மார்ச் 9-15, 2026
பாட்டு 45 என் இதயத்தின் தியானம்
சோகத்தில் ஆழ்த்தும் எண்ணங்களைத் தாண்டி வர முடியும்!
“எப்பேர்ப்பட்ட பரிதாபமான நிலையில் இருக்கிறேன்!”—ரோ. 7:24.
என்ன கற்றுக்கொள்வோம்?
நம்மைச் சோகத்தில் தள்ளுகிற எண்ணங்களையும் உணர்வுகளையும் எப்படிச் சமாளிக்கலாம் என்று கற்றுக்கொள்வோம்.
1-2. அப்போஸ்தலன் பவுல் எப்படி உணர்ந்தார், தன்னைப் பற்றி அவர் சொன்னதை நம்மால் ஏன் புரிந்துகொள்ள முடிகிறது? (ரோமர் 7:21-24)
அப்போஸ்தலன் பவுல் என்ற பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது? தைரியமான மிஷனரி, திறமையான போதகர், அருமையான பைபிள் எழுத்தாளர் என்றெல்லாம் தோன்றுகிறதா? இவை எல்லாமே சரிதான். ஆனாலும், நம்மை போலவே சிலசமயத்தில் சோகம், துக்கம், மனச்சோர்வு போன்றவற்றோடு அவர் போராட வேண்டியிருந்தது.
2 ரோமர் 7:21-24-ஐ வாசியுங்கள். ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தில், தன்னுடைய மனதில் இருந்த நிறைய விஷயங்களைக் கொட்டினார். நமக்கும் அதேமாதிரி உணர்ச்சிகள் வருவதால், அவர் சொல்வதை நம்மாலும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பவுல் ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவராக இருந்தாலும், அவருக்குள் ஒரு பெரிய போராட்டம் இருந்தது. ஒருபக்கம், கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய வேண்டும் என்ற பலமான ஆசை; இன்னொரு பக்கம், தப்பான ஆசைகளுக்கு இணங்குவதற்கான எண்ணம்! இந்தப் போராட்டம் போதாதென்று, கடந்த காலத்தில் அவர் செய்த தவறுகளும், அவர் சந்தித்துக்கொண்டிருந்த ஒரு பிரச்சினையும் சிலசமயம் அவரைப் போட்டுப் பாடாய்ப்படுத்தியது.
3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்? (“வார்த்தையின் விளக்கம்” என்பதையும் பாருங்கள்.)
3 இப்படிப்பட்ட போராட்டங்கள் பவுலுக்கு இருந்தாலும், சோகமான எண்ணங்கள்a அவரை மூழ்கடிக்க அவர் அனுமதிக்கவில்லை. இந்தக் கட்டுரையில், இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்: பவுல் ஏன் சிலசமயத்தில் “பரிதாபமான நிலையில்” இருந்ததாக உணர்ந்தார்? சோகமான எண்ணங்களை அவர் எப்படித் தாண்டி வந்தார்? சோகமான எண்ணங்களை நாம் எப்படித் தாண்டி வரலாம்?
எவையெல்லாம் பவுலைச் சோகத்தில் தள்ளின
4. கடந்த காலத்தில் பவுல் என்னவெல்லாம் செய்தார்?
4 கடந்த கால செயல்கள். பவுல் ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு, சவுல் என்று அழைக்கப்பட்டார். அப்போது நிறைய மோசமான விஷயங்களைச் செய்தார். உதாரணத்துக்கு, யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ஸ்தேவான், கல்லெறிந்து கொல்லப்பட்ட சமயத்தில் சவுல் அங்குதான் இருந்தார்; அப்படிச் செய்வதுதான் சரி என்று நினைத்தார். (அப். 7:58; 8:1) அதோடு, அன்று இருந்த கிறிஸ்தவர்களைக் கொடூரமாகத் துன்புறுத்துவதில் முன்நின்று செயல்பட்டார்.—அப். 8:3; 26:9-11.
