைய உலகம் கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தான இடமாக இருக்கிறது. (2 தீ. 3:1-5) தனக்கு இன்னும் கொஞ்சக் காலமே இருக்கிறதென்று சாத்தானுக்குத் தெரியும்; அஜாக்கிரதையாக இருக்கிறவர்களை விழுங்குவதற்கு அவன் அலைந்து திரிகிறான். (1 பே. 5:8; வெளி. 12:12, 17) என்றாலும், யெகோவா தம்முடைய மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக ஆன்மீகப் புகலிடத்தை, அதாவது கிறிஸ்தவச் சபையை, ஏற்பாடு செய்திருக்கிறார்.
4, 5. அநேகர் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி எப்படி உணருகிறார்கள், ஏன்?
4 உடல் ரீதியிலும் சரி உணர்ச்சி ரீதியிலும் சரி, இந்த உலகம் ஓரளவுக்குத்தான் பாதுகாப்பை அளிக்கிறது. குற்றச்செயல்கள், வன்முறைச் சம்பவங்கள், விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், அநேகர் தங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லையென நினைக்கிறார்கள். வயோதிகமும், வியாதியும் யாரையுமே விட்டுவைப்பதில்லை. வேலை, வீடு, போதிய பணவசதி, ஓரளவு உடல் ஆரோக்கியம் உள்ள மற்றவர்களும்கூட ‘இதெல்லாம் எவ்வளவு காலம் நீடிக்குமோ!’ என்று பயப்படுகிறார்கள்.
5 இன்னும் பலருக்கு உணர்ச்சி ரீதியிலான பாதுகாப்பு எட்டாக் கனியாகவே இருக்கிறது. வருத்தகரமாக, இல்லற வாழ்வில் சமாதானமும் மனநிறைவும் கிடைக்குமென்று காத்திருந்த அநேகரது ஆசை நிராசையாகியிருக்கிறது. ஆன்மீக ரீதியிலான பாதுகாப்பு கிடைக்காததை, அதாவது மதத் தலைவர்களிடமிருந்து சரியான வழிகாட்டுதல் கிடைக்காததை, எண்ணி சர்ச் அங்கத்தினர்கள் பலரும் குழம்பித் தவிக்கிறார்கள். அவர்களுடைய மதத் தலைவர்களின் ஒழுக்கக்கேடான நடத்தையையும் பைபிளுக்கு முரணான போதனைகளையும் கண்டே அவர்கள் இப்படித் தவிக்கிறார்கள். ஆகவே, அநேகர் வேறு வழியின்றி அறிவியல்மீது நம்பிக்கை வைக்கிறார்கள், அல்லது தங்களுடைய சக மனிதர்கள் நல்லெண்ணத்தோடு, நல்லதையே செய்வார்கள் என நினைத்து அவர்கள்மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அதனால், இந்த உலகத்திலுள்ளவர்கள் பாதுகாப்பே இல்லாததுபோல் உணருகிறார்கள்; எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டாம் என்ற முடிவுக்கும் வருகிறார்கள்.
6, 7. (அ) கிறிஸ்தவச் சபையாரின் கண்ணோட்டமும் உலகத்தாரின் கண்ணோட்டமும் வித்தியாசப்படுவதற்குக் காரணம் என்ன? (ஆ) நாம் எதைச் சிந்தித்துப் பார்ப்போம்?
