உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 டிசம்பர் பக். 2-7
  • யோபு புத்தகம்—கஷ்டத்தில் உங்களுக்குக் கைகொடுக்கும்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யோபு புத்தகம்—கஷ்டத்தில் உங்களுக்குக் கைகொடுக்கும்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யோபு கஷ்டப்பட கடவுள் அனுமதித்தார்
  • சகித்திருக்க யோபுவின் பதிவு நமக்கு உதவும்
  • யோபு புத்தகத்தைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவுங்கள்
  • யோபு புத்தகம்—ஆலோசனை கொடுக்க உதவும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 டிசம்பர் பக். 2-7

படிப்புக் கட்டுரை 48

பாட்டு 129 சகித்தே ஓடுவோம்!

யோபு புத்தகம்—கஷ்டத்தில் உங்களுக்குக் கைகொடுக்கும்!

“கடவுள் அக்கிரமம் செய்ய மாட்டார் என்பது நிச்சயம்.”—யோபு 34:12.

என்ன கற்றுக்கொள்வோம்?

கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதிக்கிறார் என்பதைப் பற்றியும், கஷ்டங்கள் வரும்போது அதை எப்படிச் சகித்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் யோபு புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்வோம்.

1-2. யோபு புத்தகத்தைப் படிப்பது ஏன் நல்லது?

நீங்கள் சமீபத்தில் யோபு புத்தகத்தைப் படித்தீர்களா? கிட்டத்தட்ட 3,500 வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், இந்தப் பழமையான புத்தகம் உலகத்தில் இருக்கிற தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் எளிமையான எழுத்துநடை, அழகான வார்த்தைகள், வெளிப்படையான விவரிப்புகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இதை எழுதியவர் ஒரு “இலக்கிய மேதையாக” இருக்க வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சிப் பதிவு சொல்கிறது. இந்த அற்புதமான புத்தகத்தை எழுதியவர் மோசேயாக இருந்தாலும், அவர் என்ன எழுத வேண்டும் என்பதைச் சொன்னது கடவுளான யெகோவா!—2 தீ. 3:16.

2 யோபு புத்தகம் பைபிளில் ரொம்ப முக்கியமான ஒரு புத்தகம் என்று சொல்லலாம். ஏன்? ஒரு காரணம், தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் முன்பு இருக்கிற முக்கியமான விவாதத்தைப் பற்றி அதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். அதாவது, யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் அவர்களுக்கு இருக்கிற பங்கைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம். அதோடு, யெகோவாவின் அற்புதமான குணங்களான அன்பு, ஞானம், நீதி, வல்லமை போன்றவற்றைப் பற்றியும் அந்தப் புத்தகம் சொல்கிறது. உதாரணத்துக்கு, யெகோவா “சர்வவல்லமையுள்ளவர்” என்று யோபு புத்தகத்தில் மட்டுமே 31 தடவை சொல்லப்பட்டிருக்கிறது. பைபிளின் மற்ற புத்தகங்களில் இருப்பதை எல்லாம் மொத்தமாகச் சேர்த்தாலும், இத்தனை தடவை வராது. வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கும் யோபு புத்தகம் பதில் சொல்கிறது; பலருடைய மனதைக் குடைகிற கேள்விக்குக்கூட—“கடவுள் ஏன் கஷ்டத்தை அனுமதிக்கிறார்?” என்ற கேள்விக்குக்கூட அது பதில் சொல்கிறது.

3. யோபு புத்தகத்தைப் படிப்பது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

3 உயரமான ஒரு மலையிலிருந்து பார்த்தால், சுற்றி என்னவெல்லாம் இருக்கிறது என்று தெளிவாகப் பார்க்க முடியும். அதேபோல், யோபு புத்தகத்தைப் படிக்கும்போது நம் வாழ்க்கையில் வருகிற பிரச்சினைகளை ஒரு உயரமான இடத்திலிருந்து பார்க்கிற மாதிரி இருக்கும். அதாவது, யெகோவா பார்க்கிற மாதிரி அந்தப் பிரச்சினைகளைப் பார்க்க முடியும். இந்தக் கட்டுரையில், யோபுவின் கதையிலிருந்து இஸ்ரவேலர்கள் எப்படி நன்மை அடைந்திருக்கலாம் என்றும், நாம் எப்படி நன்மை அடையலாம் என்றும் பார்க்கலாம். இந்தப் பதிவைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்றும் பார்க்கலாம்.