5. தன்னுடைய கடந்த கால செயல்களைப் பற்றி நினைத்தபோது பவுலுக்கு எப்படி இருந்தது?
5 பவுலின் கடந்த காலம், சிலசமயங்களில் அவரைப் பாடாய்ப்படுத்தியது. கிறிஸ்தவர்களைத் தீவிரமாகத் துன்புறுத்தியபோது அவர் செய்த செயல்கள், அவரை வாட்டி எடுத்திருக்கும்; அதுவும், காலங்கள் போகப்போக அந்த வலி அதிகமாகி இருக்கும்! உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட கி.பி. 55-ல் கொரிந்தியர்களுக்கு அவர் எழுதிய முதல் கடிதத்தில், “கடவுளுடைய சபையைக் கொடுமைப்படுத்தியதால் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்குக்கூட தகுதியில்லாதவன்” என்று தன்னைப் பற்றிச் சொன்னார். (1 கொ. 15:9) கிட்டத்தட்ட ஐந்து வருஷங்கள் கழித்து, எபேசியர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘நான் பரிசுத்தவான்கள் எல்லாரிலும் மிக மிக அற்பமானவன்’ என்று எழுதியிருந்தார். (எபே. 3:8) தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், “முன்பு நான் துன்புறுத்துகிறவனாகவும், கடவுளை நிந்திக்கிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன்” என்று எழுதினார். (1 தீ. 1:13) சபைகளைச் சந்தித்தபோது, அவர் முன்பு துன்புறுத்தியவர்களையோ அவர்களுடைய குடும்பத்தாரையோ அங்கே பார்த்தபோது பவுலுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
6. வேறு எதுவும்கூட பவுலைச் சோகத்தில் தள்ளியது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
6 உடலில் ஒரு முள். தனக்கிருந்த ஒரு வேதனையை, ‘உடலில் இருக்கும் ஒரு முள்’ என்று பவுல் சொன்னார். (2 கொ. 12:7) அது என்னவென்று அவர் சொல்லவில்லை என்றாலும், அது அவருக்குப் பயங்கர வலியைக் கொடுத்திருக்கும் என்பதை அவர் பயன்படுத்திய வார்த்தைகள் காட்டுகின்றன. ஒருவேளை, அது ஒரு உடல்நல பிரச்சினையாகவோ மனதை வாட்டிய கவலையாகவோ வேறு ஏதாவது பிரச்சினையாகவோ இருந்திருக்கலாம்.b
7. எப்போதுமே நல்லது செய்வது பவுலுக்கு ஏன் கஷ்டமாக இருந்தது? (ரோமர் 7:18, 19)
7 அவருடைய பலவீனங்கள். பவுல் தன் பலவீனங்களோடும் போராடினார். (ரோமர் 7:18, 19-ஐ வாசியுங்கள்.) சரியானதைச் செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாலும், அவருக்குள் இருந்த பாவ இயல்பு அதற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருந்தது. ஒருபக்கம், அவருடைய பலவீனங்கள்; இன்னொரு பக்கம், சரியானதைச் செய்ய வேண்டும் என்ற ஆசை! இரண்டுக்கும் இடையில் அவர் போராடியதாக அவரே ஒத்துக்கொண்டார். ஆனாலும், தன்னை மாற்றிக்கொள்ள அவர் கடினமாக உழைத்தார். (1 கொ. 9:27) உள்ளுக்குள் இருந்த கெட்ட சுபாவம் எட்டிப்பார்த்தபோதெல்லாம், அவருக்கு எவ்வளவு எரிச்சலாக இருந்திருக்கும்!
பவுல் எப்படிச் சமாளித்தார்
8. பாவ இயல்பை எதிர்த்துப் போராட பவுலுக்கு எவையெல்லாம் உதவி செய்திருக்கும்?
