வண்டி ஓட்டுவதை நான் நிறுத்த வேண்டுமா?
நீங்கள் பல வருஷங்களாக காரையோ பைக்கையோ ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கென்று ஒரு வண்டி இருப்பதால், சுதந்திரப் பறவையாக நினைத்த இடத்துக்கு எல்லாம் போக முடிந்திருக்கிறது. ஆனால் இப்போது, உங்கள் குடும்பமும் நண்பர்களும் உங்கள் பாதுகாப்பை நினைத்து கவலைப்படுகிறார்கள். ‘வண்டி ஓட்டுவதை பேசாமல் நிறுத்திவிடுங்கள்’ என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்று உங்களுக்குப் புரியவேயில்லை.
இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், வண்டி ஓட்ட வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை எடுக்க எதுவெல்லாம் உங்களுக்கு உதவும்?
சில நாடுகளில், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு லைசன்ஸை புதுப்பிக்க டாக்டரிடமிருந்து சான்றிதழ் தேவைப்படும். இந்த மாதிரி நாடுகளில் வாழ்கிற கிறிஸ்தவர்கள், உள்ளூர் சட்டங்களுக்கும் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். (ரோ. 13:1) நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் சரி, நீங்கள் பாதுகாப்பாக வண்டி ஓட்டுகிறீர்களா என்பதைச் சோதித்துப் பார்க்க வழிகள் இருக்கின்றன.
உங்கள் வண்டி ஓட்டும் திறனை சோதித்துப் பாருங்கள்
அமெரிக்காவில் இருக்கிற நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆன் ஏஜிங் (NIA) என்ற அமைப்பின் வெப்சைட்டில் சொல்லப்பட்டிருக்கிற மாதிரி, கீழே இருக்கும் கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்:
சாலை குறியீடுகளைப் பார்ப்பது எனக்குக் கஷ்டமாக இருக்கிறதா, அல்லது ராத்திரியில் என் கண்பார்வை குறைகிறதா?
என் தலையைத் திருப்பி வண்டியின் கண்ணாடிகளைப் பார்ப்பதோ, அவ்வளவாக கண்ணில் படாத பிளைண்ட் ஸ்பாட்டை (blind spot) பார்ப்பதோ கஷ்டமாக இருக்கிறதா?
சட்டென்று செயல்படுவது கஷ்டமாக இருக்கிறதா? உதாரணத்துக்கு, ஆக்சிலரேட்டர்-லிருந்து பிரேக்-க்கு வேகமாக காலை நகர்த்த முடிகிறதா?
வாகனங்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கும் சாலையில் நான் மட்டும் ரொம்ப மெதுவாக வண்டியை ஓட்டிக்கொண்டு போகிறேனா?
எப்போதாவது விபத்து நடக்கும் அளவுக்கு போயிருக்கிறதா, அல்லது நின்றுகொண்டிருக்கும் பொருள்கள்மேல் மோதியதால் என்னுடைய வண்டியில் ஒடுக்குகளும் கீறல்களும் ஏற்பட்டிருக்கின்றனவா?
நான் சரியாக ஓட்டாததால் போலீஸ் என்னை நிறுத்தி விசாரித்திருக்கிறார்களா?
நான் எப்போதாவது வண்டி ஓட்டும்போது தூங்கி இருக்கிறேனா?
வண்டி ஓட்டுவதைக் கஷ்டமாக்கும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுகிறேனா?
என் குடும்பத்தில் இருக்கிறவர்களோ நண்பர்களோ நான் வண்டி ஓட்டும் விதத்தைப் பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறார்களா?
