மார்ச் 2-8, 2026
பாட்டு 97 கடவுளுடைய வார்த்தை நம் உயிர்
உங்கள் ஆன்மீகத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்யுங்கள்
2026-க்கான வருடாந்தர வசனம்: “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத். 5:3.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவா கொடுக்கும் ஆன்மீக உணவு, உடை மற்றும் புகலிடத்திலிருந்து நாம் எப்படித் தொடர்ந்து நன்மை அடையலாம் என்று கற்றுக்கொள்வோம்.
1. நமக்கு என்ன அடிப்படை தேவைகள் இருக்கின்றன? (மத்தேயு 5:3)
உயிர் வாழ்வதற்கு சில அடிப்படை விஷயங்கள் நமக்குத் தேவை. அப்படித்தான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். உதாரணத்துக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவை நமக்குத் தேவை. இவற்றில் ஏதாவது ஒன்று கொஞ்ச நாட்களுக்கு இல்லையென்றாலும், வாழ்க்கை போராட்டமாக ஆகிவிடலாம். ஆனால், இன்னொரு முக்கியமான விஷயமும் நமக்குத் தேவைப்படுகிற மாதிரி யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். அதுதான் ஆன்மீகத் தேவை! (மத்தேயு 5:3-ஐ வாசியுங்கள்.) அந்தத் தேவை நமக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும்போதும், அதைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும்போதும் நாம் உண்மையிலேயே சந்தோஷமாக இருப்போம்.
2. “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு” இருப்பது என்றால் என்ன என்பதை உதாரணத்தோடு விளக்குங்கள்.
2 “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு” இருப்பது என்றால் என்ன அர்த்தம்? மூலமொழியில் இதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள், ஆன்மீக விஷயங்களுக்காகப் பிச்சைக்காரர்களாக இருப்பதைக் குறிக்கிறது. இதைக் கேட்கும்போது உங்கள் மனதில் என்ன காட்சி வருகிறது? கிழிந்த துணியைப் போட்டுக்கொண்டு தெரு ஓரத்தில் இருக்கும் ஒரு பிச்சைக்காரன் உங்கள் மனதுக்கு வருகிறானா? சாப்பாடே இல்லாததால் அவன் நோஞ்சானாக இருக்கிறான். பார்ப்பதற்கு மோசமாக இருப்பதால், எல்லாரும் அவனை ஒதுக்குகிறார்கள். வெயிலிலும் குளிரிலும் கிடப்பதால் அவன் துவண்டுபோய் இருக்கிறான். தன்னுடைய சூழ்நிலை மாற வேண்டுமென்றால், நிச்சயம் தனக்கு உதவி தேவை என்பது அந்தப் பிச்சைக்காரனுக்குத் தெரியும். அதேபோல், ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள், அதாவது ஆன்மீக விஷயங்களுக்காகப் பிச்சைக்காரர்களாக இருக்கிறவர்கள், தங்களுடைய வாழ்க்கை இன்னும் நல்லபடியாக மாற கடவுளுடைய உதவி கண்டிப்பாகத் தேவை என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அதனால், யெகோவா செய்திருக்கிற ஏராளமான ஆன்மீக ஏற்பாடுகளிலிருந்து நன்மை அடைய தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 இந்தக் கட்டுரையில், இயேசுவிடம் உதவி கேட்டு கெஞ்சிய பெனிக்கேய பெண்ணின் உதாரணத்திலிருந்து சில விஷயங்களை முதலில் பார்ப்போம். ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய மூன்று குணங்களைப் பற்றி அந்தப் பதிவிலிருந்து தெரிந்துகொள்வோம். பிறகு, ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் விஷயத்தில் பேதுரு, பவுல் மற்றும் தாவீது எப்படி நல்ல உதாரணமாக இருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
மனத்தாழ்மை, விடாமுயற்சி மற்றும் விசுவாசத்துக்கு ஒரு உதாரணம்
4. ஒரு பெனிக்கேய பெண் இயேசுவிடமிருந்து என்ன எதிர்பார்த்தாள்?
