உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 நவம்பர் பக். 22-27
  • கடவுளுக்கு நீங்கள் மிகவும் பிரியமானவர்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுக்கு நீங்கள் மிகவும் பிரியமானவர்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மக்கள் தங்கள் மதிப்பைப் புரிந்துகொள்ள இயேசு உதவினார்
  • யெகோவா பார்ப்பதுபோல் நம்மையே நாம் எப்படிப் பார்க்கலாம்
  • ‘உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • யெகோவா உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • பூமியில் இயேசுவின் கடைசி 40 நாட்கள்—பாடங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 நவம்பர் பக். 22-27

படிப்புக் கட்டுரை 47

பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

கடவுளுக்கு நீங்கள் மிகவும் பிரியமானவர்கள்!

“ கடவுளுக்கு நீ மிகவும் பிரியமானவன்.”—தானி. 9:23.

என்ன கற்றுக்கொள்வோம்?

தங்களைப் பற்றித் தாழ்வாக நினைக்கிறவர்கள், யெகோவாவின் பார்வையில் எவ்வளவு உயர்வாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.

1-2. யெகோவாவுக்கு நாம் பிரியமானவர்களாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள எது உதவும்?

யெகோவாவின் அருமையான ஊழியர்களில் சிலர், தங்களைப் பற்றியே தாழ்வாக நினைக்கிறார்கள். ஒருவேளை, மற்றவர்கள் அவர்களை மோசமாகவும் தரக்குறைவாகவும் நடத்தியதால் அவர்கள் அப்படி உணரலாம். உங்களுக்கும் அப்படிப்பட்ட உணர்வு இருக்கிறதா? அப்படியென்றால், யெகோவாவுக்கு நீங்கள் பிரியமானவன்/பிரியமானவள் என்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

2 மக்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார் என்பதை பைபிள் காட்டுகிறது; அதைப் புரிந்துகொள்வது உங்களுக்கு உதவும். அவருடைய மகன் இயேசு, மக்களை மதிப்பு மரியாதையோடு நடத்தினார். இப்படிச் செய்வதன் மூலம், தங்களைப் பற்றித் தாழ்வாக நினைக்கிறவர்களை அவரும் அவருடைய அப்பாவும் எவ்வளவு உயர்வாக நினைக்கிறார்கள் என்பதைக் காட்டினார். (யோவா. 5:19; எபி. 1:3) இந்தக் கட்டுரையில் இரண்டு விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம். முதலில், மக்களை யெகோவா உயர்வாகப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள, இயேசு எப்படி உதவினார் என்று பார்ப்போம். அடுத்து, யெகோவா நம்மை உயர்வாகப் பார்க்கிறார் என்பதை நமக்கு நாமே எப்படி உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.—ஆகா. 2:7.

மக்கள் தங்கள் மதிப்பைப் புரிந்துகொள்ள இயேசு உதவினார்

3. உதவிக்காகத் தன்னிடம் வந்த கலிலேய மக்களை இயேசு எப்படி நடத்தினார்?

3 இயேசு மூன்றாவது தடவையாக கலிலேயாவில் ஊழியப் பயணம் செய்தபோது, மக்கள் அவரிடம் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்பதற்காகவும், வியாதிகளிலிருந்து குணமாவதற்காகவும் அவரிடம் வந்தார்கள். அப்போது, அந்த மக்கள் “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் . . . கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும்” இருந்ததை இயேசு கவனித்தார். (மத். 9:36; ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.) அன்றிருந்த மதத் தலைவர்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. சொல்லப்போனால், அந்த மக்கள் “சபிக்கப்பட்டவர்கள்” என்றுகூட சொன்னார்கள். (யோவா. 7:47-49; ஆங்கில ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) ஆனால், இயேசு நேரம் எடுத்து அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதன் மூலமும் அவர்களுடைய வியாதிகளைக் குணப்படுத்துவதன் மூலமும் அவர்களைக் கவுரவப்படுத்தினார். (மத். 9:35) இன்னும் நிறைய பேருக்கு உதவுவதற்காக பிரசங்க வேலையைச் செய்ய தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கும் பயிற்சி கொடுத்தார்; நோய்களையும் உடல் குறைபாடுகளையும் குணப்படுத்துவதற்கான அதிகாரத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.—மத். 10:5-8.

