படிப்புக் கட்டுரை 44
பாட்டு 138 நரைமுடி—அழகான கிரீடம்!
வயதானவர்களே, சந்தோஷத்தை இழந்துவிடாதீர்கள்!
“ வயதான காலத்திலும் அவர்கள் திடமாக இருப்பார்கள்.”—சங். 92:14.
என்ன கற்றுக்கொள்வோம்?
வயதானவர்கள் சந்தோஷமாக இருப்பது ஏன் முக்கியம் என்றும், சந்தோஷமாக இருக்க அவர்கள் என்ன செய்யலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.
1-2. தனக்கு உண்மையாக இருக்கும் வயதானவர்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார்? (சங்கீதம் 92:12-14; படத்தையும் பாருங்கள்.)
வயதாவதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பார்க்கிறார்கள். சிலர், வயதாவதை கௌரவமாக நினைக்கிறார்கள். வேறு சிலருக்கு அது பிடிப்பதில்லை. உங்களுக்கு முதல்முதலில் எப்போது வெள்ளை முடி வந்தது என்று ஞாபகம் இருக்கிறதா? யாரும் பார்ப்பதற்கு முன்பு அதைப் பிடுங்கிவிட வேண்டும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அப்படிப் பிடுங்குவதால் வெள்ளை முடி வருவதைத் தடுக்க முடியாது என்பதைப் புரிந்திருப்பீர்கள். எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் வயதாவதைத் தடுக்க முடியாது என்பதுதான் யதார்த்தம்!
2 வயதான தன்னுடைய ஊழியர்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார்? (நீதி. 16:31) செழிப்பான மரங்களாக அவர்களைப் பார்க்கிறார். (சங்கீதம் 92:12-14-ஐ வாசியுங்கள்.) இது ஏன் பொருத்தமாக இருக்கிறது? பொதுவாக, பல வருஷங்களாக வாழ்கிற மரங்களில் செழிப்பான இலைகள் இருக்கும், வாசனையான பூக்கள் பூத்துக்குலுங்கும். அப்படிப்பட்ட மரங்களில் ஒன்றுதான், ஜப்பானில் பூத்துக்குலுங்குகிற செர்ரி மரங்கள். அவற்றில் சில மரங்கள், 1000 வருஷங்களுக்கும் மேல் வாழ்கின்றன. இந்த அழகான மரங்களை மாதிரிதான், பல வருஷங்களாக உண்மையோடு சேவை செய்கிறவர்களும் ரொம்ப அழகாக இருக்கிறார்கள்; முக்கியமாக, யெகோவாவின் பார்வையில்! வயதானவர்களுடைய நரைமுடியையும் தாண்டி, அவர்கள் காட்டுகிற அழகான குணங்களை, அதாவது சகிப்புத்தன்மையையும் உண்மைத்தன்மையையும், யெகோவா பார்க்கிறார். பல வருஷங்களாக அவர்கள் செய்த சேவையை அவர் உயர்வாக மதிக்கிறார்.
நிறைய வருஷங்களாக வாழும் மரங்கள் அழகாகவும் செழிப்பாகவும் இருப்பதுபோல், வயதானவர்களும் அழகாகவும் செழிப்பாகவும் இருக்கிறார்கள் (பாரா 2)
3. யெகோவா எப்படித் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற, வயதானவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்? உதாரணங்கள் சொல்லுங்கள்.
3 நமக்கு வயது ஆக ஆக, யெகோவாவுடைய பார்வையில் நம்முடைய மதிப்பு அதிகமாகிக்கொண்டுதான் போகும்.a சொல்லப்போனால், யெகோவா தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற, நிறைய சமயங்களில் வயதானவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். உதாரணத்துக்கு, சாராள் வயதானவராக இருந்தபோது, ஒரு பெரிய பலம் படைத்த தேசத்துக்கு தாய் ஆவார் என்றும், அவருடைய வம்சத்தில் மேசியா வருவார் என்றும் யெகோவா சொன்னார். (ஆதி. 17:15-19) மோசே வயதானவராக இருந்தபோது, இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வரும் நியமிப்பை யெகோவா கொடுத்தார். (யாத். 7:6, 7) அப்போஸ்தலன் யோவான் வயதானவராக இருந்தபோது, யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து ஐந்து பைபிள் புத்தகங்களை எழுத வைத்தார்.