6 கிறிஸ்தவச் சபையாரின் கண்ணோட்டத்திற்கும் உலகத்தாரின் கண்ணோட்டத்திற்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்! நாம் யெகோவாவின் மக்களாக இருந்தாலும் மற்றவர்களைப் போலவே நமக்கும் பிரச்சினைகளும் கஷ்டங்களும் வருகின்றன. என்றாலும், அவற்றை நாம் எதிர்கொள்கிற விதம் வித்தியாசப்படுகிறது. (ஏசாயா 65:13, 14-ஐயும் மல்கியா 3:18-ஐயும் வாசியுங்கள்.) ஏன்? ஏனென்றால், இந்த உலகம் இவ்வளவு மோசமாக இருப்பதற்கான காரணத்தை பைபிளிலிருந்து நாம் தெளிவாக அறிந்திருக்கிறோம்; அதோடு, பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான வழியையும் அறிந்திருக்கிறோம். இதனால், எதிர்காலத்தை நினைத்து நாம் அளவுக்குமீறி கவலைப்படுவதில்லை. யெகோவாவின் வணக்கத்தாராகிய நாம் தவறான சிந்தனைகள், பைபிளுக்கு முரணான கருத்துகள், ஒழுக்கக்கேடான பழக்கங்கள், அவற்றால் வருகிற தீய விளைவுகள் ஆகியவற்றிலிருந்தெல்லாம் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். எனவே, கிறிஸ்தவச் சபையிலுள்ள நாம் ஒருவித மன அமைதியைப் பெற்றிருக்கிறோம்; இதை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.—ஏசா. 48:17, 18; பிலி. 4:6, 7.
7 இந்த உலகத்தாருக்குக் கிடைக்காத பாதுகாப்பு யெகோவாவின் மக்களுக்குக் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பைபிளிலுள்ள சில உதாரணங்கள் நமக்கு உதவும். நம்முடைய சிந்தனைகளையும் பழக்கவழக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்க அவை நம்மைத் தூண்டும்; அதோடு, நம்மைப் பாதுகாப்பதற்காகக் கடவுள் தந்திருக்கிற அறிவுரைகளை இன்னும் முழுமையாகக் கடைப்பிடிக்கவும் தூண்டும்.—ஏசா. 30:21.
‘என் கால்கள் தள்ளாடுதலுக்குச் சற்றே தப்பிற்று’
8. யெகோவாவின் மக்கள் காலங்காலமாய் எப்படி நடந்துகொள்ள வேண்டியிருந்திருக்கிறது?
8 மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே, யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவருக்குச் சேவை செய்து வந்தவர்கள் அப்படிச் செய்யாதவர்களோடு நெருங்கிய தோழமை கொள்ளவில்லை. தம்முடைய வணக்கத்தாருக்கும் சாத்தானைப் பின்பற்றுவோருக்கும் இடையே பகைமை இருக்கும் என்று யெகோவா குறிப்பிட்டிருந்தார். (ஆதி. 3:15) அவருடைய நியமங்களை உறுதியாகக் கடைப்பிடித்த மக்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாய் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. (யோவா. 17:15, 16; 1 யோ. 2:15-17) அதற்காகப் பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். என்றாலும், அப்படிச் செய்வது பிரயோஜனமானதா என்று சில சமயங்களில் யெகோவாவின் மக்கள் சிலர் யோசித்திருக்கிறார்கள்.
9. சங்கீதம் 73-ஐ எழுதியவர் எதை நினைத்துப் புலம்பினார்?
9 தான் எடுத்த தீர்மானங்கள் சரிதானா என்று யோசித்த யெகோவாவின் ஊழியர்களில் ஒருவர் சங்கீதம் 73-ஐ எழுதியவர்; இவர் ஆசாப்பின் வம்சத்தைச் சேர்ந்தவராய் இருந்திருக்கலாம். பொல்லாதவர்கள் வெற்றி மேல் வெற்றி குவிப்பதையும், செல்வச்செழிப்போடு வாழ்வதையும், மகிழ்ச்சியில் திளைப்பதையும், கடவுளுடைய மக்கள் சிலரோ கஷ்டங்களிலும் துன்பங்களிலும் திண்டாடுவதையும் கண்டு இவர் புலம்பினார்.—சங்கீதம் 73:1-13-ஐ வாசியுங்கள்.