4. தாழ்வாகப் பார்க்கப்பட்ட மக்களை இயேசு நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

4 தன்னைத் தேடி வந்த மக்களை இயேசு மரியாதையோடும் கரிசனையோடும் நடத்தியதன் மூலம், சமுதாயத்தில் தாழ்வாகப் பார்க்கப்பட்டவர்கள்கூட, தனக்கும் தன்னுடைய அப்பாவுக்கும் பிரியமானவர்கள் என்பதைக் காட்டினார். யெகோவாவை வணங்கும் உங்களுக்கும், உங்களைப் பற்றித் தாழ்வான எண்ணம் இருக்கிறதா? அப்படியென்றால், தன்னிடம் கற்றுக்கொள்வதற்காக வந்த சாதாரண மக்களுக்கு இயேசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்யும்போது, யெகோவாவின் கண்ணில் நீங்கள் பிரியமானவர்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

5. கலிலேயாவில் இயேசு சந்தித்த பெண் என்ன சூழ்நிலையில் இருந்தாள்?

5 கூட்டத்தாருக்கு மட்டுமல்ல, தனி நபர்களுக்கும் இயேசு கற்றுக்கொடுத்தார், அவர்களுக்கு உதவி செய்தார். உதாரணத்துக்கு, கலிலேயாவில் அவர் ஊழியம் செய்தபோது, 12 வருஷங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சந்தித்தார். (மாற். 5:25) அவளுக்கு இருந்த உடல்நல பிரச்சினையால், திருச்சட்டத்தின்படி அவள் தீட்டுப்பட்டிருந்தாள். யாராவது அவளைத் தொட்டால் அவர்களும் தீட்டுப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள். அதனால், அவளால் மக்களோடு சகஜமாகப் பழகியிருக்க முடிந்திருக்காது; பெரும்பாலும், வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்திருக்கலாம். கடவுளை வணங்குவதற்காகக்கூட பொது இடங்களுக்கு வரவோ பண்டிகைகளில் கலந்துகொள்ளவோ முடிந்திருக்காது. (லேவி. 15:19, 25) அந்தப் பெண் உடலளவில் மட்டுமல்ல, கண்டிப்பாக மனதளவிலும் உடைந்துபோயிருப்பாள்.—மாற். 5:26.

6. இரத்தப்போக்கினால் அவதிப்பட்ட பெண், குணமாவதற்கு என்ன செய்தாள்?

6 இயேசு தன்னைக் குணமாக்குவார் என்று அந்தப் பெண் நம்பினாள். ஆனால், அவரிடம் நேரடியாகப் போய் அவள் கேட்கவில்லை. ஏனென்றால், அவளுக்குக் கூச்சமாகவோ சங்கடமாகவோ இருந்திருக்கலாம். அல்லது, தீட்டுப்பட்டவளாக இருந்ததால், கூட்டத்தின் நடுவில் போனால் இயேசு தன்னைத் திட்டிவிடுவாரோ என்றுகூட அவள் பயந்திருக்கலாம். அதனால், இயேசுவின் மேலங்கியை மட்டுமே தொட்டாள். அப்படிச் செய்தாலே குணமாகிவிடுவோம் என்று நம்பினாள். (மாற். 5:27, 28) அவளுடைய விசுவாசம் வீண்போகவில்லை; அவள் குணமானாள்! யார் தன்னைத் தொட்டது என்று இயேசு கேட்டபோது, அவள் செய்ததை மறைக்காமல் சொன்னாள். அப்போது, இயேசு அவளிடம் எப்படி நடந்துகொண்டார்?