4. நீதிமொழிகள் 15:15 சொல்கிற மாதிரி, வயதான காலத்தில் வரும் கஷ்டங்களைச் சமாளிக்க எது உதவும்? (படத்தையும் பாருங்கள்.)
4 வயதாவதால் வரும் கஷ்டங்களை நிறைய பேர் சந்தித்துக்கொண்டு வருகிறார்கள். ஒரு சகோதரி நகைச்சுவையாக இப்படிச் சொன்னார்: “வயதான காலத்தைச் சமாளிக்க ஒரு தனி திறமை தேவை!” ஆனால், சந்தோஷமாகb இருக்க கற்றுக்கொண்டால், வயதாவதால் வரும் கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள முடியும். (நீதிமொழிகள் 15:15-ஐ வாசியுங்கள்.) இந்தக் கட்டுரையில், சந்தோஷமாக இருக்க வயதானவர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம். சபையில் இருக்கிறவர்கள் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்றும் பார்ப்போம். ஆனால் அதற்கு முன்பு, வயதான காலத்தில் சந்தோஷமாக இருப்பது ஏன் கஷ்டமாக இருக்கலாம் என்று பார்க்கலாம்.
சந்தோஷமாக இருந்தால், வயதாவதால் வரும் கஷ்டங்களைச் சகிக்க முடியும் (பாரா 4)
முதுமை நம் சந்தோஷத்தைப் பறிக்கலாம்
5. வயதான சிலர் எதை நினைத்து சோர்ந்துபோகலாம்?
5 எவையெல்லாம் உங்களைச் சோர்ந்துபோக வைக்கலாம்? ஒரு காலத்தில் நீங்கள் செய்துகொண்டிருந்த விஷயங்களை இப்போது செய்ய முடியாததை நினைத்து நீங்கள் நொந்துபோகலாம். இளமை துடிப்போடும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருந்த நாட்களை நினைத்து நீங்கள் ஏங்கலாம். (பிர. 7:10) ரூபி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “உடம்பெல்லாம் வலிப்பதாலும் முன்புபோல் நடமாட முடியாததாலும், உடைகளைப் போடுவதுகூட கஷ்டமாக இருக்கிறது. சாதாரண விஷயங்களைக்கூட என்னால் செய்ய முடியவில்லை. காலைத் தூக்கி சாக்ஸ்கூட போட முடியவில்லை. ஆர்த்தரைட்டிஸ் இருப்பதாலும் கையெல்லாம் மரத்துவிடுவதாலும் சின்னச் சின்ன வேலைகளைக்கூட செய்வது கஷ்டமாக இருக்கிறது.” முன்பு பெத்தேலில் சேவை செய்த ஹெரால்டு என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “ஒரு காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா?! இப்போது என் நிலையை நினைக்கும்போது சிலசமயம் கோபம் கோபமாக வருகிறது. ஒரு காலத்தில் நான் ஓடியாடி சுறுசுறுப்பாக விளையாடுவேன். பேஸ்பால் விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போதெல்லாம், ‘ஹெரால்டிடம் பந்தைப் போடுங்கள். அவன் குறி தப்பவே தப்பாது’ என்று சொல்வார்கள். ஆனால் இப்போது என்னால் பந்தைத் தூக்கிப் போடக்கூட முடிவதில்லை.”
6. (அ) வேறு என்னென்ன காரணங்களால் வயதானவர்கள் சிலர் சோர்ந்துபோகலாம்? (ஆ) வண்டி ஓட்ட வேண்டுமா வேண்டாமா என்று வயதானவர்கள் எதை வைத்து முடிவு செய்யலாம்? (இந்த இதழில் இருக்கும், “வண்டி ஓட்டுவதை நான் நிறுத்த வேண்டுமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.)