10. சங்கீதக்காரன் புலம்பிய விஷயங்களைக் குறித்து நீங்கள் ஏன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
10 இந்தச் சங்கீதக்காரனைப் போலவே நீங்களும் எப்போதாவது புலம்பியிருக்கிறீர்களா? அப்படியானால், அளவுக்கு மீறிய குற்ற உணர்வில் துவண்டுவிட வேண்டாம்; உங்கள் விசுவாசம் ஆட்டங்கண்டுவிட்டதாகவும் நினைத்துவிட வேண்டாம். சொல்லப்போனால், பைபிள் எழுத்தாளர் சிலர் உட்பட, யெகோவாவின் ஊழியர்களில் ஏராளமானோர் அப்படிப் புலம்பியிருக்கிறார்கள். (யோபு 21:7-13; சங். 37:1; எரே. 12:1; ஆப. 1:1-4, 13) யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புகிற எல்லாருமே பின்வரும் கேள்வியை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, அதற்கான பதிலை ஏற்றுக்கொள்ள வேண்டும்: கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவருக்குச் சேவை செய்வது நன்மை தருமா? இந்தக் கேள்வி, ஏதேன் தோட்டத்தில் சாத்தான் எழுப்பிய விவாதத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், கடவுளின் பேரரசாட்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்வியின் அர்த்தம் இதுதான். (ஆதி. 3:4, 5) ஆகவே, அந்தச் சங்கீதக்காரன் புலம்பிய விஷயங்களை நாம் எல்லாரும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பொல்லாதவர்கள் செழித்தோங்குவதைப் பார்த்து நாம் பொறாமைப்பட வேண்டுமா? யெகோவாவைவிட்டு விலகி அவர்களைப் போலவே வாழ வேண்டுமா? அப்படி நாம் வாழ வேண்டுமென்பதே சாத்தானின் விருப்பம்.
11, 12. (அ) தன் மனக்குழப்பங்களுக்கு சங்கீதக்காரன் எப்படி விடை கண்டார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) சங்கீதக்காரன் எடுத்த முடிவையே நீங்களும் எடுக்க எது உதவியிருக்கிறது?
11 தன் மனக்குழப்பங்களுக்கு சங்கீதக்காரன் எப்படி விடை கண்டார்? நீதியான வழியிலிருந்து சற்று விலகியதாக அவர் ஒத்துக்கொண்டபோதிலும், ‘தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தபோதுதான்’ தன்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டார். ஆம், கடவுளுடைய கூடாரத்தில் அல்லது ஆலயத்தில், அவருடைய மக்களோடு சகவாசம் வைத்து, அவருடைய நோக்கத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்ததால் தன்னுடைய கண்ணோட்டத்தை அவர் மாற்றிக்கொண்டார். பொல்லாதவர்களுக்கு ஏற்படும் கதி தனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அப்போது அவர் உணர்ந்துகொண்டார். அவர்களுடைய வாழ்க்கை முறையும் தெரிவுகளும் அவர்களை “சறுக்கலான இடங்களில்” நிற்க வைத்திருக்கின்றன என்பதை அவர் புரிந்துகொண்டார். யெகோவாவைவிட்டு வழிவிலகிப்போகிற அனைவரும் திடீரென்று ஏற்படுகிற ‘பயங்கரங்களால்’ அழிந்து நிர்மூலமாவார்கள் என்பதையும், யெகோவாவின் ஊழியர்களோ அவருடைய பாதுகாப்பைக் கண்டடைவார்கள் என்பதையும் சங்கீதக்காரன் உணர்ந்துகொண்டார். (சங்கீதம் 73:16-19, 27, 28-ஐ வாசியுங்கள்.) இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா? கடவுளைப் பற்றியோ அவருடைய சட்டதிட்டங்களைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல், தங்கள் மனம்போன போக்கில் வாழ்வது பலருக்குத் தேனாய் தித்திக்கலாம்; ஆனால், அதன் விளைவுகளிலிருந்து அவர்களால் தப்பவே முடியாது.—கலா. 6:7-9.