7. ரொம்பவே வேதனையில் இருந்த அந்தப் பெண்ணை இயேசு எப்படி நடத்தினார்? (மாற்கு 5:34)

7 இயேசு அந்தப் பெண்ணை மரியாதையோடும் அன்போடும் நடத்தினார். அவள் “பயத்தோடும் நடுக்கத்தோடும்” இருந்ததை அவர் கவனித்தார். (மாற். 5:33) அவளுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, அவளிடம் ஆறுதலாகப் பேசினார். அவளை “மகளே” என்றுகூட கூப்பிட்டார். (மாற்கு 5:34-ஐ வாசியுங்கள்.) இப்படிச் சொல்வதன் மூலம், அவள்மேல் மரியாதையும் பாசமும் வைத்திருந்ததைக் காட்டினார். இயேசு ஒரு பெண்ணை நேரடியாக “மகளே” என்று கூப்பிட்ட பதிவு, பைபிளில் இந்த ஒரு இடத்தில்தான் இருக்கிறது. அவளுடைய பரிதாபமான நிலையையும், அவள் ‘நடுங்கிக்கொண்டிருந்ததையும்’ பார்த்து இயேசு அவளை அப்படிக் கூப்பிட்டிருக்கலாம். இயேசுவின் வார்த்தைகள் அவளுக்கு எவ்வளவு நிம்மதியைத் தந்திருக்கும்! ஒருவேளை, இயேசு அவளிடம் ஆறுதலாகப் பேசாமல் இருந்திருந்தால்கூட, அவள் உடலளவில் குணமாகியிருப்பாள்; ஆனால், மனதில் பாரத்தையும் குற்ற உணர்வையும் சுமந்துகொண்டு போயிருப்பாள். இயேசு அவளை அன்பாக நடத்தியதன் மூலம், யெகோவாவுக்கு அவள் பிரியமான மகள் என்பதைப் புரியவைத்தார்.

8. பிரேசிலில் இருந்த ஒரு சகோதரிக்கு என்ன சவால்கள் இருந்தன?

8 இன்றும் உடல்நல பிரச்சினைகளின் காரணமாக சிலர் தாழ்வு மனப்பான்மையோடு போராடலாம். யெகோவாவின் ஊழியர்கள் சிலருக்குக்கூட இப்படி நடந்திருக்கிறது. பிரேசிலில் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்யும் மரியாa என்ற சகோதரிக்கு, பிறக்கும்போதே இடது கையும் இரண்டு கால்களும் இல்லை. அவர் சொல்கிறார்: “எனக்கு உடல் குறைபாடு இருப்பதால், பள்ளியில் எல்லாரும் என்னை எப்போதும் கேலி-கிண்டல் செய்துகொண்டே இருந்தார்கள். என் மனசைக் காயப்படுத்துகிற மாதிரி பட்டப்பெயர்களை வைத்துக் கூப்பிட்டார்கள். குடும்பத்தில் இருந்தவர்கள்கூட என்னைத் தாழ்வாகப் பார்த்தார்கள்.”

9. தான் யெகோவாவுக்குப் பிரியமானவள் என்பதைப் புரிந்துகொள்ள மரியாவுக்கு எப்படி உதவி கிடைத்தது?

9 மரியாவுக்கு எப்படி உதவி கிடைத்தது? அவர் யெகோவாவின் சாட்சியாக ஆன பிறகு, சகோதர சகோதரிகள் அவருக்கு ஆறுதலாக இருந்தார்கள்; யெகோவா பார்க்கிற மாதிரியே தன்னைப் பார்ப்பதற்கு உதவினார்கள். அதைப் பற்றி மரியா சொல்கிறார்: “எனக்கு உதவி செய்த சகோதர சகோதரிகளுடைய பெயர்களையெல்லாம் எழுதுவதற்கு என் நோட்-புக்கில் பக்கங்கள் பத்தவில்லை. இவ்வளவு அழகான ஒரு குடும்பத்தைக் கொடுத்ததற்காக நான் யெகோவாவுக்கு மனசார நன்றி சொல்கிறேன்.” தான் யெகோவாவுக்குப் பிரியமானவள் என்பதைப் புரிந்துகொள்ள மரியாவுக்கு சகோதர சகோதரிகள் உதவினார்கள்.

10. மகதலேனா மரியாளுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தன? (படங்களையும் பாருங்கள்.)

