‘கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள்’
எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் இப்படி உற்சாகப்படுத்தினார்: “அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்; கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானப் பிணைப்பில் ஒன்றிணைக்கப்பட்டவர்களாக வாழ்வதற்கும் ஊக்கமாக முயற்சி செய்யுங்கள்.”—எபே. 4:2, 3, அடிக்குறிப்பு.
“கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமை” என்று பவுல் சொன்னதைக் கவனித்தீர்களா? அப்படியென்றால், இன்று நாம் அனுபவிக்கும் ஒற்றுமைக்குக் காரணம் கடவுளுடைய சக்திதான். ஆனால், அந்த ஒற்றுமையைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் பவுல் சொல்லியிருப்பதைக் கவனித்தீர்களா? யார் காத்துக்கொள்ள வேண்டும்? கிறிஸ்தவர்களாக இருக்கிற ஒவ்வொருவரும் அதைக் காத்துக்கொள்ள தங்கள் பங்கில் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்.
இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்: ஒருவர் உங்களுக்கு ஒரு புதிய காரைப் பரிசாகக் கொடுக்கிறார். அந்த காரை நன்றாகப் பராமரிப்பது யாருடைய பொறுப்பு? பதில் நமக்குத் தெரிந்ததுதான்! ஒருவேளை அதை நீங்கள் சரியாகப் பராமரிக்காததால் அது ரிப்பேர் ஆகிவிட்டால், அதைக் கொடுத்தவரை குறைசொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது!
அதேமாதிரி, நாம் அனுபவிக்கும் ஒற்றுமை கடவுள் கொடுத்த பரிசாக இருந்தாலும், அதைக் காத்துக்கொள்வது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பு. ஒரு சகோதரரோடு அல்லது சகோதரியோடு உங்களுக்கு ஏதாவது விரிசல் ஏற்பட்டிருந்தால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்காக, அந்த விரிசலைச் சரிசெய்ய நான் முயற்சி எடுக்கிறேனா?’
ஒற்றுமையைக் காத்துக்கொள்ள “ஊக்கமாக முயற்சி செய்யுங்கள்”
பவுல் சொன்ன மாதிரி, சிலசமயம் கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்ள நாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம். அதுவும், ஒரு சகோதரரோ சகோதரியோ நம்மைக் காயப்படுத்தியிருந்தால் நாம் அப்படிச் செய்ய வேண்டியிருக்கலாம். ஒற்றுமையைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறை பிரச்சினை வரும்போதும் அந்த நபரிடம் போய் அதைப் பற்றிப் பேசி தீர்க்க வேண்டுமா? அவசியம் இல்லை. உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘இந்த விஷயத்தைப் பற்றி அந்த நபரிடம் பேசினால் உண்மையிலேயே பிரச்சினை சரியாகுமா அல்லது அதை ஊதிப் பெரிதாக்குவதுபோல் ஆகிவிடுமா?’ சிலசமயங்களில் ஒரு விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது அல்லது அதை மன்னிப்பது ஞானமான செயலாக இருக்கும்.—நீதி. 19:11; மாற். 11:25.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘இந்த விஷயத்தைப் பற்றி அந்த நபரிடம் பேசினால் உண்மையிலேயே பிரச்சினை சரியாகுமா அல்லது அதை ஊதிப் பெரிதாக்குவதுபோல் ஆகிவிடுமா?’
அப்போஸ்தலன் பவுல் சொன்ன மாதிரி, ‘அன்பினால் ஒருவரை ஒருவர் நாம் பொறுத்துக்கொள்ள’ வேண்டும். (எபே. 4:2) இந்த வார்த்தைகளை, “ஒரு நபர் எப்படி இருக்கிறாரோ அதேமாதிரி அவரை ஏற்றுக்கொள்வது” என்றுகூட சொல்லலாம் என ஒரு ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது. அப்படியென்றால், நம்மைப் போலவே நம் சகோதர சகோதரிகளும் பாவ இயல்புள்ளவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உண்மைதான், நாம் எல்லாருமே “புதிய சுபாவத்தை” போட்டுக்கொள்ள முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம். (எபே. 4:23, 24) இருந்தாலும், நாம் யாராலுமே நூற்றுக்கு நூறு அதைச் சரியாகச் செய்ய முடியாது. (ரோ. 3:23) இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்வதும், மன்னிப்பதும், ‘கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதும்’ சுலபமாக இருக்கும்.
நமக்குள் இருக்கிற மனஸ்தாபங்களைச் சரிசெய்யும்போது—அதுவும் மனதுக்குள் ஒளிந்திருக்கிற மனஸ்தாபங்களைச் சரிசெய்யும்போது—“சமாதானப் பிணைப்பில் ஒன்றிணைக்கப்பட்டவர்களாக” இருப்போம். எபேசியர் 4:3-ல் இருக்கிற “ஒன்றிணைக்கப்பட்ட” என்பதற்கான கிரேக்க வார்த்தை, கொலோசெயர் 2:19-ல் ‘தசைநார்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தசைநார்கள் என்பது நம் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கும் உறுதியான திசுக்கள். இந்தத் தசைநார்களை மாதிரியே சமாதானமும் அன்பும், நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்க உதவுகிறது—மற்றவர்கள் செய்வது நமக்குப் பிடிக்கவில்லை என்றால்கூட!
அதனால், சகோதர சகோதரிகள் நம் மனதைக் காயப்படுத்தும்போது, நம்மைக் கோபப்படுத்தும்போது அல்லது கடுப்பேத்தும்போது அவர்களிடம் குறைகண்டுபிடிப்பதற்கு பதிலாக அவர்களிடம் கரிசனை காட்டுவதற்கு முயற்சி செய்யுங்கள். (கொலோ. 3:12) ஏனென்றால், நாம் எல்லாருமே பாவ இயல்புள்ளவர்கள். நீங்களும் ஏதாவது ஒருசமயத்தில் மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்தியிருக்கலாம். இதை மனதில் வைத்துக்கொண்டால், ‘கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்ள’ உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய முடியும்.