யோபு கஷ்டப்பட கடவுள் அனுமதித்தார்

4. யோபு எப்படி இஸ்ரவேலர்களிலிருந்து வித்தியாசமாக இருந்தார்?

4 இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாகக் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த சமயத்தில், யோபு என்ற ஒருவர் ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்துகொண்டு இருந்தார். அது ஒருவேளை வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்கு கிழக்கிலும், அரேபியாவுக்கு வடக்கில் ஏதோவொரு இடத்திலும் இருந்திருக்கலாம். எகிப்தில் இருந்த இஸ்ரவேலர்களைப் போல் யோபு இல்லை! அவர்களில் சிலர் எகிப்தில் சிலைகளை வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் யோபு, யெகோவாவை உண்மையாக வணங்கிவந்தார். (யோசு. 24:14; எசே. 20:8) “பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை” என்று யெகோவா யோபுவைப் பற்றிச் சொன்னார்.a (யோபு 1:8) யோபு செல்வச்சீமானாகவும் உயர்ந்த அந்தஸ்து உள்ளவராகவும் இருந்தார். சொல்லப்போனால், கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த எல்லாரையும்விட அவர் அதிக மதிப்புள்ளவராக இருந்தார். (யோபு 1:3) இவ்வளவு முக்கியமான, செல்வாக்குள்ள ஒரு நபர், கடவுளை உண்மையோடு வணங்கிக்கொண்டு இருந்ததைப் பார்த்தபோது சாத்தானுக்கு எவ்வளவு எரிச்சலாக, கோபமாக இருந்திருக்கும்!

5. யோபு கஷ்டப்படுவதற்கு யெகோவா ஏன் அனுமதித்தார்? (யோபு 1:20-22; 2:9, 10)

5 கஷ்டங்கள் வந்தால் யோபு கடவுளை வணங்குவதை நிறுத்திவிடுவார் என்று சாத்தான் சொன்னான். (யோபு 1:7-11; 2:2-5) சாத்தான் சொன்ன இந்தக் குற்றச்சாட்டால் முக்கியமான கேள்விகள் வந்தன. யெகோவாவுக்கு யோபுவை ரொம்ப பிடித்திருந்தாலும், சாத்தான் தன்னுடைய வாதத்தை முடிந்தால் நிரூபிப்பதற்கு யெகோவா அனுமதித்தார். (யோபு 1:12-19; 2:6-8) யோபுவின் ஆடு-மாடுகளையும் மந்தைகளையும் சாத்தான் அழித்தான். அவருடைய பத்து பிள்ளைகளையும் கொன்றுபோட்டான். தலையிலிருந்து கால்வரை கொடூரமான கொப்புளங்களை வரவைத்து அவரை வாட்டி வதைத்தான். சாத்தான் இப்படிப்பட்ட கொடூரமான முயற்சிகளை எடுத்தாலும், யோபு தன்னுடைய உத்தமத்தை விடவே இல்லை! (யோபு 1:20-22; 2:9, 10-ஐ வாசியுங்கள்.) கொஞ்ச நாட்களுக்குப் பிறகு யெகோவா, யோபுவின் ஆரோக்கியத்தையும், செல்வச்செழிப்பையும், பேர்-புகழையும் திரும்பக் கொடுத்தார். அவருக்கு மறுபடியும் பத்துப் பிள்ளைகளைக் கொடுத்தார். யோபுவின் வாழ்நாள் காலத்தை 140 வருஷங்களுக்கு அற்புதமாகக் கூட்டினார். அவருடைய வம்சத்தில் வந்த நான்கு தலைமுறைகளை யோபு பார்த்தார். (யோபு 42:10-13, 16) இந்தப் பதிவு, அன்று இருந்தவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கும்? இன்று நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

6. யோபுவின் கதை, இஸ்ரவேலர்களுக்கு எப்படி உதவியிருக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)

