நம் வரலாற்றுச் சுவடுகள்
“இதுவரை இல்லாத அளவுக்கு அன்பும் ஆர்வமும் நிறைந்த நெஞ்சத்தோடு”
அது செப்டம்பர் 1922, வெள்ளிக்கிழமை! அன்று காலையிலேயே சூடு அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. அரங்கத்தில் கிட்டத்தட்ட 8,000 பேர் நிரம்பி வழிந்தார்கள். இந்த முக்கியமான நிகழ்ச்சியின்போது யார் வேண்டுமானாலும் அரங்கத்திலிருந்து வெளியே போகலாம் என்றும், ஆனால் மறுபடியும் உள்ளே வர முடியாது என்றும் சேர்மேன் அறிவித்தார்.
“புகழ்ந்து பாடுங்கள்” என்ற ஆரம்ப நிகழ்ச்சியில் பாடல்கள் பாடப்பட்டன. பிறகு, சகோதரர் ஜோஸஃப் எஃப். ரதர்ஃபோர்ட் ‘மைக்’ முன்பு வந்து நின்றார். என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்துகொள்ள அரங்கத்தில் இருந்த பெரும்பாலான ஆட்கள் ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தார்கள். சிலர், சூடு தாங்க முடியாமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். அதனால், அவர்களை உட்கார்ந்து கவனிக்கும்படி பேச்சாளர் கேட்டுக்கொண்டார். அந்த அரங்கத்தில், ஒரு பெரிய துணி ஒன்று நன்றாகக் கட்டப்பட்டு உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. பேச்சு ஆரம்பிக்கப்பட்டபோது, அதை யாராவது கவனித்தார்களா?
“கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் வரப்போகிறது” என்ற பொருளில் சகோதரர் ரதர்ஃபோர்ட் பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, வரப்போகும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அன்றிருந்த தீர்க்கதரிசிகள் எப்படி எந்தப் பயமும் இல்லாமல் பிரசங்கித்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய கம்பீரமான குரல் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது. அந்தப் பேச்சின் உச்சக்கட்டத்தில், “மகிமையின் ராஜா ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதை நம்புகிறீர்களா?” என்று அவர் கேட்டார். அதற்கு அரங்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் “ஆம்” என்று சத்தமாகப் பதில் சொன்னார்கள்.
“அப்படியென்றால், உன்னதமான கடவுளின் பிள்ளைகளே, மறுபடியும் களத்தில் இறங்குங்கள்! . . . இதோ, ராஜா ஆட்சி செய்கிறார்! நீங்கள் அவருடைய பிரதிநிதிகள். அதனால், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்” என்று சகோதரர் ரதர்ஃபோர்ட் உரத்த குரலில் சொன்னார்.
அப்போது, சுருட்டி வைக்கப்பட்டு மேலே தொங்க விடப்பட்டிருந்த அந்தத் துணி அழகாக அவிழ்ந்தது. “ராஜாவையும் அவருடைய அரசாங்கத்தையும் விளம்பரப்படுத்துங்கள்” என்ற வார்த்தைகள் வெளிப்படுத்தப்பட்டன.
“அரங்கத்தில் இருந்தவர்கள் அப்படியே மெய்சிலிர்த்துப் போனார்கள்” என்று ரேபாப் சொன்னார். “பலத்த கைதட்டலினால் அரங்கத்தின் விட்டங்கள் அதிர்ந்தன” என்று ஆன்னா கார்ட்னர் சொன்னார். “அரங்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றார்கள்” என்று ஃப்ரெட் ட்வாரோஷ் சொன்னார். “பலமான ஒரு சக்தி எங்கள் எல்லாரையும் இருக்கைகளிலிருந்து தூக்கியது போல இருந்தது. நாங்கள் எல்லாரும் எழுந்து நின்றோம், எங்கள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது” என்று இவான்ஜலோஸ் ஸ்கூஃபஸ் சொன்னார்.
மாநாட்டில் இருந்த நிறைய பேர், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ஏற்கெனவே பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது, ஒரு புது நோக்கத்தோடு பிரசங்கிக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பைபிள் மாணாக்கர்கள், “இதுவரை இல்லாத அளவுக்கு அன்பும் ஆர்வமும் நிறைந்த நெஞ்சத்தோடு” போனார்கள் என்று ஈத்தெல் பென்னெகாஃப் சொன்னார். “யார் போவார்கள்?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் தீர்மானத்தோடு, 18 வயது நிரம்பிய ஒடிஸா டக் மாநாட்டிலிருந்து போனார். அதைப் பற்றி அவர் இப்படிச் சொன்னார்: “எங்கே, எப்படி, என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ‘இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!’ என்று சொன்ன ஏசாயாவைப் போல இருக்க வேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது.” (ஏசா. 6:8) “அந்தச் சந்தோஷமான நாள்தான் . . . இன்று உலகம் முழுவதும் செய்யப்படுகிற பிரசங்க வேலையின் உண்மையான ஆரம்பம்” என்று ரால்ஃப் லெஃப்லர் சொன்னார்.
1922-ஆம் வருஷம், ஒஹாயோவிலுள்ள சீடர் பாயிண்ட்டில் நடந்த இந்த மாநாடு யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கிறது! “எந்த மாநாட்டையும் தவற விடாமல் எல்லா மாநாட்டிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையை இந்த மாநாடு எனக்குள் ஏற்படுத்தியது” என்று ஜார்ஜ் கேங்கஸ் சொன்னார். சொன்னபடியே அவர் எந்த மாநாட்டையும் தவற விட்டது இல்லை! “ஒவ்வொரு தடவையும் 1922-ஆம் வருஷம், சீடர் பாயிண்ட்டைப் பற்றி நம் பிரசுரங்களில் வாசிக்கும்போது எனக்குள் ஏற்படுகிற அந்தச் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. ‘அந்த மாநாட்டுல கலந்துக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்காக நன்றி யெகோவாவே’ என்று எப்போதும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுவேன்” என்று ஜூலியா வில்காக்ஸ் எழுதினார்.
ஏதாவது ஒரு மாநாடு, நம் இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தந்திருக்கும். நம் மகத்தான கடவுள் மீதும் அவருடைய ராஜா மீதும், அன்பையும் பக்தி வைராக்கியத்தையும் பொழிய உதவியிருக்கும். இன்னும் அந்த மாநாட்டைப் பற்றிய நினைவுகள் நமக்குள் இருக்கும். அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது, “அந்த மாநாட்டுல கலந்துக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்காக நன்றி யெகோவாவே” என்று சொல்ல நாமும் தூண்டப்படுவோம்!