10 இயேசு உதவி செய்த இன்னொரு பெண்ணைப் பற்றிப் பார்க்கலாம். அவள்தான் மகதலேனா மரியாள். அவளை ஏழு பேய்கள் பிடித்திருந்தன! (லூக். 8:2) பேய் பிடித்திருந்ததால் அவள் ஒருவேளை வினோதமாக நடந்திருக்கலாம். அதனால் மற்றவர்கள் அவளிடம் இருந்து ஒதுங்கியே இருந்திருக்கலாம். அவள் சித்திரவதையை அனுபவித்த அந்தக் காலப்பகுதியில் ரொம்ப பயந்துபோய் இருந்திருப்பாள், மற்றவர்களுடைய அன்புக்காக ஏங்கியிருப்பாள்; யாராலும் தனக்கு உதவ முடியாது என்றும் நினைத்திருப்பாள். ஆனால், அவளைப் போட்டு வாட்டியெடுத்த அந்தப் பேய்களை இயேசு துரத்தினார். அதற்குப் பிறகு, அவள் இயேசுவின் சீஷராக ஆனாள். யெகோவாவுக்கு அவள் பிரியமானவள் என்பதைப் புரிந்துகொள்ள இயேசு மற்ற விதங்களிலும் உதவினார். எப்படி என்று பார்க்கலாம்.

படத்தொகுப்பு: 1. இருட்டாக இருக்கும் ஒரு சந்துக்குள் மகதலேனா மரியாள் மண்டியிட்டு வேதனையோடு அழுவதை இயேசு கவனிக்கிறார். 2. மகதலேனா மரியாள், இயேசுவோடும் அவருடைய சீஷர்களோடும் சேர்ந்து சந்தோஷமாகப் போகிறார்.

தான் யெகோவாவுக்குப் பிரியமானவள் என்பதை நம்ப இயேசு எப்படி மகதலேனா மரியாளுக்கு உதவினார்? (பாராக்கள் 10-11)


11. மகதலேனா மரியாள், யெகோவாவுக்குப் பிரியமானவள் என்பதை இயேசு எப்படிக் காட்டினார்? (படங்களையும் பாருங்கள்.)

11 இயேசு ஊழியப் பயணம் செய்தபோது தன்னோடு வருவதற்கான அருமையான வாய்ப்பை மகதலேனா மரியாளுக்குக் கொடுத்தார்.b மற்றவர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தபோது மகதலேனா மரியாளும் அதைக் கேட்டு தொடர்ந்து பயனடைந்திருப்பாள். அதோடு, இயேசு உயிர்த்தெழுந்த அன்றைக்கே மகதலேனா மரியாளுக்கு முன் தோன்றினார். அன்று இயேசு முதலில் சந்தித்துப் பேசிய சில சீஷர்களில் இவளும் ஒருத்தி. தான் உயிர்த்தெழுந்த செய்தியை அப்போஸ்தலர்களிடம் போய் சொல்லும் நியமிப்பையும் இயேசு இவளுக்குக் கொடுத்தார். மகதலேனா மரியாள், யெகோவாவுக்குப் பிரியமானவளாக இருந்தாள் என்பது தெளிவாகத் தெரிகிறது!—யோவா. 20:11-18.

12. அன்பு கிடைக்க தனக்குத் தகுதியே இல்லை என்று லிடியா உணர்வதற்கு எது காரணமாக இருந்தது?

12 மகதலேனா மரியாள் உணர்ந்த மாதிரியே இன்றும் நிறைய பேர் உணர்கிறார்கள். மற்றவர்களால் ஒதுக்கப்பட்டதுபோல் உணர்கிறார்கள். ஸ்பெயினில் இருக்கிற லிடியா என்ற சகோதரியின் அம்மா, லிடியாவை கருவிலேயே கலைத்துவிடலாம் என்று நினைத்தாராம். பச்சிளம் குழந்தையாக இருந்தபோதுகூட அவருடைய அம்மா அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. எப்போதுமே லிடியாவை மோசமாகப் பேசினார். லிடியா சொல்கிறார்: “‘நான் ரொம்ப கெட்டவள், யாருக்கும் என்னைப் பிடிக்காது’ என்ற எண்ணத்தை அம்மா எனக்குள் ஆழமாக விதைத்திருந்தார். அதனால், மற்றவர்களுடைய அன்பைச் சம்பாதிக்க வேண்டும்... மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்... என்ற லட்சியத்தோடு நான் வாழ்ந்தேன்.”

13. தான் யெகோவாவுக்குப் பிரியமானவள் என்பதைப் புரிந்துகொள்ள லிடியாவுக்கு எது உதவியது?