6 இஸ்ரவேலர்கள் எப்படி நன்மை அடைந்திருக்கலாம்? எகிப்தில் இருந்தபோது இஸ்ரவேலர்களுடைய வாழ்க்கை சுலபமாக இல்லை. யோசுவா மற்றும் காலேபை எடுத்துக்கொள்ளுங்கள். தங்களுடைய இளமை காலம் முழுவதையும் அடிமைகளாகவே செலவு செய்தார்கள். பிறகு, செய்யாத ஒரு தவறுக்காக அவர்கள் மற்றவர்களோடு சேர்ந்து 40 வருஷங்கள் வனாந்தரத்தில் சுற்றித்திரிந்தார்கள். யோபுவுக்கு வந்த சோதனைகளைப் பற்றியும், அவருக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களைப் பற்றியும் அன்றிருந்த இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டிருப்பார்களா? அப்படிக் கேள்விப்பட்டிருந்தால் கண்டிப்பாக அது அவர்களைப் பலப்படுத்தியிருக்கும்! அவர்களுடைய எதிர்கால தலைமுறைக்குக்கூட உதவியாக இருந்திருக்கும். கஷ்டங்களுக்கு உண்மையிலேயே யார் காரணம் என்பதை அவர்கள் புரிந்திருப்பார்கள். கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதிக்கிறார்... கஷ்டங்கள் மத்தியிலும் உண்மையாக இருப்பவர்களை அவர் எந்தளவுக்கு உயர்வாக நினைக்கிறார், ஆசீர்வதிக்கிறார்... என்பதையெல்லாம் அவர்கள் புரிந்திருப்பார்கள்.

ஒரு இஸ்ரவேலர், எகிப்தில் கற்களை அடுக்கிக்கொண்டு இருக்கும்போது யோசித்துப் பார்க்கிறார். பக்கத்தில், கடினமாக வேலை செய்துகொண்டிருக்கும் இஸ்ரவேலர்களை எகிப்தியர்கள் பிரம்பால் அடிக்கிறார்கள்.

எகிப்தில் பல வருஷங்களாக அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்கள், பின்பு ஒருகட்டத்தில், யோபுவைப் பற்றித் தெரிந்துகொண்டபோது நன்மை அடைந்திருப்பார்கள் (பாரா 6)


7-8. கஷ்டங்களை அனுபவிக்கிறவர்களுக்கு யோபு புத்தகம் எப்படி உதவும்? ஒரு அனுபவத்தைச் சொல்லுங்கள்.

7 நாம் எப்படி நன்மை அடைகிறோம்? வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்று நிறைய பேர் கடவுள்மேல் இருந்த நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். ஏனென்றால், நல்லவர்களுக்கு ஏன் கஷ்டம் வருகிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ருவாண்டாவில் வாழ்கிற ஹேசல்b என்ற பெண்ணுக்கு அதுதான் நடந்தது. அவள் இளம் பிள்ளையாக இருந்தபோது கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருந்தாள். ஆனால், அவளுடைய வாழ்க்கை தலைகீழாக மாறியது. அவளுடைய அப்பா-அம்மா விவாகரத்து செய்துகொண்டார்கள். அவளுடைய அம்மா, வேறொருவரை கல்யாணம் செய்தார்; அவர் ஹேசலை ரொம்ப மோசமாக நடத்தினார். அதுபோதாதென்று, டீனேஜ் வயதில் ஒருவன் ஹேசலை கற்பழித்தான். ஆறுதல் தேடி கடவுளை வணங்கும் ஒரு இடத்துக்கு ஹேசல் போனாள். ஆனால் அவளுக்கு அங்கே ஆறுதல் கிடைக்கவில்லை. பிறகு, அவள் கடவுளுக்கு ஒரு கடிதத்தை எழுதினாள். அதில், “கடவுளே, நான் உங்களிடம் ஜெபம் செய்தேன். என்னால் முடிந்தளவுக்கு எப்போதும் நல்லது செய்தேன். ஆனால், நான் செய்த நல்லதுக்கு கைமாறாக நீங்கள் எனக்குக் கெட்டதைத்தான் கொடுத்தீர்கள். இனிமேல் நான் உங்களை வணங்க மாட்டேன். எனக்கு எது சந்தோஷத்தைத் தருகிறதோ அதைச் செய்யப்போகிறேன்” என்று எழுதினாள். ஹேசல் மாதிரி இருக்கும் மக்களைப் பார்க்கும்போது நம் மனம் வலிக்கிறது! கஷ்டங்களுக்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்ற பொய்களை நம்பி அவர்கள் ஏமாந்துபோயிருக்கிறார்கள்.