4 ஒருசமயம், ஒரு பெனிக்கேய பெண் இயேசுவைச் சந்தித்தாள். அவளுடைய மகளை ‘பேய் பிடித்து ஆட்டியது.’ (மத். 15:21-28) அதனால், இயேசுவிடம் மண்டியிட்டு உதவி கேட்டு அந்தப் பெண் கெஞ்சினாள். இயேசுவிடம் பேசியபோது அருமையான குணங்களை அவள் காட்டினாள். அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
5. அந்தப் பெண் என்னென்ன குணங்களைக் காட்டினாள், பதிலுக்கு இயேசு என்ன செய்தார்? (படத்தையும் பாருங்கள்.)
5 அந்த பெனிக்கேய பெண் உண்மையான மனத்தாழ்மையைக் காட்டினாள். எப்படிச் சொல்லலாம்? இயேசு சொன்ன பதிலைக் கேட்டு அவள் புண்படவில்லை. அவர் சொன்ன உதாரணத்தில், அவளை நாய்க்குட்டிக்கு ஒப்பிட்டுப் பேசினார். பொதுவாக, யூதர்களாக இல்லாதவர்களின் வீட்டில் நாய்கள் வளர்க்கப்பட்டன. ஒருவேளை, அந்தப் பெண்ணின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் இயேசு சொன்னதையும் செய்ததையும் பார்த்து உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அவமானமாக இருந்திருக்குமா? அவருடைய உதவியே தேவையில்லை என்று போயிருப்பீர்களா? அந்தப் பெண் அப்படி எதுவும் செய்யவில்லை. அவள் மனத்தாழ்மையாக மட்டுமல்ல, விடாமுயற்சியோடும் இருந்தால். உதவி கேட்டு அவள் கெஞ்சிக்கொண்டே இருந்ததிலிருந்து அது தெரிகிறது. அப்படிச் செய்ய எது அவளைத் தூண்டியது? இயேசுமேல் இருந்த விசுவாசம். சொல்லப்போனால், அவளுடைய விசுவாசத்துக்காகவே இயேசு ஒரு அற்புதத்தைச் செய்தார். இத்தனைக்கும், “வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான்” அவர் அனுப்பப்பட்டதாக கொஞ்சம் முன்புதான் சொல்லியிருந்தார். ஆனாலும், வேறு தேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு அவர் உதவினார்; அவளுடைய மகளைப் பிடித்திருந்த பேயைத் துரத்தினார்.
தனக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ள, பெனிக்கேய பெண்ணுக்கு மனத்தாழ்மையும் விடாமுயற்சியும் விசுவாசமும் தேவைப்பட்டது (பாரா 5)
6. நாம் எப்படி பெனிக்கேய பெண்ணைப் போல் நடந்துகொள்ளலாம்?
6 நம்முடைய ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்ய நாமும் இந்தக் குணங்களைக் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, மனத்தாழ்மையாக இருக்க வேண்டும், விடாமுயற்சி எடுக்க வேண்டும், பலமான விசுவாசத்தைக் காட்ட வேண்டும். மனத்தாழ்மையாக இருக்கும் ஒரு நபர்தான், விடாமுயற்சியோடு கடவுளிடம் உதவி கேட்டு கெஞ்சிக்கொண்டே இருப்பார். கிறிஸ்து இயேசுமேல் நமக்குப் பலமான விசுவாசமும் இருக்க வேண்டும்; தன்னுடைய சீஷர்களை வழிநடத்த அவர் யாரைப் பயன்படுத்துகிறாரோ அவர்கள் மேலும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். (மத். 24:45-47) இந்தக் குணங்களை யாரெல்லாம் காட்டுகிறார்களோ, அவர்களுடைய ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்ய யெகோவாவும் அவருடைய மகனும் ரொம்ப ஆசையாக இருக்கிறார்கள். (யாக்கோபு 1:5-7-ஐ ஒப்பிடுங்கள்.) யெகோவா நமக்கு எப்படி ஆன்மீக உணவையும், உடையையும், புகலிடத்தையும் கொடுக்கிறார் என்று இப்போது பார்க்கலாம். இந்த அடிப்படை தேவைகளைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பேதுரு, பவுல் மற்றும் தாவீதின் உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
ஆன்மீக உணவை நன்றாகச் சாப்பிடுங்கள்—பேதுருவைப் போல்
7. பேதுருவுக்கு இயேசு என்ன வேலையைக் கொடுத்தார், பேதுரு என்னவும் செய்ய வேண்டியிருந்தது? விளக்குங்கள். (எபிரெயர் 5:14–6:1)