6 முன்பு போல தனியாக, சுதந்திரமாக சில விஷயங்களைச் செய்ய முடியாததை நினைத்தும் நீங்கள் சோர்ந்துபோகலாம். அதுவும், இன்னொருவருடைய கவனிப்பில்தான் 24 மணிநேரமும் இருக்க வேண்டும் என்ற நிலைமை வரும்போது அல்லது குடிமாறிப் போய் பிள்ளைகளில் ஒருவரோடு வாழ வேண்டிய நிலைமை வரும்போது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். உடல்நிலையோ கண்பார்வையோ மோசமானதால், தனியாக சில இடங்களுக்குப் போக முடியாமல் இருக்கலாம் அல்லது வண்டி ஓட்ட முடியாமல் இருக்கலாம். ஆனால், இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: நம்மால் நம்மையே கவனித்துக்கொள்ள முடிகிறதா... நம்மால் தனியாக வாழ முடிகிறதா... வண்டி ஓட்ட முடிகிறதா... என்பதையெல்லாம் வைத்து யெகோவாவோ மற்றவர்களோ நம்மை எடைபோடுவதில்லை. யெகோவா நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். நாம் உள்ளுக்குள் எப்படி இருக்கிறோம் என்பதுதான் அவருக்கு ரொம்ப முக்கியம். அதாவது, அவர்மேலும் சகோதர சகோதரிகள்மேலும் நமக்கு இருக்கிற அன்பையும் நன்றியுணர்வையும் அவர் பெரிதாக நினைக்கிறார்.—1 சா. 16:7.
7. இந்த உலகத்தின் முடிவு நம் வாழ்நாள் காலத்தில் வராதோ என்று நினைத்து கவலைப்படுகிறவர்களுக்கு எது உதவும்?
7 ‘அர்மகெதோன் வரும்வரை நான் உயிரோடு இருக்க மாட்டேனோ’ என்று நினைத்துக்கூட நீங்கள் கவலைப்படலாம். அப்படியென்றால், எது உங்களுக்கு உதவும்? இந்த உலகத்துக்கு முடிவைக் கொண்டுவர யெகோவாவும் பொறுமையாகக் காத்திருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்வது உதவும். (ஏசா. 30:18) அவர் பொறுமையாக இருப்பதால்தான் லட்சக்கணக்கான மக்கள் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும், அவருக்குச் சேவை செய்வதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. (2 பே. 3:9) அதனால் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும்போது, முடிவு வரும் முன்பு யெகோவாவின் பொறுமையால் எத்தனை பேர் நன்மையடைகிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் இருக்கிற சிலர்கூட நன்மையடையலாம்.
8. உடம்பு முடியாமல் போகும்போது வயதானவர்கள் எப்படி நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது?
8 யாராக இருந்தாலுமே, வலி-வேதனையில் இருக்கும்போது எதையாவது சொல்லிவிட்டு அல்லது செய்துவிட்டு பிறகு அதை நினைத்து வருத்தப்படலாம். (பிர. 7:7; யாக். 3:2) அதுவும் வயதானவர்கள், அவர்களுக்கு இருக்கிற ஒரு வியாதியாலோ அதற்காக எடுக்கிற மருந்து மாத்திரையாலோ மற்றவர்களைக் கஷ்டப்படுத்துகிற மாதிரி எதையாவது சொல்லிவிடலாம் அல்லது செய்துவிடலாம். ஆனால், உண்மையில் அப்படி நடந்துகொள்வது அவர்களுடைய சுபாவமாக இருக்காது. யோபுகூட கஷ்டங்களை அனுபவித்தபோது யோசிக்காமல் ‘ஏதேதோ பேசிவிட்டார்.’ (யோபு 6:1-3) அதேசமயத்தில், நம் வயதையோ வியாதியையோ காரணம் காட்டி, வேண்டுமென்றே நாம் மற்றவர்களிடம் அன்பில்லாமல் பேசவோ நடந்துகொள்ளவோ மாட்டோம்; எப்போதுமே மற்றவர்கள் நமக்காக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டோம். அப்படியே தெரியாமல் எதையாவது செய்திருந்தாலும் அதற்கு மன்னிப்பு கேட்க நாம் தயங்க கூடாது.—மத். 5:23, 24.