12 சங்கீதக்காரனின் அனுபவத்திலிருந்து மேலும் என்ன கற்றுக்கொள்கிறோம்? யெகோவாவுடைய மக்கள் மத்தியில் ஞானமும் பாதுகாப்பும் இருப்பதை அவர் கண்டார். யெகோவாவை வழிபடும் இடத்திற்குச் சென்றபோது நியாயமாகவும் தெள்ளத்தெளிவாகவும் சிந்திக்க ஆரம்பித்தார். அவ்வாறே இன்று, சபைக் கூட்டங்களில் ஞானமான ஆலோசகர்களையும், ஆரோக்கியமான ஆன்மீக உணவையும் நம்மால் கண்டடைய முடியும். அதனால்தான், கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்படி யெகோவா தம் ஊழியர்களுக்குக் கட்டளையிடுகிறார். அந்தக் கூட்டங்களில் அவர்கள் உற்சாகம் பெறுகிறார்கள்; ஞானமாக நடந்துகொள்ளத் தூண்டப்படுகிறார்கள்.—ஏசா. 32:1, 2; எபி. 10:24, 25.
நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்
13-15. (அ) தீனாளுக்கு என்ன நேரிட்டது, இது நமக்கு எதைக் கற்பிக்கிறது? (ஆ) சக வணக்கத்தாரோடு சகவாசம் வைத்துக்கொள்வது ஏன் பாதுகாப்பானது?
13 உலக நண்பர்களோடு நெருங்கிய சகவாசம் வைத்தால் பெரும் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்; இதற்கு யாக்கோபின் மகள் தீனாள் ஓர் எடுத்துக்காட்டு. அவளைப் பற்றி ஆதியாகமத்தில் நாம் வாசிக்கிறோம். அவளுடைய குடும்பத்தார் வசித்துவந்த இடத்திற்குப் பக்கத்திலிருந்த கானானியப் பெண்களோடு அவள் நெருங்கிய சகவாசம் வைத்திருந்தாள். யெகோவாவின் வணக்கத்தார் கடைப்பிடித்த உயர்ந்த ஒழுக்கநெறிகளை கானானியர் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, அவர்களுடைய வாழ்க்கை முறையால், அந்தத் தேசமெங்கும் உருவ வழிபாடு, ஒழுக்கக்கேடு, கீழ்த்தரமான பாலியல் வழிபாடு, வன்முறைச் செயல்கள் ஆகியவை மலிந்து கிடந்தன; இதைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். (யாத். 23:23; லேவி. 18:2-25; உபா. 18:9-12) இப்படிப்பட்ட மக்களோடு நெருங்கிய சகவாசம் வைத்திருந்த தீனாளுக்கு என்ன நேர்ந்தது?
14 அந்தத் தேசத்தின் பிரபுவாக இருந்த சீகேம், “தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான்.” அவன், தீனாளைக் கண்டு, “அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.” (ஆதி. 34:1, 2, 19) எவ்வளவு வேதனை! தனக்கு இந்தக் கதி நேரிடும் என தீனாள் கற்பனைகூட செய்திருக்க மாட்டாள். நட்பு முறையில்தான் அந்தத் தேசத்திலிருந்த இளம் பெண்களோடும் ஆண்களோடும் அவள் பழகியிருப்பாள்; அவர்கள் எல்லாரும் நல்லவர்கள்தான் என அவள் நினைத்திருப்பாள். என்றாலும், தீனாள் அநியாயமாக ஏமாற்றப்பட்டாள்.