7 அப்போஸ்தலன் பேதுருவுடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இயேசுதான் மேசியா என்பதைப் புரிந்துகொண்ட முதல் சில யூதர்களில் அவரும் ஒருவர். ‘முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகளை’ மக்களுக்கு விளக்க யெகோவா இயேசுவைத்தான் பயன்படுத்தினார் என்பதை அவர் புரிந்துகொண்டார். (யோவா. 6:66-68) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு பேதுருவுக்கு ஒரு முக்கியமான வேலையைக் கொடுத்தார். “என் ஆட்டுக்குட்டிகளுக்கு நீ உணவு கொடுக்க வேண்டும்” என்று சொன்னார். (யோவா. 21:17) இந்த வேலையை பேதுரு பொறுப்பாகச் செய்தார். பைபிளின் பாகமாக ஆன இரண்டு கடிதங்களை எழுதுவதற்குக்கூட யெகோவா அவரைப் பயன்படுத்தினார். இருந்தாலும், தன்னைத் திடமாக வைத்துக்கொள்ள பேதுருவும் ஆன்மீக உணவைச் சாப்பிட வேண்டியிருந்தது. உதாரணத்துக்கு, கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு பவுல் எழுதியிருந்த கடிதங்களை அவர் படித்தார். அவற்றிலிருந்த சில விஷயங்கள் “புரிந்துகொள்வதற்குக் கடினமாக” இருந்தது என்று பேதுரு சொன்னார். (2 பே. 3:15, 16) இருந்தாலும், விடாமுயற்சியோடு அதைப் படித்தார். கடவுளுடைய சக்தியின் உதவியோடு பவுல் தன் கடிதங்களில் பரிமாறிய ‘திட உணவை’ ஜீரணிக்க, அதாவது அதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் பொருத்த, யெகோவா உதவுவார் என்ற விசுவாசத்தோடு படித்தார்.—எபிரெயர் 5:14–6:1-ஐ வாசியுங்கள்.
8. யெகோவாவிடம் இருந்து புதிதாக வழிநடத்துதல் கிடைத்தபோது பேதுரு எப்படி நடந்துகொண்டார்?
8 யெகோவா கொடுத்த வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்ததன் மூலம் யெகோவாமேல் விசுவாசம் வைத்திருந்ததை பேதுரு காட்டினார். யோப்பா என்ற துறைமுக நகரத்தில் இருந்தபோது அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அதில், திருச்சட்டத்தில் அசுத்தமாகக் கருதப்பட்ட சில மிருகங்களை அடித்துச் சாப்பிடும்படி பேதுருவுக்குச் சொல்லப்பட்டது. இந்த வழிநடத்துதல் யூதராக இருந்த பேதுருவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். அதனால், ஆரம்பத்தில் பேதுரு இப்படிச் சொன்னார்: “வேண்டவே வேண்டாம் எஜமானே, தீட்டானதையும் அசுத்தமானதையும் நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை.” அதற்கு அந்தக் குரல், “கடவுள் சுத்தமாக்கியவற்றைத் தீட்டென்று சொல்லாதே” என்று சொன்னது. (அப். 10:9-15) இப்போது பேதுருவுக்கு யெகோவாவின் வழிநடத்துதல் புரிந்தது! அதனால், யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொண்டார். நமக்கு எப்படித் தெரியும்? அந்தத் தரிசனம் கிடைத்த கொஞ்ச நேரத்தில், வேறு தேசத்தைச் சேர்ந்த கொர்நேலியு அனுப்பிய மூன்று நபர்கள் பேதுருவின் வீட்டுக்கு வந்தார்கள். தங்களுடைய எஜமானின் வீட்டுக்கு வந்து அவரிடம் பேச சொல்லி பேதுருவை அழைத்தார்கள். வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களுடைய வீட்டுக்குப் போக பேதுரு பொதுவாக ஒத்துக்கொள்ள மாட்டார். ஏனென்றால், வேறு தேசத்து மக்களை யூதர்கள் அசுத்தமானவர்களாகப் பார்த்தார்கள். (அப். 10:28, 29) ஆனால், யெகோவாவிடம் இருந்து கிடைத்த புதிய வெளிச்சத்தை, அதாவது புதிய வழிநடத்துதலை, பேதுரு உடனே ஏற்றுக்கொண்டார். (நீதி. 4:18) கொர்நேலியுவுக்கும் அவருடைய வீட்டில் இருந்தவர்களுக்கும் பிரசங்கித்தார். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதையும், கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொண்டதையும், ஞானஸ்நானம் எடுத்ததையும் பார்த்து சந்தோஷப்பட்டார்.—அப். 10:44-48.
