வரலாற்றுச் சுவடுகள்
‘இதுவரை கேட்டதிலேயே மிகப் பிரமாதமான செய்தி!’
“இதெல்லாம் எதற்கு?” என்று கேட்டார் ஜார்ஜ் நேஷ். எதெல்லாம்? கனடாவிலுள்ள சஸ்காட் செவனில், சஸ்கடூன் என்ற இடத்திலிருந்த ஆயுதக் கிடங்கில் மலைபோல் குவிந்துகிடந்த 60 அடி (18 மீ) நீளமுள்ள மரக்கட்டைகளைப் பார்த்தே அப்படிக் கேட்டார். முதல் உலகப் போரின்போது, சிக்னல் டவர்களைக் கட்டுவதற்காக அவை பயன்படுத்தப்பட்டதென்ற பதில் அவருக்குக் கிடைத்தது. “இவற்றை வைத்து ரேடியோ டவர்களைக் கட்டினால் என்ன? என்ற எண்ணம் சட்டென எனக்குத் தோன்றியது. கடவுளுடைய அமைப்புக்குச் சொந்தமான வானொலி நிலையம் பிறந்த கதை இதுதான்” என்று சொல்லி, நினைவலைகளில் நீந்திச் சென்றார் சகோதரர் நேஷ். சரியாக ஒரு வருடம் கழித்து, 1924-ல் CHUC வானொலி நிலையம் செயல்பட ஆரம்பித்தது; கனடாவில் மத விஷயங்களை முதன்முதலாக ஒலிபரப்பிய வானொலி நிலையங்களில் அதுவும் ஒன்று.
(1) ஆல்பர்ட்டாவில், எட்மண்டனிலுள்ள வானொலி நிலையம் (2) ஒன்டாரியோவிலுள்ள டோரான்டோவில் ஒலிபரப்புக் கருவியைக் கையாளும் ஒரு சகோதரர்
கனடா ஏறக்குறைய ஐரோப்பாவின் பரப்பளவைக் கொண்டதாக இருந்ததால் வானொலி மூலம் நற்செய்தியை அறிவிப்பது சிறந்ததாக இருந்தது. “நேரடியாகச் சந்தித்து சாட்சி கொடுக்க முடியாத ஆட்களுக்கெல்லாம் வானொலி மூலம் சாட்சி கொடுக்கப்பட்டது. அதுவும் அந்தக் காலத்தில் வானொலி ஒரு புதிய கண்டுபிடிப்பாக இருந்ததால், ஒலிபரப்பப்பட்ட எல்லாவற்றையும் கேட்க மக்கள் ஆவலாய் இருந்தார்கள்” என்றார் ஃப்ளாரன்ஸ் ஜான்சன்; இவர் சஸ்கடூனில் இருந்த வானொலி நிலையத்தில் வேலை பார்த்தவர். 1926-க்குள், கனடாவிலிருந்த பைபிள் மாணாக்கர்கள் (யெகோவாவின் சாட்சிகள் அன்று அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள்) நான்கு நகரங்களில் சொந்த வானொலி நிலையங்களிலிருந்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிவந்தார்கள். a
(3) சஸ்காட் செவனில், சஸ்கடூன் என்ற இடத்தி லிருந்த CHUC ஸ்டுடியோ
என்னென்ன நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன? உள்ளூர் சபையைச் சேர்ந்த பாடகர்கள் இசைக் கலைஞர்களுடனும் சில சமயங்களில் சிறிய இசைக் குழுக்களுடனும் சேர்ந்து பாடிய பாடல்கள் பெரும்பாலும் ஒலிபரப்பப்பட்டன. என்றாலும், சகோதரர்களின் சொற்பொழிவுகள், பைபிள் கலந்தாலோசிப்புகள் ஆகியவையும் ஒலிபரப்பப்பட்டன. அந்தக் கலந்தாலோசிப்புகளில் பங்குபெற்ற சகோதரி ஏமி ஜோன்ஸ் தன் நினைவுப்பெட்டகத்தைத் திறந்தார்: “வெளி ஊழியத்தில், வீட்டுக்காரர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, ‘ஓ... நீங்களா... ரேடியோவில நீங்க பேசிய விஷயங்களை நாங்க கேட்டிருக்கோம்’ எனச் சிலசமயம் சொல்லியிருக்கிறார்கள்.”
“ஃபோனுக்கு மேல் ஃபோன்! ரேடியோ ஸ்டேஷனே ஸ்தம்பித்துப் போகுமளவுக்கு!”
நோவா ஸ்கோஷாவிலுள்ள ஹாலிஃபாக்ஸ் என்ற இடத்திலிருந்த பைபிள் மாணாக்கர்கள் புதுமையான ஒரு ரேடியோ நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினார்கள். நேயர்கள் இடையிடையே ஃபோன் செய்து பைபிள் கேள்விகளைக் கேட்கும் விதத்தில் அந்நிகழ்ச்சி தொகுக்கப்பட்டிருந்தது. “ஏகப்பட்ட வரவேற்பு இந்த நிகழ்ச்சிக்கு! ஃபோனுக்கு மேல் ஃபோன்! ரேடியோ ஸ்டேஷனே ஸ்தம்பித்துப் போகுமளவுக்கு!” என்று எழுதினார் ஒரு சகோதரர்.