15 இந்தப் பதிவு நமக்கு எதைக் கற்பிக்கிறது? சத்தியத்தில் இல்லாதவர்களிடம் நெருங்கிய சகவாசம் வைப்பதால் எந்தத் தீங்கும் வராது என்று நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. “கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்” என்று பைபிள் எச்சரிக்கிறது. (1 கொ. 15:33) மறுபட்சத்தில், உங்களைப் போலவே உயர்ந்த ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிக்கிற சக வணக்கத்தாரோடு சகவாசம் வைத்துக்கொள்வதும், யெகோவாமீது அன்பு காட்டுவதுமே உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும். அப்படிப்பட்ட நல்ல சகவாசத்தால் ஞானமாக நடக்க ஊக்கம் பெறுவீர்கள்.—நீதி. 13:20.
“கழுவப்பட்டீர்கள்”
16. கொரிந்து சபையிலிருந்த சிலர் முன்பு எப்படிப்பட்டவர்களாய் இருந்ததாக அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார்?
16 மோசமான பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு சுத்தமான வாழ்க்கை வாழ கிறிஸ்தவச் சபை அநேகருக்கு உதவியிருக்கிறது. கொரிந்து சபையிலிருந்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் தனது முதல் கடிதத்தை எழுதியபோது, கடவுளுடைய ஒழுக்கநெறிகளுக்கு இசைவாக வாழ்வதற்காக என்னென்ன மாற்றங்களை அவர்கள் செய்திருந்தார்கள் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர்களில் சிலர் பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களாக, உருவ வழிபாட்டில் ஈடுபடுகிறவர்களாக, மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களாக, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களாக, திருடர்களாக, குடிகாரர்களாக இருந்தார்கள். ‘ஆனால், நீங்கள் கழுவப்பட்டீர்கள்’ என்று பவுல் அவர்களிடம் சொன்னார்.—1 கொரிந்தியர் 6:9-11-ஐ வாசியுங்கள்.
17. பைபிளின் நெறிகளுக்கு இசைவாக வாழ்வதால் அநேகருடைய வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது?
17 உலகத்தாருக்குச் சரியான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. அதனால், தங்கள் மனம்போன போக்கில் அவர்கள் வாழ்கிறார்கள், அல்லது தங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஒழுக்கக்கேடான போக்கிலேயே போகிறார்கள்; கொரிந்து கிறிஸ்தவர்களில் சிலரும் சத்தியத்திற்கு வருமுன் அப்படித்தான் இருந்தார்கள். (எபே. 4:14) என்றாலும், கடவுளுடைய வார்த்தையையும் அவருடைய நோக்கத்தையும் பற்றித் திருத்தமாக அறிந்துகொண்டு, அவற்றைக் கடைப்பிடிப்பது ஒருவரது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். (கொலோ. 3:5-10; எபி. 4:12) ஏன், இன்றும்கூட கிறிஸ்தவச் சபையிலுள்ள பலர் யெகோவாவின் நீதியான நெறிகளைத் தங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் துவங்குவதற்கு முன் மனம்போன போக்கில் வாழ்ந்து வந்தவர்கள்தான். என்றாலும், அப்போது அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணவில்லை. கடவுளுடைய மக்களோடு சகவாசம் வைத்து, பைபிளின் நெறிகளுக்கு இசைவாக வாழத் தொடங்கியபோதுதான் மனசமாதானத்தைக் கண்டடைந்தார்கள்.
18. ஓர் இளம் சகோதரிக்கு என்ன அனுபவம் ஏற்பட்டது, இது எதைக் காட்டுகிறது?