9. திட உணவுமேல் ஆர்வப்பசியை வளர்த்துக்கொள்வதால் என்ன இரண்டு நன்மைகள் கிடைக்கும்?
9 பேதுரு மாதிரியே நாமும் கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படிக்க வேண்டும். பெரும்பாலும், பால் மாதிரி இருக்கிற அடிப்படை உண்மைகளைத் தவறாமல் படிப்போம். ஆனால், திட உணவு மாதிரி இருக்கிற ஆழமான சத்தியங்கள்மீதும் நாம் பசியை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவை ஒருவேளை புரிந்துகொள்ள கடினமாகக்கூட இருக்கலாம். இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்ள நேரத்தை ஒதுக்க வேண்டும், அதிக முயற்சி எடுக்க வேண்டும். அந்த முயற்சி வீண்போகாது. ஏன்? ஏனென்றால், குறைந்தது இரண்டு நன்மைகளாவது நமக்குக் கிடைக்கும். ஒன்று, யெகோவாவைப் பற்றி நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், அவர்மேல் இருக்கிற அன்பையும் மரியாதையையும் இன்னும் அதிகமாக்கும். இரண்டு, நம் அருமையான பரலோக அப்பா யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசையை இன்னும் அதிகமாக்கும். (ரோ. 11:33; வெளி. 4:11) பேதுருவின் உதாரணத்திலிருந்து, இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்கிறோம்: கடவுளுடைய வார்த்தையை நாம் புரிந்துகொண்ட விதத்தில் ஏதாவது மாற்றங்கள் வரும்போது, யோசிக்கிற விதத்தையும் நடந்துகொள்கிற விதத்தையும் அதற்கு ஏற்றபடி உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், ஆன்மீக விதத்தில் புஷ்டியாக இருப்போம். கடவுளுடைய கையில் பிரயோஜனமாகவும் இருப்போம்.
ஆன்மீக உடையைப் போட்டுக்கொள்ளுங்கள்—பவுலைப் போல்
10. கொலோசெயர் 3:8-10 சொல்வதுபோல் யெகோவாவைப் பிரியப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
10 கடவுளைப் பிரியப்படுத்த, அவர் கொடுத்திருக்கிற இன்னொரு ஏற்பாட்டையும் நாம் நன்றாகப் பயன்படுத்த வேண்டும். அதுதான் ஆன்மீக உடை. இது எதைக் குறிக்கிறது? நாம் ‘பழைய சுபாவத்தைக் களைந்துபோட்டுவிட்டு,’ “புதிய சுபாவத்தை” ஒரு உடை மாதிரி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கொலோசெயர் 3:8-10-ஐ வாசியுங்கள்.) இந்த உடையை எப்போதும் போட்டிருக்க, நம் பங்கில் தொடர்ந்து முயற்சி தேவை. பவுலின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இளம் வயதில் இருந்தபோது கடவுளுடைய ஆசீர்வாதத்துக்காக அவர் கடினமாக உழைத்தார். (கலா. 1:14; பிலி. 3:4, 5) ஆனாலும், கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய திருத்தமான அறிவு அப்போது அவருக்கு இல்லை. அதனால், ஆன்மீக விதத்தில் ஏழையாக இருந்தார். கிறிஸ்துவின் போதனைகளைப் பற்றியும் அவருக்குத் தெரியவில்லை. இதுபோதாதென்று, அவருக்குத் தலைக்கனம் வேறு! அதனால், மோசமான சுபாவத்தை உடையாகப் போட்டிருந்த ஒருவரைப் போல் இருந்தார். ‘திமிர்பிடித்தவனாக இருந்தேன்’ என்று தன்னைப் பற்றி அவரே பிற்பாடு சொன்னார்.—1 தீ. 1:13.