8 பாவ இயல்பை எதிர்த்துப் போராடவும், சுபாவத்தை மாற்றிக்கொள்ளவும் கிறிஸ்தவர்களுக்குக் கடவுளுடைய சக்தி எப்படி உதவும் என்பதை பவுல் ஆழமாக யோசித்துப் பார்த்தார்; அவர் அப்படி யோசித்தது அவருடைய கடிதங்களிலிருந்து தெரிகிறது. (ரோ. 8:13; கலா. 5:16, 17) கிறிஸ்தவர்கள் எதிர்த்துப் போராட வேண்டிய ஆசைகளைப் பற்றியும், தவிர்க்க வேண்டிய சுபாவத்தைப் பற்றியும் பவுல் அடிக்கடி எழுதினார். (கலா. 5:19-21, 26) தன்னுடைய சொந்த பலவீனங்களைப் பற்றி பவுல் கண்டிப்பாக யோசித்திருப்பார். அதைச் சமாளிக்க, கடவுளுடைய வார்த்தையில் ஆலோசனைகளைத் தேடியிருப்பார். அவர் எடுக்க வேண்டிய குறிப்பிட்ட சில படிகளையும் கண்டுபிடித்திருப்பார். மற்றவர்களுக்கு அவர் கொடுத்த ஆலோசனைகளைக் கண்டிப்பாக அவரும் கடைப்பிடித்திருப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.
9-10. சோகமான எண்ணங்களிலிருந்து மீண்டுவர பவுலுக்கு எவையெல்லாம் உதவின? (எபேசியர் 1:7) (படத்தையும் பாருங்கள்.)
9 பவுல் சிலசமயத்தில் சோர்ந்துபோனாலும், அவர் தன்னுடைய சந்தோஷத்தை ஒரேயடியாக இழந்துவிடவில்லை. அவரோடு பயணம் செய்த நண்பர்கள், சபைகளைப் பற்றிய நல்ல அறிக்கைகளைச் சொன்னபோது அதைக் கேட்டு சந்தோஷப்பட்டார். (2 கொ. 7:6, 7) சகோதர சகோதரிகளுடன் அவருக்கு இருந்த நட்பும் அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. (2 தீ. 1:4) அதோடு, யெகோவாவின் அங்கீகாரம் தனக்கு இருப்பது அவருக்குத் தெரியும். “சுத்தமான மனசாட்சியோடு” யெகோவாவுக்குச் சேவை செய்ய முடிந்ததை நினைத்து அவர் பூரித்துப்போனார். (2 தீ. 1:3) ரோமில் சிறையில் இருந்தபோதுகூட மற்ற சகோதர சகோதரிகளிடம் பவுல் இப்படிச் சொன்னார்: “எஜமானுடைய சேவையில் எப்போதும் சந்தோஷமாக இருங்கள்.” (பிலி. 4:4) சோகத்தில் மூழ்கியிருக்கிற ஒருவர் எழுதிய வார்த்தைகள் போல் இவை இருக்கின்றனவா? இல்லவே இல்லை! இதிலிருந்து என்ன தெரிகிறது? சோகமான எண்ணங்கள் வந்தபோது, அதை பவுலால் எடுத்துப்போட முடிந்திருக்கிறது; சந்தோஷமான எண்ணங்களால் மனதை நிரப்பவும் முடிந்திருக்கிறது.
10 சோகமான எண்ணங்களில் இருந்து பவுலால் மீண்டுவர முடிந்ததற்கு இன்னொரு காரணம், மீட்புவிலையைத் தனக்காகவே கொடுக்கப்பட்ட பரிசாக அவர் பார்த்தார். (கலா. 2:20; எபேசியர் 1:7-ஐ வாசியுங்கள்.) அதனால், இயேசு கிறிஸ்து மூலமாக யெகோவா தன்னை மன்னிப்பார் என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. (ரோ. 7:24, 25) அவருடைய பலவீனங்களும் கடந்த கால தவறுகளும் ஒருபக்கம் இருந்தாலும், சந்தோஷமாக அவரால் யெகோவாவுக்கு “பரிசுத்த சேவை” செய்ய முடிந்தது.—எபி. 9:12-14.