18 அதற்கு முரணாக, கடந்த காலங்களில் கிறிஸ்தவச் சபைக்குள் பாதுகாப்பாக இருந்த சிலர் சபையை விட்டுப் போயிருக்கிறார்கள்; ஆனால், அதை நினைத்து இப்போது மனம் குமைகிறார்கள். டான்யா என்ற ஒரு சகோதரி தன் கதையைச் சொல்கிறார்.a அவருக்கு, ‘சிறுவயதிலிருந்தே சத்தியம் தெரிந்திருந்தது’; ஆனால், 16 வயதில் ‘உலகக் கவர்ச்சிகளால் வசீகரிக்கப்பட்டு’ சபையிலிருந்து போய்விட்டார். பிற்பாடு, அவருக்குக் கசப்பான அனுபவங்கள்தான் மிஞ்சின; திருமணம் ஆகாமலேயே கருத்தரித்ததால், கருச்சிதைவு செய்ய வேண்டியதாயிற்று. இப்போது அவர் சொல்கிறார்: “சபையைவிட்டு வெளியே இருந்த மூன்று வருடங்களில் ஏற்பட்ட மனக் காயங்கள் இன்னமும் ஆறவில்லை. என் வயிற்றில் வளர்ந்துவந்த செல்லத்தைக் கொன்றுவிட்ட குற்ற உணர்வு என் மனதை வாட்டிவதைக்கிறது. . . . இந்த உலகத்தை ‘ருசிபார்க்க’ ஆசைப்படுகிற இளைஞருக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: ‘வேண்டவே வேண்டாம்!’ ஆரம்பத்தில் அது தேனாய் இனிக்கலாம், ஆனால், பிற்பாடு அது நிச்சயம் எட்டியாய்க் கசக்கும். இந்த உலகத்தால் வேதனையை மட்டுமே தர முடியும். அதை நான் பட்டுத்தான் தெரிந்துகொண்டேன். யெகோவாவின் அமைப்பைவிட்டுப் போய்விடாதீர்கள்! இந்த அமைப்புக்குள் இருந்தால் மட்டுமே நீங்கள் சந்தோஷமாக வாழ முடியும்.”
19, 20. கிறிஸ்தவச் சபையில் இருந்தால் எவற்றிலிருந்து பாதுகாப்பைப் பெறுவோம், எவ்வாறு?
19 கிறிஸ்தவச் சபையிலுள்ள பாதுகாப்பான சூழலை விட்டு நீங்கள் வெளியேறினால் உங்கள் கதி என்னவாகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். சத்தியத்திற்கு வருமுன் தங்களுடைய வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை நினைத்துப் பார்க்கக்கூட அநேகர் விரும்புவதில்லை. (யோவா. 6:68, 69) துன்ப துயரங்கள் நிறைந்த சாத்தானிய உலகில் நீங்கள் தொடர்ந்து பாதுகாப்பைப் பெறுவதற்குக் கிறிஸ்தவச் சகோதர சகோதரிகளோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அவர்களோடு சகவாசம் வைத்துக்கொள்வதும், சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதும் யெகோவாவின் நீதியான நெறிகள் எவ்வளவு பிரயோஜனமானவை என்பதை உங்களுக்கு நினைப்பூட்டும், அவற்றைக் கடைப்பிடிக்கவும் உங்களைத் தூண்டும். ஆகவே, சங்கீதக்காரனைப் போல் நீங்களும் ‘மகா சபையிலே யெகோவாவைத் துதியுங்கள்’!—சங். 35:18.
20 உண்மைதான், பல்வேறு காரணங்களால் கிறிஸ்தவர்கள் எல்லாருமே தங்களுடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்குப் போராட வேண்டியிருக்கிறது. சரியான பாதையில் செல்ல அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிற சக விசுவாசிகளுக்கு நீங்களும் சபையில் உள்ள மற்றவர்களும் எப்படி உதவலாம்? நீங்கள் எப்படி “எப்போதும் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக்கொண்டும் ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொண்டும்” இருக்கலாம் என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.—1 தெ. 5:11.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• 73-ஆம் சங்கீதத்தை எழுதியவரின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
• தீனாளுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் நமக்கு என்ன பாடத்தைக் கற்பிக்கிறது?
• கிறிஸ்தவச் சபைக்குள் மட்டுமே நீங்கள் ஏன் பாதுகாப்பைக் கண்டடையலாம்?
[பக்கம் 7-ன் படங்கள்]
பாதுகாப்பான இடத்தில் ‘நீந்துங்கள்’; சபைக்குள்ளேயே இருங்கள்!