11. எந்தப் பலவீனத்தை எதிர்த்து பவுல் கடினமாகப் போராட வேண்டியிருந்தது? விளக்குங்கள்.
11 கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு, சட்டென்று கோபப்படும் சுபாவம் பவுலுக்கு இருந்தது. அப்போஸ்தலர் புத்தகத்தில் இருக்கும் ஒரு பதிவு காட்டுகிற மாதிரி, இயேசுவின் சீஷர்கள்மேல் அவர் பயங்கரமாகக் கோபப்பட்டார். எந்தளவுக்கு? அவர்களை “மிரட்டிக்கொண்டும் கொல்லத் துடித்துக்கொண்டும்” இருக்கும் அளவுக்கு! (அப். 9:1) கிறிஸ்தவராக ஆன பிறகு, இந்தப் பழைய சுபாவத்தைக் களைந்துபோட பவுல் நிச்சயம் கடினமாக உழைத்திருப்பார். (எபே. 4:22, 31) அப்படியிருந்தும், பவுலுக்கு ஒருசமயம் கோபம் எட்டிப்பார்த்தது. அவருக்கும் பர்னபாவுக்கும் “கடுமையான வாக்குவாதம்” வெடித்தது. (அப். 15:37-39) அந்தச் சமயத்தில், யெகோவாவுக்குப் பிடிக்காத மாதிரி பவுல் நடந்துகொண்டது உண்மைதான்; இருந்தாலும், தன்னுடைய முயற்சியை அவர் கைவிட்டுவிடவில்லை. தொடர்ந்து அவருடைய ‘உடலை அடக்கியொடுக்கினார்.’ அதாவது, யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக தனக்கு இருந்த பலவீனங்களை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருந்தார்.—1 கொ. 9:27.
12. மோசமான சுபாவத்தை விட்டுவிட பவுலுக்கு எது உதவியது?
12 பவுலால் தன்னுடைய மோசமான சுபாவத்தை விட்டுவிட்டு, புதிய சுபாவத்தை வெற்றிகரமாக அணிந்துகொள்ள முடிந்தது. அவர் தன்னையே நம்பி இல்லாததால்தான் அப்படிச் செய்ய முடிந்தது. (பிலி. 4:13) பேதுருவைப் போலவே அவரும் ‘கடவுள் கொடுக்கிற பலத்தைச் சார்ந்திருந்தார்.’ (1 பே. 4:11) சிலசமயங்களில், தோல்வி அடைந்ததுபோல் அவர் உணர்ந்தது உண்மைதான். அதுபோன்ற சமயங்களில், தன் பரலோக அப்பா தனக்காக என்னென்ன நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார் என்பதை பவுல் யோசித்துப் பார்த்தார். இப்படிச் செய்தது, முயற்சியைக் கைவிட்டுவிடாமல் இருக்க அவருக்குப் பலத்தைக் கொடுத்தது.—ரோ. 7:21-25.
13. நாம் எப்படி பவுலைப் போலவே நடந்துகொள்ளலாம்?