13 சத்தியத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, லிடியாவின் வாழ்க்கை மாறியது. ஜெபம் செய்தது, பைபிளைப் படித்தது, சகோதர சகோதரிகளுடைய அன்பான வார்த்தைகளையும் செயல்களையும் ருசித்தது, தான் யெகோவாவுக்குப் பிரியமானவள் என்பதைப் புரிந்துகொள்ள லிடியாவுக்கு உதவியது. அவர் சொல்கிறார்: “என்மேல் உயிரையே வைத்திருப்பதை என் கணவர் அடிக்கடி சொல்வார். என்னிடம் இருக்கிற நல்ல குணங்களைத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துவார். என் நண்பர்களும் அதை எனக்கு ஞாபகப்படுத்துவார்கள்.” லிடியாவைப் போன்ற சூழ்நிலையில் இருக்கிற யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? யெகோவாவுக்கு அவர் பிரியமானவர் என்பதை நீங்கள் அவருக்குப் புரியவைக்க முடியுமா?

யெகோவா பார்ப்பதுபோல் நம்மையே நாம் எப்படிப் பார்க்கலாம்

14. யெகோவா பார்க்கிற மாதிரி நம்மையே பார்ப்பதற்கு 1 சாமுவேல் 16:7 எப்படி உதவுகிறது? (“யெகோவா ஏன் தன் மக்களைப் பிரியமானவர்களாகப் பார்க்கிறார்?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

14 இந்த உலகம் பார்க்கிற மாதிரி யெகோவா உங்களைப் பார்ப்பதில்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (1 சாமுவேல் 16:7-ஐ வாசியுங்கள்.) தோற்றம், அந்தஸ்து, படிப்பு போன்றவற்றை வைத்து இந்த உலகம் பொதுவாக நம்மை எடைபோடுகிறது; ஆனால் யெகோவா அப்படிச் செய்வதில்லை. (ஏசா. 55:8, 9) அதனால், உலகத்தின் தராசை வைத்து நீங்கள் உங்களை எடைபோடாதீர்கள்; யெகோவா உங்களைப் பார்ப்பதுபோல் பாருங்கள். இதைச் செய்ய சில பைபிள் பதிவுகள் உங்களுக்கு உதவும். எலியா, நகோமி, அன்னாள் மாதிரி சிலருக்குக்கூட அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்த்தது. ஆனால் யெகோவா அவர்களை எவ்வளவு உயர்வாக நினைத்தார் என்று யோசித்துப் பாருங்கள். யெகோவாவுக்கு நீங்கள் பிரியமானவன்(ள்) என்பதைக் காட்டும் நிறைய அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையிலேயே நடந்திருக்கும்; அவற்றையெல்லாம் எழுதி வையுங்கள். அதுமட்டுமல்ல, நம் பிரசுரங்களில் ‘தாழ்வு மனப்பான்மை’ போன்ற தலைப்புகளில் இருக்கும் தகவல்களைத் தேடிப் படியுங்கள்.c

யெகோவா ஏன் தன் மக்களைப் பிரியமானவர்களாகப் பார்க்கிறார்?

யெகோவா நம்மை மிருகங்களைப் போல் படைக்கவில்லை. தன்னோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு ஏற்ற மாதிரியும் தன்னுடைய நண்பராவதற்கு ஏற்ற மாதிரியும் படைத்திருக்கிறார். (ஆதி. 1:27; சங். 8:5; 25:14; ஏசா. 41:8) நம்மையே நாம் தாழ்வாகப் பார்க்க வேண்டியதில்லை என்பதற்கு இதுவே ஒரு நல்ல காரணம். ஆனால், இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. யெகோவாவிடம் நெருங்கிப் போக வேண்டும், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும், நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றெல்லாம் நாமாகவே ஆசைப்பட்டு முடிவெடுத்திருக்கிறோம். அதனால், நாம் அவருக்கு இன்னும் பிரியமானவர்களாக இருக்கிறோம்.—ஏசா. 49:15.