கடந்த கால தவறுகள் பவுலைச் சிலசமயம் வாட்டினாலும், மீட்புவிலையைப் பற்றி யோசித்தது, சோகமான எண்ணங்களோடு போராட அவருக்கு உதவியது (பாராக்கள் 9-10)
11. பவுலுடைய உதாரணத்தைப் படிப்பது ஏன் ஆறுதலாக இருக்கிறது?
11 பவுலை மாதிரியே நமக்குள்ளும் ஒரு போராட்டம் நடந்துகொண்டிருக்கலாம். யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி யோசிப்பது, பேசுவது, செயல்படுவது சவாலாக இருக்கலாம். “எப்பேர்ப்பட்ட பரிதாபமான நிலையில் இருக்கிறேன்!” என்று பவுல் மாதிரியே நாமும் உணரலாம். 26 வயதான எலீசாc என்ற சகோதரிக்கும் இந்த மாதிரி போராட்டங்கள் இருந்தன. அவர் சொல்கிறார்: “பவுலுடைய சூழ்நிலையைப் பற்றிப் படிக்கும்போது எனக்கு உண்மையிலேயே ஆறுதலாக இருக்கிறது. இந்த மாதிரி எண்ணங்கள் எனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இருந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டது உதவியாக இருக்கிறது. தன்னுடைய மக்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பது யெகோவாவுக்குத் தெரியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.” சரி, பவுலை மாதிரியே சுத்தமான மனசாட்சியோடு இருப்பதற்கும், சோகமான எண்ணங்களிலிருந்து மீண்டுவந்து சந்தோஷமாக இருப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் என்ன செய்ய வேண்டும்
12. யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு உதவும் விஷயங்களைத் தொடர்ந்து செய்வது சோகமான எண்ணங்களைத் தாண்டி வர நமக்கு எப்படி உதவி செய்யும்?
12 யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு உதவும் விஷயங்களைத் தொடர்ந்து செய்யுங்கள். சத்தான உணவைச் சாப்பிடும்போது, தவறாமல் உடற்பயிற்சி செய்யும்போது, போதுமான அளவு தூங்கும்போது நாம் ஆரோக்கியமாக இருப்போம். அதேபோல், பைபிளைத் தவறாமல் படிக்கும்போது, ஊழியம் செய்யும்போது, கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது, நன்றாகத் தயாரித்து பதில்கள் சொல்லும்போது நமக்கு உற்சாகம் கிடைக்கும். இவற்றையெல்லாம் தொடர்ந்து செய்தால் நம் மனம் நல்ல விஷயங்களால் நிரம்பும்; சோகம் மறைந்து சந்தோஷம் மலரும்.—ரோ. 12:11, 12.
13-14. வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவறாமல் செய்ததால் சில சகோதர சகோதரிகள் எப்படி நன்மை அடைந்திருக்கிறார்கள்?
13 ஜான் என்ற சகோதரருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். அவருக்கு 39 வயதானபோது, ஒரு அரிய வகை புற்றுநோய் வந்தது. அதைக் கேட்டபோது அவர் உடைந்துவிட்டார். ‘இந்த வயதில் எனக்கு இப்படியொரு வியாதியா?!’ என்று தவித்தார். அந்தச் சமயத்தில், அவருடைய மகனுக்கு வெறும் மூன்று வயதுதான்! சோகத்திலேயே மூழ்கிவிடாமல் இருக்க ஜானுக்கு எது உதவியது? அவர் சொல்வதைக் கேளுங்கள்: “உடலளவில் நான் சோர்ந்துபோயிருந்தாலும், குடும்பமாக நாங்கள் வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவறாமல் செய்கிற மாதிரி பார்த்துக்கொண்டேன். எல்லா கூட்டங்களுக்கும் போனோம். வாராவாரம் ஊழியம் செய்தோம். குடும்ப வழிபாடு செய்தோம். இவற்றையெல்லாம் செய்வது கஷ்டமாக இருந்தாலும், தவறாமல் செய்தோம்.” நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்து ஜான் இப்படிச் சொல்கிறார்: “பொதுவாக, ஆரம்பத்தில் நமக்கு அதிர்ச்சியாக இருக்கும், இடிந்துபோய்விடுவோம்! ஆனால், யெகோவா கொடுக்கிற பலமும் அவருடைய அன்பும் நம் மனதில் நிறையும்போது, சோகமான எண்ணங்கள் மறையும். என்னைப் பலப்படுத்திய யெகோவா, கண்டிப்பாக உங்களையும் பலப்படுத்துவார்.”
