படிப்புக் கட்டுரை 49
பாட்டு 44 சோகத்தில் தவிப்பவரின் ஜெபம்
யோபு புத்தகம்—ஆலோசனை கொடுக்க உதவும்
“யோபுவே, நான் பேசுவதைத் தயவுசெய்து கேளுங்கள்.”—யோபு 33:1.
என்ன கற்றுக்கொள்வோம்?
சிறந்த விதத்தில் ஆலோசனை கொடுக்க யோபு புத்தகம் எப்படி உதவும் என்று கற்றுக்கொள்வோம்.
1-2. யோபுவின் மூன்று நண்பர்களும் எலிகூவும் என்ன செய்ய வேண்டியிருந்தது, அது ஏன் சவாலாக இருந்திருக்கலாம்?
செல்வச்சீமானாக, பேர்-புகழோடு வாழ்ந்த யோபு எல்லாவற்றையும் இழந்து அம்போவென்று நிற்கிறார். இந்தச் செய்தி, கிழக்கு பிரதேசம் முழுவதும் காட்டுத் தீயாய்ப் பரவுகிறது. அதைக் கேள்விப்பட்டு அவருடைய மூன்று நண்பர்கள்—எலிப்பாஸ், பில்தாத் மற்றும் சோப்பார்—அவரைப் பார்த்து ஆறுதல் சொல்ல ஊத்ஸ் தேசத்துக்கு வருகிறார்கள். யோபுவின் நிலைமையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள்.
2 அந்தக் காட்சியை நீங்களும் கற்பனை செய்து பாருங்கள்: ஒருவிதத்தில், யோபு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறார். ஏராளமாக இருந்த ஆடு-மாடுகளும், ஒட்டகங்களும், கழுதைகளும் இல்லாமல்போய்விட்டன. வீடு இடிந்து விழுந்ததால் அவருடைய பிள்ளைகள் இறந்துபோய்விட்டார்கள்; அவருடைய வேலைக்காரர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டார்கள். இதெல்லாம் போதாதென்று, அவருக்குப் பயங்கரமான ஒரு வியாதி வந்திருக்கிறது. தலைமுதல் கால்வரை கொப்புளங்கள் கொப்பளித்திருக்கின்றன. தாங்க முடியாத வலியில் தவிக்கிறார். மனம் நொறுங்கிப்போய் சாம்பலில் உட்கார்ந்திருக்கிறார். தூரத்திலிருந்து அவருடைய மூன்று நண்பர்கள் அவரைப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு எப்படியிருந்தது? கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு அவர்கள் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. (யோபு 2:12, 13) பிறகு, ஒரு இளம் நபர் யோபுவைப் பார்க்க வருகிறார். அவருடைய பெயர் எலிகூ. யோபுவின் மற்ற நண்பர்களோடு அவரும் உட்காருகிறார். கடைசியில், யோபு பேச ஆரம்பிக்கிறார்; சூழ்ந்திருந்த நிசப்தத்தைக் கலைக்கிறார். அவர் பிறந்த நாளைச் சபிக்கிறார்; செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று புலம்புகிறார். (யோபு 3:1-3, 11) உண்மையிலேயே, யோபுவுக்கு அவருடைய நண்பர்களின் உதவி தேவை! இவ்வளவு வேதனையில் இருக்கும் யோபுவை ஆறுதல்படுத்துவது அவர்களுக்குச் சவாலாக இருந்திருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் அவருடைய நண்பர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்... அதை எப்படிச் சொல்லப்போகிறார்கள்... என்பது அவர்கள் உண்மையிலேயே நல்ல நண்பர்களா என்பதைக் காட்டும். யோபுமேல் அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா என்பதையும் காட்டும்.