15. யெகோவா ஏன் தானியேலை ‘மிகவும் பிரியமானவனாக’ பார்த்தார்? (தானியேல் 9:23)

15 நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதை அவர் உயர்வாக நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தானியேல் தீர்க்கதரிசி கிட்டத்தட்ட 100 வயதை நெருங்கிய சமயத்தில், ஒரு கட்டத்தில் ‘மிகவும் களைத்துப்போனார்,’ மனம் உடைந்துபோனார். (தானி. 9:20, 21) அப்போது யெகோவா அவரை எப்படிப் பலப்படுத்தினார்? தானியேல் தனக்கு “பிரியமானவன்” என்பதை ஞாபகப்படுத்தவும், அவர் செய்த ஜெபங்கள் கேட்கப்பட்டன என்பதைச் சொல்லவும் காபிரியேல் தூதனை யெகோவா அனுப்பினார். (தானியேல் 9:23-ஐ வாசியுங்கள்.) தானியேல் ஏன் யெகோவாவுக்கு இவ்வளவு பிரியமானவராக இருந்தார்? அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருந்தன. முக்கியமாக, அவர் நீதியை நேசிக்கிறவராக இருந்தார், யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். அதனால், யெகோவாவுக்கு அவரை ரொம்ப பிடித்திருந்தது. (எசே. 14:14) நம்மை ஆறுதல்படுத்துவதற்காக யெகோவா இந்தப் பதிவை பைபிளில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். (ரோ. 15:4) நீங்கள் செய்யும் ஜெபங்களை யெகோவா கேட்கிறார். சரியானதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதாலும் அவருக்கு உண்மையாகச் சேவை செய்வதாலும் உங்களைத் தங்கமாகப் பார்க்கிறார்.—மீ. 6:8, அடிக்குறிப்புகள்; எபி. 6:10.

16. ஒரு அன்பான அப்பாவாக யெகோவாவைப் பார்க்க எது உங்களுக்கு உதவும்?

16 உங்களை நேசிக்கும் ஒரு அப்பாவாக யெகோவாவைப் பாருங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறார்; உங்களிடம் குறைகண்டுபிடிக்க அவர் நினைப்பதில்லை. (சங். 130:3; மத். 7:11; லூக். 12:6, 7) இந்த உண்மையை யோசித்துப் பார்த்தது, தாழ்வு மனப்பான்மையோடு போராடிய நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறது. ஸ்பெயினில் இருக்கிற எலியானா என்ற சகோதரியின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவருடைய கணவர் பல வருஷங்களாக அவரைத் தரக்குறைவாக பேசியிருக்கிறார். அவர் எதற்குமே லாயக்கில்லை என்ற உணர்வைக் கொடுத்திருக்கிறார். எலியானா சொல்கிறார்: “நான் யாருக்குமே பிரயோஜனமாக இல்லை என்ற எண்ணம் வரும்போது, யெகோவா என்னை அவருடைய கையில் அன்பாகத் தூக்கி சுமக்கிற மாதிரி கற்பனை செய்வேன். அவருடைய கையில் பாதுகாப்பாக இருப்பதை நான் யோசித்துப் பார்ப்பேன்.” (சங். 28:9) தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற லாரன் என்ற சகோதரியும் இப்படிச் சொல்கிறார்: “பாசமெனும் கயிறுகளால் யெகோவா என்னை மென்மையாக தன் பக்கம் இழுத்திருக்கிறார். இத்தனை வருஷங்கள் அவரோடு நெருங்கியிருக்க உதவியிருக்கிறார். அவரைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவும் என்னைப் பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவு செய்யும் யெகோவா கண்டிப்பாக என்னை மதிப்புள்ளவளாக, பிரயோஜனமுள்ளவளாகத்தான் பார்ப்பார்!”—ஓசி. 11:4.

17. யெகோவாவின் அங்கீகாரம் உங்களுக்கு இருக்கிறது என்பதில் உறுதியாக இருக்க எவையெல்லாம் உதவும்? (சங்கீதம் 5:12) (படத்தையும் பாருங்கள்.)