எப்படிச் சந்தோஷமாக இருக்கலாம்
வயதாவதால் நிறைய சவால்கள் வந்தாலும் நீங்கள் எப்படிச் சந்தோஷமாக இருக்கலாம்? (பாராக்கள் 9-13)
9. நீங்கள் ஏன் மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)
9 மற்றவர்களிடம் உதவி கேளுங்கள். (கலா. 6:2) ஆரம்பத்தில் அது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். கிரெட்டல் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “சிலசமயத்தில் மற்றவர்களிடம் உதவி கேட்பது எனக்குக் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால், அவர்களுக்கு நான் பாரமாக ஆகிவிடுவேனோ என்று யோசிப்பேன். அப்படி யோசிப்பதை மாற்றிக்கொள்ளவும், ‘எனக்கு உதவி தேவை’ என்று மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளவும் கொஞ்சம் நாள் எடுத்தது.” மற்றவர்களிடம் உதவி கேட்கும்போது, கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள். (அப். 20:35) அதுமட்டுமல்ல, மற்றவர்கள் உங்கள்மேல் காட்டுகிற அன்பையும் அக்கறையையும் பார்க்கும்போது உங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
(பாரா 9)
10. நன்றி சொல்ல நாம் ஏன் மறக்கக் கூடாது? (படத்தையும் பாருங்கள்.)
10 நன்றி சொல்லுங்கள். (கொலோ. 3:15; 1 தெ. 5:18) மற்றவர்கள் நமக்கு நல்ல விஷயங்களைச் செய்யும்போது நமக்குள் நன்றியுணர்வு வரும்; ஆனால், அந்த நன்றியைச் சொல்வதற்கு நாம் மறந்துவிடலாம். அதற்குப் பதிலாக, சிரித்த முகத்தோடு அவர்களுக்கு நன்றி சொன்னால், அவர்களையும் அவர்கள் செய்ததையும் நாம் எவ்வளவு மதிக்கிறோம் என்பதைக் காட்டுவோம். பெத்தேலில் வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் லேயா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நான் கவனித்துக்கொள்ளும் ஒரு சகோதரி, தன்னுடைய நன்றியைக் காட்ட, சின்னதாக எதையாவது எழுதிக் கொடுப்பார். அதில் நிறைய வார்த்தைகள் இருக்காதுதான். ஆனால், அவருடைய அன்பு அதில் தெரியும். அவர் அப்படி எழுதிக் கொடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் செய்யும் உதவியை அவர் பெரிதாக நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ளும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.”
(பாரா 10)
11. மற்றவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? (படத்தையும் பாருங்கள்.)
11 மற்றவர்களுக்கு உதவ முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய உங்கள் நேரத்தையும் சக்தியையும் நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். ஒரு ஆப்பிரிக்க பழமொழி என்ன சொல்கிறது என்றால், ஏகப்பட்ட ஞானமான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும் ஒரு நூலகம் மாதிரி வயதானவர்கள் இருக்கிறார்கள். அந்த நூலகத்தில் இருக்கிற புத்தகங்கள் அப்படியே அலமாரியில் தூங்கிக்கொண்டு இருந்தால், அவற்றிலிருந்து யாராலுமே கற்றுக்கொள்ள முடியாது. அதனால், “உயிருள்ள நூலகமாக” இருக்கிற நீங்கள், உங்களிடம் இருக்கும் அறிவையும் அனுபவத்தையும், வருங்காலச் சந்ததிக்கு நீங்களாகவே முன்வந்து சொல்லிக்கொடுங்கள். அவர்களிடம் கேள்விகளைக் கேளுங்கள்; அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள். யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வது ஏன் எப்போதும் சிறந்தது என்பதையும், அது அவர்களுக்கு எந்தளவுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதையும், உங்கள் அனுபவத்திலிருந்து சொல்லிக்கொடுங்கள். உங்கள் இளம் நண்பர்களை ஆறுதல்படுத்தும்போதும் பலப்படுத்தும்போதும் கண்டிப்பாக உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும்.—சங். 71:18.