3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 யோபுவின் மூன்று நண்பர்களும் எலிகூவும் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள் என்பதை மோசே மூலமாக யெகோவா பதிவு செய்திருக்கிறார். பொல்லாத தூதன் ஒருவனால் தூண்டப்பட்டு எலிப்பாஸ் சில விஷயங்களைச் சொன்னான் என்று தெரிகிறது. ஆனால் எலிகூ, கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு சில விஷயங்களைச் சொன்னார். (யோபு 4:12-16; 33:24, 25) அதனால்தான், யோபு புத்தகத்தில் மிகச் சிறந்த ஆலோசனைகளும் இருக்கின்றன, படுமோசமான சில ஆலோசனைகளும் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, நல்ல ஆலோசனைகளை எப்படிக் கொடுக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். முதலில், ஆலோசனை கொடுக்கும்போது என்ன சொல்லக் கூடாது, என்ன செய்யக் கூடாது என்பதை யோபுவின் மூன்று நண்பர்களிடம் இருந்து கற்றுக்கொள்வோம். பிறகு, என்ன சொல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை எலிகூவிடம் இருந்து கற்றுக்கொள்வோம். இவர்களுடைய உதாரணங்களில் இருந்து இஸ்ரவேலர்கள் எப்படி நன்மை அடைந்திருப்பார்கள் என்றும், இன்று நாம் எப்படி நன்மை அடையலாம் என்றும் பார்க்கலாம்.
மூன்று நண்பர்கள் ஆலோசனை கொடுத்த விதம்
4. யோபுவின் நண்பர்கள் பேசியது யோபுவுக்கு ஏன் ஆறுதலாக இல்லை? (படத்தையும் பாருங்கள்.)
4 யோபுவின் மூன்று நண்பர்கள் “அவருக்கு அனுதாபம் காட்டவும் ஆறுதல் சொல்லவும்” கிளம்பி வந்தது என்னவோ உண்மைதான். (யோபு 2:11) ஆனால், அவர்கள் நினைத்தது ஒன்று, செய்தது ஒன்று. அவர்கள் சொன்னது யோபுவுக்கு ஆறுதலாகவே இல்லை. ஏன்? அதற்குக் குறைந்தது மூன்று காரணங்களைச் சொல்லலாம். முதல் காரணம்: அவர்களாகவே தவறான முடிவுக்கு வந்துவிட்டார்கள். உதாரணத்துக்கு, செய்த பாவங்களுக்குத்தான் யோபு தண்டனை அனுபவிக்கிறார் என்று அவர்களாகவே முடிவுகட்டிவிட்டார்கள்.a (யோபு 4:7; 11:14) இரண்டாவது காரணம்: அவர்கள் கொடுத்த ஆலோசனைகள் ஞானமானவை போல் தெரிந்தாலும், அவை பெரும்பாலும் யோபுவுக்குப் பிரயோஜனமாக இருக்கவில்லை. (யோபு 13:12) சொல்லப்போனால், அவை அன்பில்லாமலும் மனதை நோகடிக்கிற மாதிரியும் இருந்தன. உதாரணத்துக்கு, பில்தாத் கொஞ்சம்கூட அன்பே இல்லாமல், யோபு அதிகமாகப் பேசுகிறார் என்று இரண்டு தடவை சொன்னான். (யோபு 8:2; 18:2) சிலசமயம், ஈவிரக்கமே இல்லாமல் அவர்கள் பேசினார்கள். உதாரணத்துக்கு, யோபு ‘புத்தி இல்லாதவன்’ என்று சோப்பார் மறைமுகமாகச் சொன்னான். (யோபு 11:12) மூன்றாவது காரணம்: யோபுவின் நண்பர்கள் குரலை உயர்த்தி பேசவில்லை என்றாலும், அவர்கள் பேசிய விதம் குத்தலாகவும் கிண்டலாகவும் புண்படுத்தும் விதத்திலும் இருந்தது. (யோபு 15:7-11) ஆகமொத்தத்தில், இந்த மூன்று நண்பர்களும் யோபுவைக் குற்றப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, யோபுவின் மனதில் ஏற்பட்டிருந்த ரணத்துக்கு மருந்து போடவோ, அவருடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவோ இல்லை.
ஆலோசனை கொடுக்கும்போது புண்படுத்தும் விதத்தில் பேசாதீர்கள். மற்றவர்களுக்கு உதவுவதுதான் உங்கள் குறிக்கோள்! (பாரா 4)
5. யோபுவின் நண்பர்கள் கொடுத்த ஆலோசனைகளால் என்ன விளைவு ஏற்பட்டது?