13 நாம் எவ்வளவு வருஷங்களாக யெகோவாவை வணங்கிக்கொண்டு இருந்தாலும் சரி, பழைய சுபாவத்தைக் களைந்துபோடுவதற்கும் புதிய சுபாவத்தை, அதாவது கடவுள் கொடுக்கிற ஆன்மீக உடையை, தொடர்ந்து அணிந்திருப்பதற்கும் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, நாம் பவுல் மாதிரியே நடந்துகொள்கிறோம். உண்மைதான், சிலசமயத்தில் நாம் ஏதாவது தவறு செய்துவிடலாம்—சட்டென்று கோபப்பட்டுவிடலாம் அல்லது அன்பே இல்லாமல் பேசிவிடலாம். அதற்காக, நாம் தோற்றுவிட்டோம் என்று நினைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நம் யோசனைகளையும் செயல்களையும் கடவுளுக்குப் பிடித்த மாதிரி மாற்றிக்கொள்ள உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். (ரோ. 12:1, 2; எபே. 4:24) ஒரு முக்கியமான விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: கடையில் வாங்குகிற உடையை நம் அளவுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், ஆன்மீக உடை அப்படிக் கிடையாது! நாம்தான் அதற்கு ஏற்ற மாதிரி மாற வேண்டும். கடவுள் எதிர்பார்க்கிற மாதிரி நாம் நம்மையே மாற்றிக்கொள்வதுதானே நியாயம்!
ஆன்மீக புகலிடத்துக்குள் இருங்கள்—தாவீதைப் போல்
14-15. எந்தெந்த விதங்களில் யெகோவா நமக்கு ஆன்மீக புகலிடம் தந்து பாதுகாக்கிறார்? (சங்கீதம் 27:5) ( படத்தையும் பாருங்கள்.)
14 நாம் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், ஆன்மீக உணவும் உடையும் மட்டுமே போதாது. ஆன்மீக புகலிடமும் தேவை. ஆன்மீக புகலிடம் என்றால் என்ன? அதற்குள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
15 யெகோவா கொடுக்கும் ஆன்மீக புகலிடத்தைப் பற்றி தாவீது ராஜா சொன்னார். (சங்கீதம் 27:5-ஐ வாசியுங்கள்.) யெகோவா தன்னுடைய மக்களை எப்படிப் பாதுகாக்கிறார்? அவர்கள் தன்மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை நிரந்தரமாக அழிக்க, அவர் யாரையும் எதையும் அனுமதிக்க மாட்டார். தன் மக்கள் தன்னை வணங்குவதைத் தடுக்க எதிரிகள் முயற்சி செய்தாலும், தன்னோடு அவர்கள் வைத்திருக்கும் நட்பைப் பாதுகாப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங். 34:7; ஏசா. 54:17) சாத்தானும் அவனைச் சேர்ந்தவர்களும் பலம் படைத்தவர்களாக இருந்தாலும், யெகோவாவின் மக்களுக்கு நிரந்தரமான பாதிப்பை அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. ஒருவேளை, அவர்கள் நம் உயிரை எடுத்தாலும்கூட, யெகோவாவால் நம்மைத் திரும்பவும் உயிரோடு கொண்டுவர முடியும். (1 கொ. 15:55-57; வெளி. 21:3, 4) வெளியிலிருந்து வருகிற ஆபத்துகளிலிருந்து மட்டுமல்ல, நமக்குள் இருக்கிற கவலைகள்கூட நமக்கு நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது; அவற்றைச் சமாளிக்கவும் யெகோவா உதவுகிறார். (நீதி. 12:25; மத். 6:27-29) ஆன்மீக குடும்பத்தையும் அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். அதில் இருக்கிற சகோதர சகோதரிகள் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள்; மூப்பர்கள் நம்மை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிறார்கள். (ஏசா. 32:1, 2) நாம் ஒன்றுகூடி வரும்போது, யெகோவாவின் புகலிடத்தில் பாதுகாப்பாக இருக்க வேறென்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.—எபி. 10:24, 25.
