உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• “நானே உன் பங்கு” என்று லேவியரிடம் கடவுள் சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்?
லேவியருக்கு மற்ற கோத்திரத்தாரைப் போல நிலம் பங்கிட்டுக் கொடுக்கப்படவில்லை, ஆனால் யெகோவாவே அவர்களுடைய ‘பங்காக’ இருந்தார். (எண். 18:20) அவர்கள் நிலத்தைச் சுதந்தரமாகப் பெறுவதற்குப் பதிலாக, கடவுளுக்குச் சேவை செய்யும் அருமையான பாக்கியத்தைப் பெற்றார்கள். அதேசமயத்தில், அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை யெகோவா கவனித்துக்கொண்டார். இன்று, கடவுளுடைய அரசாங்கத்திற்குரிய வேலைகளைச் செய்யும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கலாம்.—9/15, பக்கங்கள் 7-8, 13.
• ஒரு பொழுதுபோக்கு பயனுள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க நமக்கு எது உதவும்?
ஒரு வகை பொழுதுபோக்கு பயனுள்ளதா... கடவுளுடைய பார்வையில் சரியானதா... என்பதைத் தீர்மானிக்கையில், நாம் இப்படிக் கேட்டுக்கொள்வது நல்லது: என்ன அம்சங்கள் அதில் அடங்கியுள்ளன? எப்போது அதில் ஈடுபடுவேன்? யாருடன் சேர்ந்து அதில் ஈடுபடுவேன்?—10/15, பக்கங்கள் 9-12.
• ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்கு நீதிமொழிகள் 7:6-23-ல் உள்ள பதிவு நமக்கு எப்படி உதவும்?
ஒரு வேசி வசிக்கும் தெருவில் ஒரு வாலிபன் நடந்து செல்வதைப் பற்றி அந்தப் பதிவு சொல்கிறது. அவள் அவனை வசப்படுத்திவிடுகிறாள். இன்று, ஆபாசப் படங்களைக் கொண்ட இன்டர்நெட் சைட்டுகளை நாம் தவிர்க்க வேண்டும்; ஆபாசமான இன்டர்நெட் சைட்டுகளுக்குச் செல்ல ஆரம்பிப்பதற்கு முன்பாகவே யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்ய வேண்டும்.—11/15, பக்கங்கள் 9-10.