5 அந்த மூன்று நண்பர்கள் ஆலோசனை கொடுத்து முடித்ததும், யோபுவின் வலி அதிகமானதில் ஆச்சரியமே இல்லை! அவர்களுடைய வார்த்தைகள் யோபுவின் மனதைக் குத்திக் கிழித்தன. (யோபு 19:2) யோபு ஏன் அந்தளவுக்குத் தன்னையே நியாயப்படுத்தி பேசினார் என்பதை இப்போது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. யோபு ஏன் சரியாக யோசிக்கவில்லை என்பதையும், ஏன் ஏதேதோ பேசினார் என்பதையும்கூட புரிந்துகொள்ள முடிகிறது. (யோபு 6:3, 26) அந்த மூன்று நண்பர்கள், யெகோவா மாதிரி யோசிக்காமல் போனது மட்டுமல்ல, யோபுவை மோசமாகவும் அன்பில்லாமலும் நடத்தினார்கள். இப்படி, தங்களுக்கே தெரியாமல் சாத்தானுடைய கையில் கருவிகளாக ஆகியிருந்தார்கள். (யோபு 2:4, 6) இந்தப் பதிவு, அன்றிருந்த இஸ்ரவேலர்களுக்கு எப்படி உதவியிருக்கலாம்? நமக்கு எப்படி உதவும்?
6. யோபுவின் நண்பர்களுடைய கெட்ட உதாரணத்திலிருந்து இஸ்ரவேலின் பெரியோர்கள் என்ன பாடத்தைக் கற்றிருப்பார்கள்?
6 இஸ்ரவேலர்கள் எப்படி நன்மை அடைந்திருக்கலாம்? இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கிய பிறகு, நம்பகமான ஞானமுள்ள ஆண்களை யெகோவா நியாயாதிபதிகளாக நியமித்திருந்தார். அவர்கள், யெகோவாவின் நீதியான சட்டங்களின் அடிப்படையில் மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டியிருந்தது. (உபா. 1:15-18; 27:1) அப்படிப்பட்ட நியாயாதிபதிகள், ஒரு தீர்ப்பை அல்லது ஆலோசனையைக் கொடுப்பதற்கு முன்பு காதுகொடுத்து கேட்பது அவசியமாக இருந்தது. (2 நா. 19:6) தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைப்பதற்குப் பதிலாக, கேள்விகள் கேட்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. (உபா. 19:18) உதவி கேட்டு வருகிறவர்களிடம் அவர்கள் கடுகடுப்பாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டியிருந்தது. ஏன்? அவர்கள் எரிச்சலோடு நடந்துகொண்டால், உதவி கேட்டு வருகிறவர்கள் தங்கள் மனதைத் திறந்து பேசாமல் போய்விடலாம். (யாத். 22:22-24) யோபுவின் கதையை யோசித்துப் பார்த்த இஸ்ரவேலின் பெரியோர்கள், அதாவது மூப்பர்கள், கண்டிப்பாக நல்ல நல்ல பாடங்களைக் கற்றிருப்பார்கள்.
7. இஸ்ரவேலில் இருந்த வேறு யார்கூட ஆலோசனை கொடுத்திருப்பார்கள், யோபுவின் பதிவிலிருந்து அவர்கள் எப்படி நன்மை அடைந்திருக்கலாம்? (நீதிமொழிகள் 27:9)
7 ஆலோசனை கொடுக்கிற பொறுப்பு, இஸ்ரவேலில் இருந்த முதிர்ச்சியுள்ள ஆண்களுக்கு மட்டுமே இருக்கவில்லை. இஸ்ரவேலராக இருந்த ஒவ்வொருவருமே தங்கள் நண்பர்களுக்கு ஆலோசனை கொடுத்திருப்பார்கள். இளைஞரோ பெரியவரோ, ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கும் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கும் ஒருவருக்கு ஒருவர் உதவியிருப்பார்கள். (சங். 141:5) அக்கறையோடு ஆலோசனை கொடுப்பதுதான் உண்மையான நட்புக்கு அஸ்திவாரம். (நீதிமொழிகள் 27:9-ஐ வாசியுங்கள்.) யோபுவின் மூன்று நண்பர்களுடைய கெட்ட உதாரணத்திலிருந்து, எப்படிப் பேசக் கூடாது... எப்படி நடந்துகொள்ள கூடாது... என்பதை அன்றிருந்தவர்கள் கற்றிருப்பார்கள்.