14 நாம் முன்பு பார்த்த எலீசா இப்படிச் சொல்கிறார்: “நான் ஒவ்வொரு தடவை கூட்டங்களுக்குப் போகும்போதும் சரி, தனிப்பட்ட படிப்பு படிக்கும்போதும் சரி, யெகோவா நான் சொல்வதைக் கேட்பதையும் என்மேல் அன்பு வைத்திருப்பதையும் ஞாபகப்படுத்துகிறார். அதனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.” நோலன் என்ற சகோதரரும் அவருடைய மனைவி டையனும் ஆப்பிரிக்காவில் வட்டாரச் சேவை செய்கிறார்கள். அவர்களுக்கு யெகோவா எப்படி உதவுகிறார் என்பதைப் பற்றி அந்தச் சகோதரர் சொல்கிறார்: “நாங்கள் சோர்ந்துபோயிருக்கும்போதுகூட, வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவறாமல் செய்வோம். அப்படிச் செய்வதால், சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள யெகோவா உதவுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. யெகோவா எப்போதுமே எங்களுக்கு உதவி செய்வார், எங்களை ஆசீர்வதிப்பார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள நாங்கள் முயற்சி செய்கிறோம். அதை அவர் எப்படிச் செய்வார் என்று தெரியாது; ஆனால், கண்டிப்பாகச் செய்வார் என்பது மட்டும் தெரியும்!”
15. சோகமான எண்ணங்களைத் தாண்டி வர நாம் இன்னும் என்ன செய்ய வேண்டியிருக்கலாம்? உதாரணத்தோடு விளக்குங்கள்.
15 சோகமான எண்ணங்களைத் தாண்டி வருவதற்கு, இதுவரை பார்த்த அடிப்படை விஷயங்களுடன் சேர்த்து இன்னும் சில விஷயங்களையும் செய்ய வேண்டியிருக்கலாம். இதைப் புரிந்துகொள்ள இப்படி யோசித்துப் பாருங்கள்: உங்களுக்கு இடுப்பு வலி இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். தினமும் நடைப்பயிற்சி செய்வது உங்களுக்கு ஒருவேளை உதவலாம். ஆனால், அந்த வலி போக வேண்டும் என்றால், இன்னும் சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். ஒருவேளை, அந்த வலி ஏன் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க சில ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டியிருக்கலாம். டாக்டரைக்கூட பார்க்க வேண்டியிருக்கலாம். சோகமான எண்ணங்களைத் தாண்டி வரும் விஷயத்திலும் இதுதான் உண்மை! நாம் கூடுதலாக, பைபிளையும் நம் பிரசுரங்களையும் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கலாம். முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களிடம்கூட பேச வேண்டியிருக்கலாம். இப்போது, நமக்கு உதவும் இன்னும் சில குறிப்புகளைப் பார்க்கலாம்.