8 ஆனால் நாம், யோபு புத்தகத்திலிருந்து கஷ்டத்துக்கெல்லாம் சாத்தான்தான் காரணம், கடவுள் அல்ல என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறோம். அதோடு, மற்றவர்கள் கஷ்டப்படும்போது அவர்கள் செய்ததற்கான பலனைத்தான் அனுபவிக்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது என்றும் கற்றுக்கொண்டோம். ஏனென்றால், “எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள்” யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பைபிள் சொல்கிறது. (பிர. 9:11; யோபு 4:1, 8) கஷ்டங்களை நாம் சகித்திருந்தால் சாத்தானுக்குப் பதிலடி கொடுக்க யெகோவாவுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம்; அது யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தும். (யோபு 2:3; நீதி. 27:11) இந்த உண்மைகளைத் தெரிந்துவைத்திருப்பதை நினைத்து நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம். ஏனென்றால், நாமும் நம் அன்பானவர்களும் கஷ்டப்படுவதற்கு உண்மையில் யார் காரணம் என்பது நமக்குத் தெரியும். முன்பு பார்த்த ஹேசல் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய கஷ்டங்களுக்குக் காரணம் கடவுள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டாள். அவள் சொல்கிறாள்: “நான் மறுபடியும் கடவுளிடம் மனசார ஜெபம் செய்தேன். ‘இனிமேல் கடவுளை வணங்க மாட்டேன்’ என்று சொன்னேன்தான். ஆனால், உண்மையிலேயே அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. சொல்லப்போனால், அப்போது யெகோவா யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது, யெகோவா என்மேல் உயிரையே வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். நான் ரொம்ப சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறேன்.” கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதித்திருக்கிறார் என்பதற்கான காரணத்தைத் தெரிந்திருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! கஷ்டங்களைச் சந்திக்கும்போது, யோபுவின் பதிவிலிருந்து தனிப்பட்ட விதத்தில் நாம் எப்படி நன்மை அடையலாம் என்று இப்போது பார்க்கலாம்.

சகித்திருக்க யோபுவின் பதிவு நமக்கு உதவும்

9. கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த யோபுவின் நிலைமையை விளக்குங்கள். (யாக்கோபு 5:11)

9 யோபு தன்னந்தனியாக சாம்பலில் உட்கார்ந்திருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை அவருக்குக் கொப்புளங்கள் இருக்கின்றன. வலி-வேதனையில் அணு அணுவாக அவஸ்தைப்படுகிறார். வியாதியால் அவருடைய தோல் கறுத்துப்போய் இருக்கிறது. மெலிந்துபோன அவருடைய உடலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தோல் உரிகிறது. சுத்தமாகத் தெம்பே இல்லாத யோபு, ஒரு ஓடை வைத்து தன் உடலைச் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்; வலி-வேதனையில் புலம்பிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் யோபு வெறுமனே தன் நாட்களை ஓட்டிக்கொண்டு இல்லை, கஷ்டங்கள் மத்தியிலும் யெகோவாவுக்கு உண்மையாக சகித்துக்கொண்டு இருந்தார். (யாக்கோபு 5:11-ஐ வாசியுங்கள்.) சகித்திருக்க யோபுவுக்கு எது உதவியது?

10. யெகோவாவோடு யோபுவுக்கு எப்படிப்பட்ட பந்தம் இருந்தது? விளக்குங்கள்.

10 மனதில் பொங்கிய தன்னுடைய உணர்ச்சிகளை எல்லாம் யோபு, யெகோவாவிடம் சொன்னார். (யோபு 10:1, 2; 16:20) 3-வது அதிகாரம் காட்டுவதுபோல், தனக்கு வந்த கஷ்டங்களுக்கு யெகோவாதான் காரணம் என்று தவறாக நினைத்துக்கொண்டு, புலம்பு புலம்பு என்று புலம்பினார். தன்னுடைய மூன்று நண்பர்களுடன் நடந்த விவாதத்தில், தான் யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததாக யோபு அடித்துப் பேசினார். அப்படிப் பேசிய சமயத்தில், பெரும்பாலும் தன்னுடைய பதில்களை யெகோவாவிடமே நேரடியாகச் சொன்னார். அவருடைய வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, கடவுளைவிட தான் நீதிமான் என்று கொஞ்சக் காலத்துக்கு அவர் நினைத்தது தெரிகிறது. (யோபு 10:1-3; 32:1, 2; 35:1, 2) ஆனால் தன்னுடைய உத்தமத்தை நிரூபிப்பதற்கான போராட்டத்தில், யோசிக்காமல் “ஏதேதோ” பேசிவிட்டதாகவும் அவரே ஒத்துக்கொண்டார். (யோபு 6:3, 26) 31-வது அதிகாரம் காட்டுவதுபோல், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதைக் கடவுளே தெளிவுபடுத்த வேண்டும் என்றுகூட யோபு கேட்டிருக்கிறார். (யோபு 31:35) தன்னுடைய கஷ்டத்துக்கான காரணத்தை, கடவுளே நேரடியாகத் தன்னிடம் சொல்ல வேண்டும் என்று யோபு எதிர்பார்த்தது தவறுதான்! ஆனால், என்ன செய்வதென்றே தெரியாமல் யோபு இந்தளவுக்கு யெகோவாவிடம் கதறியதைப் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது—யெகோவாமேல் ஆழமான பக்தியும், தன்னுடைய உத்தமத்தை யெகோவா புரிந்துகொள்வார் என்ற முழு நம்பிக்கையும் யோபுவுக்கு இருந்தது!