17 யெகோவாவின் அங்கீகாரம் உங்களுக்கு இருக்கிறது என்பதில் உறுதியாக இருங்கள். (சங்கீதம் 5:12-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.) நீதிமான்களை யெகோவா அங்கீகரிப்பதாகவும், ஒரு “பெரிய கேடயம்போல்” இருந்து அவர்களைப் பாதுகாப்பதாகவும் தாவீது சொல்கிறார். தாழ்வு மனப்பான்மை உங்களை வீழ்த்தப் பார்க்கும்போது, யெகோவாவின் அங்கீகாரமும் ஆதரவும் உங்களுக்கு இருக்கிறது என்ற உண்மை ஒரு பெரிய கேடயம்போல் உங்களைப் பாதுகாக்கும். சரி, யெகோவாவின் அங்கீகாரம் உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? இவ்வளவு நேரம் பார்த்த மாதிரி, தன்னுடைய வார்த்தையான பைபிள் மூலம் யெகோவா அந்த உறுதியைக் கொடுக்கிறார். அதோடு மூப்பர்களையும், நெருங்கிய நண்பர்களையும், மற்றவர்களையும் பயன்படுத்தி அவருக்கு நீங்கள் பிரியமானவர் என்பதை ஞாபகப்படுத்துகிறார். யெகோவா உங்களை இப்படியெல்லாம் பலப்படுத்தும்போது, நீங்கள் என்ன செய்யலாம்?

 ஒரு சகோதரி புன்னகையோடு ராஜ்ய மன்றத்தைவிட்டு கிளம்புகிறார். இன்னொரு சகோதரியோடு ஊழியம் செய்ய போகிறார். அந்த இன்னொரு சகோதரி, இவர் தோள்மேல் கை போட்டிருக்கிறார்.

யெகோவாவின் அங்கீகாரம் நமக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துவைத்திருக்கும்போது நம்மையே நாம் தாழ்வாக நினைக்க மாட்டோம்! (பாரா 17)


18. மற்றவர்கள் நம்மைப் பாராட்டி சொல்லும் வார்த்தைகளை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

18 உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்களும் உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறவர்களும் உங்களை மனசார பாராட்டும்போது அதை ஒதுக்கித்தள்ளாதீர்கள். தன்னுடைய அங்கீகாரம் உங்களுக்கு இருக்கிறது என்பதை யெகோவா இவர்கள் மூலம் காட்டலாம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். முன்பு பார்த்த எலியானா சொல்கிறார்: “மற்றவர்கள் பாசமாகச் சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள நான் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக்கொண்டு இருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அது எனக்கு ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், நான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்.” மூப்பர்கள் கொடுத்த உற்சாகமும் எலியானாவுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. இப்போது அவர் ஒரு பயனியராகவும் பெத்தேலுக்கு ரிமோட் வாலண்டியராகவும் சேவை செய்கிறார்.

19. கடவுளுக்கு நீங்கள் பிரியமானவர் என்பதில் ஏன் உறுதியாக இருக்கலாம்?

19 நம் பரலோக அப்பாவுக்கு நாம் மதிப்புள்ளவர்கள் என்பதை இயேசு ஞாபகப்படுத்துகிறார். (லூக். 12:24) அதனால், யெகோவாவுக்கு நீங்கள் பிரியமானவர் என்பதில் உறுதியாக இருங்கள். அதை என்றுமே மறந்துவிடாதீர்கள்! மற்றவர்களையும் யெகோவா தங்கமாகப் பார்க்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவும் தொடர்ந்து உதவுங்கள்!

உங்கள் பதில் என்ன?

  • தாங்கள் கடவுளுக்குப் பிரியமானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள இயேசு எப்படி மக்களுக்கு உதவினார்?

  • இரத்தப்போக்கால் கஷ்டப்பட்ட பெண்ணுக்கு இயேசு எப்படி உதவினார்?

  • யெகோவா பார்ப்பது போலவே நம்மையே நாம் பார்ப்பதற்கு எது உதவும்?

பாட்டு 139 பூஞ்சோலையில் வாழ்க்கை

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

b இயேசுவோடு பயணம் செய்த பெண்களில் மகதலேனா மரியாளும் இருந்தாள். அந்தப் பெண்கள் தங்களிடம் இருந்த பொருள்களை வைத்து, இயேசு மற்றும் அப்போஸ்தலர்களின் தேவைகளைக் கவனித்துக்கொண்டார்கள்.—மத். 27:55, 56; லூக். 8:1-3.

c உதாரணத்துக்கு, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தில் 24-வது அதிகாரத்தையும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வசனங்கள் புத்தகத்தில், “சந்தேகம்” என்ற தலைப்பின்கீழ் இருக்கும் வசனங்களையும் பைபிள் பதிவுகளையும் பாருங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்