ஒரு சகோதரி ஆன்மீக உதவியைப் பெற்றுக்கொள்ள, சகோதர சகோதரிகளோடு சேர்ந்து கூட்டத்தில் கலந்துகொள்கிறார் (பாராக்கள் 14-15)
16. தாவீதை யெகோவா எப்படியெல்லாம் பாதுகாத்தார்?
16 தாவீது யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தபோது, வேண்டுமென்றே பாவம் செய்வதால் வரும் விளைவுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டார். (நீதிமொழிகள் 5:1, 2-ஐ ஒப்பிடுங்கள்.) அதேசமயத்தில், கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதபோது அவர் சில மோசமான விளைவுகளைச் சந்தித்தார்; அவற்றிலிருந்து யெகோவா அவரைப் பாதுகாக்கவில்லை. (2 சா. 12:9, 10) சரி, தவறே செய்யாதபோதுகூட தாவீதுக்குக் கஷ்டங்கள் வந்ததே! அப்போது யெகோவா என்ன செய்தார்? தாவீது தன்னுடைய மனதில் இருந்ததையெல்லாம் ஜெபத்தில் கொட்டியபோது யெகோவா அவருடைய மனசுக்கு அமைதி கொடுத்தார். அவரை நேசிப்பதாகவும், அவரை அக்கறையோடு கவனித்துக்கொள்வதாகவும் நம்பிக்கை கொடுத்தார்.—சங். 23:1-6.
17. நாம் எப்படி தாவீது மாதிரி நடந்துகொள்ளலாம்?
17 யெகோவாவின் ஆலோசனைகளைத் தேடி அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கும்போது நாம் தாவீது மாதிரி நடந்துகொள்கிறோம். யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் தவறான முடிவுகளை எடுத்தால், அதன் விளைவுகளில் இருந்து யெகோவா நம்மைப் பாதுகாக்க மாட்டார். (கலா. 6:7, 8) தவறே செய்யாதபோதுகூட நமக்குக் கஷ்டங்கள் வரலாம். அந்த மாதிரி சமயங்களில் நம் மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டலாம்; நம் இதயத்தையும் யோசனைகளையும் அவர் பாதுகாப்பார் என்று முழுமையாக நம்பலாம்.—பிலி. 4:6, 7.
ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டே இருங்கள்
18. நம்மைச் சுற்றி இருக்கும் மக்கள் ஆன்மீகத் தேவையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)
18 2026-க்கான வருடாந்தர வசனம்: “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.” எப்போதையும்விட இப்போது அந்த ஆர்வப்பசியை வளர்த்துக்கொள்வது ரொம்ப முக்கியம். ஏன்? இன்று நிறைய பேர், ஆன்மீகத் தேவை இருப்பதையே ஒத்துக்கொள்வதில்லை. அப்படியே ஒத்துக்கொண்டாலும், அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய அவர்கள் பொய் மதத்தின் பின்னால் அல்லது மனித தத்துவங்கள் பின்னால் போகிறார்கள். அதனால், சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களைப் போல் யோசிப்பதை நாம் தவிர்க்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? யெகோவா தரும் ஆன்மீக உணவை வயிறார சாப்பிட வேண்டும். புதிய சுபாவம் என்ற உடையை அணிந்துகொள்ள வேண்டும். யெகோவாவின் புகலிடத்துக்குள் பாதுகாப்பு தேடிப் போக வேண்டும்.
ஆன்மீக உணவு, உடை மற்றும் புகலிடத்துக்கான நம் தேவையை நாம் தொடர்ந்து பூர்த்தி செய்ய வேண்டும் (பாரா 18)a
பாட்டு 162 உயிர் தேடாதோ யெகோவாவையே!
a படவிளக்கம்: முந்தின படத்தில் இருக்கும் சகோதரி காவற்கோபுர பத்திரிகையைப் படிப்பதன் மூலம் ஆன்மீக உணவை எடுத்துக்கொள்கிறார். கரிசனையோடு நடந்துகொள்வதன் மூலம் புதிய சுபாவத்தைக் காட்டுகிறார். மேய்ப்பு சந்திப்பில் அன்பான மூப்பர்கள் தரும் உதவியை ஏற்றுக்கொள்கிறார்.