11. தன்னுடைய உத்தமத்தைப் பற்றி யோபு சொன்னபோது யெகோவா எப்படி நடந்துகொண்டார்?

11 யெகோவா யோபுவுக்குப் பதில் கொடுத்தார். ஒரு புயல்காற்றை வரவைத்து, அதிலிருந்து பேசினார். ஆனால், யோபு ஏன் கஷ்டப்படுகிறார் என்பதற்கான காரணங்களை அவர் சொல்லவில்லை. அதேசமயத்தில், யோபு குறை சொன்னதற்காகவோ, தன்மேல் எந்தத் தவறும் இல்லை என்று பேசியதற்காகவோ யெகோவா அவரைத் தண்டிக்கவில்லை. ஒரு அப்பா தன் மகனுக்கு எப்படி அன்பாகச் சொல்லிக்கொடுப்பாரோ, அதேமாதிரி யெகோவா யோபுவுக்குச் சொல்லிக்கொடுத்தார். உண்மையில், யோபுவுக்கு உதவ இது ஒரு சிறந்த வழி! அதனால் கிடைத்த பலன் என்ன? யோபு தனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது என்பதை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொண்டார்; கடுமையாகப் பேசிவிட்டதை நினைத்து மனம் வருந்தினார். (யோபு 31:6; 40:4, 5; 42:1-6) யோபுவின் பதிவு அன்றிருந்த மக்களுக்கு எப்படி உதவியிருக்கும்? இன்று நமக்கு எப்படி உதவும்?

12. யோபுவின் பதிவிலிருந்து இஸ்ரவேலர்கள் எப்படி நன்மை அடைந்திருக்கலாம்?

12 இஸ்ரவேலர்கள் எப்படி நன்மை அடைந்திருக்கலாம்? யோபுவின் வாழ்க்கையிலிருந்து இஸ்ரவேலர்கள் நிறைய கற்றுக்கொண்டிருக்கலாம். மோசேயை எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்ரவேல் தேசத்தின் தலைவராக, எத்தனையோ கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் மனச்சோர்வுகளையும் அவர் சகித்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், யெகோவாவுக்கு எதிராக முணுமுணுத்த கலகக்கார இஸ்ரவேலர்களைப் போல் அவர் இல்லை; கஷ்டங்களைச் சமாளிக்க யெகோவாவிடமே உதவி கேட்டுப் போனார். (யாத். 16:6-8; எண். 11:10-14; 14:1-4, 11; 16:41, 49; 17:5) யெகோவா மோசேயைக் கண்டித்தபோதும் யோபுவின் உதாரணம் அவருக்கு உதவியிருக்கும். இஸ்ரவேலர்கள் காதேசில் முகாம் போட்டிருந்த சமயத்தில் நடந்ததை யோசியுங்கள். அது ஒருவேளை, அவர்கள் வனாந்தரத்தில் சுற்றித் திரிந்த 40-வது வருஷமாக இருந்திருக்கலாம். அப்போது மோசே “ஆத்திரப்பட்டுப் பேசிவிட்டார்;” யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்தாமல் போய்விட்டார். (சங். 106:32, 33) அதனால், வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போக யெகோவா அவரை அனுமதிக்கவில்லை. (உபா. 32:50-52) யெகோவா கொடுத்த இந்தக் கண்டிப்பு, நிச்சயம் மோசேக்கு வலித்திருக்கும்! இருந்தாலும், அவர் மனத்தாழ்மையாக அதை ஏற்றுக்கொண்டார். மோசேக்கு மட்டுமல்ல, அவருடைய காலத்துக்குப் பிறகு வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கும் யோபுவின் பதிவு உதவியிருக்கும்; சகித்திருக்க பலத்தைத் தந்திருக்கும். தங்களுடைய மனதில் இருந்ததையெல்லாம் யெகோவாவிடம் எப்படிக் கொட்ட வேண்டும் என்பதை உண்மையுள்ளவர்கள் அதிலிருந்து கற்றிருப்பார்கள். யெகோவாவுக்குமுன் தங்களையே நியாயப்படுத்திக்கொள்ள கூடாது என்பதையும் கற்றிருப்பார்கள். யெகோவா கொடுக்கும் கண்டிப்பை மனத்தாழ்மையாக ஏற்றுக்கொள்ளவும் கற்றிருப்பார்கள்.