8. ஆலோசனை கொடுக்கும்போது நாம் எவற்றையெல்லாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)
8 நாம் எப்படி நன்மை அடைகிறோம்? நம் சகோதர சகோதரிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும்போது, கிறிஸ்தவர்களாக நாம் எல்லாருமே அவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறோம். ஆனால், அவர்களுக்கு உண்மையிலேயே உதவ வேண்டும் என்றால், யோபுவின் மூன்று நண்பர்களைப் போல் நாம் இருக்கக் கூடாது. அதற்கு, இந்த மூன்று விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். முதலில், நாமாகவே சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவதற்குப் பதிலாக, ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்ட பிறகுதான் ஆலோசனை கொடுக்க வேண்டும். இரண்டாவது, எலிப்பாஸ் மாதிரி நாம், சொந்த அனுபவத்தை வைத்தோ சொந்த கருத்துகளை வைத்தோ ஆலோசனை கொடுக்கக் கூடாது. கடவுளுடைய வார்த்தையை ஆதாரமாக வைத்து ஆலோசனை கொடுக்க வேண்டும். (யோபு 4:8; 5:3, 27) மூன்றாவதாக, குறை சொல்கிற அல்லது மனதைக் காயப்படுத்துகிற விதத்தில் பேசக் கூடாது. உண்மைதான், எலிப்பாசும் அவனுடைய நண்பர்களும் சொன்ன சில விஷயங்கள் சரியாக இருந்தது; அவர்கள் சொன்ன ஒரு விஷயத்தை அப்போஸ்தலன் பவுல்கூட மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். (யோபு 5:13-ஐயும் 1 கொரிந்தியர் 3:19-ஐயும் ஒப்பிடுங்கள்.) இருந்தாலும், அவர்கள் சொன்ன பெரும்பாலான விஷயங்கள் கடவுளைத் தவறாகக் காட்டின, யோபுவைக் காயப்படுத்தின. அதனால், அவர்கள் சொன்னது தவறு என்று யெகோவாவே நியாயந்தீர்த்தார். (யோபு 42:7, 8) இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: நல்ல ஆலோசனை, யெகோவாவை நியாயம் இல்லாதவராகக் காட்டாது. அவருடைய அன்பைப் பெற்றுக்கொள்ள அவருடைய ஊழியர்களுக்குத் தகுதி இல்லாததுபோலவும் காட்டாது. சரி, எலிகூவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.
மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது, (1) உண்மைகளை முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள், (2) கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள், (3) அன்பாகப் பேசுங்கள் (பாரா 8)
எலிகூ ஆலோசனை கொடுத்த விதம்
9. தன்னுடைய நண்பர்கள் பேசி முடித்த பிறகும் யோபுவுக்கு ஏன் உதவி தேவைப்பட்டது, யெகோவா அவருக்கு எப்படி உதவி செய்தார்?