(பாரா 11)
12. ஏசாயா 46:4 சொல்வதுபோல், வயதானவர்களுக்கு என்ன செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்? (படத்தையும் பாருங்கள்.)
12 பலத்துக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். சிலசமயங்களில் நீங்கள் பலவீனமாக, மனதளவில் சோர்வாக உணரலாம். அப்போதெல்லாம் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: யெகோவாவுக்கு நிறைய சக்தி இருக்கிறது. “அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை.” (ஏசா. 40:28) அதனால், உங்களுக்குத் தேவையான பலத்தை அவரால் கொடுக்க முடியும். (ஏசா. 40:29-31) சொல்லப்போனால், அப்படிக் கொடுப்பதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 46:4-ஐ வாசியுங்கள்.) கொடுத்த வாக்கை அவர் எப்போதுமே காப்பாற்றுவார். (யோசு. 23:14; ஏசா. 55:10, 11) ஜெபம் செய்த பிறகு, யெகோவாவுடைய அன்பும் உதவியும் உங்களுக்குக் கிடைப்பதை உணரும்போது, உங்களுக்குக் கண்டிப்பாகச் சந்தோஷமாக இருக்கும்.
(பாரா 12)
13. 2 கொரிந்தியர் 4:16-18 சொல்கிற மாதிரி, வயதானவர்கள் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)
13 உங்களுடைய நிலைமை தற்காலிகமானது என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். கஷ்டமான ஒரு சூழ்நிலை தற்காலிகமானதுதான், அது சீக்கிரத்தில் சரியாகிவிடும் என்று நமக்குத் தெரிந்தால், அதைச் சகித்திருப்பது நமக்குச் சுலபமாக இருக்கும். அதேமாதிரிதான் உங்களுடைய முதுமையும் உடல்நல பிரச்சினைகளும். இவையெல்லாம் தற்காலிகமானதுதான் என்று பைபிள் சொல்கிறது. (யோபு 33:25; ஏசா. 33:24) இளமை பூத்துக்குலுங்கிய வசந்த காலம் போய்விட்டதே என்று கவலைப்படாதீர்கள்; உண்மையான வசந்த காலம் இனிமேல்தான் வரப்போகிறது! இதை நினைத்து நீங்கள் சந்தோஷப்படலாம். (2 கொரிந்தியர் 4:16-18-ஐ வாசியுங்கள்.) சரி, வயதானவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உதவி செய்யலாம்?
(பாரா 13)
மற்றவர்கள் எப்படி உதவலாம்
14. வயதானவர்களைப் போய்ப் பார்ப்பதும் அவர்களுக்கு ஃபோன் பண்ணுவதும் ஏன் முக்கியம்?