இதில் ஒன்று அல்லது இரண்டு கேள்விகளுக்கு ‘ஆமாம்’ என்று நீங்கள் பதில் சொன்னால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். உதாரணத்துக்கு, வண்டி ஓட்டுவதை குறைத்துக்கொள்ள வேண்டியிருக்குமா என்று யோசிக்கலாம். முக்கியமாக, ராத்திரி நேரத்தில்! நீங்கள் எப்படி வண்டி ஓட்டுகிறீர்கள் என்பதை நீங்களே அடிக்கடி சோதித்துப் பார்க்கலாம். அல்லது, குடும்பத்தில் இருக்கிறவர்களோ நண்பர்களோ நீங்கள் வண்டி ஓட்டுவதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கலாம். இன்னும் பாதுகாப்பாக வண்டி ஓட்டுவதற்கு ஏதாவது வகுப்புகள் நடந்தால் அதிலும் கலந்துகொள்ளலாம். ஆனால், மேலே இருக்கும் நிறைய கேள்விகளுக்கு ‘ஆமாம்’ என்று நீங்கள் பதில் சொன்னால், வண்டி ஓட்டுவதை நிறுத்துவதைப் பற்றி யோசிப்பது உங்களுக்கு நல்லது.a
பைபிள் நியமங்களை வைத்து முடிவெடுங்கள்
வண்டி ஓட்டும் திறமை குறைந்துகொண்டே வருவதை நாம் உணராமல் இருக்கலாம். இனிமேலும் வண்டி ஓட்ட முடியாது என்பதை ஏற்றுக்கொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். நம் சூழ்நிலையை நியாயமாக யோசித்துப் பார்ப்பதற்கும், நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் சில பைபிள் நியமங்கள் நமக்கு உதவும். இப்போது இரண்டு நியமங்களைப் பார்க்கலாம்.
அடக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள். (நீதி. 11:2) வயதாக வயதாக நம் கண்பார்வை, காது கேட்கும் திறன், சட்டென்று செயல்படும் திறன் மற்றும் தசைகள் பலவீனமாகும். இந்தக் காரணத்தால்தான், நிறைய பேர் வயதாகும்போது அதுவரை விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டுகளை இனிமேலும் விளையாட வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஏனென்றால், தொடர்ந்து விளையாடினால் காயம் ஏற்படும் என்று அவர்களுக்குத் தெரியும். வண்டி ஓட்டும் விஷயத்திலும் இதுதான் உண்மை. தன்னுடைய பாதுகாப்பை மனதில் வைத்து, ஒரு கட்டத்தில் வண்டி ஓட்ட வேண்டாம் என்று ஒரு நபர் அடக்கத்தோடு முடிவெடுப்பது நல்லது. (நீதி. 22:3) தான் வண்டி ஓட்டும் விதத்தைப் பற்றி மற்றவர்கள் ஏதாவது சொன்னால், அடக்கத்தோடு இருக்கிற ஒரு நபர் அதைக் காதுகொடுத்துக் கேட்பார்.—2 சாமுவேல் 21:15-17-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
இரத்தப்பழிக்கு ஆளாகிவிடாதீர்கள். (உபா. 22:8) சரியாக வண்டி ஓட்ட தெரியாத ஒருவரின் கையில், ஒரு காரோ பைக்கோ பயங்கர ஆபத்தான ஆயுதமாக மாறிவிடலாம். வண்டி ஓட்டும் திறன் குறைந்த பிறகும் அவர் தொடர்ந்து வண்டி ஓட்டிக்கொண்டே இருந்தால், அவருடைய உயிரும் ஆபத்தில் இருக்கலாம்; மற்றவர்களுடைய உயிருக்கும் அவர் உலைவைத்துவிடலாம். ஒருவேளை, ஏதாவது பெரிய விபத்தை அவர் ஏற்படுத்திவிட்டால், இரத்தப்பழியைக்கூட சுமக்க வேண்டியிருக்கலாம்.
வண்டி ஓட்டுவதை நிறுத்திவிட்டால், ‘என்னுடைய தன்மானம் போய்விடுமோ? மற்றவர்கள் என்னை ஒரு ஆளாகவே மதிக்க மாட்டார்களோ?’ என்றெல்லாம் யோசித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், உங்களிடம் இருக்கிற அழகான குணங்களைப் பார்த்துதான் யெகோவா உங்களை நேசிக்கிறார். உங்களிடம் இருக்கிற அடக்கம், மனத்தாழ்மை, மற்றவர்கள்மேல் நீங்கள் வைத்திருக்கிற அக்கறை என எல்லாவற்றையும் அவர் பார்க்கிறார். அவர் உங்களைத் தாங்குவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். (ஏசா. 46:4) உங்களை அவர் என்றுமே கைவிடமாட்டார்! உங்களுக்கு இருக்கிற ஞானத்தையும், பைபிள் நியமங்களையும் பயன்படுத்தி நல்ல முடிவு எடுப்பதற்கு உதவ சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள்.
a கூடுதலான தகவல்களுக்கு, செப்டம்பர் 8, 2002 விழித்தெழு! பத்திரிகையில் “வாகன விபத்துக்கள்—நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.