9 யோபுவும் அவருடைய நண்பர்களும் வாக்குவாதம் செய்து முடித்த பிறகு, அங்கே சூழ்நிலை பதட்டமாக இருந்திருக்கும். அவர்கள் பேசியது கொஞ்சநஞ்சம் கிடையாது! யோபு புத்தகத்தில் 28 அதிகாரங்கள் முழுக்க அவர்கள் பேசியதுதான் இருக்கிறது. அதில் பெரும்பாலும் அவர்கள் கோபமாக, எரிச்சலாகப் பேசியிருக்கிறார்கள். யோபுவின் மனதில் இருந்த வலி ஆறாததில் ஆச்சரியமே இல்லை! அவருக்கு ஆறுதல் தேவைப்பட்டது; ஆலோசனையும் தேவைப்பட்டது. யோபுவுக்கு யெகோவா எப்படி உதவி செய்தார்? எலிகூவைப் பயன்படுத்தி ஆலோசனை கொடுத்தார். சரி, எலிகூ ஏன் ஆரம்பத்திலேயே பேசவில்லை? அவரே இப்படிச் சொல்கிறார்: “நான் வயதில் சின்னவன், ஆனால் நீங்கள் பெரியவர்கள். அதனால், உங்களுக்கு மதிப்புக் கொடுத்து பேசாமல் இருந்தேன்.” (யோபு 32:6, 7) இன்று இருக்கிற நிறைய பேரை மாதிரியே இளம் வயதில் இருந்த எலிகூ யோசித்தார். அதாவது, வயதானவர்கள் நிறைய காலம் வாழ்ந்திருப்பதால் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும்; இளைஞர்களைவிட அவர்களுக்கு நிறைய அனுபவமும் ஞானமும் இருக்கும் என்று யோசித்தார். ஆனால், யோபுவும் அவருடைய மூன்று நண்பர்களும் பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த எலிகூவால் அதற்குமேலும் அமைதியாக இருக்க முடியவில்லை. அவர் சொல்கிறார்: “வயதாகிவிட்டால் மட்டும் ஞானம் வந்துவிடாது. பெரியவர்களுக்கு மட்டும்தான் நல்லது கெட்டது தெரியும் என்று சொல்ல முடியாது.” (யோபு 32:9) அடுத்து எலிகூ என்ன சொன்னார்? அதை எப்படிச் சொன்னார்?
10. யோபுவுக்கு ஆலோசனை கொடுப்பதற்குமுன் எலிகூ என்ன செய்தார்? (யோபு 33:6, 7)
10 யோபுவுக்கு ஆலோசனை கொடுப்பதற்கு முன்பு எலிகூ ஒரு நல்ல சூழலை உருவாக்கினார். எப்படி? முதலில், தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினார். ஏனென்றால், ஆரம்பத்தில் அவரும் கோபமாக இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. (யோபு 32:2-5) இருந்தாலும், ஒரு தடவைகூட எரிச்சல்பட்டு வார்த்தைகளால் அவர் யோபுவைத் தாக்கவில்லை. அதற்குப் பதிலாக, யோபுவுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பேசினார். உதாரணத்துக்கு, “உண்மைக் கடவுளுக்கு முன்னால் நீங்களும் நானும் ஒன்றுதான்” என்று யோபுவிடம் சொன்னார். (யோபு 33:6, 7-ஐ வாசியுங்கள்.) பிறகு, யோபு சொன்னதையெல்லாம் காதுகொடுத்து கேட்டதை எலிகூ காட்டினார். சொல்லப்போனால், யோபு ஆறு தடவை பேசியபோது என்னவெல்லாம் சொன்னாரோ, அதிலிருந்த முக்கியமான விஷயங்களை எலிகூ சுருக்கமாகச் சொன்னார். (யோபு 32:11; 33:8-11) அவர் தொடர்ந்து பேசியபோது, யோபு பேசிய வார்த்தைகளை மறுபடியும் சொல்வதன் மூலம் அவற்றை காதுகொடுத்து கேட்டதைக் காட்டினார்.—யோபு 34:5, 6, 9; 35:1-4.