14 வயதான சகோதர சகோதரிகளைத் தவறாமல் போய் பாருங்கள், அவர்களுக்கு ஃபோன் பண்ணுங்கள். (எபி. 13:16) வயதானவர்கள் தன்னந்தனியாக இருப்பதுபோல் உணரலாம். வீட்டில் முடங்கிப்போய் இருக்கிற கேமி என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “காலையிலிருந்து ராத்திரிவரை நான் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கிறேன். எனக்கு ரொம்ப சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருக்கும். கூண்டுக்குள் அடைபட்ட வயதான ஒரு சிங்கம் மாதிரி எனக்குத் தோன்றும். என் நிலைமையை யோசிக்கும்போது கோபமாகவும், விரக்தியாகவும் இருக்கும்.” வயதானவர்களைப் போய் சந்திக்கும்போது, அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அவர்கள்மேல் நாம் உயிரையே வைத்திருக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம். வயதானவர்களைப் போய் பார்க்க வேண்டும்... அவர்களுக்கு ஃபோன் பண்ண வேண்டும்... என்று நாம் எல்லாருமே யோசித்திருப்போம். ஆனால் பிறகு மறந்திருப்போம். நாம் எல்லாருமே பிஸியாக இருக்கிறோம் என்பது உண்மைதான். இருந்தாலும், ‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ முதலிடம் கொடுக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (பிலி. 1:10) வயதானவர்களைப் போய்ப் பார்ப்பதும் அதில் உட்பட்டிருக்கிறது. அதனால், வயதானவர்களுக்கு ஃபோன் அல்லது மெசேஜ் பண்ண வேண்டும் என்பதை ஃபோனிலோ காலண்டரிலோ குறித்து வைத்துக்கொள்ளலாம். ‘நேரம் இருந்தால் போய்ப் பார்க்கலாம்’ என்று நினைக்காமல், அவர்களைப் பார்ப்பதற்கென்றே ஒரு நேரத்தை ஒதுக்கிவைக்கலாம்.
15. இளைஞர்களும் வயதானவர்களும் ஒன்றாகச் சேர்ந்து என்னவெல்லாம் செய்யலாம்?
15 நீங்கள் ஒரு இளைஞராக இருந்தால், வயதானவர்களிடம் என்ன பேசுவது... அவர்களோடு சேர்ந்து என்ன செய்வது... என்று யோசிக்கலாம். ஆனால் அதைப் பற்றி ரொம்ப கவலைப்படாதீர்கள். அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருங்கள், அது போதும்! (நீதி. 17:17) கூட்டங்களுக்கு முன்போ பின்போ அவர்களிடம் போய்ப் பேசுங்கள். ஒருவேளை, அவர்களுக்கு எந்தெந்த வசனங்கள் பிடிக்கும் என்று நீங்கள் கேட்கலாம். அல்லது, அவர்களுடைய சின்ன வயதில் நடந்த ஒரு காமெடியான சம்பவத்தைப் பற்றிக் கேட்கலாம். ஒரு JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியை உங்களோடு சேர்ந்து பார்க்க அவர்களைக் கூப்பிடலாம். வேறு விதங்களில்கூட நீங்கள் அவர்களுக்கு உதவலாம். அவர்களுடைய எலக்ட்ரானிக் சாதனங்களை அப்டேட்டாக வைக்க உதவலாம். சமீபத்தில் வந்த பிரசுரங்களை டவுன்லோட் செய்து கொடுக்கலாம். கேரல் என்ற வயதான சகோதரி இப்படிச் சொல்கிறார்: “உங்களுக்கு என்னவெல்லாம் செய்ய பிடிக்குமோ அதையே வயதானவர்களோடும் சேர்ந்து நீங்கள் செய்யலாம். எனக்கு வயதாகிவிட்டதுதான், இருந்தாலும் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க எனக்குப் பிடிக்கும். கடைகளுக்குப் போவது, வெளியே போய் சாப்பிடுவது, எங்கேயாவது போய் இயற்கையை ரசிப்பது போன்றவற்றையெல்லாம் செய்ய எனக்குப் பிடிக்கும்.” மீரா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய ஃபிரண்ட் ஒருவருக்கு 90 வயது. எங்களுக்குள் 57 வயது வித்தியாசம். ஆனால் அந்த வயது வித்தியாசமே தெரியாத அளவுக்கு நாங்கள் சந்தோஷமாகச் சிரித்துப் பேசுவோம், படம் பார்ப்போம். ஏதாவது பிரச்சினை வந்தால் ஒருவரிடம் ஒருவர் ஆலோசனை கேட்போம்.”
16. வயதானவர்கள் டாக்டரிடம் போகும்போது நாம் அவர்களோடு போவது எப்படி உதவியாக இருக்கும்?