13. சகித்திருக்க யோபுவின் பதிவு நமக்கு எப்படி உதவும்? (எபிரெயர் 10:36)

13 நாம் எப்படி நன்மை அடைகிறோம்? கிறிஸ்தவர்களாக நமக்குக்கூட சகிப்புத்தன்மை தேவை. (எபிரெயர் 10:36-ஐ வாசியுங்கள்.) நம்மில் சிலர் உடம்பு முடியாமல் இருக்கலாம், மனச்சோர்வால் வாடலாம், குடும்பத்தில் சிக்கல்களோடு போராடலாம், அன்பானவர்களைப் பறிகொடுத்திருக்கலாம், அல்லது, வேறு ஏதாவது பெரிய பிரச்சினையைச் சந்தித்துக்கொண்டு இருக்கலாம். மற்றவர்களுடைய சொல், செயல்கூட நம் சகிப்புத்தன்மையை உரசிப் பார்க்கலாம். (நீதி. 12:18) ஆனால், யோபு புத்தகத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நம் மனதின் ஆழத்தில் இருக்கிற வேதனைகளை எல்லாம் யெகோவாவிடம் கொட்டலாம். அவர் கண்டிப்பாகக் கேட்பார் என்ற நம்பிக்கையோடு அவரிடம் சொல்லலாம். (1 யோ. 5:14) மனதில் இருக்கிற வேதனைகளை யெகோவாவிடம் சொல்லும்போது, யோபு மாதிரியே நாம் தெரியாமல் “ஏதேதோ” பேசிவிட வாய்ப்பிருக்கிறது. அந்த மாதிரி நடந்தால்கூட யெகோவா நம்மேல் கோபப்பட மாட்டார்; சகித்துக்கொள்ள தேவையான பலத்தையும் ஞானத்தையும் கொடுப்பார். (2 நா. 16:9; யாக். 1:5) நம்மைத் திருத்த வேண்டிய அவசியம் இருந்தாலும் யோபுவைத் திருத்திய மாதிரி திருத்துவார். யோபு புத்தகத்தில் இருந்து இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்கிறோம்; பைபிளில் இருந்தோ அமைப்பில் இருந்தோ முதிர்ச்சியுள்ள நண்பர்களிடம் இருந்தோ நமக்கு ஆலோசனை கிடைக்கும்போது அந்தச் சூழ்நிலையிலும் எப்படிச் சகிப்புத்தன்மையைக் காட்டலாம் என்பதைக் கற்றுக்கொள்கிறோம். (எபி. 12:5-7) யோபு மாதிரி நாமும் கண்டிப்பை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு, நம்மையே மாற்றிக்கொண்டால் நன்மை அடைவோம். (2 கொ. 13:11) யோபு புத்தகத்தில் இருந்து நமக்கு எவ்வளவு பாடங்கள் இருக்கிறது, பார்த்தீர்களா? யோபு புத்தகத்தைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்று இப்போது பார்க்கலாம்.

யோபு புத்தகத்தைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவுங்கள்

14. இன்று மக்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு ஊழியத்தில் நீங்கள் எப்படிப் பதில் சொல்லியிருக்கிறீர்கள்?