11. எலிகூ எப்படி யோபுவுக்கு ஆலோசனை கொடுத்தார்? (யோபு 33:1)
11 யோபுவுக்கு ஆலோசனை கொடுக்கும்போது எலிகூ அவரைக் கண்ணியமாக நடத்தினார். எப்படிச் சொல்கிறோம்? அவர் யோபுவின் பெயரைச் சொல்லி அவரிடம் பேசினார். ஆனால், மற்ற மூன்று நண்பர்கள் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. (யோபு 33:1-ஐ வாசியுங்கள்.) அதோடு, யோபுவுக்கு ஆலோசனை கொடுத்தபோது, யோபு தன் கருத்துகளைச் சொல்ல எலிகூ வாய்ப்புக் கொடுத்தார். ஒருவேளை, யோபுவும் அந்த மூன்று நண்பர்களும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோது தன் கருத்துகளைச் சொல்ல தன் மனம் எப்படித் துடித்தது என்பதை மனதில் வைத்து எலிகூ அப்படிச் செய்திருக்கலாம். (யோபு 32:4; 33:32) யோபு யோசிக்கும் சில விஷயங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்றும் அவர் எச்சரித்தார். யெகோவாவின் ஞானம், வல்லமை, நீதி, மாறாத அன்பு போன்றவற்றைப் பற்றி அவருக்கு அன்போடு ஞாபகப்படுத்தினார். (யோபு 36:18, 21-26; 37:23, 24) எலிகூ கொடுத்த நல்ல ஆலோசனைகள், அடுத்து கிடைக்கவிருந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள யோபுவின் மனதைத் தயார்படுத்தியிருக்கும்—அதுவும் படைப்பாளரான யெகோவாவிடமிருந்து! (யோபு 38:1-3) எலிகூவின் உதாரணம் அன்றிருந்தவர்களுக்கு எப்படி உதவியாக இருந்திருக்கலாம்? இன்று நமக்கு எப்படி உதவியாக இருக்கும்?
12. தன்னுடைய மக்களுக்கு உதவி செய்ய யெகோவா தீர்க்கதரிசிகளை எப்படிப் பயன்படுத்தினார், எலிகூவின் உதாரணம் இஸ்ரவேலர்களுக்கு எப்படி உதவியாக இருந்திருக்கும்?
12 இஸ்ரவேலர்கள் எப்படி நன்மை அடைந்திருக்கலாம்? இஸ்ரவேலர்களுடைய சரித்திரம் முழுக்க, யெகோவா தன் நோக்கத்தைத் தெரியப்படுத்த நிறைய தீர்க்கதரிசிகளை நியமித்தார். உதாரணத்துக்கு, நியாயாதிபதிகளின் காலத்தில், தெபொராளைப் பயன்படுத்தி யெகோவா அந்தத் தேசத்தை வழிநடத்தினார். தெபொராள் ஒரு தாய்போல் இருந்து அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். சாமுவேல், சின்ன வயதிலிருந்தே யெகோவாவின் செய்தியை மக்களிடம் தொடர்ந்து சொல்லிவந்தார். (நியா. 4:4-7; 5:7; 1 சா. 3:19, 20) ராஜாக்கள் ஆட்சி செய்த காலத்தில், அடுத்தடுத்து நிறைய தீர்க்கதரிசிகளை அனுப்பி, யெகோவா தன் மக்களைப் பலப்படுத்தினார்; உண்மை வணக்கத்தைவிட்டு வழிதவறிப் போனவர்களுக்கு அவர்கள் மூலம் ஆலோசனை கொடுத்தார். (2 சா. 12:1-4; அப். 3:24) ஆலோசனை கொடுக்கும்போது என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை யோபு புத்தகத்தில் இருக்கிற எலிகூவின் உதாரணத்திலிருந்து உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் கற்றிருக்கலாம்.
13. நாம் இன்று சகோதர சகோதரிகளை எப்படிப் பலப்படுத்தலாம்?
13 நாம் எப்படி நன்மை அடைகிறோம்? அன்று வாழ்ந்த தீர்க்கதரிசிகளைப் போல, நாமும் கடவுளுடைய விருப்பத்தைப் பற்றி பைபிளிருந்து மக்களுக்குச் சொல்கிறோம். அதோடு, நம் வார்த்தைகள் மூலமாக சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துகிறோம், உற்சாகப்படுத்துகிறோம். (1 கொ. 14:3) சகோதர சகோதரிகளிடம் ‘ஆறுதலாகப் பேச’ மூப்பர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும், கோபப்படுகிறவர்களிடமும் யோசிக்காமல் “ஏதேதோ” பேசுகிறவர்களிடமும்கூட அப்படிப் பேச வேண்டும்.—1 தெ. 5:14; யோபு 6:3.
14-15. ஆலோசனை கொடுக்கும்போது ஒரு மூப்பர் எப்படி எலிகூவைப் போல் நடந்துகொள்ளலாம்? விளக்குங்கள்.