16. சோகமான எண்ணங்கள் வருவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நீங்கள் என்ன செய்யலாம்? (சங்கீதம் 139:1-4, 23, 24)
16 உங்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்ள ஜெபம் செய்யுங்கள். யெகோவாவுக்குத் தன்னைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று தாவீது ராஜா புரிந்துவைத்திருந்தார். அதனால்தான், ‘என் மனதிலுள்ள கவலைகளுக்கான’ காரணத்தைக் கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள் என்று யெகோவாவிடம் கேட்டார். (சங்கீதம் 139:1-4, 23, 24-ஐ வாசியுங்கள்.) நீங்களும் அதேமாதிரி செய்யலாம். சோகமான எண்ணங்கள் வருவதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்கவும், அதை எப்படித் தாண்டி வரலாம் என்பதைத் தெரிந்துகொள்ளவும் யெகோவாவிடம் உதவி கேளுங்கள். இந்த மாதிரி சில கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்: ‘எதை நினைத்து நான் சோகமாக இருக்கிறேன்? சோகமான எண்ணங்களை எது தூண்டுகிறது? சோகமாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனா, அல்லது அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைக்கிறேனா?’
17. என்ன மாதிரி தலைப்புகளை எடுத்துப் படிப்பது உங்களை உற்சாகப்படுத்தும்? (படத்தையும் பாருங்கள்.)
17 உங்கள் தேவைக்கு ஏற்ற ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அவ்வப்போது, யெகோவாவின் குணங்களில் ஒன்றைப் பற்றி ஆழமாகப் படிப்பது உங்களுக்கு உதவும். அப்போஸ்தலன் பவுலுக்குக்கூட மீட்புவிலையைப் பற்றியும், யெகோவாவின் மன்னிப்பைப் பற்றியும் ஆழமாக யோசித்துப் பார்த்தது பிரயோஜனமாக இருந்தது. உங்களுக்கும் அது உதவியாக இருக்கும். அதனால், யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு, உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் (ஆங்கிலம்) அல்லது உங்கள் மொழியில் இருக்கிற வேறு ஆராய்ச்சிக் கருவிகளை நீங்கள் பயன்படுத்தலாம். கடவுள் காட்டுகிற இரக்கம், மன்னிப்பு, மாறாத அன்பு போன்ற தலைப்புகளில் நீங்கள் ஆராய்ச்சி செய்யலாம். உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும் கட்டுரைகளைக் கண்டுபிடித்த பிறகு, அதை ஒரு லிஸ்ட் போடுங்கள். கண்ணில் படுகிற இடத்தில் அந்த லிஸ்ட்டை வையுங்கள். எப்போதெல்லாம் சோகமாக உணருகிறீர்களோ, அப்போதெல்லாம் லிஸ்ட்டில் இருக்கிற கட்டுரைகளை எடுத்துப் படியுங்கள். படிக்கிற விஷயங்களை உங்கள் சூழ்நிலைக்குப் பொருத்திப் பாருங்கள்.—பிலி. 4:8.
சோகமான எண்ணங்களோடு போராட உங்களுக்கு உதவும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள் (பாரா 17)
18. என்ன மாதிரியான படிப்பு ப்ராஜெக்ட்டுகள் சில சகோதர சகோதரிகளுக்கு உதவியாக இருந்திருக்கிறது?
18 நாம் முன்பு பார்த்த எலீசா, யோபுவைப் பற்றி ஒரு படிப்பு ப்ராஜெக்ட் செய்தார். அவர் சொல்கிறார்: “நானும் யோபு மாதிரிதான். அவருக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்துகொண்டே இருந்தன. பிரச்சினைகள் உச்சத்துக்குப் போன சமயத்தில்கூட, அவர் யெகோவாவைத்தான் நம்பியிருந்தார்; இத்தனைக்கும் அவருடைய பிரச்சினைகளுக்கான காரணம்கூட அவருக்குத் தெரியாது.” (யோபு 42:1-6) முன்பு பார்த்த டையன் இப்படிச் சொல்கிறார்: “நானும் என் கணவரும் யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்திலிருந்து ஒரு படிப்பு ப்ராஜெக்ட் செய்கிறோம். ஒரு குயவர் எப்படிக் களிமண்ணை அழகாக வடிவமைப்பாரோ அந்த மாதிரி யெகோவா நம்மை வடிவமைக்கிறார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். அதனால், எவையெல்லாம் நம்மை சோகமாக்குகிறதோ அவற்றைப் பற்றியே யோசித்துக்கொண்டு இல்லாமல், யெகோவா நம்மை எப்படி அழகாக வடிவமைக்கிறார் என்பதை நாங்கள் கற்பனை செய்கிறோம். இப்படிச் செய்வதால், யெகோவாவிடம் எங்களால் நெருங்கிப் போக முடிகிறது.”—ஏசா. 64:8.
எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருங்கள்
19. நாம் எதை சில சமயங்களில் எதிர்பார்க்கலாம், ஆனால் எந்த விஷயத்தில் நம்பிக்கையோடு இருக்கலாம்?
19 வணக்கம் சம்பந்தப்பட்ட அடிப்படை விஷயங்களையும் சில படிப்பு ப்ராஜெக்ட்களையும் நாம் செய்தாலும், சிலசமயங்களில் சோகமான எண்ணங்கள் எட்டிப்பார்க்கலாம். அந்த மாதிரி நாட்களில், பரிதாபமான நிலையில் இருப்பதாக நாம் உணரலாம். இருந்தாலும், யெகோவாவின் உதவியோடு அப்படிப்பட்ட எண்ணங்களை நம்மால் தாண்டி வர முடியும். அவ்வப்போது நாம் சோகமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்: பெரும்பாலான நாட்கள் நம்மால் சுத்தமான மனசாட்சியோடு இருக்க முடியும்... வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க முடியும்... யெகோவாவுக்குச் சந்தோஷத்தோடு சேவை செய்யவும் முடியும்.
20. என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்?
20 நம்முடைய கடந்த காலம்... இன்று இருக்கிற பிரச்சினைகள்... பலவீனங்கள்... போன்றவற்றால் வரும் சோகமான எண்ணங்கள் நம்மைக் கட்டுப்படுத்த விடவே கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கலாம். யெகோவாவின் உதவியோடு அவற்றில் மூழ்கிவிடாமல் இருக்க முடியும். (சங். 143:10) அப்படிப்பட்ட எண்ணங்கள் மனதில் தோன்றாத காலத்துக்காக நாம் காத்திருக்கலாம். அந்தச் சமயத்தில், ஒவ்வொரு நாளும் எந்தக் கவலையும் இல்லாமல் எழுந்திருப்போம்; யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்வோம் என்ற எண்ணத்தோடு எழுந்திருப்போம்!
பாட்டு 34 நான் உத்தமனாக வாழ்வேன்
a வார்த்தையின் விளக்கம்: இந்தக் கட்டுரையில், “சோகமான எண்ணங்கள்” என்ற வார்த்தை, அவ்வப்போது வரும் மனவேதனையையும், திடீரென்று வரும் கவலைகளையும் (mood swings) குறிக்கின்றன. இது மருத்துவ உதவி தேவைப்படும் தீராத மனச்சோர்வை (chronic depression) குறிப்பதில்லை.
b பவுலின் கடிதங்களை வைத்துப் பார்க்கும்போது, கண்பார்வை சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகள் அவருக்கு இருந்ததாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினைகளால் கடிதங்கள் எழுதுவதும், ஊழியம் செய்வதும் அவருக்கு ஒரு போராட்டமாக இருந்திருக்கலாம். (கலா. 4:15; 6:11) அல்லது, சில போலிப் போதகர்களால் ஏற்பட்ட தொல்லைகளை மனதில் வைத்து அப்படிச் சொல்லியிருக்கலாம். (2 கொ. 10:10; 11:5, 13) காரணம் என்னவாக இருந்திருந்தாலும் சரி, பவுலுக்கு அது மிகவும் வேதனையாக இருந்தது.
c சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.