14 நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்று ஊழியத்தில் யாராவது உங்களிடம் கேட்டிருக்கிறார்களா? அந்தக் கேள்விக்கு நீங்கள் எப்படிப் பதில் சொன்னீர்கள்? ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதை அவர்களுக்குச் சொல்லியிருப்பீர்கள். பொல்லாத தேவதூதனான சாத்தான் எப்படி ஆதாம்-ஏவாளிடம் பொய் சொன்னான்... அதனால் அவர்கள் எப்படிக் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்... என்பதையெல்லாம் சொல்லியிருப்பீர்கள். (ஆதி. 3:1-6) அவர்கள் கலகம் செய்த பிறகுதான் பூமியில் இவ்வளவு கஷ்டமும் மரணமும் வந்தது என்பதையும் விளக்கியிருப்பீர்கள். (ரோ. 5:12) கடைசியாக, கடவுள் ஏன் இவ்வளவு காலத்தை அனுமதித்திருக்கிறார் என்பதற்கான காரணத்தையும் சொல்லியிருப்பீர்கள். அதாவது, சாத்தான் சொன்னதெல்லாம் பொய் என்பதை நிரூபிப்பதற்காகவும், சீக்கிரத்தில் மனிதர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நல்ல செய்தியைச் சொல்வதற்காகவும் கடவுள் காலத்தை அனுமதித்திருக்கிறார் என்பதைச் சொல்லியிருப்பீர்கள். (வெளி. 21:3, 4) இது அவர்கள் கேட்ட கேள்விக்கு நல்ல பதில்தான்; நல்ல பலன்கள்கூட உங்களுக்குக் கிடைத்திருக்கலாம்.

15. நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு யோபு புத்தகத்தைப் பயன்படுத்தி நாம் எப்படிப் பதில் சொல்லலாம்? (படங்களையும் பாருங்கள்.)

15 யோபு புத்தகத்தில்கூட அந்தக் கேள்விக்கு நல்ல பதில் இருக்கிறது. அதையும் நீங்கள் பயன்படுத்தலாம். முதலில், நல்ல கேள்வியைக் கேட்டதற்காக அந்த நபரை நீங்கள் பாராட்டலாம். பிறகு, நீங்கள் அவரிடம் யோபுவைப் பற்றிச் சொல்லலாம். கடவுளுக்கு உண்மையாக வாழ்ந்த அவர், பயங்கரமான கஷ்டங்களை அனுபவித்தார் என்றும், அவருக்கும் இதே மாதிரி கேள்வி வந்தது என்றும் சொல்லலாம். அவருடைய கஷ்டங்களுக்குக் கடவுள்தான் காரணம் என்றுகூட அவர் ஒருசமயம் நினைத்தார் என்றும் சொல்லலாம். (யோபு 7:17-21) அப்படிச் சொல்லும்போது, நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்த நபர், தன்னைப் போலவே ஒருவர் யோசித்திருக்கிறார் என்று நினைத்து ஆச்சரியப்படலாம். பிறகு, கடவுள் அல்ல, சாத்தான்தான் அந்தக் கஷ்டங்களை யோபுவுக்குக் கொடுத்தான் என்பதை அவருக்குப் புரிய வையுங்கள். மனிதர்கள் தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கடவுளை வணங்குகிறார்கள் என்று சாத்தான் நிரூபிக்க நினைத்தான் என்பதை விளக்குங்கள். அடுத்து, இதையும் சொல்லுங்கள்: யோபுவுக்கு வந்த கஷ்டங்களுக்குக் கடவுள் காரணம் இல்லையென்றாலும், அவர் அதை அனுமதித்தார். இப்படிச் செய்வதன் மூலம், தனக்கு உண்மையாக இருக்கிறவர்கள் சாத்தானை பொய்யன் என்று நிரூபிப்பார்கள் என்று கடவுள் நம்பியதைக் காட்டினார். கடைசியில், யோபுவைக் கடவுள் எப்படி ஆசீர்வதித்தார் என்று விளக்குங்கள். இப்படியெல்லாம் விளக்கும்போது, மனிதர்களுக்கு வரும் கஷ்டங்களுக்கு யெகோவா காரணம் இல்லை என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கும். அது அவர்களை ஆறுதல்படுத்தும்.

படத்தொகுப்பு: 1. காட்டுத்தீயால் நாசமாகியிருக்கும் ஒரு இடத்தில், எரிந்துபோன பொருள்களுக்கு இடையில் இருந்து ஒரு ஃபோட்டோவை எடுத்து ஒரு பெண் பார்க்கிறார். அழுதுகொண்டே அதைப் பார்க்கிறார். 2. பிறகு, நிவாரண உதவி மையத்துக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் வீல் ஸ்டாண்டு அருகில் அந்தப் பெண் வருகிறார். ஒரு சகோதரி வசனத்தை வாசித்துக் காட்டுவதைக் கேட்கிறார்.