அப்போஸ்தலன் பவுலுக்கு என்ன வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்புதான் பைபிள் மாணாக்கர்களுக்கும் கிடைத்தது. (அப். 17:1-5) ஆம், சிலருக்கு அவர்களுடைய செய்தி பிடித்திருந்தது, சிலருக்குப் பிடிக்கவில்லை. உதாரணமாக, வேதாகமத்தில் படிப்புகள் என்ற ஆங்கில புத்தகத் தொகுப்புகளைப் பற்றி பைபிள் மாணாக்கர்கள் ரேடியோவில் குறிப்பிட்டதை ஹெக்டர் மார்ஷெல் என்பவர் கேட்டபோது, தனக்காக ஆறு தொகுப்புகளை அவர் ஆர்டர் செய்தார். “சண்டே ஸ்கூலில் பாடம் நடத்துவதற்கு அவற்றை உபயோகிப்பதே என் எண்ணமாக இருந்தது” என்று பின்னர் அவர் எழுதினார். ஆனால், அந்தப் புத்தகத்தின் முதல் தொகுப்பை வாசித்து முடித்ததுமே சர்ச்சைவிட்டு விலகிவிடத் தீர்மானித்தார். பிற்பாடு அவர் பக்திவைராக்கியமிக்க ஊழியரானார். 1998-ல் மரணமடையும்வரை, யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்தார். கிழக்கு நோவா ஸ்கோஷாவில், “கடவுளுடைய அரசாங்கம்—உலகத்தின் நம்பிக்கை” என்ற சொற்பொழிவு ஒலிபரப்பான மறுநாள், ஜே. ஏ. மெக்டொனால்ட் என்ற படைத்தளபதி உள்ளூர் சகோதரர் ஒருவரிடம் இவ்வாறு சொன்னார்: “ப்ரிட்டோன் தீவு முனையில் வசிக்கும் மக்கள் நேற்று கேட்ட செய்திதான் அவர்கள் இதுவரை கேட்டதிலேயே மிகப் பிரமாதமான செய்தி!”
சர்ச் குருமார்களுக்கோ சொல்ல முடியாத கடுப்பு! ஹாலிஃபாக்ஸ்ஸில் இருந்த கத்தோலிக்கர்கள் சிலர், பைபிள் மாணாக்கர்களின் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வந்த வானொலி நிலையத்தைக் குண்டுவைத்துத் தகர்க்கப்போவதாக மிரட்டினார்கள். மத குருமார்கள் உசுப்பிவிட்டதால், 1928-ல் பைபிள் மாணாக்கர்களுக்குச் சொந்தமான வானொலி நிலையங்களின் உரிமங்களை இனி புதுப்பிக்கப்போவதில்லை என அந்நாட்டு அரசு திடுதிப்பென்று அறிவித்துவிட்டது. இத்தகைய அநியாயமான நடவடிக்கையை எதிர்த்து, ஒலிபரப்பும் உரிமை யாருக்கு இருக்கிறது? என்ற தலைப்பில் சகோதர சகோதரிகள் ஆங்கில கைப்பிரதியை விநியோகித்தார்கள். ஆனாலும், அரசு அதிகாரிகள் மசியவில்லை.
கனடாவில் ஒரு சிறிய தொகுதியாக இருந்த யெகோவாவின் ஊழியர்களுடைய ஆர்வத்தை அது தணித்துப்போட்டதா? “ஆரம்பத்தில் என்னமோ எதிராளிதான் மாபெரும் வெற்றி பெற்றதுபோல் தோன்றியது” என்று ஒத்துக்கொண்ட இஸபெல் வேன்ரைட் என்ற சகோதரி இவ்வாறு தொடர்ந்தார்: “வானொலியில் சாட்சி கொடுப்பது யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாக இருந்ததென்றால், நிச்சயம் அவர் அந்த அதிகாரிகள் வெற்றிபெற அனுமதித்திருக்க மாட்டார். ஆனால், அவர் அப்படி அனுமதித்ததால், நற்செய்தியை வேறொரு சிறந்த வழியில் பிரசங்கிக்க நாங்கள் முயற்சியெடுக்க வேண்டுமென்பதைப் புரிந்துகொண்டோம்.” அதன்பின், கனடாவிலிருந்த பைபிள் மாணாக்கர்கள், பிரசங்க வேலைக்காக வானொலியையே சார்ந்திருக்காமல், ஜனங்களை அவர்களுடைய வீடுகளில் போய்ச் சந்திப்பதற்குக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். என்றாலும், ‘மிகப் பிரமாதமான செய்தியை’ ஒலிபரப்பியதில் அன்று வானொலி பெரும் பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது!—கனடாவிலுள்ள வரலாற்றுச் சுவடுகளிலிருந்து.
a கனடாவிலிருந்த சகோதரர்கள் கட்டணம் செலுத்தி மற்ற வானொலி நிலையங்களிலிருந்தும் பைபிள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பினார்கள்.