14 இதைக் கற்பனை செய்து பாருங்கள்: சபையில் இருக்கிற ஒரு சகோதரி சோர்ந்துபோய் இருப்பதை ஒரு மூப்பர் கவனிக்கிறார். அவரும் இன்னொரு சகோதரரும் அந்தச் சகோதரியைப் பலப்படுத்துவதற்காக அவரைப் போய்ப் பார்க்கிறார்கள். அப்போது அந்தச் சகோதரி, கூட்டத்துக்கும் ஊழியத்துக்கும் போனாலும் தனக்குச் சந்தோஷமே இல்லை என்று சொல்கிறார். இப்போது அந்த மூப்பர் என்ன செய்வார்?
15 முதலில், அந்தச் சகோதரி எதனால் சோர்ந்துபோய் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார். அதற்கு, சில கேள்விகளைக் கேட்டு, அந்தச் சகோதரி சொல்வதை அவர் பொறுமையாகக் கேட்க வேண்டியிருக்கும். “கடவுள் தன்மேல் அன்பு காட்டும் அளவுக்குத் தனக்குத் தகுதியில்லை என்று அந்தச் சகோதரி நினைக்கிறாரா? ‘வாழ்க்கையின் கவலைகளால்’ அவர் சோர்ந்துபோய் இருக்கிறாரா?” போன்ற விஷயங்களை அந்த மூப்பர் கண்டுபிடிப்பார். (லூக். 21:34) இரண்டாவதாக, அந்தச் சகோதரியைப் பாராட்டுவதற்கு அவர் வாய்ப்புகளைத் தேடுவார். எவ்வளவு கவலையாக இருந்தாலும் தொடர்ந்து கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் வருவதற்காக அவரைப் பாராட்டலாம். மூன்றாவதாக, அவருடைய சூழ்நிலையையும் அவர் சோர்ந்துபோய் இருப்பதற்கான காரணத்தையும் புரிந்துகொண்ட பிறகு, கடவுள் அவர்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்த பைபிளைப் பயன்படுத்தி உதவுவார்.—கலா. 2:20.
யோபு புத்தகத்திலிருந்து தொடர்ந்து நன்மை அடையுங்கள்
16. யோபு புத்தகத்திலிருந்து தொடர்ந்து நன்மை அடைய நாம் என்ன செய்யலாம்?
16 யோபு புத்தகத்தை அலசிப் பார்த்ததில் எவ்வளவு அருமையான பாடங்களைக் கற்றுக்கொண்டோம்! போன கட்டுரையில், கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதிக்கிறார் என்பதற்கான காரணத்தை மட்டுமல்ல, அதை எப்படிச் சகித்திருக்கலாம் என்பதையும் கற்றுக்கொண்டோம். இந்தக் கட்டுரையில், யோபுவின் மூன்று நண்பர்களைப் போல் இல்லாமல், எலிகூ மாதிரி எப்படி நல்ல விதத்தில் ஆலோசனை கொடுக்கலாம் என்று கற்றுக்கொண்டோம். நீங்கள் யாருக்காவது ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தால், அதற்கு முன்பு யோபு புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்ட முத்தான பாடங்களைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பாருங்கள். நீங்கள் யோபு புத்தகத்தை வாசித்துக் கொஞ்சநாள் ஆகியிருந்தால் திரும்பவும் அதை வாசிக்க குறிக்கோள் வையுங்கள். யோபு புத்தகம், அன்று எந்தளவுக்குப் பிரயோஜனமாக இருந்ததோ அதே அளவுக்கு இன்றும் பிரயோஜனமாக இருக்கிறது.
பாட்டு 125 “இரக்கம் காட்டுவோம்!”
a கடவுள் மனிதர்களை நீதிமானாகப் பார்ப்பதில்லை, அதனால் யாராலும் அவரைப் பிரியப்படுத்தவே முடியாது என்ற முடிவுக்குவர, ஒரு பொல்லாத தூதன்தான் எலிப்பாசைத் தூண்டியதாகத் தெரிகிறது. இந்தத் தவறான கருத்து எலிப்பாசின் மனதில் ஆழமாக இருந்தது. அவர் மூன்று தடவை பேசியபோதும் இந்தக் கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.—யோபு 4:17; 15:15, 16; 22:2.