16 வயதானவர்கள் டாக்டரிடம் போகும்போது அவர்களோடு போங்கள். அவர்களை வெறுமனே மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போவதும் வருவதும் மட்டுமல்லாமல், அவர்கள் கூடவே இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களுக்குச் சரியான மருத்துவ உதவி கிடைக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். (ஏசா. 1:17) அவர்களிடம் டாக்டர் சொல்வதை நீங்கள் எழுதிகூட வைத்துக்கொள்ளலாம். ரூத் என்ற வயதான சகோதரி இப்படிச் சொல்கிறார்: “பெரும்பாலான சமயங்களில், நான் தனியாக டாக்டரைப் பார்க்க போகும்போது, நான் சொல்வதை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார். ‘உங்கள் உடம்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏதோ பிரச்சினை இருப்பதுபோல் நீங்களாகவே கற்பனை செய்துகொள்கிறீர்கள்’ என்றுகூட சொல்லிவிடலாம். ஆனால், யாராவது என்னோடு வந்தால், டாக்டர் என்னை நடத்துகிற விதமே வேறு மாதிரி இருக்கும். சகோதர சகோதரிகள் தங்களுடைய நேரத்தை ஒதுக்கி என்னோடு வருவதற்காக நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.”
17. ஊழியம் செய்ய வயதானவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
17 வயதானவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யுங்கள். வயதானவர்கள் சிலருக்கு, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும் அளவுக்கு சக்தி இருக்காது. அப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து உங்களால் வீல்-ஸ்டாண்டு ஊழியம் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். வீல்-ஸ்டாண்டு பக்கத்திலேயே அவர்கள் உட்காருவதற்கு ஒரு நாற்காலியைக்கூட நீங்கள் கொடுக்கலாம். அவர்களை உங்கள் பைபிள் படிப்புக்குக் கூட்டிக்கொண்டு போகலாம். ஒருவேளை, அவர்களுடைய வீட்டிலேயே அந்தப் படிப்பை நடத்தலாம். வயதானவர்களுடைய வீட்டில் வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துவதற்கு மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம். அப்படிச் செய்தால், அதில் கலந்துகொள்வது அவர்களுக்கு வசதியாக இருக்கும். வயதானவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதற்காக நாம் செய்கிற சின்னச் சின்ன விஷயங்கள்கூட யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும்.—நீதி. 3:27; ரோ. 12:10.
18. அடுத்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
18 வயதானவர்களை யெகோவா எவ்வளவு நேசிக்கிறார், எவ்வளவு முக்கியமாக நினைக்கிறார் என்பதை இந்தக் கட்டுரை நமக்கு ஞாபகப்படுத்தியது. சபையில் இருக்கிற நாமும்கூட அவர்களை அப்படித்தான் நினைக்கிறோம்! வயதாவதால் நிறைய கஷ்டங்கள் வரலாம், ஆனால் யெகோவாவின் உதவியோடு உங்களால் சந்தோஷத்தை இழக்காமல் இருக்க முடியும். (சங். 37:25) உங்களுடைய இளமை காலம் ஒரேடியாக வாடிவிடவில்லை, அது மீண்டும் மலரும்! இது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!! அடுத்தக் கட்டுரையில், வேறுசில சகோதர சகோதரிகளுக்கு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பார்ப்போம். முடியாமல் இருக்கும் வயதானவரையோ, குழந்தையையோ, நண்பரையோ அவர்கள் கவனித்துக்கொண்டிருக்கலாம். அவர்கள் எப்படித் தங்கள் சந்தோஷத்தை இழக்காமல் இருக்கலாம் என்று பார்ப்போம்.
பாட்டு 30 என் தந்தை, என் தேவன், என் தோழன்!
a வயதானவர்களே—நீங்கள் ரொம்ப முக்கியமானவர்கள் என்ற வீடியோவை jw.org-ல் அல்லது JW லைப்ரரியில் பாருங்கள்.
b வார்த்தைகளின் விளக்கம்: சந்தோஷம் என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்று. (கலா. 5:22) உண்மையான சந்தோஷம், யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்வதால் கிடைக்கிறது.