“கடவுள் அக்கிரமம் செய்ய மாட்டார்” என்பதைப் புரியவைக்க யோபு புத்தகத்தை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்? (பாரா 15)


16. கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு யோபு புத்தகம் எப்படி உதவியாக இருக்கும் என்பதற்கு ஒரு அனுபவத்தைச் சொல்லுங்கள்.

16 மாரியோ என்ற ஒருவருக்கு யோபு புத்தகம் எப்படி உதவியது என்று பார்க்கலாம். 2021-ல் ஒரு சகோதரி ஃபோன் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, மாரியோவிடம் பேசினார். அவரிடம் ஒரு வசனத்தைக் காட்டி, கடவுள் நம் ஜெபங்களைக் கேட்பது மட்டுமல்ல, நமக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையும் தரப்போகிறார் என்று சொன்னார். அதைப் பற்றி மாரியோ என்ன நினைக்கிறார் என்று சகோதரி கேட்டார். அப்போது மாரியோ, அந்தச் சகோதரி ஃபோன் செய்தபோது, தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாகவும் சாகும் முன்பு கடைசியாக ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டு இருந்ததாகவும் சொன்னார். “எனக்குக் கடவுள்மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர் என்னைக் கைவிட்டுவிட்டாரோ என்று, இன்று காலையில்தான் யோசித்துக்கொண்டிருந்தேன்” என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சகோதரி அடுத்த தடவை மாரியோவுக்கு ஃபோன் செய்தபோது, யோபு பட்ட கஷ்டங்களைப் பற்றிப் பேசினார். அதனால், யோபு புத்தகத்தை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று மாரியோ நினைத்தார். நம் சகோதரி அவருக்கு புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் லிங்க்கை அனுப்பினார். பிறகு என்ன ஆனது? மாரியோ பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். தன்மேல் அக்கறை காட்டும் அன்பான கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதில் சந்தோஷப்பட்டார்.

17. யோபு புத்தகத்தைக் கொடுத்ததற்காக யெகோவாவுக்கு நீங்கள் ஏன் நன்றியோடு இருக்கிறீர்கள்? (யோபு 34:12)

17 கஷ்டத்தில் இருக்கிறவர்கள் உட்பட எல்லாருக்கும் உதவி செய்யும் அபார சக்தி கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. (எபி. 4:12) யோபுவின் வாழ்க்கையை யெகோவா பதிவுசெய்து வைத்திருப்பதற்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். (யோபு 19:23, 24) யோபு புத்தகம், “கடவுள் அக்கிரமம் செய்ய மாட்டார் என்பது நிச்சயம்” என்ற உறுதியைக் கொடுக்கிறது. (யோபு 34:12-ஐ வாசியுங்கள்.) கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதிக்கிறார் என்றும் நாம் எப்படி அதைச் சகித்திருக்கலாம் என்றும் அது சொல்கிறது. கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் அது உதவுகிறது. அடுத்த கட்டுரையில், நல்ல ஆலோசனைகளைக் கொடுக்க யோபு புத்தகம் எப்படி உதவும் என்று பார்ப்போம்.

உங்கள் பதில் என்ன?

  • யோபு கஷ்டப்பட கடவுள் ஏன் அனுமதித்தார் என்பதைப் புரிந்துகொள்வது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது?

  • கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள யோபுவின் பதிவு நமக்கு எப்படி உதவுகிறது?

  • மற்றவர்களுக்கு உதவ யோபு புத்தகத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

பாட்டு 156 விஸ்வாசத்தால் . . .

a யோபு வாழ்ந்த காலப்பகுதி, அநேகமாக, யோசேப்பின் மரணத்துக்கும் (கி.மு. 1657), இஸ்ரவேலர்களின் தலைவராக மோசே நியமிக்கப்படுவதற்கும் (சுமார் கி.மு. 1514) இடையில் இருந்திருக்கலாம். யெகோவாவும் சாத்தானும் பேசிக்கொண்டதும், யோபுவுக்குக் கஷ்டங்கள் வந்ததும் அந்தச் சமயமாக இருந்திருக்கலாம்.

b சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்